30 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 53

நான் மதுரை கிளையிலிருந்து மாற்றப்பட்டு முதல் முறையாக ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது அதிகாரம் செய்தே பழகிப்போன நான் எப்படி அதிகாரத்துக்கு கட்டுப்படப் போகிறேன் என்ற மனநிலையில் இருந்தேன்.

ஆனால் அங்கு சுமார் பதினைந்து மாதங்கள் பணியாற்றிவிட்டு மீண்டும் ஒரு கிளைக்கு, அதுவும் சென்னையிலேயே மேலாளராக பதவியமர்த்தப்பட்டபோது, 'மீண்டுமா?' என்ற மனநிலையில்தான் கிளைக்கு சென்றேன். அது என்னுடைய வட்டார மேலாளரே எதிர்பார்க்காத மாற்றம் என்பதுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு மேலாளரை திடீரென்று மாற்றிவிட்டு என்னை அந்த பதவியில் அமர்த்தியிருந்ததால் அவருடைய பகைக்கும் ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் நாளடைவில் எங்கள் இருவருக்குமிடையிலிருந்த உறவு சுமுக நிலைக்கு வந்திருந்தது என்பது உண்மைதான்.

என்னுடைய கிளை சிப்பந்தியொருவர் அகாலமாய் மரணமடைந்தபோது அதற்கு என்னுடைய கிளையில் நடந்திருந்த சில விதி மீறல்களும் ஒரு காரணம் என்பதால் நான் மீண்டும் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த நிலையில்தான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் சேர வேண்டிய சூழல். சாதாரணமாகவே கிளையில் குப்பைக் கொட்ட முடியாதவர்கள்தான் வட்டார அலுவலகங்களைப் போன்ற நிர்வாக அலுவலகங்களுக்கு மாற்றப் படுவார்கள் என்ற ஒரு எண்ணம் அப்போதுமட்டுமல்ல இப்போதும் நிலவி வருகிறது.

ஆனால் வட்டார அலுவலகத்தினுள் என்னுடைய இரண்டாவது பிரவேசம் முந்தைய பிரவேசத்தைப் போல் அத்தனை குழப்பமாக இருக்கவில்லை. ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேல் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால் இம்முறை என்னால் மிக எளிதாக என்னுடைய அலுவல்களில் ஒன்றிப்போக முடிந்தது. முந்தைய பணிக்காலத்தில் கிளைகளுக்கு ஆய்வுக்கு சென்றதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்ததால் அதை இம்முறை முற்றிலுமாக தவிர்ப்பதில் குறியாயிருந்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் இம்முறை எனக்கு எடுத்தவுடனேயே கடன் வழங்கும் இலாக்காவில் போஸ்டிங் கிடைத்தது. என்னுடைய அலுவலகத்தின் ஆய்வு இலாக்காவின் தலைமை அதிகாரி என்னுடைய முந்தைய ஆய்வு அறிக்கைகளை வாசித்திருந்ததால் கூட என்னை தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தேன். அதுவும் எனக்கு நல்லதாக தோன்றியது. எதற்கு மீண்டும் வம்பு என்று எனக்கு கிடைத்த பதவியிலேயே கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பல பெரிய கிளைகளுக்கு ஆய்வு சென்றிருந்த அனுபவம் கடன் வழங்கும் இலாக்காவில் மிகவும் உதவியாயிருந்தது. சாதாரணமாக கிளைகளுக்கு ஆய்வு செல்கையில் நம்முடைய கண்களுக்கு அதிகம் தென்படுவது கடன் வழங்குகையில் நிகழும் குறைபாடுகள்தான். சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகள் வட்டி வழங்குவதில்தான் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக வாடிக்கையாளர்களை அடையாளம் காணத் தவறுவது (introduction of the customers). வங்கியின் சேமிப்பைக் கூட்ட வேண்டுமே என்பதற்காக எந்த வழியில் சேமிப்பு வந்தாலும் அதனுடைய மூலத்தைப் பற்றி (source) எவ்வித கவலையும் கொள்ளாமல் பல மேலாளர்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். அதிலும் முதல் முதலாக கிளைக்கு மேலாளர் பொருப்பை ஏற்பவர்கள் முதல் கிளையிலேயே தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒருவகை வெறியில் (வெறி என்பது சற்று அதிகப்படியோ என்று நினைப்பவர்களுக்கு passion என்று சொல்லலாம்). எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் சில இப்படித்தான் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேண்டுமானால் சற்று அதிகமாக தோன்றலாம். ஆனால் அவர்களும் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகளால் வங்கிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் உண்மை. ஆனால் கடன் கணக்குகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதென்பது பல வருட அனுபவங்களுக்குப் பிறகு வருவது. சாலையில் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் சேமிப்பை கான்வாஸ் செய்யலாம். ஆனால் கடன் என்று வரும்போதும் சகோதரர்களையும் சந்தேகப்பட வேண்டும் என்பார்கள் எங்களுடைய பயிற்சி வகுப்புகளில்.

Identification of the borrowers is an art... அது ஒரு கலை என்பதும் உண்மைதான். பகட்டாக உடையுடுத்தி வருபவரெல்லாம் செல்வந்தர்கள் என்றோ மிகச் சாதாரணமாக தோற்றமளிப்பவர்களெல்லாம் எளியவர்கள் என்றோ கணிப்பிட முடியாது என்பதை என்னுடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

பல அனுபவம் மிக்க மேலாளர்களும் கூட இந்த தவற்றை செய்துவிட்டு தங்களுடைய பல்லாண்டு கால உழைப்பை வீணாக்கிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு வங்கி மேலாளர் வாடிக்கையாளர்களுடைய வெளித்தோற்றத்தில் மயங்கி அவர்களுடைய உண்மை பொருளாதார நிலையில் கவனம் செலுத்த மறந்துபோவார்கள். மேலும் ஒரு கிளையின் வணிகத்தை கூட்டவேண்டும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய வேண்டும் என்பதிலேயே அவர்களுடைய எண்ணம் இருக்கும்.

ஆனால் என்னைப் போன்று நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் மேசை அதிகாரிகளுக்கு அந்த பிரச்சினை இல்லை. மேலும் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் ஏற்கனவே மேலாளர்களாக பணியாற்றியிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் கிளை மேலாளர்கள் பரிந்துரைத்த கடன் விண்ணப்பங்களை சரியான கோணத்தில் பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது எளிது.

ஆனால் சில மேசை அதிகாரிகள், குறிப்பாக கிளை மேலாளர்களாக இருந்தபோது அவர்கள் அளித்திருந்த கடன்கள் வாராக் கடன்களாகிப்போய் அதன் விளைவாக பதவியை இழந்தவர்களாக இருந்தால், அவர்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையாக (Negative) இருக்க வாய்ப்புள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அவர்கள் பரிசீலிக்கும் அனைத்து கடன் பரிந்துரைகளையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.

Experience should make one to be positive என்பார் என்னுடைய வங்கி மேலாளர்களுள் ஒருவர். உண்மைதான் ஆனால் நமக்கு ஏற்படும் எதிர்மறையான அனுபவங்கள் சில வேளைகளில் நம்மில் பலரை எதிர்மறையாகவே சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை எந்த சூழலிலும் ஒரு நேர்மறையான எண்ணத்துடனேயே வாழ்க்கையை கண்ணோக்க முயன்றிருக்கிறேன். எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் மீண்டும் எழுந்து எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்வதில் உறுதியாயிருந்திருக்கிறேன். அந்த பாதையில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மிகவும் கசப்பானதுதான் என்றாலும் அதனால் சில வேளைகளில் சோர்ந்துபோயிருக்கிறேன் என்றாலும் அதை என்னால் இயன்றவரை களைந்துவிட்டு பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயணித்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். ஆகவே மூன்று வருடங்களில் இரண்டு முறை மேலாளர் பதவியை இழந்தபோதும் அத்துடன் என்னுடைய அலுவலக வாழ்க்கை அத்துடன் முடிந்துபோய்விட்டது என்று நினைத்ததில்லை.

கிளை மேலாளர்கள் பாசிட்டிவாக பரிந்துரைத்து அனுப்பியுள்ள கடன் விண்ணப்பங்களை அதே கண்ணோட்டத்துடன் நிர்வாக அலுவலகங்களிலுள்ள மேசை அதிகாரிகளும் அணுகாவிட்டால் நாளடைவில் 'நாம என்ன ப்ரொப்போசல அனுப்புனாலும் பாசாக போறதில்லை. அப்புறம் எதுக்கு வீணா..' என்று மேலாளர்கள் கடன்களை வழங்குவதையே நிறுத்திவிடுவார்கள். அத்துடன் வங்கி வர்த்தகமும் ஸ்தம்பித்துப் போய்விடும் என்று எங்களுடைய பயிற்சி வகுப்புகளில் மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பார்கள்.

ஆனால் அதே சமயம் கிளை மேலாளர்கள் கவனிக்க தவறிவிட்ட விஷயங்களை அவை நல்லவையானாலும் தீயவையானாலும், அவற்றை என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் கண்டுபிடித்து மேலதிகாரிகளுடைய பார்வைக்கு கொண்டு வரவேண்டும். When the branch managers look at the customer you should look at his financials என்பதும் எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் கூறப்படும் அறிவுரை.

ஒரு வாடிக்கையாளர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும், எவ்வளவு நேர்மையுள்ளவராயிருந்தாலும் அவருடைய பொருளாதார நிலை (financials) சரியில்லையென்றால் எந்த ஒரு தொழிலும், வணிகமும் வெற்றியடைய வாய்ப்பில்லை, நாம் வழங்கும் கடனும் முழுமையாக திரும்பிவர வாய்ப்பில்லை.

ஆகவே என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் மேலாளர்களுடைய பரிந்துரையை பரிசீலிப்பதை விட அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிதியறிக்கைகளை (balance sheet) பரிசீலிப்பதிலேயே குறியாயிருப்பதுண்டு..

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பரிசீலித்த சில கடன் விண்ணப்பங்களைப் பற்றி அடுத்த சில தினங்களில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். வங்கிகளின் அணுகுமுறையை தெரிந்துக்கொள்வதில் உங்களில் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். குறிப்பாக வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...

தொடரும்...

No comments: