30 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 53

நான் மதுரை கிளையிலிருந்து மாற்றப்பட்டு முதல் முறையாக ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது அதிகாரம் செய்தே பழகிப்போன நான் எப்படி அதிகாரத்துக்கு கட்டுப்படப் போகிறேன் என்ற மனநிலையில் இருந்தேன்.

ஆனால் அங்கு சுமார் பதினைந்து மாதங்கள் பணியாற்றிவிட்டு மீண்டும் ஒரு கிளைக்கு, அதுவும் சென்னையிலேயே மேலாளராக பதவியமர்த்தப்பட்டபோது, 'மீண்டுமா?' என்ற மனநிலையில்தான் கிளைக்கு சென்றேன். அது என்னுடைய வட்டார மேலாளரே எதிர்பார்க்காத மாற்றம் என்பதுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு மேலாளரை திடீரென்று மாற்றிவிட்டு என்னை அந்த பதவியில் அமர்த்தியிருந்ததால் அவருடைய பகைக்கும் ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் நாளடைவில் எங்கள் இருவருக்குமிடையிலிருந்த உறவு சுமுக நிலைக்கு வந்திருந்தது என்பது உண்மைதான்.

என்னுடைய கிளை சிப்பந்தியொருவர் அகாலமாய் மரணமடைந்தபோது அதற்கு என்னுடைய கிளையில் நடந்திருந்த சில விதி மீறல்களும் ஒரு காரணம் என்பதால் நான் மீண்டும் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த நிலையில்தான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் சேர வேண்டிய சூழல். சாதாரணமாகவே கிளையில் குப்பைக் கொட்ட முடியாதவர்கள்தான் வட்டார அலுவலகங்களைப் போன்ற நிர்வாக அலுவலகங்களுக்கு மாற்றப் படுவார்கள் என்ற ஒரு எண்ணம் அப்போதுமட்டுமல்ல இப்போதும் நிலவி வருகிறது.

ஆனால் வட்டார அலுவலகத்தினுள் என்னுடைய இரண்டாவது பிரவேசம் முந்தைய பிரவேசத்தைப் போல் அத்தனை குழப்பமாக இருக்கவில்லை. ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேல் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால் இம்முறை என்னால் மிக எளிதாக என்னுடைய அலுவல்களில் ஒன்றிப்போக முடிந்தது. முந்தைய பணிக்காலத்தில் கிளைகளுக்கு ஆய்வுக்கு சென்றதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்ததால் அதை இம்முறை முற்றிலுமாக தவிர்ப்பதில் குறியாயிருந்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் இம்முறை எனக்கு எடுத்தவுடனேயே கடன் வழங்கும் இலாக்காவில் போஸ்டிங் கிடைத்தது. என்னுடைய அலுவலகத்தின் ஆய்வு இலாக்காவின் தலைமை அதிகாரி என்னுடைய முந்தைய ஆய்வு அறிக்கைகளை வாசித்திருந்ததால் கூட என்னை தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தேன். அதுவும் எனக்கு நல்லதாக தோன்றியது. எதற்கு மீண்டும் வம்பு என்று எனக்கு கிடைத்த பதவியிலேயே கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பல பெரிய கிளைகளுக்கு ஆய்வு சென்றிருந்த அனுபவம் கடன் வழங்கும் இலாக்காவில் மிகவும் உதவியாயிருந்தது. சாதாரணமாக கிளைகளுக்கு ஆய்வு செல்கையில் நம்முடைய கண்களுக்கு அதிகம் தென்படுவது கடன் வழங்குகையில் நிகழும் குறைபாடுகள்தான். சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகள் வட்டி வழங்குவதில்தான் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக வாடிக்கையாளர்களை அடையாளம் காணத் தவறுவது (introduction of the customers). வங்கியின் சேமிப்பைக் கூட்ட வேண்டுமே என்பதற்காக எந்த வழியில் சேமிப்பு வந்தாலும் அதனுடைய மூலத்தைப் பற்றி (source) எவ்வித கவலையும் கொள்ளாமல் பல மேலாளர்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். அதிலும் முதல் முதலாக கிளைக்கு மேலாளர் பொருப்பை ஏற்பவர்கள் முதல் கிளையிலேயே தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒருவகை வெறியில் (வெறி என்பது சற்று அதிகப்படியோ என்று நினைப்பவர்களுக்கு passion என்று சொல்லலாம்). எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் சில இப்படித்தான் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேண்டுமானால் சற்று அதிகமாக தோன்றலாம். ஆனால் அவர்களும் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகளால் வங்கிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் உண்மை. ஆனால் கடன் கணக்குகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதென்பது பல வருட அனுபவங்களுக்குப் பிறகு வருவது. சாலையில் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் சேமிப்பை கான்வாஸ் செய்யலாம். ஆனால் கடன் என்று வரும்போதும் சகோதரர்களையும் சந்தேகப்பட வேண்டும் என்பார்கள் எங்களுடைய பயிற்சி வகுப்புகளில்.

Identification of the borrowers is an art... அது ஒரு கலை என்பதும் உண்மைதான். பகட்டாக உடையுடுத்தி வருபவரெல்லாம் செல்வந்தர்கள் என்றோ மிகச் சாதாரணமாக தோற்றமளிப்பவர்களெல்லாம் எளியவர்கள் என்றோ கணிப்பிட முடியாது என்பதை என்னுடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

பல அனுபவம் மிக்க மேலாளர்களும் கூட இந்த தவற்றை செய்துவிட்டு தங்களுடைய பல்லாண்டு கால உழைப்பை வீணாக்கிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு வங்கி மேலாளர் வாடிக்கையாளர்களுடைய வெளித்தோற்றத்தில் மயங்கி அவர்களுடைய உண்மை பொருளாதார நிலையில் கவனம் செலுத்த மறந்துபோவார்கள். மேலும் ஒரு கிளையின் வணிகத்தை கூட்டவேண்டும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய வேண்டும் என்பதிலேயே அவர்களுடைய எண்ணம் இருக்கும்.

ஆனால் என்னைப் போன்று நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் மேசை அதிகாரிகளுக்கு அந்த பிரச்சினை இல்லை. மேலும் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் ஏற்கனவே மேலாளர்களாக பணியாற்றியிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் கிளை மேலாளர்கள் பரிந்துரைத்த கடன் விண்ணப்பங்களை சரியான கோணத்தில் பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது எளிது.

ஆனால் சில மேசை அதிகாரிகள், குறிப்பாக கிளை மேலாளர்களாக இருந்தபோது அவர்கள் அளித்திருந்த கடன்கள் வாராக் கடன்களாகிப்போய் அதன் விளைவாக பதவியை இழந்தவர்களாக இருந்தால், அவர்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையாக (Negative) இருக்க வாய்ப்புள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அவர்கள் பரிசீலிக்கும் அனைத்து கடன் பரிந்துரைகளையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.

Experience should make one to be positive என்பார் என்னுடைய வங்கி மேலாளர்களுள் ஒருவர். உண்மைதான் ஆனால் நமக்கு ஏற்படும் எதிர்மறையான அனுபவங்கள் சில வேளைகளில் நம்மில் பலரை எதிர்மறையாகவே சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை எந்த சூழலிலும் ஒரு நேர்மறையான எண்ணத்துடனேயே வாழ்க்கையை கண்ணோக்க முயன்றிருக்கிறேன். எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் மீண்டும் எழுந்து எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்வதில் உறுதியாயிருந்திருக்கிறேன். அந்த பாதையில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மிகவும் கசப்பானதுதான் என்றாலும் அதனால் சில வேளைகளில் சோர்ந்துபோயிருக்கிறேன் என்றாலும் அதை என்னால் இயன்றவரை களைந்துவிட்டு பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயணித்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். ஆகவே மூன்று வருடங்களில் இரண்டு முறை மேலாளர் பதவியை இழந்தபோதும் அத்துடன் என்னுடைய அலுவலக வாழ்க்கை அத்துடன் முடிந்துபோய்விட்டது என்று நினைத்ததில்லை.

கிளை மேலாளர்கள் பாசிட்டிவாக பரிந்துரைத்து அனுப்பியுள்ள கடன் விண்ணப்பங்களை அதே கண்ணோட்டத்துடன் நிர்வாக அலுவலகங்களிலுள்ள மேசை அதிகாரிகளும் அணுகாவிட்டால் நாளடைவில் 'நாம என்ன ப்ரொப்போசல அனுப்புனாலும் பாசாக போறதில்லை. அப்புறம் எதுக்கு வீணா..' என்று மேலாளர்கள் கடன்களை வழங்குவதையே நிறுத்திவிடுவார்கள். அத்துடன் வங்கி வர்த்தகமும் ஸ்தம்பித்துப் போய்விடும் என்று எங்களுடைய பயிற்சி வகுப்புகளில் மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பார்கள்.

ஆனால் அதே சமயம் கிளை மேலாளர்கள் கவனிக்க தவறிவிட்ட விஷயங்களை அவை நல்லவையானாலும் தீயவையானாலும், அவற்றை என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் கண்டுபிடித்து மேலதிகாரிகளுடைய பார்வைக்கு கொண்டு வரவேண்டும். When the branch managers look at the customer you should look at his financials என்பதும் எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் கூறப்படும் அறிவுரை.

ஒரு வாடிக்கையாளர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும், எவ்வளவு நேர்மையுள்ளவராயிருந்தாலும் அவருடைய பொருளாதார நிலை (financials) சரியில்லையென்றால் எந்த ஒரு தொழிலும், வணிகமும் வெற்றியடைய வாய்ப்பில்லை, நாம் வழங்கும் கடனும் முழுமையாக திரும்பிவர வாய்ப்பில்லை.

ஆகவே என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் மேலாளர்களுடைய பரிந்துரையை பரிசீலிப்பதை விட அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிதியறிக்கைகளை (balance sheet) பரிசீலிப்பதிலேயே குறியாயிருப்பதுண்டு..

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பரிசீலித்த சில கடன் விண்ணப்பங்களைப் பற்றி அடுத்த சில தினங்களில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். வங்கிகளின் அணுகுமுறையை தெரிந்துக்கொள்வதில் உங்களில் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். குறிப்பாக வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...

தொடரும்...

24 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 52

நான் இரண்டாம் முறையாக வட்டார அலுவலகத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள் என்னுடைய வங்கியின் அடுத்த முதல்வர் நியமிக்கப்பட்டார்.

என்னுடைய வங்கி சரித்திரத்தில் முதன் முறையாக நாகர்கோவிலைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவர் முதல்வராக நியமிக்கப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அன்று முதல் வங்கியின் கண்ணோட்டத்திலும் ஒரு பெரிய மாற்றம் வந்தது என்றால் மிகையாகாது. அவர் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு உயர் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே எங்களுடைய வங்கிக்கு முதல்வராக நியமிக்கப்பட்ட பெருமையும் இருந்தது. அதுவரை முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர்கள்.

அவர் அவருடைய வங்கியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்ததால் என்னுடைய வங்கி முதல்வர் பதவிக்காலத்திற்குப் பிறகும் தன்னுடைய தாய் வங்கிக்கு (Parent Bank) திரும்பிச் செல்லக் கூடிய வாய்ப்பு இருந்தது. அதுவே அவரை ஒரு கண்டிப்பான, அதாவது எங்களுடைய இயக்குனர் குழுவுக்கு அஞ்சி நடக்க தேவையில்லாத, முதல்வராக செயல்பட உதவியது. அத்துடன் அவருடைய விஷயஞானமும், இறைபக்தியும், நேர்மையும் மேலைநாடுகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு எங்களுடைய அதிகாரிகள் நடுவில் பெருத்த மதிப்பைப் பெற்றுத்தந்திருந்தது.

நான் முன்பு கூறியிருந்த 'தண்ணி' கலாச்சாரமும் கூட வெகுவாக குறைந்திருந்தது என்றும் கூறலாம். எந்த ஒரு கிளைக்கு அல்லது இலாக்காவிற்கு அலவலக நிமித்தம் சென்றாலும் அவருடைய மதிய உணவு இட்லி, தோசை காப்பி என வெகு எளிமையாக முடிந்துவிடும். இரவு உணவு பழங்கள் மட்டுமே. இயக்குனர்கள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் கமிட்டிக் கூட்டங்களிலும் இதுதான் staple menu.

எப்போது கமிட்டி கூட்டம் முடியும் பாட்டிலை திறக்கலாம், ஆடு, கோழியை விழுங்கலாம் என்ற எண்ணத்துடன் அதுவரை இயங்கிவந்தவர்கள் நொந்துப்போனார்கள். 'மனுசன் தானும் அனுபவிக்கறதில்லை பிறத்தியாரையும் அனுபவிக்க விடறதில்லன்னா என்னத்த பண்றது? தலையெழுத்தேன்னு அனுபவிக்க வேண்டியதுதான்.' என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

அத்துடன் முந்தைய முதல்வர்களைப் போலல்லாமல் உயர் அதிகாரிகள் மற்றும் வட்டார மேலாளர்களுடைய கூட்டத்திற்கு வரும்போது அக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பட்டியிலிட்டு கொண்டுவருவதுடன் அதில் பங்குபெறும் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தது பலருக்கும் தர்மசங்கடத்தை அளித்தது. 'என்னய்யா இது? Friendsகளை பாத்து பேசினமா, ரெண்டு பெக்க போட்டமான்னு இல்லாம... இப்பல்லாம் இந்த கான்ஃப்ரன்ஸ்ன்னால அலர்ஜியாயிருச்சிப்பா?' இத்தகைய கூட்டங்களில் இது சர்வசாதாரணமாக கேட்கும் புலம்பல்!

ஆனால் இந்த மாற்றத்தை இருகரம் விரித்து வரவேற்றவர் என்னுடைய வட்டார மேலாளர்தான். ஏனென்றால் அவருக்கும் இதெல்லாம் முற்றிலும் ஒத்துவராத விஷயங்கள், அதாவது குடி, குப்பி (bottle), குசலம் விசாரிப்பது எல்லாமே.. அதற்கு வேறொரு காரணம் இருந்தது. அவர் சிறுவயதிலேயே மனைவியை இழந்துவிட்டவர். 'ஆமா அந்தம்மா இவர்கூட பத்து வருசம் வாழ்ந்ததே பெரிய விஷயம்.' என்பார்கள் அவருடைய தாம்பத்தியத்தைப் பற்றி நன்கு அறிந்த அவருடைய சக அதிகாரிகள். மனைவியை இறந்தபோது பத்தும், எட்டும் வயதில் இருந்த இரு மகன்களே அவருடைய முழு உலகமாயிருந்தது. மறுதிருமணம் செய்துக்கொள்ளாமல் தன் மகன்களை வளர்த்து ஆளாக்கியவருக்கு அவர்களுக்கு ஒவ்வாத எந்த பழக்கமும் தனக்கும் தேவையில்லை என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஆனால் அவர் வளர்த்து ஆளாக்கிய இரு மகன்களுமே வயதுக்கு வந்ததும் அவரை விட்டு பிரிந்து சென்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'இறக்கை முளைச்சதுக்கப்புறமும் இந்த மனுசங்கிட்டருந்து அவஸ்தைப்படறதுக்கு அதுங்களுக்கு பைத்தியமா என்ன?' என்பார்கள் அவரை நன்கு அறிந்திருந்தவர்கள் ஒரு devilish மகிழ்ச்சியுடன்.

