08 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 1

கடந்த வாரம் நான் எழுதிய 'பணியிலிருந்து ஓய்வு - சுயதயாரிப்பு' தொடரை வாசித்த நண்பர் ஒருவர் உங்களுடைய அனுபவத்திலிருந்து பணியிலிருப்பவர்கள் அலுவலக பளுவையும் குடும்ப பளுவையும் ஒருசேர எப்படி சுமப்பது அல்லது சமாளிப்பது என்பதைப் பற்றியும் எழுதுங்களேன் என்று மின்னஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டார்.

அதன் விளைவே இத்தொடர்.

என்னுடைய நண்பர் 'பளு' என குறிப்பிட்டது பொறுப்புகளின் (Responsibilities arising out of Positions) விளைவாக ஏற்படுகின்ற சுமை (Burdens or Obligations) என்று கருதுகிறேன்.

நான் 'பொறுப்புகள்' என குறிப்பிடுகையில் எல்லா பதவி நிலைகளையும் ஒருமித்து குறிப்பிடவே 'Authority' என்று கூறாமல் 'Positions' என்று கூறியுள்ளேன். கடமைகள் சுமைகளாக தோன்றுவது அதிகார நிலையிலுள்ளவர்களுக்கு (Authorities) மட்டுமல்லாமல் அதிகாரத்திற்குட்படும் அடிமட்ட ஊழியர்களுக்கும் கூட அவரவர்களுடைய நிலைகளுக்குட்பட்ட சுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்கவியலாது. ஆகவே 'சுமை'யின் பாரத்தை அனைவருமே ஏதாவது ஒரு காலத்தில் உணரவே செய்கின்றனர்.

குடும்பங்களிலும் அப்படித்தான். தலைவர் எனப்படும் கணவன் மட்டுமேதான் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றில்லை. அவருடைய அதிகாரத்திற்கு ஆளாகும் மனைவி மற்றும் குழந்தைகளும் கூட மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர்.

'டென்ஷன்' என்ற ஆங்கில சொல்லை 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என எதிர்மறைப் பொருள்பட (Negative sense) பல தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனக்கென்னவோ 'டென்ஷன்' என்றால் 'மனப் பதட்டம்' என்பதே பொருத்தமாக இருக்கும் என படுகின்றது. 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என குறிப்பிடுகையில் Positive Anxiety எனப்படும் 'நேர்மறை மனப்பதட்டம்' என்கிற மனநிலை வெளிவருவதில்லை. அதாவது நல்ல அலுவல் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில், வெற்றிகரமாக முடித்தாக வேண்டுமே என்கின்ற ஒரு மனநிலையைத்தான் 'நேர்மறை மனப் பதட்டம்' என குறிப்பிடுகிறேன்.

உதாரணமாக என்னுடைய மகளின் திருமணத்தை நிச்சயித்த தியதியிலிருந்து ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். 'இதை நான் எப்படி செய்து முடிக்கப் போகிறேன்' என்று என் மனதுக்குள் ஒருவிதமான பதற்றம் ஏற்படுகிறதே அதுவும் ஒருவகையில் 'டென்ஷன்' தான். அல்லது அடுத்து வருகின்ற தேர்வுக்காக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் டென்ஷன். இவை நல்ல விஷயங்களுக்காக ஏற்படுகின்ற பதற்றம்.

இத்தகைய பதட்டத்தை 'மன இறுக்கம்' என குறிப்பிட முடியாது. இதை 'Positive Tension or Anxiety' என கூறலாம்.

இத்தகைய 'நேர்மறை மனப் பதட்டம்' அவசியமானதும் கூட. நம்முடைய அன்றாட அலுவல்களை சரிவர செய்து முடிக்க - அது அலுவலகமானாலும் வீடானாலும் - இந்த மனநிலை ஒரு உந்துகோலாக நிச்சயம் அமைகிறது. எவ்வித மனப்பதட்டத்திற்கும் உள்ளாகாமல் ஒரு மனிதனால் எதிலும் வெற்றிபெற முடியாது.

'எதிர்மறை மனப் பதட்டம்' அதாவது தேவையற்ற அச்சங்களால் ஏற்படும் மன சஞ்சலங்களைத்தான் 'மன இறுக்கம்' அல்லது 'மன அழுத்தம்' என கூறலாம். இந்த மன சஞ்சலங்கள்தான் பல சமயங்களிலும் நம்மை எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் அலைக்கழிக்கின்றன. தேவையற்ற பரபரப்பை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. இத்தகைய சஞ்சலங்கள் நம்முடைய உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கேடு விளைவிக்கின்றன. பசியின்மை, உறக்கமின்மை, உற்சாகமின்மை இவை அனைத்திற்குமே இத்தகைய சஞ்சலங்கள்தான் காரணம் என்றால் மிகையல்ல.

பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மன இறுக்கத்தை எப்படி கையாள்வது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்துக்கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே இத்தொடரின் நோக்கம். அத்துடன் நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக சில ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் இருந்த பல மேலாண்மை புத்தகங்களை படித்து வகுப்புகள் எடுக்க நான் குறித்து வைத்திருந்தவற்றையும் கையாளலாம் என்று எண்ணியுள்ளேன்.

'மன இறுக்கம்' என்பது ஒரு அலுவலை சரிவர செய்துமுடிக்க வேண்டுமே என்கிற நேர்மறை மனப் பதட்டத்தை கடந்து அந்த அலுவலை சரிவர முடிக்காமல் போய்விடப் போகிறது அல்லது அதை என்னால் நிச்சயம் சரிவர செய்ய முடியாது என்கிற எதிர்மறை மனசஞ்சலத்திற்கு ஆட்பட்ட மனநிலை என்றும் கூறலாம்.

தோல்வியை சந்திக்க தயாராக இல்லாத மனநிலையைக் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மனநிலைக்கு ஆளாகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அலுவலக வாழ்க்கையானாலும் தோல்விகள் நிச்சயம். தோல்விகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. தோல்விகள் மிகவும் சகஜம். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் நான் வெற்றிபெற்றுத்தான் தீருவேன், என்னுடைய அகராதியில் தோல்வி என்ற வார்த்தையே இல்லை என்ற தேவையற்ற தீர்மானங்களை உள்ளத்தில் உரம் இட்டு வளர்ப்பவர்களே மன இறுக்கத்திற்குள்ளாகின்றனர்.

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..

2 கருத்துகள்: