30 செப்டம்பர் 2010

நிஅயோத்தி தீர்ப்பு சாராம்சம்

அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

1. 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், பாபர் மசூதி அமைப்புக்கும் மற்றும் இந்து மகாசபை அமைப்புக்கும் வழங்க வேண்டும்.

2. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத அவகாசம்.

3. அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.

ஆனால் சர்ச்சைக்குரிய இடம் உண்மையில் ராமர் பிறந்த இடம்தான் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிஜேபி வழக்கறிஞர் பேட்டி. இஸ்லாமிய சகோதரர்கள் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை!

தீர்ப்பின் முழு விவரமும் வெளிவராத நிலையில் அவருடைய இந்த பேட்டி சரிதானா என்று தெரியவில்லை.

28 செப்டம்பர் 2010

என்று மாறும் இந்த இழிநிலை!

நேற்று நான் எழுதியிருந்தது, அதாவது காமன்வெல்த் போட்டி கிராமத்தில் (Games Village) பத்திரிகைகளும் ஊடகங்களும் கூறியிருந்ததுபோன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதற்கு நேற்று வந்திறங்கிய வெளிநாட்டு வீரர்களின் பேட்டிகளிலிருந்து உண்மைதான் என்பது தெளிவாகிறது.

'Impressed with Games Village' என்ற தலைப்பில் ஹிந்து தினத்தாளில் வெளியாகியுள்ள சில கருத்துக்கள்:

இங்கிலாந்தின் ஹாக்கி அணியின் வீரர்களுள் ஒருவரான அலெக்சாண்ட்றா:

"நான் என்னுடைய நாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை படித்துவிட்டு எப்படி இருக்குமோ என்று இங்கு வந்தேன். ஆனால் அப்படி ஏதும் குறைகள் இல்லை என்பதுடன் நான் இதுவரை பார்த்த ஏற்பாடுகளை விடவும் இங்கு மிகவும் சிறப்பாகவே உள்ளன. வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளும் விசாலமாகவும், தூய்மையாகவும் உள்ளன. உங்களுடைய உள்ளூர் பத்திரிகைகள் சற்று அதிகமாகவே எதிர்மறையாக இதைப்பற்றி எழுதியுள்ளன என்றே தோன்றுகிறது. அதை அப்படியே எங்களுடைய பத்திரிகைகளும் பிரசுரித்துவிட்டன என்று நினைக்கிறேன்."

கடந்த உலகைக் கோப்பை ஹாக்கியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பட்டத்தை வென்ற பெத் என்னும் வீராங்கனை:

"வீரர்கள் உணவருந்தும் பகுதி மிகவும் சிறப்பாக உலகதரம் வாய்ந்ததாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இங்கு வந்து இவற்றைக் கண்டவுடனே என்னுடைய குடும்பத்தினருக்கு 'இங்கு எல்லாமே சிறப்பாக உள்ளது கவலைப்படாதீர்கள்' என்று மின்னஞ்சல் செய்தேன்.'

கடந்த இரண்டு நாட்களில் போட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாண்ட், நைஜீரியா, மலேசியா வீரர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதிலிருந்து NDTV மற்றும் CNN-IBN தொலைக்காட்சிகள் ஒரு வார காலமாக அளித்து வந்த எதிர்மறை செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அவ்ர்களுடைய செய்திகளை அப்படியே காப்பியடித்து ஒளிபரப்பி வந்த சன் நெட்வொர்க் இப்போதும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருப்பது வேதனை.

அதுமட்டுமா கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் வெளியாகியிருந்த எதிர்மறை பதிவுகளை எழுதிவந்த பதிவர்களும் வெட்கப்பட வேண்டும். விஷயம் என்னவென்றே புரிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு எழுதி வந்தவர்களை என்ன சொல்வது? அந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் வெறுப்பை உமிழ்ந்தவர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால் நாட்டில் எதிர்மறை கருத்துக்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதும் தெளிவாகிறது. என்று மாறும் இந்த இழிநிலை?


********

27 செப்டம்பர் 2010

காம்ன்வெல்த் போட்டிகள் நிச்சயம் வெற்றிபெறும்

எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தியதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு 2010 போட்டிகள் நம் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனுக்கும் ஒரு சவாலாகவும் இருந்தாலும் இறுதியில் முழுமையான வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதை நடத்தும் உரிமையை பெறுவதற்கு இந்தியாவைத் தவிர ஏற்கனவே இந்த போட்டியை நடத்தி அனுபவம் பெற்றுள்ள கனடாவும் போட்டியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் காமன்வெல்த் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்தியாவையே தெரிவு செய்தனர்.

இதன் பின்னணியில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக சமீபத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளதையும் படித்திருப்பீர்கள். இதில் ஒன்றும் ரகசியமில்லை. இந்த போட்டியை நடத்த இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததற்கு இதில் பங்குபெறும் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் 100,000 அமெரிக்க டாலர் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்ல விமான சீட்டு
உட்பட அனைத்து செலவினங்களையும் தாங்களே ஏற்றுக்கொள்ள முன்வந்ததும் ஒரு முக்கிய காரணம் (ஆதாரம்:விக்கிபீடியா).

இந்த போட்டியை நடத்தும் உரிமையை 2003ம் ஆண்டே இந்தியா பெற்றது என்றாலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேவையான செலவினங்களை (சுமார் 43,000/- கோடி!) கணக்கில் கொள்ளும்போது இதன் பிரம்மாண்டத்தையும் அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தையும் நம்மால் உணர முடிகிறது. இந்த செலவினம் மற்றும் முதலீடுகளின் அளவு கடந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா செலவிட்டதை விட ஆறு மடங்கு!

எழுபத்திரண்டு நாடுகள் பங்குபெறப் போகும் இந்த போட்டி நம்முடைய நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே கல்மாடி தலைமையில் ஒரு தலைமை நிர்வாக குழுவும் அதன் கீழ் ஒவ்வொரு துறையையும் சார்ந்த பல குழுக்களும் நியமிக்கப்பட்ட பிறகும் நம் நாட்டுக்கே உரித்தான சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட உட்பூசல், போட்டி, பொறாமை நம்முடைய நாட்டின் ஆட்டின் நிர்வாக மற்றும் ஆளுமை திறமைகளை பல நாடுகளும் (அவற்றில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெறும் பொறாமை காரணமாகவும்) சந்தேகப்பட வைத்துவிட்டது என்னவோ உண்மைதான்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பலவும் இரண்டு நாட்களுக்குள்ளேயே பின்வாங்கப்பட்டு இப்போது நிலைமை சீராகிவிட்டது என்று அவர்களே கூறுவதிலிருந்தே அவர்கள் கண்ட குறைகளின் அளவு எவ்வளவு என்பதை உணர முடிகிறது. படுக்கை விரிப்பு சரியில்லை, பாத்ரூமில் குழாய்கள் ஒழுகுகிறது, வாஷ் பேசின் சுத்தமாக இல்லை என்பதுதான் அவர்கள் கூறிய
'சுகாதாரமின்மை'. இவை யாவுமே ஆங்கிலத்தில் கூறும் 'last minute things to do' அலுவல்கள்தான் என்பதும் விளையாட்டு வீரர்கள் வருவதற்கு முந்தைய இரண்டு, மூன்று தினங்களில் செய்து முடிக்க வேண்டியவையே என்பதும் புலனாகிறது. இத்தகைய குறைகள் நம் நாடு அல்ல எந்த நாட்டிலும்
இருந்திருக்கும். ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாட்டின் பத்திரிகைகளே வெளிச்சம் போட்டு காட்டியதில்லை. சீனா போன்ற நாடுகளில் நிலவும் இரும்புத்திரை இல்லாத பத்திரிகை சுதந்திரம் நம் நாட்டில் இருப்பதும் அதை தவறாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இவை
யாவும் வெளிச்சத்திற்கு வர காரணம். இதற்கு வேறு ஒரு கோணமும் உண்டு கல்மாடி துவக்கமுதலே பத்திரிகைத் துறையை சரியாக 'கவனிக்க' தவறிவிட்டார். ஆகவே அந்த கோபத்தில் சகட்டுமேனிக்கு சிறிய விஷயங்களைக் கூட பூதாகரமாக எழுதி பழிதீர்த்துக்கொள்கிறது இந்தத்துறை. இடையில் நாட்டின் மானம் கப்பலேறுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?




எழுபது நாடுகள். சுமார் 2000 தடகள வீரர்கள், 500க்கும் மேற்பட்ட நடுவர்கள், அதிகாரிகள். இவர்களை தங்க வைக்க சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட வின்னைத் தொடும் கட்டிடங்கள். இவர்களுக்கு
அவரவர் விரும்பும் உணவு வழங்க சமையற்கூடம். பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த கூடங்கள், பயிற்சி மையங்கள், மருத்துவக் கூடம்.... இவை அனைத்தும் ஒன்றுமில்லா பாலைவனம் போன்ற இடத்திலிருந்து from scratch என்பார்களே அதுபோன்று உருவாக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு அறைகளைக் கொண்ட ஒரு இரண்டு மாடி வீட்டைக் கட்டி முடிக்கவே ஓராண்டுகாலம் தேவைப்படுகிறதே.. அதையும் கட்டி முடித்து குடியேறுவதற்குள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளோகிறோம். நம்மில்
எத்தனை பேர் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டுவிடுகிறோம். இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே இதன் சிரமமும் வேதனையும் புரியும்.



சுமார் 2000 குடியிருப்புகள் (10000 அறைகள்!) கொண்ட விளையாட்டு கிராமத்தில் ஒரு அறையில் பாம்பாம், சில அறைகள் இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லையாம், சில அறைகளில் படுக்கை விரிப்பில் நாய்கள் ஏறி அழுக்காகிவிட்டனவாம்.... இன்னும் என்னவெல்லாம் கூப்பாடுகள்! என்னைக் கேட்டால் பாலம் இடிந்து விழுந்ததை தவிர வேறு எந்த குறைபாடும் இத்தனை பெரிதுபடுத்தப்பட தேவையில்லை.

இடிந்து விழுந்த பாலத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு உண்டா, 'கமிஷன்' பெற்றுக்கொண்டு தரமற்ற நிறுவனத்திற்கு இந்த பணியை ஒப்புவித்ததால்தான் பாலம் இடிந்து விழுந்ததா என்பது விசாரனையில்தான் தெரிய வரும். மற்றபடி அரங்கத்தின் கூரையே பெயர்ந்து விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் பேசி தீர்த்ததே அது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். உண்மையில் விழுந்தது அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்து 'False ceiling'கின் ஒரு சிறிய பகுதியே. அரை நாளி சரி செய்துவிடக் கூடிய குறை! ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் 'Just Now' என்ற நாடாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்களுடைய 'பிழைப்பை' ஓட்டும் இத்தகைய சானல்கள் தங்களுடைய நாட்டின் மதிப்பையே கெடுக்கிறோமே என்று ஒரு சில நொடிகளாவது சிந்தித்துப் பார்த்தால் நல்லது.

