13 September 2012

கூடங்குளம் - என்னதான் முடிவு?

ஏறத்தாழ ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் கூடங்குளம் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.  கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப தடையேதும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு காத்திராமல் அவசர, அவசரமாக மத்திய அரசு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதை எதிர்த்து இடிந்தகரை மக்கள் உச்சக்கட்டப் போராட்டத்தில்  இறங்கியிருப்பது முற்றிலும் நியாயமே.
 
வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரனையில் உள்ளபோதே எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டதும் அதை உயர்நீதிமன்றமே குறை கூறியதும் நினைவுக்கு வருகிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை மட்டும்தான் நீதிமன்றம் என்று கருதுகிறதா என்றும் கூட உயர்நீதிமன்றம் வினவியது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சார்ந்துதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசே தீர்மானித்து செயலில் இறங்குவது எந்த வகையில் நியாயம் என்றுதான் போராட்டக் குழு தலைவர்
உதயகுமார் கேட்கிறார். இதில் என்ன தவறு?

இந்திய அணு ஒழுங்குமுறை ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகளில் இன்னும் 17 பரிந்துரைகளை  கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் முழுவதுமாக நிறைவேற்றாத நிலையில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்கலாகாது என்று வேறொரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த எதேச்சாதிகார போக்கு நிச்சயம் கண்டனத்திற்குரியதே. கூடங்குளம் திட்ட பொறுப்பாளர்களே மீதமுள்ள பரிந்துரைகளை முற்றிலும் நிரைவேற்ற இன்னும் இரண்டாண்டு காலம் தேவைப்படும் என்று கூறியுள்ள நிலையில் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதி செல்லாது எனவும் இந்த மனுவில் வாதிக்கப்பட்டுள்ளதால் இதை உச்சநீதிமன்றம் புறக்கணிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மேலும் மனுதாரர் தரப்பில் நாட்டின் பிரபல வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு. ஷாந்தி பூஷனே வாதிட இருப்பதால் அத்தனை எளிதில் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்பில்லை. இதை எதிர்பார்த்துத்தான் மத்திய அரசு எரிபொருள் நிரப்புவதில் தேவைக்கு அதிகமான அவசரம் காட்டுகிறது என்று கூட கூறலாம்.
 
இந்தச் சூழலில் எரிபொருள் நிரப்புவதை  நிறுத்திவைக்கக் கோரி போராட்டம் நடத்த போராட்டக் குழுவினருக்கு தார்மீக உரிமை உண்டு என்பதை சற்றும் உணராத மத்திய, மாநில அரசுகள் காவல்துறையை ஏவிவிட்டு கண்ணீர் புகை
குண்டுகளை வீசுவதும் அதையும் மீறி கலைந்து செல்ல மறுத்தவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் தடியடி நடத்தியதும் துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மீனவர் ஒருவரை கொன்றதும் எந்த வகையிலும் நியாயம்
இல்லை. உங்களுடைய எதிர்வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு சட்டவிரோதமான இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு அறிவுரை கூறும் காவல்துறை உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை ஏன் காத்திருக்க முன்வரவில்லை? ஒருவேளை இந்திய அணு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுவதுமாக கடைபிடித்தபிறகே எரிபொருள் நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் அப்போது மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யும்?
 
திமுக தலைவரும் மற்ற எதிர்கட்சித்தலைவர்களும் கூறுவதுபோன்று தமிழக முதல்வர் போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசுவதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றே தோன்றகிறது.. ஏனெனில் அணு உலையை மூடுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் சம்மதிக்கப்போவதில்லை என்று போராட்டக் குழு தலைவரே கூறிவிட்ட நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மட்டுமே இதற்கு முடிவாக அமைய வாய்ப்புள்ளது.
 
அதுவரை எரிபொருள் நிரப்பும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஒத்திவைப்பது மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதை விட்டுவிட்டு போராட்டக் குழு தலைவரையும் அவருடைய சகாக்களையும் கைது செய்யும் முயற்சியில் இறங்குவது போராட்டத்தை கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாமல் தமிழக கடற்கரையில் வாழும் அனைத்து மீனவ பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பளித்துவிடும் என்பதை மாநில அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
***********

No comments: