30 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு நிறைவுப் பகுதி

நடுத்தர குடும்பத்திலுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு ஓரளவுக்காகிலும் வசதியுடன் வாழ தங்களுடைய பணிக்காலத்தில் சில வசதிகளை தியாகம் செய்துதான் ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளார்கள் என்பதை மறுக்கவியலாது. இன்றைய நாளுக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள் பலரும் பொருளாதார அடிமட்டம் அல்லது உச்சாணியிலுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். சாலையோரத்தில் வசிப்பவனால் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் ஆனால் நடுத்தர மக்கள் அப்படியல்ல. அதுவும் சமுதாயத்தில் ஓரளவுக்கு மதிக்கத்தக்க அந்தஸ்த்துடன் வாழ்ந்து பழகிப்போனவர்கள் அதே அந்தஸ்த்துடன் இறுதிவரை வாழவே விரும்புவர். இதற்கு மிகவும் அத்தியாவசியமானது பொருளாதார சுதந்திரம். இத்தகைய சுதந்திரத்தை முதிர்ந்த வயதிலும் அளிக்கக் கூடியது சேமிப்பு மட்டுமே.


ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சேமிக்க தேவையில்லை என்கிற மனப்பாண்மை சிலரிடம் இருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களை நன்றாக படிக்க வைத்து ஒரு வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் நம்முடைய முதிர்ந்த வயதில் அவர்கள் நம்மை கவனித்துக்கொள்வார்கள் என்பது போன்ற எண்ணம் இவர்களுக்கு. இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.

பொருளாதார சுதந்திரமின்மைதான் முதியவர் பெரும்பாலோரின் மனக்கவலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள். அதாவது முதிர்ந்த வயதில் தங்களுடைய வசதிகளுக்கு பிறரை, குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளை சார்ந்திருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆகவே பெற்றது ஆணாலும் பெண்ணானாலும் பெற்றவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு எதிர்கால வாழ்வுக்கு சேமித்து வைப்பது மிகவும் அவசியம்.

சேமிப்பு என்றால் தற்போதைய வசதிகளை நிறைவேற்றிக்கொண்ட பிறகு மீதமுள்ள தொகையை சேமிப்பது என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. எதிர்காலத்தில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக இன்றைய அடிப்படை தேவைகளையும் தியாகம் செய்வதில் அர்த்தம் இல்லை. நாளை, நாளை என்கிற எண்ணத்துடன் என்றுமே வாழாமல் இருப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்?

அதே சமயம் இன்றைய அடிப்படை தேவை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதா என்றும் கேட்கலாம். எனக்கு அடிப்படை தேவையாக நான் கருதுவது வேறு சிலருக்கு ஆடம்பரமாக தென்படலாம். இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவை மூன்றும் இருந்தால் போதும் என கருதுபவர்களும் உண்டு. இருக்க இடம் என்றால் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறைகள் இருக்க வேண்டும், உடுத்த உடையென்றால் குறைந்தபட்சம் ஐம்பது ஜோடிகள் வேண்டும், உணவு என்றால் தினமும் விருந்து சாப்பாடு வேண்டும் வார இறுதி நாட்களில் வெளியில் சாட், தந்தூரி வகையறா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கருதுபவர்களும் உண்டு. அதுபோலவே போக்குவரத்திற்கு தங்கள் வாழ்நாளெல்லாம் பொதுத்துறை பேருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பவர்களும் உண்டு, குறைந்தபட்சம் மொப்பெட்டாவது இருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆக அவரவர் தகுதிக்கேற்ப வாழ்க்கைத்தரமும், தேவைகளும் மாறுபடுகின்றன.

சேமிப்பும் அப்படித்தான். அவரவர் வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தே சேமிப்பும் அமைகின்றன. சேமிப்பின் அளவு வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் சேமிப்பு என்பது அனைவருக்கும் தேவை.

சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதை எப்படி முதலீடு செய்வது என்பதை தெரிந்துக்கொள்வது அதைவிட முக்கியம். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்துள்ள நம்மில் பலரும் அவற்றை முதலீடு செய்வதில்தான் தோற்றுப்போகிறோம். சமீப காலங்களில் சரியாக ஆலோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களைப் பற்றிய செய்திகள் வராத நாள் இல்லையே. இத்தகையோருள் பலர் அடிப்படை வசதிகளையும் தியாகம் செய்து சேமித்தவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. படிக்காதவர்கள்தான் என்றில்லாமல் சில அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சென்னையில் மிகவும் பிரபலமாகியிருந்த RBF நிறுவனத்திடம் தங்களுடைய சேமிப்பு அனைத்தையும் இழந்து நின்றதை படித்தோமே.

