09 ஜூன் 2008

என்ன செய்யப் போகிறார் மு.க?

தங்களுக்கு நான் 10.மே.2006 அன்று எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி இது.


இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன...

இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்களும் உங்களுடைய அரசும் பலவற்றை சாதித்துள்ளன, மறுக்கவில்லை..

அவற்றுள் என்னுடைய கடிதத்தில் நான் பட்டியலிட்டு காட்டியிருந்த பல வேண்டுகோள்களில் கீழ் காணும் மூன்றும் அடங்கும்.

1. ரூ.2/க்கு ஒரு கிலோ அரிசி.

2. முந்தைய அரசு பணிநீக்கம் செய்த சாலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை.

3. வறுமை கோட்டுக்குக் கீழே ?! உள்ளவர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி மற்றும் காஸ் அடுப்பு இத்யாதிகள்

ஆனால் அதிலும் பல குறைகள், ஊழல், கட்சித் தொண்டர்களுக்கு முன்னுரிமை, ரேஷன் அரிசி கடத்தல் என பல குற்றச்சாட்டுக்கள். குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில்... ரேஷன் கடைகளில் எடை குறைவு, கையிருப்பு இல்லாமை என தொடரும் குறைபாடுகள்.

இன்னுமொரு நிறைவேற்றப்பட்ட வேண்டுகோள். முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவருடைய தோழி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

மற்றபடி என்னுடைய கடிதத்தில் நான் முன்வைத்த எந்த கோரிக்கைகளையுமே நீங்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் வேதனை..

1. முடிவெடுக்கும் திறன்.

நாளுக்கு நாள் அது மோசமாகிக்கொண்டேதான் செல்கிறது. நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிலாவது தெளிவாக முடிவெடுத்துள்ளீர்களா என்று தேடினால்... அது சேது சமுத்திர திட்டமானாலும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமானாலும், மணல் குவாரி, கல்லூரி கட்டண உயர்வு, என எந்த பிரச்சினையிலும் உங்களுடைய தடுமாற்றம் தெளிவாக தெரிகிறது.

2. வாரிசுகளுக்கு முன்னுரிமை

உங்களுடைய ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் இது உங்களுடைய வாரிசுகள் பொற்காலம் என்றால் மிகையாகாது. நீங்கள் இதுவரை முதல்வராக இருந்த எந்த காலத்திலும் உங்களுடைய குடும்பத்தினருக்கு அரசு விழாக்களில் மேடையில் இடம் அளித்ததில்லை. ஆனால் இப்போதோ.. ஒருவர் ஒரு விழா மேடையில் இருக்கை என்றால் மற்றவருக்கு இன்னொரு விழா மேடையில் இருக்கை. இது உங்களுடைய தனிப்பட்ட, குடும்பம் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.

மு.க அழகிரி விஷயத்தில் நீங்கள் எடுத்த பல முடிவுகள் கட்சியினர் மத்தியில் பல சங்கடங்களை விளைவித்துள்ளதை நீங்கள் உணர்கிறீர்களா என்று தெரியவில்லை. அவருக்கு சாதகமாக, அல்லது அவருடைய அறிவுரையை நீங்கள் ஏற்பது, தயாநிதி மாறன் விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு, அதை மாற்றி அமைத்து அவர் எதிரணியினருடன் இணைந்துவிடாமல் இருக்க ஸ்டாலின் எடுத்த பல முயற்சிகளையும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது.... உங்களுடைய இந்த போக்கு ஸ்டாலினையே ஓரங்கட்டும் விதமாக அமைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இளையவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மூத்தவருக்கு இல்லை என்று மக்களே தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மாறன் சகோதரர்கள் மீது இன்னமும் காழ்ப்புணர்வு கொள்வது எந்த விதத்தில் அரசியல் புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி... உங்களுடைய வாரிசுகளில் ஒருவர் என்பதைத் தவிர அவருக்கு வேறென்ன தகுதியுள்ளது?

3. மதுபானக் கடைகளை அரசு ஏற்று நடத்துவது

அரசின் பணி வணிகம் செய்வதல்ல, ஆகவே அதை முழுவதுமாக தனியாரிடம் விட்டுவிடுங்கள் என்ற கோரிக்கை வைத்திருந்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் சில வணிகங்களை அரசே ஏற்று நடத்துவதாக முடிவெடுத்துள்ளீர்கள். போதாதற்கு அரசு கேபிள் டிவி வேறு. இதே முடிவை முந்தைய அரசு எடுத்தபோது சன் டிவியின் ஆதிக்கத்தை குலைக்க எடுக்கப்படும் சதி என்றீர்கள். உங்களுடைய முடிவுக்கும் அதுதானே காரணம்? அதற்கும் கூட காத்திராமல் அதிரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று SCV Set top boxஐ மாற்றி Hathway set boxஐ வைத்ததும் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சிறிய நிறுவனமான ஹாத்வே அதிக எண்ணிக்கையிலுள்ள நுகர்வோரின் இணைப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னையிலுள்ள என்னைப் போன்ற பல நுகர்வோர் கடந்த ஒரு மாத காலமாக படும் அவஸ்தையும் உங்களுக்கெ தெரிய வாய்ப்பில்லை. எதற்கு இந்த அவசர முடிவுகள்? ஒரு கடமையுணர்வுள்ள ஒரு அரசின் செயல்பாடுகளா இவை?

