25 அக்டோபர் 2010

எந்திரன் - லாஜிக் இல்லா மாஜிக்!

நான் தீவிர ரஜினி ரசிகன் என்றாலும் 'முதல் நாள் முதல் காட்சி' ரகம் இல்லை. அம்மாதிரியான ரசிகர்கள் அடிக்கும் விசில் சப்தம் ஏதும் இன்றி எனக்கு மிகவும் பிடித்த நடிகரின் படத்தை ரசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஜினியின் படத்தை முதல் நான்கு வாரங்கள் கழித்துத்தான் குடும்பத்துடன் பார்ப்பது வழக்கம்.

என் வழக்கப்படி எந்திரன் படத்தை கடந்த வியாழனன்று சென்னை பிவிஆர் திரையரங்கில் பார்த்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை நான் சென்றிருந்த அன்று என்னை சுற்றிலும் ஒரு பெரிய குடும்பம். குழந்தை, குட்டி சகிதம் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். (கட்டண சீட்டின் விலை ரூ.120/-, ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால் கூடுதலாக ரூ.30/- - ஆக இருபது பேர் திரைப்படம் பார்க்க கட்டணம் மட்டும் ரூ.3,000/- - எப்படித்தான் கட்டுப்படி ஆகிறதோ தெரியவில்லை.)

ஆக, நான் எதை தவிர்க்கலாம் என்று நினைத்து நான்கு வாரங்கள் கழித்து சென்றேனோ அது பலிக்கவில்லை. காட்சிக்கு காட்சி விசில், கைதட்டல், சூப்பர் என்ற பாராட்டு மழையில் பல சமயங்களில் திரையில் பேசுவதே கேட்கவில்லை. இதில் பலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஷங்கரின் திரைப்படங்களில் பெரிதாக சஸ்பென்ஸ் ஏதும் இருப்பதில்லை என்றாலும் இருந்த ஓரிரண்டு சஸ்பென்சையும் அருகில் இருந்த வானரங்கள் (அப்படி சொல்லலாமா?) தீர்த்து வைத்தன.

'உதார் நாயகன்' கமலின் படங்களுக்கு செல்வதுபோன்று பெரிய எதிர்பார்ப்புகளுடன் 'ஸ்டைல் மன்னன்' ரஜினியின் படங்களுக்கு நான் செல்வதில்லை. ஆகவே அவருடைய படங்களை வெகுவாக ரசிக்க முடிகிறது.

தமிழ்மணத்தில் எந்திரனைப் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களை நான் படித்திருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி ரஜினிக்காகவே படத்தை ரசிக்க முடிந்தது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் முடிசூடா மன்னன், சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் இருக்கும் ரஜினி போன்ற ஒரு நடிகர் ஒரு படத்திற்காக இத்தனை சிரமங்களை பட தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இருந்தது அவருடைய நடிப்பு. அதுவும் தன்னுடைய டிரேட் மார்க் பஞ்ச் வசனங்கள், மாஸ் ஹீரோயிசம், மானரிசங்கள் என எதுவும் இல்லாமல்.... நிர்வாணமாக ஒரு இளம் பெண்ணை அப்படியே கொண்டு வந்து அதனால் அவர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக இருப்பதுபோல்... அதாவது இத்தகைய பெண்களை காக்கும் நாயகன் என்ற அவருடைய இமேஜையும் கூட கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரத்திற்காக அவர் இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

பொதுவாக இயக்குனர் ஷங்கரை பற்றி லாஜிக்கே இல்லாமல் பிரம்மாண்டம் என்ற பெயரில் பம்மாத்து செய்பவர் என்பதுதான் என்னுடைய கணிப்பு. அவருடைய இந்தியன், அன்னியன், சிவாஜி வரிசையில் எந்திரனும் பல இடங்களில் அப்படித்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அந்த படங்களில் இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த படத்தில் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு முழு நேர உல்லாச படம் என்ற கணிப்புடன் பார்த்துவிட்டு (அதாவது சற்று நேரம் நம்முடைய ரீசனிங் பவரை மறந்துவிட்டு) வரலாம் என்று சென்றால் இந்த படத்தை ம்ழுமையாக ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.

இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த நான் ஷங்கரின் இணையதளத்திற்கு சென்று 'என்னை கேளுங்கள்' என்ற பகுதியில் அவருக்கு இவ்வாறு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். "இந்த படத்தின் ஒரு நகலில் (Print) பாடல் மற்றும் நகைச்சுவை காட்சிகளை நீக்கிவிட்டு சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவுக்கு எடிட் செய்து சென்னையிலுள்ள ஒரு சிறிய திரையரங்கில் வெளியிடுங்களேன்.' அவர் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று படத்தை பார்த்ததும்தான் தெரிந்தது. படத்தை இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்க்க பாடல்கள் எந்த அளவுக்கு உதவுகின்றன என்பது. 'காதல் அணுக்கள்' மற்றும் 'கிளிமஞ்சாரோ' பாடல்களை படமாக்கிய விதமும் லொக்கேஷனும் மிகவும் அருமை.

படத்தின் க்ளைமாக்சில் சுமார் அரை மணி நேரம் வரும் அனிமேஷனை சரிபாதியாக குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

லாஜிக் பல இடங்களில் உதைக்கத்தான் செய்கிறது. Most glaring என்று ஒன்றையாவது சொல்ல வேண்டும் என்றால் விஞ்ஞானி ரஜினிக்கு ரோபோட்டை உருவாக்க உதவ இரண்டே உதவியாளர்களாம்! தேவையற்ற காட்சிகளில் எல்லாம் 'ரிச்' ஆக இருக்க வேண்டுமே என்று திரை நிறைய உதிரி நடிகர்களை காட்டிய ஷங்கர் ரஜினியின் லாபில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது உதவியாளர்கள் இருப்பதுபோல் ஒரு காட்சியிலாவது காண்பித்திருக்கலாம்.

இருந்தாலும் எந்திரன் இவற்றையெல்லாம் மறந்து ஒரு மூன்று மணிநேரம் உல்லாசமாக இருக்க செய்யும் அளவுக்கு ஒரு லாஜிக் இல்லா மாஜிக் என்றுதான் சொல்ல வேண்டும்.