07 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 55

முந்தைய பதிவின் முடிவில் நம்முடைய நாட்டின் பொருளாதாரம் இன்னும் வளரும் நாடுகள் (Developing Country) என்ற நிலையிலேயே இருப்பதற்கு ஒரு காரணம் வர்த்தகம் மற்றும் தொழில் செய்பவர்களின் நேர்மையற்ற தனமும் ஒரு காரணம் என்று கூறியிருந்தேன்.

இது நாட்டிலுள்ள எல்லா வணிகர்களையும் தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாகாது. நேர்மையுடன் தொழில் செய்து வங்கியிலிருந்து பெறும் கடன் மூலம் பாமரனாய் இருந்து இன்று பெரும் செல்வந்தர்களாக உயர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வாங்கிய கடன ஒழுங்கா திருப்பி கட்டுனாலே போறும் சார். எதுக்கு மேல, மேல கடன் என்று கூறும் வணிகர்களும் தொழிலதிபர்களும் கூட இருக்கிறார்கள். இன்று ஐ.டி. உலகில் கொடிகட்டிப் பறக்கும் பல நிறுவனங்களூம் zero debt நிறுவனங்கள்தான்.

என்னுடைய வட்டார அலுவலகத்தில் கடன் வழங்கும் இலாக்காவில் மேசையதிகாரியாக சுமார் இரு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் இத்தகைய பல வாடிக்கையாளர்களின் நிதியறிக்கையைப் பார்த்திருக்கிறேன். அவர்களுள் பலர் தங்களுக்கு தேவையான முதலீட்டில் சுமார் எண்பது சதவிகிதத்திற்கும் கூடுதலாக தங்களுடைய சொந்த பணத்தையே முடக்கியிருப்பார்கள்.

இத்தகையோருள் ஒருவருடைய நிறுவனங்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும்.

அவர் தமிழகத்தைச் சார்ந்தவர்தான். இப்போது சென்னையையே முற்றுகையிட்டு ஆதிக்கம் செய்துவரும் வணிக சமூகத்தைச் சார்ந்தவர். அவர் இப்போதும் எங்களுடைய வங்கியின் முக்கியமான வாடிக்கையாளராயுள்ளதால் அவர் வணிகம்/தொழில் செய்துவரும் நகரத்தை குறிப்பிட முடியவில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தன்னுடைய கிராமத்திலிருந்து அருகிலிருந்த நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்தவர். ஒரு உடைத்த கடலை, பட்டாணி, பொறி சில்லறை கடையில் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் ஊதியத்திற்கு பணிக்கு சேர்ந்தவர். அவருடைய முதலாளி மதுரையிலிருந்து மொத்தமாய் இவற்றை வாங்கி வந்து விற்பனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர், 'முதலாளி முழுக்கடலையை நாமளே வாங்கி வந்து ஒரு மெஷின வாங்கி ஒடச்சி வித்தா கொஞ்சம் கூட லாபம் கிடைக்குமே' என்று பரிந்துரைத்தார். 'அதுக்கு மொதலுக்கு எங்கல போறது?' என்ற முதலாளியை பேங்குல கேக்கலாம் முதலாளி என்று அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஊரிலிருந்த ஒரே அரசு வங்கியின் மேலாளர் அழுக்கு வேட்டியும் சட்டையுமாக தன் முன் வந்து நின்ற இருவரையும் பார்த்து என்ன நினைத்தாரோ 'ஒரு அஞ்சு பவுன் நகையிருந்தா கொண்டாங்க அடகு வச்சிக்கிட்டு ஒங்களுக்கு வேண்டிய கடன தரேன்' என்றாராம். முதலாளி தயங்கி நிற்க நம்மவர் அவருடைய காதில் ரகசியமாக ஒரு யோசனையை சொல்ல வங்கியென்று பாராமல் அவருடைய கன்னத்தில் ஓங்கியறைந்துவிட்டு வெளியேறினாராம் முதலாளி!

'கட்டுனவ தாலிய அடகு வச்சி தொழில் பண்ணணுமால்லே?' என்பது அவருடைய கேள்வி. தன்மானம் அவரை அதை செய்யவிடாமல் தடுத்தது. அறைபட்ட நம்மவர் அப்போதே முடிவு செய்தார். இனி தான் யாரிடமும் வேலை செய்வதில்லை என்று. உடனே ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன்னுடைய தாய் மற்றும் பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி கிடைத்த நகைகளை கொண்டு வந்து அடகு வைத்து கிடைத்த முதலில் அதே நகரத்தில் ஒரு மூலையில் ஒரு அறவை மிஷினை வாடகைக்கு எடுத்து மதுரைக்கு சென்று முழுக்கடலையை வாங்கிவந்து உடைத்து விற்க ஆரம்பித்தார். ஒரேயொரு கூலியாளை வேலைக்கு வைத்துக்கொண்டு நேரம் காலம் பாராமல் உழைத்து அடுத்த ஒரேயாண்டில் வாடகைக்கு எடுத்த மிஷினையே விலைக்கு வாங்கிக்கொண்டார். மதுரைக்கு சென்று அதிக விலைக்கு உடைத்த கடலை வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்து வந்த அவருடைய முதலாளியே நாளடைவில் இவரிடம் வந்து கடலையை வாங்கிச் செல்லும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறார்.

அவருக்கு ஆபத்பாந்தவனாய் இருந்த அந்த அரசு வங்கி மேலாளர் மாற்றலாகிச் செல்ல அடுத்துவந்தவருக்கு இவரைக் கண்டதுமே பிடிக்காமல் போனது. ஓரளவுக்கு வசதி வந்திருந்தும் எளிமையாக உடையணிவதையே விரும்பிய இவர் வங்கி மேலாளரின் கணிப்பில் தரமிறங்கிப்போனார். அப்போதுதான் அந்த நகரத்தில் எங்களுடைய வங்கி கிளை திறக்கப்பட்டிருந்தது. எங்களுடைய வங்கியின் முதல் தமிழ் மேலாளர் அந்த கிளைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். எங்களுடைய மேலாளருக்கு இவரை முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போனது. இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம். அவருடைய பூர்வீகத்தையும் கடந்த மூன்றாண்டுகளில் அவர் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் கண்டு வியந்துபோன எங்களுடைய மேலாளர் அவருடைய அறவை மில்லை மேலும் மேம்படுத்த அவர் வாங்க விரும்பிய இயந்திரங்களை மட்டுமே செக்யூரிட்டியாக எடுத்துக்கொண்டு அவருக்கு தேவைப்பட்ட கடனை வழங்கியிருக்கிறார். புதிய கிளைகளைத் துவக்கும்போது இத்தகைய கடன்கள் வங்கியின் பொது நியதிகளை மீறி வழங்கப்படுவதுண்டு. சில மேலாளர்கள் துணிவுடன் இத்தகைய செயலில் இறங்குவதும் சகஜம்தான். அதற்கு வாடிக்கையாளர்களை சரிவர தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அந்த திறமையும் துணிவும் எங்களுடைய மேலாளருக்கு இருந்தது. அவர் முதல் முதாலாக கொடுத்திருந்த கடன் சுமார் ஐம்பதாயிரம். அந்தக் காலத்தில் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அது பெரிய தொகைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அவருடைய இன்றைய நிலை! சொன்னால் நம்பமாட்டீர்கள். இன்று அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருடைய ஆரம்பக் கால பட்டாணி, பொறிகடலை வியாபாரத்தை மட்டும் அவர் இன்னும் தன்னுடைய சொந்த மேற்பார்வையிலேயே வைத்திருக்கிறார்! அவருடைய பிள்ளைகள் இருவரால் நடத்தப்படும் மொத்த நிறுவனங்கள் பத்துக்கும் மேல்! ப்ளைவுட் பலகைகளிலிருந்து கட்டட வேலைகள் (construction) வரை தனித்தனி நிறுவனங்களிலும். ஒன்றிலும் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர யாருடனும் கூட்டு இல்லை. ஒரு ஆண்டின் நிகர வருமானம் (லாபம்) சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல்! நான் மேசையதிகாரியாக இருந்த காலத்தில் அவருடைய நிறுவனங்களின் அனைத்து நிதியறிக்கைகளையும் பரிசீலித்திருக்கிறேன்.. அந்த நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் சுமார் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் மேல் அவருடைய சொந்த முதலீடுதான்! சில நிறுவனங்கள் '0 டெப்ட் நிறுவனங்கள்'!. எல்லா நிறுவனங்களின் கடன்களுக்கும் பெரியவர் தன்னுடைய சொந்த ஜாமீனைக் கொடுத்திருப்பார். ஆனால் அவருக்கென்று எந்த தனிப்பட்ட சொத்தும் இருக்கவில்லை. அவருடைய சொத்து (Asset) என்பது அவருடைய நிறுவனங்களில் அவர் செய்திருந்த முதலீடு மட்டும்தான். அவருடைய மூத்த மகன் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் வரை அவருக்கோ அல்லது அவர்களுடைய குடும்பத்திற்கோ குடியிருக்க சொந்த வீடு கூட இல்லை என்பதுதான் அதிசயம்.

நான் வட்டார அலுவலகத்தில் மேசையதிகாரியாக இருந்த சமயத்தில் அவருடைய சில கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பவன் என்ற முறையில் அவருடைய பண்ணை வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். சுமார் எழுபத்தைந்து வயதிலும், பல நிறுவனங்களின் உரிமையாளர் என்கிற அந்த நிலையிலும் அவரிடம் எளிமையைத்தான் காண முடிந்தது. அவருடைய நிதியறிக்கைகளில் தெரிந்த transparency அவருடைய பேச்சிலும் தெரிந்தது. எங்களுடைய முதல் சந்திப்பிலேயே தன்னுடைய ஆரம்பகால அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துக்கொண்ட அவருடைய வெள்ளை மனது என்னை மிகவும் கவர்ந்தது.

நான் அங்கு சென்றிருந்த நேரத்தில்தான் அவருடைய முயற்சியால் கட்டட வேலைக்கான இரும்பு (Torr steel) கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கட்டி முடிந்து திறப்புவிழா நடக்கவிருந்தது. சுமார் இருபது கோடி முதலீட்டில் நிறுவப்பட்டிருந்த தொழிற்சாலையில் அவர்களுடைய நிறுவனத்தின் சேமிப்பிலிருந்து சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் முடக்கியிருந்ததைப் பார்த்த நான். 'நீங்க எதுக்கு term lending institutionக்கு போகாம ஒங்க பணத்தையே முடக்கியிருக்கீங்க? நீங்க ட்ரை பண்ணியிருந்தா ரொம்ப சீப்பான ரேட்டுல லோன் வாங்கியிருக்கலாமே?' என்றபோது. அவருடைய மூத்த மகன் சிரித்துக்கொண்டே 'இது அப்பாவோட ஆசை. எங்களுக்கு உடன்பாடில்லைன்னாலும் அவர் என்ன சொல்றாரோ அதும்படியே செஞ்சிடறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம். அப்பாவுக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கறதுல கூட விருப்பமில்லை... இந்த பண்ணை வீடுகூட வாடகைதான்... பத்து வருச லீஸ். எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கணுங்கறதுக்காக எடுத்தது. ஓனரும் அப்பாவோட நண்பர்தான். முப்பது லட்சம், நாப்பது லட்சம்னு எதுக்குலே குடியிருக்கற வீட்டுக்கு செலவழிக்கிறது. அந்த தொகைய பிசினஸ்ல போட்டா வர்ற வருமானத்துல பாதியக் கொண்டே வீட்டு வாடகைய குடுத்துரலாம்பார்.. உண்மைதான்.. இந்த மாதிரி வீடு வேணும்னா கொறஞ்சது அம்பது லட்சம் வேணும். அதுக்கு ஒங்க பேங்க் வட்டியே வருசத்துக்கு ஏறக்குறைய ஏழரை லட்சத்துக்கு மேல வந்துரும். அதுல பாதிய வாடகைக்கு குடுத்தா போறும்... என்ன நா சொல்றது?' என்றபோது... வங்கியிலிருந்து ஒரு கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தன்னுடைய வீட்டு கழிப்பறைவரை ஏசி செய்திருந்த வேறொரு தொழிலதிபரை நினைத்துக்கொண்டேன்...

தொடரும்

8 comments:

siva gnanamji said...

டாட்டா சொந்தவீடு கட்டிக்கொள்ளவேயில்லை என்று
படித்தபொழுது அதை நம்பத்தயங்கினேன்....
அது உண்மையா என்ற சந்தேகம் இப்பொழுதும் எனக்கு உண்டு..

உங்கள் வாடிக்கையாளர் பற்றி படிக்கும்பொழுது
டாட்டா பற்றிய விபரம் உண்மையோ
என்று நினைக்கின்றேன்

'சிறுகக்கட்டி பெருக வாழ்'க என்பது இதுதானோ?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

'சிறுகக்கட்டி பெருக வாழ்'க என்பது இதுதானோ? //

இருக்கலாம்... அத்தோட வீடு என்பது ஒரு unproductive assets என்பதும் உண்மை. முதலீட்டின் முக்கியத்துவத்தை உணரும் எந்த வணிகரும் தொழிலதிபரும் இதில் ஈடுபட மாட்டார்கள் என்பது உறுதி.

ஒருவழியா சிவா சிவஞானம்ஜி ஆய்ட்டீங்க. வாழ்த்துக்கள் :-)

G.Ragavan said...

வியப்பும் பெருமையும் ஒருங்கே வருகிறது. ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்கிறார் வள்ளுவர். அதாவது ஆழ்ந்து உழைக்கிறவங்க ஊழ்வினையோட மறுபக்கத்தையும் பாத்துருவாங்களாம். அதாவது ஊழ இங்குட்டுக்கூடித் தொளச்சி அங்குட்டு வந்துருவாங்களாம். இன்றைய ஆங்கிலத்தில் சொன்னால் "hardworker say fuckoff to fate"

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

வியப்பும் பெருமையும் ஒருங்கே வருகிறது. ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்கிறார் வள்ளுவர்.//

சரியா சொன்னீங்க.. தூத்துக்குடியில WGC ரோட்ல ஒரு பொறிக் கடல கடை இருக்குமே பார்த்திருக்கீங்களா? மசூதிக்கு எதுத்தாப்புல..அவரும் இப்படி உயர்ந்தவர்தான். ஆனால் அவரைக் குறித்து நான் எழுதவில்லை.

Aani Pidunganum said...

baleh sir,
sollavaarthai ellai, He is one example...

துளசி கோபால் said...

வியாபாரம் செய்யறவங்களுக்குச்'சொந்த வீடு' பத்தி இப்படி
ஒரு எண்ணம் இருக்குதான்.

நானும் இப்படி இருக்கும் உறவினரிடம், ச்சின்னதா இருந்தாலும் சொந்தமா
ஒரு வீடு வாங்கிக்கன்னு சொல்லி பிச்சுப் புடுங்கிக்கிட்டு இருக்கேன். இதுலே
பெண்களோட ஐடியா வேறுவிதமா இருக்கு போல.

அவரோட மனைவிக்கு, சொந்த வீடு கனவு இன்னும் கனவாவே இருக்கு.

tbr.joseph said...

வாங்க ஆணி,

இந்த மாதிரி எளிய நிலையிலிருந்து வங்கிகளின் உதவியுடன் இமய நிலைக்கு உயர்ந்தவர்கள் எத்தைனையோ பேரை நான் சந்தித்திருக்கிறேன்.. இவர்களைப் போன்றே மற்றவர்களும் உழைத்திருந்தால் நாம் எங்கோ சொன்றிருப்போம்..

tbr.joseph said...

வாங்க துளசி,

நானும் இப்படி இருக்கும் உறவினரிடம், ச்சின்னதா இருந்தாலும் சொந்தமா
ஒரு வீடு வாங்கிக்கன்னு சொல்லி பிச்சுப் புடுங்கிக்கிட்டு இருக்கேன். இதுலே
பெண்களோட ஐடியா வேறுவிதமா இருக்கு போல.//

பெண்கள்னு இல்லை. சொந்தமா ஒரு வீடு இருக்கணும்னு ஆண்களும் நினைக்கிறார்கள். மாத ஊதியக்காரர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. நம்மைப் போன்றவர்களால் சேமித்து வீடு வாங்க வேண்டும் என்றால் நடக்காது. கடன் வாங்கிவிட்டு மாதா மாதம் அடைப்பதும் ஒருவித சேமிப்புதான். ஆனால் வணிகர்களுக்கு அப்படியில்லை.. வீட்டில் முடக்கும் பணத்தை வணிகத்தில் முடக்குவதுதான் புத்திசாலித்தனம்.