என்னுடைய வங்கி முதல்வருக்கு இருந்த நற்குணங்களில் ஒன்றும் என்னுடைய வட்டார மேலாளரிடம் இல்லையென்றாலும் இவரும் teetotaller என்பதாலேயே முன்னவருக்கு பின்னவரை மிகவும் பிடித்துப்போனது. பின்னவருடய மத, இன, மொழி வெறி முன்னவரைப் பொறுத்தவரையில் அடிபட்டுபோனது என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாகிப் போனார்கள். அத்துடன் பின்னவருடைய விஷயஞானமும், சுயதம்பட்டமும் கூட அவர்களுடைய நெருக்கத்திற்கு காரணமாயிருந்திருக்கலாம்.

புதிய முதல்வர் பணிக்கு சேர்ந்தவுடனேயே வங்கியில் தன்னுடைய மாநிலத்தைச் (தமிழ்நாடு) சார்ந்தவர்களுள் வெகு சிலரே உயர் அதிகாரிகளாக இருப்பதைக் கவனித்திருப்பார் போலிருந்தது. அந்த வெகுசிலருடைய தனிப்பட்ட கோப்புகளை (personal files) எங்களுடைய எச்.ஆர் இலாக்காவிலிருந்து பெற்று படித்திருந்தார் என்பதை என்னை சந்தித்த முதல் சந்திப்பிலேயே என்னுடைய பூர்வாங்கத்தையே எடுத்துரைத்தபோது தெரிந்தது.

'It's not enough that you are talented and sincere tbr.. you should also know how to get along with others, especially your seniors.' என்றார் முதல் சந்திப்பிலேயே. நானும் ஒங்களமாதிரிதான். நம்ம குடும்ப பின்னணிக்கு சுத்தமா சம்பந்தமில்லாதவங்களோடத்தான் இந்த முப்பது வருசமா வேல செஞ்சிருக்கேன். ஆனா வேலைன்னு வந்துட்டா இதயெல்லாம் பெரிசுபடுத்தறதுல அர்த்தமே இல்ல. If you want climb up the ladder you'll have to change.. and change fast. அதாவது என்னோட tenureலயே... அப்படீன்னா என்னால ஏதாச்சும் செய்ய முடியும். என்ன சொல்றீங்க?' என்றார்.

அவர் சென்னை வட்டார அலுவலகத்திற்கு வந்திருந்த முதல் சந்திப்பிலேயே என்னை தனியாக அழைத்து உரையாடியது என்னுடைய வட்டார மேலாளரை எரிச்சல்கொள்ளச் செய்தது. அன்று முதலே என் மீது தேவையில்லாத ஒரு வன்மத்தை காட்ட துவக்கினார் என்றால் மிகையாகாது. நல்லவேளை என்னுடைய இலாக்கா தலைவராக இருந்த chief manager எனக்கு ஆறுதலாக இருந்தார் என்பது ஒரு நல்ல விஷயம். அவராலும் பொறுத்துக்கொள்ளாத கட்டத்தில், 'பேசாம இவர் ஒங்கக்கிட்ட நடந்துக்கற விதத்த சேர்மன் கிட்ட சொல்லிருங்களேன் டிபிஆர். அவருக்குத்தான் ஒங்கள புடிச்சிருக்குதே.' என்றார். நான் சிரித்துக்கொண்டே விசயத்தை மாற்றிவிடுவேன்.

என்னுடைய வங்கி முதல்வர் ஏற்கனவே என்னுடைய கோப்புகளில் இருந்தவற்றைப் படித்துவிட்டு ஒருதலைப்பட்சமாக நான் என்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவராயிற்றே. அவரிடம் சென்று என்னுடைய வட்டார மேலாளரைப் பற்றி குறைகூறுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று நினைத்தேன். மேலும் அவரும் என்னுடைய வட்டார மேலாளரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது எல்லோருமே அறிந்த விஷயம்.

மேலும் என்னுடைய மகள்கள் இருவருமே சென்னையில் இருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய வட்டார மேலாளரை அனுசரித்து செல்வது என்னுடைய பிரச்சினை மட்டுமே.. ஆனால் அவரை விரோதித்துக்கொண்டு மாற்றலாகிச் சென்றால் அது என்னுடைய குடும்பத்திலிருந்த அனைவரையுமே பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் என்னால் முடிந்த அளவு அவரை அனுசரித்துச் செல்வதென முடிவெடுத்திருந்தேன்.


தொடரும்...

23 April 2007

அழகுகள் ஆறு...

இறைவனின் படைப்பிலே எதுதான் அழகில்லை?

கடந்த வாரத்தில் ஒருநாள் தருமி சாரிடமிருந்து அழைப்பு வந்தபோது எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பத்திலிருந்தேன்...

அந்த சமயத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன..

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு..

என்று துவங்கி அவர் இடும் பட்டியலில்தான் எத்தனை அழகுகள்?

அந்த முழுப்பாடலே ஒரு தனி அழகு!

ஆனாலும் என்னைக் கவர்ந்தவை என்று ஸ்பெஷலாக சில இருக்கத்தான் செய்கின்றன.

1. பிறந்த பத்தாம் நாளே ஒரு freak மழையில் நனைந்து மரணப் படுக்கையில் கிடந்த என் இரண்டாவது மகளுடைய முகத்தில் ஒரு நொடி நேரமே தோன்றி மறைந்த அந்த புன்னகை! மறக்க முடியுமா அந்த அழகிய புன்னகையை! இன்றும் நினக்கும்போதெல்லாம் கண்களில் நீரை வரவழைக்கிறதே! அதைப்பற்றி சொல்வதா?

2. என்னுடைய இளைய மகளுடைய (கணக்கில் மூன்றாவது) கல்லூரி நண்பன் ஒருவர் விபத்தில் அடிபட்டு மரித்த முதலாண்டு நினைவு தினத்தன்று அவளும் அவளுடைய நான்கு நண்பர்களும் தலைக்கு ரூ.500/- என்று திரட்டி அனாதைக் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து அதையும் ஒரு ஏழை நடைபாதை வியாபாரியிடமிருந்தே வாங்க வேண்டும் என்று நினைத்த அழகைச் சொல்லவா? அல்லது அந்த ஏழை வியாபாரி தன் பங்குக்கு ரூ.100 பெறுமானமுள்ள ஆடையை இலவசமாக வழங்க முன்வந்தாரே அந்த அழகை சொல்லவா?

3. நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோது என்னுடைய வங்கியின் மாத இதழை வெளியிடும் பொறுப்பு என்னிடமிருந்தது. அதில் வங்கியை சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். என்னுடைய ஐந்தாண்டுகால கல்லூரி அனுபவத்தில் என்னுடைய நண்பர் ஒருவருடைய பத்து வயது மாணவி அவளுடைய வீடு அமைந்திருந்த சாலையில் தினமும் குப்பைகளை சேகரித்து விற்கும் அவள் வயதொத்த சிறுமியைப் பற்றி, forgotten children என்ற தலைப்பில் எழுதியிருந்த உணர்ச்சிபூர்வமான கட்டுரையை வாசித்து முடித்தபோது மனதில் ஒரு இனம் தெரியாத நிறைவு ஏற்பட்டதே அந்த அழகைச் சொல்லவா? அல்லது அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஏழைச் சிறுமியின் அழகு புன்னகையை சொல்லவா?

4. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நான் முதன் முதலாக குமரி முனையில் விடியற்காலை அடித்துப் பிடித்து எழுந்து ஜகஜ்ஜோதியாய் எழுந்த கதிரவனை முகமுகமாய் கண்ட அழகைச் சொல்லவா? அல்லது இப்போதும் சென்னை போக்குவரத்து நெரிசலின் நடுவிலும் மாலை நேரங்களில் மஞ்சள் வட்டமாய் உயர்ந்த கட்டடங்களுக்கு பின்னால் விழும் மாலைக் கதிரவனின் அழகைக் காணம் மனம் அடித்துக்கொள்கிறதே அதைச் சொல்லவா?

5. சென்னையிலுள்ள முதியோர் இல்லத்தில் ஒரு பகுதிநேர சேவகனாய் பணியாற்றிக்கொண்டிருக்கையில் நான் ரகசியமாய் வாங்கிவரும் ஐஸ்க்ரீமை கன்னியர்களுக்கு தெரியாமல் வயதான தாத்தாவும் பாட்டியும் ருசித்து உண்டுவிட்டு 'ரொம்ப நன்றிப்பா..' என்றவாறு பொக்கை வாய் விரிய சிரித்த அந்த சிரிப்பில் தெரிந்த அழகைச் சொல்லவா?

6. சமீபத்தில் பார்த்த மொழி திரைப்படத்தில் செவிட்டு ஊமை கதாபாத்திரம் காய் கறியை வெட்டும் ஓசையை மனதில் கற்பனை செய்வதுபோல் காட்சியமைத்த அந்த படைப்பாளியின் கற்பனை அழகைச் சொல்லவா அல்லது அந்த காட்சியில் உண்மையிலேயே உணர்ந்து நடித்த ஜோதிகாவின் முகத்தில் தோன்றிய அந்த அழகு பரவசத்தைச் சொல்லவா?

இப்படி எத்தனையோ... சொல்லிக்கொண்டே போகலாம்...

இறைவனின் படைப்பிலே எதுதான் அழகில்லை....

அவற்றைக் காணும் கண்களிலும் மனித மனங்களிலும்தான் அவற்றைக் கண்டுணரும் பக்குவம் தேவை...

சரி.. என் பங்குக்கு யாரைக் கூப்பிடுவது?

சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?

இருந்தாலும் சடங்குன்னு ஒன்னு இருக்கில்லே...

அதனால அதே பட்டியல மாற்றமே இல்லாம மறுபடியும்...

ஜோ,
ஜிராகவன்,
முத்து தமிழினி மற்றும்
வினையூக்கி...

கொத்தனார மட்டும் விட்டுட்டேன்.. அவர்தான் இந்த சங்கிலியையே துவக்கி வச்சவர் போலருக்கு... சரியாங்க?

அழகுகள் ஆயிரம் ஆனால் சொல்ல முடிஞ்சது ஆறுதான்:-)

திரும்பிப் பார்க்கிறேன் II - 51

என்னுடைய மாற்றல் உத்தரவு வந்து சேர்ந்ததுமே என்னுடைய கிளையிலிருந்த பணியாளர்கள் மட்டுமல்லாமல் சென்னைக் கிளையிலிருந்த பணியாளர்களுள் பெரும்பாலோனோர் அதிர்ச்சியடைந்தனர்.

அதற்கு காரணகர்த்தாவாயிருந்த சென்னைக் கிளை மேலாளர் ஒருவரை எதிர்த்து மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன என்றும் கூட ஆலோசிப்பதாக என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் கூறியதும் பதறிப்போய் அப்போது சென்னையில் ஊழியர் மற்றும் கடைநிலை அதிகாரிகளுடைய சங்க தலைவராயிருந்தவரை தொடர்புக்கொண்டு எனக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு தயவுசெய்து அத்தகைய விபரீதத்தில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்களுடைய ஆர்ப்பட்டம் எனக்கு துணைபோவதை விட மேலும் சங்கடத்தையே விளைவிக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

மேலும் என்னுடைய உதவி மேலாளர் என்னிடம், 'நீங்க எதுக்கு சார் எல்லாத்துக்கும் நீங்கதான் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டீங்க? இதுதான் காலங்காலமா நடந்துக்கிட்டிருக்கு, என்னால நினைச்சாக்கூட அத தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. ஏன்னா எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் நடக்குதுன்னு சொல்லியிருக்கலாமே... அவரா நினைச்சிருந்தா நம்ம ப்யூன கூப்ட்ட வார்ன் பண்ணிருக்கலாமே சார். அவரும் சேந்துக்கிட்டு அவர் வீட்டு வேலைய எல்லாம் இவர்கிட்ட வாங்குனதாலதான அவர் அந்த அளவுக்கு சுதந்திரமா நினைச்ச நேரத்துல போறதும் வர்றதுமா இருக்க முடிஞ்சது? அதனால நீங்க பேசாம இதுக்கெல்லாம் காரணம் எங்க அசிஸ்டெண்ட் மேனேஜர்னுதான்னு சொல்லிட்டு போயிருக்கலாம். எனக்கும் டைரக்டர் லெவல்ல இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு சார். ஒங்களுக்கு நடந்தா மாதிரி நிச்சயம் எனக்கு நடந்துருக்காது. பேருக்கு ஒரு என்க்வயரின்னு வச்சி க்ளோஸ் பண்ணியிருப்பாங்க.' என்றார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். அவர் அதற்கு முன்பு அந்த தொனியில் என்னிடம் பேசியதேயில்லை. இருப்பினும் அதை பெரிதுபடுத்துவதில் பயனில்லை என்று நினைத்து, 'சரி போகட்டும்.. எதெது நடக்குமோ அதது நடக்கும்கறதுல நம்பிக்கையுள்ளவன் நான்.' என்றேன்.

உண்மைதான் நான் என்னுடைய உதவி மேலாளர் மீது பழியைப் போட்டிருக்கலாம். ஆனால் அது என்னுடைய மனசாட்சிக்கு விரோதமான செயல் என்று நினைத்தேன். நான் ஏற்கனவே கூறியிருந்ததுபோல அதற்குப் பிறகு நான் அந்த கிளையில் மேலாளராக நீடித்திருக்க முடியாது. நான் என்ன சொன்னாலும் அதற்கு என்னுடைய உதவியாளர்கள் மத்தியில் மதிப்பிருக்காது. இவரை நம்பினால் நம்மை நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அவர்களை நம்முடைய விருப்பத்திற்கு வேலை வாங்குவது இயலாததாகிவிடும்.

அத்துடன் நான் விரோதித்திருந்த உயர் அதிகாரி வேறெந்த வழியிலாவது என்னை பழிவாங்கியிருப்பார் என்றும் அறிந்திருந்தேன். அவர் என்னை மட்டுமல்லாமல் தன்னை விரோதித்த அனைவரையுமே பழிவாங்குவதில் குறியாயிருந்தார் என்பதை அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தினத்தன்று தலைமை அலுவலக ஊழியர்கள் பத்தாயிரம்வாலா சரவெடிகளை அவர் வாகனத்தின் முன்பு கொளுத்தி மகிழ்ந்தனர் என்பதைக் கேள்விப்பட்டபோது தெரிந்துக்கொண்டேன்.

பதவியிலிருக்கும்போது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடாமல் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்வது என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இல்லாவிடில் பதவி பறிபோனதும் அதுவரை இருந்த மதிப்பும் மரியாதையும் சேர்ந்து போய்விடும் என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.

பத்தே மாதத்தில் மேலாளர் பதவியிலிருந்த இறக்கப்பட்டத்தில் மனவருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால் செய்த தவறை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டு அதற்குரிய தண்டனையை உடனே பெற்றுக்கொள்வது அதை மறைத்து அதனால் ஏற்படும் மன உளைச்சலில் அவதிப்படுவதை விட மேலானது. தண்டனையைப் பெற்றதுமே நம்மீது மனத்தாங்கல் கொண்டிருந்தவர்கள் கூட நம்மைப் பார்த்து அனுதாபப்படுவர் என்பதையும் அதன் பிறகு மீண்டும் வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது உணர்ந்தேன்.

*****

நான் பணிக்கு சேர்ந்த அதே வாரத்தில் புது வட்டார மேலாளரும் பணிக்கு சேர்ந்தார்.

என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் மாற்றலாகி வந்திருந்த அதே அலுவலகத்தில்தான் என்னுடைய முந்தைய சீஃப் மேலாளரும் (என்னுடைய இலாக்கா அதிகாரியாக இருந்தவர்) பணிபுரிந்திருந்தார். ஆகவே என்னைப் பற்றி மிக நன்றாகவே (எதிர்மறை!) கூறியிருப்பார் போலிருக்கிறது. வந்து பொறுப்பேற்ற மறுநாளே என்னுடைய அப்போதைய இலாக்கா அதிகாரியிடம் என்னைக் குறித்து விசாரித்ததாக அவரே என்னிடம் வந்து கூறினார். 'என்ன டிபிஆர் ஒங்களப்பத்தி அவ்வளவா நல்ல ஒப்பீனியன் இல்ல போலருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு ஒங்களபத்தி அவர் கேள்விப்பட்டது சரியில்லைன்னு சொல்லியிருக்கேன், டோண்ட் ஒர்றி.' என்றார்.

இது எல்லா நிறுவனங்களிலும் நடக்கக் கூடியதுதான். நம்மால் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்திப்படுத்த முடிவதில்லை. நாம் எப்படி நம்முடைய கருத்துக்களை எல்லா நேரத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது சரியாகாதோ அதுபோலவே மற்றவர்களுடைய கருத்தை நாமும் எல்லா நேரங்களிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என்பதும் தவறாகாது.

நம்மில் சிலர் மற்றவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக முடியாத சமயத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது அதை மிக நாசூக்காக வெளிப்படுத்திவிடுகிறோம்.

நான் இரண்டிலுமிருந்து மாறுபட்டவன். என்னுடைய மனதில் தோன்றும் ஒவ்வாமையை உடனே முகத்தில் மட்டுமல்லாமல் வார்த்தையிலும் காட்டிவிடுவது வழக்கம். Highly emotional என்பார்களே அந்த ரகம். அத்துடன் Highly expressive முகமும்! நண்பர்களையும் மிக எளிதில் விரோதிகளாக்கிவிட இது நல்ல காம்பினேஷன் என்பார் என்னுடைய முன்னாள் வங்கி முதல்வர்களுள் ஒருவர்.

காலப்போக்கில் அது சற்று குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும் இன்றும் என்னுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்ள சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. என்ன செய்வது.. இறைவனின் படைப்பு அப்படி அமைந்துப்போனது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

அவர் முந்தைய வட்டார மேலாளரைவிடவும் வயதில் குறைந்தவர். நன்கு படித்திருந்ததுடன் விஷய ஞானமும் அதிகம். ஆனால் அத்துடன் அல்லது அதனால் அவருக்கிருந்த ஈகோதான் என்னுடன் மட்டுமல்லாது அவருக்கு கீழ் பணியாற்றிய அனைவருடனான தனிமனித உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அத்துடன் அவரிடம் காணப்பட்ட இன, மத மற்றும் மொழி வெறியும் அவருடன் சுமுகமான உறவு வைத்துக்கொள்ள தடையாயிருந்தன. நடுத்தரத்திற்கும் சற்று கீழேயிருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்ததால் அவரை விட பொருளாதாரத்தில் சற்று மேலானவர்களிடம் தேவையில்லாத ஒரு வெறுப்பு. இதை பல சமயங்களிலும் நேரடியாக அவர் காட்டியதை பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக ஒரு பெரிய தொழிலோ அல்லது வர்த்தகமோ துவங்க விரும்பி வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை தேவையில்லாமல் தன்னுடைய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளால் நிந்தித்ததை பார்த்திருக்கிறேன். 'என்ன பண்றது டிபிஆர்? நாம குடுக்கற கடன் ஒழுங்கா திரும்பி வந்தாப் போறும்னுதான நாமல்லாம் நினைப்போம்? அதுக்குத்தான வசதிபடைச்சவங்களுக்கு லோன் குடுக்க நாம ப்ரிஃபர் பண்ணுவோம்? ஆனா இவர் என்னடான்னா அந்த மாதிரி ஆளுங்கள கண்டால எரிஞ்சி விழறார்.. எங்க போய் சொல்றது?' என்று என்னுடைய வட்டார கடன் வழங்கும் இலாக்கா தலைவர் அங்கலாய்க்காத நாளே இல்லை எனலாம்.

அதிலும் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய கடன் விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலனை செய்யவோ அல்லது மேலிடத்துக்கு பரிந்துரைக்கவோ கேட்க வந்துவிட்டால் போதும் மனிதர் சாமியாட்டம் ஆடிவிடுவார். 'என்னங்க என்னெ வளைச்சி போடலாங்கற நினைப்புல வந்தீங்களா?' என்பார். 'அதுக்கெல்லாம் மசியற ஆள் நான் இல்லை. லோன் அப்ளிகேஷன குடுத்துட்டு அத ஃபாலோ பண்ணி என்னெ வந்து பாக்கற வேலையையெல்லாம் இத்தோட விட்டுருங்க. ஒங்களுக்கு லோன் வாங்கற தகுதியிருந்தா போறும்... தன்னால லோன் கிடைச்சிரும்.. இல்லன்னா நீங்க எத்தன தடவ நடந்தாலும் கிடைக்காது.. போய்ட்டு வாங்க.'

இப்படியாக என்னுடன் கருத்தொற்றுமை ஏற்படாத அந்த வட்டார மேலாளர் கையில் சுமார் மூன்று வருடங்கள் நான் பட்ட பாடு சொல்லி மாளாது.


Thodarum

17 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 50

ஒரு வங்கி கிளையைப் பொறுத்தவரை அதனுடைய மேலாளர்தான் அங்கு நடைபெறும் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. அவருக்கு கீழ் எத்தனை அதிகாரிகள் பணியாற்றினாலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பாக விதிமீறல்களுக்கும் மேலாளர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

மேலாளர் விடுப்பில் இருக்கும் நேரத்திலோ அல்லது அவர் வெளி அலுவல்களுக்காக கிளையில் இல்லாதிருக்கும் நேரத்திலோ நடைபெறும் விதி மீறல்களுக்கு அவர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் அவ்வாறு அலுவலகத்தில் இல்லாமல் போனாலும் விடுப்பிலிருந்தோ வெளி அலுவலிலிருந்தோ கிளைக்கு திரும்பியதுமே அவர் இல்லாதிருந்த சமயத்தில் கிளையில் நடைபெற்ற முக்கியமான செயல்களை (Transactions) ஆய்வு செய்ய வேண்டுமென்பது வங்கியின் முக்கிய நியதிகளுள் ஒன்றாக இருந்தது. அத்தகைய ஆய்வின் முடிவில் வங்கியின் விதிகள் மீறப்பட்டதை காணும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் தேவைப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரைக்கவும் மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அத்தகைய விதிமீறல்களால் வங்கிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணரும் பட்சத்தில் அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டிய கடமையும் மேலாளருக்கு உண்டு. ஒரு கிளையின் மேலாளருக்குள்ள விஷயஞானமும் அனுபவமும் அவருக்கு கீழ் பணியாற்றும் உதவி மற்றும் துணை அதிகாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களுடைய அறியாமையாலும் அனுபவமின்மையாலும் பல விதிமீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலேயே அவர்களுடைய செயல்களை கிளை மேலாளர் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற நியதியை நிர்ணயித்திருந்தது.

ஆனால் பெரிய மற்றும் மிகப்பெரிய கிளை (large and extra large branches) மேலாளர்களுக்கு இந்நியதியிலிருந்து ஓரளவு விதிவிலக்கு இருந்தது. என்னுடைய கிளையும் இத்தகைய கிளைகளில் ஒன்றாயிருந்தது என்றாலும் என்னுடைய கிளையில் நடந்திருந்த விதிமீறல்களை என்னுடைய உதவி அதிகாரியின் மீது சுமத்த நான் விரும்பவில்லை.

அதற்கு என்னுடைய நல்லெண்ணம் மட்டுமே காரணமில்லை. என்னுடைய சிப்பந்தியின் நடவடிக்கை எனக்கு பல நாட்களாகவே தெரிந்திருந்தும் அதை சரிசெய்ய என்னால் முடியாமல் போனதும் அதன் விளைவாக விதிமீறல்கள் தொடர்ந்துக்கொண்டிருந்ததும் ஒரு காரணம். ஆகவே சம்பவ தினத்தன்று நடந்த விதிமீறல்கள் நான் கிளையில் இல்லாத நேரத்தில் நடந்திருந்தன என்பதைக் காரணம் காட்டி தட்டிக்கழிப்பதில் பயனில்லை என்பதையும் அதுவே பிறகு விசாரனையில் தெரியவரும் பட்சத்தில் எனக்கெதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்பதையும் நான் உணர்ந்திருந்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஆகவே விளக்கம் கோரி வந்திருந்த கடிதத்தில் பட்டியிலடப்பட்ட எல்லா விதிமீறல்களுக்கும் பொறுப்பேற்பதாகவும் இனி அத்தகைய விதிமீறல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்வேன் என்றும் வாக்குறுதியளித்து என்னுடைய பதிலை அனுப்பினேன்.

என்னுடைய பதில் என்னுடைய வட்டார மேலாளருக்கு கிடைத்தவுடனே எனக்கு தொலைபேசி வந்தது. 'என்ன டிபிஆர். இப்படி எழுதிட்டீங்க? அதுவும் இந்த சமயத்துல?' என்றார்.

அவர் இந்த சமயத்துல என்றதற்கு காரணம் இருந்தது. எனக்கு மிகவும் நெருக்கமாயிருந்த வங்கி முதல்வரின் பதவிக்காலம் முடிந்து அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஒரு வார காலமே இருந்தது.

'சேர்மன் ரிட்டையர்டாயிட்டா புது சேர்மன் வர்ற வரைக்கும் சார்ஜ்ல இருக்கப் போறவர் யார்னு தெரியுமில்லே?' என்றார் அடுத்தபடியாக.

ஆம். எனக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட காரணமாக இருந்த அதிகாரியேதான் அவர். 'தெரியும் சார். ஆனா...'

'ஆனா என்ன? பேசாம நம்ம --------------- சொன்னாமாதிரி நீங்க அந்த ப்யூன் போன நேரத்துல ஆஃபீஸ்ல இல்லேன்னு சொல்லிர வேண்டியதுதான? அதுக்கப்புறம் அவர நாம எப்படியாவது சேவ் பண்ணியிருக்கலாமே?'

'சாரி சார். அப்படி நான் செஞ்சேன்னா அப்புறம் நா என்ன சொன்னாலும் என் அசிஸ்டெண்ட்ஸ் செய்யமாட்டாங்க. அதுக்கப்புறமும் நா இங்க மேனேஜரா கண்டினியூ பண்றதுல அர்த்தமேயிருக்காது.' என்றேன்.

அவர் கேலியுடன், 'இப்பவும் அதான் நடக்கப் போவுது..' என்றார். பிறகு தொடர்ந்து, 'நீங்க ஒன்னு பண்ணுங்க.' என்றார் அவசரமாக.

'சொல்லுங்க சார்.' என்றேன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஊகித்தவாறு.

'நீங்க சேர்மன அவரோட பர்சனல் லைன்ல கூப்ட்டு சார் நா இந்த மாதிரி ரிப்ளை குடுத்திருக்கேன். நீங்க போறதுக்குள்ள ஒரு டிசிஷன் எடுத்துட்டு போங்க சார்னு கேளுங்க. அவர் நினைச்சா ஒங்க ஆக்ஷன கண்டோன் (condone) பண்ணிட்டு போயிரலாமே..'

நான் இதை எதிர்பார்த்திருந்ததால், 'அது நல்லாருக்காது சார். அப்படியே அவர் செஞ்சிட்டு போனாலும் இவர் மறுபடியும் அத ரீஓப்பன் பண்ண முடியாதா என்ன? நீங்க சொன்னா மாதிரி என்னெ இங்க மாத்தணும்னு அவர் நினைச்சா கண்டிப்பா செய்வார் சார்... I am prepared for that.' என்றேன்.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளரே அப்போதைய வங்கி முதல்வரை தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி இத்தகைய விதிமீறல்கள் சென்னையிலிருந்த பல பெரிய கிளைகளிலும் நடந்துக்கொண்டுதான் இருந்தன என்றும் சிப்பந்தி விபத்தில் சிக்கி மரணமடைந்தது ஒரு தற்செயலாக நடந்து துரதிர்ஷ்ட சம்பவம் என்றும் ஆகவே என்னுடைய விளக்கத்தை பெரிதுபடுத்தாமல் என்னை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டார் என்றும் அதற்கு வங்கி முதல்வர் தன்னுடைய இயலாமையை தெரிவித்துவிட்டார் என்றும் அவர் (முதல்வர்) வாயிலாகவே பிறகு தெரிந்துக்கொண்டேன்.

மேலும் அவர் பதவியிலிருந்த அந்த ஒரு வார காலத்தில் என்னுடைய விளக்க அறிக்கையை அவருடைய பார்வைக்கே கொண்டுவராமல் என் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த உயர் அதிகாரி (சென்னை கிளை மேலாளரின் சகோதரர்) தடுத்துவிட்டார் என்பதும் பிறகு தெரிந்தது.

வங்கி முதல்வர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதல் வாரத்திலேயே என்னுடைய பதவி பறிபோனது. இது என்னுடைய அலுவலக வாழ்க்கையில் இரண்டாவது சருக்கல்.

அத்துடன் எனக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரிடம் பேசிய என்னுடைய வட்டார மேலாளரும் மாற்றப்பட்டார்.

என்னுடைய நல்ல நேரம் கிளையிலிருந்து மாற்றப்பட்டாலும் சென்னையை விட்டு மாற்றாமல் மீண்டும் சென்னை வட்டார அலுவலகத்திற்கே மாற்றம் ஏற்பட்டது..

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்பதுபோல் மீண்டும் வட்டார அலுவலக மேசை அதிகாரியாக என்னுடைய அலுவலக வாழ்க்கை தொடர்ந்தது...

தொடரும்..

16 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 49

விளக்கம் கேட்டு எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதி மீறல்கள் எல்லாமே பதிலளிக்க முடியாதவை என்பது எனக்கு மட்டுமல்ல என்னிடம் கேள்வி கேட்டிருந்த மேலதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தன.

இருந்தும் என்னிடம் அவற்றிற்கு விளக்கம் கேட்கப்பட்டதன் காரணம் ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

இதுதான் எல்லா நிறுவனங்களிலும் நடக்கும் ஒரு நாடகத்தனம். குற்றம் செய்ததாக கருதப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவர் செய்ததாக கருதப்பட்ட குற்றங்களுக்கு விளக்கம் கோருவது ஒரு சம்பிரதாயம். அவ்வளவுதான்.

பல சமயங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதென தீர்மானித்த பிறகும் அதை செயல்படுத்துவதற்கு முன்பு வெறும் கடமைக்காக மட்டுமே செயல்படுத்தப்படும் ஒரு சடங்காகவும் இது அமைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மேலும் விளக்கம் கோரி அனுப்பப்படும் கடிதத்திலேயே தாங்கள் அளிக்கவிருக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தங்கள் மீது தேவைப்பட்டால் ஒரு பாரபட்சமற்ற விசாரனைக்கு உத்தரவிடப்படும் என்ற எச்சரிக்கையும் இருக்கும். அதாவது அவர் அளிக்கு விளக்கம் திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஏற்கனவே வந்துவிட்டார் என்ற தொனியுடன் முடிக்கப்பட்டிருக்கும் அந்த கடிதம்!

அதைவிட வேடிக்கை அதனையடுத்து விசாரனை என்ற பெயரில் நடைபெறும் கூத்து!

அது பெரும்பாலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதாக கருதப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை மீண்டும் ஒருமுறை சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கபடுவதற்காக நடத்தப்படும் நாடகமாகவே அமைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்..

அலுவலகங்களில் நடைபெறும் இத்தகைய விசாரனைகளுக்கு (Departmental enquiry) சட்டபூர்வமான அங்கீகாரமும் இருப்பதுதான் வேடிக்கை. அதாவது இத்தகைய விசாரனைகளுக்கு உத்தரவிடக்கூடிய அதிகாரம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு அதை ஒரு தலைமை நிர்வாகத்தினர் நிர்ணயித்திருந்த சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடத்த வேண்டும். அதற்குட்பட்டு அவர் நடத்தும் விசாரணை சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட விசாரணையாகக் கருதப்பட்டுவிடும். இத்தகைய விசாரணைக்குப் பிறகு விதிக்கப்படும் தண்டனைகளை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகினாலும் பெரும்பாலான நீதிமன்றங்கள் அவற்றில் தலையிட மறுத்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே தலையிட்டாலும் விசாரனை நடத்த தேவையான அதிகாரம் குறிப்பிட்ட அதிகாரிக்கு அளிக்கப்பட்டிருந்ததா என்பதைப்பற்றி மட்டுமே அவை ஆராய்வது வழக்கம். அவை சரியான முறையில் நடத்தப்பட்டதா என்பதைக் கண்டுகொள்வதில்லை.

இத்தகைய விசாரனைகளுக்கு ஆளாகும் நபர் தனக்கு சாதகமாக வாதாட ஒரு சட்டம் படித்த வெளி வழக்கறிஞரையும் தன் செலவில் நியமித்துக்கொள்ள வங்கி நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதுபோன்றே நிர்வாகமும் இதற்கெனவே சட்டம் படித்த அதிகாரிகளை மடும்மே தங்களுக்கு சாதகமாக வாதாட நியமிக்கும். ஆனால் விசாரனை நடத்தும் அதிகாரி பெரும்பாலும் சட்ட அறிவு இல்லாதவராக இருப்பார்.

சில விசாரனைகளில் நடப்பவை கேலி கூத்தாக இருக்கும்.

ஒரு கிளை அதிகாரி போலி கையொப்பமிடப்பட்டிருந்த ஒரு காசோலையை பாசாக்கிவிட்டார் என்று அவர் மீது புகார். சம்பந்தப்பட்ட அதிகாரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கிளையில் இருந்த மாதிரி கையொப்பத்துடன் ஒப்பிட்ட பிறகுதான் அதை அனுமதித்தேன் என்று விளக்கமளித்திருந்தார். அந்த கையொப்பத்தைப் பார்த்தால் போலி என்று கூறப்பட முடியாத அளவுக்கு அத்தனை தத்ரூபமாக இருந்தது.

அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தன்னுடைய கையொப்பத்தின் கீழ் ஒரு சிறிய கோடு இடுவது வழக்கம். விசாரனையின்போது நிர்வாகத்தினர் சார்பாக வாதாடிய அதிகாரி கையில் ஒரு அளவுகோலை வைத்து சம்பந்தப்பட்ட காசோலையிலிருந்த கையொப்பத்தின் கீழிருந்த கோட்டையும் கிளையிலிருந்த மாதிரி கையொப்பத்தின் கீழிருந்த கோட்டையும் அளந்துவிட்டு இரண்டிற்கும் இடையிலிருந்து ஒரு மில்லி மீட்டர் வேறுபாட்டை நிரூபித்தார்!

எப்படியிருக்கிறது! இப்படி எத்தனையோ கேலி கூத்துக்கள், விசாரனை என்ற பெயரில் நடந்திருக்கிறது.

விளக்கம் கோருதல், விசாரனை என்ற பெயரில் தனிநபர் விரோதத்தை தீர்த்துக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். சுமார் முப்பாதாண்டு காலம் பணிபுரிந்த ஒருவர் ஓய்வுபெறும் நாளன்றோ அல்லது ஒருநாளுக்கு முன்பாகவோ அவரை இடைநிலை பணி நீக்கம் செய்வதோ அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் உண்டு.

இது தனியார் நிறுவனங்களில் அபூர்வம் என்றாலும் அரசு வங்கிகள், நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக இத்தகையை நடவடிக்கைகள் இப்போதும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரின் உறவினர் ஒரு அரசு வங்கியின் ஹாங்காங் கிளைகளின் வட்டார மேலாளராக பதவி வகித்து ஓய்வுபெறவிருந்தார். சாதாரணமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சற்று முன்னதாக இந்தியாவுக்கு மாற்றுவது வழக்கம். அதுபோன்று அவரும் சுமார் மூன்று மாத காலத்திற்கு முன்பு கிளையின் சென்னை வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

அவரை மாற்றிய கையோடு ஹாங்காங் கிளைகளில் அவர் பதவியிலிருந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன் கோப்புகளை அவசர அவசரமாக நிர்வாகம் ஆய்வு செய்தது. ஆயினும் அவர் மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாத அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. ஆயினும் அவர் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இல்லாத ஊழல் புகார்களை பட்டியலிட்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் அவரிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அவரால் எப்படியும் இருபத்திநான்கு மணி நேரத்தில் பதிலளிக்க இயலாது எனவும் அதை சாக்காக வைத்து அவரை ஓய்வு பெறவிருந்த நாளன்று பணிநீக்கம் செய்துவிடலாம் என்று நிர்வாகம் கருதியிருக்க கடிதத்தைப் பெற்றவர் சிறிதும் தாமதியாமல் சென்னை நீதிமன்றத்தில் தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் நிர்வாகம் தன்னை பணி நீக்கம் செய்ய தடைசெய்ய வேண்டும் என மனு செய்ய அவருடைய தரப்பிலிருந்த நியாயத்தைக் கண்ட நீதிமன்றம் தாமதியாமல் தடையுத்தரவை பிறப்பித்தது..

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளிலிருந்து அவர் முழுவதுமாக விடுபெற சுமார் ஏழாண்டுகள் பிடித்தன!

என்னுடைய வங்கியில் இதுவரை அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கவில்லை என்றாலும் ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக விளக்கம் கோருவது, அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இருந்தாலும் வேண்டுமென்றே விசாரனைக்கு உத்தரவிடுவது போன்ற விஷயங்கள் நடந்துக்கொண்டுதானிருந்தன.

ஆகவே என்னிடம் விளக்கம் கோரி கடிதம் வந்ததும் இது ஏதோ திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகவே எனக்கு தோன்றியது.

என்னுடைய கிளையில் நடந்திருந்த விதிமீறல்கள் வருடக்கணக்காக நடந்து வந்திருந்தவைதான் என்பது எனக்கு மட்டுமல்லாமல், என்னுடைய வட்டார அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகத்திற்கும் தெரிந்துதானிருந்தன. நான் குறிப்பிட்ட சிப்பந்தி வருடக்கணக்காக அலுவலகத்திற்கு நினைத்த நேரத்தில் வருவதும் போவதும் நடந்துக்கொண்டுதானிருந்தது. வருடாந்தர ஆய்வு நேரத்திலும் அவருடைய இந்த போக்கை நேரிலேயே பார்த்திருந்த ஆய்வாளர்களும் அதைப்பற்றி தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டதில்லை. அவர் அலுவலக சூட்கேசில் மதுபாட்டில்களை வாங்கி வருவதும், விநியோகம் செய்வதும் வருடக்கணக்காக நடந்துவந்திருந்தவைதான். ஆனால் அவற்றால் அதுவரை யாருக்கும் எந்தவித இழப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆகவே அவற்றை யாரும் அதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இத்தகைய விதிமீறல்களை அவற்றால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் என்னைப் போன்ற எந்த மேலாளரும் அனுமதித்து வந்திருந்தததற்கு எழுத்து மூலமாக நியாயம் கற்பிக்க முடியாவிடினும் அவற்றை முழுவதுமாக தவிர்க்க முடியாத சூழலில்தான் நாங்கள் அப்போது இருந்தோம்.

இல்லாவிட்டால் கிளையை பிரச்சினையில்லாமல் நடத்திச் செல்ல இயலாது. இதைத்தான் நீக்கு போக்குடன் நடந்துக்கொள்வது என்பது!

ஆகவே என்னுடைய கிளையில் நடந்திருந்த இத்தகைய விதிமீறல்களை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று எனக்கு தெரிந்துதானிருந்தது. ஆயினும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

ஆனால் அதற்கு முன்பு எத்தகைய விளக்கத்தை என்னிடமிருந்து நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டால் நல்லது என்று எனக்கு தோன்றியது. ஆகவே என்னுடைய தலைமையகத்தில் இருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான அதிகாரியை தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். அவரோ சிரித்தவாறு, 'நீங்க எதுக்கு டிபிஆர் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் ரெஸ்பான்சிபிளிட்டி எடுத்துக்கணும்? பேசாம இது என்னோட வேலையில்லை. என்னோட அசிஸ்டெண்ட் மேனேஜரோட பொறுப்புன்னு சொல்லிருங்க. அதுவுமில்லாம அந்த ப்யூன் சம்பந்தப்பட்ட அன்றைக்கு ஆஃபீஸ்லருந்து போனப்போ நீங்க அங்க இல்லையே.. அப்புறமென்ன? அப்படியே ரிப்ளை பண்ணிருங்க. அப்புறம் அது அவர் பாடு. வேணும்னா ஒங்களுக்கு இருக்கற இன்ஃப்ளூயன்ச வச்சி அவர சேவ் பண்ண பாருங்க. டோண்ட் ஒர்றி.' என்றார் கூலாக.

தொடரும்

11 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 48

என்னுடைய சிப்பந்தியின் மரணச் செய்தி எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவர் மரணமடைந்த விதம் பல சிக்கல்களை ஏற்படுத்தியது.

ஒன்று, அவர் மரணமடைந்த நேரம். காவல்துறையினரின் முதல் தகவலறிக்கையின்படி மாலை சுமார் ஏழு மணியளவில் ஆவடி ரயில்நிலையத்தைக் கடந்த ரயிலில் அடிபட்டிருந்தார். சிப்பந்திகள் சாதாரணமாக 5.15 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். என்னுடைய கிளையிலிருந்து ஆவடி சுமார் இருபத்தைந்து கி.மீ. தூரத்திலிருந்தது என்பது எல்லோருமே அறிந்த விஷயம். அப்போதெல்லாம் ஆவடிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிக்கு ஒருமுறை மட்டுமே மின் ரயில் இருந்தது. இதன் அடிப்படையில் அவர் நிச்சயம் அலுவலக நேரம் முடிந்தபிறகு சென்றிருக்க முடியாது என்பது நிரூபணமானது.

இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம். ஆனால் இறந்தவருடைய குடும்பம் இழப்பீடு கோரும் சமயத்தில் இது மிகவும் முக்கியமானதாகிறது. அலுவலக பணி நேரத்திலோ அல்லது அவர் அலுவலக விஷயமாகவோ வெளியில் சென்ற நேரத்தில் விபத்தில் சிக்கி இறந்திருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதுண்டு. ஒருவர் குறிப்பிட்ட பணிக்காக அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற நேரமே இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர் குறிப்பிட்ட பணியை முடித்து அலுவலகம் திரும்ப எத்தனை மணி நேரமானாலும் அவர் அலுவலக பணிநேரத்தில் இருப்பதாகவே கணக்கில் கொள்ளப்படும். ஆகவே என்னுடைய சிப்பந்தி அலுவலக நேரத்தில்தான் ஆவடிக்கு சென்றிருக்கிறார் என்பது குடும்பத்தாரின் வாதமாக இருக்கும் பட்சத்தில் இழப்பீடு தொகையை மறுக்க முடியாமல் போய்விடும்.

இதில் வேறொரு சிக்கல். சாதாரணமாக அலுவலக பணிக்காக அலுவலக நேரத்தில் வெளியில் செல்லும் பணியாளர் அதற்கென வைத்திருக்கும் தனி புத்தகத்தில் புறப்படும் நேரம், செல்லவிருக்கும் இடம் ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதுபோன்றே திரும்பி வந்ததும் வந்து சேர்ந்த நேரத்தையும் குறிக்க வேண்டும். இதை செயல்படுத்துவது உதவி மேலாளரின் பணி. ஆனால் இது வெறும் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவது வழக்கம். 'இதல்லாம் ப்ராக்ட்டிகலாருக்காது சார்.' என்பார்கள். அதை பல மேலாளர்களும் கண்ணடைத்து ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பிரச்சினை என்று வந்துவிட்டால் கை கழுவி விடுவார்கள். அதன் பிறகு உதவி மேலாளர்தான் பொறுப்பு.

என்னுடைய கிளையில் நான் குறிப்பிட்ட சிப்பந்தியைத் தவிர மற்ற எல்லோருமே இந்நியதியை ஒழுங்காகக் கடைபிடித்து வந்திருந்தனர். சாதாரணமாக அவரை அலுவலக பதிவேட்டில் (attendance register) தினமும் கையொப்பமிட வைப்பதே பெரிய வேலையாயிருக்கும். 'சார் டைம் கிடைக்கறப்பத்தான் சைன் பண்ண முடியும்.' என்பார் கேட்டால். ஆனால் அன்று என்ன நினைத்தாரோ வெளியில் சென்ற நேரத்தைக் குறிப்பிடாமல் சாதாரணமாக அலுவலகத்திலிருந்து புறப்படும் நேரத்தை (5.15) எழுதி இனிஷியல் செய்துவிட்டு சென்றிருந்தார்! இது வேறொரு சிக்கல். உண்மைக்கு புறம்பானதாயிற்றே.

இது ஒருபுறமிருக்க அவர் அலுவலக பயனுக்காக வாங்கியிருந்த சூட்கேசை கொண்டு சென்றிருந்தார். அதற்கு முன்பு அதை அவர் மட்டுமல்ல பலரும் பல சமயங்களில் பல தனிப்பட்ட காரணங்களுக்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் சம்பவம் நடந்த அன்றைக்கு அவர் கொண்டு சென்றது முக்கியமான விஷயமாக ஆகிப்போனது.

போறாததற்கு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்ததால் அது உள்ளூர் தமிழ் பத்திரிகைகள் ஒன்றில் 'வங்கி ஊழியர் குடிபோதையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது அடிபட்டு மரணம்' என்றும் 'அவர் கையிலிருந்த சூட்கேசில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிப்பு' என்றும் வெளிவந்துவிட அலுவலக சூட்கேசில் மதுபாட்டிலா என்று வேறு பிரச்சினை.

அவர் அந்த நேரத்தில் ஆவடி செல்வதற்கு முதன்மைக் காரணகர்த்தாவாகவிருந்தவர் சென்னை கிளையொன்றில் அப்போது மேலாளராக இருந்தவர். என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் அப்போது உயர் பதவியிலிருந்த ஒரு அதிகாரியின் இளைய சகோதரர். ஆகவே தனக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லையென்பதுபோல் கழன்றுக்கொண்டது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட சிப்பந்தி பணிபுரிந்த கிளையின் மேலாளர் என்ற முறையில் இதற்கு நாந்தான் பொருப்பு என்றுவேரு வத்தி வைத்துவிட்டார். அத்துடன் நில்லாமல் சம்பந்தப்பட்ட சிப்பந்திக்கு குடும்பப் பிரச்சினை என்றும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் ஆகவே அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் தரத் தேவையில்லையென்றும் தன்னுடைய மூத்த சகோதரரிடம் கூற அவர் அதை அப்படியே என்னுடைய வங்கி முதல்வரிடம் தெரிவித்துவிட்டார்.

என்னுடைய சிப்பந்தி உறுப்பினராயிருந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கிளை மேலாளருடைய இந்த இரக்கமற்ற வாதத்தில் வெகுண்டு அவருடைய கிளை மற்றும் என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு முன்பாக மதிய உணவு இடைவேளையின்போது கோஷம் இட பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

1. சம்பந்தப்பட்ட மேலாளர் சிப்பந்தியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
2. சிப்பந்தியின் வருங்கால மாத வருமானத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும்.
3. சிப்பந்தியின் மூத்த மகனுக்கு சிப்பந்தி பதவி வழங்கவேண்டும்.

கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் சிப்பந்தியின் மனைவியைக் கொண்டே என்னுடைய வட்டார மேலாளரிடம் கொடுக்கப்பட்டது.

அவரும் வேறு வழியில்லாமல் அதை என்னுடைய தலைமையகத்துக்கு அனுப்பிவைத்தார்.

மகஜர் அங்கு சென்று கிடைத்ததுதான் தாமதம், என்னுடைய எச்.ஆர் இலாக்காவிலிருந்து ஒரு குழுவே வந்து ஆதி முதல் அந்தம் வரை ஆராயத்துவங்கி என்னுடைய கிளையில் வங்கியின் நியதிகள் மீறப்பட்டிருப்பதை பட்டியலிட்டு என்னவோ அது மட்டுமே அவருடைய மரணத்துக்கு காரணம் என்பதுபோல் ஒரு அறிக்கையும் தயாரித்து வங்கி தலைவருடைய நேரடி பார்வைக்கு அனுப்பிவைத்தது.

இதற்கு பின்னாலிருந்தது சம்பந்தப்பட்ட சென்னை கிளை மேலாளர்தான் என்பதை உணர்ந்த நான் என்னுடைய சிப்பந்தி சார்ந்திருந்த தொழிற்சங்க தலைவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து எனக்காக வங்கி முதல்வரிடம் பரிந்து பேசுமாறு கேட்டேன். வங்கியின் நியதிகளின்படி ஒரு கிளை மேலாளர் ஊழியர்களுடைய தொழிற்சங்க தலைவரிடம் நேரடியாக பேசலாகாது என்றாலும் வருவது வரட்டும் வாளாவிருந்தால் நமக்குத்தான் ஆபத்து என்று கருதியே அந்த இறுதி முயற்சியில் இறங்கினேன். மேலும் அந்த சங்கத்தின் தலைவரும் ஒருகாலத்தில் என்னுடன் குமாஸ்தாவாக சென்னை கிளையொன்றில் பணியாற்றியிருந்தார் என்பதால் அவருடன் unofficialஆக கோரிக்கை வைக்கவும் முடிந்தது.

அவரும் உடனே சென்னையிலிருந்த சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க அதுவே வேறொரு பிரச்சினையாக வெடித்தது. அவர் மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த அனைத்து ஊழியர்களுக்குமே என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதாலும் சம்பந்தப்பட்ட சென்னை கிளை மேலாளரின் மூத்த சகோதரரான உயர் அதிகாரியையும் பெரும்பாலான ஊழியர்களுக்கு பிடிக்காததாலும் சென்னைக் கிளை மேலாளருடன் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவெடுத்ததுடன் அவருக்கு தனிப்பட்ட தொல்லைகளும் கொடுப்பதில் இறங்கினர்.

இதற்கும் நாந்தான் காரணம் என்று அவர் தன் சகோதரிடம் போட்டுக் கொடுக்க ஏற்கனவே என்மீது வன்மத்துடன் இருந்த அவர் தன் பங்குக்கு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்த விதி மீறல்களுக்காக என் மீது விசாரனை வைக்க வேண்டும் என்று என்னுடைய வங்கி மேலாளரிடம் புகார் செய்திருக்கிறார்.

நல்லவேளையாக வங்கி முதல்வருக்கும் என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் மீதும் சென்னையிலிருந்த அவருடைய சகோதரர் மீதும் நல்ல எண்ணம் இருக்கவில்லை.

இருந்தும் அவருடைய பரிந்துரையை தட்ட முடியாமல் அடுத்த சில தினங்களில் என்னுடைய கிளையில் நடந்ததாக கூறப்பட்ட விதி மீறல்களுக்கு பதிலளிக்கும்படி எனக்கு கடிதம் வந்தது!


தொடரும்…

10 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 47

வங்கிகள் அரையாண்டு மற்றும் ஆண்டு கணக்குகளை முடிப்பதெற்கன செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களின் இறுதி வேலை தினங்களில் விடுமுறை அறிவிப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

விடுமுறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. வங்கியில் பணிபுரிபவர்களுக்கு அப்போதெல்லாம் அந்த நாட்களுக்கு முன்பும் பின்பும் சுமார் இரு மாதங்களுக்கு வேலை நெட்டி முறித்துவிடும்.

வங்கி செயல்பாடுகள் முழுவதுமே கணினி மயமாக்கப்பட்டுள்ள இந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அந்த காலத்தில் பணிபுரிந்தவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள்தான்.

எனக்கு பெப்ரவரி மாதம் பதினான்காம் நாள் திருமணம் நடந்தது. அந்த காலத்தில் ஆண்டு இறுதி கணக்கு முடிப்பது டிசம்பர் மாதம் 31ம் நாள். ஆனால் அதன் பிறகு கிளையின் ஆடிட் நடந்து முடியும்வரை கொசுறு வேலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். கணினி மயமாக்கப்படாத அந்த காலத்தில் கிளை தணிக்கையே ஒருமாத காலம் நடக்கும்.

இப்போதுள்ளது போன்று கணக்குகளில் வட்டி வரவு மற்றும் பற்று வைக்கப்படுவதை கணக்கிடவும் பிறகு அதை சரிபார்க்கவும் மென்பொருள் ஏதும் இருக்கவில்லை. நாம் கணக்கிடுவதற்கு எத்தனை நேரம் செலவிடுகிறோமோ அதுபோன்றே ஏன், சில சமயங்களில் அதற்கும் மேலாகவே நேரம் அதை தணிக்கை செய்யவும் தேவைப்படும்.

டிசம்பர் மாதம் முடிக்கப்பட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு நாங்கள் செய்தவை யாவும் சரி என்று முத்திரையிடப்படும்போது மார்ச் மாதம் ஆகிவிடும். பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் தணிக்கையாளர்கள் கிளைக்கு வந்துவிட்டால் என்னைப் போன்ற கடைநிலை அதிகாரிகள் வீடு திரும்பவே நள்ளிரவாகிவிடும்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எத்தனை உண்மையோ அதுபோலத்தான் முகூர்த்த நாட்களும்! தூத்துக்குடி போன்ற ஊர்களிலுள்ள கிறிஸ்துவ குடும்பங்களும் இந்த தை மாத திருமணங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். தூத்துக்குடி போன்ற சிறு நகரங்களில் மட்டுமல்லாமல் சென்னையிலும் இப்போதெல்லாம் இது பரவலாகி வருகிறது என்பது வேறுவிஷயம். என்னுடைய திருமண தேதியை நான் கிளையில் தெரிவித்ததுமே என்னுடைய மேலாளர், 'என்ன டிபிஆர் நீங்க இந்த சமயத்துல மேரேஜ் வச்சிக்கிட்டா எப்படி?' என்று எரிந்து விழுந்தார்.

இந்த காலத்து இளைஞர்களைப் போன்று திருமண நாள் குறிப்பது எங்கள் கையில் இருக்கவில்லையே. 'டேய் அதெல்லாம் பெரியவங்க விஷயம். நீ எத்தன நாள் லீவு போடமுடியுமோ போட்டுக்கோ. டேட்டெல்லாம் மாத்த முடியாது. நீ இல்லாட்டா பிராஞ்ச் நடக்காதா?'' என்று கேட்கும் பெரியவர்களை எதிர்த்து பேச தைரியமும் இருக்கவில்லை.

எப்படியோ கெஞ்சி கூத்தாடி ஒருவார விடுப்பு கிடைத்தது. திருமணம் முடிந்த கையோடு சென்னை திரும்பிய அடுத்த திங்களே பணிக்கு சேர வேண்டிய கட்டாயம் என்பதுடன் அடுத்த ஒரு மாத காலம் நள்ளிரவுக்கு முன்பு வீடு திரும்பக்கூட முடியவிலை. என்னுடைய மனைவியின் நிலைதான் பரிதாபம். இருப்பினும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இதான் நம்ப தலைவிதி போலருக்கு என்று அதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய குமாஸ்தா மற்றும் கணக்காளர் (accountant) அனுபவத்தில் இந்த சமயங்களிலும் சரியாக ஐந்து மணிக்கு கிளையிலிருந்து வெளியேறும் பல கிளை மேலாளர்களை கண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய திருமண நடந்தபோது நான் பணியாற்றிய கிளை மேலாளர் சற்று கோப சுபாவமுள்ளவர் என்றாலும் அவரும் என்னுடனே அமர்ந்திருப்பார். அவருக்கு மணிக்கு ஒரு சிகரெட் வேண்டும், அவ்வளவுதான். அவர் குடியிருந்த பகுதியான அண்ணாநகருக்கு செல்லும் வழியில்தான் நானும் குடியிருந்ததால் அவருடைய நாற்சக்கர வாகனத்திலேயே என்னையும் கூட்டி செல்வார். அது ஒருவகையில் வசதியென்றாலும் கடைசி பஸ் போயிரும் சார் என்ற சாக்கில் பத்து மணிக்கு வீடு திரும்பக் கூடிய வாய்ப்பும் பறிபோனது!

ஆனால் அப்போதெல்லாம் இந்த சமயங்களில் ஒரு த்ரில் இருந்தது. இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்த கிளையில் ஒவ்வொன்றிலும் வட்டி கணக்கிட்டு வரவு மற்றும் பற்று வைத்து முடித்து எல்லா கணக்கிலும் இருக்கும் தொகையை (balance) கூட்டி ஜெனரல் லெட்ஜருடன் டாலி செய்வதே ஒரு யுத்தம் மாதிரிதான். அதில் வெற்றிபெறுகையில் அப்போது கிளையிலுள்ள பணியாளர்கள் மத்தியில் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது.

ஆண்டு இறுதி வேலைகள் சுமார் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கிவிடும். அன்றிலிருந்து அடுத்த ஒரு மாத காலத்திற்கு ஆண்டு இறுதி பணிகளை முடிப்பதற்கு கிளையிலிருந்த குமாஸ்தாக்கள் அனைவருக்கும் ஓவர் டைம் கொடுப்பதுண்டு. ஒவ்வொருவருக்கும் எத்தனை மணிகள் (hours) ஓவர்டைம் வழங்குவதென தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படும். அதற்காகவே அலுவலக நேரத்தில் பொழுதை கழித்துவிட்டு மாலை ஐந்து மணியிலிருந்து நள்ளிரவு வரை ஓவர்டைம் பார்ப்பது அவர்களுக்கு வாடிக்கை. ஆனால் எவ்வித கூடுதல் ஊதியமும் இல்லாமல் அவர்களை மேற்பார்வையிடுவதற்காகவே எங்களைப் போன்ற அதிகாரிகளும் அமர்ந்திருக்க வேண்டும்!

நான் பணியாற்றியது போன்ற பெரிய கிளைகளில் ஓவர்டைமுடன் மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவும் கிளையிலேயே வழங்கப்படுவதுண்டு. அதற்கு மேலாளருக்கு தனியாக ஒரு தொகையை மேலதிகாரிகள் வழங்குவார்கள். அத்துடன் வேலை முடிகிறதோ இல்லையோ ஆண்டிறுதி தினத்தன்று தீர்த்தத்துடன் கூடிய விருந்தும் கட்டாயம் இருக்க வேண்டும். கிளைகளில் வைத்து தீர்த்தம் வழங்கப்படலாகாது என்பதால் பெரும்பாலும் இது கிளை மேலாளர்கள் வீடுகளில் நடைபெறும். அந்த சமயத்தில் வீட்டு பெண்களை சினிமாவுக்கு அல்லது வெளியிலோ அனுப்பி வைத்துவிடுவார்கள் மேலாளர்கள்!

சரி எதற்கு இதை விலாவாரியாக சொல்ல வருகிறேன் என்று பார்க்கிறீர்களா?

என்னுடைய சிப்பந்தியின் மிலிட்டரி கேண்டீன் தொடர்பு இந்த சமயங்களில்தான் கிளை மேலாளர்களுக்கு தேவைப்படும். ஒவ்வொரு கிளையிலும் சுமார் பத்து பதினைந்து பணியாளர்கள் இருந்ததால் சந்தையில் வாங்கினால் மேலாளர் திவாலாவாகிவிடுவாரே..

என்னுடைய சிப்பந்திதான் ஆபத்பாந்தனாய் இருந்து சகல மேலாளர்களுக்கும் 'சரக்கு' சப்ளை செய்வார்.

அதற்கு முன்பு நான் மேலாளராக இருந்த எந்த கிளையிலும் இந்த தீர்த்த பார்ட்டிகளை நான் கொடுத்திருக்கவில்லை. நான் 'அந்த' மாநிலத்தைச் சாராதவன் என்பதாலோ என்னவோ என்னுடைய பணியாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. வருட இறுதிநாளன்று நல்ல சைவ பகலுணவு சில அசைவ அயிட்டங்களுடன் கிளையிலேயே வழங்கப்படும். இரவு விருந்து என்ற சங்கதியே இருக்காது.

ஆனால் சென்னையிலிருந்த அனைத்து கிளைகளிலும் இரவு விருந்து தீர்த்தத்துடன் நடைபெறுவது வழக்கத்திலிருந்ததால் நானும் இறங்கிவந்து அதற்கு சம்மதித்தேன். ஒரேயொரு வித்தியாசம் விருந்துக்கு தேவையான பணத்தை கொடுப்பதுடன் என் வேலை முடிந்தது. அவர்களுக்கு அதுதானே வேண்டும்? 'நீங்க சாப்பட மாட்டீங்கன்னு தெரியும் சார். நாங்க தப்பா நினைக்க மாட்டோம்.' என்பார்கள்.

அப்படித்தான் அந்த வருடமும் ஆண்டு இறுதி வேலைகள் மும்முரமாக துவங்கின.

ஆண்டின் இறுதி நாளைக்கு முந்தைய நாள் எல்லா கிளை மேலாளர்களுடைய தேவை பட்டியலுடன் ஆவடி கேண்டீனிலிருந்து சரக்கு கொள்முதல் செய்துக்கொள்ள சென்றிருந்தார். அவர் எப்போதுமே என்னுடைய வட்டார மேலாளருடைய பெயரை உபயோகித்து சொல்வது வழக்கமாதலால் அன்றும் அலுவலக நேரத்திற்கு சற்று முன்பாக நான் வெளியில் சென்றிருந்த நேரத்தில் கையிலொரு சூட்கேசுடன் சென்றபோது யாரும் அவரை ஏன் என்று கேட்க துணியவில்லை. அவர் கொண்டு சென்ற சூட்கேஸ் அலுவலகத்தைச் சான்றது (மத்திய கிளையிலிருந்து தேவைப்படும்போது ரொக்கம் (cash) கொண்டுவருவதற்கு பயன்படுத்துவது) என்றாலும் அதை எதற்காக கொண்டுசெல்கிறார் என்பதைக் கேட்கவும் கிளை அதிகாரிகளுக்கு துணிவில்லை.