4. அண்டை மாநில அரசுகளுடன் சச்சரவு

முந்தைய முதலமைச்சரின் ஆணவப் போக்கே அண்டை மாநில அரசுகளுடன் சுமுக போக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்றீர்கள். ஆனால் இப்போதும் அதே நிலைதானே? தமிழகத்தை சுற்றிலுமுள்ள எந்த மாநில அரசுடன் சுமுக உறவு உள்ளது?

5. இறுதியாக கூட்டணி கட்சியினரிடையில் ஒற்றுமையில்லாமை

பாமக தலைவரை விட்டுவிடுங்கள். அவரை யாராலும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் சமீப காலமாக உங்களுடைய அரசு எடுத்த சில முடிவுகள் இடதுசாரியினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது உண்மைதானே? குறிப்பாக தனியார் கல்லூரி கட்டண உயர்வு. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் கல்லூரிகள் வசூலித்தனர் என்பதற்காக அரசே அதை உயர்த்தியுள்ளதாக நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கு இது கூட்டணி அரசு அல்ல, அரசை ஆள்வது திமுக என்கிறீர்கள். இதை உங்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட அபிமானிகள் (என்னைப் போன்றவர்கள்) நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

இந்த போக்கு நீடிக்குமானால் பா.ம.க மட்டுமல்ல தற்போது கூட்டணியிலுள்ள எந்த கட்சியும் அடுத்த தேர்தலில் உங்களுடன் இருக்கப்போவதில்லை.

காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாலே போதும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அது நிச்சயம் பகற்கனவாய்த்தான் முடியும்.

என்னுடைய முந்தைய கடிதத்தில் இறுதியாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதாவது தங்களால் உடல்ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடுமின்றி ஒரு முதல்வரை தெரிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என்பது ...

அதற்கு சரியான தருணம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்....

செய்வீர்களா?

6 கருத்துகள்:

  1. ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுதிய கடிதத்தை கலைஞர் படித்திருக்க மாட்டாரோ? :-(

    பதிலளிநீக்கு
  2. வாங்க லக்கி,

    ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுதிய கடிதத்தை கலைஞர் படித்திருக்க மாட்டாரோ? :-(//

    அதானே:-)

    படிச்சிருந்தா மட்டும் அப்படியே செஞ்சிருப்பாரா என்ன?

    பதிலளிநீக்கு
  3. மு.க ரொம்ப பிஸி .......

    உளியின் ஒசை பட வெளியீட்டுல...

    நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அடுத்த வருஷம் இந்த கடிதத்தோட தொடர்ச்சி எழுதுங்க பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  4. வாங்க அதீஷா,

    நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அடுத்த வருஷம் இந்த கடிதத்தோட தொடர்ச்சி எழுதுங்க பார்க்கலாம்//

    அதற்கு வாய்ப்பே இருக்காது என்று நினைக்கிறேன்.

    அடுத்த ஆண்டு பார்லி தேர்தலிலேயே தெரிந்துவிடும் மு.க. அவர்களின் எதிர்காலம்.

    பதிலளிநீக்கு
  5. டி.பி.ஆர் said... "அடுத்த ஆண்டு பார்லி தேர்தலிலேயே தெரிந்துவிடும் மு.க. அவர்களின் எதிர்காலம்."

    தேர்தலில் ஏற்படும் வெற்றி,தோல்விகள்கலைஞரின் எதிர்காலத்தைநிர்ணயிப்பதில்லை. வயதாகிவிட்டதால் அவரது உடல்நிலை வேண்டுமானால் அதனைதீர்மானிக்கலாம்.

    தற்குறிகளுக்கு கூட தெரியும் கலைஞரது பொதுவாழ்க்கையின் நெடிய போராட்டம் உங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் போனது ஏனோ.

    மண்டையில் நவரத்னா கூல் தைலம் வாங்கி தேயுங்க.

    உங்க எதிர்காலம் கொஞ்ச காலத்துக்கு வெளிச்சமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ஹலோ ஒரிஜினல் மனிதன் முதல்ல நாகரீகமா எழுத தெரிஞ்சிக்குங்க. நீங்களும் ஒங்க பாஷையும்.

    நான் சொல்ல வந்தது கலைஞரின் முதலமைச்சர் பதவியை. அவருடைய நெடிய பொது வாழ்க்கையை உங்களை விடவும் நன்கு அறிந்தவன் நான்.

    பதிலளிநீக்கு