23 மார்ச் 2011

தேர்தல் 2011 - இலவச திட்டங்களும் ஒருவகையில் லஞ்சம்தான்!

ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை தடுக்கும் முகமாக தேர்தல் கமிஷன் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் அரசு
திட்டங்கள் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக வாரி வழங்குவதாக தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

கடந்த முறை திமுக அறிவித்திருந்த இலவச திட்டங்கள் மூலமாக தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு என அவற்றிற்கு
தகுதியற்ற பலரும் பயனடைந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என்னுடைய குடியிருப்புக்கு அருகாமையில் குடும்ப அடையாள அட்டை
வைத்திருப்போருக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டபோது நாற்சக்கர வாகனங்களில் வந்து அவற்றை பெற்றுக்கொண்டு சென்றவர்களையும் காண முடிந்தது!

அரசின் நலத்திட்டங்கள் அவற்றை பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பது அடிப்படை நியதி. மக்களின் வரிப்பணத்திலிருந்து செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை குடும்ப அடையாள அட்டைதாரர்கள் அனைவருக்கும் செயல்படுத்துவது முட்டாள்தனம். குடும்ப அட்டை வழங்கப்படுகின்ற சமயங்களில் நிரந்தர வருமானம் உள்ள பல அரசு ஊழியர்களும் கூட தங்களுடைய நிஜ வருமானத்தை மறைத்து அல்லது குறைத்து குறிப்பிட்டு குடும்ப அட்டைகளை பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே குடும்ப அட்டைதாரர்கள் என்ற அடிப்படையில் மட்டும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வினியோகிப்பது அரசு பணத்தை வீணடிப்பதற்கு சமம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்திருந்த அனைத்து இலவச திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவிட்டது என பெருமை அடித்துக்கொள்ளும் தற்போதைய அரசு அதனால் அரசுக்கு மொத்தமாக எத்தனை கோடிகள் செலவிடப்பட்டன அவற்றை அரசு எவ்வாறு அல்லது
எங்கிருந்து திரட்டியது (Mobilised) என்பதையும் வெளியிடுவது அவசியம். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுக்கென
ஒதுக்கப்படும் நிதி இத்தகைய திட்டங்களுக்கு புறம்பான செலவினங்களாக (Non-Plan expenditure) வீணடிக்கப்படுகின்றனவா என்பதையும் மாநில
அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது சட்டவிரோதம் என்று கூறும் தேர்தல் கமிஷன் இத்தகைய இலவச திட்டங்களை எப்படி தடைசெய்யப் போகிறது? இவை இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன? வேட்பாளர் வழங்கும் பணம் அல்லது பொருட்களுக்கு தேவைப்படும் பணம் அவர்களுடைய சொந்த அல்லது கட்சிப்பணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அவற்றை தனிநபர்
செலவினங்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் எங்களுடைய கட்சி அரசமைக்க வாக்களித்தால் இவற்றை இலவசமாக வழங்குகிறோம் என்று ஒரு
அரசியல் கட்சி வாக்குறுதியளிக்கும்போது அது அரசு கஜானாவையே அல்லவா பாதிக்கிறது? முந்தையது சட்டவிரோத செயல் என்றால் பின்னது?

அதைவிட மோசமாயிற்றே?

சமீபத்தில் வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட இலவசங்கள், சலுகைகள் என்பவற்றை நீக்கிவிட்டு பார்த்தால்
உருப்படியாக எந்த நலத்திட்டங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. போனால் போகிறது என்று 'மின் உற்பத்தியை பெருக்க மேலும் பல மின்
அணு நிலையங்களை நிறுவுவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி, கடந்த ஐந்தாண்டுகளில் ஏன் இவற்றை செயல்படுத்தவில்லை?

ஸ்ரீரங்கநாதசாமியின் பாதத்தில் வைத்து பூஜசெய்துவிட்டு வெளியிடப்படப்போகும் அதிமுக அறிக்கையிலும் இத்தகைய இலவச திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இடதுசாரி கட்சிகளின் அறிக்கையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் (அவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதேயில்லை என்பது வேறு விஷயம்!) மற்ற அனைத்துக் கட்சிகளின் அறிக்கைகளுமே இதே பாணியில்தான் இருக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை.

இத்தகைய குறிக்கோளற்ற, கொள்கைகளற்ற அறிக்கைகளால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித நீண்ட கால பயனும் கிடைக்கப்போவதில்லை. இலவசம் என்ற பெயரில் மக்களின் இன்றைய தேவைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற நினைப்பில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்ற வரையில் நிலைமை இப்படித்தான் நீடிக்கும்.

இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து!

தொடரும்..

21 மார்ச் 2011

தேர்தல் 2011 - அதிமுக கூட்டணி குழறுபடி தொடர்கிறது

என்னுடைய கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அதிமுக தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட குழறுபடி இன்னும் தீர்ந்தபாடில்லை.

'மேடம்' தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட, கொதிப்படைந்த அதிமுக தோழமை கட்சிகளில் இடது சாரி கட்சிகள் இரண்டும்தான் முதலில் போர்க்கொடி உயர்த்தின. அவர்களுடன் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் போன்ற கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக 'கேப்டன்' அலுவலகத்திற்கு படையெடுத்துச் சென்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாம் அணியை உருவாக்குவதைப் பற்றி ஆராய அவரை அழைத்தனர். ஆனால் இத்தகைய முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று கருதிய கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாட்கள் காத்திருக்கச் செய்தார். ஆயினும் மார்க்சிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் நிரூபர்கள் 'அதிமுகவுடன் சமரசம் செய்துக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது 'நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள், நான் அதை செய்யப்போவதில்லை.' என்றார் காட்டமாக.

அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை மீண்டும் துவங்குவதற்கு கேப்டன் மூன்று நிபந்தனைகள் முன்வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.

1. மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
2. தேதிமுக விரும்பிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
3. தேர்தல் பிரச்சாரத்தை தங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

தனக்கு யாரும் நிபந்தனை வைப்பதை எப்போதும் விரும்பாத 'மேடம்' இவற்றை ஏற்றுக்கொண்டதுபோன்ற பாவனையை செய்து தன்னுடைய பிரச்சார கூட்ட சுற்றுப்பயணத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற தன்னுடைய முந்தைய முடிவை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதை மேடம் முடிவெடுத்திருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தன்னுடைய 'மூத்த' தலைவர்கள் குழுவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடர அனுப்பிவைத்தார்.இடதுசாரிகள், புதிய தமிழகம், சமக மற்றும் இதர சிறு, சிறு கட்சிகளுக்கு அவை விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர்களும் தங்களுடைய மூன்று நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துவுடன் மேடத்தை சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இடதுசாரிகளின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். மதிமுகவை கூட்டணியில் இணைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு.

மீதமுள்ள இரு கட்சிகளான தேமுதிக மற்றும் மதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தேமுதிகவுக்கு இருந்த ஓட்டு வங்கியை மனதில் வைத்து அவர்களுடன் தொடர்ந்து மணிக்கணக்காக பேச்சு வார்த்தை நடத்தி ஒருவழியாக அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் ஒப்புக்கு பேச்சுவார்த்தை என்ற நாடகம் நடந்து வைகோ எப்படியும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தே அவர் கேட்டிருந்த 21 தொகுதிகளுக்கு பதில் 12 தொகுதிகளை ஒதுக்க மேடம் பெரிய மனதுடன் முன்வந்துள்ளார் என்றது அதிமுக குழு. 'கொடுத்தால் 21 இல்லையேல் கூட்டணியிலிருந்து விலகல்' என்றார் வைகோ பிடிவாதமாக. 'சரி சென்று வாருங்கள்' என்றார் மேடம் பதிலுக்கு. 'தேர்தலையே புறக்கணிக்கப்போகிறேன்' என்றார் வைகோ. 'உங்கள் முடிவுக்கு உங்களுடைய அன்பு சகோதரி என்ற பெயரில் வருந்துகிறேன்' என்று கடிதம் ஒன்றை எழுதி இனி பேசி பயனில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் மேடம்.

தாங்கள் முன்வைத்த மூன்று நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையைக் கூட மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லை என்று கேப்டனுக்கு தெரியாமல் இல்லை. அவர் நினைத்ததுபோன்றே மதிமுக விலகியதையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிமுக விலகிய செய்தி வெளியானதும் அவருக்கு வழங்கவிருந்த தொகுதிகளில் தங்களுக்கு சில தொகுதிகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது எரிகிற வீட்டில் முடிந்தவரை கொள்ளிகளை பிடுங்கலாம் என்ற நினைப்பில். ஆக, மதிமுகவைப் பற்றி இந்த கட்சிகள் பேசியதெல்லாம் வெறும் வெளிவேஷம், வடித்ததெல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

கேப்டனின் மீதமுள்ள இரு நிபந்தனைகளையும் மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லையென்பது, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் இப்போதும் தேமுதிக முழு திருப்தியடையவில்லை என்றும் இன்றும் தன்னுடைய பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுடன் கேப்டன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார் என்றும் வெளியாகியுள்ள செய்தியும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று இந்த கூட்டணி, குறிப்பாக தேமுதிக-அதிமுக கூட்டணி, அற்ப ஆயுளைக் கொண்ட கூட்டணி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இவ்விரு கட்சிகளின் தலைவர்களுமே ஒரே குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்குள் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது.

தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை புரட்டிப் போடப் போவது என்னவோ உண்மை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளைத் தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் எந்த கூட்டணிக்கும் தாவலாம் என்பதும் உண்மை. ஆனால் ஜெயித்தாலும் உடையக் கூடிய ஒரே கூட்டணி அதிமுக-தேமுதிக கூட்டணிதான்.

அதிமுக 160 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதிலிருந்தே மாநிலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடந்தான். சட்டசபையில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்க தேவையான தொகுதிகளை தாங்களாக தனித்து பெற்றுவிடக்கூடிய சூழலில் கேப்டனை தூக்கியெறிய ஒரு நொடி கூட மேடம் தாமதிக்கமாட்டார் என்பதும் உறுதி!

தங்களுடைய நிழலுடனேயே ஒத்துப்போக முடியாதவர்கள் மேடமும், கேப்டனும். ஆகவே இவ்விரு கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதி கூட்டணி என்பதை வாக்களர்கள் உணர வேண்டும்.

ஊழலற்ற ஆட்சி தேவைதான். ஆனால் அரசியல் நிச்சயமற்ற சூழல் தமிழகத்திற்கு தேவைதானா?

தொடரும்..

17 மார்ச் 2011

தேர்தல் 2011 - இன்று ஆலோசனை நாள்!

ஆலோசனை, ஆலோசனை, ஆலோசனை!!

சன் செய்தி தொலைக்காட்சியில் தினமும் காலை 11.00 மணிக்கு ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதாவது மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி இது.

இன்று இந்த ஆலோசனை நேரம் ஒளிபரப்படுகின்ற நேரத்தில் திரையின் கீழ்ப்பகுதியில் அதிமுக தோழமை கட்சிகளான இடதுசாரிகள், விஜயகாந்தின் தேதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக நாடா செய்திகள் ஓடிக்கொண்டே இருப்பதால் மருத்துவ ஆலோசனை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவசர ஆலோசனை?

எல்லாம் அம்மா நேற்று அதிரடியாக வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல்தான் காரணம்.

ஏழு மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படவில்லை. தோழமை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள பல மாவட்டங்களில் தோழமை கட்சிகளுக்கு போனால் போகிறது என்று தலா ஒரு தொகுதி.

இதில் ஏறத்தாழ அம்மாவின் அனைத்து தோழமை கட்சிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனவாம்!

அதாவது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல்தான் இருக்கிறது இந்த ஆலோசனை!

மதிமுகவின் நிலையோ அதைவிடவும் பரிதாபம். நேற்று காலை கூட அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் 9 தொகுதிகளை தர முன்வந்துள்ளார், மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுங்கள் என்று தூது அனுப்பிவிட்டு அவருக்கு ஆலோசிக்கக் கூட சமயம் அளிக்காமல் அவருக்கு அளிப்பதாக கூறியிருந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது வைகோவின் முகத்தில் அடிப்பதற்கு சமம். இனியும் பொறுமையுடன் சனிக்கிழமை வரை காத்திருங்கள் என்கிறார் அவர்!

முதல் முறையாய் அமைத்த கூட்டணியில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தம் அடைந்துள்ளாராம் விஜயகாந்த்! ஆகவே தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டுள்ளாராம். அந்த கூட்டத்தில் பண்ருட்டியாரை அனுமதிக்காமல் இருந்தால் சுயகவுரவத்தை தக்கவைத்துக்கொள்ளும் அளவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் பாரத பிரதமரைப் போல கூட்டணி தர்மத்திற்காக அவமானத்தை சகித்துக்கொண்டு அம்மா தூக்கியெறியும் தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்.

இடது சாரிகளும் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது உறுதி. அவர்களுக்கு என்றைக்கு மானம், ரோஷம் இருந்திருக்கிறது? கூட்ட முடிவில் ஏதாவது சமாதானம் கூறிக்கொண்டு கூட்டணியில் தொடர்வார்கள்.

இதற்கிடையில் 'மாபெரும் நடிகர்-தலைவர்' கார்த்திக் வைகோவுக்கு அதிமுகவை உதறிவிட்டு வாருங்கள் நாம் இருவரும் இணைந்து போட்டியிடலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவேளை வைகோ பாஜகவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற செய்தியும் வருகிறது. நடிகர் சரத்குமார் திருச்செந்தூர், தூத்துக்குடி தங்களுக்கு கிடைக்கும் என்று கருதியிருந்தார் போலும். அவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இப்படி தன்னுடைய அனைத்து தோழமை கட்சிகளையும் விரோதித்துக்கொள்ள அம்மா எப்படி துணிந்தார்? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதுபோன்ற வேலையில் ஏன் இறங்கியுள்ளார்?

அவருடைய ஆஸ்தான சோதிடர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் அமோக வெற்றிபெற்று முதல்வராக வருவீர்கள் என்று கூறியுள்ளனராம். அத்துடன் தென் இந்திய மற்றும் வட இந்திய பத்திரிகைகள் சிலவும் அதிமுகவின் அமோக வெற்றியை Predict செய்திருக்கிறார்களாம். ஆகவேதான் எதற்கு தேவையற்ற luggage என்று நினைத்து தோழமை கட்சிகளை கழற்றிவிட தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது.

இனியாவது பாதிக்கப்பட்ட கட்சிகள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கூட்டணியிலிருந்து விலகினால் தேர்தலில் தோற்றாலும் தன்மானத்துடன் அரசியலில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் ஓரிரு இடங்களில் வெற்றிபெற்றாலும் போதும் என்று நினைத்து தன்மானத்தை விலைக்கு விற்க முன்வந்தால் எதிர் வரும் தேர்தல்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான்.

தொடரும்...

16 மார்ச் 2011

தேர்தல் 2011 - அம்மாவின் சாணக்கியம்!

தான் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை எதிராளி தோற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர். அதுபோன்றே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களும் உள்ளனர். இவர்களுள் ஒருவர் நம்முடைய 'அம்மா' தலைவி! சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட இடைக்கால பிணக்கில் அவருடைய சாணக்கியத்தனமான நிழல் விளையாட்டு இதை மீண்டும் நிரூபித்துள்ளது. காங்கிரசை பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோல் ஒரு பாவனையை உண்டாக்கியதுதான் கலைஞரை இரு கட்சிகளுமே விரும்பிய தொகுதி எண்ணிக்கையை கொடுக்க வைத்தது என்றால் மிகையல்ல.

காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் பிரச்சினை என்பதை கேள்விப்பட்டவுடனே தன்னுடைய தோழமை கட்சிகளான இடது சாரி மற்றும் மதிமுக கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக தள்ளிப்போட்டவர் அம்மா! ஒருவேளை காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் ஏற்பட்ட இடைக்கால பிணக்கு தீர்க்க முடியாமல் போயிருந்தால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் தன்னை அணுகும் சூழலில் தோழமை கட்சிகளுக்கு வழங்க உத்தேசித்திருந்த தொகுதிகளை காங்கிரசுக்கு தாரைவார்த்துவிட்டு இரண்டு இடது சாரி கட்சிகளையும் மதிமுகவையும் கழற்றிவிடவும் தயங்கியிருக்க மாட்டார் அவர். இதை முழுமையாக உணர்ந்திருந்தும் வேறு வழியின்றி அம்மாவின் அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழலில் இருந்தன இந்த கட்சிகள்.

துவக்க முதலே காங்கிரசையும் பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவுக்கு துளியும் இருந்ததில்லை. அவருடைய நோட்டம் எல்லாம் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற விடாமல் வாக்குகளை சிதறடித்த தேமுதிகவை இம்முறை தன்னுடைய கூட்டணியில் இணைத்து அந்த கட்சியை, அல்லது அந்த கட்சி தலைவர் விஜயகாந்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவதில்தான் இருந்தது. தன்னுடைய எண்ணத்தை விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்ற பண்ருட்டியாரை வளைத்துப்போடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் அம்மா! அரசியலிலும் சரி அரசு செயல்பாடுகளிலும் சரி இனியும் அனா, ஆவன்னா கூட தெரியாத, அம்மாவின் சாணக்கியத்தனத்தில் அடிபட்டுப்போனதை கூட உணரமுடியாத, விஜயகாந்த் திமுக என்னும் பேயை ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன் என்று மார்தட்டிக்கொள்வது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

சாதாரணமாக, நான், எனது என்று தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொள்வது அம்மாவின் தனி ஸ்பெஷாலிட்டி. இந்த குணாதிசயம் அப்படியே, சற்றும் குறையாமல், விஜயகாந்துக்கும் உள்ளது என்பதை அவருடைய இத்தகைய பேச்சுக்கள் காட்டுகின்றன. தமிழகத்தை ஐந்தாண்டு காலமாக ஆட்டிப்படைக்கும் தீய சக்தியான கருணாநிதியை ஒழித்துக்காட்டுவேன் என்றவர் அம்மா. தமிழகத்தை பிடித்திருக்கும் பேயை ஓட்டிக்காட்டுவேன் என்கிறார் நடிகர்! ஆக, இருவருமே தனியொரு ஆளாக தாங்கள் நினைத்ததை செய்துக் காட்டுவார்களாம். அதாவது தங்களுடைய தலைமையில் பணியாற்றும் கட்சி தலைவர்களோ, தொண்டர்களோ தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது இவர்கள் இருவருடைய தொனியும்.

இத்தகைய குணாதிசயம் கொண்ட இரு தலைவர்கள் எத்தனை காலம் இணைந்து, கருத்தொருமித்து செயல்பட முடியும் என்பது புரியாத புதிர். இவர்கள் இருவரையும் இணைத்தது இருவருக்கும் பொதுவான எதிரியான தீய சக்தி என்றாலும் மிகையாகாது. இருவருமே தனிப்பட்ட முறையில் கலைஞரால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே கலைஞரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ளவர்கள். மற்றபடி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை தன்மீது சுமத்தி தன்னை அண்டை மாநிலங்களிலும் அவமானப்படுத்தியவர் கலைஞர் என்ற குரோதம் அம்மாவுக்கு. சென்னை கோயம்பேட்டிலிருந்த தன்னுடைய மிகப்பெரிய சொத்தான திருமண மண்டபத்தை வேண்டுமென்றே மேம்பாலம் கட்டுகிற சாக்கில் தன்னிடமிருந்து அபகரித்ததில் கலைஞருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்ற கடுப்பில் இருப்பவர் நடிகர்!

இருவருடைய கட்சிகளுமே சர்வாதிகாரத்திற்கு பெயர் போனவை. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட இது வெளிப்பட்டிருக்கிறது. திமுகவில் இருந்ததுபோன்று அதற்கென குழு ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது வெறும் கண்துடைப்பாகவே செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (முதலில் மூன்று, பிறகு ஐந்து என்றார்கள்!) வேட்பாளர்களை தெரிவு செய்து அம்மாவின் பார்வைக்கு அனுப்ப அதிலிருந்து அவர் நேரடி நேர்காணல் மூலம் ஒருவரை தெரிவு செய்வாராம். அவருடைய நேர்காணலுக்காக நாள் கணக்கில் காத்திருந்துவிட்டு முடியாமல் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றார் ஒரு பெண் வேட்பாளர்! அவருடைய வீட்டு முன் காத்திருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே ஒரு பெரிய போலீஸ் படையே வேண்டியிருந்தது.

நடிகர் கட்சியை எடுத்துக்கொண்டால் துவக்க முதலே 'வீட்டு அம்மா' வரைந்த கோட்டுக்குள்ளேயே வளைய வந்தவர் அவர். அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் வைத்ததுதான் சட்டம். எப்போதாவது நடைபெறும் கட்சி கூட்டங்களில் தன்னை எதிர்த்துபேசும் தலைவர்களை சினிமா பாணியில் கை நீட்டி அடிக்கவும் தயங்கியதில்லை நடிகர். அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சில நாட்கள் முன்பு அதிமுக தலைவியை என்று சந்திக்கப் போகிறீர்கள் என்ற நிரூபர்கள் கேட்டபோது 'நான் யாரையும் சந்திக்க போவதில்லை' என்று அலட்சியமாக பதிலளித்தவர். அதற்குப்பிறகு ஆந்திராவிலுள்ள தன்னுடைய குலதெய்வத்தை சந்தித்தப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு - ஒருவேளை பண்ருட்டியாரின் அறிவுரையை தட்டமுடியாமல் இருக்கலாம் - வேண்டா வெறுப்பாக அம்மாவை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த விதமே 'சந்தர்ப்ப சூழலால்தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன் என்னுடைய விருப்பப்படியல்ல' என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

தன்னுடைய சாணக்கியத்தனத்தால் திமுக-காங்கிரஸ் ஒரு பொருந்தா கூட்டணி என்பதை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அம்மா அந்த முயற்சியில் தன்னுடைய கூட்டணியிலுள்ள மற்ற சிறிய தோழமை கட்சிகளின் வெறுப்பிற்கு ஆளானதை மறந்துவிட்டார் போலிருக்கிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என்றால் அதை விடவும் பொருந்தா கூட்டணிதான் அம்மா-நடிகர் கூட்டணி. முதல் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தோற்றாலும் நீடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்தைய கூட்டணி தேர்தலில் தோற்றால் அல்ல வெற்றி பெற்றாலும் அடுத்த சில மாதங்களிலேயே உடைந்துவிடும் என்பது நிச்சயம்.

இவர்களை நம்பி இந்த கூட்டணிக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் நிலையை நினைத்தால்தான்.....


தொடரும்

03 மார்ச் 2011

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற நடிகர் விஜயகாந்த் இந்த தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று இப்போது முடிவு செய்திருக்கிறார். அவருடைய தற்போதைய ஒரே குறிக்கோள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். ஊழல் இல்லாத ஆட்சியை என்னால் மட்டுமே தரமுடியும் என்று நேற்றுவரை கோஷமிட்டுக்கொண்டிருந்தவர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் தலைவியுடன் கூட்டு சேர்வது இன்றைய அரசியல் விநோதங்களில் ஒன்று.

தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் தேதிமுக பெற்ற வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதியில் இரண்டாவதாக வந்திருந்த அஇஅதிமுக கூட்டணியின் வேட்பாளருடைய வாக்குகளுடன் சேர்த்து கணக்கிட்டால் வெற்றிபெற்றவர் நிச்சயம் தோற்றிருப்பார் என்கிறது இந்து தினத்தாளில் இன்று வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கை.

உண்மைதான். அதுமட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பாமகவை, ஏன் சில தொகுதிகளில் அஇஅதிமுகவையும் கூட மூன்றாம் இடத்துக்கு தேதிமுக தள்ளியதும் உண்மை.

ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலும் தேதிமுகவுக்கு கிடைத்த வாக்குகளில் பெரும்பாலானவை இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், குறிப்பாக படித்த இளைஞர்களின் வாக்கு என்பதை மறுக்கவியலாது. என்னைப் போன்ற உண்மையான காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய கட்சியினர் மீதே வெறுப்புகொண்டு அதை வெளிக்காட்ட அளித்த வாக்குகளும் இதில் அடக்கம். ஆகவேதான் இரண்டு தேர்தல்களிலும் எந்த ஒரு தொகுதியையும் (ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாலும் நடிகர் சட்டமன்ற கூட்டங்களுக்கே எத்தனை நாள் சென்றிருந்தார், என்ன பேசினார் என்பது அவருக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களை கேட்டால் தெரியும்!) கைப்பற்றவில்லை என்றாலும் தன்னுடைய கட்சி தனித்து நிற்பதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பது தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என அறிக்கைவிட்டார் நடிகர்! அவருடைய அறிக்கையில் ஓரளவு உண்மையும் இருந்ததாக அப்போது நான் உணர்ந்தேன்.

ஆனால் ஊழலை ஊழலுக்கு பெயர்பெற்றவரால்தான் ஒழிக்க முடியும் என நினைத்தாரோ என்னவோ தங்களுடைய இரு கட்சிகளுக்கும் பொதுவான எதிரியான திமுகவை ஒழிக்க அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவருடைய இந்த முடிவுக்கு இது மட்டும்தான் காரணமா அல்லது தமிழக அரசின் சில முடிவுகளால் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு வஞ்சம் தீர்க்க இது ஒன்றுதான் வழி என்று நினைத்தாரா என்பதை காலம்தான் பதிலளிக்கும்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து மக்களை சந்திப்பதில் தவறேதும் இல்லை. கொள்கை அளவில் இருதுருவங்களாக செயல்படும் பல கட்சிகள் தேர்தல் காலங்களில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வதும் தேர்தலுக்குப் பிறகு தங்கள் வழியில் செல்வதும் அல்லது விடுதலை சிறுத்தைகள், பாமகவினரைப் போன்று தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியினருடன் சேர்ந்துக்கொள்வதும் சகஜம்தான். தேர்தல் தியதி அறிவிக்கப்படும்வரையிலும் வசைமாரி பொழிந்துக்கொள்வதும் தியதி அறிவிக்கப்பட்டவுடன் எந்த கூட்டணி அதிக தொகுதிகள் தருகின்றனரோ அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்வதும் தமிழகத்தில் மிக, மிக சகஜமாகிவிட்ட கூத்து.

ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழலின் பிறப்பிடங்கள் ஆகவே தமிழகத்தை அந்த கட்சிகளின் பிடியிலிருந்து காப்பாற்றவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறிவந்த ஒருவர் அத்தகைய கட்சிகள் ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கொள்கையிலிருந்து இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

கொள்கை அளவில் மாறுபடும் இரு கட்சிகள் தேர்தலுக்காக இணைந்து செயல்படுவதே சற்று சிரமம்தான். தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் அத்தனை எளிதாக பகைமையை மறந்து இணைந்து தேர்தல் பணியாற்றுவது அதை விட சிரமம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரே மாதிரியான (அதாவது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தன்னுடைய சொல்லுக்கு மறுசொல் இல்லை, தன்னை சுற்றியுள்ள அனைவருமே ஆமாம் சாமிகளாக இருக்க வேண்டும் என்ற) குணாதிசயங்கள் கொண்ட இரு தலைவர்கள் இணைந்து செயல்பட முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது சுமுகமாக நடந்து முடிந்தாலும் தேர்தல் தியதிவரையிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமே. பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது யாருடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்பதில் கூட கருத்து ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிரச்சாரம்... இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய முடியுமா? எதிரில் நிற்பவரை பொசுக்கிவிடக்கூடிய அளவுக்கு நெருப்பு நீரோடையாக பொங்கி பீறிவரும் தலைவியின் பேச்சுக்கு தட்டித்தடுமாறும் தலைவரின் பேச்சு ஈடுகொடுக்க முடியுமா? அல்லது எடுபடத்தான் செய்யுமா?

அதுவும் போகட்டும். தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். அஇஅதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்று தேதிமுக ஓரிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றால் (இதை உறுதி செய்ய தலைவி தன்னுடைய தொண்டர்களுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார்) தலைவி நடிகரை சீந்துவாரா என்ன? இதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நடிகர் மருத்துவர் ஐயாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.

நடிகருக்கு ஒரு கோரிக்கை: எந்த ஒரு சூழலிலும் அஇஅதிமுக நீங்கள் அறிவித்த ஊழலற்ற ஆட்சியை தரப்போவதில்லை. தலைவி விரும்பினாலும் அவருடைய தோழியும் சுற்றியுள்ள சில்லறை தலைவர்களும் ஊழலை விடப்போவதில்லை. ஆகவே இப்போதே ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதில் முனையுங்கள். இம்முறையும் தனித்து நின்று உங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

அதையும் மீறி திமுகவை வீழ்த்துவதுதான் இன்றைய தேவை என்ற முடிவுடன் விருப்பமில்லாத ஒரு கூட்டணியில் நுழைவது என்று முடிவெடுக்கும் பட்சத்தில் எதிர்கொள்ளவிருக்கும் அவமானங்களை தாங்கிக்கொள்ளக் கூடிய மனவுறுதியை அளிக்க உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த கூட்டனியில் தலைவி வீசியெறியும் எலும்புத்துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலை... பரிதாபம்! அவர்களுக்கும் திமுக என்கிற ஒரு பொது எதிரி இருப்பதால்தானே அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது?

ஆகவே இந்த கூட்டணியை திமுக எதிர் அணி என்று குறிப்பிட்டாலும் தவறில்லை என்று கருதுகிறேன்.

தொடரும்...

02 மார்ச் 2011

தேர்தல் 2011 - திமுக காங்கிரஸ் கூட்டணி

தேர்தல்களம் 2011 களைகட்ட துவங்கிவிட்டது.

இதுவரை ஒரு கட்சி ஆட்சி என்றிருந்த தமிழகத்திலும் அண்டை மாநிலங்கள் சிலவற்றின் பாணியில் இனி கூட்டணி ஆட்சிதான் என்கிற சூழல்.

திமுக, காங்கிரஸ், பாமக கட்சிக, விடுதலை சிறுத்தை மற்றும் இதர கட்சிகள் ஒருபுறம் அஇஅதிமுக, தேதிமுக, இடதுசாரிகள் என மற்றொருபுறம்.

ஆயினும் எந்த ஒரு கூட்டணியும் இதுவரை தங்களுக்கிடையில் போட்டியிடக் கூடிய இடங்களை முழுவதுமாக தீர்மானித்தபாடில்லை.

இதில் காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைதான் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஆட்சியில் பங்கு என்று தீர்க்கமாக அறிவித்த காங்கிரஸ் இன்றைய தினத்தாள் செய்திகளின்படி சற்று 'அடக்கி வாசிக்க' முடிவெடுத்துள்ளது!

இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் தங்களுடைய செல்வாக்கு என்ன என்பது இப்போதும் தெளிவாக தெரியவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நான் தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ்காரன் என்றாலும் இன்றைய தமிழக காங்கிரசின் பரிதாப நிலையை மறுக்க முடிவதில்லை. கட்சிக்குள்ளே சில்லறை தலைவர்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படுகிற போட்டியும் பொறாமையும்தான் கட்சியின் இத்தகைய அவலநிலைக்கு காரணம் என்பதை தில்லியில் பொறுப்பில் இருப்பவர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது அதை விட வேதனை.

2G ஊழலில் சிக்கி திமுக சற்று சுருதி இறங்கிப் போயிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக காங்கிரசின் அடாவடி கோரிக்கைகளுக்கு பணிந்துபோக வேண்டிய நிலையில் திமுக இல்லை என்பதுதான் நிதர்சனம். இளங்கோவன் போன்ற தரங்கெட்ட தலைவர்களுடைய வெத்துவேட்டு பாவலாக்களை நம்பாமல் காங்கிரஸ் தமிழகத்தில் தன்னுடைய உண்மை நிலையை உணர்வது மிகவும் அவசியம். இன்றைய தலைவர்களில் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்றவர் என்ற பெருமைக்குரிய தலைவர் ஒருவர் கூட தமிழக காங்கிரசில் இப்போது இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே காங்கிரசுக்கு என்று ஓட்டு வங்கி ஏதும் தமிழகத்தில் இல்லை. அவர்கள் இணைந்து போட்டியிடும் கட்சியின் செல்வாக்கைப் பொருத்துத்தான் அதன் வெற்றியும் தோல்வியும். ஆகவே அந்த கட்சியின் செல்வாக்கை குறைக்க முயல்வது தனக்குத்தானே குழி தோண்டிக்கொள்வதற்கு சமம் என்றால் மிகையாகாது.

எதிர்காலத்தில் எப்படியோ, இன்றைய சூழலில் திமுகவை அனுசரித்து தங்களுக்கு வழங்கப்படவுள்ள இடங்களை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு திமுக தொண்டர்களுடன் இணைந்து முழுமூச்சுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு முந்தைய சட்டமன்ற தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற முயல்வதுதான் இன்றைய தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்வது நல்லது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் - அதேசமயம் திமுகவுக்கு பாதகமாக, அதாவது முந்தைய தேர்தலைக் காட்டிலும் அவர்களுடைய பலம் குறைந்துவிடும் பட்சத்தில் - ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளது.

ஆகவே இனியும் திமுகவுடனான பேச்சுவார்த்தையை மூன்றாம், நான்காம் சுற்று என நீட்டிக்காமல் சுமுகமாக முடித்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது கூட்டணிக்கும் நல்லது.

தொடரும்..