அடுத்த நாள் காலையில் நான் கிளைக்குள் நுழைந்ததும் அவருடைய மனைவியும் மூத்த மகளும் கிலை வாசலில் பதற்றத்துடன் நிற்பதைப் பார்த்தேன். 'எதுக்கு வந்திருக்காங்க..?' என்று நான் என்னுடைய உதவி மேலாளரிடம் கேட்க அவர் தயக்கத்துடன், 'சார் அவர் நேத்து ராத்திரி முழுசும் வீட்டுக்க வரலையாம்.' என்றார். நான், 'ஏன் இங்கருந்து எப்பவும் போலத்தான போனாரு?' என்றேன். அப்போதுதான் தெரிந்தது அவர் சரக்கு கொள்முதல் செய்ய சென்றிருந்தார் என்பதே. 'இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா சார்?' என்றேன். 'தெரியாது போலருக்கு சார்' என்ற அவருடைய பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

பிறகு என்னுடைய உதவிமேலாளரை ஒரு சிப்பந்தியின் துணையுடன் ஆவடி கேண்டீன் சென்று பார்த்துவர அனுப்ப ஆவடி கேண்டீனில் அவர் முந்தைய தினம் மாலையே ஏழு மணியளவில் திரும்பிச் சென்றுவிட்டாரே என்ற தகவலுடன் மனம் கலங்கிப்போய் ரயில் நிலையத்துக்கு திரும்பி அங்கிருந்த ஸ்டேஷன் அதிகாரிகளிடம் விசாரிக்கலாமே என்ற சென்ற இடத்தில் என்னுடைய சிப்பந்தி கொண்டு சென்றிருந்த சூட்கேஸ் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் கந்தலாகி கிடந்திருக்கிறது. 'நேத்து ராத்திரி எட்டு மணி போல ஒருத்தர் குடிச்சிட்டு லைன க்ராஸ் பண்ணியிருக்கார் சார். கேரளா போற வண்டியில அடிபட்டு ஸ்பாட்லயே போய்ட்டார். அவர் கொண்டு வந்த சூட்கேஸ்தான் இது. உள்ள பூரா விஸ்க்கி, பிராந்தி பாட்டில்ங்க.' என்றிருக்கிறார்.

அதன்பிறகு விசாரித்துக்கொண்டு சென்னை பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் அனுப்பப் பட்டுள்ளதென்பதை அறிந்துக்கொண்டு எனக்கு அவர் தொலைபேசி மூலம் தெரிவிக்க நான் உடனே கிளம்பினுப் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்துக்கொண்டு ஓட அங்கே சவக்கிடங்கு வராந்தாவில் அனாதைப் பிணமாக அவர்........

அதன் பிறகு தொடர்ந்து சில மாதங்கள் நான் மட்டுமல்லாமல் சென்னக் கிளை மேலாளர்கள் அனைவரும் பட்ட தொல்லைகள்....

தொடரும்...

09 April 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 46

சாதாரணமாக, ஒரு நிறுவனத்தில் எத்தனையோ பேர் பணிபுரிந்தாலும் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் ஒருசிலர் மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் பிரபலமாக இருப்பதுண்டு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலர் தங்களுடைய திறமையால் தங்களுடைய உயர் அதிகாரிகளை மட்டுமல்லாமல் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களையும் கவர்ந்திருப்பர். சிலர் தங்களுடைய பதவியின் காரணமாக (உதாரணம்: வங்கி முதல்வர் மற்றும் உயர் பதவியை வகிப்பவர்கள். தொழிற்சங்க தலைவர்களும் இதில் அடக்கம்) பிரபலமாயிருப்பர்.

வேறு சிலர் தங்களுடைய தனித்திறமைகளினால் அல்லது சேவை மனப்பான்மையால் பணியாளர் மத்தியில் பிரபலமடைவதுண்டு. என்னுடைய நிறுவனத்திலும் அப்படி சிலபேர் இருந்தனர்.

குறிப்பாக எங்களுடைய சென்னை கிளைகளில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் ஏறத்தாழ வங்கி முழுவதும் பிரபலமாக இருந்தார். அவர் கடை நிலை அதிகாரியாக பதவி உயர்வைத் துறந்து பல ஆண்டுகள் சென்னையிலேயே பணியாற்றியவர் என்பதால் அவர் ஒரு நடமாடும் தகவல் மையமாக இருந்தார் எனலாம்.

குறிப்பாக மாற்றலாகி வருபவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுப்பது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் இடம் பிடித்து கொடுப்பது. அவருக்கு தெரியாத பள்ளி, கல்லூரியே சென்னையிலில்லை என்னும் அளவுக்கு பில்டப் கொடுப்பார். அவருடைய பல முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தாலும் வெற்றியளிக்கும் முயற்சிகளை வைத்தே வேறு மாநிலங்களிலிருந்து மாற்றலாகி வருபவர்கள் சென்னை வந்து சேருவதற்கு முன்பே அவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.

அவரைப் போலவே வேறொருவர் இருந்தார். முன்னவர் பள்ளி கல்லூரிகளில் இடம் பிடித்தால் இவர் சென்னையிலுள்ள மருத்துவ மனைகளில் குறிப்பாக இதய அறுவை சிகிச்சைக்கு வேண்டி வருபவர்களுக்கு எந்த மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சை கிடைக்கும், எந்த மருத்துவமனை எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றது என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார். அதுபோலவே ரத்த வங்கிகளின் விவரமும் இவரிடம் இருக்கும். அவருடைய சேவை எங்களுடைய வங்கியில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த அத்தனை வங்கி ஊழியர்களுக்கும் கிடைக்கும். அவருடைய சேவையை முன்னிட்டு என்னுடைய வட்டார மேலாளரும் அவரை தேவைப்பட்டால் அலுவலக நேரத்திலும் கூட வெளியில் சென்றுவர அனுமதிப்பார். அவருடைய சேவையை பாராட்டி சென்னை மத்திய ரோட்டரி சங்கமும் அவரை கவுரவித்திருக்கிறது!

என்னுடைய சிப்பந்தியும் ஒருவகையில் பிரபலமானவர்தான். அவருடைய 'வெளி வேலை' திறமை அவர் பணியாற்றிய என்னுடைய கிளை மட்டுமல்லாமல் சென்னையிலிருந்த எங்களுடைய அனைத்து கிளையிலும் பரவியிருந்தது. இதற்கு என்னுடைய முந்தைய மேலாளரும் ஒருவகையில் காரணமாயிருந்தால் என்றால் மிகையாகாது.

சாதாரணமாக சென்னையில் இயங்கிவரும் கிளைகளுடைய மேலாளர்கள் அனைவரும் மாதம் ஒருமுறை எங்களுடைய வட்டார அலுவலகத்தில் கூடுவதுண்டு. முந்தைய மாதத்தில் அவர்கள் சாதித்தவை, சாதிக்காமல் கோட்டை விட்டவை என அனைத்தையும் அலசி ஆராய்ந்து சாதித்தவர்களுக்கு பாராட்டும் கோட்டை விட்டவர்களுக்கு தேவைப்பட்டால் எச்சரிக்கையும் அளிக்கப்படும். மற்றவர்களை விடவும் ஏதாவது ஒரு கிளை மேலாளர் அதிகம் சாதித்திருந்தால் அவரால் மட்டும் எப்படி அதை சாதிக்க முடிந்ததென மற்றவர்களுக்கு விளக்குவது வழக்கம். என்னுடைய முந்தைய மேலாளர் அப்போது சென்னையில் மட்டுமல்லாமல் என்னுடைய வட்டாரத்திலேயே அதிக சாதனை புரிந்தவர் என பெயரெடுத்திருந்ததாலும் என்னுடைய வட்டார மேலாளருடைய மதிப்பைப் பெற்றிருந்தவர் என்பதாலும் அவருடைய சாதனைகளைப் பற்றி எடுத்துரைப்பது ஒரு மாதாந்தர நிகழ்வாக இருந்திருக்கிறது.

அவருடைய வாடிக்கையாளர்கள் எல்லோருமே வங்கிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஆகவே அவர்களுடைய பூர்வீகத்தைப் பற்றி அலசி ஆராய தனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் என என்னுடைய சிப்பந்தியை அறிமுகப்படுத்தியிருப்பார் போலிருக்கிறது. அன்றிலிருந்து அவர் என்னுடைய கிளைக்கு மட்டுமல்லாமல் சென்னையில் இயங்கி வந்த அனைத்து கிளைகளுக்கும் 'தகவல் சேமிப்பு திலக'மாக திகழ்ந்திருக்கிறார்!

அதுதான் அவர் பிரபலமாகியிருந்ததன் ரகசியம். அத்துடன் அவர் சென்னைக் கிளைகளில் பணியாற்றிய அனைத்து சிப்பந்திகளையும் விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். ஆகவே அவர் ஒரு செல்ஃ மேட் தலைவராகவும் திகழ்ந்திருக்கிறார். சாதாரணமாக இந்த வெளி வேலைகளுக்கு சிப்பந்திகளுக்கு தனியாக டி.ஏ கிடைப்பது வழக்கம். ஆட்டோவில் போகிறேன் என்று அதற்கு வேண்டிய டீ.ஏவை பெற்றுக்கொண்டு பஸ்சிலோ வாடகை சைக்கிளிலோ சென்று வந்தால் தினசரி எப்படியும் ரூ.20லிருந்து ரூ.25 வரை கிடைக்கும். என்னுடைய சிப்பந்தியே எல்லா கிளைகளுடைய வெளிவேலகளையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்ததால் மற்ற கிளை சிப்பந்திகளுக்கு மேல் வருமானம் எதுவும் இல்லாமல் இவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தாலும் தலைவரை எப்படி தட்டிக் கேட்பதென தெரியாமல் தவித்து போயிருந்தனர்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா வங்கியின் பெரும்பான்மை தொழிற்சங்கத்தின் தலைவர் என்றால் என்னுடைய சிப்பந்தி மற்றொரு தொழிற்சங்கத்தின் சென்னை 'ரெப்பாக' இருந்தார். அதுவும் சிப்பந்திகளின் பிரதிநிதியாக! பிறகு கேட்க வேண்டுமா? ஒவ்வொரு கிளையும் சரிவர இயங்குவதற்கு மேலாளருக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானவர்கள் சிப்பந்திகள்தான் என்பதுதான் நமக்கெல்லோருக்கும் தெரியுமே.. வங்கிகளென்ன அரசு இலாக்காக்களிலும் அப்படித்தானே... சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார்ங்கற பழமொழியே அரசு அலுவலக சிப்பந்திகளை வைத்துத்தான் வந்தது என்றாலும் மிகையாகாதே!

என்னுடைய சிப்பந்திக்கு வேறொரு சில்லறை வேலையும் இருந்தது. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து வருபவர்கள் 'குடிமகன்களாக' இருப்பது நமக்கு தெரிந்ததுதானே! அவர்களுள் சிலருக்கு தினமும் வேண்டும். இல்லையென்றால் உறக்கம் வராது. தினமும் வேண்டுமென்றால் கட்டுபடியாகாதே. அதற்கும் நம்மவரிடம் ஒருவழி இருந்தது. அதுதான் 'மிலிட்டரி கோட்டா.' கிடைக்குமிடம்? சென்னை ஆவடி இராணுவ கேண்டீன்தான். நம்மவருக்குத்தான் சென்னையில் பழக்கமில்லாத ஆட்களே இல்லையே.. அவர்கள் மூலமாக கேண்டீனிலிருந்து மொத்தமாக டெலிவரி எடுத்து சில்லறையாக டெலிவரி கொடுப்பார். இதன் மூலம் கிடைக்கும் மேல் வருமானத்துடன் நடக்கும் இரவு பார்ட்டிகளில் கொஞ்சம் ஊற்றிக்கொள்ளவும் கிடைக்கும்.

நான் கிளைக்கு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே என்னுடைய சிப்பந்தி அடிக்கடி வெளியில் செல்வதும் பல மணி நேரங்கள் கழித்து திரும்பி வருவதையும் கவனித்த நான் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து என்ன விஷயம்? அவர் எங்க போறார்? என்று விசாரித்தபோதுதான் மேலே எழுதியுள்ள அனைத்தும் தெரியவந்தது.

அவரை அத்தனை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்திருந்தேன். ஏனெனில் அவர் மற்ற கிளை மேலாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் என்னுடைய வட்டார அலுவலகத்திலும் பிரபலமடைந்திருந்தார். என்னுடைய வட்டார மேலாருடைய சொந்த தேவைகளுக்கும் அவரை பயன்படுத்தி வந்தார் என்பதும் தெரியவந்தது. 'இவர் நம்ம ஜோனல் மேனேஜரோட பேர யூஸ் பண்ணியே எங்கள மிரட்டுவார் சார். சில நாட்கள்ல காலையில வெளியில எறங்குனார்னா அடுத்த நாள்தான் வருவார். எங்க போயிருந்தீங்கன்னு கேட்டா வேணும்னா ஜோனல் மேனேஜர கூப்ட்டு கேட்டுக்குங்க சார்னு மிரட்டுவார்.' என்றார் என்னுடைய உதவி மேலாளர்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா கொடுத்து வந்த பிரச்சினையை தீர்க்க உதவியவரே ஒரு தனி பிரச்சினையாக மாறிவருவதை உணர்ந்தும் என்ன செய்வதென தெரியாமல் சில மாதங்கள் தடுமாறியதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு ஒரு தீர்வு வந்தது!

ஆனால் அந்த தீர்வு!

நான் முற்றிலும் எதிர்பாராத தீர்வாக அமைந்துபோனது!

தொடரும்..

02 April 2007

தரமிறங்குகிறதா பா.ம.க?


Photo Sharing - Upload Video - Video Sharing - Share Photos


நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் அணை விவகாரங்களே இன்னும் தீராத நிலையில் பா.ம.க. தலைவர் இதுபோன்ற ஒன்றுக்கும் பொறாத விஷயங்களுக்கெல்லாம் போராட்டம் நடத்துவது தேவைதானா.

அதுசரி அதென்ன ஐந்து வருட தடை! விளங்கவில்லை.

இந்த நேரத்தில் தன்னுடைய மருத்துவமனையிலமர்ந்து நாலு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தாலாவது புண்ணியம் கிடைக்கும்..

திரும்பிப் பார்க்கிறேன் II - 45

வெளி வேலைகளில் சாமர்த்தியத்துடன் செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவிக்காலத்தில் அவர் அதிக அளவிலான கடன்களை வழங்கியிருந்தார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

அதில் பெரும்பாலானவர்கள் கிளைக்கு முற்றிலும் புதியவர்கள்.

சாதாரணமாக அப்போதெல்லாம் ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன்பு அவரை எங்களுடைய கிளையில் சேமிப்பு அல்லது வணிக கணக்கு வைத்திருப்பவர்களோ அல்லது தங்களுடைய வணிகத்திற்கு கடன் பெற்றிருப்பவர்களோ அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் இன்றைய நிலவரம் வேறு. எல்லா வங்கிகளுமே தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு கடன் வழங்குவதில் மும்முரமாயிருக்கும் காலக்கட்டத்தில் கடன் பெறுவதற்கு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் நடையாய் நடந்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. அதாவது ஆங்கிலத்தில் sellers' market ஆக இருந்த வங்கி வர்த்தகம் இப்போது buyer's marketஆக மாறியிருக்கிறது என்றால் மிகையல்ல.

குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகளின் வருகைக்குப் பிறகு கடன் வேண்டுமா, கடன் வேண்டுமா என தொலைபேசியில் வாடிக்கையாளர்களை தொல்லை செய்யும் காலம் வந்திருக்கிறது!

அப்போது கிளைக்கோ அல்லது கிளை மேலாளருக்கோ அறிமுகமில்லாத எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் கடன் வழங்கலாகாது என்பது முக்கிய நியதிகளுள் ஒன்றாயிருந்தது.

அதை சரிவர கடைப்பிடிக்கும் பொறுப்பு கிளை மேலாளருக்கு. அவரே பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ள தீர்மானித்தால் அவரை தட்டிக் கேட்க கடமைப்பட்டவர்கள் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகள்தான். ஆனால் மேலாளரைப் பார்த்து பயந்து நடுங்கும் ஜூனியர் அதிகாரிகள் இருக்கும் கிளையில் மேலாளர் வைத்ததுதான் சட்டம்.

முந்தைய மேலாளருடைய பதவிக்காலத்தில் கிளையின் நிலைமை அப்படித்தான் இருந்தது.

