11 செப்டம்பர் 2008

அரசு அலுவலகங்களின் அவலநிலை

பல வருடங்கள் கழித்து ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று காத்து கிடக்க வேண்டிய அவலநிலை எனக்கு நேற்று எனக்கு ஏற்பட்டது.

சமீப காலமாக அரசு மான்யத்துடன் வினியோகிக்கப்படும் எரிவாயு குப்பிகள் குடும்ப அடையாள அட்டை (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் எரிவாயு நிறுவனங்கள் தீவிரமாகியுள்ளனவாம். ஆகவே இரு நாட்களுக்கு முன்பு refill எரிவாயு குப்பி ஒன்றிற்கு பதிவு செய்ய தொலைபேசி செய்தபோது 'உங்களுடைய குடும்ப அட்டையுடன் வந்து பதிவு செய்தால் மட்டுமே குப்பி வழங்கப்படும்' என்றனர்.

நான் கேரளத்திலிருந்து மாற்றலாகி வந்தபோது அங்கு இருந்த குடும்ப அட்டையை சரண்டர் செய்து சான்றிதழ் பெற்றிருந்தாலும் அதை சென்னை உணவுப்பொருள் வழங்கு கழக (சிவில் சப்ளை கார்ப்பரேஷன் - சி.ச.கா) அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டையை பெற பலமுறை முயன்றும் முடியவில்லை. என்ன காரணம் என்கிறீர்களா? எல்லாம் நம்முடைய வள்ளல் முதல்வர் அறிவித்த இலவச எரிவாயு அடுப்பு திட்டம்தான். அடுப்பு கிடைத்ததும் அடுத்த வேலை எரிவாயு இணைப்புதானே. கடந்த சில மாதங்களாக சென்னையிலுள்ள சி.ச.காபே அலுவலகங்களில் இத்தகையோரின் கூட்டம்தான். அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சூழல். எந்த ஒரு உணவுப் பொருளும் தேவையில்லை என்று கருதும் என்னைப் போன்றவர்களுக்கு தனியாக ஒரு வரிசை வைத்திருந்தால் எப்போதோ புதிய குடும்ப அட்டையைப் பெற்றிருக்க முடியும். அலுவலக நுழைவாயிலுக்குள் கூட புக முடியாத அளவுக்கு கூட்டம் அடைத்துக்கொண்டு நிற்பதை பார்த்துவிட்டு வெறுத்துப்போய் திரும்பிய நாட்கள் பல உண்டு.

ஆனாலும் இம்முறை எரிவாயு வினியோகி மிகவும் பிடிவாதமாக குடும்ப அட்டையோ அல்லது அதற்கு விண்ணப்பித்ததற்கான சான்றை சமர்ப்பிக்காவிட்டால் எரிவாயு குப்பி கிடைக்காது சார் என்று கையை விரித்துவிட வேறு வழியில்லாமல் சி.ச.கா அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று சென்றேன். இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. செவ்வாய் கிழமை அன்று சென்றால் கூட்டம் அதிகமாக இருக்காது என்றார் என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏனென்றால் செவ்வாய் வெறுவாயாம்! அதாவது செவ்வாய் அன்று துவங்கும் எந்த காரியமும் உருப்படாதாம்!! ஆஹா, இதுதான் நமக்கு நல்லது என்று நினைத்து செவ்வாய் அன்று செல்வதென தீர்மானித்தேன்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்த சமயம் உப்புசப்பில்லாத விஷயத்துக்கு வாதிட துவங்கி அது பெரும் விவாதமாக மாறி அலுவலகத்திலிருந்து வெளியேறியது நினைவுக்கு வர வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே நாட்காட்டியில் இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று பார்த்தேன். இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றுதான்! மகரத்திற்கு சாந்தம் என்று இருந்தது.

ஆஹா! நமக்கு தேவையான ஆலோசனைதான் என்று நினைத்துக்கொண்டேன். எந்த ஒரு சூழலிலும் நிதானத்தை இழந்துவிடலாகாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அப்படியே புறப்பட்டு சென்றிருக்கலாம். இதை என் மனைவியிடம் கூற 'சாந்தம்னா போட்டுருக்கு? உங்களுக்கும் அதுக்கும் ரொம்ப தூரமாச்சே இருங்க நானும் வரேன்' என்று ஒட்டிக்கொண்டார்.

சரி வேறுவழியில்லை என்று அவரையும் அழைத்துக்கொண்டு அரும்பாக்கம் சி.ச.கா அலுவலக வாசல்கள் திறக்கப்படுவதற்கு முன்பே சென்றடைந்தோம். என் நண்பர் கூறியதுபோலவே பத்து, பதினைந்து நுகர்வோர் மட்டுமே காத்திருந்தனர். அதில் பெரும்பாலோனோர் அலுவலக பணியாளர்கள் போல் இருந்தனர். ஆகவே இடிபடாமல் அலுவலகத்திற்குள் நுழைய முடிந்தது. வழக்கம்போலவே அலுவலக நேரம் துவங்கி அரைமணி கழிந்து பணியாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர காத்திருந்த நுகர்வோர் கூட்டம் பொறுமையிழந்து 'விசாரணை' என்ற மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தவரை மொய்க்க துவங்கியது. நான் அதில் கலக்காமல் என்ன நடக்கிறது என்று எட்ட நின்று கவனித்தேன். ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருந்ததால் காத்திருந்து என்னுடைய பணியை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். 'என்னங்க நீங்க. கூட்டத்தோடு கூட்டமா போய் நிக்காம...' என்று முனுமுனுத்த என் மனைவியை சமாதானப்படுத்தினேன். 'இவங்க இப்படி போய் மொய்க்கறது அந்தாளுக்கு பிடிக்காது. நீ வேணும்னா பார்.' என்று நான் சொல்லி முடிக்கவில்லை. எரிமலையாய் வெடித்தார் அவர். பதிலுக்கு அதிகாரி போல் உடையணிந்திருந்த ஒருவர் பொறுமையிழந்து பேச அடுத்த அரை மணி நேரத்திற்கு ஒரே களேபரம். 'நான் யார்னு தெரியாத பேசிட்டேயில்ல. எங்க போயி என்ன கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும்னு எனக்கு தெரியும்யா. நா யார்னு காமிக்கேன்.' என்றவரை அலட்சியத்துடன் பார்த்த அரசு பணியாளர் 'அதச் செய்ங்க முதல்ல.' என்று கூறிவிட்டு 'ஒவ்வொருத்தரா வந்தா அட்டெண்ட் பண்ணுவேன். இல்லன்னா இப்படியே நின்னுக்கிட்டிருக்க வேண்டியதுதான்.' என்று எரிந்துவிழுந்தார் மற்றவர்களிடம். 'பாத்தியா சொன்னேன்ல' என்றேன் மனைவியிடம் அத்துடன் அருகில் இடப்பட்டிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு 'நீயும் உக்கார். அந்தாளு இவங்கள டிஸ்போஸ் பண்ணி முடிக்கட்டும்.' என்று அவரையும் அமரச்செய்தேன்.

அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது. வந்திருந்த ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒவ்வொரு ஏச்சு. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வந்தவர்களை விரட்டியடிப்பதில் இந்த அரசு ஊழியர்களுக்கு என்னதான் ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு இளம்பெண் (கேரளத்தைச் சார்ந்தவர். மலையாளம் கலந்த தமிழில் உரையாடினார்) கையில் குழந்தையுடன் 'காஸ் ஏஜன்சியில சிலிண்டர் குடுக்காதுன்னு சொல்லிட்டாங்க சார். ரேஷன் கார்டு வேணுமாம். ஓட்டர் கார்ட் இருக்குது.' என்றார்.

'இது இருந்தா போறுமா? கேரளாவுலருந்து சரண்டர் சர்டிஃபிக்கேட் கொண்டுவா, பாக்கலாம்.' என்னுடைய மனைவி என்னைப் பார்த்தார். 'நம்மக்கிட்ட சரண்டர் சர்ட்டிஃபிக்கேட் இருக்குல்ல. அப்ப நமக்கு பிரச்சினை இருக்காது.'

'அதெப்படி சார் அது எங்கப்பா பேர்லல்ல இருக்குது.' என்றார் அந்த இளம்பெண்.

'அதுல உன் பேர் இருக்கும்ல அத டெலிட் பண்ணி ஒரு சர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வா பாக்கலாம்.'

'அதுக்கு ரொம்ப நாள் ஆவுமே சார். அதுவரைக்கு சிலிண்டருக்கு என்ன பண்றது?'

எரிந்து விழுந்தார் அரசு பணியாளர். 'அத இங்க வந்து சொல்லாத. சொல்ல வேண்டிய எடத்துல போயி சொல்லு. இப்ப என் டைம வேஸ்ட் பண்ணாத போ.'

அந்த பெண் இதை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது வசதியான வீட்டிலிருந்த வந்ததைப் போன்ற தோற்றம். கண்கள் கலங்கிப்போக குழுமியிருந்தவர்களை பரிதாபமாக பார்த்தது அந்த பெண். அனைவருமே திருப்பி பரிதாபமாக பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய இயலாமல்..

'சாந்தம்' என்ற எச்சரிக்கையை மட்டும் படிக்காமல் வந்திருந்தால் நிச்சயம் அதை இழந்திருப்பேன். என் முகம் போன போக்கை கவனித்த என்ன்னுடைய மனைவி என்னுடைய கைகளை பிடித்து அழுத்தினார். 'பொறுமையாயிருங்க. நாம வந்த வேலைய மட்டும் பார்ப்போம்.'

வரிசையில் நின்றிருந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையுமே இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வெற்றிகரமாக விரட்டியடித்தார். வரிசை இரண்டு மூன்று பேராக குறைய என் மனைவி எழுந்து நின்றார். 'வாங்க. என்னதான் சொல்றார்னு பார்ப்போம்.'

முந்தைய நாளே சி.ச.கா
வலைத்தளத்திற்கு சென்று புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சென்றிருந்தேன். ஆனால் அதை ஏறெடுத்தும் பாராமல். 'சார் இந்த ஃபார்ம்லாம் போறாது. பக்கத்து ஜெராக்ஸ் கடையில விப்பாங்க. அத ஃபில் அப் பண்ணி ஒங்க ஃபோட்டோ ஒட்டி கொண்டாங்க.' என்றார்.

'சாந்தம், சாந்தம்' என்றார் என் மனைவி முனுமுனுத்தார். பதில் பேசாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறி இரண்டு கடைகள் தள்ளியிருந்த டீக்கடை மற்றும் ஜெராக்ஸ் கடைக்கு சென்றேன். என்னைப் பார்த்ததுமே 'என்ன சார் ரேஷன் கார்ட் அப்ளிகேஷனா. மூனு ரூபா.' என்றார். வாங்கி பார்த்தேன். என் கையிலிருந்த அதே படிவம்தான். 'சரி வாங்குங்க. என்ன பண்றது?' என்றார் என் மனைவி. நான் விடாமல் 'ஏங்க ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு ஒரு ரூபாதான் அதென்ன இந்த ஃபார்முக்கு மூனு ரூபா வாங்கறீங்க?' என்றேன். 'இவருக்கு ஒரு ரூபாதான் சார். மீதி ரேஷன் ஆஃபீஸ் ஸ்டாஃபுக்கு' என்றார் டீ அருந்திக்கொண்டிருந்த ஒருவர் ஏளனமாக.

'சார் ஃபோட்டோ ஒட்டறதுக்கு கம் வேணுமா?' என்றார் கடையில் நின்ற சிறுவன் புன்னகையுடன். 'சின்ன கம் பாட்டில் இருக்கு ஒரு ரூபாதான்.' இது அங்கு தினசரி வாடிக்கை போலிருந்தது.

கையிலிருந்த படிவத்தில் ஒட்டியிருந்த என்னுடைய புகைப்படத்தை எரிச்சலுடன் பிய்த்து எடுத்து புது படிவத்தில் ஒட்டி நான் கொண்டு வந்திருந்த படிவத்தில் நிரப்பியிருந்த தகவல்களையே மீண்டும் பூர்த்தி செய்து மீண்டும் அலுவலகம் நுழைந்து அதற்குள் குழுமியிருந்த நுகர்வோர் வரிசையில் நின்று சமர்ப்பிக்க. 'ஓட்டர் ஐடி கார்ட் இல்லையே.' என்றார். நான் நிதானமிழந்து 'டெலிஃபோன் பில் காப்பி இருந்தா போறும்னு அந்த ஃபார்ம்லயே இருக்கே.' என்றேன். 'அதுக்கு ஏன் சார் இந்த கத்து கத்தறீங்க?' என்றவர் 'சரி சரி அந்த கவுண்டர்ல போயி குடுத்து அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிக்கிருங்க.' என்றவாரு அலட்சியத்துடன் என்னிடமே அதை திருப்பித்தர எங்கே நான் பதிலுக்கு பேசிவிடுவேனோ என்று பயந்து என்னுடைய மனைவி என்னை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த கவுண்டருக்கு முன்னால் சுமார் இருபது பேர் அடங்கிய வரிசை.நிற்க கவுண்டரை அடைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆனது.

என்னுடைய மனைவியை வரிசையில் நிற்க வைத்துவிட்டு அந்த அலுவலகத்தை மெள்ள வலம் வந்தேன்.

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழக முதல்வரின் அலுவலக அவலத்தை நினைவுபடுத்தியது அந்த அலுவலகம். முப்பதாண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட காலம்! ஆனாலும் அன்று நான் கணட அதே அவலம் இப்போதும் நீடித்திருந்தது.

நிலத்தில் சமமாக நிற்க முடியாத மேசை, நாற்காலிகள். விசாரணை அதிகாரியின் மேசையின் ஒரு காலுக்கு கீழே நான்கைந்து கற்கள் முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு குமாஸ்தாவின் இருக்கை சீட்டில் வலைப்பின்னல் சுத்தமாக கிழிந்து போயிருந்தது. அதன் மீது ஒரு மரப்பலகையை வைத்து அமர்ந்திருந்தார்! கவுண்டர்கள் என்ற பெயரில் அங்கங்கே ஓட்டைகளுடன் ஒரு பழைய காலத்து மரத்தடுப்பு. அதற்கு பின்னால் சாய்மானம் இல்லாத இருக்கைகள். எத்தனை நேரம்தான் இவர்களால் பின்னால் சாய்ந்து அமராமல் இருக்கமுடியும் என்று நினைத்தேன். பெண் குமாஸ்தாக்கள் எளிதில் ஏறி அமரமுடியாமல் இருந்தது அந்த இருக்கைகள். எங்கும் கணினிமயம் என்ற இந்த யுகத்தில் ஒரு கணினி கூட இருக்கவில்லை. குமாஸ்தாக்கள் அமர்ந்திருந்த இருக்கைகளைச் சுற்றிலும் தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள், புத்தகங்கள்.. எங்கும் எதிலும் ஒரே தூசி மயம். ஹைதர்காலத்து மின் விசிறிகள் மெதுவாக சுழல காத்திருந்த நுகர்வோர் தங்கள் கைகளிலிருந்து விண்ணப்பங்களை விசிறிக்கொண்டிருந்தனர். அப்படியிருக்க சுமார் பத்து மணி நேரம் அலுவகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை!

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது இப்படிப்பட்ட அவலநிலையில் பணியாற்றும் ஊழியர்களின் மனநிலை வேறெப்படி இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றியது.

மின்சாரமே இல்லாத இல்லங்களுக்கு வண்ணத் தொலைகாட்சி பெட்டி என்று கோடிக்கணக்கில் விரயம் செய்யும் இந்த் அரசு தன்னுடைய ஊழியர்களுடைய நலனில் அக்கறை காட்டாதிருப்பது ஏனோ?

*****

5 கருத்துகள்:

  1. ஜோசப் ஐயா,

    நீண்ட நாள் சென்று உங்கள் ஆ'தங்க' பதிவு.

    அரசு துறையில் பணியாற்றும் உங்களுக்கே இந்த அசுர ஊழியர்களை எதிர் நோக்க 'சாந்தம்' தேவைப்படுது, சாதாரண பொதுமக்கள் பொறுமை இழப்பது இயல்பு தானே.

    'கடமைக்கு' செய்தால் கூட பரவாயில்லை. அதையும் செய்வது இல்லையே என்ற ஆதங்கப்படத்தான் வேண்டி இருக்கு.

    அவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. நிலமை மாறும் என்ற நம்பிக்கையும் கொள்ள முடியாது. கலைஞர் அரசாக இருந்தாலும் சரி ஜெ அரசாக இருந்தாலும் சரி. இவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இருக்கும் வரை இவர்களை திருத்துவது முடியாது.

    *****
    நானும் மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. நேத்துதான் ரேஷன்கார்டுக்கு வழி செஞ்சுக்கணுமுன்னு நம்ம ரத்னேஷ் சீனியர்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். உங்க பதிவு படிச்சப்பிறகு.....

    இந்தியாவுக்குத் திரும்பி வரும் எண்ணத்தை மறுபரிசீலனை செஞ்சுக்கணும்.

    வேலியில் போற ஓணான் நினைவுக்கு வருதே.....

    பதிலளிநீக்கு
  3. வாங்க கண்ணன்,

    அரசு துறையில் பணியாற்றும் உங்களுக்கே...//

    அரசு துறையில் இருந்தால் இப்படியொரு பதிவு எழுத முடியுமா? என்னுடைய வங்கி தனியார் வங்கி. ஆகவேதான் அந்த அலுவலகத்தைக் கண்டதுமே இப்படியொரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்திலுள்ள - அது அரசு துறையாயினும் தனியார் துறையாயினும் - ஊழியர்களின் சேவை தரமுள்ளதாக இருக்க வேண்டுமெனில் அலுவலகத்தில் நல்ல ஆரோக்கியமான, வசதியான சூழலை உருவாக்கித்தர வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு. ஏ.சி சொகுசுடன் பணியாற்றும் வங்கி ஊழியர்களே பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொள்ளும்போது அமர்வதற்கும் கூட சரியான இருக்கை அளிக்கப்படாத நிலையில் அரசு ஊழியர்களுடைய அவல நிலையை எண்ணிப்பார்க்கத்தான் வேண்டும்.

    நானும் மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.//

    அப்படியா? என்னுடைய யோசனைக்கு பெருவாரியான எதிர்ப்பு இருந்ததால் நானும் மட்டுறுத்தலை மீண்டும் அறிமுகப்படுத்தியிருந்தேன். இனி நீக்க வேண்டியதுதான். எப்போதாவது எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுறுத்தல் தேவையில்லை என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி,

    இந்தியாவுக்குத் திரும்பி வரும் எண்ணத்தை மறுபரிசீலனை செஞ்சுக்கணும்.

    அப்படியொரு யோசனை இருக்கா என்ன? கடந்த இருபதாண்டுகளில் நாம் எத்தனையோ துறையில் முன்னேறியிருப்பது உண்மைதான். ஆனால் அரசு அலுவலர்கள் இன்னும் க்டந்த நூற்றாண்டில்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9:03 PM

    Excellent post joseph sir..En voottukaramma kooda ooruku poi settle aagalam nu romba naala nacharachittu irunthaa!! oru murai leave ku vantha pothu ippadi oru govt. office'la 3-4 hrs spend panna veichaen.. avlo thaan ippo kadantha irandu varudangalaaaga antha paechaiyae edukrathilla !!! vaalga namma oor govt office.. valarga govt. officer's pugazh

    பதிலளிநீக்கு