18 ஏப்ரல் 2011

மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு....

திரு சகாயம் அவர்களே,

சமீப காலமாக உங்களுடைய பெயர் தினத்தாள்களில் அதிகம் அடிபடுகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மீது நீங்கள் பொய் வழக்கு போடச் சொல்லி உங்களுக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரியை வற்புறுத்தியதாகவும் அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு தன்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்க அவரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் அதிகாரி தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாகவும் அதற்கும் நீங்கள்தான் காரணம் என்பதுபோலவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான உங்கள் அலுவலக வாழ்க்கைப் பயண விவரங்களை படித்த பிறகு
உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி ஒரு மத்திய அமைச்சர் மீது பொய் வழக்கு போடச் சொல்லும் அளவுக்கு தரமிறங்கியிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

மேலும் தினமலரில் வெளியாகியிருந்த அந்த கட்டுரையில் "இவர் பந்தாடப்பட்ட விதமே இவருடைய நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கியம்தான் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத தூண்டியது.

இந்த வாக்கியம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் பட்ட பாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. நான் பணியாற்றிய வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. நான் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் கொச்சியில் நான்கு வருடங்களும் சென்னையில் ஆறு வருடங்களும் பணியாற்றிய காலத்தை இதிலிருந்து குறைத்துவிட்டு பார்த்தால் மீதமுள்ள பதினைந்து ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பணியாற்றியுள்ளது தெரியவரும். சாதாரணமாக ஒரு அதிகாரியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வேறொரு இடத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் நானோ ஒரு இடத்திலும் சராசரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை அல்லது இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் நான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் மட்டுமல்ல. நான் மனமுதிர்வு இல்லாதவனாய், அவசரபுத்திக்காரனாய், அளவுக்கு மீறிய கண்டிப்புள்ளவனாய் இருந்ததும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். நேர்மையான பல அதிகாரிகளும் செய்யும் தவறுதான் இது. ஏதோ நான் மட்டும்தான் நேர்மையானவன் என்றும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டால் மட்டுமே நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி பணிபுரிவார்கள் என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிகள் அனைவருமே நேர்மையற்றவர்கள் ஆகவே அவர்களுடன் எதிலும் ஒத்துப்போக தேவையில்லை என்று எண்ணியிருந்ததும் ஒரு காரணம். ஆகவேதான் எந்த ஒரு இடத்திலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால் நிலைத்து பணியாற்ற முடியவில்லை. இளம் வயதிலேயே அதிகாரியானதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை இப்போது உணர்கிறேன்.

பதினைந்தாண்டு காலம் அதிகாரியாக பணியாற்றியபிறகுதான் என்னுடைய தவறுகளை என்னால் உணர முடிந்தது. என்னுடைய முன்கோபம், தேவையற்ற பிடிவாதம், கண்டிப்பு ஆகியவைகளை களைந்து மனப்பக்குவம் அடைந்த பின் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் இரண்டு இடங்களில் நிலைத்து பணியாற்றி நிம்மதியுடன் ஓய்வுபெற்றேன்.

ஒரு சிறிய தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய எனக்கே இந்த நிலை என்றால் அரசு அதிகாரியாக பணியாற்றுகின்ற உங்களுடைய நிலை?

அந்த கட்டுரையில் நீங்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் 'நேர்மையான அதிகாரிகள் புறக்கணிப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டதுடன் உங்களுடைய சொத்து விவரம், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் குறிப்பிட்டு இதை தவிர வேறு ஏதாவது சொத்து இருப்பதாக தெரியவந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வருக்கே சவால் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உங்களுடைய நேர்மையையும் துணிச்சலையும் விட உங்களுடைய மனமுதிர்வின்மையையே காட்டுகிறது. நாம் நேர்மையானவர்கள் என்பதை பிறர்தான் கூற வேண்டும். அதை நாமே பறைசாற்றிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். நேர்மையானவன் என்பது பட்டமோ அல்லது நீங்கள் உங்கள் சட்டையில் அணிந்துக்கொண்டு செல்லும் 'பேட்ஜோ' அல்ல மிஸ்டர் சகாயம். மேலும் நேர்மை என்பது உங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு virtue அல்ல என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மையானவர் என்பதாலேயே அரசு உங்களை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்பதில்லை. அல்லது உங்களுடைய நேர்மைக்கு அங்கீகாரம் அளித்து கவுரவிக்க வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்களை சுற்றிலுமுள்ள நேர்மையற்ற அதிகாரிகள் மத்தியில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டீர்கள், அல்லவா? அதனுடைய பலனை அல்லது விளைவுகளை (consequence) எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்படுகின்ற ஊர் மாற்றங்களால் நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய மனைவி, மக்களும் சிரமங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நேர்மையாக மட்டுமே இருப்பேன், எவருக்கும் அடிபணிய மாட்டேன் என்பது நீங்களாக தெரிவு செய்துக்கொண்ட நிலை. அந்த நிலைபாட்டால் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை... இந்த பத்து பதினைந்தாண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரி என்னும் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்துள்ளீர்களே அது உங்களுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசாக எடுத்துக்கொள்ளுங்களேன்.

தமிழக அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை அடியோடு ஒழிக்க அவதாரம் எடுத்தவன் நான் என்றும் கூட உங்களைக் கற்பித்துக்கொண்டு உங்களுடைய பதவிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும் கூட இதுவரை நீங்கள் கடந்து வந்த அலுவலக வாழ்க்கை பாதையை பற்றிய குறிப்புகளை அந்த கட்டுரையில் காண முடிகிறது. கோவையிலுள்ள சைவ உணவு விடுதியில் அனுமதி பெறாமல் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபான சரக்குகளை அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக சென்று ரெய்டு நடத்தி பிடிப்பதும், மணல் திருட்டை தடுக்கப் போன இடத்தில் கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாவதும்... ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு உங்களை நீங்கள் கற்பனை செய்துக்கொள்வதை எடுத்துக்காட்டுகின்றன. இதெல்லாம் செய்துதான் ஒரு அரசு அதிகாரி தன்னுடைய நேர்மையை அல்லது யாருக்கும் எதற்கும் நான் அஞ்சாதவன் என்று காட்டிக்கொள்ள தேவையில்லை மிஸ்டர் சகாயம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய பதவிக்கு உரிய அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு அதிகாரியிடமிருந்து அரசு எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Playing to the gallery என்பார்களே அதுபோல மக்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் நீங்கள் ஈடுபடுவதால்தான் உங்களுடைய மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருடைய பகைக்கும் நீங்கள் உள்ளாக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறீர்கள். நேர்மையான அதிகாரி என்றால் இப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுவது உங்களுடைய மனமுதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றால் தவறில்லை என கருதுகிறேன்.

மதுரை ஆட்சியராக உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் பத்திரிகைகள் பாராட்டும் அளவுக்கு நீங்கள் புகழடைந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டியது இதே அரசியல்வாதிகளுக்கு கீழேதான் என்பதையும் நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எறும்பை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்று புலம்பும் நிலைதான் உங்களுடைய நிலை.

அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்புடன் இணைந்து அதன் துணையுடன் திறம்பட பணியாற்ற முயல வேண்டுமே தவிர அதை எதிர்த்துக்கொண்டு போராட முயல்வது சிறுபிள்ளைத்தனம். You should know how to use the SYSTEM for more effective functioning instead of fighting it. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் விதிமீறல்களை, ஊழலை ஒரே இரவில் ஒழித்துவிட முயல்வது சிறுபிள்ளைத்தனம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஒரு அரசு அதிகாரியின் பெயர் பத்திரிகைகளில் வந்து பிரபலமடைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அது அரசியல்வாதிகளுக்கு. திரை மறைவில் பணியாற்றுவது அதிகாரிகளுடைய கடமை. அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு? அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டு. அங்கீகாரமும் பாராட்டும் உங்களை தேடி வர வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்த அமைப்பையே எதிர்கொண்டு போராடுவேன் என்று எல்லா அரசு அதிகாரிகளும் இறங்கினால் நாட்டின் நிலை என்னவாகும்?

இத்தகைய செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகளால் நீங்கள் பெறும் மகிழ்ச்சி சொற்ப காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே அரசு இயந்திரத்தை திறம்பட கையாள முடியும். அதன் காரணமாக உங்களுடைய பணியிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அதனால் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.

அன்புடன்,
டிபிஆர்.

12 ஏப்ரல் 2011

என் வாக்கு யாருக்கு, ஏன்?

முதலில் இந்த கட்டுரைக்கு 'என் கணிப்பு' என்று தலைப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு தடையுள்ளதே என்பது நினைவுக்கு வந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏதோ இப்போதுதான் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதுபோன்றல்லவா இப்போதைய தேர்தல் கமிஷன் இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது? ஆகவே நான் என்னுடைய அனுமானங்களை கணிப்பு என்று எழுதப்போக கமிஷன் என்னையும் 'சஸ்பெண்டோ' ஏன், கைதோ செய்துவிட்டால்? (நல்லவேளையாக சஸ்பெண்ட் செய்ய நான் அரசு ஊழியன் இல்லை.. ஓய்வுபெற்ற, வேலையற்ற பேர்வழி!!).

மற்றவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை ஓரிரு விழுக்காடு வாக்காளகர்களை விசாரித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வாக்காளர்களும் இவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கணித அடிப்படையில் 'கணிப்பு' என்ற பெயரில் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகள்தான் இம்முறை வெற்றியடையும் என்கிற பம்மாத்து வேலைதான் (களவாணித்தனம் என்று எழுத மனம் வரவில்லை) இந்த கருத்துக்கணிப்புகள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க அதை நம்பி தில்லி ஆறு நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு சொகுசு தளத்தையே புக் செய்துவிட்டு தலைவி ஏமாந்து நின்றதை நான் பார்த்ததுதானே.

வாக்காளர்களுடைய மனதை எடைபோட, அதுவும் தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் கணிப்பதற்கு 'கணித' அறிவு போதாது. அவர்களுடைய மனநிலையை அறிந்துக்கொள்ளக் கூடிய சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். அந்த கலை இன்றைய 'கணித மேதை'களுக்கு அது கைவரப்போவதில்லை. ஆகவே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் முடிந்தபிறகு புற்றீசல் போன்று வரப்போகின்ற கணிப்புகளையும் நம்பத் தேவையில்லை. வருகின்ற மே மாதம் 13ம் தேதி நள்ளிரவு அல்லது 14ம் தேதி விடியற்காலைவரை காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி.

ஆனால் என்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை தெரிவிக்கக் கூடிய உரிமை எனக்கு உண்டு அல்லவா?

நானும் என்னுடைய குடும்பமும் பரம்பரை, பரம்பரையாகவே காங்கிரசுக்குத்தான் வாக்களித்திருக்கிறோம் என்பதை பலமுறை கூறியுள்ளேன். அந்த கட்சியின் வேட்பாளர் என்னுடைய தொகுதியில் நிற்கவில்லையென்றால் அந்த கட்சி சார்ந்திருக்கும் கூட்டணி எதுவோ அந்த கட்சியின் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை என்னுடைய குடியிருப்பை மாற்ற வேண்டி வந்ததால் இம்முறை எனக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. என்னுடைய முந்தைய விலாசத்தில் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், பட்டியல் வெளிவந்ததும் என்னுடைய விலாச மாற்ற விண்ணப்பத்தை அடுத்திருந்த முனிசிபல் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தும் வழக்கம்போல அரசு இயந்திரம் தனக்கே உரிய தாமதத்துடன் இயங்கி என்னை 'வாக்கு' அற்றவனாக ஆக்கிவிட்டது!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை, தன்னுடைய இரு மகன்களுக்கும் புதிய பதவிகளை (ஒருவருக்கு துணை முதல்வர் பதவி மற்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவியாம்!) மட்டுமே பெற்று தந்திருக்கிறார் என்கிற அம்மையாரின் வாதத்தையோ அல்லது தன்னுடைய திருமண மண்டபம் பறிபோனதே என்கிற ஆதங்கத்தில் ஊழல் மன்னர் கலைஞர் என்கிற வெத்துவேட்டு நடிகரின் வாதத்தையோ என்னால் ஏற்க முடியவில்லை.

கலைஞரின் தலைமையிலுள்ள ஆட்சி என்னைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர நகரவாசிகளுக்கு என்ன செய்ததோ இல்லையோ கீழ்நடுத்தர மற்றும் வருமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு என்ன செய்யவில்லை? இதுவரை இல்லாத அளவுக்கு அரசு கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு இலவச திட்டங்கள் என்ற பெயரில் தாரைவார்த்தது எத்தனை கோடிகள்? அது அனைத்தும் மக்கள் வரிப்பணம்தான் என்றாலும் அதை அனுபவித்தவர்கள் எவரும் வரி செலுத்துபவர்கள் இல்லை என்பதை மறந்துவிட முடியவில்லை. உள்ளவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு அளிப்பதுதான் அரசு திட்டங்கள். அதுவும் ஏழை எளியவர்களுக்கென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல இலவச திட்டங்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று ஏழை எளியவர்களுக்கு பல வசதிகளை செய்துக்கொடுத்துள்ளது இன்றைய அரசு. இதில் ஒன்றைக் கூட அம்மையாரின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்ததில்லை. கடந்த 2006 தமிழக தேர்தலில் திமுக இத்தகைய திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டபோது இது சாத்தியமில்லை என்று எள்ளி நகையாடியவர்தானே இவர்?

ஆக இந்த ஒரு நல்ல காரியத்துக்காகவே திமுகவுக்கும் அவற்றை நிறைவேற்ற நிதியுதவி அளித்த மத்திய அரசு கூட்டணியின் மூத்த உறுப்பினரான காங்கிரசுக்கும் என்னுடைய ஓட்டு, இம்முறையும்.

மற்றபடி ஊழல் மலிந்துபோய் தமிழகத்தையே 2G மூலம் தலைகுணிய வைத்துவிட்டாரே கலைஞர் அவரை எப்படி மீண்டும் தெரிவு செய்வது என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவரை புறக்கணியுங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.

சட்டமன்ற தேர்தல் நடப்பது தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதற்காக, அதில் மத்தியில் நடந்தவற்றைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை. இன்று தமிழக கிராமப்புறத்திலுள்ள வாக்காளர்கள்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலைதானே தவிர 2Gயில் யார் எத்தனை கோடி சுருட்டினார்கள் என்ற கவலை இல்லை. அத்தகைய கவலை இன்று ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்ற படித்த மேதைகளுக்குத்தான். கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்களை முன் வைத்து இந்த கூட்டணியை தோற்கடிக்கவேண்டும் என்று அணல் பறக்க எழுதிய கூட்டம்தானே இது. மக்களின் அன்றாட பிரச்சினைகள் முன்பு அடிபட்டுபோகிற பிரச்சினைகளை அவர்கள் முன் வைப்பதில் என்ன பயன்?

அதுபோன்ற பிரச்சினைதான் இந்த 2G பிரச்சினையும். அதைவிடவும் திமுகவின் வெற்றியை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் பல உள்ளன. விலைவாசி உயர்வு (அதில் பெட்ரோல் விலையுயர்வை பற்றி பாமரன் கவலைப்படப் போவதில்லை), மின் தட்டுப்பாடு, நகரவாசிகளை அன்றாடம் பாதிக்கின்ற பழுதடைந்த சாலைகள் (சென்னைவாசிகளுடைய நிலமை எவ்வளவோ மேல்).... இவைகளை முன்வைத்து அம்மையாரோ அல்லது அவருடைய கூட்டணி தலைவர்களோ அவற்றை முழுமையாக தீர்த்துவிடுவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து கலைஞரும் அவருடைய குடும்பத்தாரும் கோடி, கோடியாக சுருட்டுகின்றனர் என்று ஒப்பாரி வைப்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு வெறுப்புத்தான் வந்திருக்கும். இதை கிலோ கணக்கில் தங்க நகைகள், நூற்றுக் கணக்கில் காலணிகள், ஒரு அறை முழுவதும் 'சூட்கேஸ்கள்' என தன்னுடைய வீட்டில் அடுக்கி வைத்திருந்தவர் பேசினால் எப்படி எடுபடும்? இரு நூறு நபர்கள் தங்கக் கூடிய போயஸ் கார்டன் மாளிகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 'உடன் பிறவா சகோதரி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கும் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத, நடுத்தரவாசிகள் வாழும் பகுதியில் எவ்வித பந்தாவும் இல்லாமல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கலைஞரை கோடி கோடியாய் சுருட்டுகிறார் என்றால்..... அந்த வீட்டையும் தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஏழை எளியவர்களுக்கென எழுதி வைத்தவர் கலைஞர். அவர் சுருட்டுவதாக கூறுகின்ற கோடிகள் அவர் எங்கு பதுக்கி வைத்திருப்பார் என எண்ண தோன்றுகிறதல்லவா?

இன்றை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அரசியலில் பரவி இருப்பது ஊழல். அது இந்தியாவில் சற்று கூடுதல்தான். ஏனெனில் இங்கு கையூட்டு கொடுப்பதையே தவறு என்று உணராத மக்கள் இருப்பதுதான். பிறப்பு சான்றிதழிலிருந்து மரண சான்றிதழ் வரை ஒரு 'தொகை'யை கொடுத்துவிட்டு சான்றிதழை விரைவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதும் மக்கள் வசிக்கும் சூழலில் கையூட்டு வாங்கும் பழக்கத்தை எப்படி ஒழிக்க முடியும்? அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள், இந்திய மருத்துவ கழகத்தின் மெத்தப் படித்த தலைவரே ஆயிரம் கோடி வரை ரொக்கமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததைத்தான் சமீபத்தில் கண்டோமே. அவர் வளர்ந்த குடும்ப சூழலும், அவர் படித்த பட்டமும், ஆற்றிய மருத்துவ சேவைகளும் அவரை ஊழலில் இருந்து மீட்கவில்லையே. இன்று அரசு அதிகாரிகளில் 90 விழுக்காட்டுக்கு குறையாமல் இத்தகையோர்தாமே. பிறப்பிலிருந்தே ரத்தத்தில் ஊறிப்போயுள்ள இந்த 'கொடுக்கும்' மற்றும் 'வாங்கும்' பழக்கம் இன்றோ அல்லது நாளையோ மறையப் போவதில்லை.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வது ஊழலின் அடிப்படையில் மட்டும் இருக்கலாகாது என்பதுதான் என்னுடைய வாதம். கடந்த ஐந்தாண்டு காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தமிழகத்தில் இப்போதுள்ள இரு முக்கிய திராவிட தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியவர்களுடைய கடந்த கால ஆட்சி திறனை கணித்து வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அடிப்படையில் ஆட்சித் திறன், எந்த பிரச்சினையையும் பதறாமல் அணுகும் திறன், அனைத்து இனத்தவரையும் முக்கியமாக சிறுபான்மையினரையும் அணைத்து செல்கின்ற திறன், மத்தியிலுள்ள ஆட்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற திறண் ஆகியவற்றின் அடிப்படையில் கணிப்பிடுகையில் என்னுடைய ஓட்டு நிச்சயம் கலைஞர் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

***************