16 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 59

என்னுடைய வங்கி முதல்வரின் போக்குடன் உடன்பாடில்லாத பல வட்டார மேலாளர்களும் மறைமுகமாக அதை எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதில் மிகவும் முனைப்பாயிருந்தவர் என்னுடைய வட்டார மேலாளர். அவர் எழுதிய சூடான கடிதமும் முதல்வரின் போக்கில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்தவர் இனி நேரடி தாக்குதலில் இறங்குவதில் எந்த பயனுமில்லையென்பதை உணர்ந்தார். ஆகவே அவர் கிளை மேலாளர்களை தொலைபேசியில் அழைத்து நம்முடைய வட்டாரத்தைப் பொருத்தவரை வங்கியின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் பெரிய நிறுவனங்களை நாடிச் செல்ல தேவையில்லையென்றும் கூறலானார்.

இது எப்படியோ வங்கி முதல்வரின் கவனத்திற்கு சென்றது. எப்படியோ என்ன, எல்லாம் எங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்த நெல்ல நண்பர் வழியாகத்தான். இந்த விஷயம் எனக்கே பிறகுதான் தெரிய வந்தது. ஆனால் என்னுடைய வட்டார மேலாளருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதுமுதல் அவரை அந்த அலுவலகத்திலிருந்து தூக்குவதில் முனைப்பானார்.

என்னுடைய நண்பர் கிளை மேலாளராக பணியாற்றி வெற்றிகள் பல கண்டவர். அவருடைய சமூகத்திற்கே உரிய வணிக சாதுரியம் அவரிடம் நிறையவே இருந்தது. ஆயினும் வங்கியின் நியதிகளைப் பற்றி கவலைப்படமாட்டார். 'நியாயமா பிசினஸ் பண்ணணும்னு வர்றவங்கிட்ட ரூல்ஸ் பேசின என்னவே பிரயோசனம்? நாம சொல்ற ரூலுக்கெல்லாம் சரி, சரின்னு தலையாட்டறவன் வாங்கன கடன திருப்பி கட்டமாட்டான்..' என்பார் கேட்டால். ஆனால் அவர் செயலாற்றிய விதம் அவரை இரண்டு கிளைகளில் வெற்றி பெற்று மூன்றாவதாக சற்று பெரிய கிளையில் மேலாளராக அமர்த்தப்பட்டதுமே சிக்கலில் சிக்க வைத்தது.

நான் வட்டார கிளையில் இரண்டாவது முறையாக சேர்ந்து சுமார் ஆறு மாதங்களில் அவரும் அதே அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கெதிராக விசாரனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய கிளை வேறொரு வட்டாரத்தில் இருந்ததால் அதனுடைய முழுவிவரம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரும் நெல்லையைச் சார்ந்தவர்தான் என்பது அடுத்த இரு வாரங்களுக்குள் தெரிந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததுடன் தமிழ்நாட்டிலிருந்த எங்களுடைய வங்கி கிளைகளில் நான்கைந்தை தவிர பலவற்றில் பணியாற்றியிருக்கவில்லை. ஆகவே அவரை அதற்கு முன்பு சந்தித்திருக்கவில்லை. 'ஒங்கள பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்... ஏன்னா நம்ம ரெண்டு பேருக்கும் இனிஷியல் மூனு இருக்குல்லே... இந்த மாதிரி திருநெல்வேலிகாரனுக்குத்தான இருக்கும்?' என்றார் ஒருநாள். ஆம்... நா டிபிஆர் என்பதுபோன்றே அவருடைய பெயரையும் மூன்றெழுத்தில் சுருக்கிவிடலாம். நெல்லை, தூத்துக்குடி போன்ற ஊர்களில்தான் குழந்தைக்கு பெயரிடும்போது தாத்தா-பாட்டி, மாமன்மார் பெயர்களையும் சேர்த்துவிடுவார்கள்... நீண்ட பெயரை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே நாக்கு சுளுக்கிக் கொள்ளும்... ஆகவே பலரும் அதை சுருக்கி வைத்துவிடுவார்கள்...

அவர் முந்தைய கிளையில் வங்கியின் விதிகளை மீறி வழங்கியிருந்த பல கடன்களும் நிலுவையில் நின்றிருந்ததாக அவரே என்னிடம் கூறினார். அதற்காக எங்களுடைய தலைமையகம் அவரிடமிருந்து விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை என்னிடம் காட்டி, 'இதப் படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க டிபிஆர்... இதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்த பிசினஸ் பண்ண முடியுமா?' என்றார் ஒருநாள்.

அதை வாங்கி படித்தபோதுதான் தெரிந்தது அவருடைய செய்கைகளின் தீவிரம்.

அவர் செய்திருந்ததன் சாராம்சம் இதுதான்..

என்னுடைய நண்பர் வாடிக்கையாளர்களை பிடிப்பதில் மிகவும் சமர்த்தர். அவருக்கிருந்த வாய்ச்சாலகம் அவருக்கு வங்கிக்கு வெளியே பல நண்பர்களைப் பெற்றுத்தந்திருந்தது. ஒரு அசல் வணிகரைப் போலவே பேசுவார். வங்கி கிளை அலுவலகத்தில் அவரைப் பார்ப்பதே கடினம். காலையில் ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்தால் ஆச்சரியம். மீதி நேரங்களில் நகரைச் சுற்றி வந்து வாடிக்கையாளர்கள் பிடிப்பதிலேயே குறியாயிருப்பார். தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரும் என்பதாலும் பேசுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதாலும் அவரால் எவரையும் எளிதில் கவரமுடிந்தது.

ஆனால் அவருடைய பலஹீனம் யாரையும் எளிதில் நம்பிவிடுவது. கஷ்டம் என்று வந்து நின்றால் போதும்.. தனக்கு அத்தகைய கடன் வழங்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்கமாட்டார். 'கஷ்டம்னு வந்து நிக்கறவங்கிட்ட என்னத்த ரூல்ஸ் பேசறதுங்க... தேவைன்னு வந்து நிக்கறப்ப ஹெல்ப் பண்ண முடியாம ரூல்ஸ் இருந்து என்னத்த ச்செய்யிறது?' என்பது அவருடைய வாதம்.

அதுவும் நடுத்தர, மாச ஊதியம் வாங்குபவர்கள் என்றால் அவருக்கு பயங்கர கரிசனம். அதுவும் ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர் மேலாளராக பணியாற்றிய எல்லா ஊர்களிலும் அவருடைய கிளையில் குறைந்த பட்சம் ஐந்தாறு பள்ளிகளுடைய கணக்குகள் இருக்கும். எல்லா பள்ளி தலைமையாசிரியர்களிடமும் தொடர்பு வைத்திருப்பார். அவர்களுடைய நிகர ஊதியத்தைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு கடன் வழங்கி மாதமாதம் சம்பள தினத்தன்று அவரே நேரில் சென்று மாதத்தவணையை வசூலிப்பார். 'எதுக்குங்க... ஒங்க ஆஃபீச தேடி வர்றவங்க எவ்வளவோ பேர் இருக்கறப்ப எதுக்கு இந்த லாபம் இல்லாத வேலைய செய்யறீங்க?' என்று அவருடைய உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், 'சார்.. நா குடுக்கற லோன்ல டீஃபால்ட் ஏதாச்சும் இருக்கா... இல்லல்லே.. பெறவென்ன?' என்பார். 'சரியான கிறுக்கனாருக்காரே ஒரு லாபமும் இல்லாத இந்த பிசினஸ் வேணாம்னாலும் கேக்க மாட்டேங்கறாரே' என ஏறக்குறைய எல்லா உயர் அதிகாரிகளுமே அவரைக் குறித்து பேசும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன...

முதல் இரண்டு கிளைகளில் அவர் கொடுத்திருந்த பல கடன்களிலும் அவர் மேலாளராக இருக்கும் வரை மட்டுமே தவணைகள் சரிவர செலுத்தப்பட்டிருந்தன. அவர் மாற்றலாகிச் சென்றதுமே வாடிக்கையாளர்கள் மாதத் தவணைகளை நிறுத்திவிட அவர் வழங்கியிருந்த கடன்களில் பெரும்பாலானவை நிலுவையில் நிற்க ஆரம்பித்தன.

ஆகவே அவர் மூன்றாவது அதுவும் வணிக அளவில் சற்று பெரிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டதும் அவருடைய கடன் வழங்கும் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்... சிறு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய வட்டார மேலாளர் எழுத்து மூலமாக எச்சரித்திருந்தார்.

அவர் அதை ஏற்று முதல் ஆறுமாதங்கள் வரை அத்தகைய கடன்களை வழங்காமல் இருந்திருக்கிறார். ஆனால் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அல்லவா?

அவருடைய பேச்சு சாதுரியம் காரணமாக அவரை நகரில் நடக்கும் பல விழாக்களுக்கும் தலைமையேற்று பேசும் வாய்ப்புகள் தேடிவருவதுண்டு. அவருக்கும் அதில் அதிக விருப்பம் என்பதால் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார். அப்படித்தான் அவருடைய நகரிலிருந்த ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் தலைமையேற்று உரை நிகழ்த்த அழைப்பு வந்தது. விழாவின் இறுதியில் தலைமையாசிரியர் நகரில் டிவி, ஃப்ரிட்ஜ், ரேடியோ வணிகம் செய்து வந்திருந்த ஒரு பெரிய டீலரை அறிமுகப்படுத்தி, 'சார் நம்ம டீச்சருங்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ் எல்லாம் மாசத் தவணையில இவர் குடுக்க தயாராயிருக்கார்.... ஆனா இவரால கடனுக்கு குடுக்க முடியல... நீங்க நம்ம டீச்சர்ங்களுக்கு ஜாமானோட விலையில ஒரு எழுபது பர்செண்ட் லோன் குடுத்தா நல்லாருக்கும்... டீச்சர்ங்களோட மாச சம்பளத்துலருந்து நா புடிச்சி ஒங்க லோனுக்கு கட்டிடறேன்...' என்று குழைந்திருக்கிறார்...

ஆளுயர மாலை அணிவித்து அவரைப் பற்றி புகழ்ந்து பேசி கவுரவித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நம்மால் முடிந்தது என்று நினைத்து அங்கேயே தனக்கு அதற்கு அதிகாரம் உள்ளதா என்று கூட கவலைப்படாமல், 'அதுக்கென்ன சார்... செஞ்சிட்டா போச்சி...'என்று வாக்குறிதியளித்துவிட்டு.... அடுத்த இரு வாரங்களிலேயே அந்த பள்ளியில் பணிக்கு இருந்த சுமார் இருபது ஆசிரியர்கள் மற்றும் non-teaching staff எனப்படும் பணியாளர்களுக்கு கடன்களை வழங்கிய விஷயம் காட்டு தீ போல் பரவ நகரிலிருந்த சுமார் பத்து பள்ளிகளும் வங்கியை நோக்கி படையெடுத்தன...

கிளையில் அவருக்கு கீழே பணியாற்றிய மற்ற அதிகாரிகளுடைய அறிவுரையையும் மனிதர் கேட்கவில்லை. 'சார் நா இந்த ஊர்க்காரன் சொல்றேன்... இந்த டீலர் அவ்வளவு நம்பிக்கையானவன் இல்லை...அத்தோட இந்த டீச்சர்ங்களயும் நம்ப முடியாதுசார்...' என்று அதே உரைச் சார்ந்த குமாஸ்தா ஒருவர் தடுத்துரைத்தும் கேட்காமல் சுமார் இருநூறு ஆசிரிய பெருமக்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ், ஃபர்னிச்சர்கள் வாங்குவதற்கென கடன் வழங்கிவிட்டுத்தான் ஓய்ந்தார்.

ஓரிரு பள்ளிகள் என்றால் மாதா மாதம் சம்பள தினத்தன்று சென்று கடனை வசூலிக்க முடியும். பத்து பள்ளிகள் என்றால்... அதுவும் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை இருநூறு!

முதல் இரு மாதங்களில் கடன் வசூலிப்பில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.. மூன்றாம் மாதம் சுமார் நூறு பேர் அடைக்கவில்லையென்பதை கிளை அதிகாரிகள் அவருடைய பார்வைக்கு கொண்டு செல்ல, 'பரவால்லைவே... அதா அடுத்த மாச சம்பளத்துலருந்து பிடிச்சி கட்டிடறேன்னு எச்.எம் லெட்டர் குடுத்திருக்காரில்ல... பாத்துக்குவம்...' என்று சமாளித்திருக்கிறார்.. ஆனால் அதற்கடுத்த மாசம் முந்தைய மாதம் அடைத்தவர்களுள் பலரும் டிமிக்கி கொடுத்திருக்கிறார்கள்... இதற்கிடையில் விஷயம் வட்டார அலுவலகத்திற்கு செல்ல, 'எப்படி நீங்கள் அதிகாரம் இல்லாமல் இந்த அளவுக்கு கடன் வழங்கலாம்?' என்று விளக்கம் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. மனிதர் அதையும் பொருட்படுத்டவில்லை...

பிறகு வேறு வழியின்றி வட்டார அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று அவரை அங்கிருந்து அகற்றி நான் பணியாற்றிய அலுவலகத்திற்கு மாற்றியதுடன் நில்லாமல் ஆசிரியர்களுக்கு அவர் வழங்கியிருந்த கடன்கள் மீது ஒரு முழு ஆய்வுக்கும் எங்களுடைய தலைமையகம் உத்தரவிட்டது...

தொடரும்

No comments: