24 December 2007

மலேஷியாவில் இருந்து...

 

என்னுடைய மூத்த மகள் மலேஷியாவில் - கே.எல் - இருப்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரை சென்று பார்க்க வேண்டும் என்று கடந்த மூன்றாண்டுகளாக திட்டமிட்டு இளைய மகளுக்கு விடுப்பு கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. இந்த வருடம் எல்லாம் ஒன்றுகூடி வர இரு வார விடுப்பில் வர முடிந்தது.

வரும் வழியில் விமானத்தில் உடன் வந்திருந்த சில பெரிய, சிறிய சினிமா நட்சத்திரங்கள் செய்த பந்தாக்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் விதமாக சுவாரஸ்யமாக ஒன்றும் நடக்கவில்லை. விமானத்தில் கிரீடம் படத்தை பார்க்க முடிந்தது. அதன் மூலம் மலையாளத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஒன்றும் பிரமாதமாக இல்லை. அஜீத் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் அவருடைய நடிப்பு மட்டும் எனக்கு வெகுவாக பிடித்திருந்தது, அவ்வளவே. கிளைமாக்ஸ் படு தமிழ் சினிமாத்தனம்.

கே.எல் விமானதளத்தில் நம்முடைய நடிகர்களை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவேயில்லை, அவர்களை வரவேற்க வந்தவர்களைத் தவிர. அதிலும், சாட்டிலைட் விமானதளத்திலிருந்து மினி ரயிலில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரசன்னாவை ஒருவர் அப்பாவியாக 'சார் நீங்க சினிமா நடிகர்தானே' என்று கேட்டதும் அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க பாடுபட்டதும் நல்ல வேடிக்கை. ஆனால் பிரசன்னா ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு புன்னகைத்து சமாளித்தது நன்றாக இருந்தது. பிரபு தலையில் விக் முடியுடன் பந்தா செய்தது சகிக்கவில்லை. மனிதர் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார் போலிருக்கிறது. மற்றபடி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

வந்து நான்கு நாட்களாகிறது. சில குடும்ப வைபவங்கள், விருந்துகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த பல உறவினர்கள், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் - பலரும் இன்றைய இளைய தலைமுறை மலேஷிய தமிழர்கள் - ஆகியோருடன் உரையாடியதில் இப்போது மலேஷியாவில் மிகவும் விவாதிக்கப்படும் விஷயம் INDRAF தலைவர்களின் கைதும் மலேஷிய தமிழர்களுடைய இன்றைய நிலையும்.

வந்திறங்கிய அன்றிலிருந்து கடந்த சில நாட்களாக பல இளைய தலைமுறை மலேஷிய தமிழர்களை சந்தித்து விவாதித்ததில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. இன்றைய தலைமுறையினர் தங்களை இந்தியர்களாகவே கருதவில்லை. அவர்களைப் பொருத்தவரை அவர்களும் மலாய் மக்களைப் போலவே மலேஷியர்கள். ஆகவே தங்களுடைய முந்தைய தலைமுறையினரைப் போலல்லாமல் தங்களுக்கு மறுக்கப்படும் சலுகைகளை (அவர்களைப் பொருத்தவரை அது சலுகைகள் அல்ல. உரிமைகள்!) விட்டுக்கொடுப்பதாக இல்லை.

என்னுடைய சம்பந்தியைப் போன்ற பல முந்தைய தலைமுறையினர் மலேஷிய அரசாங்கம் தங்களுக்கு அளித்த சலுகைகளை மிகவும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர். அவர்களுள் பலரும் 2000ம் ஆண்டு வரை அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள். இப்போதும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் என்கிற அந்தஸ்த்தும் சலுகைகளும் ஓய்வூதியமும் வழங்கப்படுவதே பெரிய விஷயம் என்று கருதுகின்றனர். 'இப்படி இவங்க பிரச்சினை பண்றதுனால இருக்கறதும் புடுங்கிருவாங்க...' என்பதுபோல் செல்கிறது இவர்களுடைய வாதம்.

ஆனால் மலேஷியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்கள் அப்படி கருதவில்லை. INDRAF தலைவர் வைத்தா மூர்த்தி கூறியுள்ளது போன்று இன்றும் மலேஷிய பல்கலைக்கழகங்களில் நுழைவது குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் வழக்கறிஞர் பட்ட படிப்புகளுக்கு இந்தியர்கள் பலருக்கும் அனுமதி கிடைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் மலாய் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது என்பதால் அரசாங்கத்துறைகளில் உயர்பதவியில் இப்போது இருப்பவர்களுடைய மலேஷிய தமிழர்களுடைய ஓய்வுகாலத்திற்குப் பிறகு அத்துறைகளில் இடைமட்ட, அடிமட்ட நிலைகளுக்கு மேல் மலேஷிய தமிழர்கள் உயர வாய்ப்பேயிருக்காது என்கின்றனர். புள்ளி விவரங்களை எடுத்து வைக்கும் அவர்களுடைய வாதத்தை மறுப்பது அத்தனை எளிதல்ல என்பதால் அவற்றை உண்மை என்றே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.

ஆனால் அதற்கு சாலைக மறியல்களில் ஈடுபடுவதும் இந்திய இனமே அழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிடுவதும் சரியா என்று கேட்டால் அதில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்கின்றனர். 'நாங்கள் மலேஷியர்கள். இதை நாங்களே தீர்த்துக்கொள்வோம். இதில் இந்தியா போன்ற நாடுகளால் எந்த தலையீடும் செய்வதில் பலனில்லை என்றே கருதுகிறோம்.' என்பது அவர்களுள் பலருடைய கருத்தாக இருப்பதை காண முடிகிறது. ஆனால் வேறு சிலரோ INDRAFதலைவர்கள் செய்தது சற்று கூடுதல்தான் என்றாலும் அதில் தவறேதும் காணமுடியவில்லை என்கின்றனர்.

INDRAF தலைவர்கள் செய்ததையோ அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் மலேஷிய அரசு எடுத்த நடவடிக்கைகளையோ எடைபோடுவதைவிட இந்த விஷயத்தில் தீர்வுதான் என்ன என்பதை இதன் மூலத்திலிருந்து நடுநிலையாக விவாதித்தால் என்ன என்று எனக்கு தோன்றியதன் விளைவே இந்த மினி தொடர். அதிகம் போனால் மூன்று அல்லது நான்கு பதிவுகள்...

தொடரும்...

16 comments:

கோவி.கண்ணன் said...

ஐயா,

மலேசியா வந்துட்டிங்களா...மலேசியா பிரச்சனையையும் தொட்டு எழுதி இருக்கிங்க, உங்கள் பயணத்தில் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

மலேஷியாவில் முளைத்திருக்கும் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளதுதான் என்றாலும் அடுத்த பொதுதேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருப்பதால் சூடு பிடித்துள்ளது.

அதன் தீவிரத்தை உணராமல் தமிழக அரசியல்வாதிகள் சகட்டுமேனிக்கு அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் அதன் மூலத்தை சற்று பார்க்கவேண்டும் என தோன்றியது.

மற்றபடி மலேஷிய பயணம் படு ஜாலியாக உள்ளது. இரு வாரங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டாம் என்பதே படு சந்தோஷமாக இருக்கிறது :-))

தமிழ்மணத்திற்கும் தினமும் ஒரு சில மணித்துளிகளாவது வரமுடிகிறதே?

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணன்.

emperor said...

வணக்கம் , தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் ,பினாங்கு பக்கம் வருவீர்கலா?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஆஹா,மலேசியாவிலா இருக்கிறீர்கள்?
<==இன்றைய தலைமுறையினர் தங்களை இந்தியர்களாகவே கருதவில்லை ==>
உண்மைதான்.அவர்களிடம் "நீங்கள் இந்தியர்தானே?" என்று கேட்டுப்பாருங்கள்.அப்புறம் தெரியும்!
அவர்கள் மலேசியா அரசால் "மலேசியர்" என்றும் நம்மால் "இந்தியர்" என்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.அதாவது "நாடற்றவர்கள்". நம்(எழ்மை)மைக்கண்டால் அவர்களுக்கு இளப்பம்.நம்மைப் பார்த்தால் "உங்க நாட்ல சாப்பாடு இல்லாமதான் இங்க வேலைக்கு வர்ரீங்க...." என்ற கேலிப் பார்வை.
நிறைய எழுதுங்கள்.

emperor said...

மறந்து விட்டேன் , மன்னிக்கவும் ,கிரிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

வினையூக்கி said...

தங்களது மலேசியப் பயணம் மிக்க மகிழ்ச்சித் தரக்கூடியதாக அமையட்டும். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Tamil said...

WWW.TAMILKUDUMBAM.COM

I LIKE YOUR WEB,
GO AND SEE OUR WEB
Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family

tbr.joseph said...

நன்றி எம்பெரர், வினையூக்கி, தமிழ்.

tbr.joseph said...

வாங்க சிவா,

அவர்கள் மலேசியா அரசால் "மலேசியர்" என்றும் நம்மால் "இந்தியர்" என்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.அதாவது "நாடற்றவர்கள்". //

ஒருவகையில் நீங்கள் கூறியது உண்மைதான். அப்படியொரு எண்ணம் எல்லார் மனதிலும் இல்லையென்றாலும் சிலர் மனதில் உள்ளது என்பது உண்மை.

நம்(ஏழ்மை)மைக்கண்டால் அவர்களுக்கு இளப்பம்.நம்மைப் பார்த்தால் "உங்க நாட்ல சாப்பாடு இல்லாமதான் இங்க வேலைக்கு வர்ரீங்க...." என்ற கேலிப் பார்வை.//

இப்படியொரு எண்ணம் மலாய் மக்களின் மனதில் இருக்கிறதா என்பது சந்தேகமே. மலாய் மக்கள் நான் கண்டது, கேட்டதிலிருந்து நம்மை குறிப்பாக தமிழர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சீனர்களும் அப்படித்தான். இந்த அரசியல் தலைவர்கள்தான் பிரச்சினை என்று நினைக்கிறேன் நம் நாட்டைப் போலவே.

Harish said...

அன்புள்ள பெரியவர் ஜோஸப் அவர்களுக்கு,

Hindraf என்பதில் H-ஐ விட்டுவிட்டீர்களே. Hind என்பது ஹிந்துவிலிருந்து எடுத்தது. Hindu Rights Action Force.

http://en.wikipedia.org/wiki/HINDRAF

மறக்காமல் HINDRAF என்றே எழுதுங்கள்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=
இப்படியொரு எண்ணம் மலாய் மக்களின் மனதில் இருக்கிறதா என்பது சந்தேகமே ==>
நான் நம்ம மலேசிய இந்தியர்கள்(தமிழர்களை)ச் சொன்னேன்.
நான் நம்ம மலேசிய இந்தியர்கள்(தமிழர்களை)ச் சொன்னேன்.

ஒரு மலேசிய இந்தியர் சொன்ன ஜோக்
ஜப்பான்காரன் வேலை செய்யலேன்னா செத்துபோய்விடுவான்.
இந்தியன் அடுத்தவன்கிட்ட (வம்பு) பேசாமலிருந்தால் செத்துபோய்விடுவான்.
சீனாக்காரன் சூதாட்டம் ஆடலேன்னா செத்துபோய்விடுவான்
மலாய்காரன் வேலை செய்தால் செத்துபோய்விடுவான்

பிறைநதிபுரத்தான் said...

அய்யா!
மலேசிய இந்தியர்களின் பிரச்சினையை பற்றிய புரிதலை மேம்படுத்தும் - மலேசிய பிரபல எழுத்தாளர் சை.பீர் முகம்மது வின் பேட்டியின் சுட்டியை இணைத்துள்ளேன்.

http://www.tmmkonline.org/tml/videos/hajagani.htm

பிறைநதிபுரத்தான் said...

இந்தியா வந்த HINDRAF அமைப்பாளர்கள் - இந்து முன்னனி தலைவர் 'வீரத்துறவி' இராமகோபல அய்யரை சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன?

tbr.joseph said...

வாங்க பிறை..

இந்து முன்னனி தலைவர் 'வீரத்துறவி' இராமகோபல அய்யரை சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன?//

இந்த செயலும் hindrafன் நோக்கத்தைப் பற்றி ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான்...

G.Ragavan said...

ஆகா...ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுகளைப் பாக்கக் கெடைச்சிருக்கு. மலேசியப் புத்தாண்டா. சூப்பரு. போன வருசப் புத்தாண்டு எனக்கு மலேசியாலதான். நல்ல வளமையான ஊரு. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உங்களுக்கும் உங்களுடைய நண்பர் குழுவுக்கும் என்னுடைய அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.