09 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு (நிறைவு)

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் உள்நாட்டு சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்னும் வாதம் ஒரு மாயை.


இந்தியா போன்று வளரும் நாடுகள் இன்னும் அதி வேகத்துடன் வளர்வதற்கு உதவுவது அன்னிய முதலீடு மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் இதைஏற்றுக்கொண்டு வளர்ந்த நாடுகளான சீனா, தைவான், இலங்கை போன்ற நாடுகள்தான் நமக்கு முன்னுதாரணம். இந்தியாவை விடவும் பிந்தங்கியிருந்த பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருப்பதற்கு மூல காரணம் அந்நாட்டில் தடையில்லா அன்னிய முதலீட்டை அனுமதித்ததுதான்.

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இதற்கு வித்திட்டாலும் அதை தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அதை முழு மூச்சுடன் நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் எங்கோ சென்றிருப்போம். இந்தியா போன்ற நாடுகள்தான் இனி எதிர்வரும் காலத்தில் நம்முடைய முதலீட்டிற்கு
ஏற்ற நாடுகள் என மேற்கத்திய நாடுகள் கருதுவதன் நோக்கம் நம்முடைய மிக அதிக அளவிலான நடுத்தர மற்றும் அதற்கு மேலுள்ள நுகர்வோர் எண்ணிக்கையும் அவர்கள் கைவசமிருக்கும் செலவழிக்கக் கூடிய வருமானமும்தான் (disposable income).


ஒரு நாடு வேகமாக வளர்வதற்கு முதலீடு (Investment) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாட்டு மக்கள் வாங்கி பயன்படுத்துவது (consumption). நாட்டு மக்கள் ஈட்டிய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை செலவு செய்தால்தான் சந்தையிலுள்ள பொருட்கள் விற்பனையாகும், அதன் தயாரிப்பாளர்கள்/வணிகர்களுக்கு அதிக விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் அவர்களை மேலும், மேலும் அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தும். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் 'Demand spurs more supply , increased supply creates more consumption and increased consumption creates more demand' என்கிறார்கள்.  இது ஒரு முடிவில்லா சுழற்சி. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தொடர்ந்த ஓட்டம் மிகவும் அவசியம்.

ஒரு வளர்ந்து வரும் நாட்டின் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மட்டும் இருந்தால் போதாது. ஒரு ஆரோக்கியமான சந்தை வளர்ச்சிக்கு ஒருசில பெரிய மற்றும் மிகப் பெரிய வணிகர்களும் மிக அவசியம். அது அந்த நாட்டைச் சார்ந்ததா அல்லது அயல்நாட்டைச் சார்ந்ததா
என்பதல்ல முக்கியம். அனைவரும் சந்தையில் வாணிகம் செய்ய சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் (level playing ground) என்பதுதான் முக்கியம்.


அன்னிய நாட்டிலிருந்து வரும் சிந்தனைகள், யுக்திகள், முன்னேற்றங்கள் நமக்கு உகந்ததுதான் என்றால் அவற்றை கற்றுக்கொண்டு நாமும் நம்முடைய வணிகத்தில் செயல்படுத்தி முன்னேற முயல வேண்டுமே தவிர அவர்கள் நம்மை விடவும் தேர்ந்தவர்கள் அல்லது அதை நம்மால்
கற்றுக்கொள்ள முடியாது என்று அச்சத்துடன் அவர்களை வரவே விடாமல் தடுக்க முயல்பவர்கள் தன் தலையை நிலத்தில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிக்கு சமம்.

எந்த கொம்பன் வந்தாலும் என்னால் சரியான போட்டியை அவனுக்கு கொடுக்க முடியும் என்கிற திமிர் இந்தியனுக்கு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் நம் தமிழகத்தில் நுழைந்த பெரிய மற்றும் மிகப் பெரிய வட நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் எந்த தமிழக நிறுவனம்
திவாலானது அல்லது நொடித்துப் போனது? ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் தன்னுடைய காய்கறி கடைகளை திறந்தபோது எத்தனை கூப்பாடு போட்டார்கள்? தெருமுனை காய்கறி கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிடும் என்றார்களே? அதுவா நடந்தது? இல்லை. நம்முடைய நாட்டில் 
ஒவ்வொரு வணிகருக்கும் அதற்கென்ற பிரத்தியேக வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரிலையன்ஸ் வந்தது அதை தொடர்ந்து மோர், ஃபுட்வேர்ல்ட் என எத்தனை கடைகள் வந்துள்ளன? இருப்பினும் அனைத்திலும் லாபகரமான வணிகம் நடப்பதால்தான் இன்றும் அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதுதான் இந்தியாவின் தனித்தன்மை. அண்டை மாநிலமானாலும் சரி அண்டை நாடானாலும் சரி. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வணிகம் அல்லது தொழில் செய்யலாம். அதனால் உள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தாலும் அப்படித்தான். அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் தெருமுனை சிறு வணிகர்கள் அல்ல. சமீப காலமாக புற்றீசல் போன்று ஊரெங்கும் பெரிய அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இத்தகையோருடைய எதிர்கால வளர்ச்சி விகிதம் ஒருவேளை பாதிக்கப்படலாம். வலிமையான பொருளாதாரம், சிறந்த வியாபார யுக்தி, நிர்வாகத் திறன் உள்ள நிறுவனங்கள் நிலைத்து நிற்கும். மற்றவை பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்படும்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடைய வருகையினால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன?

1. பன்னாட்டு நிறுவனங்களுடைய நேரடி கொள்முதல் விவசாயிகளை தங்களுடைய விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க உதவும்.

2. இடைத்தரகர்களுடைய ஆதிக்கம் குறையும் அல்லது நாளடைவில் அடியோடு ஒழிக்கப்படும்.

3. விலைவாசி, முக்கியமாக உணவுப் பொருட்களுடைய விலையில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும்.

4. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் வியாபார போட்டி பொருட்களின் விலையை நிச்சயம் குறைக்கும்.

5. தரமான, சுத்தமான, கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் (இப்போது உணவுப் பொருட்களில் கலப்பதற்கென்றே இயங்கிவரும் நிறுவனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்).

6. மேலைநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களால் விரயமாகும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

7. அன்னிய முதலீட்டின் வருகையால் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு மேலும் அதிகரிக்கும்.

ஆகவே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 விழுக்காடு வரை அனுமத்திப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் நாட்டின் வணிக சூழலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முடிவை சம்பந்தப்பட்ட அனைவரையும் முக்கியமாக எதிர்க்கட்சியினரையும் மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இது ஒரு அதிகார முடிவுதான் (executive decision) என்று கருதி அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை முடிவு எடுத்ததுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

ஒரு நல்ல நேர்மையான, திறமையுள்ள, பொருளாதார நிபுணத்துவமுள்ள பிரதமராக இருந்தால் மட்டும் போதாது, விவேகமுள்ள முக்கியமாக அரசியல் சாணக்கியம் தெரிந்த பிரதமராக இருப்பதும் அவசியம்  என்பதை எப்போதுதான் மன்மோகன்சிங் உணர்ந்துக்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.



***********

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு 3

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த திட்டத்தை எதிர்க்கும் பலருடைய வாதம்.




இது எந்த அளவுக்கு உண்மை?



அன்னிய முதலீட்டுடன் இந்தியாவில் நுழைய விழையும் மேலை நாட்டு நிறுவனங்களால் வால்மார்ட்,டெஸ்கோ,மெட்ரோ தங்களுடைய முதன்மை நுகர்வோர்களாக கருதப்படுபவர்கள் நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கும் மேலுள்ள நுகர்வோர்களும் மேல்தட்டு மக்கள் எனப்படும் வசதிபடைத்த நுகர்வோர்களே தவிர இன்று நாட்டில் கிராம மற்றும் சிறு நகரங்களில் செயல்பட்டு வரும் தெருமுனை கடைகளை நம்பி வாழும் நடுத்தரத்திற்கும் சற்று கீழுள்ள அல்லது வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள வறிய நுகர்வோர்களை அல்ல.



அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய விரும்புவது பொது சேவை செய்வதற்காக அல்ல என்பதும் உண்மை. அவர்களுக்கு சமீப காலங்களில் தாராளமாக செலவு செய்ய விரும்பும், உபரி வருமானமுள்ள நடுத்தரத்திற்கு மேலுள்ள மற்றும் பணக்கார நுகர்வோர்களுடைய வசம் இருக்கும் உபரி வருமானத்தை ஈர்ப்பதன் மூலம் தங்களுடைய வணிகத்தை பெருமளவு பெருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் எப்படியாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என முன்வருகின்றனர்.



அப்படி நுழைந்தவர்கள்தான் கோக்கோ கோலா, பெப்சி, கெண்டக்கி சிக்கன், மெக்டனோல்ட்,ஆதிதாஸ், ரீபோக்,சோனி போன்ற நிறுவனங்கள். அவர்கள் தங்களுடைய பெயரிலேயே கடைகளை திறக்க இன்றைய விதிமுறைகள் தடுப்பதால் இந்திய நிறுவனங்களுடைய இணைந்தனர். ஆக, இதுவும் ஒருமுறையில் அன்னிய முதலீடுதான். அதாவது மறைமுக முதலீடு.



அப்போதெல்லாம் வாய் மூடி மவுனம் காத்த இன்றைய எதிர்க்கட்சிகள் இப்போது ஏன் கூப்பாடு போடுகின்றன என்பதும் இந்த உத்தியை ஆதரிப்பவர்களுடைய கேள்வி.



தங்களுடைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறிவந்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி இதை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதென தீர்மானித்துள்ளது.



இதனால் தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கருதும் எதிர்க்கட்சிகள் இதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றன என்றாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல. தமிழக முதல்வர் கூறியுள்ளதுபோன்று மைனாரிட்டி அரசை நடத்திவரும் காங்கிரஸ் எப்படி தங்களை கலந்தாலோசிக்காமல் இப்படியொரு முடிவை எடுக்கலாம் என்பதுதான். இது வெறும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலுள்ள ஈகோ பிரச்சினையே தவிர இந்திய வணிகர்கள் மீதுள்ள பாசத்தாலோ அக்கறையாலோ அல்ல என்பது நாளடைவில் தெரிய வரும்.



அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டுக்கு நல்லதல்ல என்றால் எதற்காக ஆசிய நாடுகளான சீனா, தைவான், மலேசிய போன்ற நாடுகள் இதை தாராளமாக அனுமதித்துள்ளன என்பது காங்கிரசின் கேள்வி. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதிலளிக்காமல் சமாளிக்கின்றன.



இன்று நாட்டில் விலைவாசி உயர்வு விகிதத்தை (Inflation rate) மிகவும் பாதிப்பது உணவுப் பொருட்கள்தான் என்றால் மிகையல்ல. இதற்கு முக்கிய காரணம் விவசாயப் பொருட்கள் நேரடியாக நுகர்வோரை சென்றடைய விடாமல் தடுக்கும் இடைத்தரகர்கள்.



உதாரணத்திற்கு நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை எடுத்துக்கொள்கிறேன். இந்த நகராட்சி சென்னையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு சென்னையிலும் கூட காணமுடியாத பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடைகள் மார்க்கெட்டிற்கு உள்ளும் வெளியிலும் இயங்கி வருகின்றன. இதற்கு நேர் எதிரிலில் இப்போதும் வீசை கணக்கில் காய்கறிகளை மொத்த விலைக்கு விற்கும் ஒரு சந்தையும் உள்ளது. இது ஆவடியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக சிறு வியாபாரிகளுக்கு விற்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கு நடப்பது அதுவல்ல. இங்கு கடை வைத்திருக்கும் இடைத்தரகர்கள் லாரிகளில் ஏற்றி வரும் காய்கறிகளை இடைமறித்து மொத்தமாக பேரம் பேசி வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை காணலாம்.



இதே பகுதியில் தனியார் நடுத்தும் நடுத்தர வணிக கடைகள் இரண்டும், பொன்னு ஸ்டோர்ஸ் எனப்படும் ஐந்து மாடி வணிக வளாகமும், ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையும் அமைந்துள்ளது.



மொத்த சந்தையில் வீசை கணக்கில் சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படும் விலையை காட்டிலும் ஒரு கிலோவுக்கு நான்கிலிருந்து ஐந்து ரூபாய் குறைவாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் விற்க முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக கொள்முதல் செய்வதால் அவர்களுடைய லாபத்தையும் சேர்த்தாலும் சந்தை விலையை விடவும் குறைவாக விற்க முடிகிறது.



ரிலையன்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்களால் இந்த விலைக்கு விற்க முடிகிறதென்றால் இவர்களை விட பன்மடங்கு பொருளாதார பலமும் நிர்வாக திறனும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு மலிவாக பொருட்களை வழங்க முடியும்? உணவுபொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் முக்கியமாக காரணமாக விளங்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும்.



தொடரும்...







06 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - 2

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தத்தான் செய்யும். நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் எனப்படும் GDPயில் 44 விழுக்காடு, அதாவது ரூ.11 இலட்சம் கோடி சில்லறை வணிகத்தின் பங்கு என்கிறபோது அதில் அன்னிய முதலீடு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும், மறுப்பதற்கில்லை. அதுவும் அன்னிய முதலீடு இல்லாமலேயே சில்லறை வணிகத்தின் வளர்ச்சி வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 விழுக்காடு வரையில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது என்றால் அன்னிய முதலீடும் இதை தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தால் அதன் வளர்ச்சி எத்தனை அசுரத்தனமாக இருக்கும்!

சமீபத்திய கணிப்பின்படி இப்போது சுமார் 100 நபர்களுக்கு ஒரு சில்லறை கடை என்ற அடிப்படையில் நாட்டின் சில்லறை வணிகத்தை சார்ந்து மட்டும் சுமார் நான்கு கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனராம்! அதில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் நடத்தும் பெரிய வணிக நிறுவனங்களின் பங்கு மிகவும் சிறியதே.

ஆக, தெரு முனை துணி, மளிகை மற்றும் இதர கடைகள் (இதில் டீக்கடை உள்ளிட்ட உணவு விடுதிகள், பேக்கரி, ஃபேன்சி ஸ்டோர் மற்றும் குறிப்பிட முடியாத பொருட்களை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்) ஆகியவை சுமார் நான்கு கோடி ஊழியர்களின் வாழ்வாதாரமாக உள்ளது! இது நாட்டின் மொத்த தொழிலாளர்களில் வெறும் 8 விழுக்காடுதான் என்றாலும் நான்கு கோடி ஊழியர்கள் என்பது கணிசமான எண்ணிக்கையல்லவா? அதுவும் இத்தகையோர் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் அன்னிய முதலீட்டால் இவர்களுடைய வேலை பறிபோக வாய்ப்புள்ளது என்று இடதுசாரிகள் கூக்குரலிடுவது தவறில்லையே!

ஆனால் அன்னிய முதலீட்டின் நம் நாட்டிற்குள் நுழையவிருக்கும் நிறுவனங்கள் எவை, அவை என்னென்னவ்பொருட்களை விற்பனை செய்யவிருக்கின்றன என்பது இதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும் என்ற வாதிடும் சில்லறை வணிகர்களுக்கு தெரியுமா?

அன்னிய முதலீடு வழியாக நாட்டிற்குள் நுழைய விரும்பும் உலகின் பெரு வணிக நிறுவனங்களில் சில வால் மார்ட், டெஸ்கோ, மெட்ரோ. இத்தகைய வணிக நிறுவனங்கள் கையாளும் பொருட்களுக்கும் நம்முடைய சில்லறை வணிகர்கள் (அதாவது தெருமுனை கடைகளுக்கும்) எவ்வித சம்பந்தமும் இருக்கப் போவதில்லை. இப்போதும் கூட நம்முடைய நாட்டின் பெரு வணிக நிறுவனங்களான ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா, நிறுவனங்கள் நடத்து ஹைப்பர் ஸ்டோர்ஸ் எனப்படும் சூப்பர் மார்க்கெட் கடைகள் கையாளும் பொருட்கள் பலவும் தெருக்கடை வணிகர்கள் கையாளும் பொருட்களிலிருந்து வெகுவாக மாறுபட்டவை. அவை எதிர்நோக்கும் நுகர்வோர்களும் (targeted consumers) தெருக்கடைகளை சார்ந்திருக்கும் நுகர்வோர்கள் அல்ல. ஆகவே இத்தகைய வணிக நிறுவனங்களின் வருகையால் தெருக்கடை வணிகர்கள் நிச்சயம் நேரடியாக பாதிக்கப்படப் போவதில்லை.

அப்படியென்றால் இத்தகைய மேலை நாட்டு நிறுவனங்களின் வருகையை ஏன் சில்லறை வணிகர்கள் எதிர்க்கின்றனர்? இதனால் உண்மையில் நஷ்டமடையப் போவது இத்தகைய வணிகர்களா அல்லது நம்மைப்
போன்ற நுகர்வோரா?



தொடரும்...

05 டிசம்பர் 2011

சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

கடந்த சில வாரங்களாக இந்திய நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்த முடியாமல் மத்திய அரசு படும் அவஸ்தைக்கு சிறு வணிகத்தில் 51 விழுக்காடு வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய
அமைச்சரவை எடுத்த முடிவுதான் முக்கிய காரணம்.

மத்திய அமைச்சரவை முடிவை பின்வாங்க போவதில்லை என காங்கிரசும் இந்த முடிவால் இந்தியாவிலுள்ள பல சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பின்வாங்கும் வரை நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த விடப்போவதில்லை என எதிர்க்கட்சிகளும் பிடிவாதம் பிடிக்கும் இச்சூழலில் ஒரு நடுநிலையான நுகர்வோன் என்ற கோணத்திலிருந்து இந்த அன்னிய முதலீட்டால் ஒரு சராசரி நுகர்வோனுக்கு கிடைக்கவிருக்கும் பலன்களையும் ஏன் எவரும் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்துடன் அலச முடிவெடுத்ததன் விளைவே இந்த கட்டுரை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இதே சில்லறை வணிகத்தில் பெரிய முதலீட்டாளர்களை, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படும் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களை அனுமதிப்பது சரியா என்ற கேள்வி எழுந்தபோது அதில் தவறேதும் இல்லை என்ற கோணத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு சாதகமானஓரிரண்டு கருத்துக்களை விட எதிர்த்து வந்த கருத்துக்களே மிக அதிகம் என்பதும் என் நினைவுக்கு வருகிறது.

அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' கிளைகளை தமிழகமெங்கும் நிறுவ முற்பட்டிருந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள், குறிப்பாக பா.ம.க., பல சாலை போராட்டங்களை டத்தியது. இத்தகைய நிறுவனங்கள் சில்லறை மற்றும் சிறு வணிகர்களுடைய பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடும் என்றெல்லாம் வாதிட்டார்கள். அப்போது இந்தியா போன்ற பல தரப்பு வருமானமுள்ள
நுகர்வோர் (Income Groups) உள்ள நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் வந்தாலும் அவற்றால் மற்ற சிறு வணிகர்களூக்கு பாதிப்பு ஏற்படாது என்று வாதிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் நான் கூறியதுதான் சரி என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணமாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று சென்னையில் சில்லறை வணிகத்தை மட்டுமே நம்பி மிகப்பெரிய
அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ளபோதும் சிறு வணிகர்கள் எனப்படும் தெருமுனை கடைகள் எதுவும் மூடப்பட்டுவிடவில்லை. ஒவ்வொரு பகுதியிலுமுள்ள காய், கறி மார்கெட்டுகளும் முன்பை விட
சிறப்பாகவே நடக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

அப்போது இந்தியாவிலுள்ள தெருமுனை கடைகளுக்கு முதல் எதிரியாக கருதப்பட்டவை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது விளையும் பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்யும் இத்தகைய நிறுவனங்களாலேயே சிறு வணிகர்களுடைய சந்தை பங்கை (market share) பாதிக்க முடியவில்லை என்றால் உலக சந்தையில் மிகப் பெரிய சில்லறை வியாபாரிகள் எனப்படும் நிறுவனங்கள் நுழைவதால் ஏற்படப் போவதில்லை என்பது நிதர்சனம்.

அதே சமயம் மத்திய அரசின் இந்த முடிவை ஏன் எதிர்க்கட்சிகளும் சிறு வணிகர்களும் எதிர்க்கின்றன என்பதையும் ஆராய வேண்டும் அல்லவா?

அன்று நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று முடிவு எடுத்தபோது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான டாட்டா,
பிர்லா நிறுவனங்கள் இதை பல வகைகளிலும் எதிர்த்ததை பார்த்தோம். உற்பத்தி துறையிலும், எலக்ட்ரானிக் மற்றும் தொலைதொடர்பு துறைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் நம் நாடு அடைந்த அசுர வளர்ச்சிக்கும் உலக சந்தையில் மிக சகஜமாக கிடைக்கும் பல நுகர்வோர் பொருட்களும் (consumer items) சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே ஏறக்குறைய அதே விலையில் இந்தியாவிலும் கிடைப்பதற்கும் அன்னிய முதலீட்டை இத்தகைய துறைகளில் அனுமதித்ததுதான் முக்கிய காரணம் என்பதை மறந்துவிட முடியாதே!

மேலும் கணினி துறையில் மட்டுமல்லாமல் தொலை தொடர்பு, எலக்ட்ரானிக், வாகன தயாரிப்பு போன்ற துறைகளில் நம் நாடு கண்ட அசுர வளர்ச்சியின் நேரடி விளைவாக கருதப்படுவது இந்தியர்கள் கையில்
உள்ள உபரி வருமானம் (disposable income). கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கு சற்று மேலேயுள்ளவர்களுடைய (middle and above middle income groups) மக்கள் தொகை 25% விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்கிறது சமீபத்திய கணிப்பு.

இத்தகைய உபரி வருமானத்தை செலவிட சந்தையில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டுமல்லவா? எவ்வளவு காலத்திற்குத்தான் எதிர்காலத்திற்கு தேவை, தேவை என்று சேமித்து வைப்பது? செலவழிக்க
வழியில்லாமல் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய முறப்பட்டதும் இன்று வானளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலைக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளில், அதாவது 2005-06 முதல் 2008-09 ஆண்டுடன் முடிந்த காலத்தில் இந்திய நுகர்வோர் செலவிட்ட தொகையின் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்றுள்ளதை


கீழ்காணும் பட்டியலை பார்த்தால் விளங்கும்:

                                                                  2005-06 06-07 07-08 08-09 (விழுக்காடு வளர்ச்சி)

1. உணவு மற்றும் உணவு பொருட்கள் :11.7 11.1 13.0 14.4

2. ஆடை மற்றும் காலணி :                   18.0 25.0 27.7 22.0

3. வீட்டு உபயோக பொருட்கள் :             18.0 22.0 19.4 11.0

4. இதர செலவினங்கள் :                                  12.0 14.8 14.1 14.2



இதர செலவினங்கள் வகையில் பெரும்பாலான விழுக்காடு பொழுதுபோக்கு, சுற்றுலா செலவினங்களே!

இதன் நேரடி விளைவுதான் இன்று சென்னை மற்றும் பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் முளைத்துள்ள பலமாடி வணிக வளாகங்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மலேஷியா சென்றபோது அங்கு நான்
பார்த்து மலைத்துப்போன வணிக வளாகங்களை என்று இந்தியாவில் காணப்போகிறோம் என்ற என்னுடைய கனவு இத்தனை விரைவில் நனவாகும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ள பல சிறிய சில்லறை வணிகர்களுடைய கடைகளும் இன்று வரையிலும் திறந்துதான் உள்ளன என்பதையும் பார்க்கும்போது சமீபத்திய முடிவால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..


இருப்பினும், பாதிப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது...



தொடரும்...