24 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 52

நான் இரண்டாம் முறையாக வட்டார அலுவலகத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள் என்னுடைய வங்கியின் அடுத்த முதல்வர் நியமிக்கப்பட்டார்.

என்னுடைய வங்கி சரித்திரத்தில் முதன் முறையாக நாகர்கோவிலைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவர் முதல்வராக நியமிக்கப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அன்று முதல் வங்கியின் கண்ணோட்டத்திலும் ஒரு பெரிய மாற்றம் வந்தது என்றால் மிகையாகாது. அவர் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு உயர் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே எங்களுடைய வங்கிக்கு முதல்வராக நியமிக்கப்பட்ட பெருமையும் இருந்தது. அதுவரை முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர்கள்.

அவர் அவருடைய வங்கியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்ததால் என்னுடைய வங்கி முதல்வர் பதவிக்காலத்திற்குப் பிறகும் தன்னுடைய தாய் வங்கிக்கு (Parent Bank) திரும்பிச் செல்லக் கூடிய வாய்ப்பு இருந்தது. அதுவே அவரை ஒரு கண்டிப்பான, அதாவது எங்களுடைய இயக்குனர் குழுவுக்கு அஞ்சி நடக்க தேவையில்லாத, முதல்வராக செயல்பட உதவியது. அத்துடன் அவருடைய விஷயஞானமும், இறைபக்தியும், நேர்மையும் மேலைநாடுகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு எங்களுடைய அதிகாரிகள் நடுவில் பெருத்த மதிப்பைப் பெற்றுத்தந்திருந்தது.

நான் முன்பு கூறியிருந்த 'தண்ணி' கலாச்சாரமும் கூட வெகுவாக குறைந்திருந்தது என்றும் கூறலாம். எந்த ஒரு கிளைக்கு அல்லது இலாக்காவிற்கு அலவலக நிமித்தம் சென்றாலும் அவருடைய மதிய உணவு இட்லி, தோசை காப்பி என வெகு எளிமையாக முடிந்துவிடும். இரவு உணவு பழங்கள் மட்டுமே. இயக்குனர்கள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் கமிட்டிக் கூட்டங்களிலும் இதுதான் staple menu.

எப்போது கமிட்டி கூட்டம் முடியும் பாட்டிலை திறக்கலாம், ஆடு, கோழியை விழுங்கலாம் என்ற எண்ணத்துடன் அதுவரை இயங்கிவந்தவர்கள் நொந்துப்போனார்கள். 'மனுசன் தானும் அனுபவிக்கறதில்லை பிறத்தியாரையும் அனுபவிக்க விடறதில்லன்னா என்னத்த பண்றது? தலையெழுத்தேன்னு அனுபவிக்க வேண்டியதுதான்.' என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

அத்துடன் முந்தைய முதல்வர்களைப் போலல்லாமல் உயர் அதிகாரிகள் மற்றும் வட்டார மேலாளர்களுடைய கூட்டத்திற்கு வரும்போது அக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பட்டியிலிட்டு கொண்டுவருவதுடன் அதில் பங்குபெறும் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தது பலருக்கும் தர்மசங்கடத்தை அளித்தது. 'என்னய்யா இது? Friendsகளை பாத்து பேசினமா, ரெண்டு பெக்க போட்டமான்னு இல்லாம... இப்பல்லாம் இந்த கான்ஃப்ரன்ஸ்ன்னால அலர்ஜியாயிருச்சிப்பா?' இத்தகைய கூட்டங்களில் இது சர்வசாதாரணமாக கேட்கும் புலம்பல்!

ஆனால் இந்த மாற்றத்தை இருகரம் விரித்து வரவேற்றவர் என்னுடைய வட்டார மேலாளர்தான். ஏனென்றால் அவருக்கும் இதெல்லாம் முற்றிலும் ஒத்துவராத விஷயங்கள், அதாவது குடி, குப்பி (bottle), குசலம் விசாரிப்பது எல்லாமே.. அதற்கு வேறொரு காரணம் இருந்தது. அவர் சிறுவயதிலேயே மனைவியை இழந்துவிட்டவர். 'ஆமா அந்தம்மா இவர்கூட பத்து வருசம் வாழ்ந்ததே பெரிய விஷயம்.' என்பார்கள் அவருடைய தாம்பத்தியத்தைப் பற்றி நன்கு அறிந்த அவருடைய சக அதிகாரிகள். மனைவியை இறந்தபோது பத்தும், எட்டும் வயதில் இருந்த இரு மகன்களே அவருடைய முழு உலகமாயிருந்தது. மறுதிருமணம் செய்துக்கொள்ளாமல் தன் மகன்களை வளர்த்து ஆளாக்கியவருக்கு அவர்களுக்கு ஒவ்வாத எந்த பழக்கமும் தனக்கும் தேவையில்லை என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஆனால் அவர் வளர்த்து ஆளாக்கிய இரு மகன்களுமே வயதுக்கு வந்ததும் அவரை விட்டு பிரிந்து சென்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'இறக்கை முளைச்சதுக்கப்புறமும் இந்த மனுசங்கிட்டருந்து அவஸ்தைப்படறதுக்கு அதுங்களுக்கு பைத்தியமா என்ன?' என்பார்கள் அவரை நன்கு அறிந்திருந்தவர்கள் ஒரு devilish மகிழ்ச்சியுடன்.

என்னுடைய வங்கி முதல்வருக்கு இருந்த நற்குணங்களில் ஒன்றும் என்னுடைய வட்டார மேலாளரிடம் இல்லையென்றாலும் இவரும் teetotaller என்பதாலேயே முன்னவருக்கு பின்னவரை மிகவும் பிடித்துப்போனது. பின்னவருடய மத, இன, மொழி வெறி முன்னவரைப் பொறுத்தவரையில் அடிபட்டுபோனது என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாகிப் போனார்கள். அத்துடன் பின்னவருடைய விஷயஞானமும், சுயதம்பட்டமும் கூட அவர்களுடைய நெருக்கத்திற்கு காரணமாயிருந்திருக்கலாம்.

புதிய முதல்வர் பணிக்கு சேர்ந்தவுடனேயே வங்கியில் தன்னுடைய மாநிலத்தைச் (தமிழ்நாடு) சார்ந்தவர்களுள் வெகு சிலரே உயர் அதிகாரிகளாக இருப்பதைக் கவனித்திருப்பார் போலிருந்தது. அந்த வெகுசிலருடைய தனிப்பட்ட கோப்புகளை (personal files) எங்களுடைய எச்.ஆர் இலாக்காவிலிருந்து பெற்று படித்திருந்தார் என்பதை என்னை சந்தித்த முதல் சந்திப்பிலேயே என்னுடைய பூர்வாங்கத்தையே எடுத்துரைத்தபோது தெரிந்தது.

'It's not enough that you are talented and sincere tbr.. you should also know how to get along with others, especially your seniors.' என்றார் முதல் சந்திப்பிலேயே. நானும் ஒங்களமாதிரிதான். நம்ம குடும்ப பின்னணிக்கு சுத்தமா சம்பந்தமில்லாதவங்களோடத்தான் இந்த முப்பது வருசமா வேல செஞ்சிருக்கேன். ஆனா வேலைன்னு வந்துட்டா இதயெல்லாம் பெரிசுபடுத்தறதுல அர்த்தமே இல்ல. If you want climb up the ladder you'll have to change.. and change fast. அதாவது என்னோட tenureலயே... அப்படீன்னா என்னால ஏதாச்சும் செய்ய முடியும். என்ன சொல்றீங்க?' என்றார்.

அவர் சென்னை வட்டார அலுவலகத்திற்கு வந்திருந்த முதல் சந்திப்பிலேயே என்னை தனியாக அழைத்து உரையாடியது என்னுடைய வட்டார மேலாளரை எரிச்சல்கொள்ளச் செய்தது. அன்று முதலே என் மீது தேவையில்லாத ஒரு வன்மத்தை காட்ட துவக்கினார் என்றால் மிகையாகாது. நல்லவேளை என்னுடைய இலாக்கா தலைவராக இருந்த chief manager எனக்கு ஆறுதலாக இருந்தார் என்பது ஒரு நல்ல விஷயம். அவராலும் பொறுத்துக்கொள்ளாத கட்டத்தில், 'பேசாம இவர் ஒங்கக்கிட்ட நடந்துக்கற விதத்த சேர்மன் கிட்ட சொல்லிருங்களேன் டிபிஆர். அவருக்குத்தான் ஒங்கள புடிச்சிருக்குதே.' என்றார். நான் சிரித்துக்கொண்டே விசயத்தை மாற்றிவிடுவேன்.

