15 ஜூலை 2010

போதும் என்ற மனம்!

உ) போதும் என்கிற மனப்பாண்மை

'உலகிலுள்ள அனைத்தையும் நீ சம்பாதித்தாலும் உன் ஆன்மாவை (நிம்மதியை) இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' இது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி. அவர் ஒரு பெரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். பிறந்த வயதிலிருந்தே 'தேவைகள்' என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு சகலத்தையும் கிடைக்கப் பெற்றவர். குழந்தை மற்றும் மாணவ பருவத்தில் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த வசதி வாய்ப்புகள் வாலிப பருவத்தில் ஒரு சுமையாகவே தெரிந்தன. ஆகவே நாளடைவில் தன்னுடைய மனநிம்மதியை இழக்கலானார். எதற்காக இந்த வாழ்க்கை என்ற தோன்றவே அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியானார்.

'People have become so materialistic these days' என்கிறார் ஒரு பிரபல மேலாண்மை ஆய்வாளர். இன்றல்ல, மனிதன் உலகில் தோன்றிய நாள் முதலே அவன் உலகத்திலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளத்தான் விரும்பினான்.

நான் வங்கியில் குமாஸ்தாவாக நுழைந்தபோது எப்படியாவது ஒரு அதிகாரியாகிவிட வேண்டும் என்று நினைத்தேன். பணிக்கு சேர்ந்த ஆறு ஆண்டுகளில் அது சாத்தியமாகிற்று. அதற்குப் பிறகு திருமணமாவதற்குள் ஒரு கிளைக்கு மேலாளராகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டும் நிகழ்ந்தும் ஆசை அத்துடன் அடங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றினால்தான் மேலும் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து மாணவ பருவத்திலிருந்த மகள்களை மனைவியுடன் சென்னையில் விட்டுவிட்டு மும்பை சென்றேன். பதவி உயர்ந்தது. ஆனாலும் அத்துடன் திருப்திகொள்ள முடியவில்லை. எனக்கு பதவி உயர்வே தேவை என்பதைவிட என்னுடன் பணிக்கு சேர்ந்தவர்கள் என்னைவிட உயர்ந்த பதவிக்கு சென்றுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் என் பயணம் தொடர்ந்தது. எட்ட நினைத்த பதவிகளை அடைந்து முடித்து திரும்பிப் பார்த்தபோது வாலிபம் என்னை கடந்துபோயிருந்தது. மகள்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்றனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இதனால் எனக்கு என்ன பெரிதாக கிடைத்துவிட்டது என்று எண்ணிப் பார்க்கிறேன். 'வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும்... No peace of mind' நடிகர் திலகம் திரைப்படம் ஒன்றில் (ஞானஒளி என நினைக்கிறேன்) உதிர்க்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது:

இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பது எத்தனை சத்தியமான உண்மை! இளம் வயதில் நம்மில் பலருக்கும் இந்த தத்துவம் ஒரு வறட்டு தத்துவமாகவே தோன்றுகிறது. வாணமே எல்லை என்று உயர, உயர பறந்துபோய் யாரும், நம் குடும்பத்தினர் கூட எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிடுகிறோம். அமெரிக்காவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு இப்போது தாயகம் திரும்புவதா, திரும்பினால் அந்த சூழலுக்கு நம்மால் இறங்கிவர முடியுமா? என்று கடந்த ஆறு மாத காலமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறார் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர். அவருடைய மனைவிக்கு தாயகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை. பிள்ளைகள் இருவருக்கும் அந்த எண்ணமே கசப்பை தருகிறது. ஒருகாலத்தில் சுவர்க்கமாய் தெரிந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தில் என் உறவினர். இத்தகைய மனக்கலக்கத்தில் பல மேற்கத்திய நாடுகளில் பணிக்கு சென்று நிரந்தரவாசிகளாகிப்போன பலர் உள்ளனர்.

அலுவலக வாழ்க்கையில் எத்தனைதான் சாதித்தாலும் அந்த வெற்றிக்காக இழந்தவைகளை கணக்கிடும்போதுதான் நம்மில் பலருக்கும் புரிகிறது... எத்தனை விலைகொடுத்து பெற்ற வெற்றி இது என்பது! அலுவலக வேஷங்களை களைந்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்பத் தலைவனாகவும், தலைவியாகவும் எளிதில் மாறிவிட முடிகிறவர்களால் மட்டுமே வீட்டையும் அலுவலகத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது உறுதி!

2. அலுவலகமும் வீடும் ஒன்றல்ல

மேற்கூறிய மனப்பாண்மைகளை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களைந்தாலும் வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை முழுமையாக உணரும் வரையிலும் இரண்டையும் முழுமையாக நிர்வகிப்பது எளிதல்ல.

அலுவலகம் என்பது நாம் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றுசேரும் இடம். ஆகவே அதற்கென்றே பல சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி நடக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. அவற்றில் சிலவற்றுடன் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. அதுபோன்றே நம்முடன் பணியாற்றும் சிலருடன் நம்மால் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அவர்களுடைய சில பழக்கங்கள், பேச்சு, செயல்பாடு ஆகியவற்றுடன் நமக்கு உடன்பாடில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் அத்தகையோருடன் ஒத்துப்போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத சக ஊழியர்களை விட்டு விலகிச் செல்கிறோம். நாம் உண்டு நம் வேலையுண்டு என இருந்துவிடுகிறோம்.

ஆனால் நம் வீடு அப்படியல்ல. நம்முடன் வீட்டில் உடன் வசிக்கும் அனைவரும் நம் சொந்தங்கள், ஒரே இரத்தம். ஆகவே அவர்களை அவர்களுடைய நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. அலுவலகத்திலுள்ளதைப் போன்ற சட்ட திட்டங்களையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ வீட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். பல குடும்பங்களில் குடும்ப தலைவன் வைத்ததுதான் எழுதா சட்டம். இதை குடும்பத் தலைவியிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திலுள்ளவர்களை நிர்பந்திக்க எண்ணுவது காலங்கடந்த செயல் என்பதை ஆண்கள் பலரும் உணர்வதில்லை. இதை என்றைக்கு உணர்கிறார்களோ அன்றுதான் வீடு வீடாக இருக்கும்.

அலுவலகத்தின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கவில்லையென்றால் வேலையை உதறிவிட்டு சென்றுவிட முடியும். ஏனெனில் நம்முடைய நோக்கம் ஊதியம் மட்டுமே. மாறாக நாம் பணியாற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதல்ல. எந்த நிறுவனம் நமக்கு அதிக ஊதியம் அளிக்க முன்வருகிறதோ அதற்கு நம்முடைய உழைப்பை அளிக்க முன்வருகிறோம்.

இப்போதெல்லாம் குடும்பத்திலுள்ளவர்களுடன் ஒத்துப்போக முடியாமல் போகும் சூழலில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற மனப்பாங்கு சிலரிடம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையோருக்கு அது இன்றும் அத்தனை எளிதல்ல. சொந்தங்களை உதறிவிட்டு செல்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நம் நாட்டை பொருத்தவரை இன்றும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்கிற மனப்பாங்கு வெகு சிலரிடமே காணப்படுகிறது.

இதில் வேறொரு உண்மையும் உண்டு. 'என்னுடைய ஆஃபீஸ் பிரச்சினைய சால்வ் பண்றதுக்கே எனக்கு நேரம் போற மாட்டேங்குது இதுல வீட்டு பிரச்சினைகள வேற எங்கிட்ட ஏன் சொல்லி என் டென்ஷன் பண்றே?' இது பல ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கூறும் முறையீடு. ஏதோ வீட்டு பிரச்சினை பெண்களின் பிரச்சினை என்பதுபோல. Charity begins at home என்பதுபோன்று வீட்டு பிரச்சினை தீராமல் அலுவலக பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. வீடு வீடாக இருக்கும் வரைதான் அலுவலகத்தில் நாம் திறம்பட பணியாற்ற முடியும். அலுவலக தோல்விகளில் சிலவற்றிற்கு வீட்டிலுள்ள சுமுகமற்ற சூழலும் கூட காரணிகளாக இருக்கலாம். அதுபோன்றே குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளுக்கு அலுவலக தோல்விகளும் காரணிகளாக அமையலாம்.

ஆகவே வீடும் அலுவலகமும் வெவ்வேறு என்றாலும் இரண்டையும் சரிவர நிர்வகிப்பது நம்முடைய வெற்றிக்கு மட்டுமல்லாமல் மனநிம்மதிக்கும் மிக, மிக அவசியம்.

நாளை நிறைவுபெறும்.

2 கருத்துகள்: