08 May 2007

திரும்பிப் பார்க்கிறேன். II - 56

வங்கிகளின் தலையாய நோக்கம் கடன் வழங்குவதுதான் என்றாலும் தாங்கள் கொடுக்கும் கடன்கள் முழுமையாக அதாவது அசலும் வட்டியும் வசூலாக வேண்டும் என்பதில் குறியாயிருப்பது வழக்கம்.

ஏனெனில் அவர்கள் கையாள்வது பொதுமக்களின் பணம். அவர்கள் அரும்பாடுபட்டு சேமித்தது.

ஒருநாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை வணிகம் மற்றும் தொழிலில் முடக்கும் முதலீடு. அதற்கு அந்த நாட்டு மக்களின் தனிமனித சேமிப்பு மிக, மிக அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா தனிமனித சேமிப்புகளுமே முதலீடாக மாறுவதில்லை.

என்னுடைய சேமிப்பை நான் அப்படியே என்னுடைய வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ பாதுகாத்து வைத்திருந்தால் அது முதலீடாகாது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு தனிமனிதனும் வணிகனாகவோ அல்லது தொழிலதிபராகவோ மாறுவது என்பதும் முடியாத காரியம்.

ஆகவே ஒரு நாட்டின் தனிமனித சேமிப்பை திரட்டி அதை முதலீடாக மாற்றுவதில் அந்த நாட்டின் வங்கிகள் பெரும் பங்கு ஆற்றுகிறது என்பதை மறந்துவிடலாகாது.

அது அவர்களுடைய செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. ஆகவேதான் வங்கிகளின் அடிப்படைய செயல்பாட்டை சேமிப்போரிடமிருந்து அவர்களுடைய சேமிப்பைத் திரட்டி அதை தேவைப்படுவோரை தேடிப்பிடித்து கடனாக வழங்கவேண்டும் என்று பல வல்லுனர்கள் வங்கிகளைப் பற்றி குறிப்பிடுகையில் கூறி வைத்துள்ளார்கள்.

இதில் 'தேவைப்படுவோரை தேடிப்பிடிப்பது' என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. அதற்கு ஒரு வங்கிக் கிளையின் மேலாளரிலிருந்து அவர் பரிந்துரைக்கும் கடன் விண்ணப்பங்களை சரிபார்த்து கிளை மேலாளருடைய பரிந்துரையை பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைக்கும் என்னைப் போன்ற மேசையதிகாரிகளிலிருந்து அவற்றிற்கு அனுமதிவழங்கும் உயர் அதிகாரிவரை அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டியது அவசியம்.

இவர்களுள் கிளை மேலாளர் மட்டுமே வாடிக்கையாளரை சந்திக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். அவரைப் பற்றிய விவரங்களை சேமித்து அது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதுடன் அவருடைய வணிக அல்லது தொழில் செய்யும் இடத்தையும் பார்வையிடுகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பரிந்துரைகளை சரிபார்க்கும் மேசையதிகாரியும் சில சமயங்களில் அவருடைய கிளை இயங்கிவரும் வட்டார அலுவலக அதிகாரிகளும் வாடிக்கையாளரை சந்திக்க வாய்ப்புண்டு.

இவர்களைத் தவிர மற்ற எல்லா நிலையிலுள்ள சகல உயர் அதிகாரிகளும் வாடிக்கையாளரின் கோப்புகளில் காணப்படும் விவரங்களை வைத்தே அவரை மதிப்பிடுகின்றனர். இத்தகைய முறையில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. வாடிக்கையாளரை நேரடியாக சந்திக்கும் கிளை மேலாளர் அவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவரை உயர்வாகவோ தாழ்வாகவோ மதிப்பிட வாய்ப்புள்ளது. நம்மில் பலருக்கும் ஒருசிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகிறது. சிலரை ஓரளவுக்கும் சிலரை பிடிக்காமலும் போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கே தெரிவதில்லை.

கிளை மேலாளர்களுக்கு பிடித்துப் போகின்றவர்களுடைய வணிகம் அல்லது தொழில் எந்த நிலையிலிருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் அவர்கள் கோரும் கடனை பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிப்பார்கள். அப்படி தீர்மானித்தபிறகு அந்த விண்ணப்பத்திலிருக்கும் குறைகள் எதுவுமே அவர்களுடைய கண்களுக்கு புலப்படாமல் போய்விடும். மாறாக ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவருடைய விண்ணப்பத்தில் எத்தனை நிறை இருந்தாலும் அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.

ஆனால் வட்டார அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகம் போன்ற நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடைய பார்வை அப்படியல்லாமல் தங்கள் முன் இருக்கும் கோப்பிலுள்ள விவரங்களை வைத்தே பெரும்பாலும் வாடிக்கையாளருடைய தரத்தை கணிக்கின்றனர். ஆகவே அவர்களால் பாரபட்சமின்றி முடிவெடுக்க முடிகிறது. இது நல்ல விஷயம்.

ஆனால் என்னைப் போன்ற மேசையதிகாரிகள் மட்டுமல்லாமல் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் பல அதிகாரிகளும் கடன் விண்ணப்பத்தைப் பரிந்துரைத்த கிளை மேலாளர் யார் என்பதையும் பார்ப்பதுண்டு. ஒரு கிளை மேலாளருடைய கணிப்பில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர் எதை அல்லது எவரை பரிந்துரைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். 'இது டிபிஆர் ரெக்கமெண்ட் பண்ண ஃபைல். அவர் ரெக்கமெண்ட் பண்ணா சரியாத்தான் இருக்கும்.' என்கிற ஒரு மெத்தனம் ஏற்பட்டுவிடுவதை பல சமயங்களிலும் பார்த்திருக்கிறேன். அதுவே ஒரு கிளை மேலாளருடைய நடவடிக்கைகளின் மீதோ அல்லது அவருடைய விஷயஞானம் அல்லது திறமையின் மீதோ சந்தேகம் வந்துவிட்டால் போதும் அவர் அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல வாடிக்கையாளருக்காக, அத்தியாவசிய தேவைக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

நான் வட்டார கிளையில் பணியாற்றிய காலத்தில் மூன்று வட்டார மேலாளர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். அவர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதில் நான் இரண்டாம் முறையாக பணியாற்றிய மேலாளருடைய பாணியே தனி!

அவருக்கு செல்வந்தர்களைக் கண்டாலே விருப்பமில்லை என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அத்துடன் எவ்வித வில்லங்கமும் இல்லாமல் ஒரு விண்ணப்பம் வந்தாலும் மனிதருக்கு சந்தேகம் வந்துவிடும். சாதாரணமாக வாடிக்கையாளரைப் பற்றி எழுதும்போது பல கிளை மேலாளர்களும் அவர் மிகுந்த செல்வந்தர் அல்லது வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வருகிறார் என்று எழுதுவார்கள். அதைப் பார்த்ததுமே நம்முடைய வட்டார மேலாளர் வெகுண்டெழுவார். அதற்குப் பிறகு அந்த கோப்பையே மேலே படிக்க விருப்பமில்லாமல், Reject it என்று திருப்பியனுப்பிவிடுவார். Let the rich manage themselves... we don't need to support such people.. என்பார். அப்படீன்னா குடுத்த கடன் முழுசா எப்படி சார் வரும் என்று கேட்டால். கடன திருப்பி குடுக்கறதுக்கு பணம் படைத்தவனா மட்டும் இருந்தா போறாது.. நல்ல மனசு வேணும்னு வாதாடுவார்.

அவர் கூறியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை... செல்வந்தர்கள் என்றால் கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள் என்றோ நடுத்தர மற்றும் வறிய சூழலிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தாமல் இழுத்தடிப்பார்கள் என்றோ கூறிவிட முடியாது. ஆனால் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் செல்வந்த வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை கறந்துவிடலாம். ஆனால் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ள வசதியற்ற வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வசூலிப்பது சாத்தியமில்லை.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளருடைய இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்னுடைய அப்போதைய வங்கி முதல்வர். அவர் பதவியேற்ற தினத்தன்றே தலைமையகத்திலிருந்த கடன் வழங்கும் இலாக்காவின் தலைவரிடம் 'You should start thinking big...' என்று அறிவுறுத்தியதாக சில நொடிகளில் வங்கி முழுவதும் செய்தி பரவியது.

அவர் சென்ற இடமெல்லாம் இதையேதான் வலியுறுத்தினார். அன்றுவரை சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில்கள் என இருந்த எங்களுடைய வங்கியின் பார்வையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை நோக்கி திருப்ப படாதபாடு பட்டார் அவர். ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வழங்கும் கடனிலிருந்து கிடைக்கும் வட்டியை என்னால் சில ஆயிரம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டிவிட முடியும் என்று தன்னுடைய வட்டார மேலாளர்களுடைய கூட்டத்தில் பேசுவார்.

அவருடைய கூற்றில் உண்மை இருந்தது. ஆனால் அவர் கவனிக்க தவறியது என்னவென்றால் அத்தகைய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களைக் கையாளும் அறிவுத்திறன் எங்களுடைய கிளை மேலாளர்களிடம் இருந்ததா என்பது. அதுவரை தங்க நகைகள் மீது கடன் வழங்குவதையே தங்களுடைய பிரதான செயலாக கருதி வந்திருந்த சிறு கிளை மேலாளர்களையும் start thinking big என்ற கொள்கை திணற அடித்தது. முன்பெல்லாம் தங்களுடைய கிளைக்கு இவ்வளவு தொகை கடனாக வழங்க வேண்டும் என்று வட்டார மேலாளர்கள் நிர்ணயிக்கும் இலக்கை தங்க நகைகள் மீது வழங்கும் கடனை வைத்தே எட்டி வந்த இத்தகைய மேலாளர்கள் இனி என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கி நின்ற நிலைக்கு அவருடைய பேச்சு கொண்டு சென்றதை அவர் உணராமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

அதனுடைய பின்விளைவை அவர் மட்டுமல்லாமல் வங்கி முழுவதுமே அனுபவிக்க வேண்டியிருந்தது.... அடுத்த சில ஆண்டுகளில்...

தொடரும்..

8 comments:

துளசி கோபால் said...

//நம்மில் பலருக்கும் ஒருசிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகிறது.
சிலரை ஓரளவுக்கும் சிலரை பிடிக்காமலும் போய்விடுகிறது.
இதற்கு என்ன காரணம் என்பது நமக்கே தெரிவதில்லை.//

ஆமாங்க இதை நானும் எத்தனையோ முறை நினைச்சுப் பார்த்துருக்கேன்.

அது இருக்கட்டும். வங்கியிலே நாம் போடற பணத்துக்கு ரொம்பக் குறைஞ்ச
வட்டியைக் கொடுத்துட்டு, வங்கியிலே வேலை செய்யறவங்களுக்கு ஆடம்பரமா யூனிஃபாரம்
கொடுக்கரதும், வருஷத்துக்கு ஒரு முறை அப் க்ரேடு செய்யறோமுன்னு உள்ளெ
இருக்கும் (ஏற்கெனவே அருமையா இருக்கும்) இண்டீரியரை மாத்தறதும் பார்த்தாக்
கொஞ்சம் எரிச்சலா வருதேங்க.
இதுக்கு எதாவது விசேஷக் காரணம் இருக்கா?

siva gnanamji said...

'எந்த நோக்கத்திற்காகக் கடன் பெறப்பட்டதோ அந்தக் காரியத்திற்காக மட்டுமே கடன் தொகையைச் செலவிடுதல்'-இதுதானே நெறிமுறை!
ஆனால் அரசங்கமே இதை மீறுகின்றதே...

tbr.joseph said...

வாங்க துளசி,

வங்கியிலே நாம் போடற பணத்துக்கு ரொம்பக் குறைஞ்ச
வட்டியைக் கொடுத்துட்டு, வங்கியிலே வேலை செய்யறவங்களுக்கு ஆடம்பரமா யூனிஃபாரம்
கொடுக்கரதும், வருஷத்துக்கு ஒரு முறை அப் க்ரேடு செய்யறோமுன்னு உள்ளெ
இருக்கும் (ஏற்கெனவே அருமையா இருக்கும்) இண்டீரியரை மாத்தறதும் பார்த்தாக்
கொஞ்சம் எரிச்சலா வருதேங்க.
இதுக்கு எதாவது விசேஷக் காரணம் இருக்கா? //

நிச்சயம் இருக்கு..

சாதாரணமா இந்தியாவுல வங்கியில வேலை செய்யற சிப்பந்திகளுக்கு (Peons) மட்டுந்தான் யூனிஃபார்ம் குடுக்கறது வழக்கம். ஒரு வருசத்துக்கு ரெண்டு செட் ட்ரெஸ் மற்றும் ஒரு செட் சப்பல். மலைபிரதேசத்துல ஒரு செட் வுல்லன் ஸ்வெட்டர்.

இது அவங்களுக்குன்னு சொல்றத விட கிளைக்கு வர வாடிக்கையாளர்கள் மத்தியில ஒரு இம்ப்ரஷன் க்ரியேட் பண்ணணுங்கறதுக்காக.. சாதாரணமா இந்த மாதிரி ஊழியர்கள் பொருளாதாரத்தில் சற்று பிந்தங்கிய குடும்பங்களிலிருந்து வருபவர்கள். ஆகவே தினமும் நல்ல உடையுடுத்தி வருவது சாத்தியமாகாது. ஆகவேதான் நல்ல தரமுள்ள ஆடைகளை வழங்குவதுடன் அதை பராமரிப்பதற்கென வாஷிங் அலவன்சையும் வங்கிகள் வழங்குகின்றன..

அடுத்தபடியக இண்டீரியர் மற்றும் இதர வசதிகள்..

இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்தான்.. ஒரு லொக்காலிட்டியிலருக்கற ஒரு பேங்க் இத செஞ்சா வேற வழியில்லாம மத்த பேங்குகளும் செய்யவேண்டிய கட்டாயம். இந்தியாவில புது ஜெனரேஷன் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் வந்தபிறகு இத்தகைய காஸ்மெட்டிக் செலவுகளை அத்தியாவசிய செலவுகளாகிவிட்டன...

Whether you can afford or not you have no other alternative...

When you are in Rome act like a roman...நியூசிலயும் இதுதான் இன்றைய நிதர்சனமாருக்கும்..

tbr.joseph said...

வாங்க ஜி!

'எந்த நோக்கத்திற்காகக் கடன் பெறப்பட்டதோ அந்தக் காரியத்திற்காக மட்டுமே கடன் தொகையைச் செலவிடுதல்'-இதுதானே நெறிமுறை!
ஆனால் அரசங்கமே இதை மீறுகின்றதே... //

உண்மைதான். ஆனால் ஒரு அரசாங்கம் அதை செய்யும்போது அதற்கு சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம். அதாவது vote bank பொலிடிக்ஸ் என்கிறோமே...

அதனால நாட்டின் கஜானா காலியாகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அது இந்தியா போன்ற நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்று.

ஆனால் அதில் ஒரு தனிநபர் ஈடுபட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

துளசி கோபால் said...

//When you are in Rome act like a roman...
நியூசிலயும் இதுதான் இன்றைய நிதர்சனமாருக்கும்..//

ஓஓஓஓ அப்படித்தான் போல.

ஆனா இங்கே சிப்பந்தின்னு ஒரு கிரேடு இல்லை. எல்லா ஊழியர்களுக்கும்
வருஷம் ரெண்டு முறை அட்டகாசமான ட்ரெஸ்கள். சம்மர் & விண்ட்டர்க்குத் தனித்தனியா!

tbr.joseph said...

எல்லா ஊழியர்களுக்கும்
வருஷம் ரெண்டு முறை அட்டகாசமான ட்ரெஸ்கள். சம்மர் & விண்ட்டர்க்குத் தனித்தனியா!
//

அட! பரவால்லையே.. ஹூம்... பொறாமையா இருக்கு...

வயசாயிருச்சே.. இல்லன்னா நியூசி பேங்குக்கு அப்ளை பண்ணலாம்:-(

G.Ragavan said...

// அது இருக்கட்டும். வங்கியிலே நாம் போடற பணத்துக்கு ரொம்பக் குறைஞ்ச
வட்டியைக் கொடுத்துட்டு, வங்கியிலே வேலை செய்யறவங்களுக்கு ஆடம்பரமா யூனிஃபாரம்
கொடுக்கரதும், வருஷத்துக்கு ஒரு முறை அப் க்ரேடு செய்யறோமுன்னு உள்ளெ
இருக்கும் (ஏற்கெனவே அருமையா இருக்கும்) இண்டீரியரை மாத்தறதும் பார்த்தாக்
கொஞ்சம் எரிச்சலா வருதேங்க.
இதுக்கு எதாவது விசேஷக் காரணம் இருக்கா? //

இந்த இண்டீரியரை மாத்துரதுல ஒரு சைக்காலஜி இருக்குறதா நான் நெனைக்கிறேன். ஒரே மாதிரி இருக்குன்னு யாருக்கும் போரடிச்சிரக்கூடாதில்லையா. அதுனால இருக்கலாம். எல்லாம் வாடிக்கையாளரைக் கவரத்தான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஒரே மாதிரி இருக்குன்னு யாருக்கும் போரடிச்சிரக்கூடாதில்லையா. அதுனால இருக்கலாம். எல்லாம் வாடிக்கையாளரைக் கவரத்தான். //

கவுரத்தான்னு சொன்னா சரி.. எங்க கவுக்கத்தான்னு சொல்ல வந்தீங்களோன்னு நினைச்சிட்டேன் :-)