17 July 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 3

நேற்றைய பதிவில் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான தில்லுமுல்லுவைக் குறித்து வெளிவந்த செய்தியின் சாராம்சத்தைப் பார்த்தோம்.

இதே சம்பவத்தைக் குறித்து ஞாயிறன்று வேறொரு வங்கியும் இதே நபரைக் குறித்து ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இதே நபர் அவர்களுடைய வங்கியில் சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றியபோது இதே உத்தியைக் கையாண்டு சுமார் ரூ.3 கோடி அளவுக்கு கையாண்டுள்ளார் என்கிறது அந்த வங்கி!

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வங்கி ஒரு வெளிநாட்டு வங்கி. அதாவது கணினி மயமாக்கத்தில் உச்ச நிலையில் உள்ள வங்கி.

இதுபோன்ற தில்லுமுல்லுகள் நடைபெறாமலிருக்க இன்று எங்களைப் போன்ற வங்கிகளிலேயே பல உக்திகளை மென்பொருள் வடிவத்தில் (அதாவது நாங்களே வடிவமைத்து) அறிமுகப் படுத்தியுள்ளோம்.

அதாவது எந்த ஒரு கணக்கிலும் வரவோ, பற்றோ வைக்கப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட வேலைநாளின் இறுதியில் (at the day end) மென்பொருள் அதன் விவரத்தை மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவித்துவிடும்.

உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய கடன் கணக்கில் ரூ.பத்தாயிரத்தை காலை பதினோரு மணிக்கு செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்று வங்கி கணக்கு முடிக்கப்பட்டவுடன் நீங்கள் வங்கியில் பதிந்து வைத்துள்ள மின்னஞ்சல் விலாசத்திற்கு எங்களுடைய மென்பொருள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் விலாசத்தை வங்கியில் அளித்து இந்த சலுகை கிடைக்க விண்ணப்பிக்க வேண்டும், அவ்வளவுதான். மாதம் இத்தனை மின்னஞ்சல் வரை கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு மேல் போனால் ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படும்.

நீங்கள் வங்கிக்கு நேரடியாக வர இயலாத பட்சத்தில் உங்களுடைய பணியாள் அல்லது நண்பர்/உறவினர்கள் மூலம் தவணையை பணமாகவோ, காசோலையாக உங்களுடைய கணக்கில் வரவு வைக்குமாறு அனுப்பியிருந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உங்களுக்கு தகவல் வந்துவிடும். இல்லையென்றால் வங்கி கிளையை அணுகி விளக்கம் கேட்க முடியும்.

முதல் தலைமுறை வங்கியான எங்களுடைய வங்கியிலேயே இத்தகைய ஏற்பாடுகள் இருக்கையில் தங்களுடைய வங்கியின் பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளன என மார்தட்டிக்கொள்ளும் இந்த இரண்டாம் தலைமுறை மற்றும் மேலைநாட்டு வங்கிகள் இந்த அடிப்படை வசதிகளைக் கூட தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதை நம்பமுடியவில்லை.

சரி. அது போகட்டும். வாடிக்கையாளர்கள் வங்கியில் டெப்பாசிட் செய்யும் சொத்து பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கென சில விதிமுறைகளை ஒவ்வொரு வங்கியும் வகுத்திருக்கும். அதன்படி சம்பந்தப்பட்ட பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு எந்த நிலையிலுள்ள அதிகாரிகளை வங்கி அனுமதித்துள்ளதோ அதே அதிகாரிகள் மட்டுமே அங்கிருந்து பத்திரங்களை திரும்பிப் பெற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது கிளை மேலாளர் நிலையிலுள்ள அதிகாரி மட்டுமே அத்தகைய ஆவணங்களை மத்திய அலுவலக்த்திற்கு அனுப்ப அதிகாரம் உண்டு என்றால் அவரால் மட்டுமே அவற்றை கடனை அடைத்து முடித்தபிறகு திருப்பிக் கோர அதிகாரம் இருக்கும். சாதாரணமாக எந்த வங்கியிலும் இத்தகைய அதிகாரத்தை தனிநபர் ஒருவருக்கு மட்டும் அளிப்பதில்லை. குறைந்த பட்சம் இருவராவது இணைந்து இத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நியதி இந்த வங்கிகள் இல்லை அல்லது அந்த நியதி வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது என்பது வெளியாகியுள்ள செய்திகளில் இருந்தே தெரிகிறது.

சரி. அதுவும் போகட்டும். சாதாரணமாக ஒரு கடனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் அந்த கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கு திருப்பியளிக்கப்படும். வங்கி பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ள இந்த வங்கிகளில் ஒரு கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை மத்திய அலுவலகத்திலிருந்தே கண்டுபிடித்துவிட முடியும். அப்படியிருக்க ஏதோ ஒரு கிளையிலிருந்து ஒரு அதிகாரி மின்னஞ்சல் வழியாக கேட்டார் என்று திருப்பிச் செலுத்தப்படாத கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களை அவருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர் என்பதையும் எப்படி நம்புவது?

ஆகவே இதை ஒரு தனி நபருடைய புத்தி சாதுரியத்தால் நடைபெற்ற தில்லுமுல்லு என்பதை விட வங்கியிலிருந்த நடைமுறை நியதிகளுள் உள்ள குறைபாடுகளால் நடைபெற்ற தில்லுமுல்லு என்றே கூறவேண்டும்.

இதை செய்திகளில் குறிப்பிட்டுள்ள நபரால் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்பதும் உண்மை.

இத்தகைய தில்லுமுல்லுகள் நீங்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க சில யோசனைகள்:

1. கடன் வாங்கும்போது:

அ. கடனுக்காக நீங்கள் கையொப்பமிட்ட வங்கி ஆவணங்களின் நகலைக் கோர உங்களுக்கு உரிமை உண்டு. சரிவர நிரப்பப்படாத படிவங்களில் கையொப்பமிடாதீர்கள்.

ஆ. கடனுக்கு ஈடாக வங்கியில் அடகு வைக்கும் சொத்து ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இ. நீங்கள் வங்கியில் டெப்பாசிட் செய்த பத்திரங்களின் பட்டியலை தயாரித்து அதில் எந்த வங்கி அதிகாரியிடம் அவற்றை ஒப்படைக்கிறீர்களோ அவர்களுடைய அலுவலக முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. கடன் பெற்ற பிறகு:

அ. உங்களுடைய கடன் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ நேரடியாக வங்கியிலேயே செலுத்தி விடுங்கள். வங்கி நியமித்த ஏஜண்டுகள் மூலமாக செலுத்தாமல் இருப்பது நல்லது. நேரடியாக செல்ல முடியாத பட்சத்தில் காசோலையை தபால் மூலமாக செலுத்துங்கள். காசோலையாக அனுப்பும் பட்சத்தில் அதன் ஜெராக்ஸ் நகலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ரொக்கமாக செலுத்திய வங்கி சல்லான்களை கடன் முழுவதையும் அடைத்து தீர்த்து பத்திரங்கள் உங்கள் கைக்கு திருப்பிக் கிடைக்கும்வரை வைத்திருங்கள்.

ஆ. நீங்கள் இறுதியாக செலுத்த வேண்டிய தவணையின் தியதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் தொகையை செலுத்தி முடித்தப் பிறகு அதிக தாமதமில்லாமல் கடன் பத்திரங்களை திருப்பி பெற்றுக்கொள்வதில் முனைப்பாயிருங்கள்.

முக்கியமாக இரண்டாம் தலைமுறை வங்கிகளில் வழக்கத்திலுள்ள முறை அதாவது எல்லா கடன்களூக்குண்டான சொத்து பத்திரங்களையும் மத்திய அலுவலகத்தில் சேமித்து வைக்கும் முறை நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தில் முடிய வாய்ப்புள்ளது. இருபதாண்டுகள் கழித்து உங்களுடைய சொத்து பத்திரங்களை கோரி விண்ணப்பிக்கும்போது லட்சக்கணக்கான கணக்குகளின் சொத்து பத்திரங்களிலிருந்து உங்களுடையதைத் தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்கென்றே தனியாக ஒரு மென்பொருள் தேவைப்படும்!!

ஆகவே இதை விளையாட்டாக நினையாமல் உங்களுடைய சொத்து பத்திரங்களை பத்திரப்படுத்திக்கொள்வதில் எச்சரிக்கையாயிருங்கள்!

தொடரும்..

13 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

முன்னெல்லாம், வெளியூர் காசோலைகள் & வரைவோலைகளை,
வங்கியில் கொடுத்தால், பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல்ரசீது கொடுப்பார்கள்.......
இப்பொழுது பெட்டியில் போடச்சொல்கின்றனர்
ஒருவேளை குறிப்பிட்ட ஆவணம் தவறிப்போனால் அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு?

siva gnanamji(#18100882083107547329) said...

புதியதலைமுறை(!) வங்கிகளில்
பணம் செலுத்த, ஒரு கவ்ரில் போட்டு
ஒட்டிக்கொடுக்கின்றோம்........
கூட்டின்மேல் எழுதப்பட்ட தொகைக்கும்
உள்ளே இருக்கும் தொகைக்கும் வித்தியாசம் இருந்தால் அதற்கு யார்
பொறுப்பேற்க வேண்டும்?

tbr.joseph said...

வாங்க ஜி!

ஒருவேளை குறிப்பிட்ட ஆவணம் தவறிப்போனால் அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு? //

வங்கிகள் நிச்சயம் பொறுப்பேற்காது. ரசீது உங்களிடம் இல்லாதவரை அதை தட்டிக்கழிப்பதிலேயே குறியாயிருக்கும். நீங்கள் டெப்பாசிட் செய்த காசோலை சம்பந்தப்பட்ட வங்கியில் present செய்யப்பட்டு பாசாகியுள்ளது என்பதை நீங்களே நிரூபிப்பதுமட்டுமே இதற்கு தீர்வு.

இதன் தொடர்பாக வங்கி ஆம்பட்ஸ்மேன் அலுவலகத்தில் குவிந்துள்ள புகார்கள் கணக்கில்லாதவை.

சம்பந்தப்பட்ட வங்கிகள் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றன.

tbr.joseph said...

புதியதலைமுறை(!) //

வங்கிகள்தான் புதியவை. அதில் பணியாற்றுபவர்கள் எல்லாமே பழைய தலைமுறையினர்தான்!

வங்கிகளில்
பணம் செலுத்த, ஒரு கவ்ரில் போட்டு
ஒட்டிக்கொடுக்கின்றோம்........
கூட்டின்மேல் எழுதப்பட்ட தொகைக்கும்
உள்ளே இருக்கும் தொகைக்கும் வித்தியாசம் இருந்தால் அதற்கு யார்
பொறுப்பேற்க வேண்டும்?//

வங்கிகள் நிச்சயம் பொறுப்பேற்காது. நான் கேட்கிறேன், வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத இத்தகைய வங்கியை ஏன் நாடுகிறீர்கள்?

Siva said...

<---
ஒருவேளை குறிப்பிட்ட ஆவணம் தவறிப்போனால் அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு? --->
Better to send it by courier/Regd Post. Preserve the courier receipt,POD(proof of delivery )
If your DD/cheque is not credited within stipulated period(say 10/15 days), you can send a Regd letter enquiring the status.Bank wont bother abt it. Then, register your complaint with RBI Ombudsperson. Once you get the complaint number thru email or ack. card from them your problem will be solved

Siva said...

<--- வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத இத்தகைய வங்கியை ஏன் நாடுகிறீர்கள்? -->
Comparatively Nationalised banks are better than pvt banks.But, not much different.

Sowmya said...

miga arumaiyana pathivu :) nandrigal

tbr.joseph said...

வாங்க சிவா,

If your DD/cheque is not credited within stipulated period(say 10/15 days), you can send a Regd letter enquiring the status.Bank wont bother abt it. //

நீங்கள் கூறும் யோசனை சிறிய கிளைகளுக்கு பொருந்தும். ஆனால் சென்னை போன்ற நகரங்களிலுள்ள சில பெரிய கிளைகளில் நாளொன்றுக்கு சுமார் 5000 காசோலைகள் வரையிலும் கலெக்ட் செய்யப்படுகின்றன. இதில் பதினைந்து நாட்கள் கழித்து புகார் செய்தால் நீங்கள் குறிப்பிடும் காசோலையை கண்டுபிடிக்கவே கணிசமான நேரம் தேவைப்படும்.

அதனால்தான் இத்தகைய புகார்களை வங்கிகள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. வங்கி ஆம்பட்ஸ்மேனுக்கு புகார் செய்தாலும் அதனை தொடர்ந்து follow up செய்ய வேண்டும். இதற்கு எத்தனை பேருக்கு நேரம் உள்ளது?

tbr.joseph said...

Comparatively Nationalised banks are better than pvt banks.But, not much different. //

இதில் வங்கிகளை குறை கூறுவதில் பயனில்லை. எந்த வங்கியானாலும் அதன் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடைய attitudeஐ பொருத்தே எல்லாம் உள்ளது.

அரசுடைமையாக்கப்பட்ட எல்லா வங்கிகளுமே நல்லதும் இல்லை. எல்லா தனியார் வங்கிகளுமே பொறுப்பற்றவை எனவும் கூறவும் இயலாது.

tbr.joseph said...

மிக்க நன்றி செளம்யா.

வவ்வால் said...

நீங்கள் குறிப்பிட்டது போல பணம் தருவதே இல்லை நாங்கல் எதற்கும் D.D அல்லது காசோலை தான் , ஆனாலும் சில தெசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களுக்கு D.D தரமாட்டொம் என்கிறார்கள்( கார்ப்பரேஷன் வங்கி திருவள்ளூர் கிளை ,நான் புகார் கொடுப்பேன் என்று மிரட்டிவிட்டுதான் வந்தேன்!) D.D தருவதற்கும் ரொம்ப நேரம் ஆகிரது. தனியார் வங்கிகளில் விரைவாக நடக்கிறது.

முதல் தலைமுறை வங்கிகளில் சொத்து பத்திரம் பத்திரமாக இருக்கும் என்று சொன்னீர்கள், புதுவையில் உள்ள கனாரா வங்கி வீட்டுகடன் பிரிவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் , ஒரு தலமை காசாளார் நிறைய பத்திரங்களை எடுத்துகொண்டு VRS வாங்கிப் போய்விட்டார், அவர் போன பிறகு தான் பத்திரங்கள் காணோம் என தெரிந்தது. என வாடிக்கையாளர்களிடம் நிர்வாகி சொன்னார். எனது கேள்வி என்னவெனில் தலமை காசாளருக்கு அத்தகைய அதிகாரம் உண்டா?

tbr.joseph said...

வாங்க வவ்வால்,

எனது கேள்வி என்னவெனில் தலமை காசாளருக்கு அத்தகைய அதிகாரம் உண்டா? //

நிச்சயம் இருக்காது. அதுவும் கனரா வங்கி போன்ற அரசு வங்கியில்.

ஆனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு வங்கி விதித்திருக்கும் நியதிகளை இவரைப் போன்ற சில அதிகாரிகள் வேண்டுமென்றே மீறுவதுண்டு.

சாதாரணமாக அரசு வங்கிகளில் இத்தகைய ஆவணங்கள் நான் பதிவில் கூறியுள்ளபடி இரும்பு சேஃப்ட்டி லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும். அதனுடைய சாவிகள் குறைந்தபட்சம் இருவரிடம் இருக்கும். இருவரும் சேர்ந்துதான் திறக்க முடியும். இந்த நியதியின் பொருள் என்னவென்றால் அலமாரியிலுள்ள ஆவணங்களை இருவரும் சேர்ந்தே எடுக்க வேண்டும், வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நடைமுறை வசதிக்காக ஒருவர் மற்றவரை நம்பி தன்னுடைய சாவியை கொடுத்துவிடுவதுண்டு. அதாவது ஒருவரே இரு சாவிகளையும் பயன்படுத்தி லாக்கரை திறப்பார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் பத்திரங்களையோ ஆவணங்களை எடுத்து மறைத்து வைத்துவிட்டு பிறகு அலுவலகத்தில் யாரும் இல்லாத சமயத்தில் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு.

அல்லது இதற்கு கிளை மேலாளர் அல்லது இரண்டாவது சாவிக்கு பொறுப்பான அதிகாரி, ஆகியோரும் உடந்தையாயிருக்கலாம்.

இப்படிப்பட்ட நியதிகளை வேண்டுமென்றே மீறுவதை எங்கும் தடைசெய்ய முடியாது.

Siva said...

<---
பதினைந்து நாட்கள் கழித்து புகார் செய்தால் நீங்கள் குறிப்பிடும் காசோலையை கண்டுபிடிக்கவே கணிசமான நேரம் -->
நான் 10/15 நாட்கள் என்று குறிப்பிட்டது வெளியூர் காசோலைகளுக்காக.அதற்கப்புறம்தான் அது தொலைந்து விட்டதா இல்லையா என்று தெரியும். நமக்கு வேன்டும் என்றால் இப்படியெல்லாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். நீங்கள் வங்கியிலேயே வேலை செய்வதால் உங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை வந்தால் எளிதாகத் தீர்த்துவிட முடியும்.எங்களுக்கு அப்படி அல்லவே.