06 செப்டம்பர் 2010

பதிவுலக இரட்சகர்கள்!

சமீபகாலமாக பல சில பதிவர்கள் தங்களை தமிழகத்தை காக்கும் இரட்சகர்களாக முன்நிறுத்திக்கொள்ள முளைத்திருக்கிறார்கள்.

ஏதோ தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஊழல் நடப்பதாகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பழிவாங்கப்படுவதாகவும் கற்பித்துக்கொண்டு அதை எதிர்த்து தங்களுடைய குரலை எழுப்பியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பியிருக்கிறார்கள்.

என்னுடைய நான்காண்டு கால சொற்ப பதிவுலக அனுபவத்தில் இப்படி முளைத்து வந்த பலரைக் கண்டிருக்கிறேன். தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பதிவுலகை ஆட்டிப்படைத்துவிட்டு பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்கள் அவர்கள்.

அதுபோன்றுதான் இப்போது கிளம்பியிருப்பவர்களும் என்று நான் சொல்லத் தேவையில்லை. இவர்களுக்கெல்லாம் நன்றாக, சரளமாக தமிழ் எழுத வருகிறது என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எந்த ஒரு நிறுவனத்தையாவது குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்திலுள்ள இலாக்காவையாவது தலைமையேற்று நடத்தியிருந்த அனுபவம் இருந்திருந்தால் ஒரு அரசை நடத்திச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது இவர்களுக்கு புரிந்திருக்கும்.

இலவசமாக கிடைத்துள்ள எழுத்து சுதந்திரம், அலுவலக தயவில் இணைய இணைப்பு, கணினி, தோன்றியதை எல்லாம் எழுதி தள்ள ஊதியத்துடன் கிடைக்கும் நேரம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தை எப்படியாவது இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு எடுத்து ஊழல் அரசியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதித்தள்ளுகிறார்கள்.

இவற்றையும் படித்து மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரைக்க என்று வேறொரு கூட்டம். இப்போதெல்லாம் அதுவும் தேவையில்லை போலிருக்கிறது. எனக்கு நீ, உனக்கு நான் என்று பரஸ்பரம் நட்சத்திர குத்து விட்டு பரிந்துரை பட்டியலையே எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் இவர்கள்தான் தமிழகத்தில் நடக்கும் ஊழலை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.

இவர்களை பார்த்து சொல்வது ஒன்றுதான். சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டாரே அவரை ஏன் மனத்தளவில் கிறிஸ்துவனாகவும் சட்டப்படி இந்துவாகவும் இன்னும் தொடர்கிறார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

தலித் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவருடைய சாதியையே சுட்டிக்காட்டி போராட பல அரசியல் கட்சிகள் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சலுகையை அனுபவிக்க தகுதியுள்ளவர்தானா என்பதிலேயே சந்தேகம் இருக்கும் சூழலில் அத்தகைய ஒருவருக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் பதிவர்களுக்கு தேவையில்லை.

1 கருத்து: