22 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 61

என்னுடைய நண்பர் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது.

என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய தொழிற்சங்க துணைத்தலைவர் ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கையில் என்னுடைய மேசைய அணுகி, 'டிபிஆர் ஒரு நிமிஷம் உங்களிடம் பேச வேண்டும்' என்றார்.

நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்துதான் அலுவலகத்திலிருந்து புறப்படுவோம். ஏனெனில் அவரும் நானும் ஒரே பகுதியில்தான் குடியிருந்தோம். மேலும் அவருக்கு வாகனம் என்று எதுவும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான். எங்கு சென்றாலும் ஒன்று நடை, அல்லது ஆட்டோ.

ஆகவே அன்று என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று அணுகியதும் நான் சற்று தயங்கினேன். 'நாளைக்கு காலைல பேசலாமா?' என்றேன்.

அவருக்கும் என்னுடைய தயக்கத்தின் காரணம் தெரிந்தது. ஆயினும் அவர், 'டிபிஆர் நீங்க இவர போகச் சொல்லிட்டு வாங்க. அவர் விஷயமாத்தான் பேசணும்.' என்றார் சற்று உரக்க.

நான் கூறாமலே என்னுடைய நெல்லை நண்பர் புரிந்துக்கொண்டு, 'சரி டிபிஆர் நாளைக்கு பார்க்கலாம்' என்று கூறிவிட்டு வெளியேறினார்.

அவர் செல்லும் வரை காத்திருந்த என்னுடைய தொழிற்சங்க நண்பர், 'டிபிஆர். நீங்க பல தடவை சொல்லியும் அவர் அந்த மாதிரி பதில் எழுதி அனுப்புனதுக்கு காரணம் இருக்கு.' என்றார் ஒரு sly புன்னகையுடன்.

நான் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

'இவரோட ஜோனல் மேனேஜர் இவர கூப்ட்டு 'நீ எல்லா தப்பையும் ஒத்துக்கோ. நா என்க்வயரி டைம்ல ஒன்னெ காப்பாத்தறேன்'னு சொல்லியிருக்கார்.

நான் வியப்புடன் 'அப்படியா? ஏன்?' என்றேன். அவர் சொல்ல வந்தது எனக்கு லேசாக புரிந்தாலும் அவர் வாயிலிருந்தே அதை கேட்க விரும்பினேன்.

'இவர் அந்த லோன குடுக்கட்டுமா சார்னு அவர்கிட்ட கேட்டுட்டுத்தான் குடுத்துருக்கார். அவரும் அந்த டீலர அவரோட ஆஃபீசுக்கு வரச் சொல்லி 'வாங்க' வேண்டியத வாங்கிக்கிட்டு ஃபோன்ல இவர கூப்ட்டு குடுங்கன்னு சொல்லியிருக்கார். இவர் எழுத்து மூலமா சாங்ஷன் தாங்க சார்னு கேக்காம சரின்னு ஓரலா சொல்லிட்டு லோனையெல்லாம் குடுத்துருக்கார்.'

இது நான் எதிர்பாராதது. என்னுடைய நண்பர் 'நான் லோன குடுத்த விஷயம் எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரியும்' என்று சொன்னதை அவர் கடன்களை கொடுத்துவிட்டு இறுதியில் ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருப்பார் என்றுதான் நினைத்தேன். சாதாரணமாக அத்தகைய ரிப்போர்ட்களை ஜோனல் அலுவலகத்திலிருக்கும் கடைநிலை அதிகாரி என்ன, ஏது என்று பார்க்காமலே கோப்பில் சேர்த்துவிடுவதை என்னுடைய அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஆகவே என்னுடைய நண்பர் அனுப்பியிருந்த அறிக்கையை அவருடைய வட்டார மேலாளர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் இவர் கூறுவதைப் பார்த்தால் கடன் வழங்கியதற்குக் காரணமே அவருடைய வட்டார மேலாளர்தான் என்று தெரிந்தது.

'அவருக்கு மேலிடத்துல நல்ல ஹோல்ட் இருக்கு டிபிஆர். இருந்தாலும் இவரே எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டா தன்னோட பேர் அனாவசியமா கெடாதுல்ல... அதான்... அதுக்கேத்தா மாதிரி இவரும் அவர் சொன்னத அப்படியே நம்பி எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு எழுதி குடுத்துட்டார். நீங்க வேணா பாருங்க அந்த ஜோனல் மேனேஜரே மேனேஜ்மெண்ட் விட்னசா வந்து இவருக்கு எதிரா சாட்சியம் குடுக்கப் போறார். இவரும் வேற வழியில்லாம எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு பனிஷ் ஆகப்போறார்.' என்றார் என்னுடைய தொழிற்சங்க நண்பர்.

'ஒங்க எக்ஸ்ப்ரீயன்ஸ் படி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் கிடைக்கும் சார்?' என்றேன்..

'வேலை போகாதுன்னு நினைக்கேன்.. ஏன்னா லோன் வாங்குனவங்கள்ல பாதி பேர் கட்டியிருக்காங்களே... அதனால் இது ஒரு ஃப்ராடுன்னு சொல்ல முடியாது. ஆனா இவர் வையலேட் செஞ்சிருக்கற இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் ரொம்ப சீரியசா இருக்கறதால... அஞ்சாறு இன்க்ரிமெண்ட்ஸ் நிச்சயம் கட்டாகும்... டிமோட் பண்ணாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.......'

அடப்பாவமே என்று இருந்தது. அவரும் நானும் அப்போது Scale III என்ற மிடில் மேனேஜ்மெண்ட் க்ரேடில் இருந்தோம். இன்னும் ஒரு வருடத்தில் அடுத்த நிலைக்கான பதவி உயர்வு நேர்காணல் நடக்க வாய்ப்பிருந்தது. இந்த நேரத்தில் இவருக்கு டிமோஷன் என்றால்..... இதுவரையிலும் அவர் சாதித்தவையெல்லாமே வீணாகிவிடுமே என்று தோன்றியது..

பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பதுபோல் இவருடைய வட்டார மேலாளருடைய தவறான வழிகாட்டுதலால் இவருடைய அலுவலக வாழ்க்கையே பாதிக்கப்படப் போகிறதே என்று நினைத்தேன்.

அவருடைய மூன்று பிள்ளைகளும் மேல் நிலைப் பள்ளியைக் கடக்கின்ற நிலையில் இருந்தனர். இந்த நேரத்தில் இவருக்கு எதிர்வரும் காலத்தில் கிடைக்கவிருந்த ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டால் என்னாவது என்றும் தோன்றியது.

ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்ததும், 'என்னவாம் அந்த யூனியன் ஆளுக்கு? என்னெ காப்பாத்தறேன்னு சொல்றானா? எல்லாம் ஹம்பக்.. நம்பாதீங்க...' என்றார் சிரிப்புடன்..

'சார் அப்படி சொல்லாதீங்க.' என்றேன் சூடாக. பிறகு அவர் என்னிடம் முந்தைய நாள் கூறியவற்றை சுருக்கமாக எடுத்துரைத்தேன். 'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிரல சார். நீங்க குடுத்த ரிப்ளைய திருப்பி வாங்கிரலாம். நீங்க போய் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போறும். அவரே டிப்பார்ட்மெண்ட் காண்டாக்ட் பண்ணி அத திருப்பி வாங்கிட்டு சூட்டபிளா வேற பதில எழுதி குடுப்பார். நீங்க எதுக்கு சார் ஒங்க ஜோனல் மேனேஜர் பண்ண ஃப்ராடுக்கு பலியாகணும்?'

'டிபிஆர். நான் ஏற்கனவே அவர் சொன்னபடி ரிப்ளை குடுத்தாச்சி.. இனி கடவுள் சித்தப்படி நடக்கட்டும். நான் செஞ்சது தப்புன்னா பனிஷ்மெண்ட் கிடைக்கட்டும்... நா ஏத்துக்க தயார்... ஆனா குடுத்த ரிப்ளைய திருப்பித் தாங்கன்னு நான் போய் கேட்டா அதுவே தப்பாயிரும். அப்புறம் அவர் என்க்வயரியில ஹெல்ப் பண்ண மாட்டார்.' என்றார் சற்றும் கவலைப்படாமல்.

சரி இனியும் வற்புறுத்துவதில் பயனில்லை என்று நினைத்து அந்த விஷயத்தை நானும் மறந்துப்போனேன்..

இரு வாரங்களுக்குப் பிறகு எனக்கு தலைமையகத்திலிருந்து தொலைபேசி வந்திருப்பதாக என்னுடைய இலாக்கா அதிகாரியின் அறையிலிருந்து அழைப்பு வர நான் யாராயிருக்கும் என்று நினைத்தவாறு சென்று எடுத்தேன்.

எதிர்முனையில் என்னுடைய வங்கி முதல்வர்!

'Is there anybody next to you?' என்றார்.

நான் என்னுடைய இலாக்கா அதிகாரியைப் பார்த்தேன். அவர் வேலையில் மும்முரமாக இருந்தாலும் நான் பேசுவதைக் கவனிப்பதை என்னால் உணர முடிந்தது. நான் பட்டும் படாமலும் 'I am in the CM's cabin Sir.' என்றேன்.

அவர் உடனே, 'Tell me number of your personal extension I will ask my PA to call you on that line.' என்றார்.

நான் என்னுடைய மேசையிலிருந்த இண்டர்காம் எண்ணை கூறிவிட்டு துண்டித்தேன். 'சார்... வீட்லருந்து ஒரு ஃபோன்... அதான் என்னோட எக்ஸ்டென்ஷனுக்கு பண்ணச் சொன்னேன்.' என்று சமாளித்துவிட்டு என்னுடைய மேசைக்கு விரைந்தேன். அடுத்த நிமிடமே என்னுடைய தொலைபேசி ஒலிக்க நான் எடுத்து, 'Yes Sir.' என்றேன்.

அவர் உடனே என்னுடைய நெல்ல நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'

உண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.

'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி? அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.

தொடரும்..

5 comments:

siva gnanamji said...

தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது மட்டுமன்றி,
குழியை மூடுவதற்குத் தேவையான
ஜல்லி,சிமெண்ட்டும் பக்கத்திலேயே
குவித்துவைத்துள்ளார்.......

tbr.joseph said...

வாங்க ஜி!

தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது ...//

இதையே மனிதர் புரிந்துக்கொள்ளவில்லையே.... தன்னை எப்படியும் அவருடைய ஜோனல் மேனேஜர் காப்பாற்றுவார் என்றே நம்பியிருந்தார்...

நல்லவராயிருக்கலாம்.. ஆனால் ஏமாளியாக மட்டும் இருக்கவே கூடாது என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்...

G.Ragavan said...

அடக்கொடுமையே...இப்பிடியும் ஒரு அப்பாவியா...பாவம். அஞ்சு வயசுல அண்ணந்தம்பி..அப்புறமா பங்காளிம்பாங்க...அப்படி இருக்குறப்ப...அவர நம்பி..இவரு...அதுவும் பண விசயத்துல...அடடா...ம்ம்ம்ம்...மாலைப் போட்டு மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சு. கெடாவும் தலைய ஆட்டீருச்சு....வெட்டுனாங்களா இல்லையா?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

மாலைப் போட்டு மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சு. கெடாவும் தலைய ஆட்டீருச்சு....வெட்டுனாங்களா இல்லையா? //

வெட்டாம இருப்பாங்களா?

எல்லாம் தலையெழுத்து....

Aani Pidunganum said...

Saarval,

Kodumai thaan, Ivar indha vellaiku vandhuruka koodadhunu ninaikaraen.

Indha kaalathula kooda pirandhavangalaiyeh nambakoodadhunu sollaraanga, Yaar enga kuzhi vettuvaanganu teriyadhu...
ummm, ellam kadavul sitham [Everything is pre-determinded]