26 May 2007

அட்டைக் கத்தி வீரரின் அடாவடி பேட்டி!

நம்முடைய அதிரடி நாயகன், அரசியல் தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு அதிரடி (அடாவடி என்பதுதான் சரி) பேட்டி அளித்திருக்கிறார்.

அதிலிருந்து சில அடாவடிகள் மட்டும்...

அவருடைய திருமண மண்டபத்தை அரசு ஏற்றுக்கொண்டதைப் பற்றிய கேள்விக்கு பதில்:

"வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில போட்டுச் சம்பாதிச்சதில்லை. ஊழல் பண்ணி சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம்."

அப்படியா? அப்படியானால் அதே பகுதியில் தங்களுடைய வீடுகளையும், கடைகளையும் இழந்தவர்கள் ஊழல் செய்து, ஊரை ஏமாற்றி சம்பாதித்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஏதோ தானமாக கொடுத்துவிட்டத்தைப் போன்று அங்கலாய்க்கிறீர்களே? இழப்பீடு பெற்றுக்கொண்டுதானே கொடுத்தீர்கள்? அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த அனைவருக்குமேதான்.

ஆனால் சட்டப்படித்தானே நடக்குது என்று கேள்வி கேட்கப்படுகிறது.

"அப்படி நடந்தாத்தான் சந்தோஷப்படுவேனே" என்கிறார்.

அப்ப எதுக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்றீர்கள்? சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடையும் வரை நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி உங்கள் முன் உச்சநீதிமன்றம் வைத்ததே?

"நான் மாற்றுத் திட்டம் கொடுத்தேன்.. ஆனால் வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளப்படவில்லை."

அதாவது அரசு திட்டங்கள் உங்களுடைய சவுகரியத்தைப் பொருத்து மாற்றப்படவில்லை என்கிறீர்கள். அப்படி பாதிக்கப்பட்ட வேறு யாராவது இப்படியொரு திட்டத்தை தர முன்வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுடைய கோரிக்கை மட்டும் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்..

"இங்கே நடந்தது அதிகார துஷ்பிரயோகம். இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். கிரிமினல் அரசியல்னா என்னன்னு எனக்கு கத்துக்குடுத்தீட்டீங்க. அதை வெச்சே என்னாலேயும் திருப்பியடிக்க முடியும்."

உங்களுக்கு கிரிமினல் அரசியல் கத்துக்கொடுத்தது யார் சார்? தி.மு.கவா? இல்லை வேறு எந்த கட்சியுமா? அதே வச்சே திருப்பியடிச்சிருவீங்களா? அதாவது ஆளும் கட்சியினருடைய சொத்துக்களை இடித்து தள்ளுவீர்கள் என்கிறீர்களா? அல்லது ஆட்களையே இடித்து தள்ளிவிடுவேன் என்கிறீர்களா? அதையாவது நீங்களே செய்வீர்களா அல்லது சினிமா பாணியில் டூப் போட்டு செய்வீர்களா?

அரசியலுக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை... ஐம்பதாண்டுகாலம் சட்டமன்ற அனுபவஸ்தரை மிரட்டுகிறீர்கள்...

உங்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தினால்.... மக்களுக்கு இது தேவைதான்...

அடக்கி வாசிங்க சார்... அப்பத்தான் அரசியல்ல நிலைச்சி நிக்க முடியும்...

பேட்டி முழுவதுமே பேத்தல்தான்... ஒரு முதிர்ச்சியற்ற மனிதரின் பிதற்றல்கள்...

25 May 2007

தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்

மதமாற்றம் ஒருவரின் அந்தஸ்த்தை மாற்ற முடியுமா?

தலித் இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறி கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறுவதன் மூலம் மட்டுமே அவருடைய தலித் அந்தஸ்த்தை இழந்துவிடுகிறாரா?

இந்த கேள்வியை கேட்டு கேட்டு கிறிஸ்துவ தலைவர்கள் வெறுத்துப் போய் இருக்கும் காலம் இது.

தேசப் பிதா எனப்படும் மகாத்மாவும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அம்பேத்காரும் மதம் மாறுவதாலேயே சமுதாயத்தில் இருக்கும் ஒருவருடைய சமூக அந்தஸ்த்து மாறிவிடுவதில்லை என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள். ஆகவே தலித் இந்துக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் கிறிஸ்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தலித் கிறிஸ்துவர்களின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை டிசம்பர் மாதம் 1999 வருடம் சந்தித்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதே அமைப்பு அவருக்கு முந்தைய, பிந்தையை பிரதமர்களையும் பல காலக்கட்டங்களில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.

நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் தலித் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தலித் அந்தஸ்த்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்வது தேவைதானா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் இந்த சூழலில் தேசீய சிறுபான்மை கவுன்சிலின் காரியதரிசி ஆஷா தாஸ் மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு தலித் அந்தஸ்து வழங்கப்படுவது அவர்களுடைய மத விஷயத்தில் தலையிடுவது போலாகும் என்று கூறியிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தேசீய ஒருமைப்பாடு கவுன்சில் அங்கத்தினர்களுள் ஒருவரான ஜான் தயால் கூறியிருக்கிறார்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

இந்து தலித்துகளுக்கு இழைக்கப்படும் இழுக்கு கிறிஸ்துவ சமுதாயத்தில் இழைக்கப்படுவதில்லை. உண்மைதான். அவர்களுக்கென்று வழிபாட்டுத்தளங்களில் தனி இடமோ அல்லது சடங்குகளில் பங்குகொள்ளும் உரிமை மறுக்கப்படுவதோ இல்லைதான். ஆனாலும் சமுதாயத்தில் இவர்களுக்கு சம அந்தஸ்த்து என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது. ஆலயத்தினுள் வழங்கப்படும் சம அந்தஸ்த்து மட்டுமே அவர்களை வாழவைத்துவிட முடியாது.

நேற்றுவரை அரசாங்கத்திலிருந்து கிடைத்து வந்த சலுகைகள் மதம் மாறிய காரணத்தாலேயே மறுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயம் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருந்து வருகிறது.

இதைக் குறித்து முன்னொரு நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் குமுதத்தில் எழுதிய ஒருபக்க கட்டுரை நினைவுக்கு வருகிறது. கிறிஸ்த்து + அவன் அல்லது அவள் என்பதுதான் கிறிஸ்த்தவன் அல்லது கிறிஸ்த்தவள் என்றானது. அதாவது ஒவ்வொரு கிறிஸ்த்துவனும் கிறிஸ்து என்றாகிறது. அப்படியிருக்க உயர்ந்த கிறிஸ்த்து, தாழ்ந்த கிறிஸ்த்து என்பது எப்படி சரியாகும்? கிறிஸ்த்துவனாக மாறிய எவனும் தான் கிறிஸ்த்துவன் என்று பெருமையுடன் கூறவேண்டும். அதை விடுத்து நான் இன்றும் தாழ்த்தப்பட்டவன் என்று கருதுவது கிறிஸ்த்துவுக்கே இழுக்காகும்.

அதாவது நான் கிறிஸ்த்துவன் என்று பெருமை பாராட்டிக் கொள்வதே என்னுடைய பசியை ஆற்றிவிடும் என்பதுபோலிருந்தது அவருடைய கூற்று. அவருடைய பல முரண்பட்ட கருத்துகளில் இதுவும் ஒன்று.

*****

22 May 2007

காலம் மாறிப் போச்சு

பின் தூங்கி பின் எழுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.

உங்களைப் போலவே பலரும் உள்ளனர்.

சோம்பேறி, ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன்... இப்படி எத்தனை பட்டங்கள்?

கவலைப்படாதீர்கள்.

டென்மார்க் நிறுவனம் ஒன்று சமீபத்தில் காலையில் எழுந்து எட்டுமணிக்கெல்லாம் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கெதிராக ஒரு இயக்கத்தையே துவக்கியுள்ளது.

B-Society என்ற இணையதளம் வழியாக முன்தூங்கி முன்எழுபவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே துவங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

அதிகாலையில் எழுந்து எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மனி வரையிலும் வேலை செய்பவர்களுக்கும் காலையில் சாவகாசமாக எழுந்து பதினோரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை செய்பவர்களுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று வாதாடுகின்றனர் இதன் இயக்க உறுப்பினர்கள்.

உண்மைதானே!

இந்த இயக்கம் துவக்கப்பட்ட நான்கே மாதங்களில் 4,800 அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது இந்த நிறுவனம்!

இதே இயக்கம் நம் நாட்டில் துவக்கப்பட்டால் இன்றைய ஐ.டி. தலைமுறை இதில் பெருமளவில் சேர முன்வருவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

டேனிஷ் குடும்ப நல அமைச்சர் கரீனா க்ர்ஸ்டென்சனும் இந்த இயக்கத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறாராம். 'அலாரம் கடிகாரத்திற்கு அடிமையாக வாழ்ந்தது போதும். நம்முடைய வாழ்க்கை அமைதியாகவும் நம் விருப்பத்திற்கேற்பவும் அமைய இந்த விடுதலை நிச்சயம் தேவை.' என்கிறார் அவர்!

இந்த B-Society அமைப்பின் தலைவர் கமிலா க்ரிங் இந்த துறையில் ஒரு டாக்டர் பட்டத்தையே பெற்றிருக்கிறாராம்! அவருடைய இயக்கத்தில் இத்தகைய பள்ளியே இயங்கி வருகிறதாம். இங்கு வகுப்புகள் நண்பகலில்தான் துவங்குகிறதாம்!

இது டென்மார்க்கிலிருந்து ஸ்வீடன், ஃபின்லேண்ட் மற்றும் நார்வே போன்ற நாடுகளுக்கும் வேகமாக பரவுகிறதாம்!

இதை ஏன் நம்முடைய நாட்டிலும் துவங்கக் கூடாது?

அதிகாலையில் எழுந்து அழுது வடிந்த முகங்களுடன் பள்ளிக்கு செல்லும் நம்முடைய குழந்தைகளுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்!

ஏன் நம்முடைய இளைஞர்களுக்கும்தான்! படித்து முடித்து பணிக்கு செல்லும் வயதிலும் என்னுடைய மகளை காலையில் ஏழரை மணிக்கு எழுப்ப எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது!

ஆகவே இந்த இயக்கத்தை துவக்கிய கமிலா க்ரிங் அவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு ஒரு வேண்டுகோள் விடுத்தால் என்ன என்று தோன்றுகிறது:-)

திரும்பிப் பார்க்கிறேன் II - 61

என்னுடைய நண்பர் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது.

என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய தொழிற்சங்க துணைத்தலைவர் ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கையில் என்னுடைய மேசைய அணுகி, 'டிபிஆர் ஒரு நிமிஷம் உங்களிடம் பேச வேண்டும்' என்றார்.

நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்துதான் அலுவலகத்திலிருந்து புறப்படுவோம். ஏனெனில் அவரும் நானும் ஒரே பகுதியில்தான் குடியிருந்தோம். மேலும் அவருக்கு வாகனம் என்று எதுவும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான். எங்கு சென்றாலும் ஒன்று நடை, அல்லது ஆட்டோ.

ஆகவே அன்று என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று அணுகியதும் நான் சற்று தயங்கினேன். 'நாளைக்கு காலைல பேசலாமா?' என்றேன்.

அவருக்கும் என்னுடைய தயக்கத்தின் காரணம் தெரிந்தது. ஆயினும் அவர், 'டிபிஆர் நீங்க இவர போகச் சொல்லிட்டு வாங்க. அவர் விஷயமாத்தான் பேசணும்.' என்றார் சற்று உரக்க.

நான் கூறாமலே என்னுடைய நெல்லை நண்பர் புரிந்துக்கொண்டு, 'சரி டிபிஆர் நாளைக்கு பார்க்கலாம்' என்று கூறிவிட்டு வெளியேறினார்.

அவர் செல்லும் வரை காத்திருந்த என்னுடைய தொழிற்சங்க நண்பர், 'டிபிஆர். நீங்க பல தடவை சொல்லியும் அவர் அந்த மாதிரி பதில் எழுதி அனுப்புனதுக்கு காரணம் இருக்கு.' என்றார் ஒரு sly புன்னகையுடன்.

நான் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

'இவரோட ஜோனல் மேனேஜர் இவர கூப்ட்டு 'நீ எல்லா தப்பையும் ஒத்துக்கோ. நா என்க்வயரி டைம்ல ஒன்னெ காப்பாத்தறேன்'னு சொல்லியிருக்கார்.

நான் வியப்புடன் 'அப்படியா? ஏன்?' என்றேன். அவர் சொல்ல வந்தது எனக்கு லேசாக புரிந்தாலும் அவர் வாயிலிருந்தே அதை கேட்க விரும்பினேன்.

'இவர் அந்த லோன குடுக்கட்டுமா சார்னு அவர்கிட்ட கேட்டுட்டுத்தான் குடுத்துருக்கார். அவரும் அந்த டீலர அவரோட ஆஃபீசுக்கு வரச் சொல்லி 'வாங்க' வேண்டியத வாங்கிக்கிட்டு ஃபோன்ல இவர கூப்ட்டு குடுங்கன்னு சொல்லியிருக்கார். இவர் எழுத்து மூலமா சாங்ஷன் தாங்க சார்னு கேக்காம சரின்னு ஓரலா சொல்லிட்டு லோனையெல்லாம் குடுத்துருக்கார்.'

இது நான் எதிர்பாராதது. என்னுடைய நண்பர் 'நான் லோன குடுத்த விஷயம் எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரியும்' என்று சொன்னதை அவர் கடன்களை கொடுத்துவிட்டு இறுதியில் ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருப்பார் என்றுதான் நினைத்தேன். சாதாரணமாக அத்தகைய ரிப்போர்ட்களை ஜோனல் அலுவலகத்திலிருக்கும் கடைநிலை அதிகாரி என்ன, ஏது என்று பார்க்காமலே கோப்பில் சேர்த்துவிடுவதை என்னுடைய அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஆகவே என்னுடைய நண்பர் அனுப்பியிருந்த அறிக்கையை அவருடைய வட்டார மேலாளர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் இவர் கூறுவதைப் பார்த்தால் கடன் வழங்கியதற்குக் காரணமே அவருடைய வட்டார மேலாளர்தான் என்று தெரிந்தது.

'அவருக்கு மேலிடத்துல நல்ல ஹோல்ட் இருக்கு டிபிஆர். இருந்தாலும் இவரே எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டா தன்னோட பேர் அனாவசியமா கெடாதுல்ல... அதான்... அதுக்கேத்தா மாதிரி இவரும் அவர் சொன்னத அப்படியே நம்பி எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு எழுதி குடுத்துட்டார். நீங்க வேணா பாருங்க அந்த ஜோனல் மேனேஜரே மேனேஜ்மெண்ட் விட்னசா வந்து இவருக்கு எதிரா சாட்சியம் குடுக்கப் போறார். இவரும் வேற வழியில்லாம எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு பனிஷ் ஆகப்போறார்.' என்றார் என்னுடைய தொழிற்சங்க நண்பர்.

'ஒங்க எக்ஸ்ப்ரீயன்ஸ் படி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் கிடைக்கும் சார்?' என்றேன்..

'வேலை போகாதுன்னு நினைக்கேன்.. ஏன்னா லோன் வாங்குனவங்கள்ல பாதி பேர் கட்டியிருக்காங்களே... அதனால் இது ஒரு ஃப்ராடுன்னு சொல்ல முடியாது. ஆனா இவர் வையலேட் செஞ்சிருக்கற இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் ரொம்ப சீரியசா இருக்கறதால... அஞ்சாறு இன்க்ரிமெண்ட்ஸ் நிச்சயம் கட்டாகும்... டிமோட் பண்ணாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.......'

அடப்பாவமே என்று இருந்தது. அவரும் நானும் அப்போது Scale III என்ற மிடில் மேனேஜ்மெண்ட் க்ரேடில் இருந்தோம். இன்னும் ஒரு வருடத்தில் அடுத்த நிலைக்கான பதவி உயர்வு நேர்காணல் நடக்க வாய்ப்பிருந்தது. இந்த நேரத்தில் இவருக்கு டிமோஷன் என்றால்..... இதுவரையிலும் அவர் சாதித்தவையெல்லாமே வீணாகிவிடுமே என்று தோன்றியது..

பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பதுபோல் இவருடைய வட்டார மேலாளருடைய தவறான வழிகாட்டுதலால் இவருடைய அலுவலக வாழ்க்கையே பாதிக்கப்படப் போகிறதே என்று நினைத்தேன்.

அவருடைய மூன்று பிள்ளைகளும் மேல் நிலைப் பள்ளியைக் கடக்கின்ற நிலையில் இருந்தனர். இந்த நேரத்தில் இவருக்கு எதிர்வரும் காலத்தில் கிடைக்கவிருந்த ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டால் என்னாவது என்றும் தோன்றியது.

ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்ததும், 'என்னவாம் அந்த யூனியன் ஆளுக்கு? என்னெ காப்பாத்தறேன்னு சொல்றானா? எல்லாம் ஹம்பக்.. நம்பாதீங்க...' என்றார் சிரிப்புடன்..

'சார் அப்படி சொல்லாதீங்க.' என்றேன் சூடாக. பிறகு அவர் என்னிடம் முந்தைய நாள் கூறியவற்றை சுருக்கமாக எடுத்துரைத்தேன். 'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிரல சார். நீங்க குடுத்த ரிப்ளைய திருப்பி வாங்கிரலாம். நீங்க போய் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போறும். அவரே டிப்பார்ட்மெண்ட் காண்டாக்ட் பண்ணி அத திருப்பி வாங்கிட்டு சூட்டபிளா வேற பதில எழுதி குடுப்பார். நீங்க எதுக்கு சார் ஒங்க ஜோனல் மேனேஜர் பண்ண ஃப்ராடுக்கு பலியாகணும்?'

'டிபிஆர். நான் ஏற்கனவே அவர் சொன்னபடி ரிப்ளை குடுத்தாச்சி.. இனி கடவுள் சித்தப்படி நடக்கட்டும். நான் செஞ்சது தப்புன்னா பனிஷ்மெண்ட் கிடைக்கட்டும்... நா ஏத்துக்க தயார்... ஆனா குடுத்த ரிப்ளைய திருப்பித் தாங்கன்னு நான் போய் கேட்டா அதுவே தப்பாயிரும். அப்புறம் அவர் என்க்வயரியில ஹெல்ப் பண்ண மாட்டார்.' என்றார் சற்றும் கவலைப்படாமல்.

சரி இனியும் வற்புறுத்துவதில் பயனில்லை என்று நினைத்து அந்த விஷயத்தை நானும் மறந்துப்போனேன்..

இரு வாரங்களுக்குப் பிறகு எனக்கு தலைமையகத்திலிருந்து தொலைபேசி வந்திருப்பதாக என்னுடைய இலாக்கா அதிகாரியின் அறையிலிருந்து அழைப்பு வர நான் யாராயிருக்கும் என்று நினைத்தவாறு சென்று எடுத்தேன்.

எதிர்முனையில் என்னுடைய வங்கி முதல்வர்!

'Is there anybody next to you?' என்றார்.

நான் என்னுடைய இலாக்கா அதிகாரியைப் பார்த்தேன். அவர் வேலையில் மும்முரமாக இருந்தாலும் நான் பேசுவதைக் கவனிப்பதை என்னால் உணர முடிந்தது. நான் பட்டும் படாமலும் 'I am in the CM's cabin Sir.' என்றேன்.

அவர் உடனே, 'Tell me number of your personal extension I will ask my PA to call you on that line.' என்றார்.

நான் என்னுடைய மேசையிலிருந்த இண்டர்காம் எண்ணை கூறிவிட்டு துண்டித்தேன். 'சார்... வீட்லருந்து ஒரு ஃபோன்... அதான் என்னோட எக்ஸ்டென்ஷனுக்கு பண்ணச் சொன்னேன்.' என்று சமாளித்துவிட்டு என்னுடைய மேசைக்கு விரைந்தேன். அடுத்த நிமிடமே என்னுடைய தொலைபேசி ஒலிக்க நான் எடுத்து, 'Yes Sir.' என்றேன்.

அவர் உடனே என்னுடைய நெல்ல நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'

உண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.

'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி? அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.

தொடரும்..

21 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 60

மத்திய ஆய்வுக் குழுவின் இறுதியறிக்கையின் நகலை என்னுடைய நண்பருக்கு அனுப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல்களுக்கு அவரிடன் விளக்கம் கேட்டபோதுதான் தெரிந்தது அவருடைய பிரச்சினையின் தீவிரம்.

ஆய்வு அறிக்கையின்படி

1. என்னுடைய நண்பர் வழங்கியிருந்த அளவு எண்ணிக்கையில் கடன் வழங்க ஒரு வட்டார மேலாளருக்கே அதிகாரமில்லை. ஆகவே என்னுடைய நண்பர் வழங்கியிருந்த கடன்கள் அனைத்துமே நியதிக்கு மீறியவை.

2. மாத ஊதிய சான்றிதழை வழங்கவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடைய ஊதியத்திலிருந்து மாதத் தவணைகளைப் பிடித்தம் செய்யவோ பள்ளி தலைமையாசிரியருக்கு அதிகாரம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிக்கே அந்த அதிகாரம் இருந்தது. ஆனால் அத்தகைய சான்றிதழை வழங்கிய விவரமே தங்களுக்கு தெரியாது என்று எல்லா நிர்வாகிகளுமே ஆய்வுக் குழுவிடம் தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

3. கடன் பெற்றவர்கள் தங்களுடைய பங்குக்கு செலுத்த வேண்டிய மார்ஜின் தொகையை சாதனங்களை விற்பனை செய்த டீலரே வங்கியில் செலுத்தியிருந்தார்.

4. டீலருக்கு சாதனங்களின் தொகையை வங்கி காசோலையாக வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் எங்களுடைய கிளையிலேயே டீலரை கணக்கு துவக்க அனுமதித்து கடன் தொகையை வரவு (credit) செய்திருந்தார் என்னுடைய நண்பர். பிறகு அதிலிருந்து மொத்த தொகையையும் ரொக்கமாக எடுக்க அனுமதித்திருக்கிறார். இதன் மூலம் கடன் தொகையின் உபயோகத்தை (end use of the loans) கிளை மேலாளர் உறுதி செய்யவில்லை. அத்துடன் வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்த சிலருக்கு கணக்கிலிருந்து காசோலை (cash cheque) வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வீடுகளை சென்று பார்த்ததில் கடன் வழங்கப்பட்ட சாதனங்களை அவர்கள் வாங்கவேயில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

5. கடன் பெற்றிருந்த பலரும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்தில் வசிக்கவில்லை.

அதாவது ஒரு கடனை வழங்க தேவையான அடிப்படை விதிகளைக்கூட மேலாளர் கடைபிடிக்கவில்லையென்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த லட்சணத்தில் இருநூறு கடன்களை வழங்கியிருந்தார்!

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றசாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவருடைய விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் அவர்மீது விசாரனை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

சாதாரணமாக இவ்வாறு விளக்கம் கோரி கடிதம் வரும்போது பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகுவது வழக்கம். தொழிற்சங்கத்தில் இதற்கெனவே சில அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இருப்பார்கள். வேண்டுமென்றே ஊழல் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கும் உறுப்பினர்களைத் தவிர மற்றெல்லா உறுப்பினர்களுக்கும் இத்தகைய சமயங்களில் உதவுவதற்கு இவர்கள் தயாராக இருப்பார்கள்.

என்னுடைய நண்பர் நிச்சயம் ஊழலில் ஈடுபடுபவர் அல்ல. அவருடைய நோக்கம் கிளையின் வணிகத்தை கூட்டுவது மட்டுமே என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதாவது அவரை நன்றாக தெரிந்திருந்தவர்களுக்கு. ஆகவே என்னுடைய அலுவலகத்திலிருந்த பலரும் அவரை தொழிற்சங்கத்தை அணுகும்படி கேட்டனர்.

ஆனால் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. 'எதுக்கு? நா செஞ்சிருக்கற தப்புன்னுதான் எனக்கே தெரியுதே? ஆனா தப்பான நோக்கத்தோட செய்யலேன்னு எக்ஸ்ப்ளெய்ன் செஞ்சிட்டுப் போறேன்?' என்றார் கூலாக. அவர் சரியான வெகுளி என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

சாதாரணமாக நாம் தவறே செய்திருந்தாலும் விசாரனை என்று வந்தால் அதை மறுப்பதுதான் வழக்கம். விசாரனைக்கு உத்தரவிடப்பட்டால் நாமே நமக்காக வாதாடுவதற்குப் பதிலாக தொழிற்சங்க இதில் முன் அனுபவம் உள்ள இத்தகைய அதிகாரிகள் நமக்காக வாதாடுவார்கள்.

அதையும் மீறி நாம் செய்தது தவறுதான் என்பது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்கு வேறொரு அதிகார் இருப்பார். விசாரனை நியாயமாகவும் பாரபட்சமில்லாமலும் நடத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னுடைய குற்றத்தை மறுத்துப் பேச போதிய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு வங்கியின் நியதிகளின்படி இன்ன தண்டனை வழங்கலாம் என்று தீர்மானிப்பார்.

ஆனால் அவருடைய தீர்ப்பை எதிர்த்து முறையிட ஒரு மேலதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். இவற்றையெல்லாம் கடந்து வங்கியின் இயக்குனர் குழுவிடமும் முறையீடு செய்ய வாய்ப்புண்டு.

ஆனால் இதற்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர் மறுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தான் செய்த தவறுகளை விளக்கம் கோரும் சமயத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டால் பிறகு விசாரனைக்கே தேவையில்லாமல் போய்விடும். பிறகு விதிக்கப்படும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.

தங்களுடைய வாதத் திறமையால் விசாரனையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட பல அதிகாரிகளும் அதிலிருந்து தப்பித்ததை நான் கண்டிருக்கிறேன். குற்றச்சாட்டிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படாவிட்டாலும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் குறைந்துவிடுவதையும் கண்டிருக்கிறேன். ஆகவே பல அதிகாரிகளும் தங்களுடைய தொழிற்சங்கத்தை விளக்கம் கேட்கப்படும் நிலையிலேயே அணுகுவது வழக்கம்.

ஆகவேதான் என்னுடைய நண்பரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அத்துடன் என்னுடைய அலுவலகத்திலேயே எங்களுடைய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரும் பணியாற்றிக்கொண்டிருந்ததால் இதற்கென்று கேரளா செல்ல வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. மேலும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவராகவும் இருந்தார். அவருக்கு இதுபோன்ற பல விளக்கக் கடிதங்களுக்கு பதிலளித்த அனுபவமும் இருந்தது. பல இளம் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழிகளிலிருந்து மீட்டவர் அவர். மீட்க முடியாமல் போன சமயங்களில் அவர்களுடைய தண்டனையைக் குறைக்க வேண்டி இயக்குனர் குழு வரையிலும் மேல் முறையீடு செய்த அனுபவம் இருந்தது.

ஆனால் என்ன சொல்லியும் என்னுடைய நண்பர் மசிவதாயில்லை. 'என்னைய பொருத்தவரைக்கும் நா ச்செஞ்சது தப்புன்னு தெரியுது டிபிஆர். நா லோன் குடுத்த விஷயம் எங்க ரீஜினல் மேனேஜருக்கும் தெரியும். அதனால நா எந்த தப்பும் ச்செய்யலன்னு சொல்லி மறுபடியும் ஒரு தப்ப ச்செய்ய நா விரும்பல. என்னைய விட்டுருங்க... கடவுள் சித்தப்படி நடக்கட்டும்.'

அவர் கடன்களை வழங்கிய விஷயம் தன்னுடைய வட்டார மேலாளருக்கு தெரியும் என்று கூறினாலும் சம்பந்தப்பட்ட வட்டார மேலாளர் தனக்கு என்னுடைய நண்பர் இதைக்குறித்து எந்த தகவலும் எழுத்து மூலமாக தரவில்லை என்று ஏற்கனவே என்னுடைய தலைமையகத்துக்கு தெரிவித்திருப்பதாக என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதையும் என்னுடைய நண்பரிடன் கூறி, 'இங்க பாருங்க சார். நீங்க லோன் குடுத்த விஷயம் எனக்கு தெரியும்னு அவர் சொன்னா நிச்சயம் அவர் மாட்டிக்குவார். ஏன்னா அவருக்கே இவ்வளவு பேருக்கு லோன் குடுக்கறதுக்கு அதிகாரம் இல்லை. அதனால அவர் நிச்சயம் ஒங்கள டிஃபென்சுக்கு வரப் போறதில்லை.' என்றேன். ஆனால் அவரோ, 'அவர் அப்படி ச்சொல்லியிருந்தா அவரெ கடவுள் பாத்துக்குவாருங்க.' என்றார் ஒரு பாதிரியாரைப் போல.

மாலைப் பொழுதுகளில் பாதிரியாரைப் போன்று வீட்டிலேயே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்தான் அவர். இன்றும் பிரபலமாக இருக்கும் சி.எஸ்.ஐ. போதகர் ஒருவரின் பரம சிஷ்யர் என்பதால் அவருடைய பேச்சிலும் பாட்டிலும் அந்த சாயல் மிகத் தெளிவாகவே இருந்தது.

ஆனால் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராத மனிதர். நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் அவருக்கு விளக்கம் கேட்டு வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்து விதிமீறல்களையும் ஒப்புக்கொண்டதுடன் இனி இத்தகைய தவற்றை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் எழுதி அனுப்பிவிட்டார்.

தொடரும்…

19 May 2007

செல்பேசியா தொல்லைபேசியா!

இரண்டு நாட்களுக்கு முன்பு உலக தொலைத்தொடர்பு தின விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் உபயோகத்தைப் பற்றி பேசுகையில் செல்பேசிகளின் தீமையைப் பற்றி மிக 'அருமையாக?' பேசினார்.

அதாவது அவருடைய பல்கலைக்கழக வளாகத்தில் செல்பேசிகளின் உபயோகத்தை நிறுத்தியதிலிருந்து மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறும் விழுக்காடு கணிசமாக உயர்ந்திருக்கிறதாம்! அத்துடன் மாணவர்களுடைய employability அதாவது வேலைக்கு 'லாயக்கான' மாணவர்களாக மாறிவிட்டனராம்!

அவர் தொடர்ந்து செல்பேசி இப்போதெல்லாம் தொல்லைபேசியாக மாறிவருகிறது. அது படிக்கும் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
அதைப் படித்ததுமே சிரிப்புத்தான் வந்தது. எப்படி இத்தனை பொறுப்புள்ள பதவியிலுள்ளவர்களால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேச முடிகிறது?

இன்று அவருடைய கூற்றை மறுப்பதுபோல திரு.R.K. ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ராகிங் தொல்லையிலிருந்து மாணவர்கள் விடுபட செல்பேசிகள்தான் மிகவும் பயனுள்ள தொலைத்தொடர்பு கருவியாக பயன்படுகிறது என்று கூறியதாக செய்தி வந்துள்ளது!

அவரே தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளில் செல்பேசியை பயன்படுத்தாமலிருக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இப்போது சந்தையில் கிடைக்கும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

அதாவது தொலைத்தொடர்பு சாதனங்கள் மக்கள் பயன்படுத்தத்தான் உருவாக்கப்படுகின்றன. அதை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதைக் காரணம் காட்டி அதை முழுவதுமாக தடைசெய்வது அறிவின்மை.

இதை உலகளவில் பிரசித்தமாயுள்ள ஒரு பல்கலைக்கழக தலைவரே செய்கிறார் என்பதுடன் அதனால் நன்மையே விளைந்திருக்கிறது என்பதுபோல் பேசி வருவதுதான் வேடிக்கை!

அதுவும் தொலைத்தொடர்பு தின விழாவில்!

அவருடைய உத்தரவின்பேரில் இப்போதெல்லாம் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரிக்குள் நுழையும் விருந்தாளிகளுடைய (guests) செல்பேசியும் வாசலிலேயே பறித்துக்கொள்கிறார்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய் மகளுடைய பட்டமளிப்பு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். 'சார் செல்ஃபோன இங்கயே சரண்டர் பண்ணிட்டு ரிசிட் வாங்கிட்டு போங்க.. இல்லன்னா உங்கள உள்ள விடமாட்டோம்.' என்று வாசலிலேயே குண்டர் லெவலுக்கு நின்ற காவலாளி வழிமறித்தார். 'பாத்தீங்களா நா சென்னேன்லே.' என்று விஷமத்துடன் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பார்த்துக்கொண்டிருந்தார் என்னுடைய மகள். வேறு வழியில்லாமல் தேமே என்று கொடுத்துவிட்டு சென்றேன்.

மாணவர்களை தடைசெய்ததுடன் நில்லாமல் அவர்கள் தேர்வில் வெற்றிபெற அவர்களுடைய வீடுகளிலும் இனி செல்பேசிகளை பயன்படுத்தலாகாது என்று அடுத்த விழாவில் அவர் கூறாமல் இருந்தால் சரி!

****

18 May 2007

அத்வானியின் புது யோசனை!

புதுதில்லியில் நேற்று துவக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு மாநாட்டில் பா.ஜ.க தலிவர் அத்வானி அவர்கள் ஏற்கனவே குழம்பியுள்ள இட ஒதுக்கீடு பிரச்சினையை தன் பங்குக்கு ஒரு புதிய யோசனையை தெரிவித்து மேலும் குழப்பியுள்ளார்.

அதாவது உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் முஸ்லீம்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டுமாம். இதற்கு 'உயர் ஜாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முடியும்' என்று சமீபத்தில் மாயாவதி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தடி சாக்கில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஏழை முஸ்லீம்களின் கல்விக்காக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அதாவது தென்னிந்திய முஸ்லீம்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டார்கள் ஆகவே அவர்களுக்கு சலுகைகள் தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது அவருடைய பேச்சு..

ஏற்கனவே இந்திய அரசியல் சட்டம் 15வது பிரிவில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் அதை திசை திருப்பும் நோக்கத்துடனேயே அத்வானி அவர்கள் இந்த புதிய யுக்தியைக் கையாண்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் தொடர்ந்து, 'ஜாதி, மதம், இனம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் மேம்பாடு அடையவேண்டும்.' என்கிறார்.

அதாவது ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மாத்திரம் மேம்பாடு அடைந்தால் போதாது. உயர் ஜாதியிலும் பிந்தங்கியோர் உள்ளனர். ஆகவே அவர்களும் மேம்பட சிறப்பு திட்டங்கள் வேண்டும் என்கிறார். இதற்கென்று இட ஒதுக்கீடும் கேட்பார்கள் போலிருக்கிறது.

இதை அப்படியே ஆதரிப்பதாக பாரதப் பிரதமர் அதே மாநாட்டில் தெரிவித்தாலும் பா.ஜ.கவின் உள்நோக்கத்தை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி.

மேலோட்டமாக பார்த்தால் இந்த யோசனையில் தவறேதும் இருப்பதாக தெரியாது.

ஆனால் இந்த நேரத்தில் இதை முன்வைத்திருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு யோசனை தேவைதானா?

அவருடைய இந்த யோசனையில் உயர்ஜாதியிலுள்ளவர்களைப் போலவே மற்ற ஜாதியிலுள்ளவர்களுக்கும் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பதுபோன்ற தொனி ஒலிக்கிறதே?

16 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 59

என்னுடைய வங்கி முதல்வரின் போக்குடன் உடன்பாடில்லாத பல வட்டார மேலாளர்களும் மறைமுகமாக அதை எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதில் மிகவும் முனைப்பாயிருந்தவர் என்னுடைய வட்டார மேலாளர். அவர் எழுதிய சூடான கடிதமும் முதல்வரின் போக்கில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்தவர் இனி நேரடி தாக்குதலில் இறங்குவதில் எந்த பயனுமில்லையென்பதை உணர்ந்தார். ஆகவே அவர் கிளை மேலாளர்களை தொலைபேசியில் அழைத்து நம்முடைய வட்டாரத்தைப் பொருத்தவரை வங்கியின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் பெரிய நிறுவனங்களை நாடிச் செல்ல தேவையில்லையென்றும் கூறலானார்.

இது எப்படியோ வங்கி முதல்வரின் கவனத்திற்கு சென்றது. எப்படியோ என்ன, எல்லாம் எங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்த நெல்ல நண்பர் வழியாகத்தான். இந்த விஷயம் எனக்கே பிறகுதான் தெரிய வந்தது. ஆனால் என்னுடைய வட்டார மேலாளருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதுமுதல் அவரை அந்த அலுவலகத்திலிருந்து தூக்குவதில் முனைப்பானார்.

என்னுடைய நண்பர் கிளை மேலாளராக பணியாற்றி வெற்றிகள் பல கண்டவர். அவருடைய சமூகத்திற்கே உரிய வணிக சாதுரியம் அவரிடம் நிறையவே இருந்தது. ஆயினும் வங்கியின் நியதிகளைப் பற்றி கவலைப்படமாட்டார். 'நியாயமா பிசினஸ் பண்ணணும்னு வர்றவங்கிட்ட ரூல்ஸ் பேசின என்னவே பிரயோசனம்? நாம சொல்ற ரூலுக்கெல்லாம் சரி, சரின்னு தலையாட்டறவன் வாங்கன கடன திருப்பி கட்டமாட்டான்..' என்பார் கேட்டால். ஆனால் அவர் செயலாற்றிய விதம் அவரை இரண்டு கிளைகளில் வெற்றி பெற்று மூன்றாவதாக சற்று பெரிய கிளையில் மேலாளராக அமர்த்தப்பட்டதுமே சிக்கலில் சிக்க வைத்தது.

நான் வட்டார கிளையில் இரண்டாவது முறையாக சேர்ந்து சுமார் ஆறு மாதங்களில் அவரும் அதே அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கெதிராக விசாரனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய கிளை வேறொரு வட்டாரத்தில் இருந்ததால் அதனுடைய முழுவிவரம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரும் நெல்லையைச் சார்ந்தவர்தான் என்பது அடுத்த இரு வாரங்களுக்குள் தெரிந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததுடன் தமிழ்நாட்டிலிருந்த எங்களுடைய வங்கி கிளைகளில் நான்கைந்தை தவிர பலவற்றில் பணியாற்றியிருக்கவில்லை. ஆகவே அவரை அதற்கு முன்பு சந்தித்திருக்கவில்லை. 'ஒங்கள பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்... ஏன்னா நம்ம ரெண்டு பேருக்கும் இனிஷியல் மூனு இருக்குல்லே... இந்த மாதிரி திருநெல்வேலிகாரனுக்குத்தான இருக்கும்?' என்றார் ஒருநாள். ஆம்... நா டிபிஆர் என்பதுபோன்றே அவருடைய பெயரையும் மூன்றெழுத்தில் சுருக்கிவிடலாம். நெல்லை, தூத்துக்குடி போன்ற ஊர்களில்தான் குழந்தைக்கு பெயரிடும்போது தாத்தா-பாட்டி, மாமன்மார் பெயர்களையும் சேர்த்துவிடுவார்கள்... நீண்ட பெயரை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே நாக்கு சுளுக்கிக் கொள்ளும்... ஆகவே பலரும் அதை சுருக்கி வைத்துவிடுவார்கள்...

அவர் முந்தைய கிளையில் வங்கியின் விதிகளை மீறி வழங்கியிருந்த பல கடன்களும் நிலுவையில் நின்றிருந்ததாக அவரே என்னிடம் கூறினார். அதற்காக எங்களுடைய தலைமையகம் அவரிடமிருந்து விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை என்னிடம் காட்டி, 'இதப் படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க டிபிஆர்... இதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்த பிசினஸ் பண்ண முடியுமா?' என்றார் ஒருநாள்.

அதை வாங்கி படித்தபோதுதான் தெரிந்தது அவருடைய செய்கைகளின் தீவிரம்.

அவர் செய்திருந்ததன் சாராம்சம் இதுதான்..

என்னுடைய நண்பர் வாடிக்கையாளர்களை பிடிப்பதில் மிகவும் சமர்த்தர். அவருக்கிருந்த வாய்ச்சாலகம் அவருக்கு வங்கிக்கு வெளியே பல நண்பர்களைப் பெற்றுத்தந்திருந்தது. ஒரு அசல் வணிகரைப் போலவே பேசுவார். வங்கி கிளை அலுவலகத்தில் அவரைப் பார்ப்பதே கடினம். காலையில் ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்தால் ஆச்சரியம். மீதி நேரங்களில் நகரைச் சுற்றி வந்து வாடிக்கையாளர்கள் பிடிப்பதிலேயே குறியாயிருப்பார். தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரும் என்பதாலும் பேசுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதாலும் அவரால் எவரையும் எளிதில் கவரமுடிந்தது.

ஆனால் அவருடைய பலஹீனம் யாரையும் எளிதில் நம்பிவிடுவது. கஷ்டம் என்று வந்து நின்றால் போதும்.. தனக்கு அத்தகைய கடன் வழங்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்கமாட்டார். 'கஷ்டம்னு வந்து நிக்கறவங்கிட்ட என்னத்த ரூல்ஸ் பேசறதுங்க... தேவைன்னு வந்து நிக்கறப்ப ஹெல்ப் பண்ண முடியாம ரூல்ஸ் இருந்து என்னத்த ச்செய்யிறது?' என்பது அவருடைய வாதம்.

அதுவும் நடுத்தர, மாச ஊதியம் வாங்குபவர்கள் என்றால் அவருக்கு பயங்கர கரிசனம். அதுவும் ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர் மேலாளராக பணியாற்றிய எல்லா ஊர்களிலும் அவருடைய கிளையில் குறைந்த பட்சம் ஐந்தாறு பள்ளிகளுடைய கணக்குகள் இருக்கும். எல்லா பள்ளி தலைமையாசிரியர்களிடமும் தொடர்பு வைத்திருப்பார். அவர்களுடைய நிகர ஊதியத்தைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு கடன் வழங்கி மாதமாதம் சம்பள தினத்தன்று அவரே நேரில் சென்று மாதத்தவணையை வசூலிப்பார். 'எதுக்குங்க... ஒங்க ஆஃபீச தேடி வர்றவங்க எவ்வளவோ பேர் இருக்கறப்ப எதுக்கு இந்த லாபம் இல்லாத வேலைய செய்யறீங்க?' என்று அவருடைய உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், 'சார்.. நா குடுக்கற லோன்ல டீஃபால்ட் ஏதாச்சும் இருக்கா... இல்லல்லே.. பெறவென்ன?' என்பார். 'சரியான கிறுக்கனாருக்காரே ஒரு லாபமும் இல்லாத இந்த பிசினஸ் வேணாம்னாலும் கேக்க மாட்டேங்கறாரே' என ஏறக்குறைய எல்லா உயர் அதிகாரிகளுமே அவரைக் குறித்து பேசும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன...

முதல் இரண்டு கிளைகளில் அவர் கொடுத்திருந்த பல கடன்களிலும் அவர் மேலாளராக இருக்கும் வரை மட்டுமே தவணைகள் சரிவர செலுத்தப்பட்டிருந்தன. அவர் மாற்றலாகிச் சென்றதுமே வாடிக்கையாளர்கள் மாதத் தவணைகளை நிறுத்திவிட அவர் வழங்கியிருந்த கடன்களில் பெரும்பாலானவை நிலுவையில் நிற்க ஆரம்பித்தன.

ஆகவே அவர் மூன்றாவது அதுவும் வணிக அளவில் சற்று பெரிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டதும் அவருடைய கடன் வழங்கும் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்... சிறு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய வட்டார மேலாளர் எழுத்து மூலமாக எச்சரித்திருந்தார்.

அவர் அதை ஏற்று முதல் ஆறுமாதங்கள் வரை அத்தகைய கடன்களை வழங்காமல் இருந்திருக்கிறார். ஆனால் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அல்லவா?

அவருடைய பேச்சு சாதுரியம் காரணமாக அவரை நகரில் நடக்கும் பல விழாக்களுக்கும் தலைமையேற்று பேசும் வாய்ப்புகள் தேடிவருவதுண்டு. அவருக்கும் அதில் அதிக விருப்பம் என்பதால் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார். அப்படித்தான் அவருடைய நகரிலிருந்த ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் தலைமையேற்று உரை நிகழ்த்த அழைப்பு வந்தது. விழாவின் இறுதியில் தலைமையாசிரியர் நகரில் டிவி, ஃப்ரிட்ஜ், ரேடியோ வணிகம் செய்து வந்திருந்த ஒரு பெரிய டீலரை அறிமுகப்படுத்தி, 'சார் நம்ம டீச்சருங்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ் எல்லாம் மாசத் தவணையில இவர் குடுக்க தயாராயிருக்கார்.... ஆனா இவரால கடனுக்கு குடுக்க முடியல... நீங்க நம்ம டீச்சர்ங்களுக்கு ஜாமானோட விலையில ஒரு எழுபது பர்செண்ட் லோன் குடுத்தா நல்லாருக்கும்... டீச்சர்ங்களோட மாச சம்பளத்துலருந்து நா புடிச்சி ஒங்க லோனுக்கு கட்டிடறேன்...' என்று குழைந்திருக்கிறார்...

ஆளுயர மாலை அணிவித்து அவரைப் பற்றி புகழ்ந்து பேசி கவுரவித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நம்மால் முடிந்தது என்று நினைத்து அங்கேயே தனக்கு அதற்கு அதிகாரம் உள்ளதா என்று கூட கவலைப்படாமல், 'அதுக்கென்ன சார்... செஞ்சிட்டா போச்சி...'என்று வாக்குறிதியளித்துவிட்டு.... அடுத்த இரு வாரங்களிலேயே அந்த பள்ளியில் பணிக்கு இருந்த சுமார் இருபது ஆசிரியர்கள் மற்றும் non-teaching staff எனப்படும் பணியாளர்களுக்கு கடன்களை வழங்கிய விஷயம் காட்டு தீ போல் பரவ நகரிலிருந்த சுமார் பத்து பள்ளிகளும் வங்கியை நோக்கி படையெடுத்தன...

கிளையில் அவருக்கு கீழே பணியாற்றிய மற்ற அதிகாரிகளுடைய அறிவுரையையும் மனிதர் கேட்கவில்லை. 'சார் நா இந்த ஊர்க்காரன் சொல்றேன்... இந்த டீலர் அவ்வளவு நம்பிக்கையானவன் இல்லை...அத்தோட இந்த டீச்சர்ங்களயும் நம்ப முடியாதுசார்...' என்று அதே உரைச் சார்ந்த குமாஸ்தா ஒருவர் தடுத்துரைத்தும் கேட்காமல் சுமார் இருநூறு ஆசிரிய பெருமக்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ், ஃபர்னிச்சர்கள் வாங்குவதற்கென கடன் வழங்கிவிட்டுத்தான் ஓய்ந்தார்.

ஓரிரு பள்ளிகள் என்றால் மாதா மாதம் சம்பள தினத்தன்று சென்று கடனை வசூலிக்க முடியும். பத்து பள்ளிகள் என்றால்... அதுவும் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை இருநூறு!

முதல் இரு மாதங்களில் கடன் வசூலிப்பில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.. மூன்றாம் மாதம் சுமார் நூறு பேர் அடைக்கவில்லையென்பதை கிளை அதிகாரிகள் அவருடைய பார்வைக்கு கொண்டு செல்ல, 'பரவால்லைவே... அதா அடுத்த மாச சம்பளத்துலருந்து பிடிச்சி கட்டிடறேன்னு எச்.எம் லெட்டர் குடுத்திருக்காரில்ல... பாத்துக்குவம்...' என்று சமாளித்திருக்கிறார்.. ஆனால் அதற்கடுத்த மாசம் முந்தைய மாதம் அடைத்தவர்களுள் பலரும் டிமிக்கி கொடுத்திருக்கிறார்கள்... இதற்கிடையில் விஷயம் வட்டார அலுவலகத்திற்கு செல்ல, 'எப்படி நீங்கள் அதிகாரம் இல்லாமல் இந்த அளவுக்கு கடன் வழங்கலாம்?' என்று விளக்கம் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. மனிதர் அதையும் பொருட்படுத்டவில்லை...

பிறகு வேறு வழியின்றி வட்டார அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று அவரை அங்கிருந்து அகற்றி நான் பணியாற்றிய அலுவலகத்திற்கு மாற்றியதுடன் நில்லாமல் ஆசிரியர்களுக்கு அவர் வழங்கியிருந்த கடன்கள் மீது ஒரு முழு ஆய்வுக்கும் எங்களுடைய தலைமையகம் உத்தரவிட்டது...

தொடரும்

15 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 58

சாதாரணமாக ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டம் அதன் தலைவரைப் பொருத்தே அமையும்.

கடந்த பத்தாண்டுகளில் துவக்கப்பட்ட புதிய வங்கிகளை புதிய தலைமுறை வங்கிகள் என்கிறோம். ஆனால் அத்தகைய வங்கிகள் பணியாற்றும் உயர் அதிகாரியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவருமே நாட்டில் அப்போது இயங்கி வந்த வங்கிகளிலிருந்து சென்றவர்கள்தான்.

அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களை வைத்துத்தான் புதிய வங்கிகளுள் பலவும் துவங்கப்பட்டன. ஆயினும் காலங்காலமாக இயங்கிவந்த வங்கிகளின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்துடன் இந்த வங்கிகள் செயல்பட ஆரம்பித்ததைப் பார்த்திருக்கிறேன்.

இதைப் பார்க்கும்போதெல்லாம் நம்முடைய அரசு தொலைக்காட்சி மற்றும் சுமார் பத்தாண்டுகளுக்கும் முன்பு துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளையும் நினைத்துக்கொள்வேன்..

இத்தகைய தொலைக்காட்சிகள் துவக்கப்பட்டபோது அரசு தொலைக்காட்சியில் பணியாற்றிய பல பணியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் இவற்றிற்கு மாறினார்கள். ஆயினும் தனியார் தொலைக்காட்சிகள் முகக் குறுகிய காலத்தில் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்களின் தரத்தை எட்டிப் பிடிக்க முடிந்ததே ஏன்?

அதுபோலத்தான் புதிய தலைமுறை வங்கிகளும். அந்த வங்கிகள் பணியாற்றிய அதிகாரிகளும் ஊழியர்களும் அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றியவர்கள்தான் எனினும் புதிய வங்கிகளில் பணிக்கு சேர்ந்ததுமே அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்திற்குக் காரணம் அவ்வங்கிகளின் தலைவர்கள்தான்.

குறிப்பாக இன்று மத்திய ஸ்டேட் வங்கிக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாட்டுக்கு மூல காரணம் அதன் தலைவர்தான் என்றால் மிகையாகாது. அவ்வங்கி இன்று ஈடுபடாத வணிகமே இல்லை என்னும் அளவுக்கு பரந்து விரிந்து நிற்கிறது. அதன் செயல்பாடுகளை அப்படியே பின்பற்ற நினைத்த பல அரசு வங்கிகளும் இறுதியில் தோல்வியையே தழுவின என்பது வங்கித்துறையில் உள்ளவர்களுக்கே தெரியும்.

என்னுடைய வங்கியின் கடந்த சுமார் ஐம்பதாண்டு கால செயல்பாடுகள் மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றம் கொண்டுவர என்னுடைய அப்போதைய வங்கி முதல் விரும்பியதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை அவர் செயல்படுத்த நினைத்த கால அளவில்தான் குறையிருந்தது. You can't simply bring about changes overnight என்பார்கள். அது முற்றிலும் உண்மை..

நாம் நம்முடைய கருத்துக்கு ஏற்றபடி ஒருவரை மாற்றலாம் அல்லது இருவரை... அல்லது ஒரு சிறிய குழுவினரை மாற்றிவிடலாம். ஆனால் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் மூவாயிரம் பணியாளர்களை, அவர்களுடைய கண்ணோட்டத்தை, மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல!

ஆனால் வங்கித்துறையில் ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் பணியாற்றிய ஒருவரால் அதை உணர்ந்துக்கொள்ள முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

நாட்டின் முதல் வங்கி என அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர் அவர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் மேலாளராகவும் மும்பை தலைமையகத்தில் உயர் அதிகாரிகளில் ஒருவராகவும் ஏன் மேலை நாடுகளிலும் பணியாற்றியவர் என்று பெருமைக்குரியவர் அவர். சுமார் ஐந்தாண்டுகாலம் வங்கியின் நியூயார்க் கிளையில் மேலாளராக பணியாற்றிய அனுபவமும் இருந்தது.

ஆனால் அதுவே அவருக்கு ஒரு சங்கடத்தை அல்லது பலஹீனத்தை ஏற்படுத்தியிருந்ததோ என்று நினைக்கிறேன்.

அதாவது பென்ஸ் காரை ஓட்டியே பழக்கப்பட்டவரிடம் திடீரென்று பஜாஜ் இரு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்டுங்கள் என்று கூறினால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இருந்தது அவருடைய அணுகுமுறையும்.

இப்போதும் சாலைகளில் பார்க்கலாம். நாற்சக்கர வாகனத்தை செலுத்தி பழகிய ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ல நேர்ந்தால் அப்போதும் சாலையின் நடுவில்தான் செல்வார். அதுபோலவே இருசக்கர வாகனத்தை செலுத்தி பழகிப்போன ஒருவர் நாற்சக்கர வாகனத்தை வாங்கிய புதிதில் சாலையின் நடுவில் செல்ல தயங்குவார். அவருடைய கண்ணோட்டம் அல்லது மனப்பான்மை மாறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும்.

அதுபோலத்தான் ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்வதும். நாட்டின் மிகப் பெரிய வங்கியில் சுமார் முப்பதாண்டு காலம் பணியாற்றியவருக்கு எங்களுடைய வங்கியின் நிதர்சனத்தை உணரவே சில ஆண்டுகள் தேவைப்படது. He continues to think that he is the Chairman of SBI என்றார்கள் அவருடைய போக்குடன் ஒத்துபோக விருப்பமில்லாத எங்களுடைய வங்கியின் பல உயர் அதிகாரிகள், ஆதங்கத்துடன்.

அத்துடன் உலக அளவில் பணியாற்றிய அவருக்கிருந்த பரந்த விஷயஞானத்தை எங்களுடைய வங்கியில் ஒரு மாவட்டத்தையே கடக்காதவர்களிடம் எதிர்பார்த்ததும் அவருடைய தவறு. 'குண்டுச் சட்டிக்குள்ளவே குதிரைய ஓட்டிக்கிட்டிருந்தவன் கூட்டத்த பாத்ததும் மிரண்ட கதையால்ல இருக்கு?' என்பார் நெல்லையைச் சார்ந்த என்னுடைய மேலாள நண்பர் ஒருவர் அவருடைய பாணியில். அவரும் என்னுடைய வங்கி முதல்வரும் ஒரே மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன் ஒரே சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் மிகவும் சர்வசாதாரணமாக எங்களுடைய வங்கி முதல்வரின் செயல்பாட்டைக் குறித்து அவரிடமே விமர்சிப்பார்.

எங்களுடைய வங்கி முதல்வருக்கு சென்னையில் ஒரு சொந்த குடியிருப்பு இருந்தது. அவருடைய ஒரே மகன் அப்போது சென்னையில்தான் மருத்துவம் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார். ஆகவே சென்னை வரும்போதெல்லாம் தன்னுடைய மகனுடைய வீட்டில் ஒருசில நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். அலுவலக வேலையாக வரும்போது மட்டுமே அவர் ஒரு வங்கி முதல்வராக நட்சத்திர விடுதிகளில் தங்குவார். அலுவலக வேலைகள் முடிந்ததும் சொந்த வேலை காரணமாக மேலும் ஓரிரு நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தால் உடனே தன்னுடைய சொந்த குடியிருப்புக்கு மாறிவிடுவார். ஆனால் அந்த நாட்களிலும் அலுவலக நிமித்தம் வாடிக்கையாளர்களை சந்திக்க முன்வருவார். அப்படியொரு நேர்மையான மனிதர் எள்அவர்!

அப்படி அவருடைய மகனுடன் தங்கியிருந்தபோது நானும் நான் மேலே குறிப்பிட்ட நெல்லையைச் சேர்ந்த நண்பரும் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் ஒரு நாள் மாலை அவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். எனக்கு தயக்கமாக இருந்தது. 'அதுக்கென்ன நாம என்ன அவர் சொத்தையா கேக்கப்போறோம்.. நீ வா பேசாம... ஏதாச்சும் கேட்ட நா பேசிக்கிறேன்...' என்றவாறு என்னுடைய நண்பர் என்னையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

நான் அதுவரை சந்தித்திருந்த முதல்வர் அல்ல நான் அன்று சந்தித்தது. அத்தனை எளிமையாக இருந்தார். ஆறடி இரண்டங்குலம் உயரம். பல சமயங்களிலும் கோட் சூட்டில்தான் வருவார். பார்ப்பதற்கே கம்பீரமாக இருக்கும் அவருடைய தோற்றம். அப்படி பார்த்து பழகியவரை வீட்டில் நெல்லைவாசிகளுக்கே உரித்தான சங்கு மார்க் கைலி மற்றும் கையில்லா பணியனுடன் பார்த்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது.

எவ்வித பந்தாவும் இல்லாமல் எங்கள் இருவரையும் வரவேற்று அமர்த்தி சுமார் ஒருமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்த அந்த காட்சி நெடுநாட்களுக்கு பிறகும் என்னுடைய மனதைவிட்டு நீங்காமலிருந்தது.

என்னுடைய நெல்லை நண்பர் மனதில் பட்டத்தை எந்த தடங்கலுமில்லாமல் வெளிப்படுத்தக் கூடியவர். அதுவே அவரை இறுதியில் சங்கடத்தில் வீழ்த்தியது.. அதை பிறகு சொல்கிறேன்..

அன்றைய சந்திப்பின்போது எங்களுடைய வங்கி முதல்வர் 'என்னுடைய functionsஅ பத்தி பேங்குல என்ன பேசிக்கிறாங்க?' என்று கேட்டார். நான் தயங்கினேன். ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல் தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

அதை அப்படியே இங்கு எழுதுவது உசிதமாயிருக்காது என்று நினைக்கிறேன். மேலும் என்னுடைய நண்பர் பேசும் பாணியே அலாதியானது. என்னுடைய வங்கி முதல்வரே அசந்துபோனார் அல்லது அதிர்ச்சியடைந்தார் என்பது அவருடைய முகத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்த பாவங்கள் எனக்கு உணர்த்தின. இறுதியில் அவர் அமைதியாக, 'நா கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. ஆனா ஒங்க பேங்க் சீனியர் அதிகாரிங்கள பத்தி எப்படி நீங்க இவ்வளவு மோசமா பேசலாம்? அதுவும் சேர்மன்கிட்ட?' என்றார். 'என்ன டிபிஆர்... நீங்க ஏன் பேசாம இருக்கீங்க? Does it mean whatever he has said so far is true?'

என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய என்னுடைய நண்பர் மீது எனக்கு கோபம் வந்தது. இருப்பினும் அவருடனான நீண்டகால நட்பை முன்னிட்டு, 'சார் இவர் சொல்றத பெருசா எடுத்துக்காதீங்க. அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட கூடியவர். அதுவுமில்லாம அவருக்கு நம்ம தமிழ் ஆளுங்கன்னா ரொம்பவும் பிடிக்கும். அதனாலதான்....' என்று இழுத்தேன்...

முதல்வர் நான் சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டார். 'Yes I have also observed that some of the negative comments noted in the appraisal reports of officers belonging to our State... I have not done such things in my career... never... அவங்களோட இந்த மாதிரியான செய்கை உங்களுடைய மனதை புண்படுத்தியிருக்கலாம்... ஆனாலும் அத மனசுல வச்சிக்கிட்டு அவங்களுடைய செயல்பாட்டை குறை சொல்றது நமக்கு அழகில்லையே.' என்று துவங்கி அடுத்த பத்து நிமிடங்கள் ஒரு வெற்றிகரமான அதிகாரியாக திகழ நமக்கு என்னவெல்லாம் தேவை என்பதை வெகு அழகாக எங்களிருவருக்கும் எடுத்துரைத்தார்.

உண்மைதான்... அப்போது உயர் பதவியிலிருந்த பல அதிகாரிகள் தமிழகத்திலிருந்து வந்த அதிகாரிகளை புறக்கணித்தவர்கள்தான்... ஆனால் நாளடைவில் அது மறைந்துபோனது... குறிப்பாக நான் குறிப்பிட்ட முதல்வருடைய காலத்திலிருந்து...

தொடரும்..

12 May 2007

தமிழகமும் அண்டை மாநிலங்களும்

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களின் சட்டமன்ற வாழ்க்கையின் பொன்விழா ஆண்டினை கொண்டாடும் முகமாக அவருக்கு சென்னையில் மாபெரும் விழா எடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்.

அவரை வாழ்த்துவதற்காக மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடைய தலைவர்களும நேரில் வந்திருந்து வாழ்த்தியது அதைவிட மகிழ்ச்சிகரமான விஷயம். அதில் நம்முடைய தமிழக எதிர்கட்சித் தலைவர் பங்குகொள்ளாமலிருந்ததை விட்டுத்தள்ளுவோம்.

இவ்விழாவில் கருணாநிதி பேசுகையில் தன்னுடைய ஐம்பதாண்டுகால சட்டமன்ற வாழ்க்கையில் இன்னும் தீர்வு காண முடியாமல் பல விஷயங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

அவற்றில் மிக முக்கியமாக குறிப்பிட்டது நதிநீர் பங்கீட்டு விஷயம். அவருடைய பேச்சுக்கிடையில் கூறிய ஒரு வாக்கியம் அவருடைய மனவேதனையை வெளிப்படுத்தியது. தற்போது தமிழகத்தை சுற்றிலுமுள்ள மாநில அரசுகள் விரோதமனப்பான்மையுடன் நடந்துகொள்வது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்றார். அவர்கள் தமிழகத்தை நட்புடன் பார்க்க மறுக்கின்றன. நானும் இதுவரை பதினோரு கர்நாடக முதலமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன். நான்கு அல்லது ஐந்து மத்திய அமைச்சர்களுடன் இதைக்குறித்து பேசியிருக்கிறேன். காவேரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி தீர்ப்பும் வெளியாகிவிட்டது. ஆனால் இன்னமும் இது தீர்க்கமுடியாத பிரச்சினையாகவே இருந்து வருவது எனக்கு மிகவும் மனவேதனையை அளிக்கிறது என்றெல்லாம் ஆதங்கப்பட்டதை காண முடிந்தது.

மு.கருணாநிதி அவர்களுடைய அணுகுமுறையில் அவருடைய எதிரிகளும் கூட குறைகாண முடியாது. அந்த அளவுக்கு அவர் எதிரிகளையும் அனுசரித்துப்போகக் கூடியவர் என்பதை அவருடைய அரசியில் எதிரிகளும் கூட (ஜெயலலிதாவைத் தவிர) ஒத்துக்கொள்வர். ஆயினும் அவராலேயே ஒரு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. என்னை சுற்றியுள்ள எல்லா மாநில முதல்வர்களுமே நம்மை ஒரு எதிரியைப் போன்று பார்க்கின்றனர் என்று ஆதங்கப்படுவது வேதனையாகத்தான் உள்ளது.

நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் கூட நம்மால் அனைவரையும் திருப்திய்படுத்த முடிவதில்லை. யாராவது நம்முடைய கருத்துக்கு எதிர்கருத்தைக் கொண்டிருப்பார்கள். இதை நம் அனைவர் வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் நம்முடன் யாருமே ஒத்துப்போக மறுக்கும்போது நம்முடைய இயலாமையை வெளிப்படுத்துவதை தவிர்த்து ஒருவேளை நம்மிடம் ஏதேனும் குறையுள்ளதான் என்பதைக் குறித்து சிந்திக்கிறோம்.

அப்படிப்பட்ட கோணத்தில் மு.கருணாநிதி அவர்கள் கூறியதைப் பற்றி சிந்திக்க முனைந்தால் தமிழகத்தை அண்டை மாநிலங்கள் அனைத்துமே வெறுக்கின்றன என்றோ நட்பு கோணத்தில் அணுக மறுக்கின்றன என்றோ அர்த்தமா என்ன?

சமீபகாலமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கிடையில் இருந்துவருகின்ற பூசல்கள் எல்லாமே நதிநீரை பங்கிட்டுக்கொள்வதில்தான் ஏற்பட்டுள்ளன. இதில் காவேரி நதிநீர் பிரச்சினை சுமார் ஐம்பதாண்டு காலமாகவெ இருந்து வரும் பிரச்சினை. 1924ம் ஆண்டு அப்போதைய மதறாஸ் மற்றும் மைசூர் பிரசிடென்சிகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் ஐம்பதாண்டு காலத்திற்கு மட்டுமே செல்லும். ஆகவே 1974ம் ஆண்டு முதல் காவேரி நீரை தமிழகத்துடன் பங்கிட்டுக் கொள்ள தேவையில்லை என்ற நிலையைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஆண்டு வரும் சகல கர்நாடகா அரசுகளுமே கூறிவருகின்றன. இந்த பிரச்சினை கர்நாடகத்திலும் சரி தமிழகத்திலும் சரி எந்த கட்சி பதவியிலிருந்தாலும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பு இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ்தான் ஆட்சியிலிருந்தது.

இவ்வளவு ஏன், நேற்று நடந்த பொன்விழா கூட்டத்தில் பாரத பிரதமரே என்ன பேசுகிறார்? மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தீர்வுகாணலாம் என்கிறார். ஆக கூட்டணியின் முக்கிய அம்சமான ஒத்துழைப்பே இல்லையென்றுதானே அர்த்தம்?

காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் கர்நாடகாவுடன் மட்டும்தான் பிரச்சினை என்றிருந்தது. ட்ரிப்யூனலின் ஆணைக்குப் பிறகு கேரளாவுடனும் தகராறு.. போறாததற்கு கேரள மாநிலத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முல்லை பெரியார் அணை விஷயத்திலும் பிரச்சினை. அங்கு நிலம் என்னுடையது அணை உன்னுடையது என்கிறார் கேரள முதல்வர். அவருக்கு சொந்த மாநிலத்திலேயே மதிப்பில்லை. அந்த தாழ்வு மனப்பான்மையில் நம்முடன் மோதுகிறார்.

இதில் திடீரென்று பாலாற்றில் அணை என்று புரளி கிளப்புகிறது ஆந்திர மாநிலம்.

எல்லோரும் அவரவர் மாநில மக்களின் நன்மைக்காகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள்.

இதில் யாரை நண்பன் என்பது அல்லது எதிரி என்பது?

ஐம்பதாண்டுகால சட்டமன்ற வாழ்க்கையில் தன்னால் இயன்றவரை அண்டை மாநிலங்களுடன் நட்பு பாராட்டி வந்தவர் மு.க. அவரே தன்னுடைய மாநிலத்தை சுற்றியுள்ளவர்கள் யாருமே நட்பு பாராட்டவில்லை என்றும் தமிழகம் ஒரு தீவாக மாறிவிட்டது போல் தமக்கு தோன்றுகிறது என்று பேச ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?

வேதனைக்குரிய விஷயம்தான்...

*******

வால் செய்தி: மதுரையில் நடந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று முன்னாள் இன்னாள் மதுரை மேயர்கள் காவல்துறையில் சரணடைந்திருப்பதும்.. இதன் நாயகனாகக் கருதப்பட்ட மு.க. அழகிரி சென்னையில் பகிரங்கமாக தோன்றுவதும்..... தளபதி படத்தில் ரஜினிக்கு பதில் மம்மூட்டியின் ஆள் ஒருவர் சரணடைவதை நினைவுபடுத்துகிறது!

ஒன்னுமே புரியல ஒலகத்துல... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... என்ற சந்திரபாபுவின் பாடலும் நினைவுக்கு வருகிறது...

**********

09 May 2007

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு...

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு... பா.ம.கவின் லேட்டஸ்ட் ஸ்டண்ட்!!


இப்போதெல்லாம் தமிழக சட்டசபையில் தினமும் ஒரு நகைச்சுவை காட்சியை அரங்கேற்றுவதென திமுகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்று இறங்கியிருக்கிறது. அது எந்த கட்சி என்று வெளிச்சம் போட்டக் காட்ட தேவையில்லையென்று நினைக்கிறேன்.

நேற்றைய தமாஷ்...

குறிப்பிட்ட கட்சித்தலைவர் எழுந்து ரிலையன்ஸ் கடைகளால் சிறு காய்கறி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்களை சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

அதைவிட வேடிக்கை... தமிழக முதல்வரின் பதிலுரை...

'ரிலையன்ஸ் கடைகளை மூடும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. ஆகவே மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புவோம்.'

நல்லவேளையாக சட்டமன்றத்தில் நடந்த இந்த கூத்தை சன் டிவியில் மட்டுமே காண முடிந்தது. இன்றைய பத்திரிகைகள் எதுவும் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை... அதாவது ஆங்கில பத்திரிகைகள்...

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் கடந்த நாற்பதாண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு வரும் பல மாறுதல்களையும் அதனால் சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உணரமுடிகிறது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நகரமெங்கும் பெரும்பாலான கடைகள் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைவசமிருந்தது. பிறகு பெருந்தலைவர் காமராஜின் ஆட்சி காலத்தில் அது நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைகளுக்கு மாறியது. காங்கிரசாரின் கைவசமிருந்த ஆட்சி திராவிடக் கட்சிகளுக்கு மாறிய ஆரம்ப காலத்தில் இவ்விரு சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் சற்றே தளர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (இன்றைய தோழமைக் கட்சியைச் சார்ந்தவர்கள்) சென்னையை நோக்கி படையெடுத்து அங்கிங்கெனாதபடி எங்கும் பரவ ஆரம்பித்தனர்.

அதற்குப் பிறகு வடநாட்டைச் சார்ந்தவர்கள்... அடகுக் கடையிலிருந்து பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், பகட்டான ஷோ ரூம்கள் என இவர்களுடைய ஆதிக்கம்தான்...

பிறகு நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தினரின் படையெடுப்பு.. இன்று சென்னையிலுள்ள டீக்கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரி, ஃபேன்சி கடைகள் இவர்கள் கைவசம்... அவர்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்தவர்கள்...

இன்று சென்னையிலிருக்கும் பல உணவகங்கள் இவர்களிருவர் கைவசம்...

இன்று சில்லறை வியாபாரிகள் அதாவது பலசரக்கு கடைகளை வைத்திருப்பவர்களும் கூட பலர் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான்...

ஆக கடந்த முப்பதாண்டு காலமாக சென்னையில் தமிழகத்தைச் சார்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிற மாநிலத்தவர்கள்தான்...

இதே காலக்கட்டத்தில் பல்நோக்கு அதாவது மல்ட்டி லெவல் ட்ரேடிங் நிறுவனங்கள் பல தோன்றி இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின... ஸ்டாப் அண்ட் ஷாப் சங்கிலி ஷோ ரூம்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்..

இதில் இருபதாண்டு காலத்திற்கும் மேல் நிலைத்து நிற்பது நீல்கிரீஸ் கடைகள்.... அதற்குப் பிறகு வந்தது ஃபுட் வேர்ல்ட் கடைகள்... கடந்த ஆண்டு இவை ஸ்பென்சர் டெய்லி, ஃபுட் வேர்ல்ட் என இரண்டானது... இவ்விரண்டு நிறுவனங்கள் இன்று சுமார் நூறு பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை நடத்துகின்றன... போறாததற்கு பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் சுமார் ஐம்பது கடைகள்...

ஆனால் இந்த கடைகளில் வாங்குபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்...

ஜீன்சும் டீஷர்ட்டும் போட்ட கும்பல்தான்.. அவர்களுடன் ஐ.டி நிறுவனங்களில் ஊதியத்திற்கு பதிலாக கிடைக்கும் கூப்பன்வாசிகள், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட்வாசிகள்...

என்னுடைய இரு மகள்களும் இத்தகைய கடைகளுடைய வாடிக்கையாளர்கள்தான்.. மறுப்பதற்கில்லை..

ஆனால் நானோ அல்லது என்னுடைய மனைவியோ எப்போதாவது அத்திபூத்தாற்போல்தான் இத்தகைய கடைகளுக்குள் நுழைவோம்.. அதுவும் பலசரக்குக் கடைகளில் கிடைக்காத பொருட்களுக்காக... நிச்சயம் காய்கறி வாங்க நுழைவதில்லை..

நான் குடியிருக்கும் குடியிருப்பின் வாசலிலேயே ஃபுட் வேர்ல்ட கடையும் அங்கிருந்து பத்து கட்டடங்கள் தள்ளி ஸ்பென்சர் டெய்லி கடையும் உள்ளது... இதே தெருவில் நம்முடைய gool old காய்கறிக் கடைகளும் இருக்கின்றன...

அவர்களிடம் கேட்டால்... அட போங்க சார்.. இவனுங்கல்லாம் எத்தன நாளைக்கி... நா இந்த கடைய போட்டு பத்து வருசத்துக்கு மேல ஆவுது... நாங்க என்ன ஓடியா போய்ட்டோம்... ஆனா இவனுங்க இன்னைக்கி இருப்பானுங்க... நாளைக்கி? என்பார்கள் கூலாக...

இவர்களுக்காக அரசியல்வாதிகள் பரிந்துபேசிக்கொண்டு வருவதெல்லாம் வெறும் நாடகத்தனமான அதுவும் அமெச்சூரிஷான செயல் என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்துதானிருக்கிறது...

ஆனால் ஒன்று இப்படி பேசுபவர்கள் காய்கறி வாங்குவது எங்கு என்று பார்த்தால்.... ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய பேரப் பிள்ளைகளை கான்வெண்ட் பள்ளிக்கு அனுப்புவதுபோலத்தான்...

*******

திரும்பிப் பார்க்கிறேன் II - 57

சமீப காலமாக இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளுடைய கவனமும் திடீரென்று சில்லறை வாடிக்கையாளர்கள் (retail customers) மீது திரும்பியுள்ளதைப் பார்க்கிறோம். குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் என கருதப்படும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, யூடிஐ போன்ற வங்கிகள் இவர்களை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றன.

இன்றைய தினசரியில் ஒரு செய்தி. யாத்ரா காம் வழியாக நீங்கள் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு உள்ளூர் விமான டிக்கெட்டிலும் முப்பது விழுக்காடு வரை கேஷ் பேக் ஆஃபர்! ஐசிஐசிஐ வங்கியும் இந்தியன், ஜெட் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன!

ஒருகாலத்தில் அதாவது ஐந்தாறு வருடங்களுக்கு முன்வரை இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில்லை என்று முடிவெடுத்த வங்கிகளில் பெரும்பாலானவை இப்போது போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குகின்றன.

ஆனால் சுமார் இருபதாண்டு காலமாக இவற்றை எவ்வித விளம்பரமும் இல்லாமல் செய்துக்கொண்டிருந்தன எங்களுடைய வங்கிகளைப் போன்ற பழைய தலைமுறை வங்கிகள். எங்களுடைய வணிகத்தின் முதுகெலும்பே இத்தகைய சில்லறை வாடிக்கையாளர்கள்தான்... அப்போதுமட்டுமல்ல இன்றும் அப்படித்தான்.

வங்கிகளிலிருந்து கடன் பெறுவோரில் அவற்றை முழுவதுமாக திருப்பிச் செலுத்துவதில் இத்தகைய வாடிக்கையாளர்கள் மிகவும் உண்மையானவர்கள் என்பதை சிறிய வங்கிகள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இன்றும் நம்மைப் போன்ற நடுத்தர வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் அக்கறையுள்ளவர்கள்... ஏனெனில் அவர்கள் தன்மானம் உள்ளவர்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல.. என்பார்களே அத்தகைய மனநிலைக்கு சொந்தக்காரர்கள் சில்லறை வாடிக்கையாளர்கள்.

ஆகவேதான் எங்களுடைய வங்கியிலிருந்த பல கிளை மேலாளர்களும் இத்தகைய வாடிக்கையாளர்களே போதும் என்ற திருப்தியுடன் தங்களுடைய கிளை வணிகத்தில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தனர். மேலும் இத்தகைய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிது. ரூ.1000 நகைக்கடன் கேட்டு வருபவரிடம் ரூ.750 தருகிறேன் என்றால் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டதும் கடன் கிடைத்ததே என்று கொடுத்ததை வாங்கிக்கொண்டு செல்வார். ரூ.25000 கடன் பெற்றவரிடம் பெரிய நோட்டு இல்ல சார்.. பத்தும் அஞ்சும்தான் இருக்கு என்று காசாளர் சொல்கிறார் என்றால் அதற்கும் 'பரவால்லை சார் அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க பாவம். இருக்கறததான குடுக்க முடியும்' என்று சர்வசாதாரணமாக கையோடு கொண்டு வந்திருக்கும் மஞ்சள் நிற பையில் நோட்டுக் கட்டுகளை கொண்டுசென்றுவிடுவார்கள். குறித்த காலத்தில் அசலை செலுத்துகிறார்களோ மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டியை தவறாமல் செலுத்திவிடுவார்கள்.

அத்துடன் customer loyalty என்பது இத்தகைய வாடிக்கையாளர்களிடம் அதிகம். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கடன் கொடுத்த வங்கி மேலாளரை என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். கூடுதல் ரொக்கம் கையில் வரும்போது முதலில் கடன் கொடுத்த வங்கி கிளை மேலாளரிடம்தான் செல்வார்கள். அப்போது அவர்கள் அளிக்கும் வட்டி குறைவாயிருக்கிறதே என்று நினைக்கமாட்டார்கள். 'வாங்க சார் வாங்க' என்று ஒரு புன்னகையுடன் வரவேற்றாலே போதும், மசிந்துவிடுவார்கள்.

ஆனால் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் அப்படியல்ல. அதனால்தான் பல கிளை மேலாளர்கள் அவர்களை Mercanaries என்று அழைப்பது வழக்கம். அவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்தான் முக்கியம். அவர்களுக்கு கடன் வழங்குவதற்காகவே வங்கிகள் இயங்குகின்றன என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கடன் கொடுத்தால் போதாது. அது மற்ற வங்கிகளை விட குறைவான வட்டியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை முன்வைத்த இருபத்திநாலு மணி நேரத்திற்குள் பதில் வரவேண்டும். இல்லையென்றால் 'சாரி சார் You can't expect us to wait for this long.... அந்த பேங்குல ஒரு மணி நேரத்துல டிசைட் பண்றாங்க நீங்க ஒரு நாள் கேக்கறீங்களே?' என்று ரீல் விடுவார்கள். சரி அரும்பாடுபட்டு மேலிடத்திலிருந்து அனுமதி பெற்று அனுமதி கடிதத்தை நீட்டினால் 'சாரி சார்... நீங்க ரொம்ப லேட்... இந்த பேங்குலருந்து நான் கேட்ட லோன் உடனே கிடைச்சிருச்சி... அத்தோட ஒங்க பேங்க் வட்டியவிட 0.25% குறைச்சல்.' என்பார்கள்... அதுவரை நாம் செய்த வேலையெல்லாம் வீணாகிவிடும்..

இந்த காரணத்திற்காகவே அன்றைய காலக்கட்டத்தில் எங்களுடைய கிளை மேலாளர்கள் பலரும் இத்தகைய வாடிக்கையாளர்களை நாடி சென்றதில்லை. இதற்கு வேறொரு காரணமும் இருந்தது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடம் சில்லறை வாடிக்கையாளர்களுடன் உரையாடும் பாணியில் உரையாட முடியாது. அதற்கென்று ஒரு தனித்திறமை வேண்டியிருக்கும். முதலில் விஷயஞானம். பிறகு கம்யூனிக்கேஷன் ஸ்கில் எனப்படும் பேச்சுத் திறமை.

கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் விஷயஞானத்திலும் பேச்சுத்திறமையிலும் கைதேர்ந்தவர்கள். முதலாளிகளைவிட மாத ஊதியத்திற்கு உழைக்கும் நிர்வாக இயக்குனர்களும் மற்ற உயர் அதிகாரிகளும் அந்தந்த துறையில் படித்து பட்டம் பெற்றவர்களாயிருப்பார்கள். வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்கு ஆலோசனை வழங்கவே பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ஆலோசனை வழங்குவது என்றால் கிளை மேலாளரை 'கவிழ்ப்பது' என்றும் பொருள்கொள்ளலாம்...

அதிகம் போனால் அன்றைய கிளை மேலாளர்களுள் பலரும் என்னைப் போன்று பிகாம் பட்டதாரிகளாகவே இருந்தனர். ஒருசிலர் பிஎஸ்சி, பிஏ பட்டதாரிகள். பெரும்பாலான மேலாளர்களுக்கு வங்கி அலுவல்களை விட்டால் வேறொன்றும் தெரிந்திருக்காது. சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி படித்தவர்கள் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்களை சிறப்பு அதிகாரிகளாக (special officers) வங்கிகள் நியமனம் செய்ய ஆரம்பித்தன.

ஆகவே எங்களுடைய அப்போதைய வங்கி முதல்வர் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறைக்கும்படி கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதை பலரும் அதை ஏற்க தயங்கினர். அவர்கள் மட்டுமின்றி ஒருசில வட்டார மேலாளர்களும் இதை ஏற்க மறுத்து வெளிப்படையாகவே தலைமை கடன் வழங்கும் இலாக்கா தலைவருக்கு கடிதங்கள் எழுதினர். அவர்களுள் என்னுடைய அப்போதைய வட்டார மேலாளரும் ஒருவர்.

அவர் நான் ஏற்கனவே கூறியிருந்தபடி சில்லறை வாடிக்கையாளர்கள் தான் வங்கியின் முதுகெலும்பு என்ற எண்ணம் கொண்டவர். செல்வந்தர்களை அறவே வெறுத்தவர். இப்படிப்பட்டவரிடம் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வாரா என்ன? அத்துடன் பின்விளைவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உள்ளவர் என்பதால் வங்கி முதல்வரின் கொள்கை நம்மைப் போன்ற வங்கிகளுக்கு ஒத்துவராது என்றும் வங்கியை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் காரசாரமான ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்.

அவருக்கு கீழே பணியாற்றிய இரு முதன்மை மேலாளர்களும் (Chief Managers) அவருக்கு இணையான வயதும் அனுபவமும் கொண்டவர்கள். அவர்கள் இருவருக்குமே எங்களுடைய வட்டார மேலாளர் அப்படி எழுதியிருக்க வேண்டாம என்று தோன்றினாலும் இவருடைய கடிதத்தைக் கண்டு வெகுண்டு இவரை அந்த வட்டார அலுவலகத்திலிருந்து மாற்றினால் நல்லதுதான் என்று நினைத்து 'ஒங்கள மாதிரி ஆளுங்களாலதான் இப்படி தைரியமா எழுத முடியும்.' என்று அவரை தூண்டிவிட்டனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது போன்று எங்களுடைய வங்கி முதல்வர் கோபம் கொள்ளவில்லை. அவருடைய கடிதத்திற்கு உடனே பதிலும் அனுப்பவில்லை. அவர் பதவியேற்ற புதிதில் நான் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்தேன். அந்த பயிற்சியின் இறுதி நாளன்று அவர் பரிசளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் பேசியது: 'Don't take any decision when you are angry... I mean, when you feel that you are not emotionally not stable...' அவர் என்னுடைய வட்டார மேலாளருடைய காரசாரமான கடிதத்திற்கு உடனே பதிலளிக்காமல் இருந்தபோது அவர் கூறியதுதான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அவர் சென்னைக்கு விஜயம் செய்தார். எங்களுடைய வட்டார மேலாளர் அவரை விமான நிலையத்தில் வரவேற்று சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றிற்க்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் எழுதிய கடிதத்தை அவரிடமே வாசித்து காண்பித்து 'what do you think now?' என்றாராம். அத்துடன் நில்லாமல் 'Given a chance, I think you would take back this letter' என்றாராம். என்னுடைய வட்டார மேலாளர் அசடு வழிந்தவாறு 'சாரி சார்' என்றாராம் வேறு வழியில்லாமல்.

'அவர் அப்படி கோபப்படாம சாந்தமா சொன்னப்போ என்னால வேற ஒன்னும் செய்ய முடியலை' என்று அவர் திரும்பிவந்து எங்களிடம் கூறியபோது அட! இவரையே கவுத்துட்டாரே என்று எங்களை வியக்க வைத்தது.

பிறகென்ன? அடுத்த ஐந்தாண்டுகள் அதாவது அவர் பதவியில் இருந்தவரை...அவர் நினைத்தது போலவேதான் வங்கி செயல்பட துவங்கியது...

தொடரும்....

08 May 2007

தயாநிதிமாறன் நம்பர் ஒன்!

கடந்த சில நாட்களாகவே சன் டிவியில் வெளியாகும் சர்வே முடிவுகள் (தினகரன் மற்றும் ஏசி நெயில்சன் இணைந்து நடத்தும்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்றைய சர்வேயில் தமிழகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களை பற்றிய பொதுமக்களின்(!) கணிப்பில் தயாநிதிமாறன் முதலிடத்தையும் அவரைவிட சுமார் 30% வித்தியாசத்தில் அடுத்தபடியாக ப.சிதம்பரத்தையும் கணித்திருந்தார்கள். ப சிதம்பரத்தை குறைத்து மதிப்பிட்டதும் அத்தனை முக்கியமாக படவில்லை. ஆனால் அன்புமணியை ஒரேயொரு விழுக்காடு மக்கள் மட்டும் தெரிந்தெடுத்திருப்பதுதான் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது தமிழக முதல்வரே இத்தகைய சர்வேக்கள் தேவைதானா என கேட்கும் அளவுக்கு...

அதற்கு அவர் கூறியுள்ள காரணம் இத்தகைய கணிப்புகள் கூட்டணி கட்சிகயினருடைய மனதை சங்கடப்படுத்தி விடக்கூடிய வாய்ப்புள்ளன என்பதுதான்...

குறிப்பாக சமீபகாலமாக ஆட்சியை எதற்கெடுத்தாலும் குறை கூற துவங்கியிருக்கும் ஒரு கட்சித்தலைவரைப் பற்றித்தான் அவருடைய கவலையெல்லாம்...

சரி...இத்தகைய கணிப்புகளில் எந்த அளவுக்கு உண்மையிருக்க வாய்ப்புள்ளது. அல்லது அதை எந்த அளவுக்கு நம்பலாம்?

சாதாரணமாக பொதுமக்களுடைய கருத்துக் கணிப்பு எனப்படும் ஒரு முயற்சி உலகெங்கும் உள்ளதுதான்.

ஆனால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கருத்தை விடவும் அதில் கருத்து கூறுபவர்களின் தரம்தான் மிகவும் முக்கியமானது. மேலை நாடுகளை எடுத்துக்கொண்டால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கரு தேவையற்றது அல்லது அது அத்தனை பெரிய விஷயமல்ல என மக்கள் கருதும் பட்சத்தில் 'I have nothing to say' என்று பெரும்பாலோனோர் மறுத்துவிடுவார்கள். விருப்பமில்லாவிடினும் எதையாவது சொல்லி வைப்போமே என்று தங்களுடைய விருப்பத்திற்கு நேர் எதிராக சொல்லி வைப்பதில்லை. ஏனெனில் படித்தவர்கள், விஷயஞானம் உள்ளவர்களுக்கு தங்களுடைய கணிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதனுடைய மதிப்பையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். மேலும் அங்கு நடைபெறும் கருத்து கணிப்புகளில் மிகவும் வளர்ச்சியடைந்த அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்பு முறைகள் (assessment tools) பயன்படுத்தப்படுகின்றன.

தினகரனுடன் இணைந்து செயல்பட்ட ஏசி நெயில்சன் நிறுவனம் பயன்படுத்திய கணிப்பு முறைகளில் குறை காணுவதில் பயன் இல்லை. ஆனால் அவர்கள் கணிப்புக்கு பயன்படுத்திய மக்கள் (target group) எந்த அளவுக்கு விஷயஞானம் உள்ளவர்கள் என்பதில்தான் ஐயம் உள்ளது.

தினம் ஒரு செய்தியுடன் மக்கள் முன் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவரை சிறப்பாக செயல்படுகிறார் என கணிப்பது எவ்வளவு சரியில்லையோ அதைவிட தவறானது திரைமறைவில் அயாரது உழைப்பவரை, தன்னை மக்கள் முன் படம் பிடித்துக் காட்ட விரும்பாதவரை குறைவாக மதிப்பிடுவது.

மேலும் பொதுமக்களுடைய கருத்து என்பது நாட்டின் அல்லது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் கருத்து அல்ல என்பதையும் நம்மவர்களுள் பலரும் உணர்வதில்லை. ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுள் ஒரு சிலரை random முறையில் தெரிவு செய்து அவர்களுடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுடைய கணிப்பாக முடிவு செய்வதுதான் இத்துறையில் பிரபலமாக இருக்கும் ஏசி நெயில்சன் போன்ற சர்வதேச கருத்து கணிப்பு நிறுவனங்களின் வேலை.

அவர்கள் இதற்கு பயன்படுத்தும் கருவிகள் assessment tools or methods பல உள்ளன.

ஆனால் அதில் முக்கியமானது sample group.. அதாவது ஒரு கோடி ஜனத்தொகையில் நேரடியாக சந்தித்து கேள்விகளைக் கேட்க பயன்படுத்தும் மக்களின் தொகை (எண்ணிக்கை). இத்தகைய ஜனத்தொகையில் வெறும் ஆயிரம் பேரை மட்டும் சந்தித்து கேட்டுவிட்டு அதை மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுமொத்த ஒரு கோடி மக்களின் கணிப்பாக மாற்றுவதை ஏமாற்று வேலை என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

பிறகு யாரிடம் கேள்வி கேட்பது என்பது. அதாவது target group. இதற்கு சாதாரணமாக தொலைபேசி டைரக்டரியை சில நிறுவனங்கள் பயன்படுத்துவதுண்டு. இதன் நோக்கம் ஒரு பகுதியில் வசிப்பவர்களை மட்டுமல்லாமல் ஒரு நகரத்தில் வசிக்கும் சகலரையும் target செய்ய முடியும். அப்படியல்லாமல் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள வாக்காளர் பட்டியலை ஆதாரமாக வைத்து தெரிவு செய்தால் ஒரே பகுதியில் அல்லாமல் சில சமயங்களில் ஒரே தெருவில் வசிப்பவர்களும் கூட அதிக அளவில் தெரிவு செய்துவிட வாய்ப்புள்ளது.

அடுத்தது பதில் சொல்பவர்களை lead செய்வது. அதாவது கருத்து கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தேவையோ அந்த பதில் வரும்வரை தொந்தரவு செய்வது. 'எனக்கு பதில் சொல்ல இஷ்டமில்லீங்க.' என்பவர்களையும், 'பரவால்லீங்க எதையாவது மனசுல பட்டத சொல்லுங்க. சரியா இருக்கணும்னு இல்லை.' என்று கேட்டு துளைப்பது. அவர்கள் 'விடமாட்டான் போலருக்கே... எதையாவது சொல்லி வைப்போம்.' என்று பட்டியலில் இருப்பவர்களில் எவரையாவது சொல்லி வைப்பார்கள்.

இறுதியாக கேள்விகளை கேட்கும் முறை. குறிப்பாக தினகரன் ஏசி நெயில்சர்ன் நிறுவன கணிப்பில் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். இதிலுள்ள எல்லா கேள்விகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் கேட்பதில் பயனில்லை. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்துவிடலாமா என்ற கேள்வியை கிராமவாசிகளிடமோ அல்லது தாத்தா பாட்டியிடமோ கேட்பதில் பயனில்லை. அதுபோலத்தான் மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டைக் குறித்த கேள்வியும். முதலில் மத்திய அமைச்சரவையில் இன்று தமிழ்நாட்டிலிருந்து எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அந்த முழுப்பட்டியலையும் கேள்வி கேட்டவர்களிடம் காண்பித்து கேள்வி கேட்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் பெயரை மக்கள் முன்வைத்து கேட்டால் அவரைத்தான் பலரும் தெரிவு செய்வார்கள் என்பதும் உண்மைதான்.

இதற்கு உதாரணம் நம்முடைய தமிழ்மண பதிவாளர்கள் 'இவ்வருடத்திய சிறந்த பதிவுகள்' அல்லது 'சிறந்த பதிவாளர்கள்' என்று சகட்டுமேனிக்கு வெளியிடப்படும் பட்டியல்கள். இதை 'எனக்கு பிடித்த பத்து பதிவுகள்' என்றோ அல்லது 'படித்ததில் பிடித்தது' என்றோ பட்டியலிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் எனக்கு பிடித்தவை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமே..

ஆகையால் இத்தகைய கணிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டணி கட்சி தலைவரோ ஆதங்கப்படுவது தேவையில்லாத ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்து. இதற்கும் மாற்று கருத்து இருக்கலாம். தவறில்லை.

*********

திரும்பிப் பார்க்கிறேன். II - 56

வங்கிகளின் தலையாய நோக்கம் கடன் வழங்குவதுதான் என்றாலும் தாங்கள் கொடுக்கும் கடன்கள் முழுமையாக அதாவது அசலும் வட்டியும் வசூலாக வேண்டும் என்பதில் குறியாயிருப்பது வழக்கம்.

ஏனெனில் அவர்கள் கையாள்வது பொதுமக்களின் பணம். அவர்கள் அரும்பாடுபட்டு சேமித்தது.

ஒருநாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை வணிகம் மற்றும் தொழிலில் முடக்கும் முதலீடு. அதற்கு அந்த நாட்டு மக்களின் தனிமனித சேமிப்பு மிக, மிக அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா தனிமனித சேமிப்புகளுமே முதலீடாக மாறுவதில்லை.

என்னுடைய சேமிப்பை நான் அப்படியே என்னுடைய வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ பாதுகாத்து வைத்திருந்தால் அது முதலீடாகாது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு தனிமனிதனும் வணிகனாகவோ அல்லது தொழிலதிபராகவோ மாறுவது என்பதும் முடியாத காரியம்.

ஆகவே ஒரு நாட்டின் தனிமனித சேமிப்பை திரட்டி அதை முதலீடாக மாற்றுவதில் அந்த நாட்டின் வங்கிகள் பெரும் பங்கு ஆற்றுகிறது என்பதை மறந்துவிடலாகாது.

அது அவர்களுடைய செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. ஆகவேதான் வங்கிகளின் அடிப்படைய செயல்பாட்டை சேமிப்போரிடமிருந்து அவர்களுடைய சேமிப்பைத் திரட்டி அதை தேவைப்படுவோரை தேடிப்பிடித்து கடனாக வழங்கவேண்டும் என்று பல வல்லுனர்கள் வங்கிகளைப் பற்றி குறிப்பிடுகையில் கூறி வைத்துள்ளார்கள்.

இதில் 'தேவைப்படுவோரை தேடிப்பிடிப்பது' என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. அதற்கு ஒரு வங்கிக் கிளையின் மேலாளரிலிருந்து அவர் பரிந்துரைக்கும் கடன் விண்ணப்பங்களை சரிபார்த்து கிளை மேலாளருடைய பரிந்துரையை பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைக்கும் என்னைப் போன்ற மேசையதிகாரிகளிலிருந்து அவற்றிற்கு அனுமதிவழங்கும் உயர் அதிகாரிவரை அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டியது அவசியம்.

இவர்களுள் கிளை மேலாளர் மட்டுமே வாடிக்கையாளரை சந்திக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். அவரைப் பற்றிய விவரங்களை சேமித்து அது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதுடன் அவருடைய வணிக அல்லது தொழில் செய்யும் இடத்தையும் பார்வையிடுகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பரிந்துரைகளை சரிபார்க்கும் மேசையதிகாரியும் சில சமயங்களில் அவருடைய கிளை இயங்கிவரும் வட்டார அலுவலக அதிகாரிகளும் வாடிக்கையாளரை சந்திக்க வாய்ப்புண்டு.

இவர்களைத் தவிர மற்ற எல்லா நிலையிலுள்ள சகல உயர் அதிகாரிகளும் வாடிக்கையாளரின் கோப்புகளில் காணப்படும் விவரங்களை வைத்தே அவரை மதிப்பிடுகின்றனர். இத்தகைய முறையில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. வாடிக்கையாளரை நேரடியாக சந்திக்கும் கிளை மேலாளர் அவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவரை உயர்வாகவோ தாழ்வாகவோ மதிப்பிட வாய்ப்புள்ளது. நம்மில் பலருக்கும் ஒருசிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகிறது. சிலரை ஓரளவுக்கும் சிலரை பிடிக்காமலும் போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கே தெரிவதில்லை.

கிளை மேலாளர்களுக்கு பிடித்துப் போகின்றவர்களுடைய வணிகம் அல்லது தொழில் எந்த நிலையிலிருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் அவர்கள் கோரும் கடனை பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிப்பார்கள். அப்படி தீர்மானித்தபிறகு அந்த விண்ணப்பத்திலிருக்கும் குறைகள் எதுவுமே அவர்களுடைய கண்களுக்கு புலப்படாமல் போய்விடும். மாறாக ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவருடைய விண்ணப்பத்தில் எத்தனை நிறை இருந்தாலும் அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.

ஆனால் வட்டார அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகம் போன்ற நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடைய பார்வை அப்படியல்லாமல் தங்கள் முன் இருக்கும் கோப்பிலுள்ள விவரங்களை வைத்தே பெரும்பாலும் வாடிக்கையாளருடைய தரத்தை கணிக்கின்றனர். ஆகவே அவர்களால் பாரபட்சமின்றி முடிவெடுக்க முடிகிறது. இது நல்ல விஷயம்.

ஆனால் என்னைப் போன்ற மேசையதிகாரிகள் மட்டுமல்லாமல் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் பல அதிகாரிகளும் கடன் விண்ணப்பத்தைப் பரிந்துரைத்த கிளை மேலாளர் யார் என்பதையும் பார்ப்பதுண்டு. ஒரு கிளை மேலாளருடைய கணிப்பில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர் எதை அல்லது எவரை பரிந்துரைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். 'இது டிபிஆர் ரெக்கமெண்ட் பண்ண ஃபைல். அவர் ரெக்கமெண்ட் பண்ணா சரியாத்தான் இருக்கும்.' என்கிற ஒரு மெத்தனம் ஏற்பட்டுவிடுவதை பல சமயங்களிலும் பார்த்திருக்கிறேன். அதுவே ஒரு கிளை மேலாளருடைய நடவடிக்கைகளின் மீதோ அல்லது அவருடைய விஷயஞானம் அல்லது திறமையின் மீதோ சந்தேகம் வந்துவிட்டால் போதும் அவர் அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல வாடிக்கையாளருக்காக, அத்தியாவசிய தேவைக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

நான் வட்டார கிளையில் பணியாற்றிய காலத்தில் மூன்று வட்டார மேலாளர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். அவர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதில் நான் இரண்டாம் முறையாக பணியாற்றிய மேலாளருடைய பாணியே தனி!

அவருக்கு செல்வந்தர்களைக் கண்டாலே விருப்பமில்லை என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அத்துடன் எவ்வித வில்லங்கமும் இல்லாமல் ஒரு விண்ணப்பம் வந்தாலும் மனிதருக்கு சந்தேகம் வந்துவிடும். சாதாரணமாக வாடிக்கையாளரைப் பற்றி எழுதும்போது பல கிளை மேலாளர்களும் அவர் மிகுந்த செல்வந்தர் அல்லது வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வருகிறார் என்று எழுதுவார்கள். அதைப் பார்த்ததுமே நம்முடைய வட்டார மேலாளர் வெகுண்டெழுவார். அதற்குப் பிறகு அந்த கோப்பையே மேலே படிக்க விருப்பமில்லாமல், Reject it என்று திருப்பியனுப்பிவிடுவார். Let the rich manage themselves... we don't need to support such people.. என்பார். அப்படீன்னா குடுத்த கடன் முழுசா எப்படி சார் வரும் என்று கேட்டால். கடன திருப்பி குடுக்கறதுக்கு பணம் படைத்தவனா மட்டும் இருந்தா போறாது.. நல்ல மனசு வேணும்னு வாதாடுவார்.

அவர் கூறியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை... செல்வந்தர்கள் என்றால் கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள் என்றோ நடுத்தர மற்றும் வறிய சூழலிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தாமல் இழுத்தடிப்பார்கள் என்றோ கூறிவிட முடியாது. ஆனால் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் செல்வந்த வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை கறந்துவிடலாம். ஆனால் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ள வசதியற்ற வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வசூலிப்பது சாத்தியமில்லை.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளருடைய இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்னுடைய அப்போதைய வங்கி முதல்வர். அவர் பதவியேற்ற தினத்தன்றே தலைமையகத்திலிருந்த கடன் வழங்கும் இலாக்காவின் தலைவரிடம் 'You should start thinking big...' என்று அறிவுறுத்தியதாக சில நொடிகளில் வங்கி முழுவதும் செய்தி பரவியது.

அவர் சென்ற இடமெல்லாம் இதையேதான் வலியுறுத்தினார். அன்றுவரை சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில்கள் என இருந்த எங்களுடைய வங்கியின் பார்வையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை நோக்கி திருப்ப படாதபாடு பட்டார் அவர். ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வழங்கும் கடனிலிருந்து கிடைக்கும் வட்டியை என்னால் சில ஆயிரம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டிவிட முடியும் என்று தன்னுடைய வட்டார மேலாளர்களுடைய கூட்டத்தில் பேசுவார்.

அவருடைய கூற்றில் உண்மை இருந்தது. ஆனால் அவர் கவனிக்க தவறியது என்னவென்றால் அத்தகைய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களைக் கையாளும் அறிவுத்திறன் எங்களுடைய கிளை மேலாளர்களிடம் இருந்ததா என்பது. அதுவரை தங்க நகைகள் மீது கடன் வழங்குவதையே தங்களுடைய பிரதான செயலாக கருதி வந்திருந்த சிறு கிளை மேலாளர்களையும் start thinking big என்ற கொள்கை திணற அடித்தது. முன்பெல்லாம் தங்களுடைய கிளைக்கு இவ்வளவு தொகை கடனாக வழங்க வேண்டும் என்று வட்டார மேலாளர்கள் நிர்ணயிக்கும் இலக்கை தங்க நகைகள் மீது வழங்கும் கடனை வைத்தே எட்டி வந்த இத்தகைய மேலாளர்கள் இனி என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கி நின்ற நிலைக்கு அவருடைய பேச்சு கொண்டு சென்றதை அவர் உணராமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

அதனுடைய பின்விளைவை அவர் மட்டுமல்லாமல் வங்கி முழுவதுமே அனுபவிக்க வேண்டியிருந்தது.... அடுத்த சில ஆண்டுகளில்...

தொடரும்..

07 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 55

முந்தைய பதிவின் முடிவில் நம்முடைய நாட்டின் பொருளாதாரம் இன்னும் வளரும் நாடுகள் (Developing Country) என்ற நிலையிலேயே இருப்பதற்கு ஒரு காரணம் வர்த்தகம் மற்றும் தொழில் செய்பவர்களின் நேர்மையற்ற தனமும் ஒரு காரணம் என்று கூறியிருந்தேன்.

இது நாட்டிலுள்ள எல்லா வணிகர்களையும் தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாகாது. நேர்மையுடன் தொழில் செய்து வங்கியிலிருந்து பெறும் கடன் மூலம் பாமரனாய் இருந்து இன்று பெரும் செல்வந்தர்களாக உயர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வாங்கிய கடன ஒழுங்கா திருப்பி கட்டுனாலே போறும் சார். எதுக்கு மேல, மேல கடன் என்று கூறும் வணிகர்களும் தொழிலதிபர்களும் கூட இருக்கிறார்கள். இன்று ஐ.டி. உலகில் கொடிகட்டிப் பறக்கும் பல நிறுவனங்களூம் zero debt நிறுவனங்கள்தான்.

என்னுடைய வட்டார அலுவலகத்தில் கடன் வழங்கும் இலாக்காவில் மேசையதிகாரியாக சுமார் இரு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் இத்தகைய பல வாடிக்கையாளர்களின் நிதியறிக்கையைப் பார்த்திருக்கிறேன். அவர்களுள் பலர் தங்களுக்கு தேவையான முதலீட்டில் சுமார் எண்பது சதவிகிதத்திற்கும் கூடுதலாக தங்களுடைய சொந்த பணத்தையே முடக்கியிருப்பார்கள்.

இத்தகையோருள் ஒருவருடைய நிறுவனங்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும்.

அவர் தமிழகத்தைச் சார்ந்தவர்தான். இப்போது சென்னையையே முற்றுகையிட்டு ஆதிக்கம் செய்துவரும் வணிக சமூகத்தைச் சார்ந்தவர். அவர் இப்போதும் எங்களுடைய வங்கியின் முக்கியமான வாடிக்கையாளராயுள்ளதால் அவர் வணிகம்/தொழில் செய்துவரும் நகரத்தை குறிப்பிட முடியவில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தன்னுடைய கிராமத்திலிருந்து அருகிலிருந்த நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்தவர். ஒரு உடைத்த கடலை, பட்டாணி, பொறி சில்லறை கடையில் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் ஊதியத்திற்கு பணிக்கு சேர்ந்தவர். அவருடைய முதலாளி மதுரையிலிருந்து மொத்தமாய் இவற்றை வாங்கி வந்து விற்பனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர், 'முதலாளி முழுக்கடலையை நாமளே வாங்கி வந்து ஒரு மெஷின வாங்கி ஒடச்சி வித்தா கொஞ்சம் கூட லாபம் கிடைக்குமே' என்று பரிந்துரைத்தார். 'அதுக்கு மொதலுக்கு எங்கல போறது?' என்ற முதலாளியை பேங்குல கேக்கலாம் முதலாளி என்று அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஊரிலிருந்த ஒரே அரசு வங்கியின் மேலாளர் அழுக்கு வேட்டியும் சட்டையுமாக தன் முன் வந்து நின்ற இருவரையும் பார்த்து என்ன நினைத்தாரோ 'ஒரு அஞ்சு பவுன் நகையிருந்தா கொண்டாங்க அடகு வச்சிக்கிட்டு ஒங்களுக்கு வேண்டிய கடன தரேன்' என்றாராம். முதலாளி தயங்கி நிற்க நம்மவர் அவருடைய காதில் ரகசியமாக ஒரு யோசனையை சொல்ல வங்கியென்று பாராமல் அவருடைய கன்னத்தில் ஓங்கியறைந்துவிட்டு வெளியேறினாராம் முதலாளி!

'கட்டுனவ தாலிய அடகு வச்சி தொழில் பண்ணணுமால்லே?' என்பது அவருடைய கேள்வி. தன்மானம் அவரை அதை செய்யவிடாமல் தடுத்தது. அறைபட்ட நம்மவர் அப்போதே முடிவு செய்தார். இனி தான் யாரிடமும் வேலை செய்வதில்லை என்று. உடனே ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன்னுடைய தாய் மற்றும் பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி கிடைத்த நகைகளை கொண்டு வந்து அடகு வைத்து கிடைத்த முதலில் அதே நகரத்தில் ஒரு மூலையில் ஒரு அறவை மிஷினை வாடகைக்கு எடுத்து மதுரைக்கு சென்று முழுக்கடலையை வாங்கிவந்து உடைத்து விற்க ஆரம்பித்தார். ஒரேயொரு கூலியாளை வேலைக்கு வைத்துக்கொண்டு நேரம் காலம் பாராமல் உழைத்து அடுத்த ஒரேயாண்டில் வாடகைக்கு எடுத்த மிஷினையே விலைக்கு வாங்கிக்கொண்டார். மதுரைக்கு சென்று அதிக விலைக்கு உடைத்த கடலை வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்து வந்த அவருடைய முதலாளியே நாளடைவில் இவரிடம் வந்து கடலையை வாங்கிச் செல்லும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறார்.

அவருக்கு ஆபத்பாந்தவனாய் இருந்த அந்த அரசு வங்கி மேலாளர் மாற்றலாகிச் செல்ல அடுத்துவந்தவருக்கு இவரைக் கண்டதுமே பிடிக்காமல் போனது. ஓரளவுக்கு வசதி வந்திருந்தும் எளிமையாக உடையணிவதையே விரும்பிய இவர் வங்கி மேலாளரின் கணிப்பில் தரமிறங்கிப்போனார். அப்போதுதான் அந்த நகரத்தில் எங்களுடைய வங்கி கிளை திறக்கப்பட்டிருந்தது. எங்களுடைய வங்கியின் முதல் தமிழ் மேலாளர் அந்த கிளைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். எங்களுடைய மேலாளருக்கு இவரை முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போனது. இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம். அவருடைய பூர்வீகத்தையும் கடந்த மூன்றாண்டுகளில் அவர் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் கண்டு வியந்துபோன எங்களுடைய மேலாளர் அவருடைய அறவை மில்லை மேலும் மேம்படுத்த அவர் வாங்க விரும்பிய இயந்திரங்களை மட்டுமே செக்யூரிட்டியாக எடுத்துக்கொண்டு அவருக்கு தேவைப்பட்ட கடனை வழங்கியிருக்கிறார். புதிய கிளைகளைத் துவக்கும்போது இத்தகைய கடன்கள் வங்கியின் பொது நியதிகளை மீறி வழங்கப்படுவதுண்டு. சில மேலாளர்கள் துணிவுடன் இத்தகைய செயலில் இறங்குவதும் சகஜம்தான். அதற்கு வாடிக்கையாளர்களை சரிவர தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அந்த திறமையும் துணிவும் எங்களுடைய மேலாளருக்கு இருந்தது. அவர் முதல் முதாலாக கொடுத்திருந்த கடன் சுமார் ஐம்பதாயிரம். அந்தக் காலத்தில் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அது பெரிய தொகைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அவருடைய இன்றைய நிலை! சொன்னால் நம்பமாட்டீர்கள். இன்று அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருடைய ஆரம்பக் கால பட்டாணி, பொறிகடலை வியாபாரத்தை மட்டும் அவர் இன்னும் தன்னுடைய சொந்த மேற்பார்வையிலேயே வைத்திருக்கிறார்! அவருடைய பிள்ளைகள் இருவரால் நடத்தப்படும் மொத்த நிறுவனங்கள் பத்துக்கும் மேல்! ப்ளைவுட் பலகைகளிலிருந்து கட்டட வேலைகள் (construction) வரை தனித்தனி நிறுவனங்களிலும். ஒன்றிலும் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர யாருடனும் கூட்டு இல்லை. ஒரு ஆண்டின் நிகர வருமானம் (லாபம்) சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல்! நான் மேசையதிகாரியாக இருந்த காலத்தில் அவருடைய நிறுவனங்களின் அனைத்து நிதியறிக்கைகளையும் பரிசீலித்திருக்கிறேன்.. அந்த நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் சுமார் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் மேல் அவருடைய சொந்த முதலீடுதான்! சில நிறுவனங்கள் '0 டெப்ட் நிறுவனங்கள்'!. எல்லா நிறுவனங்களின் கடன்களுக்கும் பெரியவர் தன்னுடைய சொந்த ஜாமீனைக் கொடுத்திருப்பார். ஆனால் அவருக்கென்று எந்த தனிப்பட்ட சொத்தும் இருக்கவில்லை. அவருடைய சொத்து (Asset) என்பது அவருடைய நிறுவனங்களில் அவர் செய்திருந்த முதலீடு மட்டும்தான். அவருடைய மூத்த மகன் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் வரை அவருக்கோ அல்லது அவர்களுடைய குடும்பத்திற்கோ குடியிருக்க சொந்த வீடு கூட இல்லை என்பதுதான் அதிசயம்.

நான் வட்டார அலுவலகத்தில் மேசையதிகாரியாக இருந்த சமயத்தில் அவருடைய சில கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பவன் என்ற முறையில் அவருடைய பண்ணை வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். சுமார் எழுபத்தைந்து வயதிலும், பல நிறுவனங்களின் உரிமையாளர் என்கிற அந்த நிலையிலும் அவரிடம் எளிமையைத்தான் காண முடிந்தது. அவருடைய நிதியறிக்கைகளில் தெரிந்த transparency அவருடைய பேச்சிலும் தெரிந்தது. எங்களுடைய முதல் சந்திப்பிலேயே தன்னுடைய ஆரம்பகால அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துக்கொண்ட அவருடைய வெள்ளை மனது என்னை மிகவும் கவர்ந்தது.

நான் அங்கு சென்றிருந்த நேரத்தில்தான் அவருடைய முயற்சியால் கட்டட வேலைக்கான இரும்பு (Torr steel) கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கட்டி முடிந்து திறப்புவிழா நடக்கவிருந்தது. சுமார் இருபது கோடி முதலீட்டில் நிறுவப்பட்டிருந்த தொழிற்சாலையில் அவர்களுடைய நிறுவனத்தின் சேமிப்பிலிருந்து சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் முடக்கியிருந்ததைப் பார்த்த நான். 'நீங்க எதுக்கு term lending institutionக்கு போகாம ஒங்க பணத்தையே முடக்கியிருக்கீங்க? நீங்க ட்ரை பண்ணியிருந்தா ரொம்ப சீப்பான ரேட்டுல லோன் வாங்கியிருக்கலாமே?' என்றபோது. அவருடைய மூத்த மகன் சிரித்துக்கொண்டே 'இது அப்பாவோட ஆசை. எங்களுக்கு உடன்பாடில்லைன்னாலும் அவர் என்ன சொல்றாரோ அதும்படியே செஞ்சிடறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம். அப்பாவுக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கறதுல கூட விருப்பமில்லை... இந்த பண்ணை வீடுகூட வாடகைதான்... பத்து வருச லீஸ். எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கணுங்கறதுக்காக எடுத்தது. ஓனரும் அப்பாவோட நண்பர்தான். முப்பது லட்சம், நாப்பது லட்சம்னு எதுக்குலே குடியிருக்கற வீட்டுக்கு செலவழிக்கிறது. அந்த தொகைய பிசினஸ்ல போட்டா வர்ற வருமானத்துல பாதியக் கொண்டே வீட்டு வாடகைய குடுத்துரலாம்பார்.. உண்மைதான்.. இந்த மாதிரி வீடு வேணும்னா கொறஞ்சது அம்பது லட்சம் வேணும். அதுக்கு ஒங்க பேங்க் வட்டியே வருசத்துக்கு ஏறக்குறைய ஏழரை லட்சத்துக்கு மேல வந்துரும். அதுல பாதிய வாடகைக்கு குடுத்தா போறும்... என்ன நா சொல்றது?' என்றபோது... வங்கியிலிருந்து ஒரு கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தன்னுடைய வீட்டு கழிப்பறைவரை ஏசி செய்திருந்த வேறொரு தொழிலதிபரை நினைத்துக்கொண்டேன்...

தொடரும்

03 May 2007

வங்கி தில்லுமுல்லுகள் 1

இந்திய வங்கிகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற தில்லுமுல்லுகளின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்:

வருடம் - எண்ணிக்கை - தொகை

2002 - 1744 - ரூ. 399.53 கோடி
2003 - 2207 - ரூ. 653.50 கோடி
2004 - 2660 - ரூ. 600.16 கோடி

இத்தகைய தில்லுமுல்லுகள் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள்-வாடிக்கையாளர்கள் கூட்டணி என பலராலும் நிகழ்த்தப்படுகின்றன.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள தில்லுமுல்லுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.. கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவை எத்தனை மடங்கோ!

என்னுடைய முப்பதாண்டு வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட சில சுவாரஸ்யமான தில்லுமுல்லுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இத்தொடர்...

சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.

ரவி சர்மா ஒரு வணிகர். வடநாட்டைச் சார்ந்தவர், தமிழ்நாட்டில் குடியேறி பல வருடங்களாகியிருந்தன.

இதைத்தான் வாங்குவது விற்பது என்றில்லாமல் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய வணிகத்தை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர். எப்படியாவது குறுகிய காலத்தில் லாபம் சம்பாதித்து செல்வந்தராக வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். குறுகிய காலம், அதிக லாபம். இதை தன்னுடைய தாரக மந்திரமாக கொண்டிருந்தவர் ரவி.

சள, சளவென்று பேசக் கூடியவர். முதல் முறை சந்திப்பவர்களிடம் கூட வெகு எளிதில் ஒட்டிக்கொள்ளக் கூடியவர். ஆகவே அவர் குடியிருந்த பகுதியிலேயே வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மோகன் குமார் ஒரு வங்கி மேலாளர் என்பதை கண்டுபிடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை.

தன்னுடைய 'குறுகிய கால, அதிக லாப' திட்டத்திற்கு மோகன் தான் ஏற்ற ஆள் என்பதை கண்டுக்கொண்ட ரவி அவர் மாற்றலாகி வந்த சில நாட்களிலேயே வாயெல்லாம் பல்லாக சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 'சார் நீங்க கவலையே படாதீங்க. ஒங்களுக்கு கேஸ் கனெக்ஷன் கிடைக்கறதுலருந்து ஒங்க பொண்ணுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் புடிச்சி குடுக்கற வரைக்கும் எல்லாத்தையும் நா பாத்துக்கறேன்.' என்றார் முதல் நாளே..

மோகன் மேலாளராக பதவி உயர்வு பெற்று முதன் முதலாக அந்த ஊரிலிருந்த கிளைக்கு பொறுப்பேற்க வந்திருந்தார். மொழிப் பிரச்சினை இல்லையென்றாலும் பழக்கமில்லாத ஊர். நகரங்களிலேயே படித்து வளர்ந்த அவருக்கு நகரம் என்றும் சொல்ல முடியாமல் கிராமம் என்று சொல்ல முடியாமலிருந்த அந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது. அப்படிப்பட்டவருக்கு ரவி சர்மா ஒரு ஆபத்பாந்தவனாய் தோன்றினார். 'ரொம்ப தாங்ஸ் சார்.' என்று அவருடன் ஒட்டிக்கொண்டார்.

பிறகென்ன? ரவியின் திட்டத்தின் துவக்கமே அட்டகாசமாக இருந்தது. அடுத்த சில வாரங்கள் யார் யாரையோ பிடித்து மோகனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்துக்கொடுத்தார்.

மோகன் குமாருடைய கிளை மிகவும் சிறியது. அவருக்கு கீழே ஒரு கணக்காளர் (accountant), ஒரு கேஷியர் மற்றும் ஒரு குமாஸ்தா.. அவர்களுக்கு உதவ ஒரு சிப்பந்தி... வாசலில் குர்க்கா... என அவருடைய வங்கியிலிருந்த சிறிய கிளைகளுள் ஒன்று அது. கிளை துவக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியிருந்தது. கிளையை துவக்கிய மேலாளருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்பதால் அவர் ஒரே வருடத்தில் நீக்கப்பட்டு அப்போதுதான் பதவி உயர்வு பெற்றிருந்த மோகன் அங்கு மாற்றப்பட்டார்.

ஆக அவருடைய சிந்தனை முழுவதும் கிளையின் வணிக அளவை உயர்த்துவதிலேயே இருந்தது. 'ரவி சார் நீங்க இந்த ஊர சேர்ந்தவர்தானே... அதுவுமில்லாம பிசினஸ் பண்றீங்க. அதனால ஒங்க கணக்க மட்டுமில்லாம ஒங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்சையெல்லாம் எங்க பேங்குக்கு ரெக்கமெண்ட் பண்ணணும்.' என்று ரவியிடம் கேட்டுக்கொண்டதும், 'அதுக்கென்ன சார் செஞ்சிட்டா போச்சி... ஒங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.. நீங்க முதல்ல ஒங்க பிராஞ்சுக்கு சார்ஜ் எடுங்க.. அப்புறம் ஒரு நாள் சாவகாசமா ஒங்க ஆஃபீசுக்கு வரேன்...' என்றார். எப்படியும் மீன் வலையில் விழுந்தாயிற்று. அவசரப்படாமல் காரியத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு!

ஆனால் இரண்டு, மூன்று வாரங்கள் கழிந்தும் ரவி வராமலிருக்கவே ஒருநாள் மோகனே அவரைத் தேடிக்கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார். வீடு உள்ளும் புறமும் அட்டகாசமாக இருந்தது. மூன்றே பேர் கொண்ட குடும்பத்திற்கு இத்தனை பெரிய வீடா என்று மலைத்துப்போனார் மோகன். 'பெரிய புள்ளிதான் போலருக்கு.. .இவரோட கனெக்ஷன் கிடைச்சதுக்கு உண்மையிலேயே நா குடுத்து வச்சவந்தான்.' என்று நினைத்து மகிழ்ந்துபோனார்.

'என்ன சார்... திடீர்னு இந்த பக்கம்?' என்றவாறு வரவேற்றார் ரவி சர்மா அவருடைய வருகையின் நோக்கத்தைப் பற்றி அறியாதவர் போல். மீன் தானாகவே வந்து வலையில் விழவேண்டும் என்று காத்திருந்தவராயிற்றே!

'இல்ல சார்... நம்ம பேங்க் பக்கம் வரேன்னு சொன்னீங்களே... அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.' என்றார் மோகன் அசடு வழிந்தவாறு.

ரவி பதில் பேசாமல் உள்ளே திரும்பி தன் மனைவியை அழைத்தார். ஒரு சினிமா துணை நடிகையைப் போல் ஒப்பனை செய்துக்கொண்டிருந்த அவர் ஹாலுக்குள் நுழைந்ததுமே நேரே மோகன் அமர்ந்திருந்த சோபாவில் அவருக்கு மிக அருகில் அமர்ந்து, 'என்ன சார் தனியா வந்திருக்கீங்க... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு வரலையா?' என்று உரிமையாக கேட்க மோகன் சங்கடத்தில் நெளிந்தார். அவர் தொடர்ந்து, 'என்ன சாப்பிடறீங்க?' என்று உபசரிக்கவும் அவருடைய சங்கடம் கூடியது. வேறு வழியில்லாமல் அவர்களுடைய சமூகத்தினருக்கே உரிய ஸ்பெஷல் இனிப்புகளை கெட்டியான லஸ்சியுடன் விழுங்கி வைத்தார்.

ஆனால் அவர் வந்த விஷயத்தைப் பற்றி பேசவிடாமல் வேண்டுமென்றே ரவியும் அவருடைய் மனைவியும் மற்ற உலக விஷயத்தையெல்லாம் பேசி அவரை கிறங்கடித்தனர். மோகன் விடவில்லை. 'சார் நம்ம பேங்க்ல கணக்கு துவங்கறத பத்தி....' என்றார் புறப்படும் நேரத்தில்.

ரவி அப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல...'அட ஆமா சார்... மறந்தே போய்ட்டேன்... நீங்க வந்ததும் நல்லதாப்போச்சி... இன்னைக்கி காலைலதான் ஒரு பெரிய அமவுண்ட் கைக்கு வந்துது... இருங்க கொண்டு வரேன்...' என்றவாறு தன் மனைவியை கண்சாடைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில் அவருடைய மனைவி ஒரு அழகான புன்னகையுடன், 'எங்க ஹஸ்பெண்ட் தங்கமானவர் சார்.. ஒங்களெ எப்படியோ அவருக்கு ரொம்ப புடிச்சி போயிருச்சி... இல்லன்னா இவ்வளவு பெரிய அமவுண்ட ஒங்க பேங்க்ல போடுவேன்னு சொல்வாரா? நீங்க குடுத்துவச்சவர் சார்...' என்றதும் மோகன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு துணிப்பையுடன் திரும்பி வந்த ரவி அதிலிருந்து கற்றை, கற்றையாக கரன்சி நோட்டுகளை எடுத்து டீப்பாயில் வைக்க தான் எதிர்பார்த்ததற்கும் மேலேயே தொகை இருக்கும் போலிருக்கிறதே என்று மலைத்துப்போனார் மோகன். 'சார் ரெண்டு லட்சத்து பத்தாயிரம் இருக்கு.' அத்தோட அஞ்சு லட்சத்துக்கு ஒரு செக்கும் இருக்கு. மொதல்ல இந்த கேஷ வச்சி கணக்கு தொடங்கிருங்க... அப்புறம் ரெண்டு நாள் கழிச்சி இந்த செக்க போட்டுருங்க.. இத குடுத்தவர் ஒரு ரெண்டு நாள் கழிச்சி போட்டா நல்லாருக்கும்னு சொல்லிட்டுத்தான் குடுத்தார். அதனாலத்தான் சொல்றேன்.. அவர் ரொம்ப நாள் கஸ்டமர்... ஏதோ பணமுடை போலருக்கு... நமக்கு பணத்த விட பிசினஸ் ரிலேசன்ஷிப்தான் சார் முக்கியம்...' என்றவாறு பணப்பையையும் காசோலையையும் மோகனிடம் நீட்டினார். 'ஒங்கக் கிட்டவே கேஷ குடுக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... நாளைக்கு எனக்கு முக்கியமான வேல இருக்கு... பக்கத்துல ------------ வரைக்கும் போறேன்... காலையில போனா ராத்திரி ஆயிரும்... அதான்... ஒங்களுக்கு ஏதாச்சும் அப்ஜெக்ஷன் இருந்தா நாளைக்கு நம்ம வய்ஃப் கிட்ட குடுத்துவிடறேன்...' என்றார்.

மோகன் பதற்றத்துடன், 'என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... ஒரு ரசீதும் கேக்காம நீங்களே பணத்த என்னெ நம்பி குடுக்கறப்போ... பேசாம குடுங்க சார்... நாளைக்கு நானே அப்ளிகேஷன் ஃபார்ம் கொண்டு வந்து குடுக்கேன்... நமக்குள்ள ஃபார்மாலிட்டியெல்லாம் எதுக்கு?' என்றார். அவருக்கு எங்கே ரெண்டு லட்சம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

'அப்பன்னா சரி சார்.' என்று பெருந்தன்மையுடன் துணிப்பையை அவரிடம் கொடுத்தார் ரவி. தொடர்ந்து 'சார் நா வேணும்னா ஒங்கள ஒங்க வீட்ல ட்ராப் பண்ணிரட்டுமா சார்... இந்த ராத்திரி நேரத்துல கைல பணத்தோட...' என்று மோகனை வற்புறுத்தி தன்னுடைய சொகுசு காரிலேயே கொண்டு வீட்டில் இறக்கிவிட்டு செல்ல மோகன் தன்னுடைய அதிர்ஷ்டம் இவருடைய நட்பு கிடைத்தது என்று தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அடுத்த நாள் பணத்தைக் கொண்டு ரவி எழுதிக்கொடுத்திருந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு கணக்கை திறந்து ரொக்கத்தை அதில் செலுத்திவிட்டு தன் உதவியாளரை அழைத்து, 'சார் இந்த செக்க ஒங்க கஸ்டடியில வச்சிக்குங்க... ரெண்டு நாள் கழிச்சி க்ளியரிங்ல அனுப்பனா போறும்...' என்று கூறிவிட்டு, 'ஒரு கரண்ட் அக்கவுண்ட் ஓப்பனிங் ஃபார்ம பேர மட்டும் எழுதி என்கிட்டு குடுங்க... நான் அவர் கிட்ட கையெழுத்த வாங்கிட்டு நாளைக்கு கொண்டு வந்து தரேன்.. அதுக்கப்புறம் செக் புக் எல்லாம் குடுத்தா போறும்னு சொல்லிட்டார். இந்த கேஷுக்கு ஒரு ரிசிட் மட்டும் போட்டு கொண்டாங்க.' என்று உத்தரவிட்டார்.

அன்று மாலையே மோகன் கையில் ஒரு இனிப்பு பெட்டியுடன் ரவியின் வீட்டிற்கு செல்ல அங்கு அவருடைய மனைவியும் பதினெட்டு வயது மதிக்கத்தக்க அவருடைய மகளும் மட்டுமிருந்தனர். 'அவர் இன்னும் வரலை சார்.. நீங்க குடுத்துட்டு போங்க.. அவர் கையெழுத்து போட்டு ஒங்க பேங்குக்கு வந்து குடுத்துடறேன்னு சொல்லியிருக்கார்.' என, 'பரவால்லை மேடம்... அவசரமில்லை.' என்ற பதிலுடன் திரும்புகிறார்.

அடுத்த நாளும் சரி அதற்கடுத்த நாளும் ரவி சர்மா கிளைக்கு வரவில்லை. ஆயினும் மோகன் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் ரொம்பவும் பிசியாருக்கார் போலருக்கு என்றுதான் நினைத்தார். மூன்றாம் நாள், 'சார் அந்த செக்க இன்னைக்கி போட்டுருங்க.. எனக்கு நாளைக்கு கொஞ்சம் அமவுண்ட் தேவைப்படும்.' என போன் வருகிறது அவரிடமிருந்து. 'சரி சார்...' என்கிறார் மோகன்... பிறகு தொடர்ந்து, 'ஒங்களுக்கு செக் புக் ஏதும் வேணுமா சார்?' என்கிறார்.

'பின்னெ வேணாமா சார்? செக் புக் இல்லாம எப்படி பிசினஸ் பண்றது?' என்ற அட்டகாசமான சிரிப்பு எதிர் முனையிலிருந்து வருகிறது. 'நா நம்ம ஆஃபீஸ் பியூன அனுப்பறேன்... குடுத்து விடுங்க...'

அப்படியே அடுத்த அரைமணி நேரத்தில் கிளைக்கு வரும் சிப்பந்தியிடன் செக் புக்கை கொடுக்குமாறு தன் உதவியாளரிடம் பணிக்கிறார். அவரோ, 'சார் ஒப்பனிங் ஃபார்ம் இன்னும் வரலையே' என்கிறார். அதானே என்று நினைத்த மோகன் கிளைக்கு வந்தவரிடம் வினவுகிறார். 'சார் மொதலாளி ஒன்னும் சொல்லலையே... செக் புக் குடுப்பாங்க வாங்கிட்டு வந்துருங்கன்னுதான் சொன்னார். நா வேணும்னா போய் ஓப்பனிங் ஃபார்ம ஃபில்லப் பண்ணி குடுத்தாத்தான் செக் புக் கிடைக்குமாம்னு சொல்லிரட்டுமா சார்?' என்கிறார்.

மோகன் பதற்றத்துடன், 'அதெல்லாம் வேணாங்க... நீங்க செக் புக்க கொண்டு போங்க.. நா சாரோட வீட்டுல போயி ஃபார்ம வாங்கிக்கறேன்.' என 'அப்படீன்னா சரிசார்.' என்று வாயெல்லாம் பல்லாக செக் புக்கை வாங்கிக்கொண்டு செல்கிறார் வந்தவர்..

அதுதான் அவர் கடைசியாக அவரையோ அவருடைய முதலாளியையோ பார்த்தது.

இதில் என்ன தில்லுமுல்லு என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

முதலில் ரவி சர்மா, ரவி சர்மாவே அல்ல! அத்துடன் அவர் மோகனிடம் கொடுத்த காசோலையிலிருந்த நிறுவனத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது எப்படி அவருடைய கைக்கு வந்தது என்பது இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் மோகனுடைய கிளை காசோலையை க்ளியரிங்கில் அனுப்பியபோது சம்பந்தப்பட்ட வங்கி எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை பாசாக்கி அனுப்பி வைக்க ரவி சர்மாமீது எவ்வித சந்தேகமும் இல்லாமலிருந்த மோகன் அந்த பணத்தை அவருடைய நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கிறார்.

அடுத்த நாளும் நிறுவனத்தின் ஓப்பனிங் ஃபார்ம் வராததால் அன்று இரவு வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளட்டுமா என்று ரவியை தொலைபேசியில் அழைத்து மோகன் கேட்க 'இதுக்கு எதுக்கு சார் நீங்க வீட்டுக்கு வரணும். இதோ குடுத்து விடறேன் சார்.' என்று ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார். அத்துடன் மோகன் திருப்தியடைந்துவிடுகிறார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த ஒரு வாரத்தில் கணக்கிலிருந்த ரூ.7.10த்தில் நூறு ரூபாயைத் தவிர எடுக்கப்பட்டுவிடுகிறது. அதில் எவ்வித சந்தேகமும் மோகனின் கணக்காளருக்கு ஏற்படாததால் அவர் மோகனிடம் கூறாமலிருந்துவிடுகிறார்.

ஒரு மாதம் செல்கிறது. ஒருநாள் திடீரென்று கிளை இயங்கிவந்த பகுதி காவல்நிலையத்திலிருந்து அதிகாரியொருவர் வருகிறார். 'சார் இந்த செக்க ஒங்க பேங்க்லருந்து கலெக்ட் பண்ணியிருக்கீங்க. யாரோட அக்கவுண்ட்ல க்ரெடிட் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றீங்களா?' என்று துவங்கி ரவிசர்மா தன்னுடைய நிறுவனம் என்று கூறி துவங்கியிருந்த கணக்கில் அதுவரை நடந்திருந்த வரவு செலவை ஆராய்கிறார்கள்.

'இவர ஒங்களுக்கு தெரியும்னு ஓப்பனிங் ஃபார்ம்ல நீங்களே கையெழுத்துப் போட்டிருக்கீங்க? எப்படி சார் தெரியும்?' என்ற காவல்துறை அதிகாரியின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் தயங்கி பிறகு அவர் தான் மாற்றலாகி வந்த சமயத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதிலிருந்து கணக்கு துவங்கிய நாள்வரை நடந்தவைகளை கூறுகிறார். 'அவர் சொந்த வீட்லதான் குடியிருக்கார் சார். இப்பவே வேணும்னாலும் போய் பாக்கலாம், வாங்க.' என்று எழுந்து அவருடன் செல்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது. அடுத்த வீட்டுக்காரர், 'சார் அவர் ரெண்டு வாரத்துக்கு முன்னால வீட்ட காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கே போறேன்னு போய்ட்டாரே.' மோகன் அப்பாவித்தனமாக சார் 'இது சொந்த வீடுன்னு சொன்னாரே?' என்கிறார். அவர் சிரிக்கிறார். 'என்னது அப்படியா சொன்னார்? சார் அந்தாளு சரியான ஃப்ராடுன்னு நினைக்கிறேன். வீட்டு ஓனர் மெட்றாஸ்ல இருக்கார். நம்ம ஃப்ரெண்டுதான். நாந்தான் இந்த வீட்ட பாத்துக்கறேன். ஒரு ப்ரோக்கர்தான் இந்தாள கூட்டிக்கிட்டு வந்தார். வடநாட்டுக்காரராச்சேன்னு நானும் நெனச்சேன். ஆனா நா தமிழ்நாட்லயே பொறந்து வளந்தவன் சார், ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு சொன்னார். எவ்வளவு வாடகைன்னாலும் தரேன்னார். அதான் குடுத்தேன். ஆனா அந்தாளோட நடவடிக்கையெல்லாம் பார்த்தா சந்தேகமாத்தான் இருந்திச்சி. ரெண்டு நநளைக்கு முன்னால அந்தாளு கூட இருந்த ரெண்டு பொம்பளைங்களும் சண்டை போட்டுக்கிட்டு போயிருச்சிங்க. அப்புறம்தான் தெரிஞ்சது அந்த ரெண்டு பேருக்கும் அந்தாளுக்கும் ஒறவேயில்லங்கறது. சரியான ஃப்ராடு கும்பல் போலருக்கு. அதான் வீட்ட காலி பண்ணிருங்கன்னு சொல்லிட்டேன்.' என்றதும் மோகன் மயக்கமடையாத குறைதான்.

இப்படியும் ஒரு ஏமாளியா என்பதுபோல் அவரைப் பார்த்தார் காவல்துறை அதிகாரி.

ஆனால் சட்டம் தன்னுடைய வேலையை செய்யத்தான் செய்தது. காசோலைக்கு சொந்தக்காரர் மோகனின் வங்கி மீது வழக்கு தொடர்ந்தபோதுதான் அவருடைய மேலதிகாரிகளுக்கு விஷயம் தெரியவருகிறது. மோகனின் உதவியாளருடைய சாட்சியம் அவரை குற்றவாளியாக்குகிறது. அரசு வங்கி என்பதால் பதவியிறக்கம் மட்டுமில்லாமல், வேலையும் பறிபோகிறது. வங்கிக்கு பணம் நஷ்டம்.. மோகனுக்கு வாழ்க்கையே நஷ்டப்பட்டுப் போகிறது.

********

02 May 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 54

சாதாரணமாக வணிகர்களும் சரி தொழில் செய்பவர்களும் சரி தங்களுடைய முதலீட்டை விட வங்கியிலிருந்து மேலும், மேலும் கடன் பெறுவதையே விரும்புவதைப் பார்த்திருக்கிறேன்.

மற்றவர்களுடைய பணத்தில் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கும் சுகமே அலாதியானதுதானே.

ஒரு வணிகரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அதில் தவறேதும் இல்லைதான். பொருளாதார வல்லுனர்கள் கூட borrowed capital is always cheaper than the own capital என்று கூறி வைத்துள்ளதைப் பார்க்கிறோம்.

இதற்கு அவர்கள் கூறும் காரணத்தைக் கேட்டால் நமக்கும் அதில் தவறேதும் இல்லையே என்று தோன்றும். உங்களிடம் நூறு ரூபாய் உள்ளது என வைத்துக்கொள்வோம். அதை உங்களுடைய வணிகத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. அதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒன்றும் வாங்க விருப்பமில்லையா? பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கலாம். அல்லது ஒரு வங்கியிலோ டெப்பாசிட் செய்துவிட்டு வட்டியை வாங்கலாம். எப்போது தேவையோ அப்போது மீண்டும் பணமாக்கிக் கொள்ளலாம். உங்களுடைய சேமிப்பு கூடுகிறதோ இல்லையோ இழக்க வாய்ப்பில்லை.

ஆனால் அதையே உங்களுடைய வணிகத்திலோ அல்லது தொழிலிலோ முடக்கிவிட்டால் அதை அவ்வளவு எளிதாக மீண்டும் எடுக்க முடியாது. உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகலாம். அதுபோலவே அதை முழுவதுமாக இழந்தும் விடலாம்.

வணிகம் அல்லது தொழில் துவங்கவோ அல்லது உள்ளதை விரிவாக்கம் செய்யவோ வங்கியிலிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் சலுகை வட்டியில். அப்படியிருக்க உங்களுடைய சேமிப்பை எதற்கு அதில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற வாதம் கேட்பதற்கு நியாயமானதாகத்தான் தோன்றும்.

ஆனால் வங்கிகள் இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றன?

ஒவ்வொரு வகை வணிகத்திற்கும், தொழிலுக்கும் தேவையான முதலீடு எவ்வளவு என்பதை அந்தந்த துறை வல்லுனர்களைக் கொண்டே ஆய்வு செய்து கணித்திருக்கின்றன வங்கிகள். இதைத்தான் ஆங்கிலத்தில் adequate capital என்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு வணிகத்திற்கு ரூ.100 முதலீடு தேவையென்றால் அதில் குறைந்தபட்சம் ரூ.25 ஆவது உரிமையாளரின் பங்காக இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு உதவ வங்கிகள் முன்வருவதில்லை. மேலும் தன்னுடைய இந்த ரூ.25 உடன் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடமிருந்து மேலும் ரூ.25ஐ கொண்டு வர வேண்டும். மீதமுள்ள ரூ.50ஐ வங்கிகள் பலதரப்பட்ட கடன் திட்டங்களில் குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களாக வழங்க முன்வருகின்றன.

வணிகம் அல்லது தொழிலுக்கு தேவையான அசையா சொத்துக்களை அதாவது தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க நீண்ட கால கடன்களையும் தொழிலை அன்றாடம் நடத்திச் செல்ல தேவையான அசையும் சொத்துக்களான சரக்குகள் (stock), மூலப்பொருட்கள் (raw materials) ஆகியவற்றை வாங்கவும், தொழிலாளர்கள் ஊதியம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக குறுகியக் காலக் கடன்களையும் வங்கிகள் வழங்குவது வழக்கம். இது வங்கிகளுக்கு வங்கி சிறு மாறுதல்கள் இருந்தாலும் இதுதான் பொதுவான அணுகுமுறை.

ஒவ்வொரு வகை கடன்களை வழங்கும்போதும் அதற்கு தேவையான தொகையில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகித தொகை உரிமையாளர் தன்னுடைய பங்காக கொண்டு வரவேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அதாவது தொழிற்சாலை எழுப்ப ரூ.1000 தேவை என்றால் ரு.250 லிருந்து ரூ500 வரை உரிமையாளர் தன் பங்காக கொண்டு வரவேண்டும். அதுபோலவே இயந்திரங்களில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம்
வரையிலும் சரக்கு கொள்முதல் செய்வதில் இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் மற்ற செலவினங்களில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் உரிமையாளருடைய பங்கு இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன.

அத்துடன் நின்றுவிடாமல் வர்த்தக அளவு கூடக் கூட நிறுவனத்தின் தேவையும் கூடுமல்லவா? அப்போதெல்லாம் வங்கிகள் மட்டுமே தங்களுடைய கடன் தொகையை கூட்டித் தரவேண்டும் என்று பல வணிகர்களும் தொழிலதிபர்களும் கருதுகின்றனர். ஆனால் வங்கிகளோ தேவையான கூடுதல் தொகையில் உரிமையாளர்களும் தங்களுடைய முதலீட்டை தொடர்ந்து கூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. தங்களுடைய மற்ற சேமிப்பிலிருந்து கொண்டு வருகிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தையாவது அதிலேயே முதலீடு செய்யவேண்டும். ரூ.100 லாபம் கிடைக்கும் என்றால் அதில் ரூ.75 ஐ வணிகத்திலிருந்து எடுக்கலாகாது. அதை விடுத்து கிடைக்கும் லாபம் முழுவதையும் எடுத்து வேறேதும் சொத்தில் முதலீடு செய்வதோ அல்லது ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதோ வங்கிகளுக்கு தெரியவரும் பட்சத்தில் தங்களுடைய கடன் தொகையை கூட்ட முன்வருவதில்லை. எந்த வணிகர் தன்னுடைய சொந்த முதலீட்டை தன்னுடைய வணிகத்தில் முடக்க விரும்பவில்லையோ அதில் வங்கிகளும் பணத்தை முடக்க விரும்பவதில்லை என்பதை பல வணிகர்களும் உணர்வதில்லை.

'சார் இப்பதான் பிசினஸ் கூடற நேரம். இப்ப போய் நீங்க கடன கூட்டித் தரமாட்டேன்னு சொன்னா எப்படி சார்?' என்று வாதிடுவார்கள். 'சரிங்க. உங்க பிசினசுக்கு கூடுதல் கேப்பிடல் வேணும்னு ஒங்களுக்கு தெரியுது. ஆனா உங்க பணத்தை அதில இன்வெஸ்ட் பண்ணணும்னு ஒங்களுக்கு தோனலையே.' என்றால் 'யார் சொன்னது?' என்று எதிர்வாதம் செய்வார்கள். 'ஒங்க பாலன்ஸ் ஷீட்தான் சார் சொல்லுது.' என்று அவருடைய நிறுவனத்தின் நிதியறிகையிலிருக்கும் விவரங்களை அவர் முன் வைத்தால் அப்போதும், 'சார் அது நம்ம ஆடிட்டர் பண்ண வேலைசார். அவர ஒங்கக் கிட்ட பேச சொல்றேன்.' என்று நழுவுவார்கள்.

வங்கிகள் எத்தனை சலுகைக் கடன்கள் வழங்கியும் நம் நாட்டின் பொருளாதராம் இன்னும் ஒரு வளரும் நாட்டின் நிலையிலேயே நிற்பதற்கு முக்கிய காரணம் நம் வணிகர்களின் மற்றும் தொழிலதிபர்களின் நேர்மையற்றதனமும், நிலையற்ற கண்ணோட்டமும் ஒரு காரணம் என்றாலும் மிகையாகாது என்பது என்னுடைய முப்பதாண்டுகால அனுபவத்தில் நான் படித்தவை.

தொடரும்...