13 August 2012

496. அரசு பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டிக்கு ஒதுக்கீடு!


அரசு அலுவலகங்களில் அளிக்கப்படும் பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க உதவும் உத்தரபிரதேச அரசின் உத்தரவை இந்திய அரசியல் சாஸனத்திற்கு எதிரானது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தன் விளைவாக சட்டத் திருத்தம் கொண்டு வர நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் இதுவரை குரல் கொடுக்க துணியவில்லையென்றாலும் இந்த செய்தியை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளின் வாசகர் பகுதிகளிலும் இதற்கு எதிர்மறையான கருத்துக்களே குவிந்தவண்ணம் உள்ளன. அல்லது அத்தகைய கருத்துக்கள் மட்டுமே பத்திரிகைகளால் பிரசுரிக்கப்படுகின்றன என்றும் கூறலாம்.

அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட மக்கள் பதவி உயர்வு அளிக்கப்படும் கட்டத்திலும் அதே மாதிரியான ஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. அப்படியானால் இத்தகைய ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் நுழையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையிலும் அதே பதவியில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய கருத்தா?

அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை வயது, கல்வித் தகுதி (மதிப்பெண் விகிதம்) ஆகியவற்றில் சலுகை வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் அவர்களுடைய மூதாதையர்களுக்கு அவர்களுடைய சாதியை காட்டியே கல்வித்துறையில் சம வாய்ப்புகளை அளிக்க மறுத்ததன் விளைவுதானே, கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களில் பலரும் இன்றுவரை பின்தங்கியிருப்பதற்குக் காரணம்? அதனால்தானே அவர்களுக்கு இன்னமும் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது?

எத்தனை காலம்தான் இத்தகைய சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று மேல்சாதியினருடைய முறையீட்டில் ஓரளவுக்கு நியாயம் இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் சாதியின் அடிப்படையில் மக்கள் பிரிவு படுத்தப்பட்டு இழிவு படுத்தப்படுவதும் நடந்துக்கொண்டுதானே இருக்கிறது? சுதந்திர இந்தியாவில்  நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய பல வாய்ப்புகள் அவர்களுக்கு அவர்களுடைய சாதியின் அடிப்படையில் மறுக்கப்பட்டு வந்ததன் விளைவாகத்தானே அவர்களில் பலரும் இன்றும் பொருளாதாரத்திலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்?

ஆகவே இத்தகையோர் சமுதாயத்தில் மற்றவர்களைப்போன்றே அவர்களும்  சமமாக கருதப்படும் வரையிலும் - அதாவது சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள கிராமத்திலும் சாதியின் அடிப்படையில் மக்கள் இழிவு படுத்தப்படுவது ஒழியும் வரையிலும் - அவர்களுக்கென அரசு செய்துவரும் ஒதுக்கீடும் தொடரத்தான் வேண்டும்.

இந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியிலுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி பணியாளர்களுக்கு பதவி உயர்விலும் தனி ஒதுக்கீடு மிகவும் அவசியமே.  பத்து இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் இத்தகைய ஒதுக்கீட்டின் மூலம் எஸ்.சி/எஸ்.டி வகுப்பைச் சார்ந்த இருவர் அல்லது மூவர் மட்டுமே பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகைய ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெறும் எஸ்.சி/எஸ்.டி அதிகாரிகளில் ஒருசிலர் திறமையற்றவர்களாகவோ நேர்மையற்றவர்களாகவோ இருக்க வாய்ப்பிருந்தாலும் அதனால் ஒன்றும் அரசு நிர்வாகம் சீர்கெட்டுப்போய்விடாது. இதனால் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பல தகுதியுள்ள மேல்சாதி பணியாளர்கள் இழந்துவிடுவதால் அவர்கள் மனச்சோர்வுக்குள்ளாகி தங்கள் பணியில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலும் எவ்வித நியாயமும் இல்லை. இப்போதும் கூட பதவி உயர்வுக்கு தகுதியுள்ள அனைவருக்குமே பதவி உயர்வு கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை! 

**********

04 August 2012

நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமையாசிரியர்கள் ஊழல்!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக (scholarship) ஆண்டொன்றுக்கு ரூ.1850/- வீதம் (இதுவே மிகவும் குறைவுதான்) அரசு வழங்குகிறது. இத்தொகையை அரசின் ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து காசோலையாக  பெற்று அதை மாணவர்களுக்கு வழங்கவேண்டியது அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் பொறுப்பு.

தங்களுடைய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு இலாக்காவிலிருந்து பெறவே பள்ளிகள இலாக்கா அதிகாரிகளுக்கு கப்பம் கட்டவேண்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதை பெற்று தருவதற்கென்றே தரகர்களை அந்த இலாக்கா - எந்த இலாக்காவில்தான் இத்தகைய தரகர்கள் இல்லை? வாகன உரிமம் வழங்கும் இலாக்காவிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கும் மத்திய/மாநில இலாக்காவரையிலும் இத்தகைய தரகர்களின் ஆதிக்கம்தானே? - இலைமறைவு காய்மறைவாக நியமித்துள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக இத்தகைய தரகர்களுக்கு கட்ட வேண்டிய கப்பத்தை உதவித்தொகையிலிருந்து பிடித்ததுபோக மீதியை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். இதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது.

ஆனால் அரசிடமிருந்து பெறும் மொத்த தொகையையுமே போலிக் கையொப்பங்களை இட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே கபளீகரம் செய்வது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றுதான். அதுவும் நாமக்கல்  போன்ற ஒரு சிறிய மாவட்டத்தில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் இத்தகைய ஊழலை செய்து தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திதான்.

நன்னெறி கதைகள் கூறி மாணவ செல்வங்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள பள்ளி ஆசிரியர்களே கொள்ளை அடிப்பதை தொழிலாக வைத்திருப்பது வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

இத்தகைய ஊழல் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகமெங்குமே நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு மாநில மற்றும் மாவட்ட கல்வி இயக்குனர் அலுவலகத்தை தங்கள் அதிகார வட்டதிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டுமென உத்தரவிடவேண்டும்.

இத்தகைய ஊழலை தடுக்க அரசு மாற்று வழி ஒன்றை வகுக்க வேண்டியதும் அவசியமாகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெயரிலேயே வங்கிகளில் கணக்குகளை துவக்கி அதில் நேரடியாக அரசே உதவித்தொகையை செலுத்தலாம். அல்லது காசோலைகளை மாணவர்கள் பெயரிலேயே வழங்கலாம்.

தாற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நாமக்கல் மாவட்ட காவல்துரை எஸ்.பி. அறிவித்துள்ளதை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுடைய பெற்றோர்களும் காலதாமதம் இல்லாமல் புகார் அளிப்பதும் அவசியம்.

இதில் அதிசயம் என்னவென்றால் இத்தகைய ஊழலுக்கு துணை சென்ற ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் எவரும் பணியிடை நீக்கப்பட்டதாக செய்தி இல்லை! அப்படிப்பார்த்தால் எந்த துறை அதிகாரிகள்தான் ஊழலில் ஈடுபடவில்லை? அவர்களை எல்லாம் பணியிடை நீக்கம் செய்ய துவங்கினால் அரசே ஸ்தம்பித்துப் போய்விடுமே? அவர்களை எல்லாம் கைது செய்தால் தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளுமே நிரம்பி வழியுமே என்பதால் விட்டுவிட்டார்களோ என்னவோ!!

ஊழல் மேல் மட்டத்திலிருந்து ஒழிக்கப்படுவதை விட இத்தகைய கீழ்மட்ட பணியாளர்களிடமிருந்து ஒழிக்கப்பட வேண்டும். கடந்த பதினெட்டு மாதங்களாக என் வீட்டு கட்டுமான பணியை சரிவர முடிக்க எத்தனை அரசு அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது? எத்தனை பேரிடம் கை கட்டி நிற்க வேண்டியிருந்தது? 1985 மற்றும் 1992லும் தூத்துக்குடியில் வீடு கட்டினேன். அப்போது இந்த அளவு சிரமப்பட்டதில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதோ இல்லையோ கையூட்டு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகவே வளர்ந்துள்ளது!

வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம்!

***********

03 August 2012

இந்திய அரசியல் சாக்கடையில் மூழ்குகிறார் அன்னா ஹசாரே!

அன்னா ஹசாரேவும் அவருடைய குழுவினரும் தங்களுடைய உண்னாவிரதத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் குதிக்கவிருப்பதாகவும் எதிர்வரும் தேசீய பொதுத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வரவேற்கத்தக்க முடிவு.

இன்று நாட்டில் பரவி நிற்கும் ஊழலுக்கு முக்கிய காரணமே இந்திய அரசியல்வாதிகள்தான் என இதுவரை கூறிவந்த அன்னாவும் அவருடைய குழுவினரும் தனிக்கட்சி ஒன்றை துவக்கி தற்போது தேசீய அரசியலில் உள்ள எந்த தேசிய /பிராந்திய கட்சிகளுடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமால் தேர்தலை தனித்து எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்பதையும் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த ஆண்டு, நாட்டிலுள்ள ஊழலை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் துவக்கியபோது மக்கள், குறிப்பாக படித்த, நடுத்தர மக்களிடமிருந்து அவருக்கு அபிரிதமான ஆதரவு இருந்தது உண்மைதான். ஏனெனில் அவருடைய போராட்டம் எந்த தனிப்பட்ட அரசியல்வாதிக்கோ கட்சிக்கோ எதிராக இல்லாமல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்து நடத்தப்பட்டது.

அவருடைய கோரிக்கை நியாயமானதோ இல்லையோ அல்லது வெறும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நாட்டிலுள்ள ஊழலை ஒழித்துவிட முடியும் என்ற வாதம் சரியோ இல்லையோ இதற்கு ஒரு துவக்கத்தையாவது ஏற்படுத்த லோக்பால் மசோதா உதவும் என்ற எண்ணம் நடுத்தர மக்களிடம் இருந்ததுதான் அவருடைய முயற்சிக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் ஆதரவு கிடைக்க காரணம்.

ஆனால் ஊழலை எதிர்த்து போராட்டத்தை துவக்கிய அன்னாவும் அவருடைய குழுவினரும் நாளடைவில் நாட்டை தற்போது ஆளும் மத்திய அமைச்சர்கள் பலரையும், ஏன் பிரதமரையும் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரணாப்பையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்ட முனைந்ததுதான் அவரை அதுவரை ஆதரித்து வந்த பலரையும் பின்வாங்க வைத்தது.

அன்னாவும் அவருடைய குழுவினரும் ஒரு பொறுப்பற்ற, தாங்கள் கூறுவதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்று பிடிவாதம் பிடிக்கும் ஒரு கூட்டம் என்பதுதான் இன்று பலருடைய கருத்தும் என்றால் மிகையாகாது. ஆகவேதான் இம்முறை அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை அறிவித்தபோது முன்பு இருந்த அளவுக்கு கூட்டம் சேராமல் போனது. மேலும் தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே ஊழல் பேர்வழிகள்தான் என்பதுபோன்ற பொறுப்பற்ற  பேச்சும் பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அவருடைய இயக்கத்தை புறக்கணிக்க வைத்தன.

இதே நிலை நீடித்தால் தன்னுடைய போராட்டம் வலுவிழந்துபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்குத் தள்ளியிருக்க வேண்டும். இப்போதுமட்டுமல்லாமல் இனி எப்போதும் இதுபோன்ற போராட்டத்திற்கு மக்களுடைய வரவேற்பு முன்பிருந்ததுபோல் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் - இவர்களில் பலருக்கு இதுவேதான் இப்போதைய முக்கிய தொழில் என்பது வேறுவிஷயம் - ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கி தேர்தலை சந்திக்கலாம் என்ற யோசனையை அன்னாவின் மனதில் தெளித்திருக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சியை, அதுவும் தேசிய அளவில், துவக்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்பது அத்தனை எளிதா என்ன? இந்த முயற்சியில் ஒருசில பிராந்திய கட்சிகள்  மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால் தேசிய அளவில் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது அன்னா ஹசாரேவுக்கு தெரியுமோ என்னவோ அவருடைய குழுவிலுள்ள 'அறிவுஜீவிகளுக்கு' நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு பொழுதுபோக வேண்டுமே? தேர்தலில் வெற்றி பெற்றால் அது தங்களுடைய சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தோற்றால் ஊழலுக்கு கிடைத்த வெற்றி  என்றும் - கேப்டன் பாணியில் - ஒரு அறிக்கை விட்டுவிட்டுலாமே என்று நினைத்திருக்கலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்து முடிந்த 10 மாநில தேர்தல்கள் பல பிராந்திய கட்சிகளுக்கே வலு கூட்டியுள்ளன என்பதையும் கருத்தில்கொண்டால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவும் கூட கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான். இந்த லட்சணத்தில் அரசியலுக்கு அறிமுகமே இல்லாத அறிவுஜீவிகளை களத்தில் இறக்கிவிடப் போகும் அன்னாவின் கட்சியின் நிலை என்னவாக இருக்கும்?
***********