14 பிப்ரவரி 2008

தரமிறங்காதீர்கள்.

நான் கடந்த சில மாதங்களாகவே வேலைப்பளு காரணமாகவே பதிவுகள் எழுதுவதில் இருந்து விலகியிருக்க நேர்ந்தது.

என்னுடைய பணிகளை குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் முடித்தே பழகிப்போன எனக்கு தற்போது என்னுடைய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ப்ராஜக்ட் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவை எல்லாம் கடந்து நீண்டுக் கொண்டிருப்பதில் ஏற்பட்டுள்ள மனச்சோர்வு எழுதும் மனநிலையை அளிக்காமல் இருப்பதும் இந்த விலகலுக்கு ஒரு காரணம்.

ஆயினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பாக ப்ராஜக்டில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் விளையும் மனச்சோர்வை குறைக்க தமிழ்மணம் பக்கம் வந்து நம்முடைய நண்பர்களுடைய பதிவுகளை படித்துவிட்டு செல்வது வழக்கம். சில தரமுள்ள இடுகைகளில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திவிட்டு செல்வதும் உண்டு.

ஆனால் சமீப காலமாக சில பதிவர்களின் இடுகைகளைப் படிக்க நேர்கையில் மனச்சோர்வுடன் வரும் என்னைப் போன்றோர் மேலும் சோர்ந்து போக நேரிடுகிறது.

இந்த இழிநிலைக்கு யார் காரணம் அதாவது யார் இதை முதலில் துவக்கினார்கள் அல்லது யார் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்ய முயலாமல் இத்தகைய போக்கு தேவையா என்ற வினாவை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழ்மணத்திற்கென்று ஒரு நிர்வாகக் குழு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர்களுடைய பணி தணிக்கையாளர்களுடைய பணியல்லவே. பதிவர்களுடைய இடுகைகளை சேமித்து வழங்குவது மட்டுமே அவர்களுடைய பணி. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு இடுகையையும் பரிசீலித்து அது வெளியிட தகுதியானவைதானா என்பதுபோன்ற ஆய்வில் இறங்குவது அவர்களுடைய பணியல்ல என்றுதான் கருதுகிறேன்.

சுயதணிக்கை என்பதை விட சுயகட்டுப்பாடு வேண்டும் என்று கருதுகிறேன்.

தேவையற்ற, கண்ணியமற்ற கருத்துகளை எழுதுபவர்கள் தங்களுடைய மனவக்கிரத்தை தங்களுடைய பதிவுகளில் எழுதி தங்களுடைய மனத்தாங்கலை தீர்த்துக்கொள்ளட்டும். அதில் தவறில்லை. ஆனால் அதை தமிழ்மணத்துடன் இணைத்து படிப்பவர்களுடைய மனத்திலும் வக்கிரத்தை விதைத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதையும் மீறி எழுதும் பதிவர்களை மற்றவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முன்வரவேண்டும். அதை விட்டு அவர்களுடைய பதிவில் 'உன்னை விட நான் தரமிறங்குகிறேன் பார்' என்ற எண்ணத்துடன் சில நல்ல தரமுள்ள பதிவர்களும் (அதாவது என்னுடைய பார்வையில்) இப்போதெல்லாம் பதிலுக்கு பதில் தரமில்லாத கருத்துகளை எழுதுவது வேதனையளிக்கிறது.

இதில் கூடுதல் வேதனை என்னவென்றால் சமுதாயத்தில் நல்லதொரு பதவிகளில் இருப்பவர்களும் இதே பாதையில் செல்ல முயல்வதுதான்.

இத்தகையோரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். போதும். மேலும் தரமிறங்கி உங்களுடைய பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

நல்ல சிந்தனைகளை எழுதுங்கள், ஊக்குவியுங்கள்.

சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதுவதில்லை என்று முடிவெடுங்கள். அத்தகைய பதிவர்களுடைய இடுகைகளை படிப்பதை தவிர்த்துவிடுங்கள். மாறாக அதைப் படித்து, அதனால் ஏற்படும் ஆதங்கத்தை பின்னூட்டமாக கொட்டித் தீர்ப்பதையும் தவிர்க்க முயலுங்கள்.

நம்மில் பலருக்கு எழுதுவது முழுநேர வேலையல்ல. இது ஒரு பொழுதுபோக்கு. நம்முடைய எண்ணங்களுக்கு வடிகால். பணியிடங்களில் ஏற்படும் மனச்சோர்வை ஆற்றிக்கொள்ள ஒரு புகலிடம். அதையும் சர்ச்சைகுரியதாக்குவது தேவைதானா?

சிந்தியுங்கள் நண்பர்களே..