16 மார்ச் 2011

தேர்தல் 2011 - அம்மாவின் சாணக்கியம்!

தான் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை எதிராளி தோற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர். அதுபோன்றே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களும் உள்ளனர். இவர்களுள் ஒருவர் நம்முடைய 'அம்மா' தலைவி! சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட இடைக்கால பிணக்கில் அவருடைய சாணக்கியத்தனமான நிழல் விளையாட்டு இதை மீண்டும் நிரூபித்துள்ளது. காங்கிரசை பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோல் ஒரு பாவனையை உண்டாக்கியதுதான் கலைஞரை இரு கட்சிகளுமே விரும்பிய தொகுதி எண்ணிக்கையை கொடுக்க வைத்தது என்றால் மிகையல்ல.

காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் பிரச்சினை என்பதை கேள்விப்பட்டவுடனே தன்னுடைய தோழமை கட்சிகளான இடது சாரி மற்றும் மதிமுக கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக தள்ளிப்போட்டவர் அம்மா! ஒருவேளை காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் ஏற்பட்ட இடைக்கால பிணக்கு தீர்க்க முடியாமல் போயிருந்தால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் தன்னை அணுகும் சூழலில் தோழமை கட்சிகளுக்கு வழங்க உத்தேசித்திருந்த தொகுதிகளை காங்கிரசுக்கு தாரைவார்த்துவிட்டு இரண்டு இடது சாரி கட்சிகளையும் மதிமுகவையும் கழற்றிவிடவும் தயங்கியிருக்க மாட்டார் அவர். இதை முழுமையாக உணர்ந்திருந்தும் வேறு வழியின்றி அம்மாவின் அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழலில் இருந்தன இந்த கட்சிகள்.

துவக்க முதலே காங்கிரசையும் பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவுக்கு துளியும் இருந்ததில்லை. அவருடைய நோட்டம் எல்லாம் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற விடாமல் வாக்குகளை சிதறடித்த தேமுதிகவை இம்முறை தன்னுடைய கூட்டணியில் இணைத்து அந்த கட்சியை, அல்லது அந்த கட்சி தலைவர் விஜயகாந்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவதில்தான் இருந்தது. தன்னுடைய எண்ணத்தை விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்ற பண்ருட்டியாரை வளைத்துப்போடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் அம்மா! அரசியலிலும் சரி அரசு செயல்பாடுகளிலும் சரி இனியும் அனா, ஆவன்னா கூட தெரியாத, அம்மாவின் சாணக்கியத்தனத்தில் அடிபட்டுப்போனதை கூட உணரமுடியாத, விஜயகாந்த் திமுக என்னும் பேயை ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன் என்று மார்தட்டிக்கொள்வது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

சாதாரணமாக, நான், எனது என்று தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொள்வது அம்மாவின் தனி ஸ்பெஷாலிட்டி. இந்த குணாதிசயம் அப்படியே, சற்றும் குறையாமல், விஜயகாந்துக்கும் உள்ளது என்பதை அவருடைய இத்தகைய பேச்சுக்கள் காட்டுகின்றன. தமிழகத்தை ஐந்தாண்டு காலமாக ஆட்டிப்படைக்கும் தீய சக்தியான கருணாநிதியை ஒழித்துக்காட்டுவேன் என்றவர் அம்மா. தமிழகத்தை பிடித்திருக்கும் பேயை ஓட்டிக்காட்டுவேன் என்கிறார் நடிகர்! ஆக, இருவருமே தனியொரு ஆளாக தாங்கள் நினைத்ததை செய்துக் காட்டுவார்களாம். அதாவது தங்களுடைய தலைமையில் பணியாற்றும் கட்சி தலைவர்களோ, தொண்டர்களோ தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது இவர்கள் இருவருடைய தொனியும்.

இத்தகைய குணாதிசயம் கொண்ட இரு தலைவர்கள் எத்தனை காலம் இணைந்து, கருத்தொருமித்து செயல்பட முடியும் என்பது புரியாத புதிர். இவர்கள் இருவரையும் இணைத்தது இருவருக்கும் பொதுவான எதிரியான தீய சக்தி என்றாலும் மிகையாகாது. இருவருமே தனிப்பட்ட முறையில் கலைஞரால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே கலைஞரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ளவர்கள். மற்றபடி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை தன்மீது சுமத்தி தன்னை அண்டை மாநிலங்களிலும் அவமானப்படுத்தியவர் கலைஞர் என்ற குரோதம் அம்மாவுக்கு. சென்னை கோயம்பேட்டிலிருந்த தன்னுடைய மிகப்பெரிய சொத்தான திருமண மண்டபத்தை வேண்டுமென்றே மேம்பாலம் கட்டுகிற சாக்கில் தன்னிடமிருந்து அபகரித்ததில் கலைஞருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்ற கடுப்பில் இருப்பவர் நடிகர்!

இருவருடைய கட்சிகளுமே சர்வாதிகாரத்திற்கு பெயர் போனவை. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட இது வெளிப்பட்டிருக்கிறது. திமுகவில் இருந்ததுபோன்று அதற்கென குழு ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது வெறும் கண்துடைப்பாகவே செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (முதலில் மூன்று, பிறகு ஐந்து என்றார்கள்!) வேட்பாளர்களை தெரிவு செய்து அம்மாவின் பார்வைக்கு அனுப்ப அதிலிருந்து அவர் நேரடி நேர்காணல் மூலம் ஒருவரை தெரிவு செய்வாராம். அவருடைய நேர்காணலுக்காக நாள் கணக்கில் காத்திருந்துவிட்டு முடியாமல் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றார் ஒரு பெண் வேட்பாளர்! அவருடைய வீட்டு முன் காத்திருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே ஒரு பெரிய போலீஸ் படையே வேண்டியிருந்தது.

நடிகர் கட்சியை எடுத்துக்கொண்டால் துவக்க முதலே 'வீட்டு அம்மா' வரைந்த கோட்டுக்குள்ளேயே வளைய வந்தவர் அவர். அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் வைத்ததுதான் சட்டம். எப்போதாவது நடைபெறும் கட்சி கூட்டங்களில் தன்னை எதிர்த்துபேசும் தலைவர்களை சினிமா பாணியில் கை நீட்டி அடிக்கவும் தயங்கியதில்லை நடிகர். அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சில நாட்கள் முன்பு அதிமுக தலைவியை என்று சந்திக்கப் போகிறீர்கள் என்ற நிரூபர்கள் கேட்டபோது 'நான் யாரையும் சந்திக்க போவதில்லை' என்று அலட்சியமாக பதிலளித்தவர். அதற்குப்பிறகு ஆந்திராவிலுள்ள தன்னுடைய குலதெய்வத்தை சந்தித்தப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு - ஒருவேளை பண்ருட்டியாரின் அறிவுரையை தட்டமுடியாமல் இருக்கலாம் - வேண்டா வெறுப்பாக அம்மாவை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த விதமே 'சந்தர்ப்ப சூழலால்தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன் என்னுடைய விருப்பப்படியல்ல' என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

தன்னுடைய சாணக்கியத்தனத்தால் திமுக-காங்கிரஸ் ஒரு பொருந்தா கூட்டணி என்பதை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அம்மா அந்த முயற்சியில் தன்னுடைய கூட்டணியிலுள்ள மற்ற சிறிய தோழமை கட்சிகளின் வெறுப்பிற்கு ஆளானதை மறந்துவிட்டார் போலிருக்கிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என்றால் அதை விடவும் பொருந்தா கூட்டணிதான் அம்மா-நடிகர் கூட்டணி. முதல் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தோற்றாலும் நீடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்தைய கூட்டணி தேர்தலில் தோற்றால் அல்ல வெற்றி பெற்றாலும் அடுத்த சில மாதங்களிலேயே உடைந்துவிடும் என்பது நிச்சயம்.

இவர்களை நம்பி இந்த கூட்டணிக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் நிலையை நினைத்தால்தான்.....


தொடரும்

4 கருத்துகள்:

  1. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்ராங்களே?

    பதிலளிநீக்கு
  2. வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    பதிலளிநீக்கு
  3. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்ராங்களே?//

    உண்மைதான். அடித்துக்கொள்வதும் அணைத்துக்கொள்வதும் சகஜம்தான். ஆனால் அத்தகையோருக்கு வாக்காளர்களின் ஆதரவு மட்டும் நிலைத்திருக்காது. நான் யாரையும் முதல்வராக்க கட்சி துவங்கவில்லை என்று கூறி வந்த நடிகருக்கும் இம்முறை அதேகதிதான்.

    பதிலளிநீக்கு
  4. சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும்//

    சீமானா, அவர் இப்ப எங்க இருக்காருன்னே தெரியலீங்களே? ஒருவேளை திமுக தொண்டர்கள் வைகோ தனித்து நின்றால் ஆதரிக்க வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு