27 ஜூலை 2007

அழகு தமிழும் இன்றைய தலைமுறையும்

என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன்.

தமிழ்வழி கல்வியே ஏதோ பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டிருந்த காலம். அதாவது பணம் செலவழித்து கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்கு என்பதுபோன்றதொரு மாயை..

கிறிஸ்துவ குடும்பங்களில் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒருவித கட்டாயமாக கருதப்பட்டு வந்த காலம். 'இங்க்லீஷ்ல எழுதுறதும் பேசுறதும் நமக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுக்கும்' என்பார் என்னுடைய தாத்தா. நம் வீட்டு பிள்ளைகள் எல்லாருமே மெட்றிகுலேஷன் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்.

'நம்ம வீட்லருந்து ஒருத்தனாவது கடவுள் சேவைக்கு போகணும். அதனாலதான் ஒன்னெ குருமடத்துல சேக்கறேன்' என்று என்னுடைய விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளாமலே கொண்டு சேர்த்தவர். குருமடத்திலோ தப்பித்தவறியும் கூட தமிழில் பேசிவிடக்கூடாது என்கிற நிர்பந்தம். ஆனால் நாளடைவில் என்னுடைய கோபமும், பிடிவாதமும் என்னை அங்கிருந்து விரட்டியடித்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தாய்மொழியில் பயிலுவது எங்களுடைய பிறப்புரிமை. யாரும் எம்மீது அந்நிய மொழியை திணிக்க அனுமதியோம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

தமிழை இரண்டாவது பாடமாக எடுக்கவும் தயங்கி வந்த காலம் மறைந்து தமிழ்வழி கல்வி மற்ற வழி கல்விக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என்கிற நிலை பரவலாக குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் அதுவே நிலைப்பெற தாய்தமிழ்க்கு அதற்குரிய முக்கியத்துவம் உருவாக ஆரம்பித்தது.

தமிழில் பிழையின்றி பேசுவது, எழுதுவது என துவங்கி தூய தமிழில் பேசுவதையும் ஒருவித கவர்ச்சிக் கலையாகவே மாற்றினர் திராவிட கட்சி பேச்சாளர்கள். பாமர மக்களையும் தங்களுடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலால் கவர்ந்து அரசியல் கூட்டங்களை இலக்கிய கூட்டங்களாக மாற்றிய பெருமை அண்ணா, மு.க, நாஞ்சிலார், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சாரும். அதன் பிறகு திரைப்படப் பாடல்கள் வழியாக தூய தமிழை பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு தூய தமிழில் பேச, எழுத வெகு இலகுவாக வருகிறது என்றால் அதிசயமல்ல என்றாலும் இது ஒரு வரவேற்கத்த மாற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வலைப்பதிவுகளில் இன்றைய தலைமுறையினர் எழுதும் அழகைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். நாளுக்கு நாள் வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு இப்போதெல்லாம் கணினியில் தமிழை நேரடியாக எழுத முடிகிறது என்பதும் ஒரு காரணம் என்றாலும் இதுவும் ஒரு சந்தோஷமான விஷயம்.

எழுதும் விஷயம் எதுவாக இருந்தாலும் அதை படைக்கும் நேர்த்தி, எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத கருத்தானாலும் அதையும் இறுதிவரை பிடித்து வாதிடும் அழகு, உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்.

வலையுலகத்தில் மட்டுமல்லாமல் இன்றைய வார, மாத இதழ்களில் வெளிவரும் கதையல்லாத கட்டுரைகளிலும்தான் எத்தனை நேர்த்தியாக இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மனதிலுள்ளவற்றை எடுத்துரைக்கின்றனர்.

இந்த வாரத்து விகடனில் வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

தற்போது படப்பிடிப்பில் உள்ள ஜெயம் ரவியின் 'தேடிவந்த காதலி' திரைப்படத்தின் இயக்குனர், ரவியின் மூத்த சகோதரர் ஓரிரு வரிகளில் கதையின் கருத்தை இப்படி கூறுகிறார்:

'ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேதான். ஆனா இருபது வயசுலயும் நீ என் கைய விடாம பிடிச்சு வச்சிருக்கியே, இது நியாயமா?'

'ஆயிரம் ருபாய்ல 'ஆலன்ஷோலி ஷர்ட்' எடுத்து கொடுத்து 'ஜம்முனு எக்ஸிக்யூடிவ மாதிரி போடா'ன்னு பெருமையா சொல்றார் அப்பா. ஆனா மகனுக்கோ 150 ரூபாய்ல பாண்டிபஜார்ல 'போக்கிரி சட்டை' வாங்கி போட்டுக்கணும்னு ஆசை.'

இது இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடைபெறக்கூடிய தலைமுறை போராட்டம்தான்.. ஆனால் எத்தனை அழகாக, சுருக்கமாக நினைவில் நிற்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது!!

அதே இதழில் வேறொரு கட்டுரையில் இன்று பிரபலமாகவுள்ள ஓவியர் ஷ்யாம் தன்னுடைய இளைய பருவ சிரமங்களை நினைவு கூற்கிறார். தான் பெற்றுள்ள வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மிக அழகாக கூறுகிறார்:

'என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் கடவுள்தான் என்பது என் நம்பிக்கை. எனக்கான வாய்ப்புகளை அவர் என் வாழ்க்கைப் பாதையில் விதைத்துக்கொண்டே செல்ல, நான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். கஷ்டப்படத் தயாராக இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னைக் கைவிடவில்லை.'

வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை இத்தனை எளிமையாக, அழகாக, சுருக்கமாக சொல்லிவிட முடியுமா என்ன?

இன்றைய தலைமுறையின் கைகளில் தமிழ் மேலும் அழகு பெறுகிறது என்பதில் எள்ளளவும் பொய்யில்லை...

********

26 ஜூலை 2007

வாழ்க்கை 3

உறங்கச் செல்வது எத்தனை முக்கியமோ அதுபோலவேதான் காலையில் எழுவதும்.

'நாம எந்த மூடுல எழுந்திருக்கறமோ அந்த மூடோடவேதான் நாள் முழுக்க இருக்கப் போறோம்கறத ஞாபகத்துல வச்சிக்கறது நல்லது.' என்பார் ராகவேந்தர் தன்னுடைய எச்.ஆர் பயிற்சி வகுப்புகளில்.

'அதெப்படி சார் நம்ம மூடு எப்பவுமே ஒரே போலயா இருக்கு?' இந்த கேள்வி ஏறக்குறைய அவருடைய எல்லா வகுப்புகளிலும் எழக்கூடியதுதான்.

'முடியும். சொல்றேன்.' என்று துவங்கி பொறுமையுடன் விளக்குவார் ராகவேந்தர்.

'நாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி படுக்கையிலருந்து எழுந்திருப்போம். சிலர் அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்து அலாரத்தை அணைச்சிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க. சிலர் அலாரம் அடிக்காமயே சட்டுன்னு சொல்லி வச்சா மாதிரி எழுந்திரிப்பாங்க.'

'அலாரம் வைக்காமயா?'

'ஆமாம். நம்ம பாடிக்குள்ளவே ஒரு பயலாஜிக்கல் க்ளாக் இருக்கு. அத நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டா இந்த அலாரம் எல்லாம் தேவையே இருக்காது.'

'பயலாஜிக்கல் க்ளாக்கா? அப்படீன்னா?'

'உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்... நம்மள்ல நிறைய பேர் ராத்திரியில பாத்ரூம் போறதுக்கு ஒரு தடவையாவது எழுந்திரிப்போம்... கரெக்ட்.'

'ஆமா சார். ஆனா தூக்கம் கலைஞ்சிருமேன்னு கண்ணெ மூடிக்கிட்டே போய்ட்டு வந்து படுத்துக்குவேன்.'

'நீங்க மட்டுமில்ல நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான். ஆனா இன்னைக்கி ராத்திரி அப்படி எழுந்திருக்கறப்போ ஒங்க ரிஸ்ட் வாட்ச பாத்துட்டு பாத்ரூம் போங்க. நீங்க பாக்கற டைம் ஒங்க பயலாஜிக் க்ளாக்ல பதிவாயிரும். நாளைலருந்து அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு கரெக்டா அதே டைம்ல முழிப்பு வந்துரும்...'

'அட! அப்படியா?'

'இன்னைக்கி ராத்திரி டெஸ்ட் பண்ணி பாருங்க... நாளைக்கு வந்து சொல்லுங்க..'

உண்மைதான்... நாம் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த காரியத்தை இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று மீண்டும் நமக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சொல்லிப் பார்த்துக்கொண்டால் போதும், நமக்குள் இருக்கும் பயலாஜிக்கல் கடிகாரம் அதை பதிவு செய்துக்கொள்ளும். நான் சொல்ல வருவது நம்முடைய பயலாஜிக்கல் தேவைகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் குடிப்பது, உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பதுபோன்ற உடல் ரீதியான செய்கைகள்... சிலருக்கு பகல் ஒரு மணியடித்தால் போதும் அவர்களையும் அறியாமல் பசிக்க ஆரம்பித்துவிடும்... அதே போல் இரவு மணி பத்தடித்தால் போதும் உறங்கியே ஆகவேண்டும்.

இதை பரீட்சித்து பார்க்க விரும்பும் முதல் நாள் அல்லது அடுத்த சில நாட்களுக்கு அலாரம் வைத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எழுந்ததும் உங்களுடைய கைக்கடிகாரத்தையோ அல்லது சுவர் கடிகாரத்தையோ ஒரு நிமிடம் பார்த்து மனதில் பதிய வையுங்கள். அதன் பிறகு சில நாட்கள் அலாரம் வைக்காமல் எழ முடிகிறதா என்று பரீட்சித்து பாருங்கள்... அதன் பிறகு அலாரம் வைக்காமலேயே எழ முடியும். உங்களுக்கே அதிசயமாக இருக்கும்.

சரி... காலையில் படுக்கையில் இருந்து எழும்போது என்ன செய்ய வேண்டும்.

அலாரம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நம்முடைய முறையிலிருந்து ஒருபோதும் மாறலாகாது.

கண் விழித்ததும் உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையில் படுத்தவாறே இரவில் உறக்கம் வருவதற்கு நீங்கள் கிடந்த அதே போசில்... அதாவது கால்களை நீட்டி ஒன்று சேர வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றின் மீது ஒன்றை வைத்தல் ஆகாது.

கைகள் இரண்டையும் தலைக்கு மீது நீட்டுங்கள். அதாவது படுத்தவாறே தலைக்கு மேலே அதே பாதையில் நீட்ட வேண்டும். கூரையை (ceiling) நோக்கி அல்ல.

ஒரு கையால் அடுத்த கையை பிடித்துக்கொள்ளூங்கள். Clasp செய்துக்கொண்டாலும் சரி. பிறகு உடம்பு முழுவதையும் சோம்பல் முறிப்பதுபோல முறுக்குங்கள். கூடுதல் டென்ஷன் கொடுக்க வேண்டாம். நேச்சுரலாக செய்ய வேண்டும். கைகளை மேலே உயர்த்தும் அதே நேரத்தில் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும், முடிந்தவரை..

பிறகு உயர்த்திப் பிடித்துள்ள கைகள் இரண்டையும் சட்டென்று தளர்த்தியவாறு 'ஹா' என்ற ஒசையுடன் வாய் வழியாக மூச்சை விடவேண்டும். அதாவது ஒரு நொடிப் பொழுது நேரத்தில் சடக்கென்று கைகள் இரண்டையும் தலைக்கு மேலிருந்து இறக்கி உடம்புக்கு இருபக்கங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். இதுபோல் குறைந்த பட்சம் மூன்று முறை...

இதன் மூலம் நம் உடலிலும் உள்ளத்திலும் உள்ள அசதி, டென்ஷன் போய்விடும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள்.

பிறகு இடதுபுறம் ஒருக்கழித்து படுத்து வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க வேண்டும். பிறகு கைகள் இரண்டையும் மூடிய கண்களின் மீது வைத்து சுழற்றி தேய்க்க வேண்டும்.

பிறகு யார் முகத்தில் இன்று விழித்தேனோ தெரியலையே என்று புலம்ப வாய்ப்பளிக்காமல் உங்களுடைய உள்ளங்கைகளையே பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்வது ராகவேந்தரின் பழக்கம்...

இன்று முதல் அது நம்முடைய பழக்கமாகவும் இருக்கட்டுமே...

தொடரும்...

24 ஜூலை 2007

வாழ்க்கை - 2

நேற்றைய பதிவின் துவக்கத்தில் ராகவேந்தரின் தூக்கமின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அது கற்பகத்தின் புகாரில் துவங்கி திசைமாறி சென்றுவிட்டது.

இந்த தூக்கமின்மை (insomnia) சாதாரணமாக நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே வந்து தொற்றிக்கொள்ளக் கூடிய - இதை நோய் என்று சொல்ல முடியாவிட்டாலும் பல நோய்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய வழி என்று நிச்சயம் கூறலாம்.

இது ராகவேந்தரைப் போன்றவர்களுக்கு அதாவது உடல் உழைப்பு பெரிதாக ஏதும் இல்லாதவர்களுக்கு, சர்வசாதாரணமாக வருவதுண்டு.

ராகவேந்தர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பல பெரிய நிறுவனங்களுக்கு எச்.ஆர். கன்சல்டண்டாக இருந்து வருகிறார் - கடந்த ஐந்து வருடங்களாக. அவருக்கு வயது 56. பெரும் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை - உயர் அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை - எப்படி தெரிவு செய்வது, அவர்களுடைய உற்பத்தித் திறனை பெருக்குவது, அவர்களை கையாளும் விதம் என்பது போன்ற உத்திகளை அளிப்பது, தேவைப்பட்டால் அவர்களுக்கென்று பயிற்சி அளிப்பது... இத்யாதி, இத்யாதிகள்.

அவ்வப்போது - அதாவது மாதம் ஐந்தாறு முறை - பயணம் செய்வது என்பதை தவிர அவருடைய அலுவலில் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லை. அத்துடன் பெரும்பாலும் மூளையை அதாவது தங்களுடைய அறிவுத் திறனை பயன்படுத்தி உழைக்கும் பலராலும் (whitel collar job) அலுவலக நேரம் முடிந்தபிறகும் தங்களுடைய சிந்தனைகளை முடித்துக்கொள்ள முடிவதில்லை.

ராகவேந்தர் தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது 'you should know when to switch on and switch off your thoughts' என்பார் சர்வசாதாரணமாக. ஆனால் அவராலேயே அப்படி செய்ய முடிவதில்லை.

இத்தகைய active mind உள்ளவர்களால் இரவிலும் தங்களுடைய சிந்தனைகளை நிலைப்படுத்த முடிவதில்லை. இரவு படுக்கச் செல்லும்போது அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த விஷயங்களிலோ அல்லது நாளை நடக்கவிருக்கும் விஷயங்களையோ நினைத்து மனம் உழன்றுக்கொண்டே இருக்கும். இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என்ற தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைக் குறித்த ஆற்றாமையிலும் அல்லது இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்ற நாளைய தினத்துக்கான திட்டங்களிலும் இரவு நெடுநேரம் வரையிலும் விழித்திருப்பார்கள். அதே சிந்தனையுடன் உறங்கச் செல்லும் இவர்களுக்கு எளிதில் உறக்கம் வருவதில்லை.

ஐந்து வருடங்களாக பலமுறை முயன்றும் ராகவேந்தரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

இந்த தொல்லையிலிருந்து விடுபட ராகவேந்தர் காணாத மருத்துவர்கள் இல்லை. ஒவ்வொருத்தரும் அளித்த ஓவ்வொரு விதமான யோசனைகளில் அவரும் மேலும் குழம்பிப்போனதுதான் விளைவு.

அவருக்கு அளிக்கப்பட்ட அறிவுரைகளை பட்டியலிடுகிறார்.

1. வடக்கு பக்கம் தலைய வச்சி படுத்துப் பாக்கலாம் - ஆனா பெரிசா ஏதும் பலன் தெரியவில்லை.
2. தலையணை இல்லாமல் படுக்கணும். - கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்
3. படுக்க செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் மிதமான சுடுநீரில் குளிக்கணும் - ஆரம்பத்தில் சில நாட்கள் பலனளித்தது. அதற்குப் பிறகு? ஊஹும்.
4. படுக்க போறதுக்கு முன்னால சூடா ஒரு கப் பால் குடிக்கலாம் - பலனில்லை.
5. நல்ல ஸ்திரமான கட்டிலில் படுக்க வேண்டும், அதாவது மெத்தை இல்லாமல் - முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.
6. படுக்க போறதுக்கு முன்னால ஏதாச்சும் புத்தகம் வாசிக்கலாம் - படித்ததையே நினைத்துக்கொண்டு தூக்கத்தை களைந்ததுதான் மிச்சம்.
7. மிதமான சுடுநீரில் பாதங்களை வைத்து மசாஜ் செய்யலாம் - ஆரம்பத்தில் பலன் இருந்தது... ஆனால் இது முழுமையான தீர்வாக இல்லை.

இதையெல்லாவற்றிற்குப் பிறகும் படுத்ததும் உறங்கிப் போவது பிரச்சினையாகத்தான் இருந்தது.

யோகா முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றவே நண்பர்களிடம் விசாரித்து ஒரு யோகா பயிற்சியாளரை சென்று சந்தித்தார்:

அவரோ சார் நீங்க யோகா செஞ்சி பழகிட்டீங்கன்னா தூங்கறதையே குறைச்சிக்க முடியும் என்றார்!

அதாவது நாம் ஒரு நிமிடம் யோகா செய்தால் ஒரு நிமிடம் குறைவாக உறங்கினால் போதுமாம். மேலும் யோகா படுத்தவுடனே உறங்கிப்போவதற்கும் துணை செய்யுமாம்! அத்துடன் மன அழுத்தம், களைப்பு இவை எல்லாவற்றையுமே குறைத்து நாளடைவில் இல்லாமலும் செய்துவிடும் என்றபோது அதை முயற்சித்து பார்த்தால் என்ன என்று நினைத்தார்.

பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்த ஒரு சில எளிய யோகாசன முறைகளை செய்து பார்த்தார். நல்ல பலனை அளிக்கவே அதை தொடர்ந்து செய்வதென முடிவெடுத்தார்.

அதில் சில:

1. படுக்கையில் நேராக நீட்டி, இரண்டு கால்களையும் அருகருகில் ஒன்று சேர்த்து (ஒருகால் மீது ஒரு கால் அல்ல) மல்லாக்க, கூரையைப் பார்த்து படுக்க வேண்டும். தலையணை வேண்டாம் என்று இல்லை. ஆனால் மெலிதானதாக இருக்க வேண்டும்.
2. கைகள் இரண்டையும் உடலை ஒட்டி (இருப்பக்கமும்) வைத்துக்கொள்ள வேண்டும் (உள்ளங்கை (palm) மேலே பார்த்தபடி).
3. அவசரப்படாமல் மூச்சை உள்ளே இழுத்து (அதாவது கைக்குழந்தைகளைப் போன்று மூச்சு உள்வாங்கும்போது வயிற்றுப்பகுதி உப்பவேண்டும். வெளிவிடும்போது வயிற்றுப்பகுதி உள்வாங்க வேண்டும்) விடவேண்டும். இத்தனை முறை என்ற கணக்கு ஏதும் இல்லை. துவக்கத்தில் ஐந்து முறை உள்ளே-வெளியே என்று ஆரம்பிக்கலாம். இதன் முடிவிலும் உறக்கம் வரவில்லையென்றால் நீங்கள் சற்று முற்றிய கேஸ்தான் என்றார் யோகா பயிற்சியாளர்.

ஏற்கனவே யோகாவில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேறு சில வழிகளும் உண்டு.

அவற்றில் ஒன்று படுத்ததும் உள்ளங்காலில் இருந்து உச்சி வரை ஒவ்வொரு அங்கத்தையும் உணர்வது (feel). பிறகு அந்த அங்கத்தை ரிலாக்ஸ் செய்வது. இதற்கு மிகவும் பொறுமை தேவை. பயிற்சியும் தேவை. அது நம்மில் எத்தனை பேருக்கு வரும் என்பது தெரியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தும் தியானத்தில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இது எளிதில் முடியும். ஏனெனில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும் மனம் அலைபாய்ந்துக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும். வேண்டுமென்றால் நமக்குப் பிடித்த இசையை மெலிதாக வைத்துக் கேட்பதும் பலன் தரும்.

ஆரம்பத்தில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடும்போது அலைபாயும் மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். இழுத்து பிடித்து நிறுத்துவதில் பயனில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. நாளடைவில் பலனளிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அலுவலகத்திற்கு உள் அலுவலகத்திற்கு வெளியில் என்ற இருவகை வாழ்க்கைகளை வாழ பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்.

தொடரும்..

23 ஜூலை 2007

வாழ்க்கை - 1

இது ஒரு partly-nonfiction தொடர் என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்களும், சம்பாஷனைகளும் கற்பனையே. அப்படியே ஏதாவது வகையில்
ஒற்றுமை தோன்றினாலும் அது தற்செயலே என்பதை கூறிக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை.

என்னுடைய அனுபவங்களை, அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்களை, ஒரு கற்பனை குடும்பத் தலைவர் மூலம் கூறலாம் என்று நினைத்தேன். அந்த நபர் வலைப்பதிவர்கள் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கும் ஒருவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் ராகவன் என்ற பெயரைத் தெரிந்தெடுத்தேன். இதில் அந்த பெயருக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் ஆட்சேபம் ஏதும் இல்லையெனினும் நண்பர் சிவஞானம்ஜி இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய யோசனையை மறுதலிக்க நான் அவருடைய மாணவர் இல்லையே! ஆகவே அவருடைய விருப்பத்திற்கேற்ப குடும்பத்தலைவரின் பெயரை ராகவன் என்பதிலிருந்து ராகவேந்தர் என மாற்றியுள்ளேன்.

ராகவேந்திரனுக்கு அதிகாலையில் (அதாவது ஆறு மணி!) எழுந்துவிடும் பழக்கம் உண்டு.

Restless sleeper என்பார்களே அந்த ரகம். இரவு முழுவதும் தூக்கம் வராமல் உருண்டு, புரண்டுக்கொண்டிருப்பார்.

'என்னங்க நீங்க.. ஒங்கக் கூட பெரிய ரோதனையாப் போச்சி... ஒங்களால என் தூக்கமும் போவுது.' இது அவருடைய அருமை(!) மனைவி கற்பகத்தின் தினசரி புலம்பல். 'பேசாம நீங்க ஒரு ரூம்ல நான் ஒரு ரூம்ல படுத்துக்கணும்னு நினைக்கறேன்... இப்படியே போனா நான் ஆவி மாதிரி நடுராத்திரியில எழுந்து அலைய வேண்டியதுதான்.' என்றார் ஒருநாள் பொறுக்கமாட்டாமல் .

ஏற்கனவே மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையில் அவரும் கற்பகமும், இன்னொரு அறையில் அவர்களுடைய வாரிசுகளான கமலனும், கமலியும் (கமலனோட படுக்கை வடப்புற சுவருக்கருகிலும் கமலியின் படுக்கை தென்புற சுவருக்கருகிலும் சுமார் பத்தடி இடைவெளியில்..) மூன்றாவது படுக்கையறையில் ராகவனின் தந்தையும் தாயும்...

ராகவேந்தர்: 'இதுக்கு மேல நாலாவது படுக்கையறையா? என் தலைமேலதான் கட்டணும்.'

கற்பகம்: 'ஏன் கட்டுங்களேன்... மாடியில ஒரு ரூம் எடுங்க... அங்க படுக்கறதுக்கு மட்டுமில்லாம நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததுமே போய் ஒக்காந்துக்குங்க... நாங்களாவது கொஞ்சம் நிம்மதியா இருப்போம்.'

அட ராமா என்று நினைத்தார் ராகவேந்தர்.

'எப்படி இருக்கு பாருங்கப்பா. நா வீட்டுக்கு வர்றதே பிரச்சினைங்கறா மாதிரி சொல்றா பாருங்க.' என்றார் தந்தையிடம்.

'கற்பகம் சொல்றதுலயும் நியாயம் இருக்கு போலருக்கேடா.... நீ வீட்ல இருந்தாலே பிரச்சினையாத்தான வருது... நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம்கற.. பிள்ளைங்கள நிம்மதியா ரேடியோ கேக்க விடறயா? இல்ல ஒங்கம்மாவத்தான் டிவி சீரியல் பாக்க விடறயா? சரி, பகல் பொழுதுலதான் இந்த பிரச்சினைன்னா ராத்திரிலயும் அவள தூங்கவிடாம... அவள கட்டில்லருந்தே உருட்டி விட்டுடறியாம? பகலெல்லாம் வீட்டு வேலை செய்யற
பொம்பளைய நிம்மதியா தூங்கவிடாம இருந்தா அவ பின்னெ என்னடா சொல்வா?'

தேவையா இது என்று நொந்துப்போனார். 'ஒங்கக்கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாருங்க.. எனக்கு வேணும்..' என்று முனுமுனுத்தவாறு அந்த மாதமே ஒரு எஞ்சினியரைப் பிடித்து அவர் மூலமாக ஒரு மேஸ்திரியை பிடித்து மேல்தளத்தில் ஒரு விசாலமான - சுமார் ஐந்நூறு அடியில் - ஒரு அறையை அமைத்தார். அதில் குளியலறையுடனான படுக்கையறை, ஒரு சிறிய ஹால் (ஏன் கிச்சனையும் போட்டுருங்களேன் என்று கற்பகம் நக்கலாக சொல்ல.. அட! இதுவும் நல்ல ஐடியாவருக்கே என்ற நினைப்பில்) ஒரு குட்டி சமையலறை என போட்ட பட்ஜெட் எகிறியது.

