12 செப்டம்பர் 2008

மலேசியாவில் இந்தியர்களின் அவல நிலை

சமீபத்திய மலேசிய பயணத்தில் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களில் ஒன்று கே.எல். விமானநிலையத்தில் நடந்த இம்மிக்ரேஷன் என்ற பெயரில் மலேசியர்கள் நடத்திய கூத்து.

என்னுடைய விமானம் சென்றடைந்தபோது நேரம் காலை 4.45. அதிகம் போனால் நூறு பயணிகள். அந்த நேரத்தில் வேறெந்த விமானமும் வந்திருக்கவில்லை. ஆனால் இம்மிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தபோது மணி ஏழு!

கடந்த வருடம் (டிசம்பர் மாதம்) சென்றபோது விமானத்திலேயே இம்மிக்ரேஷன் படிவம் வழங்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கி அதை பூர்த்தி செய்து கவுண்டரில் கொடுத்து அடுத்த நிமிடமே பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து அனுப்பிவிட்டார்கள். ஆனால் இந்த முறை படிவம் ஏதும் வழங்கப்படவில்லை. கேட்டால் தேவையில்லை என்றார் விமான பணிப்பென். ஓஹோ இம்மிக்ரேஷன் முறையை எளிதாகிவிட்டனர் போலும் என்று நினைத்தேன்.

அதுதான் இல்லை என்பது எனக்கு முன்னால் நின்றிருந்த ஒவ்வொரு பயணிக்கும் நிகழ்ந்ததை பார்த்தபோதுதான் புரிந்தது. பய்ணிகளின் பாஸ்போர்ட் விவரத்தை கணினியில் நுழைத்து படு சீரியசாக ஆராய்வதும், ஒருசில பயணிகளின் கைபெருவிரல் ரேகைகளை பதிந்துக்கொள்வதும், அதிலும் திருப்தியடையாமல் மேலதிகாரியிடம் சென்று விவாதிப்பதுமாக ஒவ்வொரு பயணிக்கும் சுமார் கால் மணி நேரம் எடுத்தது.

என்னுடைய முறை வந்தது. என்னுடைய பாஸ்போர்ட்டையே துருவி, துருவி ஆராய்ந்த பணிப்பெண் சட்டென்று எழுந்து மேலதிகாரியிடம் சென்று என்னுடைய பாஸ்போர்ட்டைக் காட்டி ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து என்னை பார்வையால் துளைத்தார். அடடா டெரரிஸ்ட் என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைத்தேன். மேலதிகாரி சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்டை வாங்கி என்னுடைய பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தில் கையொப்பம் இட்டுவிட்டு தன்னுடைய முத்திரையையும் பதித்து திருப்பித்தர பணிப்பெண் திரும்பிவந்து தன் இருக்கையில் அமர்ந்து அடுத்த இருக்கையில் இருந்தவரிடம் மீண்டும் என்னுடைய விசாவைக் காட்டி ஏதோ கூற அவர் சிரித்தார்.

பிறகு பணிப்பென் என்னுடைய பாஸ்போர்ட்டில் அவர் மேசையிலிருந்த முத்திரையை பதித்தவாறே 'யூ ஆர் கமிங் டு மலேசியா ஃபார் தி செக்கண்ட் டைம் இன் சிக்ஸ் மந்த்ஸ் சார். யூ ஹேவ் எனிபடி ஹியர்?' என்றார். அத்தனை நேரம் பொறுமையுடன் நின்றிருந்த நான் சற்றே எரிச்சலுடன், 'என்னுடைய விசா ஒரு வருடம் செல்லுபடியாகும். எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடியது. பிறகு ஏன் இந்த கேள்வி?' என்றேன்.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை போலிர்ந்தது. ஒரு நொடி என்னையே முறைத்துப் பார்த்துவிட்டு 'யூ மே கோ' என்றவாறு பாஸ்போர்ட்டை திருப்பியளித்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு வெளிவாசலுக்கு செல்லும் வழியில் என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்தேன். பிறகுதான் தெரிந்த்து எதற்காக அந்த பணிப்பெண் அதை மேலதிகாரியிடன் கொண்டு சென்றார் என்பது.

எனக்கு ஒரு வருட விசா அளிக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தியதி. நான் கே.எல் சென்றடைந்தது டிசம்பர் 20ம் தேதி. திரும்பி மலேசியாவில் இருந்து புறப்பட்டது ஜனவரி 5ம் தியதி, அதாவது 05.01.2008. ஆனால் என்னுடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டப்பட்டிருந்த தேதி 05.01.2007! அதாவது இம்மிக்ரேஷன் முத்திரையில் தியதியையும் மாதத்தையும் மாற்றியவர்கள் வருடத்தை மாற்ற தவறியிருக்கிறார்கள். ஆக டிசம்பர் மாதம் வழங்கப்ப்ட்ட விசாவில் நான் அவ்வருடத்திய ஜனவரி மாதத்திலேயே பயணித்திருக்கிறேன்.
இது ஒரு குமாஸ்தா தவறு (Clerical error). இதற்காக கால் மணிநேரம் செலவழித்திருக்க வேண்டுமா என்று நினைத்தேன். சரி என்னுடைய விஷயத்தில் குழப்பம் இருந்தது. ஆனால் எதற்காக அனைவருடைய பாஸ்போர்ட்டையும் இந்த அளவுக்கு துருவி, துருவி பார்க்கவேண்டும்? மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து இந்தியர்களையுமே டெரரிஸ்ட் என்றோ இம்மிக்ரேஷனை ஏமாற்றிவிட்டு நிரந்தரமாக தங்கிவிடுவார்கள் என்றோ மலேசியர்கள் நினைத்துவிட்டார்களோ?

கடந்தமுறை சென்றதற்கும் இந்த முறை சென்றதற்கும் இடைபட்ட காலத்தில் மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை மோசமாகத்தான் போயுள்ளது என்பதை உணரமுடிந்தது. மலேசியர்களிடமிருந்து இந்தியர்கள் வீடு வாங்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு, இந்தியர்களுடைய வியாபார ஸ்தலங்களில் இனியும் இந்தியர்களை வர அனுமதிப்பதில்லை என்கிற முடிவு என ஒவ்வொரு முடிவும் இந்தியர்களுக்கு எதிராகவே இருப்பதை என்னுடைய மலேசிய வாழ் உறவினர்கள் கூற கேட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு மலேசிய பாராளுமன்றத்தில் ஒரு மலேசிய துணை அமைச்சர் 'இந்தியனையும் பாம்பையும் கண்டால் முதலில் இந்தியனைத்தான் அடிக்க வேண்டும்' என்றாராம் பகிரங்கமாக. உடனே அவையிலிருந்த இந்திய மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபிக்க ஒப்புக்கு மன்னிப்பு கேட்டாராம்.

இந்தியர்களின் வளர்ச்சியைக் கண்டு மலாய் மக்கள் அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் முடிவு எடுக்கப்படுகிறது என்பது மிகத்தெளிவாக தெரிந்தது.

*********

10 கருத்துகள்:

  1. //'என்னுடைய விமானம்' சென்றடைந்தபோது நேரம் காலை 4.45//

    ஜோசப் ஐயா,

    உங்களுக்கும் இந்த......... ண்டதா ?:)

    'நான் பயணம் செய்த விமானம்' என்றல்லவா எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
    :)

    பதிலளிநீக்கு
  2. வாங்க கண்ணன்,

    'நான் பயணம் செய்த விமானம்' என்றல்லவா எழுதப்பட்டு இருக்க வேண்டும்.//

    நீங்க எப்ப தமிழ் வாத்தியார் ஆனீங்க?:)

    ஒரு பேச்சுக்காவது 'என்னுடைய விமானம்னு' சொல்லிக்கறேனே..

    பதிலளிநீக்கு
  3. அது தமிழ்பாடம் இல்லை ! :)

    ......... 'வியாதி தொற்றிக் கொ'

    என்பது எழுதும் போது விடுபட்டுவிட்டது.

    :)

    ******

    மலேசியா இமிக்ரெசன் (அப்படித்தான் எழுதி வச்சிருக்காங்க) அடிக்கடி விதிமுறைகளையும், நடப்புகளையும் மாற்றும், ஆகஸ்ட் 15 வரை அட்டை நிரப்பத்தேவை இல்லாமல் இருந்தது மறுபடியும் நிரப்பச் சொல்கிறார்கள். அலுவலகர்களுக்கு மாற்றி மாற்றி வேலை கொடுத்து பயிற்சி கொடுக்கிறார்கள் போல இருக்கு.

    ******

    நான் மட்டும் தனியாக சிங்கை திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் என்மகளுக்கான ஈ டிக்கெட்டில் என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள். எனது திரும்பும் பயண பயணச்சீட்டு இன்னும் அப்படியேதான் இருக்கிறது, பயன்படுத்த வேண்டுமென்றால் நான் சிங்கை - சென்னை பயணச்சீட்டு வாங்கனும், வரும் பழைய பயணச்சீட்டை பயன்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  4. நான் மட்டும் தனியாக சிங்கை திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் என்மகளுக்கான ஈ டிக்கெட்டில் என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள்//

    கண்ணன் இதை நீங்கள் முதல்முறையாக பதிவாக எழுதியபோதே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த ஒரு காரணத்திற்காகவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு கேட்கலாம். இது எத்தனை பெரிய தவறு? ஒருவருடைய அதுவும் ஒரு மைனர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் ஒரு ஆணை பயணிக்க அனுமதிப்பது என்றால்... இந்த மாதவறை பகிரங்கப்படுத்த விரும்பாமல் கணிசமான தொகையை நஷ்ட ஈடாக கொடுத்துவிடுவார்கள். என்ன செய்வீர்களா?:)