திரும்பும் இடமெல்லாம் வங்கிகள் நூற்றுக்கணக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஏன் பொதுமக்கள் இன்றும் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாந்துபோகின்றனர்? கேட்டால் அரசுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த விகிதத்திலேயே வட்டி வழங்குகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆரம்பநிலை பொருளாதார பாடம் என்ன சொல்கிறது? வட்டி என்பது சேமிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (incentive). அதாவது சேமிப்பே இல்லாத பொருளாதார சந்தையில் சேமிப்பை தூண்ட அளிக்கப்படும் ஊக்கத்தொகைதான் வட்டி. சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையின் விகிதமும் குறையத்தான் செய்யும். சந்தைக்கு வரும் பொருட்களின் அளவைப் பொருத்துத்தானே அதன் விலையும் அமைகிறது? சரக்கு பற்றாக்குறையாக இருக்கும் காலங்களில் அதன் விலை உயர்வதும் சரக்கு அபிரிதமாக இருக்கும் காலங்களில் அதன் விலை சரிவதும் இயற்கைதானே! Disposable income எனப்படும் தேவைக்கு அதிகமான ஊதியம் அதிக மக்களின் கைவசம் இருக்கும் இன்றைய சூழலில் சேமிப்புக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறையவே வாய்ப்புள்ளது. ஆகவே சேமிப்பிற்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் குறைந்து வரும் இன்றைய சூழலில் நம்முடைய அனைத்து சேமிப்பையும் வைப்புநிதிகளில் வைப்பதில் பலனில்லை.

வைப்பு நிதிகளை விட்டால் முதலீடு செய்ய மிகவும் சிறந்ததாக தற்போது கருதப்படும் முதலீடு தங்கம். அதற்கடுத்தபடியாக கருதப்படுவது அசையாசொத்து எனப்படும் வீட்டு மனைகள் (Plots), குடியிருப்பு (Flats). அதற்கடுத்து பங்குகள் (Share Market).


1. தங்கம்

எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகிறேன். 2004ம் வருடம். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவரிடம் ரூ.1.00 லட்சம் இருந்தது. அதை எதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை கேட்க என்னை அணுகினார். 'Gold coins வாங்கிருங்கன்னு சொல்றாங்க எங்க வீட்டுல.' என்றார். நான் அப்போதுதான் என்னுடைய மூத்த மகளுக்கு திருமணத்தை முடித்திருந்தேன். ஆகவே சுமார் இரண்டாண்டுகளாகவே தங்க நகைகளை வாங்கிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் தங்க நகைகளை வாங்கிவிட்டு வந்த அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 வரை விழும், சில தினங்களுக்கு ரூ.20, ரூ.25 ஏறும். இப்படியேதான் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறை தங்கம் வாங்கி முடித்ததும் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. ஆகவே நான் 'தங்கத்துல முழுசையும் போடாமல் பாதிய NSCல போடுங்க' என்றேன். முதலீட்டுக்கு 6.5% வருடத்திற்கு கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் முதலீட்டில் 20% வருமானவரி ரிபேட்டும் கிடைக்குமே என்றேன். NSC யில் ஆறாண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஆறாண்டுகளுக்கு பிறகு ரூ.1.00 லட்ச முதலீடு 1.60 லட்சமாக கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் கிடைக்கும் 20% ரிபேட்டையும் சேர்த்தால் ரூ.1.00 லட்சம் முதலீட்டிற்கு ரூ.80,000/- கூடுதலாககிடைக்கும் தங்கத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என்று கணக்கிட்டு மொத்த தொகையையும் NSCயில் முதலீடு செய்தார் அவர். அன்று தங்கம் கிராமுக்கு ரூ.585/- முந்தைய இரண்டு ஆண்டுகளில் சுமார் 20% - 25% அளவுக்கே வளர்ச்சியடைந்திருந்த அதன் மதிப்பு அடுத்த ஆறு ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து சுமார் 3 1/2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.1750/- ஆக நிற்கிறது. என்னுடைய நண்பர் அவருடைய மனைவியின் ஆலோசனைப்படி தன்னுடைய ரூ.1.00 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அவருடைய முதலீடு ரூ.3.50 லட்சமாக வளர்ந்திருக்கும்! அவருடைய NSC இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரூ.1.60 லட்சமாக திருப்பிக் கிடைக்கும்! தங்கத்துடன் ஒப்பிட்டால் சுமார் ரூ.1.90 லட்சம் இழப்பு. அடுத்த இரண்டாண்டுகளில் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சென்றுவிட்டார். ஆனாலும் வருகின்ற செப்டம்பர் மாதம் அவருடைய முதலீடு திருப்பிக் கிடைக்கும்போது என்னை கலந்தாலோசித்தது எத்தனை முட்டாள்தனம் என்று நினைத்துப்பார்ப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 30லிருந்து 35 விழுக்காடு உயர்ந்திருப்பது தங்கத்தின் விலைதான் என்பதில் ஐயமேதும் இல்லை. ஆனால் முதலீடு செய்த தொகையை திருப்பி எடுக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதில் பயனில்லை. முதலீட்டிற்கு தங்க காசுகள்தான் சிறந்தவை. இதில் கவனிக்க வேண்டியது. தங்கத்தை வாங்கியபோது கிடைத்த பில்லையும் விற்கும்போது கிடைத்த ரசீதையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு சூழலில் வருமான வரி பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் இவை நிச்சயம் தேவைப்படும். மேலும் எந்த கடையில் வாங்குகிறோமோ அதே கடையில் அதை விற்பதுதான் நல்லது.



