23 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 51

என்னுடைய மாற்றல் உத்தரவு வந்து சேர்ந்ததுமே என்னுடைய கிளையிலிருந்த பணியாளர்கள் மட்டுமல்லாமல் சென்னைக் கிளையிலிருந்த பணியாளர்களுள் பெரும்பாலோனோர் அதிர்ச்சியடைந்தனர்.

அதற்கு காரணகர்த்தாவாயிருந்த சென்னைக் கிளை மேலாளர் ஒருவரை எதிர்த்து மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன என்றும் கூட ஆலோசிப்பதாக என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் கூறியதும் பதறிப்போய் அப்போது சென்னையில் ஊழியர் மற்றும் கடைநிலை அதிகாரிகளுடைய சங்க தலைவராயிருந்தவரை தொடர்புக்கொண்டு எனக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு தயவுசெய்து அத்தகைய விபரீதத்தில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்களுடைய ஆர்ப்பட்டம் எனக்கு துணைபோவதை விட மேலும் சங்கடத்தையே விளைவிக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

மேலும் என்னுடைய உதவி மேலாளர் என்னிடம், 'நீங்க எதுக்கு சார் எல்லாத்துக்கும் நீங்கதான் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டீங்க? இதுதான் காலங்காலமா நடந்துக்கிட்டிருக்கு, என்னால நினைச்சாக்கூட அத தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. ஏன்னா எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் நடக்குதுன்னு சொல்லியிருக்கலாமே... அவரா நினைச்சிருந்தா நம்ம ப்யூன கூப்ட்ட வார்ன் பண்ணிருக்கலாமே சார். அவரும் சேந்துக்கிட்டு அவர் வீட்டு வேலைய எல்லாம் இவர்கிட்ட வாங்குனதாலதான அவர் அந்த அளவுக்கு சுதந்திரமா நினைச்ச நேரத்துல போறதும் வர்றதுமா இருக்க முடிஞ்சது? அதனால நீங்க பேசாம இதுக்கெல்லாம் காரணம் எங்க அசிஸ்டெண்ட் மேனேஜர்னுதான்னு சொல்லிட்டு போயிருக்கலாம். எனக்கும் டைரக்டர் லெவல்ல இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு சார். ஒங்களுக்கு நடந்தா மாதிரி நிச்சயம் எனக்கு நடந்துருக்காது. பேருக்கு ஒரு என்க்வயரின்னு வச்சி க்ளோஸ் பண்ணியிருப்பாங்க.' என்றார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். அவர் அதற்கு முன்பு அந்த தொனியில் என்னிடம் பேசியதேயில்லை. இருப்பினும் அதை பெரிதுபடுத்துவதில் பயனில்லை என்று நினைத்து, 'சரி போகட்டும்.. எதெது நடக்குமோ அதது நடக்கும்கறதுல நம்பிக்கையுள்ளவன் நான்.' என்றேன்.

உண்மைதான் நான் என்னுடைய உதவி மேலாளர் மீது பழியைப் போட்டிருக்கலாம். ஆனால் அது என்னுடைய மனசாட்சிக்கு விரோதமான செயல் என்று நினைத்தேன். நான் ஏற்கனவே கூறியிருந்ததுபோல அதற்குப் பிறகு நான் அந்த கிளையில் மேலாளராக நீடித்திருக்க முடியாது. நான் என்ன சொன்னாலும் அதற்கு என்னுடைய உதவியாளர்கள் மத்தியில் மதிப்பிருக்காது. இவரை நம்பினால் நம்மை நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அவர்களை நம்முடைய விருப்பத்திற்கு வேலை வாங்குவது இயலாததாகிவிடும்.

அத்துடன் நான் விரோதித்திருந்த உயர் அதிகாரி வேறெந்த வழியிலாவது என்னை பழிவாங்கியிருப்பார் என்றும் அறிந்திருந்தேன். அவர் என்னை மட்டுமல்லாமல் தன்னை விரோதித்த அனைவரையுமே பழிவாங்குவதில் குறியாயிருந்தார் என்பதை அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தினத்தன்று தலைமை அலுவலக ஊழியர்கள் பத்தாயிரம்வாலா சரவெடிகளை அவர் வாகனத்தின் முன்பு கொளுத்தி மகிழ்ந்தனர் என்பதைக் கேள்விப்பட்டபோது தெரிந்துக்கொண்டேன்.

பதவியிலிருக்கும்போது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடாமல் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்வது என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இல்லாவிடில் பதவி பறிபோனதும் அதுவரை இருந்த மதிப்பும் மரியாதையும் சேர்ந்து போய்விடும் என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.

பத்தே மாதத்தில் மேலாளர் பதவியிலிருந்த இறக்கப்பட்டத்தில் மனவருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால் செய்த தவறை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டு அதற்குரிய தண்டனையை உடனே பெற்றுக்கொள்வது அதை மறைத்து அதனால் ஏற்படும் மன உளைச்சலில் அவதிப்படுவதை விட மேலானது. தண்டனையைப் பெற்றதுமே நம்மீது மனத்தாங்கல் கொண்டிருந்தவர்கள் கூட நம்மைப் பார்த்து அனுதாபப்படுவர் என்பதையும் அதன் பிறகு மீண்டும் வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது உணர்ந்தேன்.

*****

நான் பணிக்கு சேர்ந்த அதே வாரத்தில் புது வட்டார மேலாளரும் பணிக்கு சேர்ந்தார்.

என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் மாற்றலாகி வந்திருந்த அதே அலுவலகத்தில்தான் என்னுடைய முந்தைய சீஃப் மேலாளரும் (என்னுடைய இலாக்கா அதிகாரியாக இருந்தவர்) பணிபுரிந்திருந்தார். ஆகவே என்னைப் பற்றி மிக நன்றாகவே (எதிர்மறை!) கூறியிருப்பார் போலிருக்கிறது. வந்து பொறுப்பேற்ற மறுநாளே என்னுடைய அப்போதைய இலாக்கா அதிகாரியிடம் என்னைக் குறித்து விசாரித்ததாக அவரே என்னிடம் வந்து கூறினார். 'என்ன டிபிஆர் ஒங்களப்பத்தி அவ்வளவா நல்ல ஒப்பீனியன் இல்ல போலருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு ஒங்களபத்தி அவர் கேள்விப்பட்டது சரியில்லைன்னு சொல்லியிருக்கேன், டோண்ட் ஒர்றி.' என்றார்.

இது எல்லா நிறுவனங்களிலும் நடக்கக் கூடியதுதான். நம்மால் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்திப்படுத்த முடிவதில்லை. நாம் எப்படி நம்முடைய கருத்துக்களை எல்லா நேரத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது சரியாகாதோ அதுபோலவே மற்றவர்களுடைய கருத்தை நாமும் எல்லா நேரங்களிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என்பதும் தவறாகாது.

நம்மில் சிலர் மற்றவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக முடியாத சமயத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது அதை மிக நாசூக்காக வெளிப்படுத்திவிடுகிறோம்.

நான் இரண்டிலுமிருந்து மாறுபட்டவன். என்னுடைய மனதில் தோன்றும் ஒவ்வாமையை உடனே முகத்தில் மட்டுமல்லாமல் வார்த்தையிலும் காட்டிவிடுவது வழக்கம். Highly emotional என்பார்களே அந்த ரகம். அத்துடன் Highly expressive முகமும்! நண்பர்களையும் மிக எளிதில் விரோதிகளாக்கிவிட இது நல்ல காம்பினேஷன் என்பார் என்னுடைய முன்னாள் வங்கி முதல்வர்களுள் ஒருவர்.

காலப்போக்கில் அது சற்று குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும் இன்றும் என்னுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்ள சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. என்ன செய்வது.. இறைவனின் படைப்பு அப்படி அமைந்துப்போனது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

அவர் முந்தைய வட்டார மேலாளரைவிடவும் வயதில் குறைந்தவர். நன்கு படித்திருந்ததுடன் விஷய ஞானமும் அதிகம். ஆனால் அத்துடன் அல்லது அதனால் அவருக்கிருந்த ஈகோதான் என்னுடன் மட்டுமல்லாது அவருக்கு கீழ் பணியாற்றிய அனைவருடனான தனிமனித உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அத்துடன் அவரிடம் காணப்பட்ட இன, மத மற்றும் மொழி வெறியும் அவருடன் சுமுகமான உறவு வைத்துக்கொள்ள தடையாயிருந்தன. நடுத்தரத்திற்கும் சற்று கீழேயிருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்ததால் அவரை விட பொருளாதாரத்தில் சற்று மேலானவர்களிடம் தேவையில்லாத ஒரு வெறுப்பு. இதை பல சமயங்களிலும் நேரடியாக அவர் காட்டியதை பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக ஒரு பெரிய தொழிலோ அல்லது வர்த்தகமோ துவங்க விரும்பி வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை தேவையில்லாமல் தன்னுடைய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளால் நிந்தித்ததை பார்த்திருக்கிறேன். 'என்ன பண்றது டிபிஆர்? நாம குடுக்கற கடன் ஒழுங்கா திரும்பி வந்தாப் போறும்னுதான நாமல்லாம் நினைப்போம்? அதுக்குத்தான வசதிபடைச்சவங்களுக்கு லோன் குடுக்க நாம ப்ரிஃபர் பண்ணுவோம்? ஆனா இவர் என்னடான்னா அந்த மாதிரி ஆளுங்கள கண்டால எரிஞ்சி விழறார்.. எங்க போய் சொல்றது?' என்று என்னுடைய வட்டார கடன் வழங்கும் இலாக்கா தலைவர் அங்கலாய்க்காத நாளே இல்லை எனலாம்.

அதிலும் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய கடன் விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலனை செய்யவோ அல்லது மேலிடத்துக்கு பரிந்துரைக்கவோ கேட்க வந்துவிட்டால் போதும் மனிதர் சாமியாட்டம் ஆடிவிடுவார். 'என்னங்க என்னெ வளைச்சி போடலாங்கற நினைப்புல வந்தீங்களா?' என்பார். 'அதுக்கெல்லாம் மசியற ஆள் நான் இல்லை. லோன் அப்ளிகேஷன குடுத்துட்டு அத ஃபாலோ பண்ணி என்னெ வந்து பாக்கற வேலையையெல்லாம் இத்தோட விட்டுருங்க. ஒங்களுக்கு லோன் வாங்கற தகுதியிருந்தா போறும்... தன்னால லோன் கிடைச்சிரும்.. இல்லன்னா நீங்க எத்தன தடவ நடந்தாலும் கிடைக்காது.. போய்ட்டு வாங்க.'

இப்படியாக என்னுடன் கருத்தொற்றுமை ஏற்படாத அந்த வட்டார மேலாளர் கையில் சுமார் மூன்று வருடங்கள் நான் பட்ட பாடு சொல்லி மாளாது.


Thodarum

6 comments:

krishjapan said...

அந்த விஷயம் முடிஞ்சப்புறமா, தன்னை பலிகடாவாக்கியிருக்கலாம்னு அவர் சொன்னது,......

ம், உங்கள் வங்கிப்பணிய சுவாரசியமாக்கறதுக்கு, நான், நீன்னு, ஏகப்பட்ட பேர் இருந்திருக்காங்க போலிருக்கே...இந்த மகானுபாவன்கிட்ட எப்படியெல்லாம் இன்பப்பட்டீங்களோ...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்..

அந்த விஷயம் முடிஞ்சப்புறமா, தன்னை பலிகடாவாக்கியிருக்கலாம்னு அவர் சொன்னது,......//

இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.. உதட்டளவில் ஆறுதல் சொல்வது இவர்களுக்கு கைவந்த கலை..

Aani Pidunganum said...

//நம்மால் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்திப்படுத்த முடிவதில்லை.//

101% உண்ணமை
முடிந்தால் என்னுடைய பதிவுகள் பார்த்து சொல்லுங்கள்.

துளசி கோபால் said...

பலிக்கடா கிடைக்கறது பெருசுல்லை. அப்படிச் செஞ்சுட்டு, தினம் மனசு பிறாண்டுமே
அதை எப்படிப் பொறுத்துக்கறது?
நமக்கு எதிரி வெளியே இருந்து வரவேணாம். அது உடனுறையும் மனம்தான்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஆணி,

முடிந்தால் என்னுடைய பதிவுகள் பார்த்து சொல்லுங்கள். //

நிச்சயமாக...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

பலிக்கடா கிடைக்கறது பெருசுல்லை. அப்படிச் செஞ்சுட்டு, தினம் மனசு பிறாண்டுமே
அதை எப்படிப் பொறுத்துக்கறது?
நமக்கு எதிரி வெளியே இருந்து வரவேணாம். அது உடனுறையும் மனம்தான். //

ரொம்பவும் அழகா சொல்லிட்டீங்க துளசி.. நன்றி..