28 மார்ச் 2008

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கிய பல பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்று திவாலாவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிரச்சினை அமெரிக்க பொருளாதாரத்தையே பாதித்துள்ளது எனவும் கூறலாம்.

ஏன் இந்த நிலமை?

நம்முடைய நாட்டில் ஒரு வங்கி வழங்கியுள்ள வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாகிவிடும் பட்சத்தில் அதன் விளைவாக ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்ட வங்கி மட்டுமே ஏற்கவேண்டியிருக்கும். அதன் விளைவாக அந்த வங்கியில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள், சேமிப்பை இட்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் மறைமுகமாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

ஆனால் அமெரிக்கா மற்றும் பல மேலை நாடுகளில் இத்தகைய கடன்களை செக்யூரிட்டைசேஷன் (Securitisation) என்ற முறையில் விற்றுவிட முடிவதால் கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்படும்போது கடன் வழங்கிய வங்கி/நிதி நிறுவனம் மட்டுமல்லாமல் அதை வாங்கிய அனைத்து நிறுவனங்கள்/முதலீட்டாளர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

செக்யூரிட்டைசேஷன் என்றால் என்ன?

ஒரு வங்கி ரூ.10 லட்சம் வீதம் நூறு வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கியுள்ளது என வைத்துக்கொள்வோம். மொத்த கடன் தொகை ரூ.10 கோடி. சாதாரணமாக வீட்டுக்கடனுக்கு ஈடாக வாடிக்கையாளர் வாங்கிய வீடு அடகு வைக்கப்படும். அந்த வீட்டின் மதிப்பில் 75 முதல் 80 விழுக்காடு வரையிலுமே வங்கிகள் கடன் வழங்குவதுண்டு. ஆகவே ரூ.10 கோடி வீட்டுக் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்தின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி. அதாவது வழங்கப்பட்ட மொத்த கடன் தொகைக்கும் மேல் சொத்து அடகு வைக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

இந்த கடன்களை வழங்கியுள்ள வங்கி மேலும், மேலும் இத்தகைய கடன்களை வழங்க வேண்டுமென்றால் ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை மட்டுமே சார்ந்திருக்க முடியும். உதாரணத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ.10 கோடி கடனில் மாதா மாதம் ரூ.50 லட்சம் வசூலித்தால் அதை மீண்டும் வேறு வாடிக்கையாளர்களுக்கு கடனாக வழங்க பயன்படுத்த முடியும். ஆனால் நாளடைவில் வழங்கிய கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடன்களாகிவிடும் சூழலில் வங்கி மேற்கொண்டு கடன் ஏதும் வழங்க முடியாமல் முடங்கிப் போய்விடும்.

ஆகவே ரூ.10 கோடி கடனையும் அதற்கெனவே இயங்கிவரும் பெரிய வங்கி/நிதி நிறுவனங்களுக்கு விற்று விட முயற்சி செய்யும். விற்பவர் Mortgage Originator என்றும் வாங்குபவர் Aggregator என்று அழைக்கப்படுவர். இந்த முறையில் With Recourse, Without recourse என்ற இருவகை வழிகள் உள்ளன.

With Recourse முறையில் கடன்களை வாங்கும் வங்கி (Aggregator) அந்த கடன்களை விற்ற வங்கியின் (Mortgage Originator) வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க முடியாமல் போன தொகையை கடனை விற்ற வங்கியிடமிருந்து வசூலித்துவிட முடியும். இதன் மூலம் வாங்கியவர் இழப்பை தவிர்த்துவிடமுடியும்.

Without Recourse முறையில் வாங்கிய வங்கி இழப்பையும் சேர்த்து சந்திக்க நேரிடும்.

ஆகவே இரண்டாவது முறையில் கடனை விற்கும் வங்கி சற்று விலை குறைத்தே விற்க முடியும்.

அதாவது ரூ.10 கோடி கடனை முதல் முறையில் ரூ.9 கோடிக்கு விற்க முடியும் என்றால் இரண்டாவது முறையி. ரூ.7.50 கோடிக்கே விற்க முடியும்.

கடன்களை விற்கும் வங்கி அதன் மூலம் கிடைத்த தொகையை பயன்படுத்தி மீண்டும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியும்.

சரி. இந்த கடனை வாங்கிய வங்கியும் மொத்த கடன்களும் வசூலாகும் வரையிலும் காத்திருக்க முடியாதல்லவா?

ஆகவே Aggregator வங்கி இந்த கடன்களுடைய மொத்த மதிப்பிற்கு கடன் பத்திரங்களை (Bonds) தயாரித்து இதற்கென சந்தையில் இயங்கும் முதலீட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து முதலீட்டாளர்கள் சந்தையில் (Capital Market) விற்பனைக்கு அளிக்கும். இத்தகைய கடன் பத்திரங்களுக்கு (Mortgage Based Securities) பின்னால் மொத்த தொகைக்கு ஈடாக சொத்து அடகு வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவை சந்தையில் விலை போக வாய்ப்புள்ளது. வீட்டுக் கடன்களுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்தின் மதிப்பு சந்தையில் ஏறிக்கொண்டே போகும் என்பதால் இந்த பத்திரங்களில் முதலீடு செய்ய தனிநபர் மற்றும் முதலீடு நிறுவனங்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. அதாவது வீட்டுக் கடன்களை பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடனை சரிவர திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கும் வரை!

சாதாரணமாக வங்கிகள் வழங்கும் மொத்த கடன் தொகையில் ஐந்திலிருந்து பத்து விழுக்காடுவரை திருப்பிச் செலுத்தப்படாமல் போனாலும் அதனால் சந்தையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் பத்திரங்களுக்கு அடிப்படையாக உள்ள கடன்களை பெற்ற வாடிக்கையாளர்களுள் பலர் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களாக இருந்து அதில் பெரும்பாலோனோர் தங்களுடைய மாதத் தவணைகளை செலுத்த தவறினால் கடன் பத்திரங்களுடைய மதிப்பும் பாதிக்கப்படும்.

ஏன்?

மேற்கூறிய உதாரணத்தில் ரூ.10 கோடி கடன்களை ரூ.9 கோடிக்கு வாங்கிய வங்கி ரூ.8 கோடிக்கு கடன் பத்திரங்களை விற்பனை செய்தது என வைத்துக்கொள்வோம்.

ரூ.10 கோடி கடனை பெற்ற வாடிக்கையாளர்களுள் 50 விழுக்காடு சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள். இதில் 40 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான நிலுவை நிற்கிறது, அதாவது சுமார் ரூ.4 கோடி. இந்த தொகைக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள வீடுகள் foreclosure முறையில் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் நிச்சயம் ரூ.5 கோடி கிடைக்க வாய்ப்பில்லை. அப்போதுள்ள சந்தை நிலவரத்தில் ரூ.3 கோடி கிடைத்தாலே லாபம் என வைத்துக்கொள்வோம். ஆகவே வங்கிக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த கடன் பத்திரங்களை அவ்வப்போது மதிப்பிடும் நிறுவனம் (Rating Agencies) அறிவிக்கும். ரூ.4 கோடி கடனில் ரூ.1 கோடி இழப்பு என்றால் 25% இழப்பு என்று கணிக்கப்படும். இது சந்தையில் புழக்கத்திலுள்ள கடன் பத்திரங்களின் மொத்த மதிப்பில் 25% குறையும். அதாவது ரூ.1000 முதலீடு செய்த வாடிக்கையாளாருக்கு ரூ.250 இழப்பு! வாரக்கடன்களின் விழுக்காடு அதிகரிக்க, அதிகரிக்க பத்திரங்களின் மதிப்பு வீழ்ந்துக்கொண்டே போகும்.

அமெரிக்க சந்தையில் தற்போது புழக்கத்திலுள்ள இத்தகைய கடன் பத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் $ 7.50 பில்லியன் டாலர்களாம்! இதில் 25% இழப்பு என்றால்!! இதில் பெரிய அளவில் முதலீடு செய்து இழப்பை சந்தித்ததில் சிட்டி பேங் நிறுவனங்களும் (Citi Bank Group) அடக்கம். இதன் விளைவாக சமீபத்தில் அந்த வங்கியின் தலைவரே பதவி இழக்க நேரிட்டது.

இதில் பெருமளவு முதலீடு செய்தவர்கள் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்தான். நம்முடைய வங்கிகளில் சிலவும் இவற்றில் முதலீடு செய்து பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன என்பது உண்மை. தன்னுடைய இழப்பை ஒரேயொரு புதிய தலைமுறை வங்கி மட்டுமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இழப்பு அவர்களுடைய பங்கின் விலையையும் (Share price) பாதிக்கும் அல்லவா? இதன் விளைவு பங்கு சந்தை சரிவு. இதன் விளைவு சம்பதப்பட்ட நாட்டின் பொருளாதார பாதிப்பு.

சரி. Foreclosure என்றால் என்ன, அதன் விளைவுகள் மற்றும் அதை எப்படி தவிர்ப்பது?

அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்...

27 மார்ச் 2008

வீட்டுக்கடன் -சப் ப்ரைம் பிரச்சினைகள்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்கள். இதில் பலர் கருப்பு இணம் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களுள் இந்தியர்களும் அடக்கம்.

இவர்களுடைய வருமானம் இவர்கள் ஈட்டும் மாத ஊதியம் மட்டுமே. ஆகவே அங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணிப்பில் மிகக் குறைந்த creditworthiness உள்ளவர்கள் இவர்கள். நம்முடைய வங்கிகளும் மாத வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களை இப்படித்தான் கணிக்கிறார்கள்.

இத்தகையோர் தங்களுடைய கடன் தேவைகளுக்காக - குறிப்பாக வீட்டுக் கடன் வாங்க - நேரடியாக வங்கிகளை அணுகும் பட்சத்தில் வங்கி மேலாளர்கள் ஏதாவது ஒரு காரணம் காட்டி அதை நிராகரித்துவிட வாய்ப்புண்டு. மேலும் நம் நாட்டில் உள்ளதுபோன்று பிராஞ்ச் பேங்கிங் (Branch Banking) முறை அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வழக்கத்தில் இல்லை. அதாவது தங்களுடைய வங்கித் தேவைகளுக்காக வங்கிக் கிளைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை மிக, மிகக் குறைவு. அங்குள்ளோர் பெரும்பாலும் வலைத்தளங்கள் வழியாகவே (Internet Banking) தங்களுடைய வங்கிக் கணக்கில் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்வது வழக்கம். அப்படியே பணம் தேவைப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது ATM வசதிகள். அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க Credit மற்றும் Debit cardகள்.

ஆகவே வங்கி மேலாளர்-வாடிக்கையாளர் சந்திப்புக்கு அவசியம் இருப்பதில்லை.

எனவேதான் பெரும்பாலான சப்-ப்ரைம் எனப்படும் நடுத்தர மற்றும் மாத ஊதிய வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்களை அணுக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இடைத்தரகர்களுடைய முழுநேர அலுவலே இத்தகைய வாடிக்கையாளர்களை தங்களுடைய பேச்சுத் திறமையால் மயக்கி கடன்பெற வைப்பதுதான். இவர்கள் பரிந்துரைக்கும் வாடிக்கையாளருக்கு கடன் வழங்கப்படும் பட்சத்தில் வங்கிகளிடமிருந்தும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடமிருந்தும் வழங்கப்படும் கடன் தொகையில் ஒரு கணிசமான விழுக்காடு கமிஷன் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்பதால் வாடிக்கையாளர் சம்மதிக்கும் வரை எத்தனைமுறை வேண்டுமானாலும் அவர்களை சந்திக்க தயங்கமாட்டார்கள். (இந்த போக்கு நம்முடைய நாட்டிலும் சமீபகாலமாக பரவி வருகிறது. என்னுடைய கைத்தொலைபேசியில் இன்று வந்த குறுந்தகவல் 'நீங்கள் 9% வட்டியில் ரூ.45,000/- கடன் பெற தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். செக்யூரிட்டி, ஜாமீன் ஏதும் தேவையில்லை. மேலும் தகவலுக்கு இந்த தொலைபேசி எண்ணை சுழற்றவும். T&C Applicable!!' தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசியை அழைத்தால்தான் தெரியவரும் அவர்களுடைய விதிமுறைகள். அதாவது அவர்களுடைய 'T&C'! இத்தகைய அழைப்பு குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு சென்றிருக்கும். அதில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் விழுந்தால் வங்கியின் நோக்கம் நிறைவேறிவிடும்.)

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற ஆவல் நம் அனைவருக்கும் இருக்கும் அல்லவா? இந்த ஆவலை தூண்டிவிடுவதுதான் இடைத்தரகர்களுடைய முதல் வேலை. அதற்காக உண்மைக்கு புறம்பாக பேசவும் வாக்குறுதிகளை அள்ளி வீசவும் இவர்கள் தயங்குவதில்லை.

உதாரணத்திற்கு முன்பெல்லாம் வங்கிகளுடைய கணிப்பில் ஒருவர் கடனுக்காக மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணை (Monthly Installment) அவருடைய நிகர வருமானத்தில் (Net Pay அல்லது Take Home Pay) ஐம்பது விழுக்காடுக்கு மேல் இருக்கலாகாது. அதாவது மாதத் தவணை ரூ.100 என்றால் நிகர மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.200 ஆக இருக்க வேண்டும். சாதாரணமாக நம்முடைய நாட்டில் ஒருவர் திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை முதல் தவணை முதல் இறுதித் தவணை மாறவே மாறாது. ஒருவருக்கு வழங்கப்படும் கடன் தொகை (ரூ.10000/-) 12 விழுக்காடு வட்டியுடன் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்படவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ரூ.10000/- கடனுக்கு மூன்று வருடங்களுக்கு 12% வட்டி ரூ.3,600/-. அசலும் வட்டியும் சேர்த்து ரூ.13,600/-. இதை 36 தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதம் ரூ.380/-. இது முதல் மாதம் முதல் 36வது மாதம் வரை மாறாது. 36வது மாதம் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை மீதம் இருக்கும் பட்சத்தில் (இது பெரும்பாலும் தவணை குறிப்பிட்ட தியதிகளில் செலுத்த தவறும் பட்சத்தில் அபராத வட்டி (Penal Interest) விதிக்கப்படுவதால் வருவதுண்டு) அதை முழுவதுமாக திருப்பிச் செலுத்தி கணக்கை முடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒருவருடைய மாத வருமானம் வருடக் கணக்கில் அப்படியே இருக்க வாய்ப்பில்லை அல்லவா? வருமானம் உயர, உயர அவருடைய திருப்பிச் செலுத்தும் திறனும் (Repayment Capacity) அதிகரிக்கத்தானே செய்யும். ஆகவே சமீப காலமாக Adjustable Rate of Repayment (ARR) என்கிற முறை வங்கிகளில் பிரபலமாகி வருகிறது. இதன் அடிப்படையில் மாத வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க தவணையும் அதிகரித்துக்கொண்டே போகும். இந்த முறை சரிவர கடைபிடிக்கப்பட்டால் அல்லது இதிலுள்ள சிக்கல்கள் கடன் வழங்கப்படும் சமயத்தில் வாடிக்கையாளருக்கு முழுவதுமாக தெரிவிக்கப்பட்டால் எந்த ஒரு வாடிக்கையாளரும் பெரும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்பில்லை.

இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

எனக்கு தெரிந்த பல உறவினர், நண்பர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சப்-ப்ரைம் சிக்கலில் தங்களுடைய வீடுகளை இழந்துள்ளார்கள். ஆகவே ஒரு அமெரிக்க வாழ் இந்திய தம்பதியரைப் பற்றியே பார்ப்போம்.

கணவர் அமெரிக்க கணினி நிறுவனம் ஒன்றில் கடந்த பத்தாண்டுகளாக பணியாற்றுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சிறிய குடியிருப்பை வாங்கினார். அவருக்கு கடன் பெற உதவிய இடைத்தரகர் அவருடைய மாதத் தவணை (ARR) 'துவக்கத்தில்' மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையும் பிறகு 'சற்று கூடும்' என்றும் கூறியிருக்கிறார். துவக்க காலத்தில் செலுத்த வேண்டிய மாதத் தவணை அவருடைய நிகர வருமானத்தில் ஐம்பது விழுக்காடுக்கும் சற்று கூடுதல் என்றாலும் கணவர், மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தை என்ற சிறிய குடும்பத்திற்கு அது அத்தனை பாரமாக இருக்காது என்று நினைத்து மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல் கடனைப் பெற்று வீட்டில் குடியேறினார்.

பிறகுதான் தெரிந்தது 'துவக்கத்தில்' என்று தரகர் கூறிய காலம் இரண்டே வருடங்கள்தான் என்றும் 'சற்று கூடும்' என்றது மாதத் தவணை இரட்டிப்பாகும் என்பது. துவக்க மாதத் தவணையே அவருடைய நிகர ஊதியத்தில் சுமார் 60 விழுக்காடு என்றால் அது இரட்டிப்பானால்! கையில் கிடைக்கும் அனைத்தும் தவணை செலுத்தவே போய்விட்டது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் இனியும் எத்தனை முறை இது கூடுமோ என்று தெரியாமல் கதிகலங்கிப் போயிருக்கிறார் அவர்!!

அவருடைய கடன் விதிமுறைகளின்படி தொடர்ந்து மூன்று தவணைகள் செலுத்த முடியாமல் போனாலே அவருக்கு கடனளித்த நிறுவனம் foreclosure அறிவிக்கை அனுப்பிவிடும். அதுவரை அடைத்த தொகையையும் இழந்து, வீட்டையும் இழந்து நிற்க வேண்டிய சூழல் வராது என்று சொல்வதற்கில்லை.

இதுதான் சப்-ப்ரைம் சிக்கலில் தவிக்கும் பலருடைய சூழல்.

சரி இது எப்படி கடனளித்த நிறுவனங்களையே பாதிக்கும் அளவுக்கு இத்தனை பெரிய பிரச்சினையானது?


அடுத்த இடுகையில் பார்ப்போம்...

26 மார்ச் 2008

வீட்டுக்கடன் - பிரச்சினைகள்

அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

முதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத் தகுதியுள்ளவர்கள்! ஆங்கிலத்தில் இந்த தகுதியை creditworthiness என்கிறோம்.

இத்தகைய 'தகுதி' உள்ளவர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எளிதில் கடன் பெறமுடியும் என்பது மட்டுமல்லாமல் சலுகை வட்டி விகிதத்தில் கடன் பெறவும் முடியும். மேலும் கடனைத் திருப்பிச் செலுத்த விதிக்கப்படும் நியதிகளும் அத்தனை கடுமையானதாக இருக்காது. இவர்களுக்கென நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம்தான் prime lending rate (PLR) எனப்படுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் எல்லா வங்கிகளும் தங்களுடைய prime lending rateஐ தங்களுடைய வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிக்கையிடவேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகளுள் ஒன்று.

வங்கிகள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களையும் (அதாவது கடன் பெறுபவர்களை) அவர்களுடைய நிதி நிலைமையை ஆய்வு செய்து வகைப்படுத்துவதுண்டு. மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் No.1 என்றும் சற்றே தரம் குறைந்தவர்களை No.2, No.3 என வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களை SBI 1ல் துவங்கி SBI 10 வரை வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் PLR +1, PLR +2, 3, 4 என நிர்ணயிக்கப்படும். மிக, மிக சிறந்த வாடிக்கையாளர்களுக்கு PLR விகிதத்திற்கு கீழேயும் வழங்கப்படுவதுண்டு, அதாவது PLR -1, PLR -2. ஒரு வங்கியின் அறிவிக்கப்பட்ட PLR 12 விழுக்காடு என்றால் இவர்களுக்கு 10 அல்லது 11 விழுக்காடு (PLR-2, PLR-1) என நிர்ணயிக்கப்படும். இதை below PLR அல்லது BPLR என்பார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். ஒரு வாடிக்கையாளரின் கடன் பெறும் திறன் (creditworthiness) குறையக் குறைய அவருடைய தரம் (rating) குறைந்துக்கொண்டே போகும். அவருக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதம் கூடிக்கொண்டே போகும்.

நம்முடைய நாட்டில் PLR +5 என வட்டி விகிதம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் (உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியில் SBI 7 என்ற ரேட்டிங்குக்கு மேலுள்ளவர்கள்) கடன் பெறுவது மிகச் சிரமம். அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு விதிக்கப்படும் வட்டியும் குறைந்தபட்சம் 16 அல்லது 17% இருக்க வாய்ப்புண்டு. இத்தகையோருக்கு நீண்ட கால கடன்களும் கிடைக்க வாய்ப்பில்லை. இத்தகையோரைத்தான் அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்கிறார்கள். உதாரணத்திற்கு BPLR மற்றும் PLR விகிதத்தில் கடன் பெறுபவர் மிகச் சிறந்த அல்லது மிக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் என்றால் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களை மோசமான, மிக மோசமான, மிக மிக மோசமான என வகைப்படுத்தலாம். ஒரு வங்கியின் PLR 12 விழுக்காடு என்றால் கடைநிலை வாடிக்கையாளர் எனப்படும் மிக, மிக மோசமான வாடிக்கையாளர் சுமார் 19 - 20 விழுக்காடு வரையிலும் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் மிக, மிக சிறந்த வாடிக்கையாளர் ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை மிக, மிக மோசமான வாடிக்கையாளர் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மிக மிகச் சிறந்த வாடிக்கையாளர் எவ்வித செக்யூரிட்டி மற்றும் தனிநபர் ஜாமீன் இல்லாமல் கணிசமான தொகையை கடனாக பெற முடியுமென்றால் மிகச் சிறிய கடனுக்கும் சொத்து மற்றும் தனிநபர் ஜாமீன் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பார் சப் ப்ரைம் வாடிக்கையாளர்.

அமெரிக்காவில் இத்தகையோர் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டுமென்றால் இடைத்தரகர்கள் வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை பரவி வருகிறது. குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் எனப்படும் ICICI, AXIS, HDFC இதற்கென்றே பிரத்தியேக விற்பனையாளர்களை (Selling Agents) நியமித்துள்ளன.

அமெரிக்கா போன்ற பல மேலைநாடுகளில் வங்கிகளுக்கு நிகராக பல பெரிய நிதிநிறுவனங்களும் Retail Lending அல்லது Personal Lending எனப்படும் தனிநபர் கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளதால் இந்த நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. மேலும் வீட்டுக் கடன் வழங்குவதற்கென பல பிரத்தியேக Mortgage Loan வங்கிகள்/நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களால் நியமிக்கப்படும் இடைத்தரகர்கள் அல்லது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் பேசுவதற்கெனவே பயிற்சிபெற்றவர்களாக இருப்பார்கள்.

இன்று அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் சப்-ப்ரைம் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் இந்த இடைத்தரகர்கள்தான் என்றால் மிகையாகாது.

இதன் பின்னணியை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

தொடரும்..

10 மார்ச் 2008

விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்

'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'

இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.

விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும் தேர்தல் நெருங்கும்போது.

ஆனால் ரூ.60000/- கோடி சுமையை வங்கிகளின் தலையில் சுமத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதுவாழ்வு தர நினைப்பது அரசு. ஆகவே அதற்கு தேவையான தொகையையும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வங்கிகளை நீங்கள் வழங்கிய கடனை உங்கள் புத்தகங்களிலிருந்து ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள் என்றால் அது ஒரு பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல தோன்றுகிறது.

1980-90களில் லோன் மேளா நடத்தில சீரழிந்துப்போன வங்கிகளின் - குறிப்பாக இந்தியன் வங்கி போன்ற அரசு வங்கிகள் - முதலீட்டை மேம்படுத்த அரசே மான்யமாக ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒதுக்க வேண்டியிருந்ததை சிதம்பரம் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வாராக் கடனை எழுதி தள்ளி தங்களுடைய முழு முதலீட்டையுமே இழந்து நின்ற அரசு வங்கிகள் ஒன்று, இரண்டில்லை. க்டந்த பத்து ஆண்டுகளில் இதுவரை சுமார் ரூ.20000/- கோடிக்கு மேலாக அரசு வங்கிகளின் முதலீட்டை வலுப்படுத்த மத்திய அரசு ஒதுக்க வேண்டி வந்ததையும் சிதம்பரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருந்தும் இப்போது எழுதி தள்ளவேண்டிய ரூ.60000/- கோடி கடனை வங்கிகள் மீது சுமத்துவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்று விளங்கவில்லை.

எழுதித் தள்ளுவது என முடிவெடுத்துவிட்டு அதற்கு என்ன செய்யலாம் என்று இனிமேல்தான் திட்டமிடவேண்டும் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இவருடைய அறிவிப்பு வந்ததிலிருந்தே பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. சரியாக திட்டமிடாமல் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தாங்கள் ஈட்டவிருக்கும் லாபத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடுவரை வங்கிகள் இந்த தள்ளுபடியை எழுதித்தள்ளலாம் (writeoff)என்பது போன்ற முடிவை அரசு எடுக்குமானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய 'எழுதித்தள்ளுவதற்கு' வருமான வரி விலக்கு என்ற ஒரு சலுகையையும் வங்கிகளுக்கு அரசு அளிக்க முன்வரலாம். ஆனால் அதுவும் ஒரு அரசுக்கு ஒருவகையில் இழப்பே.

எப்படியோ, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதைதான் இதுவும்.