இந்த போட்டி சம்பந்தப்பட்ட கட்டுமான ஏற்பாடுகளைத் தவிர தில்லி மாநகரத்தை அழகுபடுத்தவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவற்றை உரிய நேரத்தில் முடிக்க
விடாமல் விடாது கொட்டி தீர்த்த மழையின் தீவிரத்தையும் கருத்தில்கொள்ளும்போது பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டிய குறைகள் ஒன்றும் பெரிதல்ல. ஆயினும் நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனை வெளிநாடுகள் பலவும் குறைத்து மதிப்பிட வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே என்ற ஆதங்கத்தில்தான் நம்முடைய பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சாடியிருக்கிறார். ஆனால் இதை சில மாதங்களுக்கு முன்னரே அவர் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

சில வெளிநாடுகள் கூறும் இன்னுமொரு குற்றச்சாட்டு பாதுகாப்பு. இதில் முன்னால் நிற்பது ஆஸ்திரேலியா. தங்களுடைய நாட்டில் சில ஆண்டுகள் தங்கி படிக்க வரும் ஒரு சில மாணவர்களையே தங்களுடைய நாட்டின் 'வன்முறை கும்பல்களிலிருந்து' பாதுகாக்க வக்கில்லாத நாடு அது! அதற்கு சில பொறுப்பற்ற தீவிரவாதி நாடுகளின் தூண்டுதலால் நம் நாட்டில் ஏற்படும் ஒருசில தீவிரவாத செயல்களை சுட்டிக்காட்டி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்ட என்ன தகுதி உள்ளது? அந்த நாட்டிலிருந்து வந்த
கிரிக்கெட் அணி கேப்டனே என்னைப் பொருத்தவரை பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளபோது தங்களுடைய தடகள வீரர்களை தில்லிக்கு வர நிர்பந்திக்கமாட்டோம் என்று
அறிக்கை விட்டால் அது உள்நோக்கம் கொண்டது என்று கூறுவதைத் தவிர வேறென்ன கூறுவது? எங்கே நம் நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டி அவர்கள் 2006ம் ஆண்டு நடத்திய போட்டிகளைவிட சிறப்பாக மைந்துவிடுமோ என்கிற பொறாமையும்தான் காரணமாக இருக்க முடியும். கனடாவுக்கு இது நம்முடைய நாட்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய போட்டியாயிற்றே என்கிற பொறாமை!

எத்தனை இடர்கள் வந்தாலும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போட்டியை நடத்தியே தீருவோம் என்கிற உறுதியுடன் பிரதமரும் அவருடைய சகாக்களும் இறுதிகட்ட ஏற்பாடுகளை முனைப்புடன் ஈடுபடும் இந்த வேளையில் 'மேதாவித்தனமாக' இது இப்படித்தான் முடியும் என்று எனக்கு தெரியும் என்கிற தொனியில் பேசிவரும் மணிசங்கர் ஐயர் போன்றவர்களை புறக்கணிப்போம், எந்தவித தடங்கலும் இன்றி போட்டி வெற்றிகரமாக நடந்து முடிய வாழ்த்துவோம்.

என் வீடு, என் குடும்பம் என்பதில் பெருமை கொள்ளும் நான் என் குடும்பத்தார் என்ன செய்தாலும் மற்றவர்கள் முன்பு அவர்களை விட்டுக்கொடுக்க முன்வருவேனா? அதுபோன்றுதான் நம் நாடும். நான்
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய நாட்டைப் பற்றி நானே தேவையில்லாமல் குறை கூறமாட்டேன். நிச்சயமாக பிற நாடுகள் குறை கூறுவதை அனுமதிக்கவே மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

நாட்டில் கோடானுகோடி மக்கள் பட்டினியில் வாடும் இன்றைய சூழலில் இத்தனை பொருட்செலவில் இப்படியொரு பிரம்மாண்ட போட்டி தேவைதானா என்ற கேள்வியும் எழுப்பபடுகின்றது. நிச்சயம் தேவைதான். இந்தியா இன்னும் வளர்ந்து வரும் ஒரு நாடாகவே பல நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.  ஆகவே இத்தகைய போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது அவசியமாகிறது. அத்தகைய முயற்சியில் இடையில் ஏற்படும் சிறு,சிறு தவறுகளை, குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டி நம்முடைய முயற்சிகளை, சாதனைகளை நாமே குறை கூற புறப்பட்டுவிடக்கூடாது.

***

21 செப்டம்பர் 2010

தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!

கடந்த சில தினங்களாக வாசகர் பரிந்துரை பட்டியலில் சில பிரபல பதிவர்களின் (மும்மூர்த்திகள்) பதிவுகள் காணோமே. என்ன காரணம்?




காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது.



தவிப்புடன்,

டிபிஆர்.

08 செப்டம்பர் 2010

இது யார் வீட்டு சொத்தும் அல்ல, பொதுச் சொத்து!

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சுமார் 12000 டன் உணவு தானிய இழப்பைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டு இத்தகைய இழப்புகளை தவிர்க்க ஏன் உபரி தானியங்களை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கக் கூடாது என்ற வினாவையும் எழுப்பியது.

இதற்கு மறுமொழியாக பிரதமர் இத்தகைய கொள்கை
விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும்
தானிய இழப்பு ஏற்படாவண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதும் சர்ச்சையக் கிளப்பிவிட்டது. உச்ச நீதிமன்றமே பிரதமரின் மறுமொழியை தவறாக எடுத்துக்கொள்ளாத
நிலையில் நம்முடைய 'பிரபல' பதிவாளர்கள் சிலர் நம்முடைய பிரதமரை 'யார் வீட்டு அப்பன் சொத்து'; 'எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்' என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவுகள் எழுத கொதித்தெழுந்து பின்னூட்டத்தில் பலர் பிரதமரையும், விவசாய
அமைச்சரையும் திட்டித் தீர்த்துள்ளனர்.

இதன் பின்னணி என்ன? ஏன் இத்தகைய இழப்புகள்
ஏற்படுகின்றன? அதை தவிர்ப்பதற்கு ஏன் இந்திய உணவுக்
கழகத்தால் (FoodCorporation of India) இயலவில்லை
என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் வெறும்
sensationalisation என்பார்களே அந்த வகையில் பதிவுகளை எழுதி சக பதிவர்களின் பார்வையை ஈர்ப்பதிலேயே சிலர் குறியாயிருப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து உணவு தானியத்தையும் விவசாயிகளிடத்திலிருந்து கொள்முதல் செய்து அவற்றை உணவு பகிர்ந்தளிக்கும் கழகம் வழியாக (Civil Supply Corporation) குடும்ப அட்டைதாரர்களுக்கு
வினியோகம் செய்யும் பணியை காலம் காலமாக இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கோதுமையை வடமாநில விவசாயிகளிடத்திலிருந்தும் நெல் மற்றும் பிற தானியங்களை மற்ற பகுதிகளிலிருந்தும் கொள்முதல் செய்து அதற்கு சொந்தமான சுமார்
2000 கிடங்குகளில் சேமித்து வைக்கிறது.

கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த பன்னிரண்டு மாத காலத்தில் இந்த கழகம் கொள்முதல் செய்த அளவு இவை:

கோதுமை: 2.53 கோடி மெட்ரிக் டன்
நெல் : 3.05 கோடி மெட்ரிக் டன்

ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் எத்தனை டன்
தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்த கழகத்தின் நிர்வாகக் குழுவினருடைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் விவசாய இலாக்கா நிர்ணயிக்கிறது. இது குறைந்தபட்ச அளவு மட்டுமே.
அதிக அளவு (Maximum limit) என்ற இலக்கு ஏதும் இல்லை. அதாவது இந்த கழகத்தின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதானே அடிப்படை நியதியாயிருக்க முடியும்?

இதே கழகம் தனியார்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னுடைய மொத்த கொள்ளளவுக்கு மேல் ஒரு கிலோ தானியத்தைக் கூட அந்த கழகம் கொள்முதல் செய்யாது. ஏனெனில் விலை கொடுத்து தானியத்தை வாங்கி திறந்தவெளியில் வைத்து மழைக்கும், காற்றுக்கும், எலிக்கும்
அவற்றை தாரை வார்க்க லாப நோக்குடன் இயங்கும் எந்த
நிறுவனமாவது முன்வருமா?

ஆனால் அரசு நிறுவனம் அப்படி இயங்க முடியாதே. விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் எந்த அளவுக்கு கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் (Procurement outlets) தானியங்கள் வருகின்றனவோ அவை அனைத்தையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற அரசின் கொள்கையை தலைமேல் ஏற்று தங்களுடைய மொத்த கொள்முதல் அளவையும் மீறி இந்த கழகம் கொள்முதல் செய்கிறது.

தங்கள் வசம் உள்ள கிடங்குகள் நிறம்பியதும் எஞ்சியுள்ள
தானியங்களை வேறு வழியின்றி அரசுக்கு சொந்தமான அல்லது தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்த நிலங்களில் அதாவது திறந்தவெளியில் தானிய மூடைகளை ஒரு சிறிய மர மேடைகளில் கோபுர வடிவில் அடுக்கி மழை நீர் புக முடியாத தார்பாய்களில் மூடி பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்பாராத காற்று, மழையால் சில சமயங்களில் இப்படி சேமித்து வைக்கும் தானியங்களில் சில பாதிக்கப்படுவதுண்டு. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களின் ஈரப்பதம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற அரசின் நியதியையும் மீறி சில உள்ளூர் அரசுகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ஈரப்பதம் அதிகம் உள்ள தானியங்களையும் கொள்முதல் செய்ய நேரிடுகிறது. அத்தகைய தானியங்கள் என்னதான் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டாலும் புளுத்து போகக்கூடும்.

உணவுக் கழகத்தின் தானிய பாதுகாப்பு அளவு (Storage Capacity) வருடா வருடம் அதிகரிக்கப்பட்டாலும் தானிய
விளைச்சலும் அதிகரித்துகொண்டே செல்வதால் கழகத்தின்
கொள்முதல் எப்போதுமே அதன் பாதுகாப்பு அளவை விட
அதிகமாகவே இருந்து வருகிறது.

ஆனால் கழகத்தின் ஒட்டுமொத்த கொள்முதலுடன் ஒப்பிடுகையில் அதன் இழப்பீடு மொத்த சேமிப்பில் அரை விழுக்காட்டுக்கு மேல் சென்றதில்லை என்கின்றன கழகத்தின் அறிக்கைகள். சமீபத்தில் உச்சநீதி மன்ற கண்டனத்திற்குள்ளான இழப்பின் மதிப்பு 12000
டன். இதை கழகத்தின் மொத்த கொள்முதலான 2.53 கோடி டன் ஒப்பிட்டு பார்த்தால் அரை விழுக்காட்டுக்கும் கீழ்தான் என்பது தெளிவாகும்.

என்ன இருந்தாலும் இழப்பு, இழப்புதானே என்றால், அது
உண்மைதான். அதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், இந்திய உணவுக் கழகமும் ஆவன செய்ய வேண்டும்.

ஆனால் இப்படி தானியத்தை வீணாக்குவதை விட அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கலாமே என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காடு வறுமைக்கோட்டுக்கும் கீழுள்ளவர்கள் என்கின்றன சமீபத்திய கணக்கீடுகள். அதாவது சுமார் 37 கோடி. இதை ஐவர் அடங்கிய குடும்பமாக பிரித்து ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தானியத்தை இலவசமாக வழங்கினாலும் எத்தனை கோடி டன் வேண்டும் என்று கணக்கிடுங்கள். இது சாத்தியமாகுமா!

ஆகவே அரசையும், அதன் தலைவரான பிரதமரையும்
சகட்டுமேனிக்கு சாடுவதற்கு முன்பு ஒரு அரசை நடத்திச் செல்வது எத்தனை சிரமம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

எதையும் உணர்வுபூர்வமாக அணுகுவதால்தான் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. இதை நிச்சயம் தானிய இழப்பீட்டையோ அல்லது பிரதமரின் செயல்பாடுகளையும் அவர் உச்சநீதி மன்றத்திற்கு அளித்த மறுமொழியை நியாயப்படுத்தவோ எழுதவில்லை.

உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் யார் அப்பன் சொத்தும் அல்ல. நம் சொத்து. அரசே முன்வந்து இலவசமாக பகிர்ந்தளிக்கிறோம் என்று முன்வந்தாலும் அதை எதிர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இதை அனுமதித்தால் ஓட்டுக்கு பணம் என்பதற்கு பதிலாக ஒரு ஓட்டுக்கு ஐந்து கிலோ அரிசி என்று புறப்பட்டுவிடுவார்கள், எச்சரிக்கை!

இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு மற்றும் அடுப்பு, இலவச மின் இணைப்பு என்பதுபோன்றதல்ல இலவச தானிய வினியோகம்.


*******

06 செப்டம்பர் 2010

பதிவுலக இரட்சகர்கள்!

சமீபகாலமாக பல சில பதிவர்கள் தங்களை தமிழகத்தை காக்கும் இரட்சகர்களாக முன்நிறுத்திக்கொள்ள முளைத்திருக்கிறார்கள்.

ஏதோ தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஊழல் நடப்பதாகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பழிவாங்கப்படுவதாகவும் கற்பித்துக்கொண்டு அதை எதிர்த்து தங்களுடைய குரலை எழுப்பியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பியிருக்கிறார்கள்.

என்னுடைய நான்காண்டு கால சொற்ப பதிவுலக அனுபவத்தில் இப்படி முளைத்து வந்த பலரைக் கண்டிருக்கிறேன். தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பதிவுலகை ஆட்டிப்படைத்துவிட்டு பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்கள் அவர்கள்.

அதுபோன்றுதான் இப்போது கிளம்பியிருப்பவர்களும் என்று நான் சொல்லத் தேவையில்லை. இவர்களுக்கெல்லாம் நன்றாக, சரளமாக தமிழ் எழுத வருகிறது என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எந்த ஒரு நிறுவனத்தையாவது குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்திலுள்ள இலாக்காவையாவது தலைமையேற்று நடத்தியிருந்த அனுபவம் இருந்திருந்தால் ஒரு அரசை நடத்திச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது இவர்களுக்கு புரிந்திருக்கும்.

இலவசமாக கிடைத்துள்ள எழுத்து சுதந்திரம், அலுவலக தயவில் இணைய இணைப்பு, கணினி, தோன்றியதை எல்லாம் எழுதி தள்ள ஊதியத்துடன் கிடைக்கும் நேரம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தை எப்படியாவது இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு எடுத்து ஊழல் அரசியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதித்தள்ளுகிறார்கள்.

இவற்றையும் படித்து மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரைக்க என்று வேறொரு கூட்டம். இப்போதெல்லாம் அதுவும் தேவையில்லை போலிருக்கிறது. எனக்கு நீ, உனக்கு நான் என்று பரஸ்பரம் நட்சத்திர குத்து விட்டு பரிந்துரை பட்டியலையே எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் இவர்கள்தான் தமிழகத்தில் நடக்கும் ஊழலை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.

இவர்களை பார்த்து சொல்வது ஒன்றுதான். சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டாரே அவரை ஏன் மனத்தளவில் கிறிஸ்துவனாகவும் சட்டப்படி இந்துவாகவும் இன்னும் தொடர்கிறார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

தலித் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவருடைய சாதியையே சுட்டிக்காட்டி போராட பல அரசியல் கட்சிகள் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சலுகையை அனுபவிக்க தகுதியுள்ளவர்தானா என்பதிலேயே சந்தேகம் இருக்கும் சூழலில் அத்தகைய ஒருவருக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் பதிவர்களுக்கு தேவையில்லை.