17 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 50

ஒரு வங்கி கிளையைப் பொறுத்தவரை அதனுடைய மேலாளர்தான் அங்கு நடைபெறும் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. அவருக்கு கீழ் எத்தனை அதிகாரிகள் பணியாற்றினாலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பாக விதிமீறல்களுக்கும் மேலாளர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

மேலாளர் விடுப்பில் இருக்கும் நேரத்திலோ அல்லது அவர் வெளி அலுவல்களுக்காக கிளையில் இல்லாதிருக்கும் நேரத்திலோ நடைபெறும் விதி மீறல்களுக்கு அவர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் அவ்வாறு அலுவலகத்தில் இல்லாமல் போனாலும் விடுப்பிலிருந்தோ வெளி அலுவலிலிருந்தோ கிளைக்கு திரும்பியதுமே அவர் இல்லாதிருந்த சமயத்தில் கிளையில் நடைபெற்ற முக்கியமான செயல்களை (Transactions) ஆய்வு செய்ய வேண்டுமென்பது வங்கியின் முக்கிய நியதிகளுள் ஒன்றாக இருந்தது. அத்தகைய ஆய்வின் முடிவில் வங்கியின் விதிகள் மீறப்பட்டதை காணும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் தேவைப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரைக்கவும் மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அத்தகைய விதிமீறல்களால் வங்கிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணரும் பட்சத்தில் அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டிய கடமையும் மேலாளருக்கு உண்டு. ஒரு கிளையின் மேலாளருக்குள்ள விஷயஞானமும் அனுபவமும் அவருக்கு கீழ் பணியாற்றும் உதவி மற்றும் துணை அதிகாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களுடைய அறியாமையாலும் அனுபவமின்மையாலும் பல விதிமீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலேயே அவர்களுடைய செயல்களை கிளை மேலாளர் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற நியதியை நிர்ணயித்திருந்தது.

ஆனால் பெரிய மற்றும் மிகப்பெரிய கிளை (large and extra large branches) மேலாளர்களுக்கு இந்நியதியிலிருந்து ஓரளவு விதிவிலக்கு இருந்தது. என்னுடைய கிளையும் இத்தகைய கிளைகளில் ஒன்றாயிருந்தது என்றாலும் என்னுடைய கிளையில் நடந்திருந்த விதிமீறல்களை என்னுடைய உதவி அதிகாரியின் மீது சுமத்த நான் விரும்பவில்லை.

அதற்கு என்னுடைய நல்லெண்ணம் மட்டுமே காரணமில்லை. என்னுடைய சிப்பந்தியின் நடவடிக்கை எனக்கு பல நாட்களாகவே தெரிந்திருந்தும் அதை சரிசெய்ய என்னால் முடியாமல் போனதும் அதன் விளைவாக விதிமீறல்கள் தொடர்ந்துக்கொண்டிருந்ததும் ஒரு காரணம். ஆகவே சம்பவ தினத்தன்று நடந்த விதிமீறல்கள் நான் கிளையில் இல்லாத நேரத்தில் நடந்திருந்தன என்பதைக் காரணம் காட்டி தட்டிக்கழிப்பதில் பயனில்லை என்பதையும் அதுவே பிறகு விசாரனையில் தெரியவரும் பட்சத்தில் எனக்கெதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்பதையும் நான் உணர்ந்திருந்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஆகவே விளக்கம் கோரி வந்திருந்த கடிதத்தில் பட்டியிலடப்பட்ட எல்லா விதிமீறல்களுக்கும் பொறுப்பேற்பதாகவும் இனி அத்தகைய விதிமீறல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்வேன் என்றும் வாக்குறுதியளித்து என்னுடைய பதிலை அனுப்பினேன்.

என்னுடைய பதில் என்னுடைய வட்டார மேலாளருக்கு கிடைத்தவுடனே எனக்கு தொலைபேசி வந்தது. 'என்ன டிபிஆர். இப்படி எழுதிட்டீங்க? அதுவும் இந்த சமயத்துல?' என்றார்.

அவர் இந்த சமயத்துல என்றதற்கு காரணம் இருந்தது. எனக்கு மிகவும் நெருக்கமாயிருந்த வங்கி முதல்வரின் பதவிக்காலம் முடிந்து அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஒரு வார காலமே இருந்தது.

'சேர்மன் ரிட்டையர்டாயிட்டா புது சேர்மன் வர்ற வரைக்கும் சார்ஜ்ல இருக்கப் போறவர் யார்னு தெரியுமில்லே?' என்றார் அடுத்தபடியாக.

ஆம். எனக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட காரணமாக இருந்த அதிகாரியேதான் அவர். 'தெரியும் சார். ஆனா...'

'ஆனா என்ன? பேசாம நம்ம --------------- சொன்னாமாதிரி நீங்க அந்த ப்யூன் போன நேரத்துல ஆஃபீஸ்ல இல்லேன்னு சொல்லிர வேண்டியதுதான? அதுக்கப்புறம் அவர நாம எப்படியாவது சேவ் பண்ணியிருக்கலாமே?'

'சாரி சார். அப்படி நான் செஞ்சேன்னா அப்புறம் நா என்ன சொன்னாலும் என் அசிஸ்டெண்ட்ஸ் செய்யமாட்டாங்க. அதுக்கப்புறமும் நா இங்க மேனேஜரா கண்டினியூ பண்றதுல அர்த்தமேயிருக்காது.' என்றேன்.

அவர் கேலியுடன், 'இப்பவும் அதான் நடக்கப் போவுது..' என்றார். பிறகு தொடர்ந்து, 'நீங்க ஒன்னு பண்ணுங்க.' என்றார் அவசரமாக.

'சொல்லுங்க சார்.' என்றேன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஊகித்தவாறு.

'நீங்க சேர்மன அவரோட பர்சனல் லைன்ல கூப்ட்டு சார் நா இந்த மாதிரி ரிப்ளை குடுத்திருக்கேன். நீங்க போறதுக்குள்ள ஒரு டிசிஷன் எடுத்துட்டு போங்க சார்னு கேளுங்க. அவர் நினைச்சா ஒங்க ஆக்ஷன கண்டோன் (condone) பண்ணிட்டு போயிரலாமே..'

நான் இதை எதிர்பார்த்திருந்ததால், 'அது நல்லாருக்காது சார். அப்படியே அவர் செஞ்சிட்டு போனாலும் இவர் மறுபடியும் அத ரீஓப்பன் பண்ண முடியாதா என்ன? நீங்க சொன்னா மாதிரி என்னெ இங்க மாத்தணும்னு அவர் நினைச்சா கண்டிப்பா செய்வார் சார்... I am prepared for that.' என்றேன்.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளரே அப்போதைய வங்கி முதல்வரை தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி இத்தகைய விதிமீறல்கள் சென்னையிலிருந்த பல பெரிய கிளைகளிலும் நடந்துக்கொண்டுதான் இருந்தன என்றும் சிப்பந்தி விபத்தில் சிக்கி மரணமடைந்தது ஒரு தற்செயலாக நடந்து துரதிர்ஷ்ட சம்பவம் என்றும் ஆகவே என்னுடைய விளக்கத்தை பெரிதுபடுத்தாமல் என்னை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டார் என்றும் அதற்கு வங்கி முதல்வர் தன்னுடைய இயலாமையை தெரிவித்துவிட்டார் என்றும் அவர் (முதல்வர்) வாயிலாகவே பிறகு தெரிந்துக்கொண்டேன்.

மேலும் அவர் பதவியிலிருந்த அந்த ஒரு வார காலத்தில் என்னுடைய விளக்க அறிக்கையை அவருடைய பார்வைக்கே கொண்டுவராமல் என் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த உயர் அதிகாரி (சென்னை கிளை மேலாளரின் சகோதரர்) தடுத்துவிட்டார் என்பதும் பிறகு தெரிந்தது.

வங்கி முதல்வர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதல் வாரத்திலேயே என்னுடைய பதவி பறிபோனது. இது என்னுடைய அலுவலக வாழ்க்கையில் இரண்டாவது சருக்கல்.

அத்துடன் எனக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரிடம் பேசிய என்னுடைய வட்டார மேலாளரும் மாற்றப்பட்டார்.

என்னுடைய நல்ல நேரம் கிளையிலிருந்து மாற்றப்பட்டாலும் சென்னையை விட்டு மாற்றாமல் மீண்டும் சென்னை வட்டார அலுவலகத்திற்கே மாற்றம் ஏற்பட்டது..

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்பதுபோல் மீண்டும் வட்டார அலுவலக மேசை அதிகாரியாக என்னுடைய அலுவலக வாழ்க்கை தொடர்ந்தது...

தொடரும்..

6 comments:

krishjapan said...

பாவம் சார் நீங்க...பழிய அடுத்தவங்க மேல போடறதும் பிரச்சினை (ஒத்துழையாமை), தானே ஏத்துகிட்டதுக்கு மேலாளர் பதவி பறிப்பு...

சரி, இந்த இக்கட்டிலிருந்து என்ன செஞ்சிருந்தா தப்பித்திருக்கலாம்னு இப்ப நினைக்கிறீங்க?

வீட்டம்மா நினச்சிருப்பாங்க....நல்ல வேளப்பா, இந்த முறை பொட்டி கட்ட வேண்டியதில்லன்னு...

துளசி கோபால் said...

//போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட
என்பதுபோல் மீண்டும் வட்டார அலுவலக மேசை
அதிகாரியாக என்னுடைய அலுவலக வாழ்க்கை தொடர்ந்தது...//

அப்ப என்ன மாதிரி உணர்ந்தீங்க? உண்மையைச் சொன்னோம் என்ற
திருப்தியாவது இருந்துருக்குமே.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிரிஷ்,

சரி, இந்த இக்கட்டிலிருந்து என்ன செஞ்சிருந்தா தப்பித்திருக்கலாம்னு இப்ப நினைக்கிறீங்க? //

தவறு செய்துவிட்டு தப்பிக்க முயற்சிப்பது சரியல்ல என்பதே என்னுடைய எண்ணம். இப்போதும் சரி. அப்போதும் சரி. அதை ஏற்றுக்கொண்டு தண்டனை பெற்றுவிட்டால் அதனால் ஏற்படும் வருத்தம் சில காலங்களில் சரியாகிவிடும். ஆனால் அதை மறைத்து அதனால் ஏற்படும் மன உளைச்சல் மறையவே மறையாது.

வீட்டம்மா நினச்சிருப்பாங்க....நல்ல வேளப்பா, இந்த முறை பொட்டி கட்ட வேண்டியதில்லன்னு... //

உண்மையா சொல்லணும்னா நா அப்போது தண்டிக்கப்பட்டேங்கறதே அவங்களுக்கு இன்னைக்கும் தெரியாது. எதுக்கு அவங்களுக்கு வீணா மனவருத்தம்னு சொல்லாம நானாத்தான் கேட்டு ஜோனல் ஆஃபீசுக்கு போறேன்னு சொல்லி மறைச்சிட்டேன்.. அப்போ பிள்ளைங்களும் பள்ளிப் பருவத்திலிருந்ததால் அவர்களும் அதை உணரவில்லை.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

அப்ப என்ன மாதிரி உணர்ந்தீங்க? உண்மையைச் சொன்னோம் என்ற
திருப்தியாவது இருந்துருக்குமே. //

உண்மைதான். ஆனால் மனவருத்தம் இல்லாமலிருந்தது என்று சொன்னால் நான் பொய் சொல்வதாகிவிடும். வருத்தம் நிச்சயம் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது மறைந்துபோனது.

logasundar said...

தவறு செய்துவிட்டு தப்பிக்க முயற்சிப்பது சரியல்ல என்பதே என்னுடைய எண்ணம். இப்போதும் சரி. அப்போதும் சரி. அதை ஏற்றுக்கொண்டு தண்டனை பெற்றுவிட்டால் அதனால் ஏற்படும் வருத்தம் சில காலங்களில் சரியாகிவிடும். ஆனால் அதை மறைத்து அதனால் ஏற்படும் மன உளைச்சல் மறையவே மறையாது.//

Excellent statement, everybody needs to realize this.

Sundar

Aani Pidunganum said...

சார்வால் ,
உங்க பழைய என்னுலகம் பதிவுகள் படிச்சுட்டு, இப்பொ "என் கதையுலகம்" படிக்க போறேன்.