என்னுடைய வங்கி முதல்வர் ஏற்கனவே என்னுடைய கோப்புகளில் இருந்தவற்றைப் படித்துவிட்டு ஒருதலைப்பட்சமாக நான் என்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவராயிற்றே. அவரிடம் சென்று என்னுடைய வட்டார மேலாளரைப் பற்றி குறைகூறுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று நினைத்தேன். மேலும் அவரும் என்னுடைய வட்டார மேலாளரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது எல்லோருமே அறிந்த விஷயம்.

மேலும் என்னுடைய மகள்கள் இருவருமே சென்னையில் இருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய வட்டார மேலாளரை அனுசரித்து செல்வது என்னுடைய பிரச்சினை மட்டுமே.. ஆனால் அவரை விரோதித்துக்கொண்டு மாற்றலாகிச் சென்றால் அது என்னுடைய குடும்பத்திலிருந்த அனைவரையுமே பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் என்னால் முடிந்த அளவு அவரை அனுசரித்துச் செல்வதென முடிவெடுத்திருந்தேன்.


தொடரும்...

4 comments:

துளசி கோபால் said...

//ஆனால் அவரை விரோதித்துக்கொண்டு மாற்றலாகிச் சென்றால்
அது என்னுடைய குடும்பத்திலிருந்த அனைவரையுமே பாதிக்க
வாய்ப்புள்ளது என்பதால் என்னால் முடிந்த அளவு அவரை
அனுசரித்துச் செல்வதென முடிவெடுத்திருந்தேன்.//

ஒருவிததில் இதுதாங்க சிறந்த முடிவு. நம்மளை நம்பி இருக்க குடும்பம் ரொம்ப
முக்கியமாச்சே.

இந்த ' குடி, குப்பி' சொற்பிரயோகம் பிடிச்சிருக்கு:-))))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

ஒருவிததில் இதுதாங்க சிறந்த முடிவு. நம்மளை நம்பி இருக்க குடும்பம் ரொம்ப
முக்கியமாச்சே.//

ஆமாங்க... ஆனாலும் பிறவிக் குணம்னு ஒன்னு இருக்கே. அது இடையில வந்து தன் குணத்த காமிச்சிரும்..இல்லன்னா ஏறக்குறைய பத்து வருசம் வனவாசம் போயிருக்க மாட்டேனே...

G.Ragavan said...

சார்...உங்க நிலைலதான் நானும் இருந்தேன். பொதுவாகவே தமிழ்நாட்டுப்பசங்களோ பொண்ணுங்களோ அடுத்தவங்ககிட்ட அவ்வளவு லேசாப் பழகீர்ரதில்ல. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கு நாப்பதுல கெடைச்ச பாடம் எனக்கு இருவதுல கெடைச்சது. அதுக்கப்புறம் மாறினேன். ஆனாலும் அப்பப்ப பழைய புத்தி எட்டிப்பாக்கும். அப்பப்ப திருந்திக்கிர்ரதுதான்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

பொதுவாகவே தமிழ்நாட்டுப்பசங்களோ பொண்ணுங்களோ அடுத்தவங்ககிட்ட அவ்வளவு லேசாப் பழகீர்ரதில்ல. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கு நாப்பதுல கெடைச்ச பாடம் எனக்கு இருவதுல கெடைச்சது. அதுக்கப்புறம் மாறினேன். ஆனாலும் அப்பப்ப பழைய புத்தி எட்டிப்பாக்கும். அப்பப்ப திருந்திக்கிர்ரதுதான். //

உண்மைதான். நாய் வால் மாதிரிதான். சுருட்டிக்கறப்பல்லாம் நீட்டி விட்டுக்கணும்.. :)