02 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 44

என்னுடைய தலைமைக் குமாஸ்தாவினுடைய முழக்கத்தை கேட்டதும் உள்ளறையில் அமர்ந்திருந்த சிப்பந்தி வெளியேறி வாசலை நோக்கி ஒடிவருவதை கவனித்த நான் அவரை வழிமறிக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி நகர்ந்தேன். அதற்குள் ஒரு வாடிக்கையாளர், 'என்ன சார் இது அவர்தான் ஒங்க ப்ராஞ்சிலயே சீனியர் ஆஃபீசர். அவரப் போயி இப்படி அவமானத்தபடுத்தறீங்க?' என்ற என்னை நோக்கி கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு பதிலளிக்க முயல்வதற்கு முன் வங்கி மத்திய ஹாலுக்குள் நுழைந்த சிப்பந்தி கோபத்துடன் அவரை நெருங்கி, 'யார் சார் ஆஃபீசர் இந்தாளா? நீங்க வேற. அவர் வெறும் ஹெட் க்ளார்க்தான். நான் எட்டாங் க்ளாஸ் படிச்சிட்டு பியூனாருக்கேன். இவர் பத்தாங்க்ளாஸ் பெயில். இவரும் ஒரு காலத்துல ப்யூனா இருந்தவர்தான். எப்படியோ சோப்படிச்சி இந்த போஸ்ட்டுக்கு வந்துட்டார் அவ்வளவுதான்.' என்று பகிரங்கமாக கூற வாடிக்கையாளர் திடுக்கிட்டுப் போய், 'ஏன் சார் இவர் எங்கிட்ட அசிஸ்டெண்ட் மேனேஜர்னு சொன்னாரே?' என்றார் குழப்பத்துடன்.

அவருடைய தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் உட்பட அவர்களையுமறியாமல் கொல்லென்று சிரித்துவிட தேவையில்லாத சிக்கலை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற தலைமைக் குமாஸ்தா அவமானமடைந்து... நிலைமையை சமாளிக்க விருட்டென்று வெளியேற அடுத்த சில நிமிடங்களில் நிலமை சகஜ நிலைக்கு திரும்பியது.

அதற்குப் பிறகு திறந்துக் கிடந்த அவருடைய இழுப்பிலிருந்த சாவிக்கொத்துக்கு வேலையே இல்லாமல் போனது. அவரை எதிர்த்த சிப்பந்தியோ அவருடைய இழுப்பிலிருந்தவைகளை மேசையில் கவிழ்த்து அதிலிருந்த சுமார் ஐம்பது விசிட்டிங் கார்டுகளடங்கிய பெட்டியை எடுத்து என்னுடைய உதவி மேலாளரிடமும் மற்ற ஊழியர்களிடமும் காட்டி வேண்டுமென்றே உரத்த குரலில் (எனக்கு கேட்க வேண்டுமாம்!) 'பாத்தீங்களா சார், அசிஸ்டெண்ட் மேனேஜர்னு விசிட்டிங் கார்டெல்லாம் அடிச்சி வச்சிருக்கார். நா அப்ப சொன்னப்ப நம்பமாட்டேன்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.' என்றவாறு கிளையிலிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் வினியோகம் செய்ய பலரும் நமக்கேன் வம்பு என்று வாங்க மறுத்தனர்.

நான் அறையிலிருந்தவாறு என்னுடைய உதவி மேலாளரை இண்டர்காமில் அழைத்து, 'அவர வேலைய பாக்க சொல்லுங்க. இதுவரைக்கும் நடந்தது போறும்.' என்றேன். அவரும் உடனே சிப்பந்தியிடம் நான் சொன்னதைக் கூற அவர் என்னுடைய அறையை நோக்கி சாரி சார் என்றவாறு காசாளர் அறைக்குள் நுழைந்து அவருக்கு உதவி செய்வதில் முனைய வேடிக்கைப் பார்த்தவாறு நின்றிருந்த வாடிக்கையாளர்களும் அவரவர் பணியில் மும்முரமாயினர்.

கிளையை விட்டு வெளியேறிய என்னுடைய தலைமைக் குமாஸ்தா அதன் பிறகு வரவேயில்லை. நான் விடுப்பில் செல்கிறேன் என்ற அவருடைய தந்தி அடுத்த நாள் காலையில் கிடைத்தது. அவர் நேரே என்னுடைய தலைமையலுவலகத்திற்குச் சென்று மத்திய ஊழியர் தலைவரிடம் முறையிட்டிருப்பார் போலிருக்கிறது. அவர் அடுத்த நாளே என்னை தொலைப்பேசியில் அழைத்து, 'என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. நீங்களும் ஒருகாலத்துல யூனியன் ரெப்பா இருந்தவர்தானே?' என்று ஆதங்கப்பட்டார்.

அவரும் நானும் ஒரு காலத்தில் அதே சங்கத்தின் மத்திய குழுவில் அங்கத்தினர்களாக இருந்தவர்கள். அவர் பதவி உயர்வை துறந்து தொழிற்சங்கத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். எவ்வித பந்தாவுமில்லாமல் இருந்தவர். அவருடைய அடக்கமும் நிதானமுமே எங்களுடைய வங்கியில் பலகாலமாக தொழிற்சங்க பிரச்சினையே இல்லாமலிருக்கக் காரணம். கேரள மாநிலத்திலிருந்த எல்லா வங்கிகளுமே ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் போராட்டத்தில் இறங்கியிருந்தும் எங்களுடைய வங்கியில் எனக்கு தெரிந்து தொழிற்சங்க பிரச்சினை இருந்ததே இல்லை.

'சார் அவருக்கு மறுபடியும் உங்கக்கிட்ட வந்து வேலை செய்ய விருப்பமில்லை. அதனால நா அவர கேரளாவுக்கே திருப்பி மாத்த சொல்லி நம்ம எச்.ஆர்ல சொல்லப் போறேன். அவங்க உங்கள கூப்ட்டு ஏதாச்சும் கேட்டா சரின்னு மட்டும் சொல்லிருங்க. தயவு செஞ்சி ரிப்ளேஸ்மெண்ட் ஸ்டாஃப் வேணும்னு கேட்டுராதீங்க. மத்தத நா மேனேஜ் பண்ணிக்கறேன்' என்றார்.

சாதாரணமாக யாராவது மாற்றம் வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கும் சமயத்தில் அவருக்கு பதிலாக வேறொரு பணியாளர் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் கேட்காமலிருந்தால் மட்டுமே மாறுதல் விண்ணப்பத்தை சாதகமாக கருத வாய்ப்புண்டு. எப்படியோ விட்டது தொல்லை என்ற நினைப்பில் நானும் சரி என்றேன்.

அடுத்த சில வாரங்களிலேயே அவருக்கு மாற்றலாகி உத்தரவு வர அவர் திரும்பிவர காத்திருக்காமலேயே அவரை என்னுடைய கிளையிலிருந்து விடுவித்து செய்து ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிளைக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த சில ஆண்டுகளிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் பல ஆண்டுகாலம் வரை என்னைப் பற்றி காண்பவர்களிடத்திலெல்லாம் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி வந்தார் என்பதை பிறகு தெரிந்துக்கொண்டேன்.

*****

என்னுடைய மேலாளர் அனுபவத்தில் இப்படி பிரச்சினைகளை உண்டாக்குவதிலேயே குறியாயிருந்த ஊழியர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களை எப்படி நாங்கள் கையாளுகிறோம் என்பதையும் எங்களுடைய நிர்வாகம் கவனிக்கும். பிரச்சினைகளை சிக்கலில்லாமல் தீர்க்கும் மேலாளர்களையே எங்களுடைய வங்கி நிர்வாகம் விரும்பியது என்றால் மிகையல்ல.

எங்களுடைய வருடாந்தர கணிப்பில் (appriasal) ஊழியர்களுடனான உறவு, பிரச்சினைக்குரியவர்களை கையாளும் விதம் இவற்றிற்கெல்லாம் தனித்தனி மதிப்பெண்கள் அளிக்கப்படுவதுண்டு. இந்த பிரிவுகளில் ஒரு மேலாளர்/இலாக்கா தலைவர் பெறும் மதிப்பெண்கள் அவர்களுடைய அடுத்த பதவிக்கான உயர்வு நேர்காணலில் வெற்றிபெற உதவும்.

இத்தகையோரை எப்படி கையாளுவது என்று எங்களுடைய பயிற்சிக் கல்லூரிகளில் தனி பயிற்சியும் அளிக்கப்படுவதுண்டு. எங்களுடைய வங்கியில் தொழிலாளர் பிரச்சினை அதிகம் இல்லாதிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒருரகம் என்றால் நான் மேலே குறிப்பிட்டுள்ள சிப்பந்தி வேறொரு ரகம்.

அவருக்கு கிளையின் உள்ளே இருந்த அலுவல்களை விட வெளியேயுள்ள அலுவல்களில்தான் ஆர்வம் அதிகம். தபால் நிலையம், வாடிக்கையாளர்களுடைய அலுவலகங்களுக்கு அல்லது வீடுகள், ரிஜிஸ்திரார் அலுவலகம் என எங்கு செல்வதானாலும் அதில் ஆர்வம் காட்டுவார். கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், பள்ளி இறுதி வகுப்பு வரை கூட எட்டிப் பிடிக்காதவர் என்றாலும் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் (அரைகுறை) என பல மொழிகளில் வெளுத்து வாங்குவார். மலையாள accent அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் எல்லோருடனும் பேசுவதில் தனியார்வம் காட்டுவார்.

நல்ல சிரிப்புடன் கூடிய முகமும் வாய்ச்சாலகமும் இருந்ததால் வங்கி வெளி அலுவல்களை வெற்றியுடன் முடித்து வருவதற்கு அவரை விட்டால் வேறு ஆளில்லை எனும் அளவுக்கு சாமர்த்தியசாலி.

சாதாரணமாக வங்கிகளில் கடன் பெறுவதற்கு வங்கிக்கு நடையாய் நடக்கும் வாடிக்கையாளர்களில் பலர் கடனைப் பெற்றுவிட்டால் வங்கியையே மறந்துபோய்விடுவார்கள். கடன் பெறும்போது இருக்கும் விலாசத்தையே மாற்றிக்கொண்டுவிட்டு புதுவிலாசத்தை வங்கிக்கும் தெரிவிக்க மாட்டார்கள். வங்கியிலிருந்து அனுப்பப்படும் தாக்கீதுகள் ஆளில்லை என்று திரும்பி வரும்போதே நமக்கு அவர்கள் வங்கியிலிருந்த விலாசத்தில் இல்லை என்பது தெரியவரும்.

இதில் பலர் தங்களுடைய புதுவிலாசத்தை அடுத்த வீட்டிலிருப்பவர்களிடம் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அப்படிப்பட்டவர்களிடமிருந்து சாதுரியமாக விலாசத்தை வரவழைப்பதில் படு கில்லாடி என்னுடைய சிப்பந்தி. நீதிமன்ற சிப்பந்திகளுக்கும் டிமிக்கி கொடுக்கக்கூடிய வாடிக்கையாளர்களையும் கூட நேரில் சந்தித்து சம்மன்களை serve செய்வதில் மன்னர் அவர்!

அதுபோலவே வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள் முக்கியமாக நிலம், கட்டடம் போன்ற சொத்துக்களுக்கு சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்க சான்றிதழ் பெறுவது, ஒரிஜினல் பத்திரங்களுடைய நகல்களைப் பெறுவது போன்ற வேலைகளையும் சாதுரியமாக முடித்துக்கொடுப்பார். ஒவ்வொரு சான்றிதழுக்கும் இத்தனை என்று பேரம் பேசும் அரசு ஊழியர்களையும் லாவகமாகக் கையாண்டும் மிகக் குறைந்த அளவே கொடுத்து, சில சமயங்களில் ஒன்றுமே கொடுக்காமலும் கூட நமக்கு ஆகவேண்டிய காரியத்தை முடித்துக் கொடுத்துவிடுவார்.

ஆனால் அலுவலகத்தினுள்..?


தொடரும்…

14 comments:

G.Ragavan said...

எப்படியோ! தொல்லை விட்டது. அந்த மட்டுக்கும் நல்லது.

தரக்குறைவாகப் பேசுவது. சார்...இதை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லாத வயதிலேயே. சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு. நீங்கள் சொன்ன நபரைப் போல ஒருவர்....அலுவலகத்தில் என்னுடைய குழுவில் இருந்தார். என்னைப் பற்றித் தாறுமாறாகப் பேசினார். அவர் பேசிய பேச்செல்லாம் சொன்னால்....சீச்சீ என்று இருக்கும். அது பிரச்சனையாகி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதைப் பற்றி வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் தரக்குறைவாகப் பேசக் கேட்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நீங்கள் சொல்வதை உணர்ந்து கொண்டேன் என்பதற்காகச் சொல்கிறேன்.

துளசி கோபால் said...

// அவருடைய அடக்கமும் நிதானமுமே எங்களுடைய வங்கியில் பலகாலமாக
தொழிற்சங்க பிரச்சினையே இருந்துவரக் காரணம்.//

'இருந்துவர'ன்ற இடத்துலே 'இல்லாமலிருக்க' ன்னு இருக்கணுமே.

dondu(#11168674346665545885) said...

//அவருடைய அடக்கமும் நிதானமுமே எங்களுடைய வங்கியில் பலகாலமாக தொழிற்சங்க பிரச்சினையே இருந்துவரக் காரணம். கேரள மாநிலத்திலிருந்த எல்லா வங்கிகளுமே ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் போராட்டத்தில் இறங்கியிருந்தும் எங்களுடைய வங்கியில் எனக்கு தெரிந்து தொழிற்சங்க பிரச்சினை இருந்ததே இல்லை.//

இரண்டு வாக்கியங்களுமே முரணாக அல்லவா இருக்கின்றன. முதல் வாக்கியம் இவ்வாறு அமைந்திருக்கலாமோ?

அவருடைய அடக்கமும் நிதானமுமே எங்களுடைய வங்கியில் பலகாலமாக தொழிற்சங்க பிரச்சினையே இல்லாது இருந்து வந்த காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

ஆனால் தரக்குறைவாகப் பேசக் கேட்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நீங்கள் சொல்வதை உணர்ந்து கொண்டேன் என்பதற்காகச் சொல்கிறேன்//

உண்மைதாங்க. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு பிறர் மனது புண்படாமல் பேசுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன் சார்,

கரெக்ட் பண்ணிட்டேன்.:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

'இருந்துவர'ன்ற இடத்துலே 'இல்லாமலிருக்க' ன்னு இருக்கணுமே.//

கரெக்ட் பண்ணிட்டேன் டீச்சர்! தாங்ஸ்..

நம்ம சீனியர் ராகவன் சாரும் கண்டுபிடிச்சி சொல்லிட்டார்.

நல்ல வேளையா இன்னும் ஜி! வரலை..

பேராசிரியர் பாக்கறதுக்கு முன்னாலயே கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணதுக்கு இன்னொரு தாங்ஸ்:))

செல்லி said...

//அடுத்த சில ஆண்டுகளிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் பல ஆண்டுகாலம் வரை என்னைப் பற்றி காண்பவர்களிடத்திலெல்லாம் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி வந்தார் என்பதை பிறகு தெரிந்துக்கொண்டேன்.// சிலருக்கு தரக்குறைவாகப் பேசுவது ஒரு வியாதி.அவர்கள் அப்படித்தான் என்று ignore பண்ணிப் பாருங்க வழிக்கு வருவாங்க.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க செல்லி,

ignore பண்ணிப் பாருங்க வழிக்கு வருவாங்க.//

என்னுடைய அணுகுமுறையும் இதுவே தான்... நன்றி.

sivagnanamji(#16342789) said...

ஹா...ஹா டீச்சர் முந்திட்டாங்க இல்லே!
all is well that ends well!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஹா...ஹா டீச்சர் முந்திட்டாங்க இல்லே!//

அதுவும் நல்லதுக்குத்தான்:))

Aani Pidunganum said...

Saarval,

Super,
8th Pass & 10th Fail (Gentleman Scene missing in it)....

Sollirundha kalakatirukum....

Cheers
Aanipidunganum

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஆணீ,

Super,
8th Pass & 10th Fail (Gentleman Scene missing in it)....

Sollirundha kalakatirukum....//

நா கொஞ்சம் ட்யூப் லைட்.. என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை..

Aani Pidunganum said...

Saarval,

Koundamani - senthil jokesla ippadi oru scene varum,(Gentleman movie)

Senthil - Annae naa Eigth pass annae

Koundamani - Adae naa SSLC Failda...

Senthil, Annae aana naa Eigth pass annae, Pass perusa Fail perusa....

Gentleman padam kidaicha indha scene varum paarunga, neenga sonna indha situationku correctaah vandhadhu....(athathaan sollavandhaen)...
//
ட்யூப் லைட்.. //
Ennanga idhu neengaluma.....:)(veetla samayathula chance kidaikumbodhu ammani solluvaanga)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

ட்யூப் லைட்.. //
Ennanga idhu neengaluma.....:)(veetla samayathula chance kidaikumbodhu ammani solluvaanga) //

அங்கேயுமா.. ஹா..ஹா..ஹா..