06 மார்ச் 2012

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களும் கூடங்குளம் போராட்டமும்

இந்த பிரச்சினையைக் குறித்து எழுத வேண்டும் என்று பல மாதங்களாக நான் கருதியிருந்தாலும் நான் கிறிஸ்துவன் என்பதால் என்னுடைய கருத்துக்கள் ஒருதலைபட்சமானதாகவே உள்ளது என்று குறை கூற பல பதிவாளர்கள் முனைவார்கள் என்பதால் எழுதாமலிருந்தேன்.

ஆனால் சமீப காலமாக ஏதோ கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு அயல் நாட்டிலிருந்த கிடைத்த பணத்தை வைத்து நாட்டையே விலைபேசி விட்டதுபோல் நாட்டின் பிரதமரிலிருந்து அடிதட்டு கூமுட்டை அரசியல்வாதிகள்வரை பேசுவதைக் கேட்ட பிறகும் வாளாவிருப்பது நல்லதல்ல என்று தோன்றியதால் இந்த பதிவு.

முதலில் தொண்டு நிறுவனங்களை அயல் நாட்டிலிருந்து எப்படி நன்கொடையை பெறுகின்றன என்பதைக் கூட அறியாத பாமர அடிதட்டு அரசியல்வாதிகள் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டவுடனே அதற்கு அயல்நாட்டிலிருந்து நன்கொடை வந்து கொட்டிவிடுவதில்லை. அதற்கு மத்திய அரசின் உள்துறையிலிருந்து அனுமதி பெற வேண்டும். அந்த தொண்டு நிறுவனத்தின் அமைப்பு, அதன் டிரஸ்டி எனப்படும் உறுப்பினர்கள் யார், யார், அதன் நோக்கம் என்ன, அது எத்தனை ஆண்டுகள் நாட்டில் தொண்டாற்றியுள்ளது, உள்நாட்டிலிருந்து இதுவரை அவர்கள் பெற்ற நன்கொடைகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அந்த தொண்டு நிறுவனம் ஆற்றிய பணி என்னென்ன என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து அதன் பிறகு இதற்கென உள்ள கணக்காளர்களை (specified auditors) கொண்டு நிறுவனத்தின் கணக்கை தணிக்கை செய்து தங்களை திருப்திப்படுத்திக்கொண்ட பிறகுதான் FCRA (Foreign contribution Regulation Act 1976) அதாவது அயல்நாட்டிலிருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான பதிவு சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது.

மத்திய அரசு வழங்கிய பதிவு சான்றிதழுடன் அந்த தொண்டு நிறுவனம் தங்களுக்கு FCRA பதிவு எண் வழங்க வேண்டுமென்று  விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் முந்தைய மூன்றாண்டுகளின் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுடன் (last three years' pubished audited balance sheet) தங்களுடைய நிறுவனம் சம்பந்தப்பட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்தபிறகே நன்கொடை பெறுவதற்கான பதிவு எண் வழங்கப்படுகிறது. இதிலிருந்து தெரிவது என்ன? அயல் நாட்டிலிருந்து நன்கொடை பெற வேண்டுமென்றால் ஒரு நிறுவனம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது அரசின் கோணத்தில் திருப்திகரமாக இயங்கியிருக்க வேண்டும். இன்றைய அரசியவாதிகள் கூறுவதுபோல் அறைகுறை நிறுவனங்களுக்கெல்லாம் இந்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

அதுமட்டுமல்ல. பதிவு எண் வழங்கப்படும்போதே அந்த நிறுவனம் எங்கிருந்து, எப்படி நன்கொடை பெறலாம், பெற்ற நன்கொடையை எத்தகைய திட்டங்களுக்காக செலவிடலாம் என்பவற்றையும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அரசின் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக நன்கொடை செலவிடப்படும் பட்சத்தில் தொண்டு நிறுவனத்தின் பதிவு எண்ணையே ரத்து செய்துவிடும் அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது. இன்று நாட்டிலுள்ள சுமார் 30000 தொண்டு நிறுவனங்களில் அரசின் அனைத்து தணிக்கைகளையும் சமாளித்து தொடர்ந்து நன்கொடை பெற்று இயங்கிவரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவே என்பதே அரசின் கண்காணிப்பு எத்தனை கண்டிப்பாக அமைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.

மேலும் ஒரு தொண்டு நிறுவனம் தங்களுடைய எந்த நலத்திட்டத்திற்காக நன்கொடை பெறவுள்ளது என்பதையும் மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அயல் நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் நன்கொடையை வரவு வைக்க ஏதாவது ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள முடியும். அதை அரசின் முன் அனுமதியில்லாமல் தங்கள் விருப்பம் போல் வங்கிக்கு வங்கி மாற்றிவிடமுடியாது. நான் வங்கியில் மேலாளராக பணியாற்றிய போது பல கிறிஸ்துவ தொண்டு நிறுவன அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தும் அவர்களுடைய FCRA கணக்கை மட்டும் பெற முடிந்ததே இல்லை. ஏனெனில் அவர்கள் அனைவருக்குமே  வங்கிகளில் இத்தகைய கணக்குகள் இருந்தன. குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கில் நன்கொடை வரவு வைக்கப்பட்டபிறகு அதை வேறெந்த வங்கிக்கும் மாற்ற முடியும் என்றாலும் அரசு தணிக்கை அதிகாரிகள் அவற்றை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பார்கள் என்ற காரணத்தால் எந்த தொண்டு நிறுவனமும் அத்தகைய செயலில் இறங்குவதில்லை.

இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுவதுபோல் எந்தவொரு கிறிஸ்துவ தொண்டு நிறுவனமும் தாங்கள்  பெற்ற நன்கொடையை கூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார் நடத்திவரும் தொண்டு நிறுவனத்திற்கு மாற்றியிருக்காது என்பதே உண்மை. ஏனெனில் அது அந்த தொண்டு நிறுவனத்தின் இயக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உதயகுமார் தலைமையில் நடந்துவரும் போராட்டத்திற்கு அயல் நாட்டு நன்கொடையே காரணம் என்று கூறிவந்த நாராயணசாமி நேற்றைய தினம் நான் அப்படி கூறவேயில்லை என்று பேட்டியளிக்கிறார். அப்படியொரு சந்தேகம் தனக்கு இருந்தது என்றே கூறினேன் என்கிறார் இப்போது. இவர் அளித்த தவறான, பொறுப்பற்ற தகவலின்பேரில்தான் பிரதமரும் தேவையில்லாமல் அயல்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று உதயகுமார் அறிவிக்கை அனுப்புவார் என்று நாராயணசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அதனால்தான் திடீரென்று அந்தர் பல்ட்டி அடிக்கிறார். இப்படி வெட்கங்கெட்ட அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் அமர்ந்திருப்பதால்தான் பிரதமரின் செயல்பாடுகளும் கேவலமாக உள்ளன.

கூடங்குள்ளதில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை செயல்பட வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க அது அமைந்துள்ள இடத்திலும் அதை சுற்றிலும் வாழ்கின்ற மக்களின் - அவர்களை அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் கொச்சைப்படுத்தாமல் - அச்சங்களை போக்கும் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதே என் கருத்து. அதை விடுத்து அதன் பின்னணியில் அயல்நாட்டு சக்திகள் உள்ளன என்றோ அல்லது உதயகுமாரும் அவருடைய ஆதரவாளர்களும் அயல் சக்திகளின் கூலியாட்கள் என்கிற போக்கில் மத்திய அரசு மேலும் செயல்படுமானால் அதனால் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

இந்த பிரச்சினையை பிரதமருக்கும் தனக்கும் இடையிலுள்ள தன்மான பிரச்சினையாக துவக்கத்தில் பார்த்துவந்த அம்மையார் இப்போது அதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்து வரும் சில தினங்களில் அவர் எடுக்கப்போகும் முடிவு இதற்கு ஒரு தீர்வாக அமையுமா அல்லது போராட்டம் தீவிரமடைந்து மேலும் ஒரு பரமக்குடியாக அமைந்துவிடுமா என்பது தெரியவரும்.
*************




3 கருத்துகள்:

  1. சோனியாவின் கிறித்துவ ஆட்சி என்று காங்கிரசை குறைச் சொல்லும் பாஜகவும் இது தொண்டு நிறுவனங்களின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று கூறிவருகிறது. காங்கிரசும் வெளிப்படையாகவே வெளிநாட்டு சதி என்கிறது.

    (சந்)அற்ப வாத அரசியல்

    பதிலளிநீக்கு
  2. (சந்)அற்ப வாத அரசியல்//

    சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  3. அய்யா நீஙகள் கூறுவதெல்லாம் கணக்கு ஆரம்பிக்க மட்டும்தான். அதற்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியுமோ என்னவோ, ஆனால் உண்மையில் சர்ச்களில் தேர்தல் சமயம் நடக்கும் ஆள் கடத்தல் முதல் மற்றும் பல பல சம்பவங்கள் எதற்காக தொண்டு செய்யவா? என் சகோதரியின் மகளுடன் படித்த ஒரு பிரபல சர்ச்சின் இரு முக்கியஸ்தர்களின் மகள்கள், தங்களது அப்பாக்களின் சண்டையை தங்களது கல்லு£ரியில் தொடர ஒருவருக்கொருவர் அடுத்தவரின் அப்பா செய்யும் கோல்மாலை மற்ற மாணவியருக்கு தெரிய சண்டை போட்டுள்ளனர்.
    நீங்கள் சொன்னதை போல அரைகுறைகள் மாட்டிக் கொள்ளும். விபரமானதுகள் .............

    பதிலளிநீக்கு