09 ஜூலை 2009

ரொம்ப நாளாச்சு ....

சுமார் மூன்று வருடங்களாக இழுத்தடித்த கணினி மயமாக்கல் பயணம் (ப்ராஜக்ட்) ஒருவழியாக கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது, வெற்றிகரமாக.

என்னுடைய வங்கியின் அனைத்துக் கிளைகளும் வலையிணைப்பின் கீழ் (Wide Area Network) கொண்டுவரப்பட்டு ஒரே மென்பொருளை பயன்படுத்தும் வகையில் (Core Banking Solution) இணைக்கப்பட்டன.

இந்த மூன்றாண்டுகளில்தான் எத்தனை ஏமாற்றங்கள், காலதாமதங்கள், விவாதங்கள், மனத்தாங்கல்கள்... நண்பர்களை சம்பாதித்தேனோ இல்லையோ நிறைய விரோதங்களை ஏற்படுத்திக்கொண்டேன்.

ஆனால் இந்த எல்லாவற்றினூடே முடியாது என்று பலரும் கூறியதை சாதித்துவிட்டோம் என்கிற ஒரு கர்வம் நிறைந்த மனநிறைவு....

இதை வெற்றிகரமாக செயலாற்றி முடிக்க என்னுடன் உழைத்த இளம் பொறியாளர்கள் கொண்ட அந்த அணியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

கடந்த ஓராண்டுகாலமாக சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள், பண்டிகை என்று எந்த ஓய்வும் இல்லாமல் ஒழிவும் இல்லாமல் அலுவலகமே கதி என்று கிடந்த அந்த இளைஞர்களை என்ன சொல்லி பாராட்டுவது. அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

இது முழுக்க முழுக்க ஐ.டி நிறுவனமாயிருந்தால் இந்த பாராட்டுக்குறிய சாதனைக்கு கணிசமான ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். ஆனால் கங்கிராட்ஸ் என்ற ஒரு வார்த்தையைத் தவிர, ஐந்து நட்சத்திர உணவகத்தில் ஒருவேளை உணவைத் தவிர வேறொன்றும் என்னால் பரிசாக தரமுடியவில்லை.

இதுமட்டுமே என்னால் முடியும் என்பதையும் அந்த இளைஞர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது ஒரு சிறிய ஆறுதல்.

நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதை முடித்துவிட முடியுமா என்று பல நாட்கள் மாய்ந்து போயிருக்கிறேன். பல இரவுகளில் உறக்கத்தை இழந்திருக்கிறேன். பல உயர் அதிகாரிகளின் முன்பு பதிலளிக்க முடியாமல் நின்றிருக்கிறேன். பல ஏச்சுகளை, பேச்சுகளை கேட்டிருக்கிறேன்...

ஆனால் என்னுடைய மிக ஆழமான இறைபக்தி, என்னுடைய இளைஞர் அணியின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை இவை மட்டுமே இதை முடித்து தந்திருக்கிறது என்றால் மிகையல்ல...

இதோ, இனியும் ஆறே மாதங்கள். அறுபது வயதில்தான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...

எனக்கும் மிகவும் மன ஆறுதலை அளிக்கும் என்னுடைய எழுத்து பயணத்தை மீண்டும் துவக்க முடியும் என்ற மகிழ்ச்சியில்....

எதிர்வரும் மாதங்களில் அடிக்கடி எழுத முடியாமல் போனாலும் பின்னூட்டங்கள் இட்டு வலையுலக தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன்...

மீண்டும்... டிபிஆர்.