10 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 47

வங்கிகள் அரையாண்டு மற்றும் ஆண்டு கணக்குகளை முடிப்பதெற்கன செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களின் இறுதி வேலை தினங்களில் விடுமுறை அறிவிப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

விடுமுறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. வங்கியில் பணிபுரிபவர்களுக்கு அப்போதெல்லாம் அந்த நாட்களுக்கு முன்பும் பின்பும் சுமார் இரு மாதங்களுக்கு வேலை நெட்டி முறித்துவிடும்.

வங்கி செயல்பாடுகள் முழுவதுமே கணினி மயமாக்கப்பட்டுள்ள இந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அந்த காலத்தில் பணிபுரிந்தவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள்தான்.

எனக்கு பெப்ரவரி மாதம் பதினான்காம் நாள் திருமணம் நடந்தது. அந்த காலத்தில் ஆண்டு இறுதி கணக்கு முடிப்பது டிசம்பர் மாதம் 31ம் நாள். ஆனால் அதன் பிறகு கிளையின் ஆடிட் நடந்து முடியும்வரை கொசுறு வேலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். கணினி மயமாக்கப்படாத அந்த காலத்தில் கிளை தணிக்கையே ஒருமாத காலம் நடக்கும்.

இப்போதுள்ளது போன்று கணக்குகளில் வட்டி வரவு மற்றும் பற்று வைக்கப்படுவதை கணக்கிடவும் பிறகு அதை சரிபார்க்கவும் மென்பொருள் ஏதும் இருக்கவில்லை. நாம் கணக்கிடுவதற்கு எத்தனை நேரம் செலவிடுகிறோமோ அதுபோன்றே ஏன், சில சமயங்களில் அதற்கும் மேலாகவே நேரம் அதை தணிக்கை செய்யவும் தேவைப்படும்.

டிசம்பர் மாதம் முடிக்கப்பட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு நாங்கள் செய்தவை யாவும் சரி என்று முத்திரையிடப்படும்போது மார்ச் மாதம் ஆகிவிடும். பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் தணிக்கையாளர்கள் கிளைக்கு வந்துவிட்டால் என்னைப் போன்ற கடைநிலை அதிகாரிகள் வீடு திரும்பவே நள்ளிரவாகிவிடும்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எத்தனை உண்மையோ அதுபோலத்தான் முகூர்த்த நாட்களும்! தூத்துக்குடி போன்ற ஊர்களிலுள்ள கிறிஸ்துவ குடும்பங்களும் இந்த தை மாத திருமணங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். தூத்துக்குடி போன்ற சிறு நகரங்களில் மட்டுமல்லாமல் சென்னையிலும் இப்போதெல்லாம் இது பரவலாகி வருகிறது என்பது வேறுவிஷயம். என்னுடைய திருமண தேதியை நான் கிளையில் தெரிவித்ததுமே என்னுடைய மேலாளர், 'என்ன டிபிஆர் நீங்க இந்த சமயத்துல மேரேஜ் வச்சிக்கிட்டா எப்படி?' என்று எரிந்து விழுந்தார்.

இந்த காலத்து இளைஞர்களைப் போன்று திருமண நாள் குறிப்பது எங்கள் கையில் இருக்கவில்லையே. 'டேய் அதெல்லாம் பெரியவங்க விஷயம். நீ எத்தன நாள் லீவு போடமுடியுமோ போட்டுக்கோ. டேட்டெல்லாம் மாத்த முடியாது. நீ இல்லாட்டா பிராஞ்ச் நடக்காதா?'' என்று கேட்கும் பெரியவர்களை எதிர்த்து பேச தைரியமும் இருக்கவில்லை.

எப்படியோ கெஞ்சி கூத்தாடி ஒருவார விடுப்பு கிடைத்தது. திருமணம் முடிந்த கையோடு சென்னை திரும்பிய அடுத்த திங்களே பணிக்கு சேர வேண்டிய கட்டாயம் என்பதுடன் அடுத்த ஒரு மாத காலம் நள்ளிரவுக்கு முன்பு வீடு திரும்பக்கூட முடியவிலை. என்னுடைய மனைவியின் நிலைதான் பரிதாபம். இருப்பினும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இதான் நம்ப தலைவிதி போலருக்கு என்று அதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய குமாஸ்தா மற்றும் கணக்காளர் (accountant) அனுபவத்தில் இந்த சமயங்களிலும் சரியாக ஐந்து மணிக்கு கிளையிலிருந்து வெளியேறும் பல கிளை மேலாளர்களை கண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய திருமண நடந்தபோது நான் பணியாற்றிய கிளை மேலாளர் சற்று கோப சுபாவமுள்ளவர் என்றாலும் அவரும் என்னுடனே அமர்ந்திருப்பார். அவருக்கு மணிக்கு ஒரு சிகரெட் வேண்டும், அவ்வளவுதான். அவர் குடியிருந்த பகுதியான அண்ணாநகருக்கு செல்லும் வழியில்தான் நானும் குடியிருந்ததால் அவருடைய நாற்சக்கர வாகனத்திலேயே என்னையும் கூட்டி செல்வார். அது ஒருவகையில் வசதியென்றாலும் கடைசி பஸ் போயிரும் சார் என்ற சாக்கில் பத்து மணிக்கு வீடு திரும்பக் கூடிய வாய்ப்பும் பறிபோனது!

ஆனால் அப்போதெல்லாம் இந்த சமயங்களில் ஒரு த்ரில் இருந்தது. இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்த கிளையில் ஒவ்வொன்றிலும் வட்டி கணக்கிட்டு வரவு மற்றும் பற்று வைத்து முடித்து எல்லா கணக்கிலும் இருக்கும் தொகையை (balance) கூட்டி ஜெனரல் லெட்ஜருடன் டாலி செய்வதே ஒரு யுத்தம் மாதிரிதான். அதில் வெற்றிபெறுகையில் அப்போது கிளையிலுள்ள பணியாளர்கள் மத்தியில் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது.

ஆண்டு இறுதி வேலைகள் சுமார் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கிவிடும். அன்றிலிருந்து அடுத்த ஒரு மாத காலத்திற்கு ஆண்டு இறுதி பணிகளை முடிப்பதற்கு கிளையிலிருந்த குமாஸ்தாக்கள் அனைவருக்கும் ஓவர் டைம் கொடுப்பதுண்டு. ஒவ்வொருவருக்கும் எத்தனை மணிகள் (hours) ஓவர்டைம் வழங்குவதென தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படும். அதற்காகவே அலுவலக நேரத்தில் பொழுதை கழித்துவிட்டு மாலை ஐந்து மணியிலிருந்து நள்ளிரவு வரை ஓவர்டைம் பார்ப்பது அவர்களுக்கு வாடிக்கை. ஆனால் எவ்வித கூடுதல் ஊதியமும் இல்லாமல் அவர்களை மேற்பார்வையிடுவதற்காகவே எங்களைப் போன்ற அதிகாரிகளும் அமர்ந்திருக்க வேண்டும்!

நான் பணியாற்றியது போன்ற பெரிய கிளைகளில் ஓவர்டைமுடன் மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவும் கிளையிலேயே வழங்கப்படுவதுண்டு. அதற்கு மேலாளருக்கு தனியாக ஒரு தொகையை மேலதிகாரிகள் வழங்குவார்கள். அத்துடன் வேலை முடிகிறதோ இல்லையோ ஆண்டிறுதி தினத்தன்று தீர்த்தத்துடன் கூடிய விருந்தும் கட்டாயம் இருக்க வேண்டும். கிளைகளில் வைத்து தீர்த்தம் வழங்கப்படலாகாது என்பதால் பெரும்பாலும் இது கிளை மேலாளர்கள் வீடுகளில் நடைபெறும். அந்த சமயத்தில் வீட்டு பெண்களை சினிமாவுக்கு அல்லது வெளியிலோ அனுப்பி வைத்துவிடுவார்கள் மேலாளர்கள்!

சரி எதற்கு இதை விலாவாரியாக சொல்ல வருகிறேன் என்று பார்க்கிறீர்களா?

என்னுடைய சிப்பந்தியின் மிலிட்டரி கேண்டீன் தொடர்பு இந்த சமயங்களில்தான் கிளை மேலாளர்களுக்கு தேவைப்படும். ஒவ்வொரு கிளையிலும் சுமார் பத்து பதினைந்து பணியாளர்கள் இருந்ததால் சந்தையில் வாங்கினால் மேலாளர் திவாலாவாகிவிடுவாரே..

என்னுடைய சிப்பந்திதான் ஆபத்பாந்தனாய் இருந்து சகல மேலாளர்களுக்கும் 'சரக்கு' சப்ளை செய்வார்.

அதற்கு முன்பு நான் மேலாளராக இருந்த எந்த கிளையிலும் இந்த தீர்த்த பார்ட்டிகளை நான் கொடுத்திருக்கவில்லை. நான் 'அந்த' மாநிலத்தைச் சாராதவன் என்பதாலோ என்னவோ என்னுடைய பணியாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. வருட இறுதிநாளன்று நல்ல சைவ பகலுணவு சில அசைவ அயிட்டங்களுடன் கிளையிலேயே வழங்கப்படும். இரவு விருந்து என்ற சங்கதியே இருக்காது.

ஆனால் சென்னையிலிருந்த அனைத்து கிளைகளிலும் இரவு விருந்து தீர்த்தத்துடன் நடைபெறுவது வழக்கத்திலிருந்ததால் நானும் இறங்கிவந்து அதற்கு சம்மதித்தேன். ஒரேயொரு வித்தியாசம் விருந்துக்கு தேவையான பணத்தை கொடுப்பதுடன் என் வேலை முடிந்தது. அவர்களுக்கு அதுதானே வேண்டும்? 'நீங்க சாப்பட மாட்டீங்கன்னு தெரியும் சார். நாங்க தப்பா நினைக்க மாட்டோம்.' என்பார்கள்.

அப்படித்தான் அந்த வருடமும் ஆண்டு இறுதி வேலைகள் மும்முரமாக துவங்கின.

ஆண்டின் இறுதி நாளைக்கு முந்தைய நாள் எல்லா கிளை மேலாளர்களுடைய தேவை பட்டியலுடன் ஆவடி கேண்டீனிலிருந்து சரக்கு கொள்முதல் செய்துக்கொள்ள சென்றிருந்தார். அவர் எப்போதுமே என்னுடைய வட்டார மேலாளருடைய பெயரை உபயோகித்து சொல்வது வழக்கமாதலால் அன்றும் அலுவலக நேரத்திற்கு சற்று முன்பாக நான் வெளியில் சென்றிருந்த நேரத்தில் கையிலொரு சூட்கேசுடன் சென்றபோது யாரும் அவரை ஏன் என்று கேட்க துணியவில்லை. அவர் கொண்டு சென்ற சூட்கேஸ் அலுவலகத்தைச் சான்றது (மத்திய கிளையிலிருந்து தேவைப்படும்போது ரொக்கம் (cash) கொண்டுவருவதற்கு பயன்படுத்துவது) என்றாலும் அதை எதற்காக கொண்டுசெல்கிறார் என்பதைக் கேட்கவும் கிளை அதிகாரிகளுக்கு துணிவில்லை.

அடுத்த நாள் காலையில் நான் கிளைக்குள் நுழைந்ததும் அவருடைய மனைவியும் மூத்த மகளும் கிலை வாசலில் பதற்றத்துடன் நிற்பதைப் பார்த்தேன். 'எதுக்கு வந்திருக்காங்க..?' என்று நான் என்னுடைய உதவி மேலாளரிடம் கேட்க அவர் தயக்கத்துடன், 'சார் அவர் நேத்து ராத்திரி முழுசும் வீட்டுக்க வரலையாம்.' என்றார். நான், 'ஏன் இங்கருந்து எப்பவும் போலத்தான போனாரு?' என்றேன். அப்போதுதான் தெரிந்தது அவர் சரக்கு கொள்முதல் செய்ய சென்றிருந்தார் என்பதே. 'இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா சார்?' என்றேன். 'தெரியாது போலருக்கு சார்' என்ற அவருடைய பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

பிறகு என்னுடைய உதவிமேலாளரை ஒரு சிப்பந்தியின் துணையுடன் ஆவடி கேண்டீன் சென்று பார்த்துவர அனுப்ப ஆவடி கேண்டீனில் அவர் முந்தைய தினம் மாலையே ஏழு மணியளவில் திரும்பிச் சென்றுவிட்டாரே என்ற தகவலுடன் மனம் கலங்கிப்போய் ரயில் நிலையத்துக்கு திரும்பி அங்கிருந்த ஸ்டேஷன் அதிகாரிகளிடம் விசாரிக்கலாமே என்ற சென்ற இடத்தில் என்னுடைய சிப்பந்தி கொண்டு சென்றிருந்த சூட்கேஸ் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் கந்தலாகி கிடந்திருக்கிறது. 'நேத்து ராத்திரி எட்டு மணி போல ஒருத்தர் குடிச்சிட்டு லைன க்ராஸ் பண்ணியிருக்கார் சார். கேரளா போற வண்டியில அடிபட்டு ஸ்பாட்லயே போய்ட்டார். அவர் கொண்டு வந்த சூட்கேஸ்தான் இது. உள்ள பூரா விஸ்க்கி, பிராந்தி பாட்டில்ங்க.' என்றிருக்கிறார்.

அதன்பிறகு விசாரித்துக்கொண்டு சென்னை பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் அனுப்பப் பட்டுள்ளதென்பதை அறிந்துக்கொண்டு எனக்கு அவர் தொலைபேசி மூலம் தெரிவிக்க நான் உடனே கிளம்பினுப் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்துக்கொண்டு ஓட அங்கே சவக்கிடங்கு வராந்தாவில் அனாதைப் பிணமாக அவர்........

அதன் பிறகு தொடர்ந்து சில மாதங்கள் நான் மட்டுமல்லாமல் சென்னக் கிளை மேலாளர்கள் அனைவரும் பட்ட தொல்லைகள்....

தொடரும்...

8 comments:

G.Ragavan said...

முருகா! இப்படி ஒரு முடிவா! எதிர்பாராதது. குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். எனக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் அது அளவிற்கு மீறிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஒரு பொழுதில்....அந்த குடி மயக்கத்திலேயே அந்தப் பழக்கத்தைத் தூக்கி எறிந்தேன். அந்த மனவலிமையைக் குடுத்த முருகனுக்கு எனது நன்றி. ஆண்டுகள் இரண்டுக்கு மேல் இருக்கும். இன்னமும் அந்த பாட்டில்கள் என்னுடைய வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலேயே உள்ளன. ஆனால் தொட்டதில்லை. தொடும் எண்ணமும் வருவதில்லை.

துளசி கோபால் said...

//எனக்கு பெப்ரவரி மாதம் பதினான்காம் நாள் திருமணம் நடந்தது.//

அடிச்சக்கை!!!! இப்ப என்னன்னா உலகமே கொண்டாடுது:-))))


அடப்பாவமே(-: இப்படியா முடிவு வந்தது?

Krishna said...

ஓ...நீங்கள் சொன்ன மாதிரி, இம்மாதிரி தீர்வு, தீர்வே அல்லதான்...ம். செத்தும் கொடுத்த சீதக்காதி போல, செத்தும் ஏகப்பட்ட தொல்லை கொடுத்திருப்பார் போலிருக்கே...

இங்க போன வருஷம் இம்மாதிரி, தண்ணி போட்டுட்டு, புல்லட் டிரெயின் ஸ்டேஷன்ல இருந்து டிராக்ல விழுந்த ஆள தூக்கிவிட மூன்று பேர் முயற்சி செய்ய, அவர்களையும் அந்த ஆளு இழுத்து, நால்வரும் அடிபட்டு இறந்து விட்டனர்...இத்தனைக்கும் இங்க ஸ்டேஷன்ல, அவசர கால பொத்தான அமுத்தினா, வர்ற புல்லட் ட்ரெயின் ப்ரேக் பிடிச்சி நிற்கும் வசதி இருக்கத்தான் செய்கிறது...

sivagnanamji(#16342789) said...

ஒருவாறு ஊகிக்கப் பட்டதுதான்
ஆனால் அதை வெளியிட தயக்கமாக இருந்தது......அதனால்தான் வேலை நீக்கமா என்பதுடன் நிறுத்திக் கொண்டேன்

பிப்.14 அப்பவே தெரியுமோ. உலகமே கொண்டாடும்னு....

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

இப்படி ஒரு முடிவா! எதிர்பாராதது. //

உண்மைதான். மரணம் என்பது எதிர்பாராமல் நடப்பதுதான் என்றாலும் நம்முடன் பணிபுரிபவர்கள் திடீரென்று மரணமடையும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.//

ஆனால் மடாக்குடியர்களும் எண்பது தொன்னூறு வயது வரையிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்.குடி குடியைத்தான் கெடுக்கும் போலிருக்கிறது:(

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

அடிச்சக்கை!!!! இப்ப என்னன்னா உலகமே கொண்டாடுது//

ஆமா.. அப்ப யாரு இதையெல்லாம் எதிர்பார்த்தா?


அடப்பாவமே(-: இப்படியா முடிவு வந்தது? //

ஆமாங்க.. அவர் எத்தனை பிரச்சினை பண்றவர்தான்னாலும் அவர் மரிச்ச விதம் எங்க எல்லாருக்குமே பெரியா ஷாக்காத்தான் இருந்துது.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கிருஷ்ணா,

ஓ...நீங்கள் சொன்ன மாதிரி, இம்மாதிரி தீர்வு, தீர்வே அல்லதான்...ம். செத்தும் கொடுத்த சீதக்காதி போல, செத்தும் ஏகப்பட்ட தொல்லை கொடுத்திருப்பார் போலிருக்கே...//

அவரால பிரச்சினைங்கறதவிட அதுக்கப்புறம் எங்க மேனேஜர்ங்கள்ல சிலர் பண்ணதுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணமாருந்தது.....

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஒருவாறு ஊகிக்கப் பட்டதுதான்
ஆனால் அதை வெளியிட தயக்கமாக இருந்தது......அதனால்தான் வேலை நீக்கமா என்பதுடன் நிறுத்திக் கொண்டேன்//

உண்மைதான்.. யாராலத்தான் அவர் இறந்துட்டாரான்னு கேக்க முடியும்?

பிப்.14 அப்பவே தெரியுமோ. உலகமே கொண்டாடும்னு....
//

யாருக்கு தெரியும்? அதுவுமில்லாம நம்ம பெரியவங்களுக்கு தெரிஞ்சிருந்தா காதலர் தினமா அப்ப அன்னைக்கி வேணாம்னு சொல்லியிருப்பாங்க..:)