15 May 2008

இது அமைச்சர் பூங்கோதைக்கு வக்காலத்து அல்ல!

தமிழக அமைச்சர்களுள் ஒருவரான திருமதி பூங்கோதை அவர்களுடைய தொலைபேசி உரையாடலில் உறவினர் ஒருவருக்காக சிபாரிசு செய்யப் போக அது அவருடைய பதவியையே பறித்தது செய்தி!

ஆனால் இந்த தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டு பூங்கோதை அவர்கள் தன்னுடைய அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று சுப்பிரயமண்யம் சுவாமி என்ற அரசியல் அயோக்கியர் கூப்பாடு போடுவதும் ஊழல் பேர்வழிகளான ஜெயலலிதாவும் அவருடைய முன்னாள் அமைச்சரவை சகாக்கள் ஒத்து ஊதுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

இதற்கு பதிலளித்து மு.க அவர்கள் ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத அக்கிரமம் நடந்துவிட்டதுபோல் அவமானம், அவமானம் என்று அங்கலாய்ப்பது அதைவிட வேடிக்கை.

இதன் பொருள் என்ன?

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எவருமே இத்தகைய சிபாரிசை அல்லது வேண்டுகோளை செய்யவில்லை என்றா?

அல்லது இப்படி கையும் களவுமாக பிடிபடவில்லை என்றா?

பூங்கோதை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதை மட்டும்தான் இது காட்டுகிறது.

இல்லையென்றால் அவசரப்பட்டு இது என்னுடைய குரல்தான் என்று ஒத்துக்கொள்வாரா?

நாட்டின் மிக உயர்ந்த உச்ச நீதி மன்றத்திலேயே தன் கையொப்பத்தை போலி என்று ஒரு முன்னாள் முதலமைச்சர் வாதிட்டதைப் போல அவரும் இது என்னுடைய குரல் அல்ல, மிமிக்ரி என்று வாதிட்டிருக்கலாம்.

அல்லது தன்னுடைய வாரிசுகளுடைய நிறுவனங்களில் பணிபுரியும் கோடானுகோடி ஊழியர்களுடைய நலனுக்காகத்தான் அந்த நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்தேன் என்ற மத்திய அமைச்சர் ஒருவர் சமீபத்தில் சமாளித்ததுபோல சமாளித்திருக்கலாம்.

அது வாரிசு இது உறவு அவ்வளவுதான் வித்தியாசம்!

என்னக் கேட்டால் பூங்கோதை செய்த விஷயம் ஒரு பெரிய விஷயமே அல்ல. நானும் என்னுடைய நண்பர்களுக்காக என்னுடைய வங்கியிலுள்ள விஜிலன்ஸ் அதிகாரிக்கு பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.

அதாவது என்னுடைய நண்பர் தவறிழைக்கவில்லை என்று நான் கருதும் சந்தர்ப்பத்தில், விசாரனை முடிவடைவதற்கு முன்பு, என்னுடைய கருத்தை விசாரணை அதிகாரியிடம் கூறுவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

பூங்கோதையின் உறவினர் கையூட்டு பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார் என்பது உண்மையானாலும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவரும் வேளையில் விசரணை முடிவையே மாற்றியமைக்க வேண்டும் என்று பூங்கோதை பரிந்துரைத்திருந்தால் அது அயோக்கியத்தனம், பதவி துஷ்பிரயோகம், என்றெல்லாம் வாதிடலாம்.

ஆனாலும் அதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். அது சுப்பிரமண்யம் சுவாமிக்கோ, அல்லது இன்று சட்டமன்றத்தில் கூப்பாடுபோடும் எதிர்கட்ட்சிகளுக்கோ அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்த கூத்தாடி நடிகருக்கோ எவ்வித அருகதையும் இல்லை.

பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்ற யேசுபிரானின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன!

*******

9 comments:

G.Ragavan said...

நீங்கள் சொல்வது போலப் பூங்கோதை நல்லவர் போலத்தான் தெரிகிறது.

என்னுடைய குரல் மாதிரியே இல்லைன்னு சொல்லியிருக்கலாம். அதென்ன தாந்தான்னு ஒத்துக்கிறது. இப்பிடியெல்லாம் இருந்தா அரசியல்ல இருக்க முடியாதும்மா... நீங்க நல்லவங்க்களா இல்லையான்னு தெரியாது. ஆனா நீங்க உங்க குரல்தான் ஒத்துக்கிட்டதுல இருந்து நீங்க ஏதோ உப்புப்புளி மொளகாய்க்குச் சிபாரிசு செஞ்சிருப்பீங்க போலத் தெரியுது.

சந்தோஷ் = Santhosh said...

அதென்ன சார், யாரையாவது தப்பு சொன்னா அவன் செய்யலையா இவன் செய்யலையான்னு ஒரு பம்மாத்து பேச்சு? அப்ப எவனாவது ஒருத்தன் கொலை செய்துவிட்டு அவன் செய்யலையா இவன் செய்யலையான்னு வாதிட்டா அவனை விட்டுடுவிங்களா?

//அதாவது என்னுடைய நண்பர் தவறிழைக்கவில்லை என்று நான் கருதும் சந்தர்ப்பத்தில், விசாரனை முடிவடைவதற்கு முன்பு, என்னுடைய கருத்தை விசாரணை அதிகாரியிடம் கூறுவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.//

இப்படி prejudge செய்ய நீங்க யாரு சார், தவறே செய்து இருந்தாலும் சொந்த பந்தம், நண்பர்கள் என்று வந்தால் அவர்களின் செய்கை நமக்கு சரியாகத்தான் படும் அது தான் மனித இயல்பு.. நீங்களே இப்படி முடிவு செய்து நண்பர்களுக்காக பரிந்துரை செய்தால் விஜிலன்ஸ், போலீஸ் எல்லாம் எதுக்கு.. infact இது போன்ற செய்கைகள் அவர்களின் பணிக்கு இடையூறு செய்வது போலாகும்.. உங்கள் நண்பர் செய்தது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர் விசாரணையை எதிர்கொண்டு நிரூபிப்பது தானே நியாயம்?

டி.பி.ஆர் said...

வாங்க ராகவன்,

நீங்கள் சொல்வது போலப் பூங்கோதை நல்லவர் போலத்தான் தெரிகிறது. //

அவர் நல்லவரோ இல்லையோ அவர் செய்தது அத்தனை மகாபாதகம் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

டி.பி.ஆர் said...

வாங்க சந்தோஷ,

நீங்கள் என்னுடைய வாதத்தை தவறாக எடுத்துக்கொண்டீர்கள் என்று கருதுகிறேன்.

ஒருவருடைய விசாரனைக்கும் முன்பே அவர் தவறு செய்தவர் என்பது தீர்ப்பிடுவதும் அவருக்கு பரிந்துரைத்ததற்காக ஒருவரை குற்றம் சாட்டுவதும்தான் தவறு என்கிறேன்.

கையும் களவுமாக பிடிபட்ட எத்தனையோ பேர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மறந்துவிடலாகாது.

நான் என்னுடைய கருத்தை விசாரனை அதிகாரியிடம் கூறுவதில் என்ன தவறு? விசாரனையே வேண்டாம் என்றோ அல்லது விசாரனை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் என்று பரிந்துரைப்பதுதான் தவறு.

பூங்கோதை அதை செய்யவில்லை என்றுதான் வாதிடுகிறேன். அதற்காக ஏதோ பெரிய அவமானம் அல்லது இழுக்கு என்பதுபோல் கூப்பாடுபோடுவது வேஷம் என்கிறேன்.

அதற்காகவே அவர் ராஜிநாமா செய்ய தேவையில்லை என்கிறேன்.

We The People said...

//இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எவருமே இத்தகைய சிபாரிசை அல்லது வேண்டுகோளை செய்யவில்லை என்றா?//

அட வெளிய தெரியாம செய்ய தெரியவில்லையே அதனால் அவர் அரசியலுக்கு உகந்தவரல்ல என்று சொல்லவராங்க போல...

ஆலடியின் மகளாய் இருந்தும், அரசியல் பரம்பரிய இருந்தும், இது என் குரல்தான், மறுத்துச்சொல்லமாட்டேன் சொன்னதை கேட்டபோது சந்தோஷமே! தான் செய்ததை ஒத்துக்கொள்கிறாரே என்று! ஆனாலும் தன் பதவியை தவறாக பயன்படுத்தியது சரியல்ல அதனால் அவர் பதிவியைவிட்டு அனுப்படவேண்டியவரே!

இதை சொல்லவும், பதிவியை பறிக்கவும் தகுதியற்றவர்கள் தான் சுற்றியுள்ளவர்கள் என்பதில் ஐயமும் இல்லை! ஆனால் பொதுமக்களில் ஒருவனாக நான் சொல்கிறேன் இதுபோன்றவர்கள் பதவியில் இருப்பது சரியல்ல!!

We The People said...

//நான் என்னுடைய கருத்தை விசாரனை அதிகாரியிடம் கூறுவதில் என்ன தவறு? விசாரனையே வேண்டாம் என்றோ அல்லது விசாரனை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் என்று பரிந்துரைப்பதுதான் தவறு.//

ஏங்க நீங்க முழு உரையாடலை கேட்கவில்லையா?? அவர் என்ன சொன்னார் என்றால்: விஜிலன்ஸ் அதிகாரியிடம்: " நீங்க விசாரணையை மின்சார வாரியத்துக்கு தள்ளிவிடுங்க, அங்கே இந்த கேஸை நான் பார்த்துக்கொள்கிறேன்!" அப்படி என்றால் அடுத்து இந்த அம்ம மின்சாரவாரியத்தலைவரிடமும் இதே கேஸை பற்றி பறிந்துரைத்திருப்பார்கள்!! மற்றவர்களும் செய்யறாங்க! இவரும் செய்யட்டுமே என்று எடுத்துக்கொள்வதால் தான் இன்று அனைவரும் அரசியலுக்கு வந்து ஊழல் செய்து கோடீஸ்வரர்களாக இருக்காங்க! இன்னும் ஒன்று விசாரணை முடியவில்லை என்ற வாதம் சுத்த காமெடி! ஏன் என்றால் இவரும் தான் தான் பேசியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்! அவருடைய சொந்தக்காரரும் கையும் களவுமாவே மாட்டியிருக்கிறார் (Trap) அதனால் இருவரும் தவறு செய்தவர்களே, தங்கள் பதவியை தவறாக பயம்படுத்தியவர்களே! அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவரே! சின்ன கொள்ளைக்காரன், பெரிய கொள்ளைக்காரனுக்கும் வித்தியாசம் இல்லை! சந்தர்ப்பம் கிடைத்தால் சின்ன கொள்ளைக்காரன் நாள் மகா கொள்ளைக்காரன் ஆவான்!!

டி.பி.ஆர் said...

அட வெளிய தெரியாம செய்ய தெரியவில்லையே அதனால் அவர் அரசியலுக்கு உகந்தவரல்ல என்று சொல்லவராங்க போல...//

இதுதான் உண்மை.

ஆனால் பொதுமக்களில் ஒருவனாக நான் சொல்கிறேன் இதுபோன்றவர்கள் பதவியில் இருப்பது சரியல்ல!!//

'இதுபோன்றவர்கள்' என்பதே ஒரு 'ரிலேட்டிவ் வாதம்.' அதாவது 'இதுபோன்ற' குணம் இல்லாதவர்கள் மகாத்மாவாக மட்டுமே இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் நீங்கள் மேலே சொன்னதுபோன்று 'வெளியில் தெரியாமல்' செய்யும் வேடதாரிகளாக மட்டுமே இருக்க முடியும்.

டி.பி.ஆர் said...

ஏன் என்றால் இவரும் தான் தான் பேசியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்! அவருடைய சொந்தக்காரரும் கையும் களவுமாவே மாட்டியிருக்கிறார் (Trap) அதனால் இருவரும் தவறு செய்தவர்களே, தங்கள் பதவியை தவறாக பயம்படுத்தியவர்களே! அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவரே! சின்ன கொள்ளைக்காரன், பெரிய கொள்ளைக்காரனுக்கும் வித்தியாசம் இல்லை! சந்தர்ப்பம் கிடைத்தால் சின்ன கொள்ளைக்காரன் நாள் மகா கொள்ளைக்காரன் ஆவான்!!//

சரியான வாதம். ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஒத்துவரும் என்பதுதான் கேள்வி.

தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதிலிருந்தே அவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பது புரிகிறது. இதையே அடிப்படையாக வைத்துக்கொண்டால் நாட்டிலுள்ள அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டியிருக்கும். ஏன் உலகிலுள்ள அனைவருமேதான். அமெரிக்க ரஷ்ய அதிபர்கள் உட்பட!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இந்த மாதிரி ஒத்துக்கொள்பவர்கள் அரசியலில் அபூர்வம். வேறென்னத்த சொல்ல? விஞஞானப்பூர்வமாக ஊழல் செய்த கட்சியைக் கேவலப்படுத்திவிட்டார் =))))