27 மார்ச் 2012

படிக்காவிட்டால் பிச்சைதான் எடுக்கணும்!

         இது சாதாரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளூக்கு கூறும் அறிவுரை. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் இதை வெறும் அறிவுரையாக மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. தன்னுடைய மகளுடைய கையில் ஒரு தட்டைக் கொடுத்து கோவில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தாராம்!

பள்ளிச் சீருடையில் கோவில் வாசலில் மற்ற பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருந்த சிறுமியைக் கண்ட பொது மக்கள்  விசாரிக்க சாலையின் மறுபுறம் காரில் அமர்ந்திருந்த தந்தையைச் சுட்டிக்காட்டி அவர்தான் தன்னை இவ்வாறு தண்டித்ததாக கூறினாராம். கொதிப்படைந்த பொதுமக்கள் தந்தையையும் அவருடன் காரில் அமர்ந்திருந்த பெண் ஒருவரையும் (சிறுமியின் தாய் இறந்துவிட்டாராம்) திட்டியதுடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனராம்.

காவல்துறை விசாரனையில் சரியாக படிக்காவிட்டால் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை மகளுக்கு உணர்த்தவே இப்படி செய்தேன் என்றாராம் தந்தை!

என்ன கொடுமை பாருங்கள்! இந்த லட்சணத்தில் அவர் ஒரு தாசில்தாருடைய மகனாம்.
வாழ்க்கையில் வெற்றியடைய படிப்பு அவசியம்தான். ஆனால் படித்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே படிக்காதவர்கள் அனைவருமே தெருவில் பிச்சை எடுத்துத்தான் பிழைப்பு நடத்தவேண்டி வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான்.
இதை எப்போதுதான் பெற்றோர்கள் புரிந்துக் கொள்ளப் போகிறார்களோ?





 

 

 

 

 

 

23 மார்ச் 2012

உதயகுமார் என்ன தீவிரவாதியா?

உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டே தமிழகத்தில் பிரபலமடைந்த மேல்சாதி வெறி பிடித்த தமிழ் நாழிதழ் ஒன்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் மீனவர் வேடமிட்டு கடல் வழியே நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மீண்டும் ஒரு அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.

உதயகுமாரை தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவருடைய ஆதரவாளர்களே அவரை மிக விரைவில் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மகிழ்வடைகிறது இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை.
ஏற்கனவே ஒரு பிரிவினரைப் பற்றி கேவலமாக எழுதி தமிழகமெங்குமுள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை வெளியிட்டு மதக்கலவரத்தையும் தூண்டிவிட முயல்கிறது என்றால் மிகையல்ல.


உதயகுமார்,  அவருடைய போராட்டக் குழுவினர் மற்றும் அவர் போராட்டம் நடத்த இடம் அளித்த பாதிரிமார்கள் ஆகியோர் மீது இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என பட்டியலிடும் இந்த பத்திரிகை உதயகுமார் இவற்றிலிருந்து மீளவே முடியாதென்றும் அவர் குறைந்தபட்சம் ஏழாண்டுகளாவது சிறையில் இருந்தே ஆகவேண்டும் என்றும் கொக்கரிக்கிறது.

உதயகுமார் என்ன தீவிரவாதியா அல்லது கொள்ளைக் கூட்டத் தலைவனா?

இலட்சம் கோடிகைளை வாரி விழுங்கி ஏப்பம் விட்ட அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளான அதிகாரிகளும் பேருக்கு சில நாட்கள் சிறையில் ராஜபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு பிணையில் வெளி வந்து அரசியல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் பொதுநலனுக்காக ஒரு அறப்போராட்டத்தை எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சாமான்ய மனிதரை ஒரு தீவிரவாதியைப் போல் சித்தரித்து அவரை தேசீய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிடுகிறவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?

வாருங்கள், வந்து உதயகுமாரை மட்டுமல்லாமல் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடையுங்கள், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போன்றே எங்களையும் சுட்டு வீழ்த்துங்கள் என்று மன உறுதியுடன் கண்ணீர் மல்க பேட்டியளிக்கும் அந்த அப்பாவி பெண்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்களேன். இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் கூச்சலிடும் அரசியல்வாதிகள்  உள் நாட்டிலேயே ஒரு குக்கிராமத்தில் வாழும் மக்களை அவர்களுடைய அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை பெற முடியாமல் 144 தடையுத்தரவு என்கிற பெயரில் சிறைபிடித்து வைத்திருப்பதற்கு என்ன பொருள்? இலங்கைத் தமிழர்களுக்கு குய்யோ முறையோ என்று மார்பில் அடித்துக்கொண்டு புலம்பிய தமிழ் பதிவாளர்கள் ஏன் இதில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றீர்கள்?

இது ஒரு சிறிய மதத்தைச் சார்ந்த ஏழை மீனவர்களின் பிரச்சினைதானே என்றுதானே இந்த மவுனம்?

 எங்கோ வசிக்கும் தமிழனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலாவரியாக பக்கம், பக்கமாய் எழுதிக் குவித்த பதிவாளர்கள் எங்கே போனார்கள்? இடிந்தகரையில் காவல்துறையும் ராணுவமும் சுற்றிவளைத்து மக்களை சிறைபிடித்து வைத்துள்ளதற்கு எங்கே உங்கள் எதிர்ப்பு? எத்தனை நாளைக்கு தொடரப்போகிறது இந்த கொடுமை?


************

22 மார்ச் 2012

சிறுபான்மையினரை சிறுமைபடுத்தும் மத்திய அரசு

சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பு மிக்க முறையில் பணியாற்றி வந்தவர்கள் கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் கன்னியர்கள். அவர்களால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயின்று இன்று உலகெங்கும் பணிபுரிபவர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரர் என்றால் மிகையல்ல. அதுபோன்று இலவச அல்லது குறைந்த செலவில் சேவை மனப்பான்மையுடன் அவர்களால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரே.

ஆயினும் தன்னை ஒரு மதச் சார்பற்ற நாடாக பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவில் அன்று முதல் இன்று வரை சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதை அரசின் (அது எந்த கட்சியால் ஆளப்பட்டாலும்) செயல்பாடுகள் பல சமயங்களில் எடுத்துக்காட்டியுள்ளன. தேர்தல் காலத்தில் காலைப் பிடிப்பதும் அது முடிந்ததும் காலை வாரிவிடுவதும் நாட்டை இதுவரை ஆண்ட அனைத்துக்கட்சிகளும் கடைபிடித்துவந்த எழுதா கொள்கை என்றும் கூறலாம்.

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளுள் காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மை சமூகத்தை, அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டை அங்கீகரித்து
, ஆதரித்து வந்த கட்சி என்பது சிறுபான்மையினரிடையே பரவலாக நிலவி வந்த கருத்து. ஆனால் சமீப காலமாக, அதாவது கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள சந்தர்ப்பவாத கட்சிகளையெல்லாம் இணைத்துக்கொண்டு ஆட்சி என்ற பெயரில் நாட்டையே கேலிக்குரியதாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்த ஆட்சி சிறுபான்மையினரை சமீப காலமாக சிறுமைப்படுத்தி வருவதை காணமுடிகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதனால் ஏற்படக்கூடிய பாதகங்களினால் நேரடியாக பாதிக்கப்படவிருக்கும் இடிந்தகரை கிராமத்தின் மொத்த ஜனத்தொகையில் 80 விழுக்காடுக்கும் மேலுள்ளவர்கள் மீனவர்கள். அவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். ஆகவே அவர்கள் வழிபடச் செல்லும் தேவாலயங்களை நிர்வகிக்கும் பாதிரியார்களும் அவர்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள். அத்தகைய பாதிரியார்களுக்கு மறை மாவட்ட அளவில் தலைவராக இருக்கக் கூடிய தூத்துக்குடி ஆயர் அவர்களும் இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டிய சூழல்.
எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துயமத்திய அரசுக்கு எதிராக கத்தோலிக்க பாதிரியார்களும்
, ஆயர்களும் இத்தகைய மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு துணிந்து ஆதரவு அளிக்க முன்வந்ததில்லை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய ஒரே காரணத்திற்காக அதுவரை வழங்கப்பட்டிருந்த சலுகைகள் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு மறுக்கப்பட்டபோதும் உலகளவில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய போராட்டத்தை அவர்கள் முன் நின்று நடத்தியதில்லை.

னெனில் இடிந்தகரை மக்கள் தற்போது நடத்திவரும் போராட்டம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை  மட்டுமல்லாமல் அவர்கள் உயிர் வாழ்வதையே பாதிக்கக் கூடும் என்கிற அச்சத்தால் - வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், உயிர் பயத்தால் - ஏற்பட்ட தன்னிச்சையான போராட்டம் என்பதால்தான் அவர்களுடைய ஞான மேய்ப்பர்களான பாதிரிமார்கள் ஆதரவு அளிக்க முன்வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தில் கத்தோலிக்க கிறீஸ்த்துவர்கள் மட்டுமே பங்கு கொள்வதுபோலவும் இடிந்தகரை கிராமத்திலும் அதைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் வசிக்கும் மற்ற மதத்தினர் எவரும் இதில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதுபோலவும் சில நாளேடுகளும் ஊடகங்களும் சித்தரிப்பது விஷமத்தனமானது. இந்த போராட்டக் குழுவை முன்நின்று நடத்துபவரே கிறீஸ்துவரல்ல என்பதை மறந்துவிட்டன இந்த பத்திரிகைகள்!

இது கிறிஸ்துவர்களால் கிறிஸ்துவர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் ஆகவே சில கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளை இந்த போராட்டக் குழுவின் தலைவர் நடத்துகின்ற தொண்டு நிறுவனத்திற்கு மாற்றியதுபோலவும் கற்பனையாக ஒரு குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் என்ற பதவிக்கே களங்கம் வருவித்துக்கொண்டிருக்கும் ஒரு இணை அமைச்சர் பகிரங்க புகார் வைத்தார்.
 ஆனால் அதை முழுமையாக நிரூபிக்க முடியாமல் போகவே தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் தலைமையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி பல்நோக்கு சேவை மையத்தின் பெயரில் வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு நன்கொடை உரிமத்தை (FCRA A/c)யும் அந்த தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FCRA விதிகளின்படி ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட நன்கொடையை வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தலாகாது என்பது உண்மைதான். ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று பார்த்தால் சேவை நோக்கத்துடன் ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென நன்கொடையை பெற்று பிறகு அந்த நிதியை லாப நோக்கத்துடன் செயல்படவிருக்கும் வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதுதான். உதாரணத்திற்கு சமூகக் கூடம் ஒன்றை கட்டுவதற்காக ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென வெளிநாடுகளிலிருந்து பெற்ற நன்கொடையை வியாபார நோக்குடன் ஒரு திருமண மண்டபமோ அல்லது கேளிக்கை விடுதியோ கட்ட பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில்தான் இத்தகைய விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நான் தூத்துக்குடியில் கிளை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இதே தூத்துக்குடி தொண்டு நிறுவனம் கண்கானிப்பில் செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள் நல திட்டங்களில் பங்குக்கொண்டு அவர்கள் பரிந்துரைத்த மக்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கியிருக்கிறேன். மற்ற அரசு இலாக்காக்களைப் போலல்லாமல் கடன் பெற தகுதியானவர்களை இனங்கண்டு பரிந்துரைப்பதுடன் நின்றுவிடாமல் வங்கிகள் வழங்கும் கடன் தொகையை முழுவதுமாக வசூலிக்கவும் இந்த தொண்டு நிறுவனம் உதவியுள்ளது.

இன்றும் அந்த தொண்டு நிறுவனம் பெறும் நன்கொடைகளை நம்பி தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் கண்கானிப்பில்  230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்கள் இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் இந்த அடாவடி நடவடிக்கையால் முடங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்து வரும் தணிக்கை நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு எவ்வித நன்கொடையும் திருப்பிவிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிறகும் வேண்டுமென்றே ஏதோ ஒரு நலத்திட்டத்திற்காக பெற்ற நன்கொடையை வேறொரு நலத்திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளது என்பதை குற்றமாக கற்பித்து ஒரு சிறுபான்மையினரால் கால் நூற்றாண்டுக்கும் மேல் திருப்திகரமாக செயல்பட்டு வந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி அதை சார்ந்திருக்கும் பல ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் விளையாடும் மத்திய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய அடாவடிச் செயலுக்கு காரணம் காங்கிரஸ் என்று ஒட்டுமொத்தமாக குறைகூற முடியாது. ஆனால் மனமுதிர்வில்லாத ஒருசில மத்திய அமைச்சர்களே இதற்குக் காரணம். அவர்களை அடக்கி ஆள திராணியில்லாத சாதுவான ஒரு பிரதமர் அமைச்சரவைக்கு தலைவராக இருப்பதும் ஒரு காரணம்.


*********

20 மார்ச் 2012

கூடங்குளம் அணு உலையும் தமிழக அரசும்


அனைவரும் எதிர்பார்த்தபடி தமிழக அரசு குறிப்பாக, அதன் முதல்வர், தன்னுடய முந்தைய எதிர்ப்பைமறந்துவிட்டு கூடங்குளம் அணு உலையை திறக்க அனுமதித்துள்ளார்.


இதுவரை 'உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும்வரை அணு உலை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதி வந்த முதல்வர் இப்போது மத்திய அரசும் தன்னுடைய அரசும் அமைத்த வல்லுனர் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகள் தமக்கு திருப்தியளிப்பதாக இருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஏனெனில் கூடங்குளம் அணு உலை கட்டுமான பணிகள் இன்றோ, நேற்றோ துவக்கப்பட்டவை அல்ல. அடிப்படை ஆய்வு பணிகள் துவக்கப்பட்டதோ 1988ம் ஆண்டு. அதன் பிறகு அம்மையாரே இரு முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் அணு உலை கட்டுமானப் பணிகள் தொடர்வதற்கு எவ்வித மறுப்பும் கூறாமல் இருந்தவர் ஆயத்த பணிகள் அனைத்தும் முடிந்து மின் உற்பத்தி துவங்கவிருக்கும் சூழலில் திடீரென்று அதற்கு முட்டுக்கட்டையாக நின்றது சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை மனதில் வைத்துத்தானே தவிர அணு உலையைச் சுற்றிலும் வாழும் ஏழை மக்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. அத்துடன் பிரதமருடன் நீயா, நானா என்று அவர் நடத்திய தன்மான போராட்டமும் ஒரு காரணம். அணு உலை அமைந்துள்ள மாநிலத்தின் முதல்வர் நான் இருக்க என்னை கலந்தாலோசிக்காமல் மின் உற்பத்தி தியதியை தன்னிச்சையாக மத்திய அரசு எப்படி தீர்மானிக்கலாம் என்கிற ஆணவமும் முதலில் இதை எதிர்த்ததற்கு ஒரு காரணம்.

ஆனால் அதே அணு உலைக்கு ஆதரவாக பா..கவின் போக்கு உள்ளது என்பதை அம்மையார் உணர்ந்தபோதுதான் மாநில அளவில் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து அணு உலை பாதுகாப்பானதுதான் என்பது போன்ற அறிக்கையை பெற்று இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அம்மையாரின் உள் எண்ணத்தை உணர்ந்த அவருடைய ஜன்ம எதிரியான கலைஞர் உடனே 'இது உள்ளூர் மக்களை ஏமாற்றும் வேலையே தவிர வேறொன்றுமில்லை' என்று அறிக்கை விட்டார். பிறகு அவரே சங்கரன்கோவில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு திடீரென்று தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள 'இனியும் தாமதிப்பதில் பயனில்லை' என்ற ஞானோதயம் அம்மையாருக்கும் வந்துவிட்டது.

இத்தகைய சூழலில் அம்மையாரின் உள்நோக்கத்தை அறியாமல் நியாயம் கிடைக்காதா என்று அவரிடமே முறையிட சென்ற உதயகுமாரை என்னவென்று சொல்வது? அவருடைய முறையீட்டை தான் கண்டுக்கொள்ளவே போவதில்லை என்பதை முழுவதும் உணர்ந்திருந்த அம்மையார் வேண்டுமென்றே ஒப்புக்கு அவரை சந்திக்க சம்மதித்து மறுப்பேதும் பேசாமல் அவர் கூறியதையெல்லாம் கேட்டிருந்துவிட்டு அனுப்பி வைக்க அவர் 'முதல்வர் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம்' என்று அப்பாவித்தனமாக ஒரு அறிக்கையையும் விட்டார். இப்போது நாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறார். இவர் என்ன அன்னா ஹசாரேவா இவருடைய உயிரை காப்பாற்ற எதிர்க்கட்சிகளும், அறிவியல் வல்லுனர்களும் இவருடன் கைகோர்க்க?

அணு உலை எதிர்ப்பு என்கிற தங்களுடைய போராட்டம் இனியும் வெற்றிபெறும் என்ற போக்கில் உதயகுமாரும் அவரை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களும் செல்வார்களேயானால் அது விபரீதமாகவே முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு, அவர்களுடைய உண்ணாவிரத போராட்டம் நடத்த இடமளித்து ஆதரிக்கும் கத்தோலிக்க தேவாலய அமைப்பாளர்களும் தகுந்த ஆலோசனையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அவர்களுடைய போராட்டம் உள்ளூர் தேவாலய வளாகத்தில் நடப்பதால்தான் காவல்துறை அதை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது. அவர்களுடைய போராட்டம் வன்முறையாக மாறாமல் அமைதி வழியில் அதே வளாகத்தினுள் இருந்து தொடருமானால் காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இத்தகைய பயனற்ற போராட்டத்திற்கு இனியும் உடன் செல்வது சரிதானா என்பதை உள்ளூர் தேவாலய நிர்வாகிகள் சிந்தித்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து இதை ஒரு சுமுக முடிவுக்கு கொண்டு வருவது நல்லது.

கூடங்குளம் பிரச்சினையை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவில் இது மேலும் ஒரு பரமக்குடியாக முடியக் கூடாது என்று எழுதியிருந்தேன். உதயகுமார் தலைமையிலான அறப்போராட்டம் இனியும் தொடருமானால் ஒரு சந்தர்ப்பத்தில் அது எல்லையைக் கடந்து அதன் விளைவாக காவல்துறையின் அத்துமீறலுக்கு உள்ளாகி இனியும் ஒரு பரமக்குடி என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



**********

ழ்

16 மார்ச் 2012

சடுதியாய் மீண்டும் ஒரு மரணம்


என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த நண்பர்கள் சிலரின் சடுதி மரணத்தைப் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன்..

ஆனால் இந்த வாரம் நிகழ்ந்த ஒரு மரணம் சடுதியானதும் அகாலமானதுமட்டுமல்ல அவலமானதும் கூட..
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் என்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த நான் என்னுடைய புதல்வியர்களின் விருப்பத்திற்கேற்ப சென்னையிலேயே தொடர்ந்து வசிப்பதென தீர்மானித்தேன்.

ஆனால் சென்னையில் எனக்கென்று சொந்த வீடு இல்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து பதினைந்தாயிரம் வாடகைக்கு கொடுத்து இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்பதால் ஒரு வீடு அல்லது குடியிருப்பை தேடி அலைய ஆரம்பித்தேன். ஒரு வருடம் முயன்றும் சென்னை நகராட்சிக்குள் என்னுடைய பட்ஜெட்டுக்குள் கிடைக்கவில்லை.
ஆகவே சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் என்னுடைய உறவினர்கள் சிலருடைய உதவியுடன் சென்னையிலிருந்து சுமார்
25 கி.மீ. தூரத்திலுள்ள ஆவடியில் ஒரு வீட்டு மனையை விலைக்கு வாங்கினேன். ஆனால் அப்பகுதியில் சி.எம்.டி.. அப்ரூவல் இல்லாத, அதாவது பரம்பரை பட்டா உள்ள மனைகளே அதிகம் இருந்தன. என்னுடைய அதிர்ஷ்டம் ஒரு சிறிய மனை அப்ரூவலுடன் இருப்பதாக நான் சந்தித்த தரகர் கூறவே அதை போய் பார்த்தேன். பிடித்திருந்தது. ஆனாலும் ஆவடி நகராட்சி அளித்த ஒப்புதல் சான்றிதழின் ஃபோட்டோ நகல் மட்டுமே தரகரிடம் இருந்தது. அதில் நகராட்சி ஒப்புதலின் எண் தெளிவாக இல்லாததால் யாரை விசாரிப்பது என்று குழம்பியிருந்தபோதுதான் மனைக்கு மிக அருகாமையிலேயே வசித்த, இந்த முன்பின் பரிச்சயமில்லாத, நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நிலமும் நான் பார்த்த மனையின் நிலமும் ஒரே லே-அவுட்டுக்குள் அடங்கியிப்பதாக தரகர் கூறியதால் அவரை அணுகி அவருடைய மனையில் ஒப்புதல் சான்றிதழை காண்பிக்க முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன்.
ஆனால் அவர் மட்டுமல்லாமல் அவருடைய இளம் மனைவியும் என்னையும் என்னுடைய மனைவியையும் புன்சிரிப்புடன் வரவேற்று அவர்கள் வசம் இருந்த அனைத்து ஆவணங்களையும் எனக்கு காண்பித்து தயங்காமல் வாங்குங்கள் என்றனர்.

முன்பின் பரிச்சயமில்லாத இருவரை வீட்டுக்குள் அழைத்து முகம் மலர எங்களுடைய அனைத்து ஐயங்களையும் நிவர்த்தி செய்த அவ்விருவரின் நேர்த்தியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லைஅத்துடன் நில்லாமல்
'நாங்க வீடு கட்டறப்போ என்னல்லாம் மிஸ்டேக் பண்ணமோ அத எல்லாம் உங்களுக்கு சொல்றேன் சார். நீங்க அத எல்லாம் அவாய்ட் பண்ணீங்கன்னாவே போறும், ஈசியா கட்டி முடிச்சிரலாம்.' என்றார். அன்று சுமார் அரை மணி நேரம் தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக பகிர்ந்துக்கொண்ட அவருடைய பெருந்தன்மை மறக்க முடியாத ஒன்று. அதுமட்டுமல்லாமல் திருமணமாகி பத்து வருடம் குழந்தை இல்லாமல் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்த சமயத்தில்தான் ஒரு மனையை வாங்கி வீடு கட்டினாலாவது குழந்தை இல்லாத சோகத்தை மறக்க முடியும் என்று கருதி வீடு கட்டுவதை துவங்கியதாகவும் வீட்டைக் கட்டி முடித்த அடுத்த மாதமே தன்னுடைய மனைவி கற்பமானதாகவும் கூறினார். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அதற்குப் பிறகு என்னால் உடனே வீட்டை கட்ட முடியாமல் பல
தடங்கல்கள் ஏற்பட்டு இரண்டாண்டுகள் இழுத்துக்கொண்டே போனது. நமக்கு நேரம் வரும்போது கட்டிக்கொள்ளலாம் என்று நானும் இருந்தேன். அவருடனான தொடர்பும் நான் என்னுடைய மனையை காண செல்லும்போது ஏற்பட்ட ஒருசில நிமிட சந்திப்புகளுடன் நின்றுபோனது.
ஆறுமாதங்களுக்கு முன்பு வீட்டு கட்டுவதை துவங்குவதென தீர்மானித்து ஒரு ஒப்பந்தக்காரரை அணுகி அவரை அழைத்துக்கொண்டு மனைக்குச் சென்றபோது அவருக்கும் இந்த நண்பரை நன்கு தெரிந்திருந்தது.
அவருடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்று நண்பரும் பரிந்துரைக்கவே ஒப்பந்தம் செய்து பணியை துவக்கவிருந்தபோது ஆழ்கிணறு தோண்ட நான் கேட்காமலேயே தண்ணீர் கொடுத்து என்னுடைய பூமி பூஜையிலும் கலந்துக்கொண்டு எனக்காக தன் நண்பரான ஒப்பந்தக்காரரிடம் பரிந்துரைத்து உதவினார். என்னுடைய மனைக்கு பின்னால் அமைந்திருந்த ஒரு புதிய குடியிருப்பின் உரிமையாளரும் அவருடைய நண்பர் என்பதால் அதிலேயே ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து கட்டட வேலையை துவக்கினேன். நான் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக கட்டடம் வளர்ந்து நிற்கிறது....
ஆனால் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த நண்பர் இப்போது இல்லை
....
  
ஏன் இந்த மரணம் சடுதியாய் வந்து மிகவும் நல்ல ஒரு மனிதரை அதுவும் நாற்பது வயதும் கூட நிறைவுபெறாத ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டது என்பதை எப்படி சொல்வது....
பத்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற ஒரே மகளை ..

இரண்டே வயதிலும் வாய் ஓயாமல் பேசும் அந்த இளம் சிட்டை விட்டுவிட்டுச் செல்ல எப்படி அந்த மனிதருக்கு மனம் வந்தது...
'கணவன், மனைவி இருவருமே வாய் ஓயாமல் இப்படி பேசுகிறீர்களே உங்கள் மகளும் அப்படியே பேசுவதில் என்ன வியப்பிருக்கிறது' என்று நானே கேலியாக அவர்களிடமே கூறியிருக்கிறேன். அப்படி பேசுவார்கள் இருவரும்.... யாரிடமும் அவ்வளவு நெருங்கி பழகாமல் எட்டியே இருந்த நானும் என் மனைவியும் அவர்களுடைய அபிரிதமான பேச்சில் மயங்கி மாதம் ஒருமுறையாவது அவர்களுடைய இல்லத்திற்கு சென்று மணிக்கணக்கில் அவர்கள் இருவர் மட்டுமல்லாமல் அவர்களுடைய குட்டிப் பெண்ணின் மழலையும் ரசித்திருப்போம்....
அப்படிப்பட்ட குடும்பத்தை எப்படி அவரால் கைவிட்டுச் செல்ல முடிந்தது?

இரண்டு நாட்களுக்கு முன்னர் ....

நான் மாலை நடைக்குச் சென்று விட்டு வரும் வழியில் இருந்த ரயில்வே லெவல் கிராசிங் அருகில் ஒரு பெரிய கூட்டம் நின்று இருந்ததை பார்த்தேன்.
ஆனால் பாதுகாப்பற்ற அந்த கிராசிங்கில் கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்க முயன்று அதிவேகமாக நெடுந்தூர ரயில்களில் அடிபட்டு மரிப்பது சகஜம் என்பதால் நான் கண்டுக்கொள்ளவில்லை...
ஆனால் வீடு திரும்பியதும்தான் தெரிந்தது அன்று அடிபட்டு மரித்தவர் மிகக் குறைந்த காலத்தில் எங்களை கவர்ந்துவிட்ட நண்பர்தான் என்பது...

தவறி விழுந்திருப்பார் என்று நானும் என்னுடைய மனைவியும் நினைத்திருந்ததற்கு மாறாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவரேதான் வேண்டுமென்று விழுந்துவிட்டார் என்று கூறியதாக கூறி
'ஏன் இப்படி செஞ்சார்னு தெரியலையே சார்.... உங்க கிட்டக் கூட ரெண்டு நாளைக்கு முன்னால பேசிக்கிட்டிருந்தாரே....' என்று அவருடைய மனைவி கதறியபோது என்னால் ஒன்றும் கூற முடியவில்லை...
உண்மைதான்..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நானும் அவரும் என்னுடைய வீட்டுக்கு வெளியில் நின்று கட்டுமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... 'உங்க வீட்டு வேல முடிஞ்சதும் நான் சின்னதா ரெண்டு ரூம் மாடியில போடலாம்னு இருக்கேன் சார்....' என்றாரே என்று என்னுடைய மனது அடித்துக்கொள்கிறது....
இரண்டு நாட்களுக்குள் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்..

இருவருமே பணிபுரிபவர்கள்... கை நிறைய வருமானம் .... பின் என்னதான் பிரச்சினை? எப்படி விசாரிப்பது.... யாரிடம் விசாரிப்பது...
இறுதிச்சடங்கிற்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலக நண்பர்களும் இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்..
இரண்டு நாட்களாக கண்ணை மூடினாலும் உறக்கம் வராமல் அந்த புன்னகை நிறைந்த முகமும்.... இறுதிச் சடங்கில் தூக்கக் கலக்கத்துடன் தன் ஒரேஅத்தையின் இடுப்பில் அமர்ந்து உடலை சுற்றி வந்து கும்பிட்ட இரண்டு வயதே நிறம்பிய என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்த அந்த சிட்டின் முகமும்..... பாடாய் படுத்துகிறது...
***********
 
 
 
 
 
 
 
 

06 மார்ச் 2012

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களும் கூடங்குளம் போராட்டமும்

இந்த பிரச்சினையைக் குறித்து எழுத வேண்டும் என்று பல மாதங்களாக நான் கருதியிருந்தாலும் நான் கிறிஸ்துவன் என்பதால் என்னுடைய கருத்துக்கள் ஒருதலைபட்சமானதாகவே உள்ளது என்று குறை கூற பல பதிவாளர்கள் முனைவார்கள் என்பதால் எழுதாமலிருந்தேன்.

ஆனால் சமீப காலமாக ஏதோ கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு அயல் நாட்டிலிருந்த கிடைத்த பணத்தை வைத்து நாட்டையே விலைபேசி விட்டதுபோல் நாட்டின் பிரதமரிலிருந்து அடிதட்டு கூமுட்டை அரசியல்வாதிகள்வரை பேசுவதைக் கேட்ட பிறகும் வாளாவிருப்பது நல்லதல்ல என்று தோன்றியதால் இந்த பதிவு.

முதலில் தொண்டு நிறுவனங்களை அயல் நாட்டிலிருந்து எப்படி நன்கொடையை பெறுகின்றன என்பதைக் கூட அறியாத பாமர அடிதட்டு அரசியல்வாதிகள் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டவுடனே அதற்கு அயல்நாட்டிலிருந்து நன்கொடை வந்து கொட்டிவிடுவதில்லை. அதற்கு மத்திய அரசின் உள்துறையிலிருந்து அனுமதி பெற வேண்டும். அந்த தொண்டு நிறுவனத்தின் அமைப்பு, அதன் டிரஸ்டி எனப்படும் உறுப்பினர்கள் யார், யார், அதன் நோக்கம் என்ன, அது எத்தனை ஆண்டுகள் நாட்டில் தொண்டாற்றியுள்ளது, உள்நாட்டிலிருந்து இதுவரை அவர்கள் பெற்ற நன்கொடைகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அந்த தொண்டு நிறுவனம் ஆற்றிய பணி என்னென்ன என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து அதன் பிறகு இதற்கென உள்ள கணக்காளர்களை (specified auditors) கொண்டு நிறுவனத்தின் கணக்கை தணிக்கை செய்து தங்களை திருப்திப்படுத்திக்கொண்ட பிறகுதான் FCRA (Foreign contribution Regulation Act 1976) அதாவது அயல்நாட்டிலிருந்து நன்கொடை பெறுவதற்கு தேவையான பதிவு சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது.

மத்திய அரசு வழங்கிய பதிவு சான்றிதழுடன் அந்த தொண்டு நிறுவனம் தங்களுக்கு FCRA பதிவு எண் வழங்க வேண்டுமென்று  விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் முந்தைய மூன்றாண்டுகளின் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுடன் (last three years' pubished audited balance sheet) தங்களுடைய நிறுவனம் சம்பந்தப்பட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்தபிறகே நன்கொடை பெறுவதற்கான பதிவு எண் வழங்கப்படுகிறது. இதிலிருந்து தெரிவது என்ன? அயல் நாட்டிலிருந்து நன்கொடை பெற வேண்டுமென்றால் ஒரு நிறுவனம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது அரசின் கோணத்தில் திருப்திகரமாக இயங்கியிருக்க வேண்டும். இன்றைய அரசியவாதிகள் கூறுவதுபோல் அறைகுறை நிறுவனங்களுக்கெல்லாம் இந்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

அதுமட்டுமல்ல. பதிவு எண் வழங்கப்படும்போதே அந்த நிறுவனம் எங்கிருந்து, எப்படி நன்கொடை பெறலாம், பெற்ற நன்கொடையை எத்தகைய திட்டங்களுக்காக செலவிடலாம் என்பவற்றையும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அரசின் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக நன்கொடை செலவிடப்படும் பட்சத்தில் தொண்டு நிறுவனத்தின் பதிவு எண்ணையே ரத்து செய்துவிடும் அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது. இன்று நாட்டிலுள்ள சுமார் 30000 தொண்டு நிறுவனங்களில் அரசின் அனைத்து தணிக்கைகளையும் சமாளித்து தொடர்ந்து நன்கொடை பெற்று இயங்கிவரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவே என்பதே அரசின் கண்காணிப்பு எத்தனை கண்டிப்பாக அமைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.

மேலும் ஒரு தொண்டு நிறுவனம் தங்களுடைய எந்த நலத்திட்டத்திற்காக நன்கொடை பெறவுள்ளது என்பதையும் மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அயல் நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் நன்கொடையை வரவு வைக்க ஏதாவது ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள முடியும். அதை அரசின் முன் அனுமதியில்லாமல் தங்கள் விருப்பம் போல் வங்கிக்கு வங்கி மாற்றிவிடமுடியாது. நான் வங்கியில் மேலாளராக பணியாற்றிய போது பல கிறிஸ்துவ தொண்டு நிறுவன அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தும் அவர்களுடைய FCRA கணக்கை மட்டும் பெற முடிந்ததே இல்லை. ஏனெனில் அவர்கள் அனைவருக்குமே  வங்கிகளில் இத்தகைய கணக்குகள் இருந்தன. குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கில் நன்கொடை வரவு வைக்கப்பட்டபிறகு அதை வேறெந்த வங்கிக்கும் மாற்ற முடியும் என்றாலும் அரசு தணிக்கை அதிகாரிகள் அவற்றை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பார்கள் என்ற காரணத்தால் எந்த தொண்டு நிறுவனமும் அத்தகைய செயலில் இறங்குவதில்லை.

இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுவதுபோல் எந்தவொரு கிறிஸ்துவ தொண்டு நிறுவனமும் தாங்கள்  பெற்ற நன்கொடையை கூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார் நடத்திவரும் தொண்டு நிறுவனத்திற்கு மாற்றியிருக்காது என்பதே உண்மை. ஏனெனில் அது அந்த தொண்டு நிறுவனத்தின் இயக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உதயகுமார் தலைமையில் நடந்துவரும் போராட்டத்திற்கு அயல் நாட்டு நன்கொடையே காரணம் என்று கூறிவந்த நாராயணசாமி நேற்றைய தினம் நான் அப்படி கூறவேயில்லை என்று பேட்டியளிக்கிறார். அப்படியொரு சந்தேகம் தனக்கு இருந்தது என்றே கூறினேன் என்கிறார் இப்போது. இவர் அளித்த தவறான, பொறுப்பற்ற தகவலின்பேரில்தான் பிரதமரும் தேவையில்லாமல் அயல்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று உதயகுமார் அறிவிக்கை அனுப்புவார் என்று நாராயணசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அதனால்தான் திடீரென்று அந்தர் பல்ட்டி அடிக்கிறார். இப்படி வெட்கங்கெட்ட அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் அமர்ந்திருப்பதால்தான் பிரதமரின் செயல்பாடுகளும் கேவலமாக உள்ளன.

கூடங்குள்ளதில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை செயல்பட வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க அது அமைந்துள்ள இடத்திலும் அதை சுற்றிலும் வாழ்கின்ற மக்களின் - அவர்களை அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் கொச்சைப்படுத்தாமல் - அச்சங்களை போக்கும் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதே என் கருத்து. அதை விடுத்து அதன் பின்னணியில் அயல்நாட்டு சக்திகள் உள்ளன என்றோ அல்லது உதயகுமாரும் அவருடைய ஆதரவாளர்களும் அயல் சக்திகளின் கூலியாட்கள் என்கிற போக்கில் மத்திய அரசு மேலும் செயல்படுமானால் அதனால் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

இந்த பிரச்சினையை பிரதமருக்கும் தனக்கும் இடையிலுள்ள தன்மான பிரச்சினையாக துவக்கத்தில் பார்த்துவந்த அம்மையார் இப்போது அதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்து வரும் சில தினங்களில் அவர் எடுக்கப்போகும் முடிவு இதற்கு ஒரு தீர்வாக அமையுமா அல்லது போராட்டம் தீவிரமடைந்து மேலும் ஒரு பரமக்குடியாக அமைந்துவிடுமா என்பது தெரியவரும்.
*************