02 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 43

அடுத்த நாள் காலையில் நான் கூறியிருந்ததுபோலவே என்னுடைய உதவி மேலாளர் அலுவலகத்தில் நுழைந்ததும் தன்னுடைய இழுப்பின் சாவியை கொண்டு வரவில்லை என்று என்னிடம் வந்து முறையிட (அவர் செய்தது நடிப்பு மாதிரியே தெரியவில்லை எனலாம்.. ஆனால் அவர் கேரளாவிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்ததே சினிமாவில் சான்ஸ் கிடைக்காதா என்ற எண்ணத்தில்தான் என்பது பிறகுதான் தெரிந்தது!) நான் உடனே முந்தைய தினம் பேசி வைத்திருந்ததுபோலவே பதிலளித்தேன்.

அவர் உடனே ஒரு சிப்பந்தியை அழைத்து நம்ம பிராஞ்ச் டூப்ளிகேட் சாவிய கொண்டு வா என்றார் அதிகாரத்துடன். அவருக்கு நேரில் சென்று தலைமைக் குமாஸ்தாவிடம் கேட்க பயம் என்பதும் ஒரு காரணம்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு ரகம் என்றால் என்னுடைய கிளையிலிருந்த சிப்பந்திகள் மூவருள் மூத்தவர் வேறொரு அலாதியான ரகம். அவரைப் பற்றி வேறொரு நாள் சொல்கிறேன். நல்ல சுவாரஸ்யமான மனிதர்!

அவர் ஒரு டோண்ட் கேர் மாஸ்டர் எனலாம். அவருக்கும் என்னுடைய தலைமைக் குமாஸ்தா வயதிருக்கலாம். ஒன்றோ இரண்டோ வயது குறைவாக இருக்கும். கிளையிலிருந்த அனைவரும் தலைமைக் குமாஸ்தாவைக் கண்டு மிரண்டு போயிருந்தால் அவர் என் சிப்பந்தியைப் பார்த்து மிரண்டு போயிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் எங்களுடைய வங்கியிலிருந்த மற்றொரு வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் தலைமைக் குமாஸ்தாவின் தொழிற்சங்கத் தலைவர் பதவி அவரை பொருத்தவரை ஒன்றுமில்லை!

என்னுடைய உதவி மேலாளர் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அந்த சிப்பந்திக்கு அன்று என்ன தோன்றியதோ நேரே தலைமைக் குமாஸ்தா மேசைக்கு சென்று அவரைக் கேட்காமலே அவருடைய இழுப்பை திறக்க முயல அவர் அதை தடுக்க முயல இருவருக்குமிடையில் ஒரு சில நிமிட நேரங்கள் போராட்டம்!

இதை என்னுடைய அறையிலிருந்தே கவனித்தவாறு அமர்ந்திருந்தேன் என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்று நினைத்தவாறு.

சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தங்களுக்கிடையில் சச்சரவு செய்தால் அது அந்த அலுவலக சூழலை மட்டுமே பாதிக்கும். ஆனால் அது வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கி, தபால்நிலையம், ரயில் பயண முன்பதிவு அலுவலகங்கள் போன்றவையாயிருந்தால் அது அந்த நிறுவனத்தின் பெயருக்கு இழுக்கை விளைவிக்கும்.

ஆனால் இத்தகைய அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இதை உணர்ந்து நடந்துக்கொள்ளாதிருப்பதை நாம் பல சமயங்களில் கண்டிருக்கிறோம். கவுண்டரில் காத்து நிற்பவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அருகில் அமர்ந்திருப்பவரிடம் சாவகாசமாக உரையாடிக்கொண்டிருப்பவர்களை அல்லது ஒன்றுக்கும் உதவாத சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பதை இன்றும் பல தபால் நிலையங்களிலும் காணலாம். வங்கிகளில் இத்தகைய நிலை குறைந்துவருகிறது என்று நினைக்கின்றேன்.

ரயில் நிலையத்திலும் தபால் அலுவகத்திலும் காத்திருக்க வேண்டிவந்தால் வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பவர்களும் வங்கி கிளையொன்றில் நுழைந்துவிட்டால் அடியோடு மாறிவிடுவார்கள். 'எங்க அக்கவுண்டுல போட்டுருக்கற பணத்த எடுக்கறதுக்கு நாங்க எதுக்கு சார் காத்திருக்கணும்?' என்பார்கள். அதில் தவறேதும் இல்லைதான்.

சரி.. ஒரு நிமிட நேரம் காலதாமதமதாவதற்கே இப்படியென்றால் காலையில் வந்ததுமே பணிகளை துவக்காமல் ஊழியர்களிருவர் தங்களுக்குள் சச்சரவில் ஈடுபட்டால் எப்படியிருந்திருக்கும்?

காலை பத்து மணிக்கு வங்கிக்குள் நுழையும் முதல் வாடிக்கையாளரை வரவேற்று அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காகவே கிளை அதிகாரிகள் அரை மணி நேரத்திற்கு முன்பும் சிப்பந்திகள் கால் மணி நேரத்திற்கு முன்பும் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும் என்பது நியதி. தலைமைக் குமாஸ்தா இந்நியதிக்குட்பட்டவரில்லையென்றாலும் அவர் எப்போதுமே தன்னையும் ஒரு அதிகாரி என்று நினைத்துக்கொள்பவராயிற்றே. ஆகவே அவரும் தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜராகிவிடுவார்.

ஆகவே என்னுடைய யுக்தியால் எவ்வித இடைஞ்சலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது என்று கருதியே இதை திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவின் பிடிவாதத்தால் அது முற்றிலும் தகர்ந்துப் போனது.

நான் முந்தைய தினம் எடுத்த முடிவே தவறானதோ என்று நினைக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்னுடைய சிப்பந்தியும் தலைமைக் குமாஸ்தாவும்.

அவர்களுக்கிடையில் சர்ச்சை நடந்துக்கொண்டிருக்கையில் நான் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து சச்சரவில் ஈடுபட்டிருந்த சிப்பந்தியை அலுவலகத்தின் பின்புறத்திலிருந்த உணவு அறைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்யுங்கள் என்றேன். அவரும் சிரமப்பட்டு அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். அவர் அங்கிருந்து அகன்றதும் நான் என்னுடைய தலைமை எழுத்தாளரை அணுகி, 'அந்த சாவிக்கொத்த குடுங்க.. எதாச்சும் சொல்லணும்னா பிசினஸ் அவர்ஸ் கழிஞ்சி பாத்துக்கலாம்.' என்றேன்.

அவர் என்ன நினைத்தாரோ, 'முடியாது சார். நீங்க என்ன பண்ணணும் நினைக்கறீங்களோ.. செஞ்சிக்குங்க. அந்த பியூன் செஞ்சதுக்கு எங்கிட்ட எல்லார் முன்னையும் வச்சி மன்னிப்பு கேக்கறவரைக்கும் சாவிய தர மாட்டேன். இன்னைக்கி டிரான்சாக்ஷன் எதுவும் நடக்கவும் விடமாட்டேன்.; என்று பிடிவாதமாக மறுத்ததுடன் அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்துக்கொண்டிருந்த காசாளரையும் மற்ற ஜூனியர் குமாஸ்தாக்களையும் அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தார்!

அவருடைய தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களே, காசாளரையும் சேர்த்து, என்னுடைய கிளையின் பெரும்பான்மையான ஊழியர்கள் என்பதால் அவருடைய நடவடிக்கைகளை விரும்பாதவர்களும் கூட அவர் தடுத்து நிறுத்தியதை மீறமுடியாமல் வாசலிலேயே தயங்கி நிற்க விஷயம் சிக்கலாவதை உணர்ந்தேன்.

அதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கவே நான் வாசலில் தயங்கி நின்ற ஊழியர்களை பணிக்கு செல்லுமாறு கோரிக்கை விட அவர்களோ தயக்கத்துடன் தலைமைக் குமாஸ்தாவை பார்த்தனர். வாசலில் நின்ற ஊழியர்களை விலக்கியவாறு உள்ளே நுழைந்த வாடிக்கையாளர்களுள் ஒருவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். 'என்ன சார் எதுக்கு இவங்க எல்லாரும் இங்க நிக்கறாங்க? மணி பத்தேகால் ஆயிருச்சே?' என்றார். நான் பதில் சொல்ல முயல்வதற்கு முன் என்னுடைய தலைமைக் குமாஸ்தா உரத்த குரலில் நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி பேசிவிட்டு தொழிற்சங்க தலைவருக்கே உரிய குரலில் வங்கி ஊழியர் ஒற்றுமை சிந்தாபாத் என குரலெடுத்து முழங்க குழுமியிருந்த ஊழியர்களும் தன்னிச்சையாக உடன் முழங்க அவர்களுடைய குரல் சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பலருடைய கவனத்தையும் முதல் மாடியை நோக்கி ஈர்த்தது.

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதைதான். ஆளுக்கு ஆள் ஒன்றுபேச விஷயம் மேலும் சிக்கலானது.

நானும் ஒரு காலத்தில் தீவிர தொழிற்சங்கவாதியாய் இருந்தவன்தான் என்றாலும் இப்படியொரு சிக்கலான சூழலை எதிர்கொண்டிருக்கவில்லை. இத்தனைக்கும் நான் குமாஸ்தாவாக இருந்த காலத்தில் எனக்கு மேலாளர்களாக இருந்தவர்களுள் பலரும் தொழிற்சங்க செயல்பாடுகளை தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள். என்னைப் போன்று தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்றிருந்த ஊழியர்களை அடியோடு புறக்கணித்ததுமட்டுமல்லாமல் கூடியமட்டும் தொல்லைகளும் கொடுத்து வந்திருந்தவர்கள்.

ஆனால் என்னுடைய வேலையில் எப்போதுமே கவனத்துடன் இருந்து வந்திருந்ததாலும் எனக்காக எந்தவொரு போராட்டத்திலும் இறங்கியதில்லை என்றதாலும் என்னுடைய எட்டுவருட குமாஸ்தா பணிக்காலத்தில் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமலிருந்தேன். கேரளத்தை சார்ந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கிய நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக போராடியதைத் தவிர எங்களுடைய வங்கி ஊழியர் சங்கம் எவ்வித போராட்டங்களிலோ கதவடைப்புகளிலோ இறங்கியதேயில்லை.

அத்தனைப் பொறுப்புடன் வங்கி ஊழியர்களின் நலனுக்கெனவே போராடிவந்த எங்களுடைய ஊழியர் சங்கத்தில் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவைப் போன்ற சுயநலவாதிகளும் தலைவர்கள் என்ற போர்வையில் தேவையில்லாத சச்சரவுகளுக்கு காரணகர்த்தாக்களாக இருந்துவந்திருந்தனர்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தாவினுடைய முழக்கத்தை கேட்டதும் உள்ளறையில் அமர்ந்திருந்த சிப்பந்தி வெளியேறி வாசலை நோக்கி ஒடிவருவதை கவனித்த நான் அவரை வழிமறிக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி நகர்ந்தேன். அதற்குள் ஒரு வாடிக்கையாளர், 'என்ன சார் இது? அவர்தான் ஒங்க ப்ராஞ்சிலயே சீனியர் ஆஃபீசர். அவரப் போயி இப்படி அவமானத்தபடுத்தறீங்க?' என்ற என்னை நோக்கி கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு பதிலளிக்க முயல்வதற்கு முன் வங்கி மத்திய ஹாலுக்குள் நுழைந்த சிப்பந்தி கோபத்துடன் அவரை நெருங்கி, 'யார் சார் ஆஃபீசர் இந்தாளா?' என்றார்.

தொடரும்..

12 comments:

துளசி கோபால் said...

//'யார் சார் ஆஃபீசர் இந்தாளா//

உண்மையை ஒடைச்சுட்டாரா? :-)))))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

இது நான் கொஞ்சமும் எதிர்பாக்காம நடந்தது..

இவர எப்படிறா டீல் பண்றதுன்னு நா மண்டைய போட்டு ஒடைச்சிக்கிட்டிருக்கற நேரத்துல தன்னிச்சையா அவர் கேட்ட கேள்வி...

ரொம்பவே உபயோகமா இருந்துது..

sivagnanamji(#16342789) said...

அரங்கேற்றம் சூடு பிடிச்சிடிச்சு...அடுத்த காட்சிக்குக் காத்திருக்கிறோம்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

அரங்கேற்றம் சூடு பிடிச்சிடிச்சு...அடுத்த காட்சிக்குக் காத்திருக்கிறோம் //

ரொம்ப நாள் காத்திருக்க வேணாம்னு நினைக்கேன்.:)

Aani Pidunganum said...

தெய்வமே, சரியான நேரத்துல தொடரும் பொட்டிங்க saarvaal, இன்னும் ஒரு நாள் wait பண்ணனும்....

ஆணிபிடுங்கனும்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஆணி,

இன்னும் ஒரு நாள் wait பண்ணனும்....

ஆணிபிடுங்கனும் //

ஒருநாள்தானே... சும்மாருக்கற நேரத்துல் ஒரு நூறு ஆணிய பிடுங்குங்க:))

இலவசக்கொத்தனார் said...

ஏங்க இன்னும் ஒரு நாள் காத்து இருக்கணுமா? மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகுதே.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கொத்தனார்,


மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகுதே.//

இதிலென்ன சந்தேகம்?:))

G.Ragavan said...

சமயத்துல ஒதவீன்னு சொல்வாங்க. அது இதுதான்னு நெனைக்கிறேன். காலத்தினால் செய்த உதவி. அவரு உண்மையப் போட்டு ஒடச்சிருப்பாரு. அதுனால என்னென்ன பிரச்சனைகள் வந்ததோ! பார்க்கலாம் அடுத்த பகுதியில்.

nr said...

Your experiences are really interesting. We are looking forward to hearing more.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,


சமயத்துல ஒதவீன்னு சொல்வாங்க. அது இதுதான்னு நெனைக்கிறேன். காலத்தினால் செய்த உதவி. //

எனக்கு அது உதவி.. ஆனா என்னுடைய தலைமை எழுத்தாளருக்கு? அவர் இப்படியொரு சூழல் உருவாகும் என்று நினைத்திருக்க மாட்டார்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

Your experiences are really interesting. We are looking forward to hearing more. //

Thankyou nr.