14 March 2011

தேர்தல் 2011 - கலைஞரின் சறுக்கல்!

போருக்குச் செல்லும்போது தன்னுடைய படைத்திறன் மற்றும் ஆளுமையை மட்டும் நம்பியிராமல் எதிராளியின் திறனையும் சரியாக கணக்கிட்டு அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒரு அடிப்படையான நியதி.

ஏதோ தான் மட்டும்தான் சாணக்கியன் என்று நினைத்துக்கொண்டு செயலில் இறங்கிவிட்டு எதிராளி தன்னைவிடவும் தந்திரமாக எரியும் அஸ்திரத்தை எதிர்கொள்ளவியலாமல் பின்வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும்.

இப்படித்தான் முடிந்துள்ளது கலைஞரின் சமீபத்திய நாடகம்.

இந்த நாடகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தபோது காங்கிரஸ் நிச்சயம் அடிபணிந்துவிடும் என்று கலைஞர் நினைத்திருந்தால் அது சிறுபிள்ளைத்தனம். 2G ஸ்பெக்ட்ரம் சிக்கலில் தலை வரை மூழ்கியிருப்பது திமுகதான், காங்கிரஸ் அல்ல என்பதை அவர் இன்னமும் உணரவில்லை போலிருக்கிறது. சோ அவர்கள் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சொன்னதுபோல கலைஞரின் குடும்பத்தினரை சிபிஐ விசாரனை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் செவிமடுக்க மறுத்ததுதான் கலைஞரின் நாடகத்திற்கு உண்மையான காரணமாயிருக்குமோ என்கிற ஐயமும் இப்போது அனைவர் மனதிலும் எழ காரணமாகிவிட்டது அவருடைய சமீபத்திய அவசர முடிவு. இதை அவசர முடிவு என்பதை விட ஒரு அசட்டு முடிவு என்றே கூற வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டு ஒரு பொருத்தமில்லாத கூட்டு என்பதை தமிழக மக்களுடைய மனதில் ஒரு ஐயத்தை ஏற்படுத்தவே நான் காங்கிரசை என்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினேன் என்று ஜெயலலிதா கூறுவதிலும் தவறில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

மேலும் ஜெயலலிதா கூறியுள்ளதுபோன்று தேர்தலில் இட ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற முடிவெடுத்த கலைஞர் பெட்ரோல் விலை உயர்வுக்கோ அல்லது தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டபோதோ ஏன் வெறுமனே கடிதங்களை பிரதமருக்கு எழுதிக்கொண்டிருந்தார் என்ற கேள்வியும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது.

ஐம்பதாண்டு காலம் அரசியலில் இருந்த கலைஞர் அதில் சரிபாதி அனுபவமுள்ள இரண்டு பெண்களிடம் (சோனியா-ஜெயலலிதா) தோற்றுப்போயிருப்பது அரசியல் விந்தைகளில் ஒன்று!

சரி, காங்கிரசுக்கு இந்த வெற்றியால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? திமுக அளிக்க முன்வந்த 60 இடங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் இது ஒரு பொருந்தா கூட்டணி என்கிற எண்ணம் எழுந்திருக்க வாய்ப்பில்லை. திமுக தொண்டர்களும் முழுமூச்சுடன் காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றிபெற பணியாற்றியிருப்பார்கள். மக்கள் மத்தியில் கலைஞரின் முகத்தில் கரியை பூசிய காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொள்ள கலைஞர் வேண்டுமானால் சம்மதிக்கலாம், ஆனால் அவரை தெய்வமென மதிக்கும் திமுக தொண்டர்கள் நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற முழுமனதுடன் பணியாற்ற மாட்டார்கள். ஆக, இது காங்கிரசுக்கும் ஒருவகையில் தோல்வியே.

ஏற்கனவே தமிழகத்தில் தனக்கென்று விசுவாசமுள்ள வாக்காளர்கள் இல்லாத காங்கிரஸ் இந்த நாடகத்தின் முடிவில் திமுக ஆதரவாளர்களையும் இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவுக்கு மட்டுமல்லாமல் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்ற எண்ணம்தான் பலருடைய மனதிலும் உள்ளது என்பதை தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் உணரவேண்டும். கூட்டணி தர்மத்திற்காக மட்டுமே நான் இந்த ஊழலை கண்டும் காணாதவாறு இருக்க நேர்ந்தது என்று பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவருடைய நேரடி பார்வையிலுள்ள இலாக்காவில் நடந்த S Band ஊழல், காமன்வெல்த போட்டி அமைப்பாளர்கள் செய்த ஊழல், மஹாராஷ்டிரத்தில் நடந்த ஹவுசிங் ஊழல் என கூட்டணி தர்மத்தை காரணம் காட்ட முடியாத பல ஊழல்கள் காங்கிரசும் ஒரு ஊழல்வாதிகள் நிறைந்த கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளன. ஆகவே 2G ஸ்பெக்ட்ரத்தில் சிக்கிய சங்கடத்தில் திமுக இருப்பதால் அதை மிரட்டி பணிய வைக்க காங்கிரஸ் நினைத்திருந்தால் அது அவர்களுடைய வெற்றி வாய்ப்பையே நிச்சயம் பாதிக்கும் என்பதை மறந்துபோனதுதான் வேடிக்கை.

கடந்தமாதம் வரை எப்படியோ ஆனால் சமீபத்திய திமுக-காங்கிரஸ் இழுபறி கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பெருமளவுக்கு பாதிக்கப்போகிறது என்றுதான் கருதுகிறேன்.

அதிமுக கூட்டணியில் நிலை என்ன? அடுத்த பகுதியில்...

தொடரும்..

No comments: