24 ஜூலை 2012

தலைக்கனம் பிடித்த தலைவர்கள்!

உலக அரசியலில் மிக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களுள் பலர் குறிப்பாக, முசோலினி, ஸ்டாலின், ஹிட்லர்,சதாம் ஹுசைன் ஆகியோர் தலைக்கனம் பிடித்த தலைவர்களாக இருந்தனர். மகாத்மாவை 'அரை நிர்வாண பக்கிரி' என்று வர்ணித்த மற்றும்  இந்திய சுதந்திரத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்த சர்ச்சிலும் தலைக்கனம் பிடித்தவர் என்பது பிரசித்தம்.

இந்த வரிசையில் முக்கிய இடம் பெறக் கூடிய அளவிற்கு தலைக்கனம் பிடித்த தலைவர்கள் பலரும் நம் நாட்டிலும் உள்ளனர் என்றால் மிகையாகாது, தமிழகத்தையும் சேர்த்து. இவர்களுக்கு தங்களை விட்டால் இந்த நாட்டையோ மாநிலத்தையோ ஆள ஆளில்லை என்கிற நினைப்பு! தங்களைத் தவிர மற்ற அனைவருமே, அவர்கள் தங்களுடைய கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருப்பினும் முட்டாள்கள் என்கிறை நினைப்பு வேறு.

இன்று மாநிலங்களில் சிலவற்றையும் மத்தியில் சில அமைச்சகங்களையும் தலைமையேற்று நடத்தும் தலைவர்கள் அடிக்கின்ற சில்லறைத்தனமான கொட்டங்களால் நாடே சிரிப்புக்குள்ளாகி வருவதைப் பார்க்கிறோம். ஏன் மத்திய அரசை எப்போதும் குறை கூறி வரும் மத்திய எதிர்க்கட்சி தலைவியும் இந்த வரிசையில் குறிப்பிட தகுதியுள்ளவர்தான்!

அதிலும் குறிப்பாக சில நாட்களாக மத்திய அமைச்சரவையில் எனக்குத்தான் முதலிடம், எனக்குத்தான் இரண்டாம் இடம் என்று சில மூத்த அமைச்சர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை.

நேற்று குடியரசு தலைவரை வழியனுப்பும் விழாவில் கலந்துக்கொண்ட நாட்டின் இரு முக்கிய பெண் தலைவர்களுக்கிடையிலும் எங்கள் தலைவருக்கு இரண்டாம் இடம் அளிக்கவில்லையென்பதால் மத்திய அமைச்சரவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சியின் ப்ரஃபுல் பட்டேலுக்கும் இடையில் நடந்த உரையாடலை மிகவும் வேடிக்கையாக வெளியிட்டுள்ளது ஒரு வட இந்திய ஊடகம்.

ஆளுங்கட்சித் தலைவி பட்டேலிடம் 'இந்த பிரச்சினையை தீர்க்க எதையாவது செய்யூங்களேன்' ('please do something') என்றாராம். உடனே அருகில் நின்றிருந்த எதிர்க்கட்சித் தலைவி,'ஒன்றும் செய்யாதீர்கள்' ('Don't do anything') என்றாராம்! பட்டேல் என்ன மறுமொழி கூறுவதென தெரியாமல் திகைத்து நின்றாராம்.

ஒருவேளை இது வேடிக்கையாக நடைபெற்ற உரையாடலாக இருக்கலாம். ஆனால் இதுதான் இன்றைய சூழ்நிலை. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு இடையில் நடைபெற்றுவரும் பனிப்போர் தீர்ந்தபாடில்லை. இதனால் ஆட்சி சரிவர நடைபெறவில்லை, பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் ஏழை எளிய மக்கள் மேலும் நலிவடைகின்றனர் என்று வெளியில் ஒப்பாரி வைக்கும் எதிர்க்கட்சித் தலைவி எதையாவது செய்து இந்த சிக்கலைத் தீர்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 'ஒன்றும் செய்யாதீர்கள்' என்கிறார் திரை மறைவில். என்ன நாடகம் இது?

இந்த தலைக்கனம் பிடித்த தலைவர்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு தவிப்பது நம்முடைய 'under achiever'  பிரதமர். சில்லறை விஷயங்களுக்காக இவ்வாறெல்லாம் ஆட்டிப்படைக்கும் சகாக்களைக் கட்டி மேய்க்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்போது அவரால் எப்படி சாதிக்க முடியும்!

இதற்கெல்லாம் தீர்வு வேண்டுமென்றால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முட்டாள்தனமான கூச்சலை அடியோடு ஒதுக்கிவிட்டு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியை கொண்டுவர வேண்டும். அது காங்கிரசோ அல்லது பி.ஜே.பியோ, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைக்கும் வகையில் வாக்களிப்பது மிகவும் முக்கியம். ஆனால் அதே சமயம் எந்த கட்சியும் அசுர பலம் (நம் தமிழகம் அதற்கு முக்கிய உதாரணம்: அம்மையார் இப்போது போடும் ஆட்டத்திற்கு இந்த அசுர பலம்தான் காரணம்) பெற்றுவிடக் கூடாது. இடது சாரி கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். மாநில கட்சிகளுக்கு பெருத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களிலாவது ஆட்சியிலிருக்கும் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே மத்தியில் ஆள வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக கிடைத்த வரைக்கும் லாபம் என்ற அளவுக்கு கொள்ளையடிப்பதிலேயே குறியாயிருக்கும் திராவிட கட்சிகளுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கவே கூடாது.
**********