அவருக்கு குறுகிய காலத்தில் அதிக அளவில் வணிகம் செய்து தன்னுடைய பெயரை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் ஒரே நேரத்தில் பதவி உயர்வுபெற்ற அதிகாரிகள் நடுவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வம்தான்.

அதிகார முக்கோனத்தில் மேலே செல்லச் செல்ல இட நெருக்கடி இருக்கும் அல்லவா? உதாரணத்திற்கு, ஒரு வங்கியில் கடை நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆயிரம் என்றால் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருக்கும். எங்களுடைய வங்கியும் அதற்கு விதிவிலக்கல்ல. கடைநிலையிலிருந்து உச்ச நிலை (முதல்வர் நீங்கலாக) வரையுள்ள அதிகார நிலைகளின் எண்ணிக்கை (hierarchical levels) எட்டு (Gr. I to Gr.VIII). (என்னுடைய தற்போதைய நிலை Gr.VI).

இந்த முக்கோனத்தில் மேலே செல்ல செல்ல அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே செல்லும். சுருங்கக் கூறினால் பதவியில் உயரக்கூடிய வாய்ப்பும் குறைந்துக்கொண்டே செல்லும். ஆகவேதான் மேலே செல்ல செல்ல அதிகாரிகளுக்குள்ளே போட்டியும் பொறாமையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

ஒரு மேலாளரின் திறமை அவருடைய கிளையின் வணிக அளவை வைத்துமட்டும் கணிக்கப்படுவதில்லை. அதனுடைய தரம், அதன் மூலம் வங்கிக்கு கிடைத்த மற்றும் கிடைக்கக் கூடிய லாபம் என பலவற்றையும் கருத்தில்கொண்டே கணிக்கப்படுகிறது. அத்துடன் ஒருவருக்கு அடுத்த உயர் பதவிக்கான தகுதியை கணிக்கும் சமயத்தில் அவருடைய முந்தைய பதவிக்காலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதும் வழக்கம். நான்கு கிளைகளில் மேலாளராக இருந்து இரண்டு கிளைகளில் மிக நன்றாகவும் மீதமுள்ள கிளைகளில் படுமோசமாகவும் பணியாற்றியிருப்பவரை விட தன் பொருப்பிலிருந்த எல்லா கிளைகளிலுமே சமச்சீரான அளவில் செயல்படும் மேலாளருக்கே பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதுண்டு. அவருடைய ஒட்டுமொத்த (overall) சாதனைகளைக் கணக்கில் கொண்டே அவருடைய பதவி உயர்வுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதையறியாத பல மேலாளர்களும் தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தங்களுடைய ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட வேண்டும் என்ற நினைப்பில் செயல்பட்டு அக்கிளையிலேயே தங்களுடைய மேலாளர் தகுதியையும் இழந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். என்னுடைய முந்தைய மேலாளருடைய அதீத ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தவர் நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டிருந்த சிப்பந்தி.

சாதாரணமாக வங்கியில் கணக்கு துவங்க விழையும் ஒருவரை வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்படி ஒருவர் கிடைக்காத பட்சத்தில் அவர் தற்சமயம் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருடைய அறிமுகக் கடிதம் கொண்டுவரவேண்டும்.

ஆனால் கிளையின் வணிகத்தை விரைவில் பெருக்க நினைக்கும் ஒரு மேலாளர் அவரே முன்வந்து எனக்கு இவரை தெரியும் (known to me) என்று வாடிக்கையாளரின் விண்ணப்பத்தில் ஒப்பிடுவாரானால் அது போதுமானது என்ற சலுகை (discretion) மேலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சாதாரணமாக இச்சலுகை புதிதாக திறக்கப்படும் கிளை மேலாளர்களைக் கருத்தில்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் நம்முடைய கிளையே புதிதாக இருக்கும்போது அதில் கணக்கு துவங்க விழையும் வாடிக்கையாளருக்கு அறிமுகம் கேட்பதில் அர்த்தமில்லையல்லவா?

ஆனால் இச்சலுகையை என்னுடைய முந்தைய மேலாளரைப் போன்றவர்களும் உபயோகித்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை தங்களுக்கு உண்மையிலேயே முழுமையாக தெரிந்திருக்கவில்லையென்றாலும் ஒரு அசட்டு துணிச்சலில் இப்படி செய்வார்கள். ஆனால் சில புத்திசாலி மேலாளர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய பூர்வீகத்தை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே கடன் வழங்குவார்கள்.

அதற்கு அவர்கள் பயன்படுத்துவது கிளையிலுள்ள சிப்பந்திகளைத்தான். பெரும்பாலான கிளைகளில் நீண்ட காலம் பணியாற்றுபவர்கள் இத்தகைய சிப்பந்திகள்தான். அத்துடன் பெரும்பாலான சிப்பந்திகள் கிளை அமைந்திருக்கும் இடத்திலேயே நிரந்தரமாக வசிப்பவர்கள் என்பதும் இதற்கு காரணம். நான் குறிப்பிட்ட சிப்பந்தி கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்றாலும் கிளை அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகாமையிலேயே பத்து பதினைந்து வருடங்களாக குடியிருந்தவர் என்பதால் அவருடைய உதவி என்னுடைய முந்தைய மேலாளருக்கு மிகவும் தேவைப்பட்டிருந்தது.

மேலும் என்னுடைய சிப்பந்திக்கு அலுவலகத்திற்கு வெளியுலுள்ள அலுவல்களில் அதிக நாட்டம் இருந்ததாலும் ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கு 'இவ்வளவு' என்று அவருக்கு அவர் வழங்குவதாக உறுதியளித்திருந்ததால் நம்முடைய சிப்பந்தி மிகவும் மகிழ்ச்சியுடன் அதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

அவருடைய திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த மேலாளர் வாடிக்கையாளர்களைப் பற்றி அவர் திரட்டியவைகளை சரிபார்க்காமலே கடன் வழங்கியதன் விளைவை அவர் பிறகு அனுபவித்தார் என்பது வேறு விஷயம்.

ஆனால் வங்கிக்கு வெளி காரியங்களில் ஈடுபடுவதிலேயே குறியாயிருந்த நம்முடைய சிப்பந்திக்கு உள் வேலைகளில் அறவே ஈடுபாடில்லாமல் போனதற்கும் இதுவே காரணம் என்பதை நாளடைவில்தான் நான் உணர்ந்தேன்.

ஆகவே அவருக்கு அலுவலகத்திற்குள் ஒரு வேலையும் செய்ய ஓடாது. ஒரு restless ஆசாமி என்பார்களே அந்த ரகம். அலுவலகத்தினுள் தொடர்ந்து ஒரு அரைநாள் இருக்கச் செய்துவிட்டால் நிச்சயம் யாருடனாவது வம்பு வளர்த்துவிடுவார். யாராவது இந்த புத்தகத்தைக் கொண்டா என்றால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத புத்தகத்தைக் கொண்டுவந்துவிட்டு 'சார் நீங்க இதைத்தான் கேட்டீங்க' என்று சாதிப்பார்.

என் கிளையிலிருந்த பெரும்பாலான குமாஸ்தா மற்றும் அதிகாரிகளை விட வயதில் மூத்தவர் என்பதால் எல்லோருமே அவரை 'சேட்டா' என்றுதான் அழைப்பது வழக்கம். அத்துடன் அவரை அதட்டி வேலை வாங்கவும் இளம் வயது குமாஸ்தாக்களுக்கும் அதிலும் குறிப்பாக பெண் குமாஸ்தாக்களுக்கு தயக்கமாக இருக்கும்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு தனி ராசாங்கம் நடத்தி வந்திருந்தார் என்றால் சிப்பந்தி ஒரு குட்டி ராசாங்கத்தை நடத்தி வந்தார் என்று சொல்லலாம்.

தொடரும்..

திரும்பிப் பார்க்கிறேன் II - 44

என்னுடைய தலைமைக் குமாஸ்தாவினுடைய முழக்கத்தை கேட்டதும் உள்ளறையில் அமர்ந்திருந்த சிப்பந்தி வெளியேறி வாசலை நோக்கி ஒடிவருவதை கவனித்த நான் அவரை வழிமறிக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி நகர்ந்தேன். அதற்குள் ஒரு வாடிக்கையாளர், 'என்ன சார் இது அவர்தான் ஒங்க ப்ராஞ்சிலயே சீனியர் ஆஃபீசர். அவரப் போயி இப்படி அவமானத்தபடுத்தறீங்க?' என்ற என்னை நோக்கி கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு பதிலளிக்க முயல்வதற்கு முன் வங்கி மத்திய ஹாலுக்குள் நுழைந்த சிப்பந்தி கோபத்துடன் அவரை நெருங்கி, 'யார் சார் ஆஃபீசர் இந்தாளா? நீங்க வேற. அவர் வெறும் ஹெட் க்ளார்க்தான். நான் எட்டாங் க்ளாஸ் படிச்சிட்டு பியூனாருக்கேன். இவர் பத்தாங்க்ளாஸ் பெயில். இவரும் ஒரு காலத்துல ப்யூனா இருந்தவர்தான். எப்படியோ சோப்படிச்சி இந்த போஸ்ட்டுக்கு வந்துட்டார் அவ்வளவுதான்.' என்று பகிரங்கமாக கூற வாடிக்கையாளர் திடுக்கிட்டுப் போய், 'ஏன் சார் இவர் எங்கிட்ட அசிஸ்டெண்ட் மேனேஜர்னு சொன்னாரே?' என்றார் குழப்பத்துடன்.

அவருடைய தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் உட்பட அவர்களையுமறியாமல் கொல்லென்று சிரித்துவிட தேவையில்லாத சிக்கலை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற தலைமைக் குமாஸ்தா அவமானமடைந்து... நிலைமையை சமாளிக்க விருட்டென்று வெளியேற அடுத்த சில நிமிடங்களில் நிலமை சகஜ நிலைக்கு திரும்பியது.

அதற்குப் பிறகு திறந்துக் கிடந்த அவருடைய இழுப்பிலிருந்த சாவிக்கொத்துக்கு வேலையே இல்லாமல் போனது. அவரை எதிர்த்த சிப்பந்தியோ அவருடைய இழுப்பிலிருந்தவைகளை மேசையில் கவிழ்த்து அதிலிருந்த சுமார் ஐம்பது விசிட்டிங் கார்டுகளடங்கிய பெட்டியை எடுத்து என்னுடைய உதவி மேலாளரிடமும் மற்ற ஊழியர்களிடமும் காட்டி வேண்டுமென்றே உரத்த குரலில் (எனக்கு கேட்க வேண்டுமாம்!) 'பாத்தீங்களா சார், அசிஸ்டெண்ட் மேனேஜர்னு விசிட்டிங் கார்டெல்லாம் அடிச்சி வச்சிருக்கார். நா அப்ப சொன்னப்ப நம்பமாட்டேன்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.' என்றவாறு கிளையிலிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் வினியோகம் செய்ய பலரும் நமக்கேன் வம்பு என்று வாங்க மறுத்தனர்.

நான் அறையிலிருந்தவாறு என்னுடைய உதவி மேலாளரை இண்டர்காமில் அழைத்து, 'அவர வேலைய பாக்க சொல்லுங்க. இதுவரைக்கும் நடந்தது போறும்.' என்றேன். அவரும் உடனே சிப்பந்தியிடம் நான் சொன்னதைக் கூற அவர் என்னுடைய அறையை நோக்கி சாரி சார் என்றவாறு காசாளர் அறைக்குள் நுழைந்து அவருக்கு உதவி செய்வதில் முனைய வேடிக்கைப் பார்த்தவாறு நின்றிருந்த வாடிக்கையாளர்களும் அவரவர் பணியில் மும்முரமாயினர்.

கிளையை விட்டு வெளியேறிய என்னுடைய தலைமைக் குமாஸ்தா அதன் பிறகு வரவேயில்லை. நான் விடுப்பில் செல்கிறேன் என்ற அவருடைய தந்தி அடுத்த நாள் காலையில் கிடைத்தது. அவர் நேரே என்னுடைய தலைமையலுவலகத்திற்குச் சென்று மத்திய ஊழியர் தலைவரிடம் முறையிட்டிருப்பார் போலிருக்கிறது. அவர் அடுத்த நாளே என்னை தொலைப்பேசியில் அழைத்து, 'என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. நீங்களும் ஒருகாலத்துல யூனியன் ரெப்பா இருந்தவர்தானே?' என்று ஆதங்கப்பட்டார்.

அவரும் நானும் ஒரு காலத்தில் அதே சங்கத்தின் மத்திய குழுவில் அங்கத்தினர்களாக இருந்தவர்கள். அவர் பதவி உயர்வை துறந்து தொழிற்சங்கத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். எவ்வித பந்தாவுமில்லாமல் இருந்தவர். அவருடைய அடக்கமும் நிதானமுமே எங்களுடைய வங்கியில் பலகாலமாக தொழிற்சங்க பிரச்சினையே இல்லாமலிருக்கக் காரணம். கேரள மாநிலத்திலிருந்த எல்லா வங்கிகளுமே ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் போராட்டத்தில் இறங்கியிருந்தும் எங்களுடைய வங்கியில் எனக்கு தெரிந்து தொழிற்சங்க பிரச்சினை இருந்ததே இல்லை.

'சார் அவருக்கு மறுபடியும் உங்கக்கிட்ட வந்து வேலை செய்ய விருப்பமில்லை. அதனால நா அவர கேரளாவுக்கே திருப்பி மாத்த சொல்லி நம்ம எச்.ஆர்ல சொல்லப் போறேன். அவங்க உங்கள கூப்ட்டு ஏதாச்சும் கேட்டா சரின்னு மட்டும் சொல்லிருங்க. தயவு செஞ்சி ரிப்ளேஸ்மெண்ட் ஸ்டாஃப் வேணும்னு கேட்டுராதீங்க. மத்தத நா மேனேஜ் பண்ணிக்கறேன்' என்றார்.

சாதாரணமாக யாராவது மாற்றம் வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கும் சமயத்தில் அவருக்கு பதிலாக வேறொரு பணியாளர் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் கேட்காமலிருந்தால் மட்டுமே மாறுதல் விண்ணப்பத்தை சாதகமாக கருத வாய்ப்புண்டு. எப்படியோ விட்டது தொல்லை என்ற நினைப்பில் நானும் சரி என்றேன்.

அடுத்த சில வாரங்களிலேயே அவருக்கு மாற்றலாகி உத்தரவு வர அவர் திரும்பிவர காத்திருக்காமலேயே அவரை என்னுடைய கிளையிலிருந்து விடுவித்து செய்து ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிளைக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த சில ஆண்டுகளிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் பல ஆண்டுகாலம் வரை என்னைப் பற்றி காண்பவர்களிடத்திலெல்லாம் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி வந்தார் என்பதை பிறகு தெரிந்துக்கொண்டேன்.

*****

என்னுடைய மேலாளர் அனுபவத்தில் இப்படி பிரச்சினைகளை உண்டாக்குவதிலேயே குறியாயிருந்த ஊழியர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களை எப்படி நாங்கள் கையாளுகிறோம் என்பதையும் எங்களுடைய நிர்வாகம் கவனிக்கும். பிரச்சினைகளை சிக்கலில்லாமல் தீர்க்கும் மேலாளர்களையே எங்களுடைய வங்கி நிர்வாகம் விரும்பியது என்றால் மிகையல்ல.

எங்களுடைய வருடாந்தர கணிப்பில் (appriasal) ஊழியர்களுடனான உறவு, பிரச்சினைக்குரியவர்களை கையாளும் விதம் இவற்றிற்கெல்லாம் தனித்தனி மதிப்பெண்கள் அளிக்கப்படுவதுண்டு. இந்த பிரிவுகளில் ஒரு மேலாளர்/இலாக்கா தலைவர் பெறும் மதிப்பெண்கள் அவர்களுடைய அடுத்த பதவிக்கான உயர்வு நேர்காணலில் வெற்றிபெற உதவும்.

இத்தகையோரை எப்படி கையாளுவது என்று எங்களுடைய பயிற்சிக் கல்லூரிகளில் தனி பயிற்சியும் அளிக்கப்படுவதுண்டு. எங்களுடைய வங்கியில் தொழிலாளர் பிரச்சினை அதிகம் இல்லாதிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒருரகம் என்றால் நான் மேலே குறிப்பிட்டுள்ள சிப்பந்தி வேறொரு ரகம்.

அவருக்கு கிளையின் உள்ளே இருந்த அலுவல்களை விட வெளியேயுள்ள அலுவல்களில்தான் ஆர்வம் அதிகம். தபால் நிலையம், வாடிக்கையாளர்களுடைய அலுவலகங்களுக்கு அல்லது வீடுகள், ரிஜிஸ்திரார் அலுவலகம் என எங்கு செல்வதானாலும் அதில் ஆர்வம் காட்டுவார். கேரள மாநிலத்தைச் சார்ந்தவர், பள்ளி இறுதி வகுப்பு வரை கூட எட்டிப் பிடிக்காதவர் என்றாலும் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் (அரைகுறை) என பல மொழிகளில் வெளுத்து வாங்குவார். மலையாள accent அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் எல்லோருடனும் பேசுவதில் தனியார்வம் காட்டுவார்.

நல்ல சிரிப்புடன் கூடிய முகமும் வாய்ச்சாலகமும் இருந்ததால் வங்கி வெளி அலுவல்களை வெற்றியுடன் முடித்து வருவதற்கு அவரை விட்டால் வேறு ஆளில்லை எனும் அளவுக்கு சாமர்த்தியசாலி.

சாதாரணமாக வங்கிகளில் கடன் பெறுவதற்கு வங்கிக்கு நடையாய் நடக்கும் வாடிக்கையாளர்களில் பலர் கடனைப் பெற்றுவிட்டால் வங்கியையே மறந்துபோய்விடுவார்கள். கடன் பெறும்போது இருக்கும் விலாசத்தையே மாற்றிக்கொண்டுவிட்டு புதுவிலாசத்தை வங்கிக்கும் தெரிவிக்க மாட்டார்கள். வங்கியிலிருந்து அனுப்பப்படும் தாக்கீதுகள் ஆளில்லை என்று திரும்பி வரும்போதே நமக்கு அவர்கள் வங்கியிலிருந்த விலாசத்தில் இல்லை என்பது தெரியவரும்.

இதில் பலர் தங்களுடைய புதுவிலாசத்தை அடுத்த வீட்டிலிருப்பவர்களிடம் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அப்படிப்பட்டவர்களிடமிருந்து சாதுரியமாக விலாசத்தை வரவழைப்பதில் படு கில்லாடி என்னுடைய சிப்பந்தி. நீதிமன்ற சிப்பந்திகளுக்கும் டிமிக்கி கொடுக்கக்கூடிய வாடிக்கையாளர்களையும் கூட நேரில் சந்தித்து சம்மன்களை serve செய்வதில் மன்னர் அவர்!

அதுபோலவே வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்கள் முக்கியமாக நிலம், கட்டடம் போன்ற சொத்துக்களுக்கு சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்க சான்றிதழ் பெறுவது, ஒரிஜினல் பத்திரங்களுடைய நகல்களைப் பெறுவது போன்ற வேலைகளையும் சாதுரியமாக முடித்துக்கொடுப்பார். ஒவ்வொரு சான்றிதழுக்கும் இத்தனை என்று பேரம் பேசும் அரசு ஊழியர்களையும் லாவகமாகக் கையாண்டும் மிகக் குறைந்த அளவே கொடுத்து, சில சமயங்களில் ஒன்றுமே கொடுக்காமலும் கூட நமக்கு ஆகவேண்டிய காரியத்தை முடித்துக் கொடுத்துவிடுவார்.

ஆனால் அலுவலகத்தினுள்..?


தொடரும்…

திரும்பிப் பார்க்கிறேன் II - 43

அடுத்த நாள் காலையில் நான் கூறியிருந்ததுபோலவே என்னுடைய உதவி மேலாளர் அலுவலகத்தில் நுழைந்ததும் தன்னுடைய இழுப்பின் சாவியை கொண்டு வரவில்லை என்று என்னிடம் வந்து முறையிட (அவர் செய்தது நடிப்பு மாதிரியே தெரியவில்லை எனலாம்.. ஆனால் அவர் கேரளாவிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்ததே சினிமாவில் சான்ஸ் கிடைக்காதா என்ற எண்ணத்தில்தான் என்பது பிறகுதான் தெரிந்தது!) நான் உடனே முந்தைய தினம் பேசி வைத்திருந்ததுபோலவே பதிலளித்தேன்.

அவர் உடனே ஒரு சிப்பந்தியை அழைத்து நம்ம பிராஞ்ச் டூப்ளிகேட் சாவிய கொண்டு வா என்றார் அதிகாரத்துடன். அவருக்கு நேரில் சென்று தலைமைக் குமாஸ்தாவிடம் கேட்க பயம் என்பதும் ஒரு காரணம்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு ரகம் என்றால் என்னுடைய கிளையிலிருந்த சிப்பந்திகள் மூவருள் மூத்தவர் வேறொரு அலாதியான ரகம். அவரைப் பற்றி வேறொரு நாள் சொல்கிறேன். நல்ல சுவாரஸ்யமான மனிதர்!

அவர் ஒரு டோண்ட் கேர் மாஸ்டர் எனலாம். அவருக்கும் என்னுடைய தலைமைக் குமாஸ்தா வயதிருக்கலாம். ஒன்றோ இரண்டோ வயது குறைவாக இருக்கும். கிளையிலிருந்த அனைவரும் தலைமைக் குமாஸ்தாவைக் கண்டு மிரண்டு போயிருந்தால் அவர் என் சிப்பந்தியைப் பார்த்து மிரண்டு போயிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் எங்களுடைய வங்கியிலிருந்த மற்றொரு வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் தலைமைக் குமாஸ்தாவின் தொழிற்சங்கத் தலைவர் பதவி அவரை பொருத்தவரை ஒன்றுமில்லை!

என்னுடைய உதவி மேலாளர் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அந்த சிப்பந்திக்கு அன்று என்ன தோன்றியதோ நேரே தலைமைக் குமாஸ்தா மேசைக்கு சென்று அவரைக் கேட்காமலே அவருடைய இழுப்பை திறக்க முயல அவர் அதை தடுக்க முயல இருவருக்குமிடையில் ஒரு சில நிமிட நேரங்கள் போராட்டம்!

இதை என்னுடைய அறையிலிருந்தே கவனித்தவாறு அமர்ந்திருந்தேன் என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்று நினைத்தவாறு.

சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தங்களுக்கிடையில் சச்சரவு செய்தால் அது அந்த அலுவலக சூழலை மட்டுமே பாதிக்கும். ஆனால் அது வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கி, தபால்நிலையம், ரயில் பயண முன்பதிவு அலுவலகங்கள் போன்றவையாயிருந்தால் அது அந்த நிறுவனத்தின் பெயருக்கு இழுக்கை விளைவிக்கும்.

ஆனால் இத்தகைய அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இதை உணர்ந்து நடந்துக்கொள்ளாதிருப்பதை நாம் பல சமயங்களில் கண்டிருக்கிறோம். கவுண்டரில் காத்து நிற்பவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அருகில் அமர்ந்திருப்பவரிடம் சாவகாசமாக உரையாடிக்கொண்டிருப்பவர்களை அல்லது ஒன்றுக்கும் உதவாத சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பதை இன்றும் பல தபால் நிலையங்களிலும் காணலாம். வங்கிகளில் இத்தகைய நிலை குறைந்துவருகிறது என்று நினைக்கின்றேன்.

ரயில் நிலையத்திலும் தபால் அலுவகத்திலும் காத்திருக்க வேண்டிவந்தால் வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பவர்களும் வங்கி கிளையொன்றில் நுழைந்துவிட்டால் அடியோடு மாறிவிடுவார்கள். 'எங்க அக்கவுண்டுல போட்டுருக்கற பணத்த எடுக்கறதுக்கு நாங்க எதுக்கு சார் காத்திருக்கணும்?' என்பார்கள். அதில் தவறேதும் இல்லைதான்.

சரி.. ஒரு நிமிட நேரம் காலதாமதமதாவதற்கே இப்படியென்றால் காலையில் வந்ததுமே பணிகளை துவக்காமல் ஊழியர்களிருவர் தங்களுக்குள் சச்சரவில் ஈடுபட்டால் எப்படியிருந்திருக்கும்?

காலை பத்து மணிக்கு வங்கிக்குள் நுழையும் முதல் வாடிக்கையாளரை வரவேற்று அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காகவே கிளை அதிகாரிகள் அரை மணி நேரத்திற்கு முன்பும் சிப்பந்திகள் கால் மணி நேரத்திற்கு முன்பும் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும் என்பது நியதி. தலைமைக் குமாஸ்தா இந்நியதிக்குட்பட்டவரில்லையென்றாலும் அவர் எப்போதுமே தன்னையும் ஒரு அதிகாரி என்று நினைத்துக்கொள்பவராயிற்றே. ஆகவே அவரும் தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜராகிவிடுவார்.

ஆகவே என்னுடைய யுக்தியால் எவ்வித இடைஞ்சலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது என்று கருதியே இதை திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவின் பிடிவாதத்தால் அது முற்றிலும் தகர்ந்துப் போனது.

நான் முந்தைய தினம் எடுத்த முடிவே தவறானதோ என்று நினைக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்னுடைய சிப்பந்தியும் தலைமைக் குமாஸ்தாவும்.

அவர்களுக்கிடையில் சர்ச்சை நடந்துக்கொண்டிருக்கையில் நான் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து சச்சரவில் ஈடுபட்டிருந்த சிப்பந்தியை அலுவலகத்தின் பின்புறத்திலிருந்த உணவு அறைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்யுங்கள் என்றேன். அவரும் சிரமப்பட்டு அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். அவர் அங்கிருந்து அகன்றதும் நான் என்னுடைய தலைமை எழுத்தாளரை அணுகி, 'அந்த சாவிக்கொத்த குடுங்க.. எதாச்சும் சொல்லணும்னா பிசினஸ் அவர்ஸ் கழிஞ்சி பாத்துக்கலாம்.' என்றேன்.

அவர் என்ன நினைத்தாரோ, 'முடியாது சார். நீங்க என்ன பண்ணணும் நினைக்கறீங்களோ.. செஞ்சிக்குங்க. அந்த பியூன் செஞ்சதுக்கு எங்கிட்ட எல்லார் முன்னையும் வச்சி மன்னிப்பு கேக்கறவரைக்கும் சாவிய தர மாட்டேன். இன்னைக்கி டிரான்சாக்ஷன் எதுவும் நடக்கவும் விடமாட்டேன்.; என்று பிடிவாதமாக மறுத்ததுடன் அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்துக்கொண்டிருந்த காசாளரையும் மற்ற ஜூனியர் குமாஸ்தாக்களையும் அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தார்!

அவருடைய தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களே, காசாளரையும் சேர்த்து, என்னுடைய கிளையின் பெரும்பான்மையான ஊழியர்கள் என்பதால் அவருடைய நடவடிக்கைகளை விரும்பாதவர்களும் கூட அவர் தடுத்து நிறுத்தியதை மீறமுடியாமல் வாசலிலேயே தயங்கி நிற்க விஷயம் சிக்கலாவதை உணர்ந்தேன்.

அதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கவே நான் வாசலில் தயங்கி நின்ற ஊழியர்களை பணிக்கு செல்லுமாறு கோரிக்கை விட அவர்களோ தயக்கத்துடன் தலைமைக் குமாஸ்தாவை பார்த்தனர். வாசலில் நின்ற ஊழியர்களை விலக்கியவாறு உள்ளே நுழைந்த வாடிக்கையாளர்களுள் ஒருவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். 'என்ன சார் எதுக்கு இவங்க எல்லாரும் இங்க நிக்கறாங்க? மணி பத்தேகால் ஆயிருச்சே?' என்றார். நான் பதில் சொல்ல முயல்வதற்கு முன் என்னுடைய தலைமைக் குமாஸ்தா உரத்த குரலில் நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி பேசிவிட்டு தொழிற்சங்க தலைவருக்கே உரிய குரலில் வங்கி ஊழியர் ஒற்றுமை சிந்தாபாத் என குரலெடுத்து முழங்க குழுமியிருந்த ஊழியர்களும் தன்னிச்சையாக உடன் முழங்க அவர்களுடைய குரல் சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பலருடைய கவனத்தையும் முதல் மாடியை நோக்கி ஈர்த்தது.

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதைதான். ஆளுக்கு ஆள் ஒன்றுபேச விஷயம் மேலும் சிக்கலானது.

நானும் ஒரு காலத்தில் தீவிர தொழிற்சங்கவாதியாய் இருந்தவன்தான் என்றாலும் இப்படியொரு சிக்கலான சூழலை எதிர்கொண்டிருக்கவில்லை. இத்தனைக்கும் நான் குமாஸ்தாவாக இருந்த காலத்தில் எனக்கு மேலாளர்களாக இருந்தவர்களுள் பலரும் தொழிற்சங்க செயல்பாடுகளை தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள். என்னைப் போன்று தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்றிருந்த ஊழியர்களை அடியோடு புறக்கணித்ததுமட்டுமல்லாமல் கூடியமட்டும் தொல்லைகளும் கொடுத்து வந்திருந்தவர்கள்.

ஆனால் என்னுடைய வேலையில் எப்போதுமே கவனத்துடன் இருந்து வந்திருந்ததாலும் எனக்காக எந்தவொரு போராட்டத்திலும் இறங்கியதில்லை என்றதாலும் என்னுடைய எட்டுவருட குமாஸ்தா பணிக்காலத்தில் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமலிருந்தேன். கேரளத்தை சார்ந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கிய நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக போராடியதைத் தவிர எங்களுடைய வங்கி ஊழியர் சங்கம் எவ்வித போராட்டங்களிலோ கதவடைப்புகளிலோ இறங்கியதேயில்லை.

அத்தனைப் பொறுப்புடன் வங்கி ஊழியர்களின் நலனுக்கெனவே போராடிவந்த எங்களுடைய ஊழியர் சங்கத்தில் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவைப் போன்ற சுயநலவாதிகளும் தலைவர்கள் என்ற போர்வையில் தேவையில்லாத சச்சரவுகளுக்கு காரணகர்த்தாக்களாக இருந்துவந்திருந்தனர்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தாவினுடைய முழக்கத்தை கேட்டதும் உள்ளறையில் அமர்ந்திருந்த சிப்பந்தி வெளியேறி வாசலை நோக்கி ஒடிவருவதை கவனித்த நான் அவரை வழிமறிக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி நகர்ந்தேன். அதற்குள் ஒரு வாடிக்கையாளர், 'என்ன சார் இது? அவர்தான் ஒங்க ப்ராஞ்சிலயே சீனியர் ஆஃபீசர். அவரப் போயி இப்படி அவமானத்தபடுத்தறீங்க?' என்ற என்னை நோக்கி கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு பதிலளிக்க முயல்வதற்கு முன் வங்கி மத்திய ஹாலுக்குள் நுழைந்த சிப்பந்தி கோபத்துடன் அவரை நெருங்கி, 'யார் சார் ஆஃபீசர் இந்தாளா?' என்றார்.

தொடரும்..