02 March 2011

தேர்தல் 2011 - திமுக காங்கிரஸ் கூட்டணி

தேர்தல்களம் 2011 களைகட்ட துவங்கிவிட்டது.

இதுவரை ஒரு கட்சி ஆட்சி என்றிருந்த தமிழகத்திலும் அண்டை மாநிலங்கள் சிலவற்றின் பாணியில் இனி கூட்டணி ஆட்சிதான் என்கிற சூழல்.

திமுக, காங்கிரஸ், பாமக கட்சிக, விடுதலை சிறுத்தை மற்றும் இதர கட்சிகள் ஒருபுறம் அஇஅதிமுக, தேதிமுக, இடதுசாரிகள் என மற்றொருபுறம்.

ஆயினும் எந்த ஒரு கூட்டணியும் இதுவரை தங்களுக்கிடையில் போட்டியிடக் கூடிய இடங்களை முழுவதுமாக தீர்மானித்தபாடில்லை.

இதில் காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைதான் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஆட்சியில் பங்கு என்று தீர்க்கமாக அறிவித்த காங்கிரஸ் இன்றைய தினத்தாள் செய்திகளின்படி சற்று 'அடக்கி வாசிக்க' முடிவெடுத்துள்ளது!

இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் தங்களுடைய செல்வாக்கு என்ன என்பது இப்போதும் தெளிவாக தெரியவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நான் தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ்காரன் என்றாலும் இன்றைய தமிழக காங்கிரசின் பரிதாப நிலையை மறுக்க முடிவதில்லை. கட்சிக்குள்ளே சில்லறை தலைவர்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படுகிற போட்டியும் பொறாமையும்தான் கட்சியின் இத்தகைய அவலநிலைக்கு காரணம் என்பதை தில்லியில் பொறுப்பில் இருப்பவர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது அதை விட வேதனை.

2G ஊழலில் சிக்கி திமுக சற்று சுருதி இறங்கிப் போயிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக காங்கிரசின் அடாவடி கோரிக்கைகளுக்கு பணிந்துபோக வேண்டிய நிலையில் திமுக இல்லை என்பதுதான் நிதர்சனம். இளங்கோவன் போன்ற தரங்கெட்ட தலைவர்களுடைய வெத்துவேட்டு பாவலாக்களை நம்பாமல் காங்கிரஸ் தமிழகத்தில் தன்னுடைய உண்மை நிலையை உணர்வது மிகவும் அவசியம். இன்றைய தலைவர்களில் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்றவர் என்ற பெருமைக்குரிய தலைவர் ஒருவர் கூட தமிழக காங்கிரசில் இப்போது இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே காங்கிரசுக்கு என்று ஓட்டு வங்கி ஏதும் தமிழகத்தில் இல்லை. அவர்கள் இணைந்து போட்டியிடும் கட்சியின் செல்வாக்கைப் பொருத்துத்தான் அதன் வெற்றியும் தோல்வியும். ஆகவே அந்த கட்சியின் செல்வாக்கை குறைக்க முயல்வது தனக்குத்தானே குழி தோண்டிக்கொள்வதற்கு சமம் என்றால் மிகையாகாது.

எதிர்காலத்தில் எப்படியோ, இன்றைய சூழலில் திமுகவை அனுசரித்து தங்களுக்கு வழங்கப்படவுள்ள இடங்களை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு திமுக தொண்டர்களுடன் இணைந்து முழுமூச்சுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு முந்தைய சட்டமன்ற தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற முயல்வதுதான் இன்றைய தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்வது நல்லது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் - அதேசமயம் திமுகவுக்கு பாதகமாக, அதாவது முந்தைய தேர்தலைக் காட்டிலும் அவர்களுடைய பலம் குறைந்துவிடும் பட்சத்தில் - ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளது.

ஆகவே இனியும் திமுகவுடனான பேச்சுவார்த்தையை மூன்றாம், நான்காம் சுற்று என நீட்டிக்காமல் சுமுகமாக முடித்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது கூட்டணிக்கும் நல்லது.

தொடரும்..

2 comments:

ராஜ நடராஜன் said...

உங்களைப்போல் யோசிப்பவர்கள் காங்கிரஸில் இருந்தால் தேறுவதற்கு வாய்ப்பு உண்டு.

சீமான் வேற காத்துகிட்டிருக்கார்.பார்க்கலாம்:)

டி.பி.ஆர் said...

சீமான் வேற காத்துகிட்டிருக்கார்.பார்க்கலாம்:)//

நீங்க வேறங்க. அவரெல்லாம் ஒரு ஆளு, அவரோட பேச்ச கேட்டு காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருக்கப் போறாங்களா என்ன? நேத்துபெய்த மழையில முளைச்ச காளான் அவரு...