'இது தேவையா?' என்று மீண்டும் முறையிட்ட தந்தையை முறைத்துப்பார்த்தார். ஆனால் எதிர்த்து பேச துணிவில்லை.

இது எங்க தலைமுறையோட தலைவிதி .. இந்த வயசுலயும் அப்பா, அம்மாவை எதிர்த்து பேச முடிய மாட்டேங்குது. ஆனா இந்ததலைமுறைய பாருங்க. கமலனையும் கமலியையும் ஏதாச்சும் சொல்ல முடியுதா... உடனே 'எங்களுக்கு தெரியும் டாட்' னு பதில் வந்துருது...

சில சமயங்களில் ராகவேந்தர் நினைத்துக்கொள்வார்...

ஏன் நம்ம ஜெனரேஷனுக்கு மட்டும் இந்த நிலை... சின்ன வயசுல அப்பா, அம்மாவுக்கு மட்டுமா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா ஏன் அவங்க ஃப்ரெண்ட்சுக்கும் பயந்து செத்தோம்.. ஒக்காருன்னா ஒக்காரணும், நில்லுன்னா நிக்கணும், ஓடுன்னா ஓடணும்... வீட்டுக்கு வர்றவங்கள புடிக்குதோ இல்லையோ பல்லெல்லாம் தெரியறாப்பல வாங்கன்னு சொல்லணும், தாத்தா, பாட்டி கால அமுக்கி விடணும், தாத்தாவுக்கு
பொடி, பாட்டிக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்து குடுக்கணும். இதல்லாம் போறாதுன்னு ஸ்கூலுக்கு வேற போய் வரணும்...

அன்னைக்கும் நாங்கதான் பெரியவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம்... இன்னைக்கும் நாங்கதான் எங்க பிள்ளைங்களுக்கு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கிட்டு போறோம்... எங்க ஜெனரேஷன் மட்டும் என்ன பாவம் பண்ண ஜென்மங்களா.. சொல்லுங்க..?

'ஏங்க வர்றவங்கக்கிட்டல்லாம் இதையே புலம்பணுமா?' இது கற்பகம்..

இதான் எங்க ஜெனரேஷனோட பொம்பளைங்களோட ஸ்பெஷாலிட்டி. பலவீனம்னு கூட சொல்லலாம். குடும்பத்துக்குள்ள என்னதான் பிரச்சினை என்றாலும் யாரிடமும் சிலவேளைகளில் தங்களுடைய கணவர்களிடம் கூட பகிர்ந்துக்கொள்ளாமல் ஆற்றாமைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து...

சரி திருமணத்தில்தான் சுதந்திரம் இருந்ததா என்றால் இல்லை.... பெண் பார்க்கவே மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு போக தேவையில்லை என்று நினைத்தார்கள் அன்றைய பெரியவர்கள்... 'நீ என்னடா தனியா வந்து பாக்கறது? எல்லாம் நாங்க பாத்துட்டு வந்து ஃபோட்டோவ காமிக்கோம்.. அது போறும்...'

அதுவும் குடும்பத்தில் கடைகுட்டியான ராகவேந்தர் விஷயத்தில் அந்த புகைப்பட சான்சும் கிடைக்கவில்லை. தாலிகட்டி முடித்த பிறகுதான் கற்பகத்தை முதன்முறையாக (அதாவது முழுமையாக, அதாவது முகத்தை!!) பார்க்க முடிந்தது!

ஆண்களுக்கே இந்த கதி என்றால் பெண்களூக்கு?

வயசுக்கு வந்துட்டா போறும்.. கல்யாணம், கல்யாணம்னு பொண்ணுக்கு சமைக்க தெரியுமா, துணி துவைக்க தெரியுமா, ஏன் ஒரு குடும்பத்த நடத்தவோ சுயமா சிந்திச்சி ஒரு முடிவெடுக்கவோ தெரியுமான்னுல்லாம் கவலைப்படாம சாதி சனம் சொல்லுதேன்னு கல்யாணத்த செஞ்சி வச்சிருவாங்க...

கற்பகம் திருமணமாகி வந்தபோதும் இதே நிலைதான்.

முதல் முதலாக ராகவேந்தர் தன் மனைவியுடன் ஜாலியாக(!) வெளியில் சென்றுவரலாம் என்று நினைத்து கற்பகத்தை ரகசியமாக சிக்னல் செய்து அழைத்தார். 'ஐயே ஒங்களோடவா, தனியாவா? பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க? இங்கனல்லாம் ரோட்டுலயே ஆம்பளைங்க ஒரு சைடு பொம்பளைங்க ஒரு சைடுன்னுதான் போவோம்...' என்று தயங்க நொந்துப்போனார்.

இந்த லட்சணத்துல முதல் இரவு என்பதே பத்து, பதினைந்து இரவுகள் கழித்துத்தான்....

காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ராகவேந்தருக்கு....

ஆனால் அந்த நிலையிலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளே, 'டேய் ராகு, என்ன அவ பாட்டுக்கு உள்ளாற போய் ஒக்காந்துட்டா... வீட்டு வேலையெல்லாம் யார் பாக்கறது... இங்க வந்து இத அம்மியில அறைச்சி குடுக்கச் சொல்லு... ஊர் போய் வந்ததுல எல்லா
துணியையும் நனைச்சி வச்சிருக்கேன்.. யார் துவைக்கறது?' என்ற தாயையும் 'என்னங்க வந்து ஒரு நா கூட முழுசா ஆகல, இப்படி சொல்றாங்க?' என்றவாறு பரிதாபமாக தன்னைப் பார்த்த மனைவியையும் வெறித்துப் பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தினமும் கற்பகம் வேலையையெல்லாம் முடித்துவிட்டு கைகளை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு படுக்கையறையை அடையும்போதே நள்ளிரவை நெருங்கியதுண்டு. கணவனை மட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தாரையும் அனுசரித்து போகவேண்டிய சூழலில் கர்பகத்தைப் போலவே கூலியில்லாத வேலைக்காரியாய் உழன்ற பெண்களின் கதைகள் எத்தனை, எத்தனை?

அதற்கும் 'நாங்கல்லாம் இப்படியாடா? வீட்லருக்கற பெரியவங்கள்லாம் படுத்துட்டாங்களான்னு பாத்து பட்டும் படாம இருந்தோம்.. இலை மறைவு காய் மறைவா குடும்பம் நடத்துனோம்.. புள்ளைகள பெத்துக்கிட்டோம்... இப்ப என்னடான்னா...' என்ற தன் தாயின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டார்.

ஆமாம், அதான் டஜன் கணக்குல பெத்தீங்களோன்னு கேக்கத்தான் தோன்றும். முடியாது.

ராகவேந்திரனுக்கு ஐந்து சகோதரர்கள் ஐந்து சகோதரிகள். இவர்தான் கடைக்குட்டி!!

அதுலயும் எங்க ஜெனரேஷந்தான் பாதிக்கப்பட்டோம்... கூட்டுக்குடும்ப தொல்லைகள் போறாதென்று ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துக்கும் மேல் குழந்தைகள்...

இந்த தொல்லைகளை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தே அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று என்று நிறுத்திக்கிட்டோம்...

ஆனால் அதுலயும் சந்தோஷம் கிடைச்சிதான்னு பார்த்தா....

தொடரும்...

21 ஜூலை 2007

தி.பா.தொடர் - நிறுத்தம்!!

ஆங்கிலத்தில் jinxed என்ற வார்த்தையை கேட்டிருப்பீர்கள்.

நாம் சில விஷயங்களை செய்ய நினைக்கும்போதே நம் உள்ளுணர்வு 'இது தேவையா?' என்ற கேள்வியை எழுப்பும். அதை பொருட்படுத்தாமல் நாம் அந்த விஷயத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் நாம் சற்றும் எதிர்பாராத சங்கடங்கள், தடங்கல்கள் ஏற்படும்.

சஞ்சய்கான் திப்பு சுல்தான் வாழ்க்கையை தொலைக்காட்சி தொடராக எடுக்க முயன்றபோதும் பல தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். திப்புசுல்தானின் வாளை விஜய் மல்லையா பொது ஏலத்தில் எடுத்தபோதும் பலரும் 'இது தேவையா?' என்றார்கள்.

ஏனெனில் அது ஒரு jinexd வாள் (அதாவது சாபத்தை சுமந்துள்ள) என்று பலரும் நினைத்தார்கள்.

அதுபோலத்தான் நம்முடைய சூப்ரீம் ஸ்டாரின் மருதநாயகம் திரைப்படமும். அந்த கதையும் ஒரு jinxed கதை என்பது திரையுலகில் பலருடைய கருத்து. ஆகவேதான் எலிசபெத் ராணியே க்ளாப் அடித்து துவக்கி வைத்தும் அது ட்ரெய்லரோடு நின்றுபோனது. அதில் ஏற்பட்ட விரிசல் அவருடைய திருமணத்தையே முறித்துப்போட்டது...

என்னுடைய மும்பை அனுபவங்களும் இந்த வகையைச் சார்ந்ததுதானோ என்று நினைக்கின்றேன். அவற்றை எழுதலாம் என்று துவங்கும்போதெல்லாம் எங்கிருந்தாவது தடங்கல்கள், சங்கடங்கள் வருகின்றன.

ஆங்கிலத்தில் எழுதியபோதும் சில indirectஆக சிலர் இது வேணாம் டிபிஆர் என்றார்கள். துவக்கத்தில் வருவது வரட்டும் என்று நினைத்தாலும் நாளடைவில் நானே அதை நிறுத்தினேன்.

சுமார் ஒரு வருட காலத்திற்குப் பிறகு தமிழில், ஆங்கிலத்தில் எழுதியதுபோன்று விலாவாரியாக எழுதாமல் தேவைப்பட்டதை மட்டும் எழுதினால் என்ன என்று நினைத்துத்தான் துவங்கினேன்.

பணியில் இருக்கும்போதே இப்படி எழுதினால் சங்கடங்கள் வருமே என்று ஒரு நண்பர் எந்த நேரத்தில் கேட்டாரோ தெரியவில்லை மீண்டும் ஒரு indirectஆன தடங்கல், வேண்டுகோள் உருவத்தில்.

ஆகவே தி.பா.தொடர் நிறுத்தப்படுகிறது, தாற்காலிகமாக. அதாவது பணியில் இருந்து ஓய்வுபெறும் வரை....

ஆனாலும் எழுத ஆரம்பித்த கை சும்மா இருக்காதே...

என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுத யாரும் தடை செய்ய முடியாதல்லவா?

ஆகவேதான் தி.பா. தொடரின் அடுத்த பகுதி வாழ்க்கைப் பயணம் என்ற புதிய நாமத்தில்... எதிர்வரும் திங்கள் முதல்..

ஆனால் இதில் ஒரு கற்பனை குடும்பத்தை அறிமுகப்படுத்தி அதன் வழியாக நான் சொல்ல நினைப்பதை சொல்லலாம் என்று எண்ணம்...

கற்பனை குடும்பத்தினர் இவர்கள்தான்.

குடும்பத் தலைவர்: ராகவன். ஏன் இந்த பெயர் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? இன்றைய தமிழ்மண சூழலில் இந்த பெயர் இருவருக்கு சொந்தம். ஒருவர் வலைப்பதிவர்கள் மத்தியில் ஹீரோ... அவருடைய எழுத்துத் திறமையாலும் மற்றவர்களுடைய எழுத்தை உளம் திறந்து பாராட்டுபவர் என்பதாலும் பலராலும் விரும்பப்படுபவர்... மற்றவர்... அவரும் பிரபலம்தான்.. ஆனால் வேறொரு காரணத்திற்காக... அது நமக்கு தேவையில்லாத ஒன்று.. இருந்தாலும் அவரையும் எல்லோருக்கும் தெரியும்.... ஆகவே என்னுடைய கற்பனை பாத்திரத்திற்கும் அதே பெயர்....

குடும்பத் தலைவி: கற்பகம். இந்த பெயருக்கு எந்த காரணமும் இல்லை. வேறொரு வலைப்பதிவாளரின் பெயரைத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் இந்த பாத்திரத்தின் மூலமாக நான் சொல்ல நினைக்கும் பல விஷயங்களை அவருடன் தொடர்புபடுத்திவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அதை தவிர்த்துவிட்டேன். ஒருமுறை நம்முடைய தமிழ்மண வலைப்பதிவர் ஒருவர் என்னுடைய 'அப்பா ஒரு ஹிட்லர்' கதையில் வரும் ஹிட்லர் நீங்கதான சார் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. ஆகவேதான் நடுநிலையாக கற்பகம்.

வாரிசுகள்: கமலன், கமலி... ரைமிங்காக இருக்கட்டுமே என்றுதான்... வேறொன்றுமில்லை...

குடும்பத்தலைவரின் தந்தை: மாதவன். அவருடைய மனைவி: மங்களம்.

என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதே இதன் நோக்கம்...

இதில் உணவுமுறை, உடற்பயிற்சி, சுயமருத்துவம், வீடு மற்றும் வாகனபராமரிப்பு, பிரச்சினைகளை அணுகும் முறை, தலைமுறை பேதங்கள் என எல்லாவற்றையும் அலசலாம் என்று இருக்கிறேன்...

இதில் நான் கூற நினைத்திருக்கும் அனைத்தும் என்னுடைய அனுபவங்களின் மூலமாக நான் கற்று தெளிந்துக்கொண்டவைகள் மட்டுமே. இது சரி என்றோ அல்லது இதுதான் சரி என்ற வாதமோ, பிடிவாதமோ இருக்காது...

என்னுடைய கோணத்திலிருந்து எனக்கு படுபவற்றை மட்டுமே எழுதுகிறேன்... சில சர்ச்சைக்குரிய விஷயங்களாகவும் இருக்கலாம்... ஆனால் நிச்சயம் பிரசங்கமாகவோ, அல்லது அதிகப்பிரசங்கமாகவோ நிச்சயம் இருக்காது....

தி.பா தொடர் வந்த அதே நாட்களில் வரும்...

17 ஜூலை 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 3

நேற்றைய பதிவில் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான தில்லுமுல்லுவைக் குறித்து வெளிவந்த செய்தியின் சாராம்சத்தைப் பார்த்தோம்.

இதே சம்பவத்தைக் குறித்து ஞாயிறன்று வேறொரு வங்கியும் இதே நபரைக் குறித்து ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இதே நபர் அவர்களுடைய வங்கியில் சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றியபோது இதே உத்தியைக் கையாண்டு சுமார் ரூ.3 கோடி அளவுக்கு கையாண்டுள்ளார் என்கிறது அந்த வங்கி!

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வங்கி ஒரு வெளிநாட்டு வங்கி. அதாவது கணினி மயமாக்கத்தில் உச்ச நிலையில் உள்ள வங்கி.

இதுபோன்ற தில்லுமுல்லுகள் நடைபெறாமலிருக்க இன்று எங்களைப் போன்ற வங்கிகளிலேயே பல உக்திகளை மென்பொருள் வடிவத்தில் (அதாவது நாங்களே வடிவமைத்து) அறிமுகப் படுத்தியுள்ளோம்.

அதாவது எந்த ஒரு கணக்கிலும் வரவோ, பற்றோ வைக்கப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட வேலைநாளின் இறுதியில் (at the day end) மென்பொருள் அதன் விவரத்தை மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவித்துவிடும்.

உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய கடன் கணக்கில் ரூ.பத்தாயிரத்தை காலை பதினோரு மணிக்கு செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்று வங்கி கணக்கு முடிக்கப்பட்டவுடன் நீங்கள் வங்கியில் பதிந்து வைத்துள்ள மின்னஞ்சல் விலாசத்திற்கு எங்களுடைய மென்பொருள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் விலாசத்தை வங்கியில் அளித்து இந்த சலுகை கிடைக்க விண்ணப்பிக்க வேண்டும், அவ்வளவுதான். மாதம் இத்தனை மின்னஞ்சல் வரை கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு மேல் போனால் ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படும்.

நீங்கள் வங்கிக்கு நேரடியாக வர இயலாத பட்சத்தில் உங்களுடைய பணியாள் அல்லது நண்பர்/உறவினர்கள் மூலம் தவணையை பணமாகவோ, காசோலையாக உங்களுடைய கணக்கில் வரவு வைக்குமாறு அனுப்பியிருந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உங்களுக்கு தகவல் வந்துவிடும். இல்லையென்றால் வங்கி கிளையை அணுகி விளக்கம் கேட்க முடியும்.

முதல் தலைமுறை வங்கியான எங்களுடைய வங்கியிலேயே இத்தகைய ஏற்பாடுகள் இருக்கையில் தங்களுடைய வங்கியின் பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளன என மார்தட்டிக்கொள்ளும் இந்த இரண்டாம் தலைமுறை மற்றும் மேலைநாட்டு வங்கிகள் இந்த அடிப்படை வசதிகளைக் கூட தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதை நம்பமுடியவில்லை.

சரி. அது போகட்டும். வாடிக்கையாளர்கள் வங்கியில் டெப்பாசிட் செய்யும் சொத்து பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கென சில விதிமுறைகளை ஒவ்வொரு வங்கியும் வகுத்திருக்கும். அதன்படி சம்பந்தப்பட்ட பத்திரங்களை மத்திய அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு எந்த நிலையிலுள்ள அதிகாரிகளை வங்கி அனுமதித்துள்ளதோ அதே அதிகாரிகள் மட்டுமே அங்கிருந்து பத்திரங்களை திரும்பிப் பெற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது கிளை மேலாளர் நிலையிலுள்ள அதிகாரி மட்டுமே அத்தகைய ஆவணங்களை மத்திய அலுவலக்த்திற்கு அனுப்ப அதிகாரம் உண்டு என்றால் அவரால் மட்டுமே அவற்றை கடனை அடைத்து முடித்தபிறகு திருப்பிக் கோர அதிகாரம் இருக்கும். சாதாரணமாக எந்த வங்கியிலும் இத்தகைய அதிகாரத்தை தனிநபர் ஒருவருக்கு மட்டும் அளிப்பதில்லை. குறைந்த பட்சம் இருவராவது இணைந்து இத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நியதி இந்த வங்கிகள் இல்லை அல்லது அந்த நியதி வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது என்பது வெளியாகியுள்ள செய்திகளில் இருந்தே தெரிகிறது.

சரி. அதுவும் போகட்டும். சாதாரணமாக ஒரு கடனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் அந்த கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கு திருப்பியளிக்கப்படும். வங்கி பரிவர்த்தனைகள் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டுள்ள இந்த வங்கிகளில் ஒரு கடன் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை மத்திய அலுவலகத்திலிருந்தே கண்டுபிடித்துவிட முடியும். அப்படியிருக்க ஏதோ ஒரு கிளையிலிருந்து ஒரு அதிகாரி மின்னஞ்சல் வழியாக கேட்டார் என்று திருப்பிச் செலுத்தப்படாத கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரங்களை அவருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர் என்பதையும் எப்படி நம்புவது?

ஆகவே இதை ஒரு தனி நபருடைய புத்தி சாதுரியத்தால் நடைபெற்ற தில்லுமுல்லு என்பதை விட வங்கியிலிருந்த நடைமுறை நியதிகளுள் உள்ள குறைபாடுகளால் நடைபெற்ற தில்லுமுல்லு என்றே கூறவேண்டும்.

இதை செய்திகளில் குறிப்பிட்டுள்ள நபரால் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்பதும் உண்மை.

இத்தகைய தில்லுமுல்லுகள் நீங்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க சில யோசனைகள்:

1. கடன் வாங்கும்போது:

அ. கடனுக்காக நீங்கள் கையொப்பமிட்ட வங்கி ஆவணங்களின் நகலைக் கோர உங்களுக்கு உரிமை உண்டு. சரிவர நிரப்பப்படாத படிவங்களில் கையொப்பமிடாதீர்கள்.

ஆ. கடனுக்கு ஈடாக வங்கியில் அடகு வைக்கும் சொத்து ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இ. நீங்கள் வங்கியில் டெப்பாசிட் செய்த பத்திரங்களின் பட்டியலை தயாரித்து அதில் எந்த வங்கி அதிகாரியிடம் அவற்றை ஒப்படைக்கிறீர்களோ அவர்களுடைய அலுவலக முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. கடன் பெற்ற பிறகு:

அ. உங்களுடைய கடன் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ நேரடியாக வங்கியிலேயே செலுத்தி விடுங்கள். வங்கி நியமித்த ஏஜண்டுகள் மூலமாக செலுத்தாமல் இருப்பது நல்லது. நேரடியாக செல்ல முடியாத பட்சத்தில் காசோலையை தபால் மூலமாக செலுத்துங்கள். காசோலையாக அனுப்பும் பட்சத்தில் அதன் ஜெராக்ஸ் நகலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ரொக்கமாக செலுத்திய வங்கி சல்லான்களை கடன் முழுவதையும் அடைத்து தீர்த்து பத்திரங்கள் உங்கள் கைக்கு திருப்பிக் கிடைக்கும்வரை வைத்திருங்கள்.

ஆ. நீங்கள் இறுதியாக செலுத்த வேண்டிய தவணையின் தியதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் தொகையை செலுத்தி முடித்தப் பிறகு அதிக தாமதமில்லாமல் கடன் பத்திரங்களை திருப்பி பெற்றுக்கொள்வதில் முனைப்பாயிருங்கள்.

முக்கியமாக இரண்டாம் தலைமுறை வங்கிகளில் வழக்கத்திலுள்ள முறை அதாவது எல்லா கடன்களூக்குண்டான சொத்து பத்திரங்களையும் மத்திய அலுவலகத்தில் சேமித்து வைக்கும் முறை நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தில் முடிய வாய்ப்புள்ளது. இருபதாண்டுகள் கழித்து உங்களுடைய சொத்து பத்திரங்களை கோரி விண்ணப்பிக்கும்போது லட்சக்கணக்கான கணக்குகளின் சொத்து பத்திரங்களிலிருந்து உங்களுடையதைத் தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்கென்றே தனியாக ஒரு மென்பொருள் தேவைப்படும்!!

ஆகவே இதை விளையாட்டாக நினையாமல் உங்களுடைய சொத்து பத்திரங்களை பத்திரப்படுத்திக்கொள்வதில் எச்சரிக்கையாயிருங்கள்!

தொடரும்..

16 ஜூலை 2007

வங்கி தில்லுமுல்லுகள் - 2

வங்கிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று துவங்கியது நினைவிருக்கலாம்.

ஆனால் நேரமின்மை காரணமாகவும் இத்தொடரின் முதல் பதிவை என் நெருங்கிய நண்பர்கள் சிலரைத் தவிர அவ்வளவாக சக வலைப்பதிவாளர்கள் யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்பதாலும் தொடர்ந்து எழுத மனமில்லாமல் நிறுத்தியிருந்தேன்.

ஆனால் என்னுடைய முதல் புத்தகத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவில் நண்பர் 'சாம்பார்வடை' கடந்த வெள்ளியன்று செய்தித்தாள்களில் வெளிவந்த ஒரு நூதன மோசடியைப் பற்றி குறிப்பிட்டு என்னுடைய கருத்தைக் கேட்டிருந்ததால் இத்தொடரின் அடுத்த பதிவை எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நண்பர் குறிப்பிட்ட வங்கி மோசடியில் அத்தனை பெரிதாக நூதனம் ஏதும் இல்லை. ஆனால் இதுபோன்ற மோசடிகள் நடப்பதற்கு பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கியில் நடைமுறையிலுள்ள விதிமுறைகளை அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரிவர கடைபிடிக்க தவறுவதுதான் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. மேலும் இத்தகைய வங்கிகளில் கணினியின் ஆதிக்கம் அதிகமாகிப் போய் மனிதர்கள் marginalise செய்யப்படுவதன் விளைவும் இதற்குக் காரணம் என்று கருதுகிறேன்.

வங்கிகள் தற்சமயம் வழங்கிவரும் தனிநபர் கடன்களில் மிக முக்கியமானது வீட்டு வசதிக் கடன். எங்களுடையதைப் போன்ற முதல் தலைமுறை தனியார் வங்கிகளில் மட்டுமல்லாமல் அரசுடமை வங்கிகளிலும் இத்தகைய கடன்களை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களை தெரிவு செய்வதிலிருந்து கடன் வழங்கி, வசூலித்து முடிக்கும் வரை வங்கிக் கிளைகளில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் வழியாகவே சகல பரிவர்த்தனைகளும் நடக்கின்றன.

ஆனால் இரண்டாம் தலைமுறை வங்கிகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை தெரிவு செய்வது வங்கியல்லாத நிறுவனங்களாக இருக்கும். இவர்களை Direct Selling Agents என அழைப்பதுண்டு. வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் வங்கிகளில் கிடைக்கும் கடன் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி மிகைப்படுத்தி சொல்வது, வேண்டாம் என்பவர்களையும் நிர்பந்தித்து வீடுவரை சென்று காண்பது, அவர்களை தங்களுடைய சாதுரியமான பேச்சால் வசியப்படுத்தி வங்கி விண்ணப்பப் படிவங்களில் கையொப்பம் பெற்று அவர்களைக் குறித்து முழுவதுமாக விசாரிக்காமல் அவர்கள் கடன் பெறுவதற்கு முழு தகுதியும் உள்ளவர்களே என்று சான்றிதழுடன் அவர்களுடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வது என கடன் பெறுவதற்காக மட்டும் வங்கிக்கு ஒருமுறை சென்றால் போதும் என்ற சூழலை உருவாக்குவது இவர்களது பணி. இவர்களுடைய பரிந்துரையை ஏற்று கடன் வழங்கப்படும் பட்சத்தில் இவர்களுக்குண்டான கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு கழன்றுக்கொள்வார்கள்.

சாதாரணமாக இத்தகைய வீட்டு வசதிக் கடன்களுக்கு ஆதாரம் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரம்தான். வங்கிகளில் அடகு வைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள் கடன் வழங்கப்பட்ட கிளையிலேயே சேஃப்ட்டி லாக்கரில் வைக்கப்படுவது வழக்கம். என்னென்ன பத்திரங்கள் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் அதற்கென வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் குறிக்கப்பட்டு கடந்தாரரும் கிளை மேலாளரும் கையொப்பமிடுவார்கள். பத்திரம் வைக்கப்பட்டுள்ள சேஃப்ட்டி லாக்கரை மேலாளரும் அவருடன் சேர்ந்து வேறொரு துணை அதிகாரியும் இல்லாமல் திறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் வரும் உள் தணிக்கையாளர்கள் (Internal Inspectors) கிளையிலிருந்து அசையா சொத்துக்களின் மீது வழங்கப்பட்டுள்ள சகல கடன்களுக்கும் (வீட்டு வசதிக் கடனும் இதில் அடங்கும்) ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்து பத்திரங்கள் லாக்கரில் உள்ளதா என்றும் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது நியதி.

கடனை மாதா மாதம் வாடிக்கையாளரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ ரொக்கமாகவோ காசோலையாகவோ வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். அதை வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வசூலிக்க எந்த வங்கி ஊழியருக்கும் அதிகாரம் அளிக்கப்படுவதில்லை. இது கிளை மேலாளருக்கும் பொருந்தும். அப்படியே பெற்றுக்கொண்டாலும் வங்கியின் பெயருக்கு அளிக்கப்பட்டுள்ள காசோலையாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். காசோலையை வரவு வைத்ததும் தங்களுடைய கணக்கில் இன்ன தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என வாடிக்கையாளருக்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து தவணை செலுத்தாத வாடிக்கையாளருக்கு வங்கியே நேரடியாக கடிதம் எழுதவோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ முயலுமமே தவிர சில வங்கிகள் செய்வதுபோன்று அடியாட்களை ஏவிவிடுவதில்லை. மூன்று மாதங்கள் தொடர்ந்து செலுத்தப்படாத கணக்குகள் செயலிழந்த கடன்களாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க துவங்கும். சில கிளை மேலாளர்கள் அதிகப்பிரசங்கித்தனமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகையை அவர்களுடைய புகைப்படத்துடன் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடுவதும் உண்டு.

கடன் முழுவதும் அடைத்து தீர்க்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட சொத்து பத்திரங்களை சேஃப்டி லாக்கரில் இருந்து எடுத்து சம்பந்தப்பட்ட கடந்தாரரிடம் முன்பு பதிந்து வைத்திருந்த புத்தகத்தில் 'பெற்றுக்கொண்டேன்' என்று கையொப்பம் பெற்றுக்கொண்டு திருப்பி வழங்கிவிடுவார்கள்.

இதுதான் எங்களைப் போன்ற முதல் தலைமுறை மற்றும் அரசு வங்கிகளில் கடைபிடித்து வரும் நடைமுறை.

ஆகவே செய்தித்தாளில் வந்துள்ளது போன்ற மோசடி இத்தகைய வங்கிகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் சமீப காலத்தில் துவங்கப்பட்ட இரண்டாம் தலைமுறை வங்கிகள் தங்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் முழுவதையும் கணினிமயமாக்கியதுடன் கடன் வழங்கும் முறைகளையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளன. அதாவது வங்கி கிளைகள் சேமிப்பு திரட்டும் மற்றும் கடன் வசூலிக்கும் இயந்திரங்களாகவே இயங்கி வருகின்றன.

கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பது, அனுமதி வழங்குவது (sanction) மட்டுமல்லாமல் கடன் தொகை பைசல் செய்வது போன்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் மத்திய அலுவலகத்திலிருந்தே மென்பொருள் வழியாக நடத்தப்படுகின்றன. வங்கி கிளை மேலாளர்களுடைய வேலை சம்பந்தப்பட்ட கடன்களூக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்து ஆவணங்களை பெற்று மத்திய அலுவலகங்களூக்கு அனுப்பி வைப்பதுடன் முடிந்துவிடுகிறது. கடனை சரிவர திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கவும் வெளியாட்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவதால் வங்கி சம்பந்தப்படாத எவர் வேண்டுமானாலும் ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கலாம் என்ற சூழல்.

கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் கூட உடனே அடகு வைக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்படுவதில்லை. அது மத்திய அலுவலகத்திலிருந்து வந்து சேரவே சில சமயங்களில் இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிடுவதுண்டு.

இத்தகைய ஒழுங்கற்ற அல்லது நடைமுறைக்கு ஒத்துவராத நியதிகளே நேற்றைய செய்தித்தாளில் வெளியான மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்றால் மிகையாகாது.

ஆனால் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதுபோன்று ஒரு ஜூனியர் அதிகாரியின் மின்னஞ்சலை நம்பி வங்கியின் மத்திய அலுவலகம் சொத்து ஆவணங்கள் அவருக்கு அனுப்பி வைத்தன என்பதை நம்புவதற்கில்லை.

மேலும் சுமார் ரூ.75 லட்சம் வரை அவர் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலித்து அதை கபளீகரம் செய்தார் என்பதும் தன்னிடமிருந்த ஆவணங்களை தனியார்களிடம் அடகு வைத்து கடன் பெற்றார் என்பதும் கூட நம்ப முடியவில்லை.

ஆகவே முழுமையான போலீஸ் விசாரனைக்குப் பிறகே உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவரும்.

**********

13 ஜூலை 2007

புத்தக மதிப்புரைக்கு விளக்கங்கள்

முதலில் என்னுடைய 'சந்தோஷமா கடன் வாங்குங்க' புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய நண்பர் ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இனி அவர் தன்னுடைய மதிப்புரையில் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு என்னாலான விளக்கங்கள்:

'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்....' இதை கம்பர் எழுதியதாகத்தான் பலரும் கருதுகிறார்கள் என்பது உங்களுடைய பதிவில் வந்த பின்னூட்டங்களில் ஒருவரைத் தவிர யாரும் மறுக்காமல் விட்டதிலிருந்தே தெரிகிறது. இருப்பினும் தவற்றை அடுத்த பதிவில் திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

இத்தகைய புத்தகங்களில் காணப்படும் பலவீனங்கள் என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான். ஆனால் அடுத்துவரும் பதிப்புகளில் (editions) அன்றைய வழக்கத்திலிருப்பவற்றை அளிப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும் என்று கருதுகிறேன்.

அதேபோன்று அவற்றில் அளிக்கப்படும் புள்ளி விவரங்களும், மாதிரிகளும் கூட சம்பந்தப்பட்ட வாசகர்களை மட்டுமே ஈர்க்கும். கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தை அணுகுபவர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்பது என் கருத்து. மற்றபடி பொழுதுபோக்குக்காக படிப்பவர்களை இது அவ்வளவாக ஈர்க்காது.

என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம்.

ஆனால் கடன் வாங்குபவர்கள் flat rate மற்றும் Interest on reducing balances என்ற இருவகை வட்டி வசூலிக்கும் முறைகளில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட மாதிரிகள் அவை. ஆனால் புதிய தலைமுறை வங்கிகள் சிலவற்றில் பணியாற்றும் சில நண்பர்கள் இப்படி generalise செய்தது சரியா என்று கேட்டதென்னவோ உண்மை. என்னுடைய மாதிரிகள் அவர்கள் கடைபிடிக்கும் முறையை குறைகூறும் முயற்சியல்ல என்று பதிலளித்தேன். கடன் வாங்கும் சாதாரணியர்கள் (laymen) இந்த பாகுபாட்டை நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததால் அவற்றை அளிப்பது என முடிவெடுத்தேன்.

குறைபாடுகள்:

Index: புத்தகத்தின் இறுதியில் அளித்திருக்கலாம். இதற்கு தேவையான மென்பொருள் என்னிடம் இல்லை. பதிப்பகத்தாரின் உதவியுடன் அடுத்த பதிவில் தர முயல்கிறேன்.

Telemarketing: இதற்கென தனி அத்தியாயம் வேண்டும் என்பது உண்மைதான். அடுத்த பதிவில் தருவதற்கு முயல்கிறேன்.

Preclosure: இதையும் விரிவாக கூறுவதற்கு ஒரு தனி அத்தியாயம் தேவை. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இது வங்கிகள் கடைபிடிக்கும் Asset- Liability Management (ALM) Policyஐ பொறுத்து அமைந்திருக்கும் எனலாம். வங்கிகள் தங்களுடைய சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் அதனதன் காலத்தைப் பொறுத்தும் வங்கியின் ALM கொள்கைக்கு ஏற்றவாறும் அமைந்திருக்கும். நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்.

Interest on deposits: இதுவும் ஒரு ALM exerciseதான். வங்கிகள் எப்போதுமே நீண்ட கால சேமிப்பை விரும்புவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அன்றாடம் மாறி வரும் நாட்டின் பொருளாதார கொள்கைதான். நம்முடைய நாட்டின் பொருளாதரம் உலக சந்தையுடன் இணைக்கப்பட்டதிலிருந்து (இது ஒரு தாராள பொருளாதார கொள்கையின் விளைவு என்றும் கூறலாம்) உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் ஒரு காரணம். இன்றிலிருந்து மூன்று வருடங்களில் பணச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று முன்கூட்டியே கணிக்கவியலாத அளவிற்கு பொருளாதாரம் ஒரு நிச்சயமற்றதன்மையைக் கொண்டுள்ளது. ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது. நீண்டகால கடன் திட்டங்களுக்கு குறைந்த வட்டி விகிதம் விதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் வெளியிடுவது: இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. எங்களுடைய வங்கி ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதை சற்று கூர்ந்து கவனியுங்கள். நடுத்தர மக்களுடைய அதுவும் பெரும்பாலும் சிறு வணிகம் செய்வோர், குடியிருக்க வீடு வாங்க கடன் பெற்றவர்களுடைய புகைப்படங்களே வெளியிடப்படுகின்றன. நடுத்தர மற்றும் பெரு வணிகர்கள், தொழிலதிபர்களுடைய புகைப்படங்களை வெளியிடட்டும் பார்க்கலாம்.

கடன் விழாக்கள்: எனக்கு இன்னும் முப்பது மாத காலம் பணிக்காலம் உள்ளதே:-)

மேலும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுவதற்கு எந்த பதிப்பகத்தாரும் முன்வர தயங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை எழுத்தாளரே அவருடைய சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சந்திக்க தயார் என்றால், இது சாத்தியமாகலாம். அந்த அளவுக்கு நெஞ்சுறுதி எனக்கு இல்லை.. பணவசதியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அறியாதவர்களா நம் தலைவர்கள்? அதுதான் இன்றைய நிர்பந்தம். ஆகவேதான் இதை அரசியல் என்று கூறி தள்ளிவிடுகிறோம்.

இந்த நீண்ட விளக்கத்தை பின்னூட்டமாக இடுவது சிரமம் என்பதால்தான் தனிப்பதிவாக வெளியிட முன்வந்தேன் டூண்டுக்கு பயந்து அல்ல:-)

மீண்டும் மதிப்புரை எழுதிய சீனியர் ராகவன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

12 ஜூலை 2007

என் முதல் புத்தகம்

நான் தமிழில் எழுத ஆரம்பித்ததே சமீபத்தில்தான்.

இத்தனை விரைவில் ஒரு புத்தகம் எழுத முடியும் என்றோ அல்லது அதை ஒரு பிரபல பதிப்பகத்தார் மூலம் வெளிக்கொணர முடியும் என்றோ நான் கனவிலும் நினைத்ததில்லை.

தமிழில் வலைப்பூ ஒன்றை துவக்கி எழுத நினைத்ததே ஒரு விபத்துபோலத்தான். அதுவே ஒரு பதிப்பகத்தாரின் கவனத்தை ஈர்த்து என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரிக்க வைத்தது மேலும் ஒரு இனிய விபத்து.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் நண்பர் பத்ரி அவர்களிடமிருந்து 'வசதிப்படும்போது அலுவலகம் வரை வந்து செல்லவியலுமா?' என்று தொலைபேசி வந்தபோது என்ன ஏது என்று கேட்க தோன்றவில்லை. அந்த வாரமே ஒருநாள் அவருடைய அலுவலகம் சென்று அவரையும் அவருடைய தலைமை ஆசிரியர் பா.ராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்று அவர்கள் இருவரும் தெரிவித்தபோது என்னால் அதை சரிவர செய்யமுடியுமா என்ற ஐயம் எழுந்தது.

இதற்கு காரணம் இருந்தது.

Non-fiction எனப்படும் கட்டுரைகள் எழுதுவது என்பது அத்தனை கடினமல்ல. அது சென்றடையும் வாசகர்களின் தரம் சற்று உயர்ந்ததாகவே இருக்கும். இத்தகைய கட்டுரைகளை படிக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக அவற்றை தேடி படிக்கும் வாசகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் எழுதினாலே போதும்.

ஆனால் ஒரு முழு புத்தகத்தையும் அதை வாசிப்பவர்களின் ஆர்வம் குறைந்துவிடாமல் - அதாவது சுமார் ஒரு மணி நேரம் - எழுதுவது என்பது... என்னைப் பொறுத்தவரை மலைப்பாகத்தான் இருந்தது.

அதுவும் வங்கி சார்ந்த புத்தகம் எழுதுவது...

ஆயினும் என் மீது அவர்கள் இருவரும் வைத்திருந்த நம்பிக்கையை அல்லது எதிர்பார்ப்பை ஏமாற்றுவது சரியல்லவே என்று நினைத்து அடுத்த சில வாரங்களில் சென்னை நகரத்திலிருந்த பல புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கினேன். ஒரு வழிகாட்டுதலுக்கு, ஒரு மாதிரிக்கு, ஒரு புத்தகம் கிடைக்குமே என்ற ஆவலுடன்... அதுவும் தமிழில்..

ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை... .

ஆங்கிலத்திலும் கூட வங்கி பரிவர்த்தனைகளைப் பற்றிய முழுமையான புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை..

என்னுடைய வங்கி அனுபவத்திலிருந்தே ஒரு கருவை உருவாக்கி அதை எப்படி புத்தகமாக வடிவமைக்கப் போகிறேன் என்று ஒரு குறிப்பை தயாரித்து பத்ரி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

என்னுடைய குறிப்பில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 'நீங்கள் இதை பல அத்தியாயங்களாகப் பிரித்து மென் நகலை எனக்கு அனுப்பிவிடுங்கள், நான் என்னுடைய ஆசிரியர்களிடம் கொடுத்து தேவைப்பட்டால் அதை வாசகர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி எழுதச் சொல்கிறேன்.' என்றார்.

அப்படி துவங்கியதுதான் இந்த புத்தகம்...

புத்தகம் முழுவதையும் எழுதி முடிக்க சுமார் மூன்று மாத காலம் பிடித்தது என்றாலும் என்னுடைய எழுத்தை பழுது பார்த்து ஒரு அழகான புத்தகமாக வடிவமைத்து வெளியிட்ட பெருமை பதிப்பகத்தாரையும் அதன் ஆசிரியர் குழுவையே சாரும்.

ஆயினும் சில இடங்களில் எழுத்து நடை சற்று ஜனரஞ்சகமாக போய்விட்டதோ என்று புத்தகத்தைப் படித்த என்னுடைய சில வங்கி நண்பர்கள் கூறியதென்னவோ உண்மை!

'இப்படி எழுதினால் மட்டுமே தமிழ் வாசகர்கள் படிப்பார்கள் அல்லது வாசகர்கள் மத்தியில் இத்தகைய புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கும்' என்றால் அது எந்த அளவுக்கு சரி என்பது தமிழ் புத்தக உலகில் அதிக அனுபவம் இல்லாத எனக்கு தெரியவில்லை.

இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் புத்தகக் கடைகளில் ஏறி, இறங்கி பல எழுத்தாளர்களுடைய புத்தகங்களை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பெரும்பாலானவை இத்தகைய நடையில்தான் இருந்தது.

ஆனால் எனக்கு தெரிந்தவரை ஆங்கிலத்தில் இந்நிலை இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்தே, வாசகர்கள் அவருடைய நிலைக்கு (level) உயர்ந்து, வாசிக்க பழகிக்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் அதிக லாபம் இல்லாத இத்தொழிலை பெரும் முதலீடு செய்து நடத்துவதால் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப எழுத்தாளர்கள் இசைந்து கொடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்று நினைக்கிறேன்.

பல புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் கிழக்கு பதிப்பகத்தார் என்னையும் ஊக்குவித்து எழுத வைத்ததற்கு நன்றி.

இதைப் பற்றி ஏன் முன்பே எங்களுக்கு தெரிவிக்கவில்லை. புத்தகம் வெளிவந்த பிறகாவது எழுதியிருக்கலாமே என்று சில வலைப்பதிவு நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் எதற்கும் ஒரு நேரம், காலம் வரவேண்டுமல்லவா? அது இப்போதுதான் வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

இனி நம்முடைய சக வலைப்பதிவாளர், நண்பர் சீனியர் ராகவன் சார் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னுடைய புத்தகத்திற்கு மதிப்புரை எழுதியபோது எழுப்பியிருந்த கேள்விகளுக்கு என்னுடைய விளக்கங்கள்......

நாளை...