2. வீட்டு மனைகள்

தங்கத்தை அடுத்து வீட்டு மனைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் இதன் மதிப்பு வளர்ச்சியடைவது பெரும்பாலும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்தே அமைகிறது. 1985ம் வருடம் நான் தூத்துக்குடி கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது என்னுடைய உறவினர் ஒருவர் தூத்துக்குடியில் ஒரு தாக்கு எனப்படும் 2400 ச.அடி வீட்டு மனை ஒன்றை ரூ.20,000/- க்கு வாங்கினார். அதை தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கென்று 2003ம் வருடம் விற்க நினைத்தபோது அதன் மதிப்பு ரூ.5.00 லட்சமாக உயர்ந்திருந்தது. ஆனால் அவர் நிலத்தை வாங்கிய அதே வருடம் என்னுடைய அலுவலக நண்பர்கள் சிலர் கூட்டாக சென்னையை அடுத்துள்ள சோளிங்கநல்லூர் கிராமத்தில் ஒரு கிரவுண்ட் ரூ.50,000/- என்று பத்து கிரவுண்ட் (24000 ச.அடி) விளைநிலத்தை வாங்கினர். அதன் மதிப்பு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து சமீபத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு கிரவுண்ட் நிலத்தை ரூ.25 லட்சத்திற்கு விற்றதாக கேள்வி. நான் 1980ல் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்திருந்தபோது அப்போது பிரபலமாகியிருந்த ஆலாக்ரிட்டி (Alacrity) நிறுவனம் 800 ச.அடி அளவுள்ள குடியிருப்புகளை சுமார் ரூ.2.00 லட்சம் வீதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்று அந்த வட்டாரத்தில் ச.அடி ரூ.8,000/-ல் இருந்து ரூ.10,000/-! ஆகவே என்ன விலைக்கு வாங்குகிறோம் என்பதை விட அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை கவனித்து வாங்குவது மிகவும் முக்கியம்.

ஆனால் அசையா சொத்துகளில் செய்த முதலீட்டை அத்தனை எளிதில் திருப்பி எடுக்க முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தேவையற்ற வில்லங்கத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு.


3. பங்குகள்

இவற்றில் முதலீடு செய்ய மிகுந்த அனுபவம் தேவை. குறுகிய காலத்தில் பெரும் அளவுக்கு லாபம் அடையவும் இயலும் நம்முடைய சேமிப்பு அனைத்தையுமே இழந்துவிடவும் முடியும். ஆனால் இதை முழுவதுமாக ஒதுக்கிவிடுவதும் புத்திசாலித்தனமல்ல.

ஆகவே இந்த மூன்று முதலீட்டு வாய்ப்புகளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்திக்கொண்டால் அதிக லாபம் கிடைக்கவில்லையென்றாலும் பெரு நஷ்டத்தை தவிர்க்க வாய்ப்புண்டு:

* தங்கத்தில் முதலீடு செய்ய பெருந்தொகை தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடிந்ததை கொண்டே தங்க காசுகளை கிராம் கணக்கில் வாங்கிவிட முடியும். ஆகவே நம்முடைய மாத சேமிப்பில் அதிகபட்சமாக 50% இதற்கென ஒதுக்கலாம். மாதம் ஒரு கிராம் வீதம் வாங்கினாலும் முப்பது வருடங்களில் 360 கிராம் வாங்கிவிட முடியுமே?

* அசையா சொத்து எனப்படும் வீட்டு மனை, குடியிருப்பில் கையிருப்புடன் வங்கி கடனையும் சேர்த்து முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். இருபது வருடங்கள் என நீண்ட கால கடனாக இருக்கும் பட்சத்தில் மாதா மாதம் கடனை அடைக்க பெருமளவு தொகை தேவைப்படாது. அத்துடன் கடனுக்குண்டான வட்டிக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது. அசையா சொத்துக்களில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே (30லிருந்து 40 வயதுக்குள்) அதை முடிவு செய்துவிடுவது நல்லது. அப்போதுதான் கடனுக்குண்டான தவணை அவர்களுடைய நிகர வருமானத்தில் 50%க்கு மேல் போகாமல் இருக்கும்.

* முதலிரண்டு வகை முதலீட்டுக்கு தேவையான தொகையை ஒதுக்கிய பிறகு மீதம் இருக்கும் தொகையை, குறிப்பாக ஒவ்வொரு வருடம் கிடைக்கக் கூடிய போனஸ் அல்லது ஓவர் டைம் வருமானத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பங்கு சந்தையில் விலைக்கு வரும் பங்குகளை வாங்காமல் ப்ளூ சிப் நிறுவனங்கள் எனப்படும் சிறந்த நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் பப்ளிக் இஷ்யூக்களில் விண்ணப்பித்து வாங்கலாம். குறுகிய காலத்தில் இத்தகைய பங்குகளின் விலையில் அபிரிதமான ஏற்றம் ஏற்படவில்லையென்றாலும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் வழங்கும் டிவிடெண்ட் தொகை நிரந்தர வருமானமாக கிடைக்க வாய்ப்புண்டு.

பொருளாதார சுதந்திரமும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடைய ஆதரவும் இருக்கும்பட்சத்தில் முதிர்ந்த வயதிலும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.



நிறைவுபெறுகிறது.

முந்தைய பதிவுகள்

பதிவு 1 பதிவு 2 பதிவு 3 பதிவு 4 பதிவு 5 பதிவு 6 பதிவு 7 பதிவு 8

7 கருத்துகள்:

  1. நன்றி ஜோசப் சார். எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உடனே தொடரை எழுதியமைக்கு மிக்க நன்றி. நல்ல தகவல்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.ஆனாலும் சுருக்கமாக சொன்னாலும் பல களை எழுதியுள்ளீர்கள். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.//
    அதே...அதே..

    பதிலளிநீக்கு
  3. Excellent Sir !! Could you post all the "Retirement" links in a single post !! It would be easier for people to follow all the links at once !

    Regards,
    Selvakumar

    பதிலளிநீக்கு
  4. வாங்க சாம்பார் வடை! இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்...// உணர்வுபூர்வமாக எப்படி தயாரித்துக்கொள்வது என்பதை முடிந்த அளவுக்கு விரிவாக எழுதியுள்ளேன் என கருதுகிறேன். சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களை சுருக்கமாக கோடிட்டு காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ள காரணம் உள்ளது. இன்றைய ஸ்திரமற்ற பொருளாதார சூழலில் இது நல்ல திட்டம், இதில் முதலீடு செய்யலாம் என்று பரிந்துரைப்பது மிகவும் கடினம். மேலும் இத்தகைய பதிவுகளை மிகச் சிலரே படிக்கின்றனர். படிப்பவர்களும் கூட பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதில்லை. ஆகவேதான் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் நன்றி சிதம்பரம் மற்றும் டாக்டர் கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க வினையூக்கி. நீங்கள் விரும்பியபடி இந்த பதிவின் அடியிலேயே முந்தைய பதிவின் லிங்குகளை அளித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு