03 January 2008

மலேஷியாவில் இருந்து... 5

ஆங்கிலேயர்களுடைய ஆட்சிகாலத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் முகமாக 1948ம் ஆண்டு ஒரு இடைக்கால நிவாரணியாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம்தான் சுதந்திரம் பெற்றபிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டமாக (இசா 1960) உருமாறியது. அன்று இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வித விசாரணையுமின்றி ஒராண்டு காலம் சிறையிலடைக்க வழி வகுக்கப்பட்டிருந்தது. அது இப்போது இரண்டாண்டு காலமாக நீடீக்கப்பட்டுள்ளது.

ஒருவர் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கருதினாலே போதும், அவரை எவ்வித விசாரணையுமின்றி சிறையிலடைக்க இச்சட்டத்தின் 8(1) பிரிவு வகை செய்கிறது. கைது செய்யப்பட்டவரை முதல் இரண்டு மாதங்களுக்கு தன்வசம் வைத்துக்கொள்ளவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாத காலத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தன்னுடைய உறவினரையோ அல்லது வழக்கறிஞரையோ கூட சந்திக்க வாய்ப்பு அளிப்பதில்லை. அதன் பிறகு உள்துறை அமைச்சரின் கணிப்பில் அவருடைய சிறைதண்டனை மேலும் இரண்டாண்டுகளுக்கும் நீட்டிக்கப்படவேண்டும் என்கிற பட்சத்தில் உறவினர்களை/வழக்கறிஞர்களை சந்திக்கும் உரிமை வழங்கப்படுவதுண்டு.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் கைதிகள் எவ்வித விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்பட முடியும் என்பதால் அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை என்பது உண்மை. ஆனால் பல முன்னாள் கைதிகளும் காவல்துறையினரிடம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தாங்கள் பட்ட சித்திரவதைகளைப் பற்றி பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகளை மீறும் இத்தகைய சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ள வெகுசில நாடுகளில் ஒன்று மலேசியா. இச்சட்டத்தை பின்வாங்க கூறி மலேசிய மனித உரிமைகள் சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் மலேசியாவை நிர்பந்தித்து வருகின்றன. ஆயினும் இன்றுவரை மலேசிய அரசு இதை பொருட்படுத்தாமல் இருந்ததுடன் சமீப காலங்களில் இச்சட்டத்தின் நிழலில் சர்ச்சைக்குரிய கைதுகளையும் செய்து வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ்தான் முன்னாள் உதவி பிரதமர் அன்வர் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பிறகு சோடிக்கப்பட்ட கேவலமான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு தண்டனை அனுபவித்த அவரை இப்போதைய பிரதமர் பதவியேற்ற பிறகுதான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் முதல் பிரதமர் இந்த சட்டத்தை நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தியபோது அளித்த வாக்குறுதியைப் நினைவு கூர்வது அவசியம்: 'இச்சட்டத்தின் கீழ் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் எந்த சூழ்நிலையிலும் தவறாக பயன்படுத்தாது என உறுதி கூறுகிறேன்.' அதாவது அரசுக்கு எதிராக எழும் நியாயமான குரலை அடக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் பயன்படுத்தப்படாது என்ற உறுதிகூறிய அரசு இப்போது அதைத்தான் செய்திருக்கிறது என்கின்றனர் எதிர்கட்சிகள்.

இச்சட்டத்தின் கீழ்தான் இப்போது ஹிந்த்ராஃபின் ஐந்து தலைவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக குடும்பத்தினர் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு சமர்ப்பித்துள்ளபோதிலும் இவர்கள் விடுதலையடையும் வாய்ப்பு தற்போதைக்கு இருப்பதாக தோன்றவில்லை.

இந்த சட்டத்தை மலேசிய அரசு எந்த நோக்கத்தில் அறிமுகப்படுத்தியதோ அதற்கு முற்றிலும் முரணான முறையில் ஹிந்த்ராஃபுக்கு எதிராக நடைமுறைபடுத்தியுள்ளது என்பதை மலேசிய இந்தியர்கள் மட்டுமல்லாமல் மலேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் குரலெழுப்பியுள்ளன. நான் கடந்த ஞாயிறன்று தேவாலயத்திற்கு சென்றிருந்தபோது அங்கு விற்பனைக்கு கிடைத்த ஆசிய கத்தோலிக்க செய்தி என்ற தலைப்பில் வெளியாகும் பத்திரிகையில் இதன் தொடர்பாக "சாலை மறியல்கள், போராட்டங்களை தடைசெய்ய வேண்டுமா?" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையின் தமிழாக்க சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

"மலேசிய அரசியல் சட்டம் 10(1)(b) பிரிவின் கீழ் முன்னனுமதியின்றி அமைதியான முறையில் பொது இடத்தில் கூடுவதற்கு (assemble) முழு உரிமையுண்டு. அதாவது பிறருக்கு ஊறு விளைவிக்கும் எவ்வித ஆயுதங்களும் இன்றி. அதே சமயம் அத்தகைய கூட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் இருப்பதாக அரசு கருதும் பட்சத்தில் அதை தடைசெய்ய 10(2)(b) பிரிவு அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மலேசிய காவல்துறை சட்டம் (27) பிரிவின் கீழ் பொது இடத்தில் கூடுவதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் முன் அனுமதி பெற அதற்கெனவுள்ள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதனை பரிசீலித்து அனுமதி வழங்கவோ அல்லது நிராகரிக்கவோ அவருக்கு உரிமை உண்டு. அவருடைய தடை உத்தரவை மீறி பொது இடத்தில் கூடும் எவரையும் கலைந்து செல்லுமாறு பணிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த உத்தரவை மீறும் எவரையும் கைது செய்து சிறையிலடைக்கவும் அதிகாரம் உண்டு என்பது உண்மைதான்.

சரி இனி இவ்வருடம் இதுவரை நடந்த சில பொதுக்கூட்டங்கள், பேரணிகள் சிலவற்றை பார்ப்போம்.

26.9.07 புதன்கிழமை நடைபெற்ற நடைபயணம் (Walk for Justice): இதன் பொறுப்பாளர்கள் மேற்கூறிய சட்டப்பிரிவின்படி காவல்துறையினரிடம் எவ்வித விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுடைய நடைபயணத்தின் விவரத்தை மட்டுமே காவல்துறையினருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர். காவல்துறையினரும் அதை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. நடைபயணம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

10.10.07 செவ்வாய்கிழமை அன்று மயன்மார் அரசுக்கு எதிராக நடைபெற்ற மறியல்: மலேசிய இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் மயன்மாரில் அமைதி மற்றும் கருத்து சுதந்திரம் கோரி அந்நாட்டின் தூதரகத்தின் முன் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அதன் பொறுப்பாளர்கள் காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதிபெற்று நடத்திய மறியல் போராட்டமும் அமைதியான முறையில் நடந்தது.

10.11.07 சனிக்கிழமை மலேசியர்கள், சீன மற்றும் இந்தியர்கள் அனைவரும் கூட்டாக (BERISH) நடத்திய பேரணி: நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை நியாயமான முறையில் நடத்தக் கோரி அரசிடம் மகஜர் சமர்ப்பிக்க எண்ணி பொறுப்பாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தை காவல்துறை பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கக் கூடும் என்று கூறி நிராகரித்தது. அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் சுமார் 5000 பேர் ஜேமெக் மஸ்ஜித் சதுக்கத்தில் குழுமி அமைதியாக துவங்கிய மறியல் போராட்டம் காவல்துறையினரின் அத்துமீறிய தடியடி மற்றும் கண்ணீர் புகை வீச்சால் கலவரத்தில் முடிந்தது. சுமார் முப்பது பேர் கைது செய்யப்பட பலர் காயமடைந்தனர்.

25.11.07 ஞாயிற்றுக்கிழமை ஹிந்த்ராஃப் படையினரால் நடைபெற்ற சாலை மறியல்: அதற்கு முந்தைய BERISH போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் ஹிந்த்ராஃப் படை சமர்ப்பித்த விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் நிர்பந்தம் காவல்துறையினருக்கு. அதை எதிர்த்து மறியலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஹிந்த்ராஃபுக்கு. சுமார் 30000 இந்திய தமிழர்கள் கூடி நடைபெற்ற போராட்டம் இறுதியில் காவல்துறையினரின் அத்துமீறல் காரணமாக கலவரத்தில் முடிந்தது. சுமார் 140 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 88 பேர் மீது பொது இடத்தில் அனுமதியின்றி குழுமியது மற்றும் கலைந்து செல்ல காவல்துறையின் இட்ட உத்தரவை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

முதல் இரண்டு மறியல்களை அனுமதித்ததுபோல் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற BERISH மற்றும் HINDRAF மறியல்களையும் அனுமதித்திருந்தால் நிச்சயம் அவையும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கும் ஆகவே இதற்கு முழு பொறுப்பும் மலேசிய காவல்துறையே ஏற்கவேண்டும் என்கிறது கட்டுரை.

ஆனால் அனைத்துதரப்பிலும் இருந்து எழுந்த இத்தகைய ஆட்சேபங்கள்தான் மலேசிய அரசை ஹிந்த்ராஃபின் மூத்த தலைவர்கள் ஐவரை இசா சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வைத்ததோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

சரி, ஹிந்த்ராஃபின் சாலை மறியல் மலேசிய தமிழ் இளைஞர்களுடைய தனிமனித வாழ்க்கையை சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்துள்ளதா?

நாளை பார்ப்போம்..

தொடரும்..

4 comments:

அருண்மொழி said...

//அடிப்படை மனித உரிமைகளை மீறும் இத்தகைய சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ள வெகுசில நாடுகளில் ஒன்று மலேசியா.//

இது போன்ற சட்டங்கள் எல்லா நாட்டிலும் இருக்கின்றன. இந்தியாவில் தடா, பொடா என்று வந்தன. சமீபத்தில் அமெரிக்கா விசாரணைக்காக என்று பலரை guantanamo bayல் அடைத்துள்ளது.

சிங்கப்பூரிலும் இந்த சட்டம் உள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று பல முஸ்லிம்களை சில ஆண்டுகள் காவலில் வைத்து உள்ளனர்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== சட்டத்தின் கீழ்தான் முன்னாள் உதவி பிரதமர் அன்வர் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ==>
இது மாதிரி விடயங்களைத்தான் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்ல நினைத்தேன்.

ஜோதிபாரதி said...

இது மாதிரி சில நாடுகளில் இந்த சட்டம் தவறாக பழி வாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.
www.jothibharathi.blogspot.com

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

டீபிஆர் அவர்களே,
ஒரு வெளிநாட்டவரின் பார்வையில் மலேசியாவில் நடந்த சம்பவங்களை எழுகிறீர்கள். உங்களது எழுத்து காலங்காலமாக உள்ள மலேசிய இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை முன்வைப்பதைவிட டெக்னிகலாக உள்ள பிரச்னைகைளை முன்வைகிறீர்கள் - "ஹிந்த்ராஃப் அமைப்பு ஹிந்துகளுக்கான பிரச்னைகளுக்கானது, அந்த அமைப்பும் பரவலாக அறியப்படாத ஒன்று -அனுமதி பெறாத இடத்தில் கட்டப்பட்ட கோவில்களை இடித்ததில் தவறில்லை" போன்ற பிரச்னைகளை அதிகமாக முன்வைக்கிறீர்கள். நம் நாட்டில் ஏதாவது பிரச்னை என்று வந்தால் நீதிபதி(களை)யை வைத்து "விசாரணைக் கமிஷன்" வைப்பார்கள்.அவர்(கள்) மாத/வருடக்கணக்கில் "விசாரித்து" அரசாங்கத்திடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வார்.அது மாதிரி,மலேசிய அரசு உங்களது பதிவையே விசாரணை அறிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்!

அவர்கள் இவ்ளோ நாள் அவர்கள் பிரச்னையை எப்படி அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவது என்பதற்க்கான வாய்ப்பை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்ததும் பொங்கி விட்டார்கள். அரசு அடக்குமுறையை ஏவி விடாமல் இருந்தால் இதுவும் நடந்திருக்காது.

அதனால் அவர்கள் பிரச்னையை - வேலை வாய்ப்பு,கல்வி போன்றவற்றில் அரசின் புறக்கணிப்பு போன்றவற்றை எழுதினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு : நான் மலேசியாவில் சுமார் 15 மாதங்கள் தங்கி பணியாற்றினேன். அப்போது செய்தித்தாள்களில் வந்த விடயங்களையும் அங்குள்ளோரிடம் பேசும்போது தெரிந்து கொண்டதையும் வைத்துத்தான் எழுதுகிறேன்.