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் சார்,
    ஒத்துக்கொள்ளுகிறேன் ..இதைத் தவிர
    //இந்தியர்களின் வளர்ச்சியைக் கண்டு மலாய் மக்கள் அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் முடிவு எடுக்கப்படுகிறது என்பது மிகத்தெளிவாக தெரிந்தது. //

    இந்தியர்களின் வளர்ச்சி மலாய் காரர்கள் அஞ்சும் அளவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை .வேண்டுமானால் இந்தியர்களின் சமீபத்திய அரசியல் எழுச்சி மலாய் காரர்களுக்கு எரிச்சலை கொடுத்திருக்கலாம் ..பொருளாதார ,சமுதாய வளர்ச்சியை வைத்துப் பார்த்தால் மலாய் காரர்கள் சீனர்களின் மேல் தான் பொறாமையும் அச்சமும் கொள்ள வேண்டும் .

    பதிலளிநீக்கு
  6. ஹி ஹி ஹி. இதெல்லாம் ஜுஜுபி சார்.

    ரத்தம் கொதிப்படைய செய்யும் இந்த வார செய்தியை கேள்விபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

    தமிழ் பெண் ஒருவர் உணவகம் சென்று இருந்தார். அதிகாரிகள் அங்கே ரெய்ட் நடத்தினர். அந்த பெண்ணிற்கு தன்னுடைய IC No மறந்து விட்டது. அவருக்கு சரியாக மலாய் பாஷையும் பேச தெரியவில்லை. அதனால் அவரை கைது செய்து விட்டனர். அவர் தான் ஒரு மலேசிய பெண் என்று பல முறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்து விட்டனர். அந்த பெண் அப்போது கர்ப்பிணி. 11 மாத சிறைவாசத்திற்கு பிறகு (அவருக்கு ஒரு குழந்தையும் சிறையில் பிறந்து விட்டது) உடல் நிலை சீர்கெட்டதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே ஒரு தமிழரிடம் தன் கதையை சொல்ல அது வெளிஉலகத்திற்கு தெரிய வந்தது. அவர் மலேசியர் என்று ஒரு நாளில் உறுதி செய்யபட்டது. உடனே அவர் விடுதலை செய்யபட்டார்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜோ,

    வேண்டுமானால் இந்தியர்களின் சமீபத்திய அரசியல் எழுச்சி மலாய் காரர்களுக்கு எரிச்சலை கொடுத்திருக்கலாம் //

    இருக்கலாம். ஆனால் மலேசிய மக்கள் இந்தியர்களை குரோதத்துடன் பார்ப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகளும் அரசும்தான் இப்படி பார்க்கிறது என்று நினைக்கிறேன்.

    நான் அங்கிருந்த சமயம் மலேசிய வாழ் தமிழ் கத்தோலிக்க எழுத்தாளர்கள் கூட்டம் நடந்தது. ஒரு உறவினருடன் சென்றிருந்தேன் அங்கும் இதைப்பற்றிய வாதம் எழுந்தது. சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க அருண்மொழி,

    அவர் தான் ஒரு மலேசிய பெண் என்று பல முறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்து விட்டனர்//

    என்ன அக்கிரமம். என்னிடமும் பாஸ்போர்ட் நகல் இல்லாமல் தனியாக வெளியில் செல்லாதீர்கள் என்று என்னுடைய மருமகன் எச்சரித்திருந்ததால் அதை கையிலேயே வைத்திருந்தேன். கடந்த வருடம் ஒரு ஐ.டி. அதிகாரியையே ஐ.சி. இல்லை என்று கைது செய்த நாடுதானே.

    பதிலளிநீக்கு
  9. //கண்ணன் இதை நீங்கள் முதல்முறையாக பதிவாக எழுதியபோதே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த ஒரு காரணத்திற்காகவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு கேட்கலாம். இது எத்தனை பெரிய தவறு? ஒருவருடைய அதுவும் ஒரு மைனர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் ஒரு ஆணை பயணிக்க அனுமதிப்பது என்றால்... இந்த மாதவறை பகிரங்கப்படுத்த விரும்பாமல் கணிசமான தொகையை நஷ்ட ஈடாக கொடுத்துவிடுவார்கள். என்ன செய்வீர்களா?:)
    //

    அது சிங்கப்பூர் விமான நிறுவனம் அல்ல, இந்தியன் ஏர்லைன்ஸ் விமான டிக்கெட் தான்.

    விமான நிலைய அலுவலரின் கவனமின்மைதான் காரணம், இங்கே போய் கேட்ட போது சாரி சார், டிக்கெட்டை கொடுங்க ரீபண்ட் அனுப்புறோம் என்று சொன்னார்கள்.

    கம்ப்ளெய்ண்ட் கொடுக்கமாலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் பயண தேதியை நீட்டிப்பு செய்து வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு