29 June 2007

எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?

ஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா?

அதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..

முதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....

அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

உடனே எழுத முடியாமல் போனதற்கு காரணம் வெளியூரில் இருந்ததுதான்.

எனக்குள் ஒருவன் என்று என்னுடைய வக்கிரங்களை அல்லது விசித்திரங்களை, எழுதியது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது......

அதன் பிறகு அழகுகள் ஆறு என என்னை ஈர்த்த அழகான நினைவுகளைப் பற்றி எழுதியது அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட்டு பார்க்க உதவியது...

ஆனால் சாதனைகள் எட்டு என்றால் சற்று மலைப்பாகத்தான்....

சாதனைகள் என்பதைவிட என்னுடைய வலிமைகள் (Strengths) என நான் நினைப்பதைப் பற்றி எழுதினால் சரியாயிருக்குமோ என்ற ஒரு எண்ணம்..

முயன்றிருக்கிறேன்...

சுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான் அல்ல!

அடக்கி வாசித்தே பழகிப்போனவன்...

ஆனால் இது சங்கிலித் தொடர் விளையாட்டல்லவா, ஆகவே ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் சொல்லலாம் என்ற முடிவுடன்...

1. கர்மமே கண்ணாயிருப்பது...

சாதாரணமாக ஒரு வேலையையோ அல்லது பொறுப்பையோ ஏற்றுக்கொண்டால் அதை முடிக்காமல் விடுவதில்லை என்கிற ஒரு வைராக்கியம் சிறுவயது முதலே இருந்ததாக என் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்... இப்போதும் அப்படித்தான்... ஒருவேளை அது என்னுடைய அறிவுக்கோ அல்லது திறமைக்கோ அப்பாற்பட்டதாக கூட இருந்திருக்கலாம்... ஆனால் நீயாச்சு, நானாச்சு என்கிற ஒருவித பிடிவாதத்துடன் எதையும் முயன்று பார்த்துவிடுவதுண்டு....

2. என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது... பொறுமையுடன்..

நான் நட்ட செடி இன்றே பூக்கணும் என்கிற மனநிலையுடன் எதற்கும் அவசரப்பட்டதில்லை. இதை என்னுடைய பலஹீனம் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கென்னவோ நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நின்றதுண்டு. அது அலுவலக பதவி உயர்வாக இருக்கலாம்... அல்லது சொந்த வாழ்க்கையில் நான் கைகொள்ள நினைத்த சொத்துபத்தாக இருக்கலாம்.. எதையும் அடித்துபிடித்து அடைய முயன்றதில்லை...

3. பிறர் வம்புக்கு செல்லாமல் இருப்பது..

ஆனால் வந்த வம்பை விடுவதில்லையா என்று கேட்டால்... அதிலும் முயன்ற அளவுக்கு தவிர்க்கவே முனைந்திருக்கிறேன்... நான் அதீதமாக உணர்ச்சிவசப்படுபவன் என்கிற முத்திரை குத்தப்பட்டவன் என்பதாலும் இத்தகைய ஒரு மனப்பான்மையை சமீபகாலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்...

4. சரி என்று கருதுவதற்காக இறுதிவரை போராடுவது...

என்னுடைய உள்மனதில் சரி என்று நினைப்பதில் உறுதியாய் நிலைத்திருப்பது ஒருவிதத்தில் பிடிவாதம் என்று பலருக்கும் தோன்றினாலும் அதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். இதனாலேயே பலருடைய வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தாலும்... இது தொடர்கிறது.. கட்டையில் ஊறிப் போன ஒன்றாயிற்றே.. அதை எப்படி விடுவது?

5. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையுடன் சந்திப்பது..

வெற்றியில் வானம் வரை மகிழ்வதிலும் தோல்வியில் பாதாளம் வரை வீழ்வதிலும் நம்பிக்கையில்லாதவன்... என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்துள்ள பல தோல்விகளும் என்னை அவ்வளவாக பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் இந்த மனப்பாங்குதான்... இது மரணம் வரை தொடர வேண்டும் என்று ஆசைதான்... உடலில் ஏற்படும் பலஹீனம் மனத்தளவில் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது... பார்ப்போம்... தள்ளாத வயதில் பிள்ளைகளும் கைவிட்டுவிட சோர்ந்துபோன பலரை நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததன் விளைவோ என்னவோ அதற்கும் என்னை நானே தயார் செய்துக்கொள்கிறேன்...

6. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு நிதானம் இழக்காமல் இருப்பது... (இதில் சமீபகாலமாக சற்று இறங்கி வந்துள்ளதை உணர்கிறேன்...)

இது கயிற்றின் மீது நடப்பதுபோலத்தான்.. சங்கடமான சூழலிலும் முகத்தில் அதை காட்டாமல் இருப்பது என்பது எளிதல்லவே... நானும் எல்லாவித ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போனவன்தானே.. ஏன் எப்போதும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று உன்னை நீயே கட்டிப்போடுகிறாய் என்றெல்லாம் என் உள்மனது அவ்வப்போது இடித்தாலும் இன்றுவரை, இயன்றவரை நிதானம் இழக்காமல் இருக்கத்தான் முயல்கிறேன்... சிலமுறை என்னையுமறியாமல் இழந்ததுண்டு...

7. அலுவலகத்தையும் குடும்பத்தையும் அதனத்தன் இடத்திலேயே வைத்திருப்பது...

குறிப்பாக என்னுடைய அலுவலக தோல்விகள் என்னுடைய குடும்ப வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதில் முனைப்பாய் இருந்திருக்கிறேன்... அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வரும் டிபிஆர் வெறும் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே இருந்திருக்கிறான். அலுவலகத்திற்கு வெளியில்தான் என்னுடைய உலகமே இருந்து வந்துள்ளது என்றாலும் மிகையாகாது... அதனால்தானோ என்னவோ தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சகோதரர்கள் என்ற எந்த உறவுகளையும் இழந்துவிடாமல் இருக்க முடிந்திருக்கிறது... நல்லநாள் பொழுதுகளில் உற்றார் உறவினருடன் அவர்களுள் ஒருவனாக கலந்துவிட முடிந்திருக்கிறது... அலுவலக அதிகாரத்தை குடும்பத்தில் காட்டாமல் இருக்க முடிந்திருக்கிறது...

8. இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருப்பது...

சிறுவயதில் தாத்தாவின் அரவணைப்பில், பிறகு மாணவப் பருவத்தில் குருமார்களின் வழிகாட்டுதலில், விடுதியில் வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய உள்மனதில் இந்த இறை நம்பிக்கை வெகு ஆழமாக ஊன்றிப்போனது... என்னுடைய படிப்பும் அறிவு வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை எந்த அளவிலும் குறைத்துவிடவில்லை.. சொல்லப் போனால் அதை மேலும் வளர்த்துள்ளது என்பதுதான் உண்மை... இறை சிந்தனைகளை அறிவு பூர்வமாக சிந்திப்பதில் பயனில்லை என்பதில் வெகு ஆழமான நம்பிக்கையுள்ளவன் நான்... நான் சார்ந்திருக்கும் மதத்தின் அருமைகளை, அதன் உள்ளர்த்தங்களை உணர்ந்திருக்கும் நான் மற்ற மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் உணர்வுபூர்வமாக மதிப்பதிலும் உறுதியாய் இருப்பவன். மதங்களை விட மனங்களே மேன்மையானவை என்பதில் நம்பிக்கையுள்ளவன்... அதனால்தானோ என்னவோ என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்த பல தோல்விகளையும், சோதனைகளையும், இன்னல்களையும் வெற்றிகொள்ளும் ஒரு சக்தி, ஒரு மன உறுதி எனக்குள் இருந்து வந்திருக்கிறது என்று கருதுகிறேன்...

இனி விளையாட்டு விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும்...

எல்லாம் சரி... இந்த மூனாவது விதிதான் இடிக்குதே.. யாரை அழைக்கிறது?

அதுவும் எட்டுப் பேரை?

அதிலும் இதுவரை இந்த தொடர் விளையாட்டில் பங்குபெறாதவர்களை...!

கடந்த இருவாரங்களாக தொடர்ந்து தமிழ்மணம் வர இயலாமற்போன இந்த சூழலில் கண்களை மூடிக்கொண்டு சில பெயர்களை பட்டியலிடுகிறேன்...

1. சிவஞானம்ஜி
2. மா.சிவக்குமார்
3. ஜோ
4. முத்து தமிழினி
5. வினையூக்கி
6. துளசி
7. ரஷ்யா ராமநாதன்
8. கோவி. கண்ணன்..


******

14 June 2007

இந்த ரேட்டுல பார்த்தா....இந்த அடிப்படையில் பார்த்தால் கூட்டுக்கொள்ளை அடிக்கும் நம்முடைய அ.வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் எத்தனை நூற்றாண்டுகள் உள்ளே தள்ள வேண்டும்..

அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம்கறது சரியாத்தான் இருக்கு!

08 June 2007

திராவிட மாயை...

இன்றைய தினமலரில் வெளியாகியுள்ள வாசகர் கடிதங்களுள் ஒன்று...

போதும் என்றுதான் தோன்றுகிறது...

திரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர்.

அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட வெறி பிடித்தவர் எனலாம். அதாவது சில சமயங்களில் ridiculous லெவலுக்கு செல்வார். அவருடைய படங்களில் வரும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே இது தெரியும். பாடலிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் (சில சமயங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட) ஒவ்வொரு காட்சி இருக்கும். ஒரு வரியில் வயல்வெளி என்றால் அடுத்த வரி மலைக்கு மீது. ஒரு வரி காஷ்மீர் என்றால் அடுத்த வரி கன்னியாகுமரி என... எளிதாக சென்ற வெளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய காட்சிகளுக்கும் கூட செட்டுகளைப் போட்டு பணத்தை விரயம் செய்யக் கூடியவர்.

ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் ஒரு பெரிய கும்பலையே கூட்டிக்கொண்டு போய் ஸ்டார்ட் கேமரா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த வரி முடிந்துவிடும். ஒருவேளை அந்த ஒரு வரிக்கே ஒரு வாரம் செலவழித்தாலும் வியப்பில்லை. அந்த வரி முடிந்தவுடன் மீண்டும் பேக்கப், பயணம், ஸ்டார்ட் கேமரா.... எத்தனை விரயம்?

நம்மில் யாராவது ஒரு படத்தில் இத்தனை பாடல்கள் வேண்டுமென்றோ அல்லது ஒவ்வொரு பாடலிலும் இத்தனை காட்சிகள் வேண்டுமென்றோ கேட்டிருக்கிறோமா? முன்பெல்லாம் ஒரு தோட்டத்தைக் கூட செட்டுக்குள்ளேயே நான்கைந்து தொட்டிகளையும் அதற்கு பின்னால் நிலாவை ஒரு திரையில் வரைந்து வைத்து படம் பிடித்தார்களே அப்போது திரைப்படங்களை மக்கள் பார்க்கவில்லையா?

கேட்டால் படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். லாஜிக்காக படும் எடுக்கிறேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் அந்த இளைய சகோதரருடைய படங்களுடைய தயாரிப்பு செலவு மற்ற படங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு இருக்குமாம். இயக்குனர் திலகம் என வர்ணிக்கப்படும் ஒரு இயக்குனருக்கு சொந்தமான நிறுவனம் இவரை வைத்து படம் எடுத்து நொந்துப்போய் இவருடைய மூத்த சகோதரரான - நேற்றைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த - தயாரிப்பாளரிடம் சென்று ஏகமாய் எகிறியிருந்த தயாரிப்பு செலவைப் பற்றி முறையிட்டாராம்!

தன்னுடைய இளைய சகோதரருடைய படங்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவர் ஊரெல்லாம் அசுர வட்டிக்கு கடன் வாங்கியதன் விளைவு சகோதரர்களுக்கிடையில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இவர் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என இறுதியில் சமாளிக்க முடியாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவருடைய நிறுவனத்திற்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருந்தது. (என்னுடைய கிளையிலிருந்த கடனை அடைக்க அவர் அளித்த காசோலை இந்த வங்கியிலிருந்த கணக்கிலிருந்துதான் வழங்கப்பட்டது.) அதன் கிளை மேலாளர் ஒரு சபலபுத்திக்காரர் என்பதை தெரிந்துக்கொண்ட இந்த தயாரிப்பாளருடைய கும்பல் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவருடைய மேலிடம் அனுமதித்திருந்த கடன் அளவுக்கு மேல் சுமார் மூன்று மடங்கு தொகையை பெற்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. விளைவு? அவருடைய வங்கி அந்த கிளை மேலாளரைக் குறித்து காவல்துறையில் புகார் செய்ய அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரும் என் வயதொத்தவர்தான். இன்னும் வெளியில் வந்தாரா என்பது சந்தேகமே.

இவர் கதை இப்படி முடிந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இரண்டாமவர் கேரளாவைச் சார்ந்தவர்.

அவரும் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்தான். நல்லவேளையாக அவருக்கு கடன் கொடுத்திருந்தது ஒரு படத்திற்காக மட்டும். அந்த படம் வெற்றிபெற்றதால் கடன் முழுவதையும் சிரமமில்லாமல் வசூலிக்க முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை என்னுடைய பரிந்துரையின் பேரில் அவருக்கு கடன் அளிக்க எங்களுடைய வங்கி மறுத்துவிட்டது. அப்போதே பெரிய அளவில் பந்தா செய்வார். வங்கி மேலாளர் அவருடைய வீட்டுக்கு வந்து கடன் பத்திரங்களில் கையொப்பம் வாங்க வேண்டும் என்று சொன்னவர்!

இவரும் அபத்தமான பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். முதல் மூன்று படங்கள் அளித்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் பல கட்டிடங்களை விலைக்கு வாங்கியவர். ஆனால் இறுதியாக அவர் எடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிற்சங்கப் பிரச்சினை ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோய்... பிறகு மீண்டும் துவங்கி... வெளியாகி ஒரே வாரத்தில் பெட்டிக்குள் திரும்பி...பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானவர்.

இப்போது அவர் குடியிருப்பது வாடகை வீட்டில் என்றால் நம்ப முடிகிறதா?

இவர்கள் இருவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லையென்றாலும் உங்களால் ஊகித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இதுதான் பிரம்மாண்டத்தின் விளைவு.

இவர்கள் வரிசையில் வருபவர்தான் இப்போதைய ஷங்கர். மலைக்கு வர்ணம் பூசுவது, ஒரு சாலையையே சாயம் அடிப்பது, லாரிகளுக்கு கண், மூக்கு வைப்பது, அடுக்கு மாடிகளில் சென்று படம் எடுக்காமல் அதற்கென ஒரு பிரம்மாண்டமான செட் போடுவது, இதில்தான் இவருடைய கவனம் செல்கிறதே தவிர லாஜிக்கான கதையை புனைவதில் கவனம் இருக்காது. ரயில்வே காண்டீனில் இருக்கும் ஒரு இரும்புக் கடாயில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் ஒரு மனிதனையே மூழ்கடித்து கொல்லும் அளவுக்கு அபத்த மன்னன்!

வடிவேலுவை நம்பி படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதுடன் விழித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஊஹும்.... மேலும் அவருடைய பயணம் தொடர்கிறது.. காலம்தான் இவருக்கு பதில் சொல்லும். ஆனால் இவருடைய எக்ஸ்ட்ரீமுக்கு ஏவி.எம் போன்ற நிறுவனம் எப்படி சம்மதித்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இந்த படத்திற்கு செலவழிக்கும் பணத்தை நஷ்டமில்லாமல் எடுப்பதற்கே குறைந்தபட்சம் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு லாபம் எப்படி பார்ப்பது? கடவுளுக்கே வெளிச்சம்.

சினிமா ஒரு சூதாட்டம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படத்தில் விட்டதை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் விட்டுக்கொண்டே இருப்பார்கள்..

சரியானதொரு திட்டமில்லாத வெறும் கனவு காணும் கும்பல் என்றாலும் மிகையாகாது.

ஆகவேதான் திரைப்படத்துறைக்கு கடன் வழங்க இன்னமும் வங்கிகள் முன்வருவதில்லை.

*****

07 June 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம்

இன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

திரைப்படங்களில் பிரம்மாண்டம் தேவைதான், ஓரளவுக்கு. ஆனால் அதையே ridiculous என்பார்களே அந்த அளவுக்கு கொண்டு செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் விளைவுகளைப் - பொருளாதார விளைவுகள் - பற்றி இவர்களுக்கு கடன் வழங்கும் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கே தெரியும்.

நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

நான் கிளைக்கு பொறுப்பேற்கும்போதே அவருக்கு எங்களுடைய கிளையிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்தது. என்னுடைய காலத்தில் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அவரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டியிருந்தது.

அதற்கே பலமுறை என்னுடைய பணியாளர்களுள் ஒருவர் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. பிறகு பெருந்தன்மையுடன் சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒரு விண்ணப்பத்தையும் அதனுடன் தணிக்கை செய்யப்படாத நிதியறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.

அவருடைய நிதியறிக்கைகளைப் பரிசீலித்தபோது அதில் sundry creditors பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் பெயரைக் காண முடிந்தது. ஏறக்குறைய இவர்கள் எல்லோருடைய பெயரும் sundry debtors பகுதியிலும். அதாவது நிறுவனத்திற்கு கடனும் கொடுத்திருக்கிறார்கள், அதே நிறுவனத்திலிருந்து கடனும் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்தேன்.

அப்போது அந்த தயாரிப்பாளர் இருந்த உச்ச நிலையில் அவரை அணுகி விளக்கம் கேட்பதென்பது முடியாத காரியம். அவருடைய அலுவலக மேலாளர் அதற்கும் மேல். தொலைப்பேசியில் அழைப்பது வங்கி மேலாளர் என்று தெரிந்ததும் இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லும் ரகம். திரைப்பட நடிகர்கள் காட்டும் பந்தாவைவிட திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் காட்டும் பந்தா மிக அதிகம்.

ஒருவழியாக பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு தயாரிப்பாளருடைய மேலாளரையும், தணிக்கையாளரயும் சந்திக்க முடிந்தது. என்னுடைய சந்தேகம் எல்லாம் எப்படி ஒருவரே கடன் பெற்றவராகவும், கடன் கொடுத்தவராகவும் தொடர்ந்து இருக்க முடியும் என்பதுதான்.

அதற்கு அவர்கள் அளித்த பதில். 'சார் நம்ம கம்பெனி கண்ட்ரோல்ல இருக்கற தியேட்டர்காரங்கதான் இவங்க. நாங்க தயாரிக்கற படாமாருந்தா ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் ஏரியா, ஏரியாவா வித்துருவோம். அதுக்கு அவங்க குடுக்கற அட்வான்ஸ் தொகை sundry creditor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம். அதுக்கப்புறம் படம் முடிஞ்சி ரிலீஸ் பண்ற நேரத்துல மீதி பணத்த அவங்களால ஒரே தவணையில குடுக்க முடியாமப் போயிரும். அவங்க குடுத்துருக்கற தொகைய கழிச்சிக்கிட்டு மீதி வரவேண்டிய தொகைய sundtry debtor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம்.'

எனக்கு அப்போதும் குழப்பம் தீரவில்லை. 'நீங்க சொன்னபடி பார்த்தா படம் ரிலீஸ் பண்ற நேரத்துல அவங்கக்கிட்டருந்து வாங்குன தொகைய கழிச்சிக்கிட்டுத்தான படத்த குடுக்கறீங்க? அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும்?' என்றேன்.

இது கூட தெரியாதா சார் உங்களுக்கு என்பதுபோல் இருவரும் என்னைப் பார்த்தனர். 'இது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் சார்.. அதோட நாங்க வருசத்துக்கு கொறஞ்சது நூறு படங்கள வெளியாளுங்கக் கிட்டருந்து வாங்கி ரிலீஸ் பண்றமே? அதனால இது தொடர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.'

அதாவது சங்கிலித் தொடர்போன்று படங்கள் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் நடந்துக்கொண்டே இருப்பதால் நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டிருந்த திரையரங்குகளிடமிருந்து பணம் பெறுவதும் கொடுப்பதும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.

'சரி சார். அப்படீன்னா ஒவ்வொரு படத்துக்கும் வர்ற லாபத்த எப்படி கணக்கு பண்ணுவீங்க? முழுத்தொகையும் வசூலாவறமாதிரியே தெரியலையே? நீங்க போன வருசத்துல காமிச்சிருக்கற லாபம் எந்தெந்த படங்கள்லருந்து வந்த லாபம்னு ஏதாவது கணக்கு இருக்கா? எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே?' என்றேன் சலிப்புடன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி சின்னப் பசங்கள்லாம் பேங்க் மேனேஜரா வந்தா இதான் பிரச்சினை என்று அவர்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே விளங்கியது.

'சார்... இது நீங்க நினைக்கறா மாதிரி பிசினஸ் இல்லை. எவ்வளவு போட்டா எவ்வளவு லாபம் வரும்னெல்லாம் கணக்கு தெரியாம செய்யற பிசினஸ். ஒரு படத்துக்கு ஒரு கோடி செலவு செய்வோம்... பத்து கோடி லாபம் வரும்... பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணுவோம்.. படம் ஊத்திக்கும்.. இதுல இந்த படத்துக்கான காச கீழ வச்சாத்தான் அடுத்த பட ரிலீஸ் தருவோம்னு தியேட்டர்காரங்கக் கிட்ட சண்டைக்கு நின்னா... அவ்வளவுதான் நம்ம படத்த எவனும் ரிலீஸ் பண்ண முன்வரமாட்டான். நீங்க குடுக்கற --------லட்சத்துல நடக்கற கம்பெனியில்லசார் இது. வேணும்னா ஒங்க மொத்த பேலன்சையும் வட்டியோட இப்பவே செக்கா குடுத்து செட்டில் பண்ண சொல்றேன். வாங்கிக்கிறீங்களா?' என்றார் தணிக்கையாளர் எகத்தாளமாக.

அன்றைய தியதியில் அவர்களுக்கு அளித்திருந்த கடன் தொகை கணிசமானதுதான்... அந்த தொகையை உடனே வசூலித்துவிட்டால் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்துவரும் லாபம் உடனே போய்விடும். 'அவங்க நல்ல பார்ட்டியாச்சே எதுக்கு அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க?' என்ற கேள்விகளும் என்னுடைய மேலிடத்திலிருந்து எழலாம்.

ஆயினும் நாம் வழங்கும் கடன் மட்டும் வேண்டும். ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் வாடிக்கையாளர் நமக்கு தேவையில்லை என்று அப்போது தோன்றியது எனக்கு. ஒரு நொடி கூட தயங்காமல், 'சரி சார். குடுத்துருங்க.' என்றேன். இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த சின்ன பையன் முன்னால நம்ம கவுரவத்தை இழந்துவிடவேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ உடனே காசோலையை கிழித்துக் கொடுத்துவிட்டார்கள். 'இது ப்ளாங்க் செக் சார்... வட்டியோட சேத்து ஃபில் அப் பண்ணிக்குங்க. பேங்க்ல போடறதுக்கு முன்னால அமவுண்ட மட்டும் போன் பண்ணி சொல்லிருங்க.' என்றவாறு எழுந்து நிற்க நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

ஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது...

அதைப்பற்றி நாளை கூறுகிறேன்....

06 June 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 64

வங்கிகள் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை (Term Loans) மட்டுமே வழங்க முன்வருவதுண்டு.

அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது, மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தக் கூடிய குறுகிய காலக் கடன் (Short term loan). இரண்டாவது அதற்கு மேற்பட்ட நீண்டகால கடன்கள் (Long term loan).

அப்போதெல்லாம் நீண்டகாலக் கடன்கள் அதிகபட்சமாக ஏழாண்டுகள் வரை வழங்கப்படுவதுண்டு. இது என்னென்ன தேவைகளுக்காக கடன் பெறப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பெரும்பாலும் தொழிற்சாலைக் கட்டிடங்கள் கட்டுவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நீண்டகாலக் கடன்கள் வழங்கப்படுவதுண்டு.

ஆனால் இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவது வங்கிகளால் இயலாத காரியம். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுடைய வைப்பு நிதி சேமிப்பு திட்டங்களின் கீழ் (Fixed Deposit Schemes) அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையில் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்ற நிர்பந்தம். மேலும் வங்கிகள் வசம் இருந்த மொத்த சேமிப்பு தொகையில் (Deposit Amount) அறுபது விழுக்காடுகளுக்கும் மேல் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய Demand Deposits ஆகவே இருந்தன. இப்போதும் அப்படித்தான்.

ஆகவே ஐந்து வருடங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை வழங்குவது சாத்தியமில்லாத விஷயமாகக் கருதப்பட்டது.

இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவதற்கெனவே அப்போது term lending institutions எனப்படும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் முக்கியமானவை ICICI Corporation மற்றும் IDBI ஆகியவை.

ஒரு தொழில் துவங்கத் தேவையான முதலீட்டில் நீண்டகாலக் கடன்களை (Term Loans) இத்தகைய நிறுவனங்களும் குறுகியகாலக் கடன்களை (Working Capital facilities) வங்கிகளும் இணைந்து வழங்கி வந்தன. இந்த கடன்களைப் பெறும் தொழில் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் (Factories, Machinery etc) நீண்ட காலக் கடன்களுக்கு ஈடாகவும் அசையும் சொத்துக்கள் (Working Capital Assets) வங்கிகள் வழங்கும் குறுகியக் காலக் கடன்களுக்கு ஈடாகவும் கோரப்படுவதுண்டு.

இத்தகைய கூட்டு முயற்சிகள் அப்போது மிகவும் பிரபலமாயிருந்தது. ஆனால் இதில் நாளடைவில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்படும் சமயங்களில் முதலில் பாதிக்கப்படுவது வங்கிகள் வழங்கிய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்தான். நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு உதவும் அசையா சொத்துக்களான உற்பத்திப் பொருட்கள் கைவசம் இல்லாத நிலையில் வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு ஈடாக எந்து சொத்தும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும்.

அச்சமயங்களில் நீண்டகால கடன்களை வழங்கும் ஐடிபிஐ போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்களை வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலக் கடன் வழங்கும் நிறுவனங்களுடனான கூட்டுறவின் அடைப்படை நியதியாக வங்கிகள் கருதிவந்தன.

ஆனால் தங்களுடைய நீண்டகாலக் கடன்களை முழுவதுமாக வசூலித்தப் பிறகு மீதமுள்ள சொத்துக்களை மட்டுமே வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஐடிபிஐ, ஐசிஐசிஐ போன்ற நிறுவனங்கள் எடுக்கவே வங்கிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கு ஒரே வழி தங்களிடம் கடன் கோரி வரும் தொழில் நிறுவனங்களின் மொத்த தேவையையும் தாங்களே பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் என வங்கிகளும் உணர ஆரம்பித்தன் விளைவுதான் லீசிங் ஃபைனான்ஸ் என்கிற புதுமாதிரி கடன் வழங்கும் முறை.

அதுவரை நீண்டகாலக் கடன் வழங்கி வந்த ஐசிஐசிஐ, ஐடிபிஐ போன்ற வங்கிகளல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஈடிபட்டிருந்த லீசிங் முறை வங்கிகளும் ஈடபடத் துவங்கின.

நீண்டகால கடனுக்கு லீசிங் முறைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு தொழில் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் வாங்க கடனுதவி தேவை என்று வைத்துக்கொள்வோம்.

இயந்திரம் தேவைப்படும் தொழில் நிறுவனத்திடமிருந்து இயந்திரத்தின் விலையில் சுமார் 10லிருந்து 25 சதவிகிதம் வரை அதனுடைய முதலீடாக (margin) பெற்றுக்கொண்டு மீதித் தொகையை கடனாக வங்கிகள் வழங்குவதுண்டு. இயந்திரத்தின் மொத்த விலையையும் வங்கியே அதன் விற்பனையாளரிடம் வங்கி காசோலை மூலமாக நேரடியாக வழங்கிவிடும். ஆனால் இயந்திரம் கடன் பெற்றவருடைய பெயரில் விற்கப்படும். அதாவது இயந்திரத்தின் உரிமையாளர் கடன் பெறுபவராக இருப்பார். கடன் நிலுவையில் நின்றுவிடும் சூழலில் கடன் வழங்கிய வங்கி நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட அதாவது அடகு வைக்கப்பட்ட இயந்திரத்தை கைப்பற்றி விற்று கடனை வசூலித்துக்கொள்ள முடியும். வங்கிக்கு இத்தகைய உரிமை உண்டு என்றாலும் அதை செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல. கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்துக்கள் (hypothecated assets) கடன் பெற்றவரின் கைவசம் இருப்பதால் அவற்றை வங்கிகளுக்கு தெரியாமலே விற்றுவிட வாய்ப்பிருந்தது. மேலும் இத்தகைய கடன்களிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தவிர வேறெந்த வருமானமும் வங்கிகளுக்கு கிடைப்பதில்லை.

ஆனால் லீசிங் முறையில் தொழில் நிறுவனத்தின் பயனுக்கு தேவையான இயந்திரங்களை வங்கிகளே தங்களுடைய பெயரில் வாங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். அதாவது தொழில் நிறுவனத்திற்கு இயந்தைரங்களை பயன்படுத்தும் உரிமை மட்டுமே இருக்கும். அதை விற்பதற்கு எவ்வித உரிமையும் இருக்காது. மீறி விற்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் வங்கிகளுக்கு உரிமையுண்டு. சாதாரணமாக இத்தகைய முறையில் வட்டி என்று எதுவும் இருக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாதா மாதம் வழங்கும் லீசிங் வாடகை வங்கியின் வருமானமாக கருதப்படும். வங்கிகள் ஒரு இயந்திரத்தின் விலையின் மீது பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கணக்கிட்டு அதை இயந்திரத்தின் விலையுடன் சேர்த்து அந்த கூட்டுத்தொகையை தவணைகளாக பிரித்து வாடகை என்று வசூலிப்பது வழக்கம். இதைத்தான் லீசிங் வாடகை என்பார்கள் (lease rentals). அத்துடன் இயந்திரங்கள் வங்கிகளின் பெயரிலேயே இருப்பதால் வருடா வருடம் அதனுடைய கொள்முதல் விலையில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கழிவு (depreciation) என்று தங்களுடைய வருமானத்திலிருந்து எழுதித் தள்ள முடியும். இதனால் வங்கிகள் செலுத்தக் கூடிய வருமான வரி கனிசமான அளவு குறையக்கூடும்!

ஆனால் இத்தகைய லீசிங் முறையில் கடன் வழங்கும் பாணி அப்போது வங்கித் துறையில் அறிமுக நிலையில் இருந்ததால் எங்களைப் போன்ற வங்கிகளில் அதன் செயல்பாடுகளில் அனுபவம் உள்ள அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை.

ஆகவே எங்களுடைய வங்கி முதல்வர் இத்தகைய முறையை எங்களுடைய வங்கியிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முனைந்தாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை. ஆகவே அவருடைய முந்தைய வங்கியிலிருந்து இத்துறையில் அனுபவம் உள்ள இரு அதிகாரிகளை கொண்டு வரும் செயலில் இறங்கினார்.

அப்போதுதான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

சாதாரணமாக எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகள் நிலையில் வெளியிலிருந்து ஆட்களை - அவர்கள் எத்தனை தகுதி மிக்கவர்களாயினும் - கொண்டு வருவதற்கு அந்த நிறுவனத்திலுள்ள மற்ற அதிகாரிகள் அத்தனை எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.

அதுதான் எங்களுடைய வங்கியிலும் நடந்தது. நிறுவனத்திலேயே திறமையுள்ள சில அதிகாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கு இத்துறையில் பயிற்சி அளிக்கலாமே என்ற எண்ணம் பல உயர் அதிகாரிகள் மத்தியில் நிலவியது. அதில் வெகு சிலர் தங்களுடைய கருத்தை பகிரங்கமாகவே கூற ஆரம்பித்தனர். ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்துவதில் எங்களுடைய வங்கி முதல்வர் முனைப்பாயிருந்தார்.

தங்களுடைய கருத்துக்கு அவர் மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகினர். இத்தகைய சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முதல்வரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விஷயம் மேலும் தீவிரம் அடைந்தது.

ஆனால் வங்கி இயக்குனர் குழு முதல்வரின் யோசனையை ஆதரிக்கவே அவர் தன்னுடைய முந்தைய வங்கி நிர்வாகத்திடம் இரு மூத்த அதிகாரிகளுடைய பெயர்களை பரிந்துரைக்குமாறு கடிதம் அனுப்பினார்.

ஆனால் அதிலும் சிக்கல். மூத்த அதிகாரிகள் வெளி வங்கிகளிலிருந்து வருவதை எங்களுடைய வங்கி அதிகாரிகளும் தொழிற்சங்கமும் விரும்பவில்லை என்பதை எப்படியோ அறிந்த முதல்வரின் முந்தைய வங்கி தங்களால் யாரையும் பரிந்துரைக்க இயலாதென்றும் வேண்டுமானால் எங்களுடைய வங்கியின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக விடுவதாகவும் அதைப் பார்த்துவிட்டு விரும்பி வருபவர்களிலிருந்து தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

சாதாரணமாக தற்சமயம் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றோ அல்லது எதிர்வரும் காலத்தில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ கருதும் அதிகாரிகள் மட்டுமே அதிலிருந்து வெளியேற எண்ணுவது வழக்கம். அத்தகையோர் திறமைசாலிகளாகவோ அல்லது அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் தங்களைவிடவும் பன்மடங்கு சிறிய வங்கிக்கு செல்வதற்கு நல்ல திறமையுள்ளவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மைதானே.

அப்படித்தான் நடந்தது..

எங்களுடைய வங்கிக்கு வருவதற்கு வெகு சிலரே முன்வந்தனர். அதிலிருந்து எங்களுடைய வங்கி முதல்வர் தெரிவு செய்த இருவரும் எங்களுடைய வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளைக் காட்டிலும் விஷயஞானத்திலும் சரி திறமையிலும் சரி உயர்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களுடைய முழு விவரமும் எங்களுடைய வங்கிக்கு வந்து சேர்ந்தவுடன் கொதித்தெழுந்தது எங்களுடைய தொழிற்சங்கம்...

தொடரும்..

05 June 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 63

என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருடைய செயல்பாடுகள், முக்கியமாக கடன் வழங்குவதில் அவர் புகுத்த நினைத்த யுக்திகள், எங்களுடைய தலைமையகத்தில் செயல்பட்ட மத்திய கடன் வழங்கும் இலாக்கா அதிகாரிகளையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல.

அதுவரை லட்சங்களிலேயே புழங்கியவர்களை கோடிகளைப் பற்றி சிந்திக்க வைத்தார் அவர். அதை 'இப்போ இவ்விடயும் கொடியான பிடிக்கென.' என்று கேலியாக கூற ஆரம்பித்தனர். அவர்கள் 'இவ்விடயும்' அதாவது 'இங்கேயும்' என்று கூறியது கேரளத்தில் கம்யூனிச கொடிகளை பிடித்தவாறு தினமொன்றுக்கு செல்லும் ஊர்வலத்தைக் குறித்துதான் என்பது அனைவருக்கும் விளங்கியது.

என்றாலும் ஒரு வங்கி முதல்வரை எதிர்த்து தலைமையக அதிகாரிகளே செயல்பட முடியாதல்லவா? ஆகவே அவரை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. ஆனால் தங்களுடைய எதிர்ப்பை மறைமுகமாக காண்பிக்க ஆரம்பித்தனர்.

கிளைகளிலிருந்து வரும் பெருந்தொகைக்கான கடன் பரிந்துரைகளை தேவைக்கும் அதிகமான சிரத்தையுடன் பரிசீலிக்க ஆரம்பித்தனர். அதாவது எப்படியெல்லாம் கடன் வழங்காமலிருப்பது என்ற கண்ணோட்டத்துடன். It is easy to reject than to sanction என்பார்கள். அதாவது குறைசொல்வது எளிது என்பதுபோல. ஆக்கத்தைவிட அழிப்பது எளிதல்லவா?

ஏற்கனவே வங்கி முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளால் கலங்கிப் போயிருந்த கிளை மேலாளர்கள் எங்களுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவினரின் எதிர்மறையான செயல்பாட்டால் மேலும் குழம்பிப் போயினர்.

எங்களுடைய வங்கி முதல்வர் பொருளாதார செய்தித்தாள்களில் (Financial Newspapers) தினசரி வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகளை படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதல்வருக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ நேரடியாக 'உங்களுடைய நிறுவன கடன் தேவைகளுக்கு அருகிலுள்ள எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்' கடிதம் எழுதிவிடுவார். அன்றோ வங்கிகளிலிருந்து கடன் பெறுவது சிரமமாக இருந்த காலம். இன்று பதிமூன்றிலிருந்து பதினைந்தாக இருக்கும் கடன் வட்டி விகிதம் அன்று பதினாறிலிருந்து பதினெட்டு வரை இருந்த காலம்.

ஆகவே எங்களுடைய வங்கி முதல்வரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம் சகிதம் கிளை மேலாளர்களை (குறிப்பாக சென்னை, மும்பை, தில்லி நகரங்களிலுள்ளவை) அணுகினாலே போதும், கடன் கிடைத்த மாதிரிதான் என்ற நினைப்புடன் அணுகும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் நிதியறிக்கைகளைப் பெற்று தங்களுடைய பரிந்துரையுடன் கிளை மேலாளர்கள் தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் அவை யாவுமே சுவரில் அடித்த பந்தாக ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பிவந்தால்?

ஆனால் வங்கி முதல்வரின் செயல்பாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் பிடிபட அதிக நாள் எடுக்கவில்லை. கடன் பரிந்துரைகளை சமர்ப்பித்த சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் அவை சில கற்பனையான காரணங்களுக்காக மறுக்கப்பட்ட போது வங்கி முதல்வரிடமே நேரடியாக புகாரளிக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.

அடுத்த சில வாரங்களிலேயே கடன் வழங்கும் இலாக்காவில் சொகுசாக பணியாற்றிக்கொண்டிருந்த சில அதிகாரிகள் தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களுக்கு கிளை மேலாளர்களாக மாற்றப்பட்டனர். அதாவது அவர்கள் சற்று முன்பு நிராகரித்த அதே கடன் பரிந்துரைகளை அவர்களே மீண்டும் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அவர்களுடைய இடத்திற்கு வங்கியின் இயக்குனர் குழுவின் அனுமதியுடன் சி.ஏ. பட்டம் பெற்ற இளைஞர்களை மத்திய கடன் வழங்கும் இலாக்காவிலும் பெருநகரங்களில் இயங்கிவந்த என்னுடையதைப் போன்ற வட்டார அலுவலகங்களிலும் பணிக்கு அமர்த்தினார். அத்துடன் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் என்னைப் போன்ற பேங்கிங் அதிகாரிகளுக்கு இருந்த பங்கு (Role) வெகுவாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட கடன் பரிந்துரைகளை மட்டும் எங்களைப் போன்ற அதிகாரிகளும் அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை சி.ஏ. பட்டதாரிகளும் பரிசீலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்ட முதல்வர் உண்மையில் அப்படிப்பட்டவரல்ல என்பதை இத்தகைய அதிகாரிகள் உணர ஆரம்பித்தனர். விளைவு? அடுத்த ஐந்தாறு மாதங்களில் வங்கியின் கடன் வழங்கும் முறை அடியோடு மாறியது. முன் அனுபவம் இல்லாத சி.ஏ பட்டதாரிகளுடைய பரிந்துரையை மட்டுமே ஏற்று வட்டார மேலாளர்கள் கடன் விண்ணப்பங்களை மேலிடத்திற்கு பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்போதுள்ளது போன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை தனியார் வங்கிகள் அப்போது இல்லை என்பதால் அரசு வங்கிகளில் கடன் பெறமுடியாத பல fly by night operators எனப்படும் தரம் குறைந்த நிறுவனங்கள் எங்களைப் போன்ற வங்கிகளுக்கு படையெடுக்க துவங்கியிருந்த காலம் அது.

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கடன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அரசு வங்கிகள் independent lending என்ற முறையிலிருந்து consortium lending என்று புதிய கடன் வழங்கும் பாணியை அறிமுகப்படுத்தியதும் இந்த காலக்கட்டத்தில்தான்.

எங்களுடைய வங்கி முதல்வரும் நாட்டின் முதன்மை அரசு வங்கியிலிருந்து வந்தவர் என்பதால் அந்த வங்கியின் தலைமையில் இயங்கிவந்த consortium குழுவில் அங்கத்தினராகி அவர்கள் கடன் வழங்கியிருந்த பெருவாரியான நிறுவனங்களுக்கு எங்களுடைய வங்கியும் கடன் வழங்குவது என முடிவு செய்தார். எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களுக்கு corporate advance proposals பரீசிலனை செய்யக் கூடிய திறன் இல்லை என்பதால் இத்தகைய வங்கி குழுக்களுடன் சேர்ந்து கடன் வழங்குவதன் மூலம் மட்டுமே விரைவில் இத்தகைய கடன்களை வழங்க முடியும் என்பது அவருடைய வாதமாக இருந்தது.

அவருடைய அணுகுமுறையில் எங்களுடைய வங்கி உயர் அதிகாரிகள் பலருக்கும் விருப்பம் இல்லையென்றாலும் அத்தகைய கடன்கள் வழியாக அந்த வருட இறுதியில் வங்கிக்கு கிடைத்த கணிசமான வட்டி வருமானம் வங்கியின் ஒட்டுமொத்த லாப விழுக்காட்டை மிக அதிக அளவில் உயர்த்தியபோது அதிகாரிகளின் வாதம் வெறும் வீம்பு என இயக்குனர் குழு முடிவு செய்தது!

அதுவரை கிளை மேலாளர்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கப் பெற்றிருந்த லாபம் இனி வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால் மட்டுமே கிடைக்கும் என்பதுபோன்ற முடிவுக்கு எங்களுடைய வங்கியின் இயக்குனர் குழு வந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம்..

வங்கிய அந்த வருடத்திய நிதியறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் எங்களுடைய வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால்தான் வங்கியின் லாப விழுக்காடு பெருமளவில் பெருகியது என்ற அறிக்கையும் வெளியிடப்படவே வருடக் கணக்காக திறம்பட செயல்பட்டு வந்த பல உயர் அதிகாரிகள் சோர்ந்து போயினர் என்பதும் உண்மை.

வங்கியின் இயக்குனர் குழு தன்னுடைய பாணியை அங்கீகரித்தாகிவிட்டது, ஆகவே அதே பாணியில் தொடர்ந்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்த எங்களுடைய வங்கி முதல்வர் மேலும் ஒரு தேவையற்ற காரியத்தை செய்தார்.

அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது...


தொடரும்

04 June 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 62

என்னுடைய வங்கி முதல்வர் உடனே என்னுடைய நெல்லை நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'

உண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.

'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி? அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.

என்னுடைய வங்கி முதல்வரின் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தெரியாமல் என்னுடைய மேசையிலிருந்து இரண்டு மேசைகள் அப்பால் அமர்ந்திருந்த என்னுடைய நண்பரைப் பார்த்தேன். அவர் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது.

'என்ன டிபிஆர் பதிலையே காணம்... What do you want me to do...?' என்றவர் அவரே தொடர்ந்து, 'ஓ நீங்க ஆஃபிஸ்லருந்து வெளிப்படையா பேச முடியலை இல்லையா? நீங்க ஒன்னு பண்ணுங்க நீங்க அவரையும் கூட்டிக்கிட்டு என்னோட சன் வீட்டுக்கு ஒரு எட்டு மணிப் போல வாங்க...நான் கூப்பிடறேன்.. பை...' என்ற கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

அலுவலகம் முடிந்ததும் என்னுடைய நண்பரிடம் எங்களுடைய வங்கி முதல்வர் என்னிடம் தெரிவித்தை விளக்கிக் கூறினேன். 'நான் அப்பவே ஒங்க ஜோனல் மேனேஜர் இப்படி செஞ்சாலும் செய்வார்னு சொன்னேன்.. நீங்கதான் கேக்கலை... இப்ப சேர்மனே நா என்னச் செய்யட்டும்னு கேக்கார். என்ன சொல்லப் போறீங்க?'

'அடப்பாவி அந்த பய அப்படியா செஞ்சான்... இருங்க இப்பவே அந்தாளுக்கு ஒரு போன போட்டு நாக்க புடிங்கறா மாதிரி கேக்கேன்.' என்று படபடத்தார்.

நான் இப்படியும் ஒரு வெகுளியா என்று நினைத்தேன். 'இங்க பாருங்க சார்... நீங்க அவர் கிட்ட போயி கேட்டீங்கன்னா இது ஒங்களுக்கு யார் சொன்னான்னு கேப்பார். சேர்மந்தான் சொன்னாருன்னு சொல்ல முடியாது. அதனால சேர்மன் இன்னைக்கி சாயந்தரம் என்ன சொல்றார்னு கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.' என்று அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சேர்மனுடைய மகனுடைய வீட்டிற்கு சென்றேன்.

அவர் எடுத்த எடுப்பிலேயே என்னுடைய நெல்லை நண்பர் என்னருகில் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு அவரிடம் பேசினார்.

சிறிது நேரம் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு என்னிடம் ஒலிவாங்கியை நீட்டினார். 'டிபிஆர் I was told that he has been misled by his zonal manager. ஆனா இதுல இங்கருந்து என்னால ஒன்னும் செய்ய முடியாது. இதுக்கு ஒரே வழி அவரோட எக்ஸ்பிளனேஷன retract பண்றதுதான். I can't compel him to do that. But I was told by one of my department heads that he is innocent and hence we should order a proper enquiry before initiating action against him... அதுக்கு அவர் குடுத்த எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்குனாத்தான் முடியும். I can hold back my decision for a few days... அதுக்குள்ள அவரோட ரிக்வெஸ்ட் வரணும்... நீங்க எடுத்து சொல்லி செய்ங்க...'

இதைத்தான் நானும் சொன்னேன்... என்னுடைய தொழிற்சங்க நண்பரும் சொன்னார்.

'என்ன சார் இப்பவாவது அத திருப்பி வாங்கறீங்களா?' என்றேன்..

சரி என்று அரைமனதுடன் தலையை அசைத்தார் அவர்.

அடுத்த நாளே நான் அலுவலகம் திரும்பியதும் என்னுடைய தொழிற்சங்க நண்பரை அணுகி, 'சார் அவர் தன்னோட எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்கறதுக்கு ஒத்துக்கிட்டார்... நீங்க ஒரு லெட்டர் டிராஃப்ட் பண்ணி தாங்களேன்.' என்றேன்..

அவரோ, 'செய்யறேன்... ஆனா ஒங்க ஃப்ரெண்ட் எழுத்து மூலமா எங்கிட்ட கேக்கணும்... இது யூனியன் சமாச்சாரம்... ஒர் மெம்பரோட ரிட்டன் ரிக்வெஸ்ட் இல்லாம இதுல நாங்க தலையிடக்கூடாது.' என்று மறுத்துவிட்டார்.

என்னுடைய நண்பரோ, 'எதுக்கு அவங்கிட்ட போய் நிக்கணும்னேன்... நாமளா எழுதி போட்டுருவோம்.... நா ஏதோ டென்ஷன்ல அப்படி எழுதிட்டேன்... அதனால அத திருப்பி தந்துருங்கன்னு எழுதிர வேண்டியதுதானே?' என்றார் கூலாக...

எனக்கு அவருடைய வெகுளித்தனத்தைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது.

பிறகு அவரை வற்புறுத்தி வங்கியின் எந்த விதிகளையும் தான் மீறவில்லையென்றும் கிளையிலிருந்து கடன் கொடுக்கப்படுவதற்கு முன்பே வட்டார மேலாளரிடம் கலந்தாலோசித்தேன் என்றும் எழுத வைத்தேன்... 'டிபிஆர் இது உண்மைதான்னாலும் ஜோனல் மேனேஜர இதுல இழுத்து விடறது சரின்னு தோனலை.' என்றார் இறுதியில்.

அவர் அதில் பிடிவாதமாக இருக்கவே அந்த பகுதியை நீக்கிவிட்டு, 'வங்கி நடத்தவிருக்கும் விசாரனையில் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியும்' என்ற கோரிக்கையை சேர்த்து அடுத்த நாளே அனுப்பிவைக்க எங்களுடைய வங்கி முதல்வர் அதை ஏற்றுக்கொண்டு விசாரனைக்கு உத்தரவிட்டார்.

விசாரனையதிகாரியாக எங்களுடைய முந்தைய வட்டார மேலாளர் நியமிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் அவர் விஷயஞானம் உள்ளவர் என்பதுடன் பாரபட்சமில்லாமல் நடந்துக்கொள்ளக் கூடியவர். ஆயினும் நிர்வாகத்தினர் சார்பாக வாதாடுவதற்காக நியமிக்கப் பட்டவருடைய பெயரைக் கண்டதும் என்னுடைய நண்பர் கவலையடைந்தார். அவருக்கும் தனக்கும் ஏற்கனவே தனிப்பட்ட விரோதம் இருந்திருக்கிறது. 'இந்த பயலையா போடணும்? அதான் டிபிஆர்.... உண்மைய மறைக்கறது சரியில்லைன்னு சொன்னேனே கேட்டீங்களா? இப்ப பாருங்க கடவுளோட கோபம் என் மேல திரும்பிருச்சி... நா என்ன கரடியா கத்துனாலும் இவன் அத ஒடச்சி எறிஞ்சிருவான்.... சரியான ஃப்ராடுப் பய...'

என்னுடைய அலுவலகத்திலிருந்த தொழிற்சங்க நண்பர் இதைக் கேள்விப்பட்டதும், 'டிபிஆர் இவன என்னெ மாதிரியான ஆளுங்களாலதான் சரியா கவுண்டர் பண்ண முடியும்... இவர் யாரோட டிஃபென்சும் இல்லாம என்க்வயரிக்கு போனா நிச்சயம் அது இவருக்கே பிரச்சினையாத்தான் முடியும்... அவர்கிட்ட சொல்லி ஒரு சிம்பிள் ரிக்வெஸ்ட்... என்க்வயரிக்கு எனக்காக ஆஜராவுங்கன்னு எழுதிக் குடுக்க சொல்லுங்க.. மத்தத நாங்க பாத்துக்கறோம்...' என்றார்.

ஆனால் அப்போதும் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை...அத்துடன் 'நீங்க இதுல தலையிடாதீங்க டிபிஆர்... ஒங்க பேச்ச கேட்டு ஒருதரம் செஞ்ச முட்டாத்தனத்தால இப்ப எங்க ஜோனல் மேனேஜரையும் பகைச்சிக்கிட்டாச்சி... அவர் செஞ்ச வேலைதான் இவர மேனேஜ்மெண்ட் ரெப்பா போட்டுருக்கு.... என்னெ என் போக்கிலயே விட்டுருங்க...' என்றார் எரிச்சலுடன்.

சரி அவர் தலையெழுத்து போலவே ஆகட்டும் என்று நானும் அத்துடன் ஒதுங்கிக் கொண்டேன்...

சாதாரணமாக இத்தகைய விசாரனையில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட கிளைக்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்பு சென்று தேவைப்படும் ஆவணங்களை கிளையிலிருந்து எடுத்து வாசிக்கவும் நகலெடுக்கவும் அனுமதி உண்டு. அதற்குண்டான பயண கட்டணம் மற்று விடுதிக்குண்டான செலவையும் வங்கியே அளிப்பதுண்டு. ஆனால் என்னுடைய நண்பர் அதல்லாம் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்.

எவ்வித தயாரிப்பும் இல்லாமல் விசாரனை துவங்கவிருந்த தினத்தன்று அவருடைய முந்தைய வட்டார மேலாளரை அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னை எப்படியாவது விசாரனையில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருடன் இருந்த நிர்வாகத்தின் சார்பாக வாதாடவிருந்த அதிகாரியிடமும் தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டம் என்றும் கெஞ்சியிருக்கிறார். இருவரும் எமகாதகர்கள்... என்னுடைய நண்பர் கூறியதை அப்படியே விசாரனை அதிகாரியின் முன் எழுத்து மூலம் சமர்ப்பிக்க அவர் வேறு வழியில்லாமல் அவற்றை விசாரனை குறிப்புகளில் சேர்த்திருக்கிறார்.

விளைவு? கடன் வழங்கியதன் சம்பந்தமாக நடந்த அனைத்து விதிமீறல்களுக்கும் என்னுடைய நண்பரையே பொறுப்பாக்கி விசாரனையை முடித்துவிட்டார் என்னுடைய முன்னாள் வட்டார மேலாளர். விசாரனை நடந்த முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அவரை நான் தொலைபேசியில் தொடர்புக் கொண்டபோதுதான் இவையெல்லாம் எனக்கு தெரிய வந்தது. 'எனக்கு வேறு வழி தெரியல டிபிஆர்... நா சாடை மாடையா ஒங்க ஃப்ரெண்டு கிட்ட சொல்லியும் அவர் பிடிவாதமா நா அப்படி சொன்னது உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்... As an enquiry officer I just could not do anything else.' என்றார் அவர் தொலைபேசியில்.

இப்படியும் ஒரு முட்டாளா என்றுதான் எண்ணத் தோன்றியது... ஆயினும் என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை...

நான் அடுத்த நாளே என்னுடைய வங்கி முதல்வரை அவருடைய வீட்டு தொலைபேசியில் அழைத்து விசாரனை அதிகாரி என்னிடம் கூறியதை கூறினேன். அவர் அதிகம் பேசாமல், 'ஓகே டிபிஆர் let me see.' என்று முடித்துக்கொண்டார்.

விசாரனை அதிகாரி சமர்பித்திருந்த அறிக்கையின்படி தண்டனை வழங்கும் அதிகாரி அவருக்கு பத்து வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் அவருடைய அப்போதைய பதவியிலிருந்து ஒரு நிலை இறக்க வேண்டும் என்ற அதிகபட்ச தண்டனையை பரிந்துரைத்தார்.

அந்த தீர்ப்பை மிக எளிதாக மேல் முறையீடு செய்து குறைத்திருக்கலாம். ஆனால் அந்த தீர்ப்பைக் கண்டதும் மனமுடைந்துப் போன என்னுடைய நண்பர், 'இதான் கடவுளின் சித்தம் போலருக்கு... நா அப்பீல்னுல்லாம் போகப்போறதில்லை.' என்றார் உறுதியுடன்...

ஆனால் அவருடைய மேல் முறையீடு இல்லாமலே எங்களுடைய வங்கி முதல்வர் ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தால் போதும் பதவியிறக்கம் தேவையில்லை என்று இயக்குனர் குழுவுக்கு பரிந்துரைத்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் முறையீடு இல்லாமலே வங்கி முதல்வருக்கு தண்டனையை குறைக்கவோ கூட்டவோ அதிகாரம் இருந்தாலும் இயக்குனர் குழு அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.. இதற்கும் என்னுடைய நண்பருடைய வட்டார முதல்வர்தான் காரணம். இயக்குனர் குழுவிலிருந்த சில முக்கிய இயக்குனர்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு இருந்ததை என்னுடைய வங்கி முதல்வரே அறிந்திருக்கவில்லை...

இறுதியில் இயக்குனர் குழு என்னுடைய நண்பருக்கு ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் பதவியிறக்கத்தையும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

விசாரனை நடந்து முடிந்து சுமார் இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் இப்போதும் அதே நிலையில் இருக்கிறார். அவருடைய் ஊதிய உயர்வு நிறுத்தத்தாலும் பதவியிறக்கத்தாலும் குறைந்த பட்சம் பத்து லட்சத்திற்கும் மேல் அவருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும்...

ஆனால் அவருக்கு துரோகம் இழைத்த வட்டார மேலாளர் அடுத்த வருடமே துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்பது சரியாக இருந்தது...

சுமார் மூன்று வருடங்கள் கழித்து எங்களுடைய வங்கி முதல்வர் மாறி வேறொருவர் வந்தார். இவர் வேறொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள அவர் சம்பந்தப்பட்ட முந்தைய கோப்புகளை வாசித்த புதிய முதல்வர் என்னுடைய நண்பருக்கு இழைத்த அநீதியையும் படித்திருக்க வேண்டும். செய்த குற்றத்திற்கு தப்பித்தவன் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்படுவான் என்பதுபோல் எங்களுடைய வங்கி சரித்திரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் துணைப் பொது மேலாளர் என்ற பெருமை? அவருக்கு கிடைத்தது.

ஆனால் அவருடைய பணிநீக்கம் என் நண்பர் அனுபவித்த பாதிப்பை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை என்பதுதான் வேதனை..


தொடரும்...

01 June 2007

அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...


மரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...

சொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...!

ஆம்!

அப்படித்தான் வந்தது... இன்னும் ஒரு மரணம்... அகாலமாய்...

மிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...

தலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....

அலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...

ஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...

என் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...

கடந்த வாரத்தில் ஒருநாள்....

சென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...

'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'

'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'

சென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...

இடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...

பகல் உணவு இடைவேளை...

மீண்டும் சென்று பார்க்கிறார்...

அப்போதும் அதே நிலை....

முகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...

அவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....

ஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா?' என்கிறார்...

ஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...

'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'

அவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...

சேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...

மனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..

ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....

எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....

'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'

'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...

நம்மில் பலரும் இந்த ரகம்தான்...

தலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..

சிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...

என்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...

இதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...

என்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..

'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'

நண்பர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...

ஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....

எத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன!

இது தேவையா?

நாளை நடக்கவிருப்பதை யாரறிவார்?

நிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..

நண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...

அன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......


***