30 அக்டோபர் 2012

நாயகன் - உலகநாயகனின் உடான்ஸ்!



கமல் ஒரு சிறந்த நடிகர். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகநாயகன் பட்டத்திற்கு தகுதியானவர்தானா என்ற கேள்வி என்னுள் பல சமயங்களில் எழுந்துள்ளது. உலகத்திலேயே சிறந்த நாயகன் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு அவர் சிறந்த நடிகர் அல்ல. மேலும் அவர் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு மனமுதிர்வற்றவர் (immatured person) என்பதையும் பல சமயங்களில் நிரூபித்துள்ளார்.

அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ஹிந்து நாளிதழில் அவர் எழுதியுள்ள இந்த  கட்டுரை

இந்த கட்டுரை வெளிவந்ததுமே அவருடைய தீவிர ரசிகர்கள் சிலர் ஃபேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களில் பாராட்டி எழுதியிருந்தனர். அதிலும் சிலர் அவருடைய ஆங்கில புலமையையும், எழுத்தாற்றலையும் கூட புகழ்ந்து எழுதியிருந்தனர். அவருடைய ஆங்கில புலமையைப் பற்றி எழுத எனக்கு தகுதியும் இல்லை விருப்பமும் இல்லை.

ஆனால் அவர் தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் விதமாக எழுதியுள்ளவற்றையும் ஏதோ 'நாயகனின்' வெற்றிக்கு தான் தான் மூல காரணம் என்பதுபோன்றும் தயாரிப்பாளர் மட்டும் இன்னும் சற்று தாராளமாக செலவு செய்திருந்தால் ஆஸ்கார் ரேஞ்சுக்கு படத்தை எடுத்திருப்போம் என்றெல்லாம் உடான்ஸ் விட்டிருப்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையைப் பற்றி பாராட்டி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்ததற்கு மறுமொழியாக (அதாவது முக்தா சீனிவாசனின் இந்த கட்டுரை ஹிந்து நாளிதழில் வெளிவருவதற்கு முன்பாகவே) தயாரிப்பாளர் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளைப் பற்றி எழுதாமல் இருந்திருக்கலாம் என்று எழுதியிருந்தேன். ஏனெனில் எனக்கு அப்போதே தெரியும் அவர் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளில் சிலவற்றிலாவது நிச்சயம் உண்மை இருக்காது என்று.

நான் நினைத்தது சரிதான் என்பது போல் இருந்தது முக்தா சீனிவாசனின் விளக்கம்.  விளக்கம்



கமலின் கட்டுரையில் தன்னை மறைந்த சுஜாதா அவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டிருப்பது அவருடைய தற்புகழ்ச்சிக்கு ஒரு முக்கிய உதாரணம். 'அவர்கள் இருவருடைய அறிவையும் திறமையையும் கோடம்பாக்கம் ஒன்றும் இல்லாமல்' செய்துவிட்டதாம்!

கமல் இயக்கிய விக்ரம் ஒரு துக்கடா படம். திரைக்கதையில் சுத்தமாக சுதப்பிவிட்டு கோடம்பாக்கத்தை குறை கூறி என்ன பயன்? சுமார் இருபது வருடங்கள் கழித்து இவர் எழுதி இயக்கிய படங்களின் கதி என்ன? கிரேசி மோகனுடன் சில திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிவிட்டு அவரைப் போன்றே தன்னாலும் நகைச்சுவையாக திரைக்கதை எழுத முடியும் என்று தீர்மானித்துக்கொண்டு எழுதி இயக்கிய படங்கள் பாக்ஸாஃபீசில் மண்ணைக் கவ்வியதை மறந்துவிட முடியுமா?

கமலின் தற்பெருமைக்கு இன்னும் ஒரு சாம்பிள்: 'நாயகனின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஒரு வர்த்தகர். அவரைப் பொருத்தவரை சினிமா ஒரு வர்த்தகம், கலை அல்ல.'

அடேங்கப்பா! கமல் எழுதி இயக்கி தயாரித்த அனைத்து படங்களும் கலைநயமுள்ள படங்களாயிற்றே! இந்த சமயத்தில் இவரைப் பற்றி இவருடைய இன்னொரு தயாரிப்பாளர் குமுறியது நினைவுக்கு வருகிறது. 'கமல் எப்போதுமே மற்றவர் தயாரிக்கும் படங்களில்தான் சோதனை செய்து பார்ப்பார் (he will experiment only in others' film)'. இதற்கு அவர் experiment செய்து நடித்து தோல்வியடைந்த பல படங்கள் சாட்சி.

இன்னும் ஒரு சாம்பிள்: திரைக்கதை எழுதுவதில் உள்ள நுணுக்கங்களை (nuances) மணிரத்தினம் இவரிடம் கேட்டு படித்தாராம்!!!! இதற்கு மணிரத்தினம்தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அவர் நிறைகுடம். தளும்பமாட்டார். ஆனால் அவருக்கு பதிலாக சுஹாசினியாவது பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் ஒருமுறை 'கமல்ஹாசனைப் போலவே இந்திய திரையுலகிலும் பல சிறந்த நடிகர்கள் உள்ளதை என்னால் பிறகுதான் உணர்ந்துக்கொள்ள முடிந்தது' என்றார். ஆகவே அடுத்த வார ஹிந்துவில் இதற்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

தான் மற்ற நடிகர்கள் போல் அல்ல என்பதையும் கமல் சுட்டிக்காட்டியுள்ளர். அதாவது ஒரு திரைப்பட கதாநாயகன் தன்னுடன் நடிக்க கதாநாயகியைத் தான் பரிந்துரைப்பாராம். ஆனால் இவர் ஒரு இயக்குனரை பரிந்துரைத்தாராம்!!!

நாயகனின் தயாரிப்பாளரைப் பற்றி கமல் அடித்த உடான்சும் அதற்கு தயாரிப்பாளருடைய பதில்களும்

1. கமல்: முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முந்தைய படங்கள் அதன் நிறுவனர் சீனிவாசனை ஒரு சிக்கன பேர்வழி (tight fisted)என்பதை காட்டியுள்ளது.

முக்தா சீனிவாசன்: நாயகன் படத்தின் தயாரிப்பு செலவு ரூ.60 லட்சம் என முடிவு செய்தோம். ஆனால் இறுதியில் அது ரூ.1 கோடியை எட்டியிருந்தது.
மேலும் இதில் கமலின் ஊதியமே ரூ.17.50 லட்சங்கள்.

அதாவது தயாரிப்பு செலவில் 1/5 பங்கு! கமலை தவிர அந்த படத்தில் நடித்த அனைவருமே சில்லறை நடிகர்கள் என்பதால் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட மொத்த ஊதியமே இவருக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாகவே இருந்திருக்கும். கலைநயமுள்ள படத்தை எடுக்க விரும்பிய கமல் தன்னுடைய ஊதியத்தை குறைத்திருக்கலாமே!


2. கமல்: அப்போதைய திரைப்படங்கள் போல் அல்லாமல் மணிரத்தினம் சண்டைக் காட்சிகளுக்கென்றே சுமார் ரு.12 லட்சம் அளவுக்கு ஒரு தனி பட்ஜெட் தயாரித்திருந்தார். இதற்கென்றே ஷோலே படத்தில் பணியாற்றிய ஜிம் ஆலனை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் அவரை மூன்றே நாட்களில் திருப்பி அனுப்பியது என்னை மிகவும் மனம்தளர வைத்தது. மேலும் ஒப்பனைக்கோ ஆடைகளுக்கோ தனியாக பட்ஜெட் ஏதும் இருக்கவில்லை.

மு.சீனிவாசன்: மணிரத்தினம் என்னிடம் கதை சொன்னபோது படத்தில் யாருக்கும் ஒப்பனை இருக்காது என்றும் தமிழர்களின் ஆடை எனப்படும் வேட்டி, கைலியைத் தவிர பிரத்தியேக ஆடை அலங்காரம் ஏதும்  இருக்காது என்றுதான் கூறினார். அவர் மேலை நாடுகளில் இருந்து ஒப்பனையாளரையோ அல்லது சண்டைக் காட்சி அமைப்பாளர்களையோ வரவழைப்பதில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. மேலும் கமல் பரிந்துரைத்த ஜிம் ஆலன் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கேட்டதாலும் வேலு நாயக்கரின் வாழ்க்கையை எடுக்க இத்தகைய வீண் செலவுகள் தேவையில்லை என்று நான் நினைத்ததாலும் கமலின் ஆலோசனைகளை ஏற்கவில்லை.

படத்தின் மொத்த செலவே ரூ.60 லட்சம் என்று நிர்ணயித்துவிட்டு சண்டைக்காட்சிகளுக்கே  நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் என்றால் எப்படி? நாயகனின் பட நீளத்தில் 1/3 பங்கு சண்டைக்காட்சிகள் என்பதால் அதற்கே சுமார் ரூ.20 லட்சம் தேவைப்பட்டிருக்கும்!

3. கமல்: தயாரிப்பாளரின் சிக்கன நடவடிக்கையால் மும்பை தாராவியில் படமாக்க முடியவில்லை. ஆகவே ராஜபார்வை படத்தில் நான் அறிமுகப்படுத்திய தோட்டாதரணி உண்டாக்கிய செட்டில்தான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது.

மு.சீனிவாசன். மும்பை தாராவியை நேரில் பார்த்தபோது அதில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வது என்னுடைய குழுவினருக்கு அத்தனை பாதுகாப்பானதாக இருக்காது என்று நான் கருதியதால்தான் சென்னையிலேயே வீனஸ் ஸ்டுடியோவில் மூன்று மடங்கு பொருட்செலவில் செட் போடவைத்தேன்.

படத்தைப் பார்த்தவர்களுக்கு அது செட் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு மிக தத்ரூபமாக செட்டை உருவாக்கியிருந்த பெருமை தோட்டாதரணிக்குத்தான்.

இப்படி கமலின் கட்டுரையில் நிறைய உடான்ஸ்கள்! அதையெல்லாம் விரிவாக எழுத வேண்டுமென்றால் இரண்டு, மூன்று பாகங்கள் தேவைப்படும். இந்த இரு கட்டுரைகளையும் படிக்காதவர்கள் நான் மேலே காட்டியுள்ள சுட்டியில் சென்று படித்துக்கொள்ளலாம்.

நாயகன் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு சிறந்த மைல்கல்தான். இந்த நூற்றாண்டின் சிறந்து நூறு படங்களில் வர தகுதியானதுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்கு தான் மட்டுமே முக்கிய காரணம் என்பதுபோல் கமல் எழுதியுள்ளது சரியல்ல என்பதுதான் என் கருத்து.

நானும் கமலின் தீவிர ரசிகன்தான். ஆனால் அவர் என்ன சொன்னாலும், எழுதினாலும் சரி என்று கூறும் அளவுக்கு ஒரு கண்மூடித்தனமான ரசிகன் அல்ல.

***********