11 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 48

என்னுடைய சிப்பந்தியின் மரணச் செய்தி எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவர் மரணமடைந்த விதம் பல சிக்கல்களை ஏற்படுத்தியது.

ஒன்று, அவர் மரணமடைந்த நேரம். காவல்துறையினரின் முதல் தகவலறிக்கையின்படி மாலை சுமார் ஏழு மணியளவில் ஆவடி ரயில்நிலையத்தைக் கடந்த ரயிலில் அடிபட்டிருந்தார். சிப்பந்திகள் சாதாரணமாக 5.15 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். என்னுடைய கிளையிலிருந்து ஆவடி சுமார் இருபத்தைந்து கி.மீ. தூரத்திலிருந்தது என்பது எல்லோருமே அறிந்த விஷயம். அப்போதெல்லாம் ஆவடிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிக்கு ஒருமுறை மட்டுமே மின் ரயில் இருந்தது. இதன் அடிப்படையில் அவர் நிச்சயம் அலுவலக நேரம் முடிந்தபிறகு சென்றிருக்க முடியாது என்பது நிரூபணமானது.

இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம். ஆனால் இறந்தவருடைய குடும்பம் இழப்பீடு கோரும் சமயத்தில் இது மிகவும் முக்கியமானதாகிறது. அலுவலக பணி நேரத்திலோ அல்லது அவர் அலுவலக விஷயமாகவோ வெளியில் சென்ற நேரத்தில் விபத்தில் சிக்கி இறந்திருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதுண்டு. ஒருவர் குறிப்பிட்ட பணிக்காக அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற நேரமே இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர் குறிப்பிட்ட பணியை முடித்து அலுவலகம் திரும்ப எத்தனை மணி நேரமானாலும் அவர் அலுவலக பணிநேரத்தில் இருப்பதாகவே கணக்கில் கொள்ளப்படும். ஆகவே என்னுடைய சிப்பந்தி அலுவலக நேரத்தில்தான் ஆவடிக்கு சென்றிருக்கிறார் என்பது குடும்பத்தாரின் வாதமாக இருக்கும் பட்சத்தில் இழப்பீடு தொகையை மறுக்க முடியாமல் போய்விடும்.

இதில் வேறொரு சிக்கல். சாதாரணமாக அலுவலக பணிக்காக அலுவலக நேரத்தில் வெளியில் செல்லும் பணியாளர் அதற்கென வைத்திருக்கும் தனி புத்தகத்தில் புறப்படும் நேரம், செல்லவிருக்கும் இடம் ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதுபோன்றே திரும்பி வந்ததும் வந்து சேர்ந்த நேரத்தையும் குறிக்க வேண்டும். இதை செயல்படுத்துவது உதவி மேலாளரின் பணி. ஆனால் இது வெறும் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவது வழக்கம். 'இதல்லாம் ப்ராக்ட்டிகலாருக்காது சார்.' என்பார்கள். அதை பல மேலாளர்களும் கண்ணடைத்து ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பிரச்சினை என்று வந்துவிட்டால் கை கழுவி விடுவார்கள். அதன் பிறகு உதவி மேலாளர்தான் பொறுப்பு.

என்னுடைய கிளையில் நான் குறிப்பிட்ட சிப்பந்தியைத் தவிர மற்ற எல்லோருமே இந்நியதியை ஒழுங்காகக் கடைபிடித்து வந்திருந்தனர். சாதாரணமாக அவரை அலுவலக பதிவேட்டில் (attendance register) தினமும் கையொப்பமிட வைப்பதே பெரிய வேலையாயிருக்கும். 'சார் டைம் கிடைக்கறப்பத்தான் சைன் பண்ண முடியும்.' என்பார் கேட்டால். ஆனால் அன்று என்ன நினைத்தாரோ வெளியில் சென்ற நேரத்தைக் குறிப்பிடாமல் சாதாரணமாக அலுவலகத்திலிருந்து புறப்படும் நேரத்தை (5.15) எழுதி இனிஷியல் செய்துவிட்டு சென்றிருந்தார்! இது வேறொரு சிக்கல். உண்மைக்கு புறம்பானதாயிற்றே.

இது ஒருபுறமிருக்க அவர் அலுவலக பயனுக்காக வாங்கியிருந்த சூட்கேசை கொண்டு சென்றிருந்தார். அதற்கு முன்பு அதை அவர் மட்டுமல்ல பலரும் பல சமயங்களில் பல தனிப்பட்ட காரணங்களுக்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் சம்பவம் நடந்த அன்றைக்கு அவர் கொண்டு சென்றது முக்கியமான விஷயமாக ஆகிப்போனது.

போறாததற்கு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்ததால் அது உள்ளூர் தமிழ் பத்திரிகைகள் ஒன்றில் 'வங்கி ஊழியர் குடிபோதையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது அடிபட்டு மரணம்' என்றும் 'அவர் கையிலிருந்த சூட்கேசில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிப்பு' என்றும் வெளிவந்துவிட அலுவலக சூட்கேசில் மதுபாட்டிலா என்று வேறு பிரச்சினை.

அவர் அந்த நேரத்தில் ஆவடி செல்வதற்கு முதன்மைக் காரணகர்த்தாவாகவிருந்தவர் சென்னை கிளையொன்றில் அப்போது மேலாளராக இருந்தவர். என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் அப்போது உயர் பதவியிலிருந்த ஒரு அதிகாரியின் இளைய சகோதரர். ஆகவே தனக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லையென்பதுபோல் கழன்றுக்கொண்டது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட சிப்பந்தி பணிபுரிந்த கிளையின் மேலாளர் என்ற முறையில் இதற்கு நாந்தான் பொருப்பு என்றுவேரு வத்தி வைத்துவிட்டார். அத்துடன் நில்லாமல் சம்பந்தப்பட்ட சிப்பந்திக்கு குடும்பப் பிரச்சினை என்றும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் ஆகவே அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் தரத் தேவையில்லையென்றும் தன்னுடைய மூத்த சகோதரரிடம் கூற அவர் அதை அப்படியே என்னுடைய வங்கி முதல்வரிடம் தெரிவித்துவிட்டார்.

என்னுடைய சிப்பந்தி உறுப்பினராயிருந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கிளை மேலாளருடைய இந்த இரக்கமற்ற வாதத்தில் வெகுண்டு அவருடைய கிளை மற்றும் என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு முன்பாக மதிய உணவு இடைவேளையின்போது கோஷம் இட பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

1. சம்பந்தப்பட்ட மேலாளர் சிப்பந்தியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
2. சிப்பந்தியின் வருங்கால மாத வருமானத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும்.
3. சிப்பந்தியின் மூத்த மகனுக்கு சிப்பந்தி பதவி வழங்கவேண்டும்.

கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் சிப்பந்தியின் மனைவியைக் கொண்டே என்னுடைய வட்டார மேலாளரிடம் கொடுக்கப்பட்டது.

அவரும் வேறு வழியில்லாமல் அதை என்னுடைய தலைமையகத்துக்கு அனுப்பிவைத்தார்.

மகஜர் அங்கு சென்று கிடைத்ததுதான் தாமதம், என்னுடைய எச்.ஆர் இலாக்காவிலிருந்து ஒரு குழுவே வந்து ஆதி முதல் அந்தம் வரை ஆராயத்துவங்கி என்னுடைய கிளையில் வங்கியின் நியதிகள் மீறப்பட்டிருப்பதை பட்டியலிட்டு என்னவோ அது மட்டுமே அவருடைய மரணத்துக்கு காரணம் என்பதுபோல் ஒரு அறிக்கையும் தயாரித்து வங்கி தலைவருடைய நேரடி பார்வைக்கு அனுப்பிவைத்தது.

இதற்கு பின்னாலிருந்தது சம்பந்தப்பட்ட சென்னை கிளை மேலாளர்தான் என்பதை உணர்ந்த நான் என்னுடைய சிப்பந்தி சார்ந்திருந்த தொழிற்சங்க தலைவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து எனக்காக வங்கி முதல்வரிடம் பரிந்து பேசுமாறு கேட்டேன். வங்கியின் நியதிகளின்படி ஒரு கிளை மேலாளர் ஊழியர்களுடைய தொழிற்சங்க தலைவரிடம் நேரடியாக பேசலாகாது என்றாலும் வருவது வரட்டும் வாளாவிருந்தால் நமக்குத்தான் ஆபத்து என்று கருதியே அந்த இறுதி முயற்சியில் இறங்கினேன். மேலும் அந்த சங்கத்தின் தலைவரும் ஒருகாலத்தில் என்னுடன் குமாஸ்தாவாக சென்னை கிளையொன்றில் பணியாற்றியிருந்தார் என்பதால் அவருடன் unofficialஆக கோரிக்கை வைக்கவும் முடிந்தது.

அவரும் உடனே சென்னையிலிருந்த சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க அதுவே வேறொரு பிரச்சினையாக வெடித்தது. அவர் மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த அனைத்து ஊழியர்களுக்குமே என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதாலும் சம்பந்தப்பட்ட சென்னை கிளை மேலாளரின் மூத்த சகோதரரான உயர் அதிகாரியையும் பெரும்பாலான ஊழியர்களுக்கு பிடிக்காததாலும் சென்னைக் கிளை மேலாளருடன் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவெடுத்ததுடன் அவருக்கு தனிப்பட்ட தொல்லைகளும் கொடுப்பதில் இறங்கினர்.

இதற்கும் நாந்தான் காரணம் என்று அவர் தன் சகோதரிடம் போட்டுக் கொடுக்க ஏற்கனவே என்மீது வன்மத்துடன் இருந்த அவர் தன் பங்குக்கு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்த விதி மீறல்களுக்காக என் மீது விசாரனை வைக்க வேண்டும் என்று என்னுடைய வங்கி மேலாளரிடம் புகார் செய்திருக்கிறார்.

நல்லவேளையாக வங்கி முதல்வருக்கும் என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் மீதும் சென்னையிலிருந்த அவருடைய சகோதரர் மீதும் நல்ல எண்ணம் இருக்கவில்லை.

இருந்தும் அவருடைய பரிந்துரையை தட்ட முடியாமல் அடுத்த சில தினங்களில் என்னுடைய கிளையில் நடந்ததாக கூறப்பட்ட விதி மீறல்களுக்கு பதிலளிக்கும்படி எனக்கு கடிதம் வந்தது!


தொடரும்…

10 comments:

sivagnanamji(#16342789) said...

சாதனை என்றால் என்னால
வேதனை என்றால் அவரால-
இதுதான் இன்றைய உலகின் நியதி....

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

சாதனை என்றால் என்னால
வேதனை என்றால் அவரால-
இதுதான் இன்றைய உலகின் நியதி.... //

உண்மைதான்... இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல.. இது எத்தனை நூற்றாண்டுகளானாலும் மாறவே மாறாது..

G.Ragavan said...

சார், நல்லவங்கன்னு சிலர் இருப்பாங்க. இவங்க இருந்தா நல்லது நடக்குதோ இல்லையோ...கெட்டது நடக்கவே நடக்காது. அதே மாதிரி அவங்க போகும் போதும் பகைச்சுக்கும் போதும் கூட எந்தக் கெட்டதும் நடக்காது.

ஆனா சில பேரு இருக்காங்க. அவங்க இருந்தாலும் ஆயிரம் பிரச்சனை. போனாலும் ஆயிரம் பிரச்சனை. அந்த அளவுக்கு ராசி. இவரு ரெண்டாம் வகை போல இருக்கு.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

இவரு ரெண்டாம் வகை போல இருக்கு. //

இருக்கும். ஆனா அது பெரிய பிரச்சினையா வெடிக்க வேறு சிலரும் காரணமா இருந்ததுதான் வேதனை..

துளசி கோபால் said...

பிரச்சனை இப்படி வேற திசையில் போறமாதிரி போய்
திரும்ப வந்துருச்சு போல(-:

Aani Pidunganum said...

Saarval,

Adhu ennamoh teriyalai, Vaal(Sword) Poye Kathi vandhu, Thirupi Vaal(Sword)vandhu ippadi cyclicaaah irundhuruku unga careerla...

Thadaigal thaandi ippa irukara oru nalla positionku vandhurukamudiyuma...

God proposes more obstacle to everyone & make strong to comeup to good status[Its true in your case]

Seemachu said...

அன்பு டி.பி.ஆர்,
உங்களின் இந்தத் தொடரை விடாமல் படித்து வருகிறேன்.

நானும் இங்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் பணி புரிவதால் .. உங்கள் இந்திய வங்கி அனுபவங்கள் ஒரு தனிப்பட்ட சுவையாகவே இருக்கின்றன.

என் மாமனார் கனரா வங்கியிலிருந்து சட்ட ஆய்வு மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் உங்கள் தொடரைத் தந்து ஆரம்பத்திலிருந்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

பிரச்சனை இப்படி வேற திசையில் போறமாதிரி போய்
திரும்ப வந்துருச்சு போல//

ஆமாங்க. பிரச்சினை நம்மாளால மட்டுந்தான் வரணும்னு இல்லைங்கறது இது ஒரு உதாரணம்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சீமாச்சு,

உங்களின் இந்தத் தொடரை விடாமல் படித்து வருகிறேன்.

நானும் இங்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் பணி புரிவதால் .. உங்கள் இந்திய வங்கி அனுபவங்கள் ஒரு தனிப்பட்ட சுவையாகவே இருக்கின்றன.//

மிக்க நன்றி

என் மாமனார் கனரா வங்கியிலிருந்து சட்ட ஆய்வு மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் உங்கள் தொடரைத் தந்து ஆரம்பத்திலிருந்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.//

வங்கியில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு என்னுடைய தொடர் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் தந்தை இதைவிடவும் சுவாரஸ்யமான சூழல்களை சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஆணி,

Thadaigal thaandi ippa irukara oru nalla positionku vandhurukamudiyuma...//

அதற்கு உறுதுணையாக இருந்த இறைவனுக்கு முதல் நன்றி.

God proposes more obstacle to everyone & make strong to comeup to good status....

உண்மைதான் தடைகளை எதிர்கொண்டு வெற்றிபெறும்போது கிடைக்கும் மனநிறைவு அதை சந்திக்கும்போது ஏற்படும் மன அழுத்தத்தை விட அதிகம் என்பது உண்மை. ஒவ்வொரு தடையும் நம்முடைய அனுபவத்தையும் கூட்டுகின்றன என்பதும் உண்மை..