12 July 2007

என் முதல் புத்தகம்

நான் தமிழில் எழுத ஆரம்பித்ததே சமீபத்தில்தான்.

இத்தனை விரைவில் ஒரு புத்தகம் எழுத முடியும் என்றோ அல்லது அதை ஒரு பிரபல பதிப்பகத்தார் மூலம் வெளிக்கொணர முடியும் என்றோ நான் கனவிலும் நினைத்ததில்லை.

தமிழில் வலைப்பூ ஒன்றை துவக்கி எழுத நினைத்ததே ஒரு விபத்துபோலத்தான். அதுவே ஒரு பதிப்பகத்தாரின் கவனத்தை ஈர்த்து என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரிக்க வைத்தது மேலும் ஒரு இனிய விபத்து.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் நண்பர் பத்ரி அவர்களிடமிருந்து 'வசதிப்படும்போது அலுவலகம் வரை வந்து செல்லவியலுமா?' என்று தொலைபேசி வந்தபோது என்ன ஏது என்று கேட்க தோன்றவில்லை. அந்த வாரமே ஒருநாள் அவருடைய அலுவலகம் சென்று அவரையும் அவருடைய தலைமை ஆசிரியர் பா.ராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் இருவரும் தெரிவித்தபோது என்னால் அதை சரிவர செய்யமுடியுமா என்ற ஐயம் எழுந்தது.

இதற்கு காரணம் இருந்தது.

Non-fiction எனப்படும் கட்டுரைகள் எழுதுவது என்பது அத்தனை கடினமல்ல. அது சென்றடையும் வாசகர்களின் தரம் சற்று உயர்ந்ததாகவே இருக்கும். இத்தகைய கட்டுரைகளை படிக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக அவற்றை தேடி படிக்கும் வாசகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் எழுதினாலே போதும்.

ஆனால் ஒரு முழு புத்தகத்தையும் அதை வாசிப்பவர்களின் ஆர்வம் குறைந்துவிடாமல் - அதாவது சுமார் ஒரு மணி நேரம் - எழுதுவது என்பது... என்னைப் பொறுத்தவரை மலைப்பாகத்தான் இருந்தது.

அதுவும் வங்கி சார்ந்த புத்தகம் எழுதுவது...

ஆயினும் என் மீது அவர்கள் இருவரும் வைத்திருந்த நம்பிக்கையை அல்லது எதிர்பார்ப்பை ஏமாற்றுவது சரியல்லவே என்று நினைத்து அடுத்த சில வாரங்களில் சென்னை நகரத்திலிருந்த பல புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கினேன். ஒரு வழிகாட்டுதலுக்கு, ஒரு மாதிரிக்கு, ஒரு புத்தகம் கிடைக்குமே என்ற ஆவலுடன்... அதுவும் தமிழில்..

ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை... .

ஆங்கிலத்திலும் கூட வங்கி பரிவர்த்தனைகளைப் பற்றிய முழுமையான புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை..

என்னுடைய வங்கி அனுபவத்திலிருந்தே ஒரு கருவை உருவாக்கி அதை எப்படி புத்தகமாக வடிவமைக்கப் போகிறேன் என்று ஒரு குறிப்பை தயாரித்து பத்ரி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

என்னுடைய குறிப்பில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 'நீங்கள் இதை பல அத்தியாயங்களாகப் பிரித்து மென் நகலை எனக்கு அனுப்பிவிடுங்கள், நான் என்னுடைய ஆசிரியர்களிடம் கொடுத்து தேவைப்பட்டால் அதை வாசகர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி எழுதச் சொல்கிறேன்.' என்றார்.

அப்படி துவங்கியதுதான் இந்த புத்தகம்...

புத்தகம் முழுவதையும் எழுதி முடிக்க சுமார் மூன்று மாத காலம் பிடித்தது என்றாலும் என்னுடைய எழுத்தை பழுது பார்த்து ஒரு அழகான புத்தகமாக வடிவமைத்து வெளியிட்ட பெருமை பதிப்பகத்தாரையும் அதன் ஆசிரியர் குழுவையே சாரும்.

ஆயினும் சில இடங்களில் எழுத்து நடை சற்று ஜனரஞ்சகமாக போய்விட்டதோ என்று புத்தகத்தைப் படித்த என்னுடைய சில வங்கி நண்பர்கள் கூறியதென்னவோ உண்மை!

'இப்படி எழுதினால் மட்டுமே தமிழ் வாசகர்கள் படிப்பார்கள் அல்லது வாசகர்கள் மத்தியில் இத்தகைய புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கும்' என்றால் அது எந்த அளவுக்கு சரி என்பது தமிழ் புத்தக உலகில் அதிக அனுபவம் இல்லாத எனக்கு தெரியவில்லை.

இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கி பல எழுத்தாளர்களுடைய புத்தகங்களை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பெரும்பாலானவை இத்தகைய நடையில்தான் இருந்தது.

ஆனால் எனக்கு தெரிந்தவரை ஆங்கிலத்தில் இந்நிலை இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்தே, வாசகர்கள் அவருடைய நிலைக்கு (level) உயர்ந்து, வாசிக்க பழகிக்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் அதிக லாபம் இல்லாத இத்தொழிலை பெரும் முதலீடு செய்து நடத்துவதால் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப எழுத்தாளர்கள் இசைந்து கொடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்று நினைக்கிறேன்.

பல புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் கிழக்கு பதிப்பகத்தார் என்னையும் ஊக்குவித்து எழுத வைத்ததற்கு நன்றி.

இதைப் பற்றி ஏன் முன்பே எங்களுக்கு தெரிவிக்கவில்லை. புத்தகம் வெளிவந்த பிறகாவது எழுதியிருக்கலாமே என்று சில வலைப்பதிவு நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் எதற்கும் ஒரு நேரம், காலம் வரவேண்டுமல்லவா? அது இப்போதுதான் வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

இனி நம்முடைய சக வலைப்பதிவாளர், நண்பர் சீனியர் ராகவன் சார் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னுடைய புத்தகத்திற்கு மதிப்புரை எழுதியபோது எழுப்பியிருந்த கேள்விகளுக்கு என்னுடைய விளக்கங்கள்......

நாளை...

26 comments:

ஜோ / Joe said...

வாழ்த்துக்கள் ஜோசர் சார்! மிக்க மகிழ்ச்சி :)))

viknesh_2cool said...

மகிழ்ச்சி தோழரே.. மேலும் பல புத்தகங்களை எழுத என் வாழ்த்துக்கள்..

http://vaazkaipayanam.wordpress.com/

tbr.joseph said...

மிக்க நன்றி ஜோ, விக்னேஷ்...

வடுவூர் குமார் said...

தங்கள் புத்தகம் பற்றி திரு.டோண்டு எழுதியிருந்த போதே சந்தோஷமாக இருந்தது.
ஊருக்கு வரும் போது வாங்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

siva gnanamji(#18100882083107547329) said...

முதல் முத்தம், முதல் குழந்தை, முதல் புத்தகம்........

tbr.joseph said...

மிக்க நன்றி குமார்

tbr.joseph said...

வாங்க ஜி!

முதல் முத்தம், முதல் குழந்தை, முதல் புத்தகம்........ //

ஆனால் கு.க. இதற்கு இல்லை... சரிதானே:-))

siva gnanamji(#18100882083107547329) said...

எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இதுதான் கடைசி..இனி இந்த வேலை கூடாது' என்றெல்லாம் தோன்றியிருக்குமே(பிரசவ வைராக்கியம்!)..........
அடுத்த புத்தகம் எது?

tbr.joseph said...

எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இதுதான் கடைசி..இனி இந்த வேலை கூடாது' என்றெல்லாம் தோன்றியிருக்குமே(பிரசவ வைராக்கியம்!)..........//

நல்லவேளையாக இதுவரை அப்படி தோன்றவில்லை:-) அலுவலக வேலை, வெளியூர் பயணம் ஆகியவற்றிற்கிடையில் எழுதுவது சற்று சிரமமாக இருந்தாலும் ஏன் இதை ஒப்புக்கொண்டோம் என்று நினைத்ததில்லை... ஆனால் புத்தகம் வெளிவர தாமதமானபோது சற்று எரிச்சல் கொண்டது உண்மை...


அடுத்த புத்தகம் எது?//

இன்னும் முடிவாகவில்லை...

சுதர்சன் said...

வாழ்த்துக்கள் டி.பி.ஆர். 'திரும்பி பார்க்கிறேன்' தான் உங்கள் முதல் புத்தகமாக இருக்கும் என நினைத்தேன்.

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

ரொம்பப் பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு.

tbr.joseph said...

வாங்க சுதர்சன்,

'திரும்பி பார்க்கிறேன்' தான் உங்கள் முதல் புத்தகமாக இருக்கும் என நினைத்தேன்.//

தி.பா. தொடரை புத்தகமாக வெளியிடுவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் அது வெளிவந்தால் பலருடைய மனத்தாங்கல்களுக்கு நான் ஆளாக நேரிடும். அதை எந்த நோக்கத்துடன் எழுதி வருகிறேனோ அது நிறைவேறாமல் போய்விடும் என்று நினைப்பதால் அது என்னுடைய ஆத்மதிருப்திக்காக நான் எழுதும் ஒரு டைரி என்ற வடிவிலேயே நின்றுவிடும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.//

மிக்க நன்றி துளசி.

உங்களுடைய எளிமையான எழுத்து நடையே என்னையும் இந்த அளவுக்கு தொடர்ந்து எழுத தூண்டியது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் இதற்கு நீங்களும் வாழ்த்துக்குரியவராக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

Aani Pidunganum said...

Saarval,

Glad about the book, first read about it in Dondu saarval blog, so happy, when iam come india next trip will get that book sure.

tbr.joseph said...

மிக்க நன்றி ஆணி.

Siva said...

santhoshama irukku.

tbr.joseph said...

மிக்க நன்றி சிவா

தென்றல் said...

வாழ்த்துக்கள் ஜோசர் சார்! புத்தகத்தைப் பற்றிய விவரங்களைக் காண ஆவல்.

Sambar Vadai said...

Congratulations TBR on your new book..!

I am regular reader of your T.P series.

Today's Dinakaran report - last page - Chennai edition - Any comments on this ? w.r.t your Thirumbi Parkiren - series.
-----------------------------------

நூதன முறையில் ரூ.3 கோடி மோசடி தனியார் வங்கி மேலாளர் கைது


சென்னை, ஜூலை 13: நூதன முறையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக, செஞ்சுரியன் பேங்க்கின் ரிஸ்க் பிரிவு மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாசாலை ரகேஜா டவரில் Ôசெஞ்சுரியன் பேங்க் ஆப் பஞ்சாப் லிமிடெட்Õ என்ற வங்கியின் மண்டல அலுவலகம் உள்ளது.

அங்குதான் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கடன்களை வசூல் செய்யும் ரிஸ்க் பிரிவின் அலுவலகமும் உள்ளது. இங்கு ரிஸ்க் மேனேஜராக பணியாற்றுபவர் கார்த்திகேயன் (32). இவர், மடிப்பாக்கம் ராமகிருஷ்ணராஜி நகரில் வசித்து வருகிறார்.

வழக்கமாக வங்கி கடன் வாங்கும்போது அதற்கு அடமானமாக சொத்துப் பத்திரங்களை வாங்கி வங்கியில் வைத்திருப்பார்கள். அந்த அடமான பத்திரங்கள் எல்லாம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடனை வசூலிக்க வேண்டும் என்றால் சொத்து பத்திரங்கள் எல்லாம் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பினார் கார்த்திகேயன். அதனால், 22 சொத்துக்களின் பத்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென்று 22 பத்திரங்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது, வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் 8 வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.70 லட்சம் வரை கடனை திரும்ப செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு அதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டிருந்தன. மேலும், அவர்களது சொத்து பத்திரங்களும் திருப்பிக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவர்கள் கட்டிய பணம் ரூ.70 லட்சம் மட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த ரசீதை சோதித்து பார்த்தபோது, சில நாட்களுக்கு முன்னர் ரசீது புத்தகத்தின் 3 கட்டுகள் காணவில்லை என்று, அண்ணாசாலை போலீசில் கார்த்திகேயன் புகார் செய்திருந்தார். காணாமல் போனதாக கூறப்பட்ட புத்தகத்தில் இருந்து ரசீதுகள் 8 வாடிக்கையாளருக்கும் வழங்கப்பட்டிருந்தன. அதில் கார்த்திகேயன் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார். இது, வங்கி அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 22 சொத்து பத்திரங்கள் மூலம் வங்கிக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் வங்கியின் மேனேஜர் நோபிலி கிரேசியஸ் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், 8 சொத்து பத்திரங்களை உரியவர்களிடம் கொடுத்துள்ளார் கார்த்திகேயன். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் கடனை வசூலித்து தானே வைத்துக் கொண்டார். திட்டமிட்டு சில நாட்களுக்கு முன்னர் ரசீது புத்தகம் தொலைந்து விட்டதாக, அவரே அண்ணாசாலை போலீசில் புகார் செய்திருந்தார். தொலைந்ததாக கூறப்பட்ட புத்தகத்தில் இருந்து போலியாக ரசீதுகளை, அவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார் என்று தெரிந்தது.
மீதமுள்ள 14 சொத்து பத்திரங்களை வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாமல் நிதி நிறுவனங்களிடமும், மார்வாடியிடமும் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார் என்று தெரிந்தது. வங்கி மோசடி புகாரில் இதுபோல் வங்கி அதிகாரியே ஆவணங்களை மார்வாடியிடம் வைத்து கடன் வாங்கியது இல்லை. முதல் முறையாக இதுபோல மோசடி நடந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் போலி பத்திரத்துக்கு கடன் கொடுத்ததாக, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு வங்கியின் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இப்போது, மீண்டும் ஒரு மோசடி வழக்கில் மற்றொரு வங்கியின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tbr.joseph said...

வாங்க தென்றல்,

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

புத்தக விவரங்கள்
இங்கே

tbr.joseph said...

வாங்க சாம்பார்வடை!

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மோசடி பற்றி நானும் படித்தேன்.

இதைக் குறித்து நாளை ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.

G.Ragavan said...

வாழ்த்துகள் ஜோசப் சார். மிக்க மகிழ்ச்சி. இப்படி நெறையப் புத்தகமா எழுதித் தள்ளிக்கிட்டேயிருங்க. :)

தருமி said...

வாழ்த்துக்கள்

தொடரட்டும்

லக்கிலுக் said...

ஜோசப் சார்!

உங்கள் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்தினை எழுதுகிறேன்.

tbr.joseph said...

மிக்க நன்றி ராகவன்.
மிக்க நன்றி தருமி சார்.
மிக்க நன்றி லக்கி.

உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அருண்மொழி said...

தொடர்ந்து பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்.