28 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 42

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவிகாலத்தில்தான் நான் குறிப்பிட்டிருந்த தலைமை குமாஸ்தா பதவி உயர்வு பெற்று என்னுடைய கிளைக்கு வந்திருந்தார்.

சாதாரணமாக தலைமைக் குமாஸ்தா பதவி அதிகாரியாக (officer) பதவி உயர்வுபெற லாயக்கில்லாதவர்களூக்கு அளிக்கப்படும் ஆறுதல் பரிசு என்ற கருத்து வங்கி ஊழியர்கள் மத்தியில் நிலவி வந்த காலம் அது. இப்போது அந்த பதவி எங்கள் வங்கியில் இல்லை.

ஒரு அதிகாரியாக பதவி உயர்வுபெற அப்போது குறைந்தபட்சம் பள்ளியிறுதி வகுப்பு முடித்திருக்கவேண்டும் (அன்றைய SSLC). ஆங்கிலம் சரளமாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

ஆகவே அத்தகைய பதவி உயர்வு பெற்று வருவோரை கிளையிலுள்ள அதிகாரிகள் மட்டுமல்லாமல் சக குமாஸ்தாக்களும் கூட பெரிதாக மதிக்கமாட்டார்கள். அத்துடன் அத்தகையோருடைய பணிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் என்பதால் அவரிடம் வேலை வாங்குவதற்கும் அதிகாரிகளுக்கு தயக்கமாக இருக்கும்.

ஆனால் தங்களுக்கும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளூக்கும் இடையேயுள்ள வயது வித்தியாசத்தையே தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு அவர்களை ஆட்டிப்படைப்பார்கள் இத்தகைய த.குமாஸ்தாக்கள்.

அதுவும் தான் ஒரு தொழிற்சங்க பதவியிலுள்ளவர் என்கிற மமதையும் சேர்ந்துக்கொள்ள என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு குட்டி ராஜாங்கத்தையே நடத்தி வந்திருந்தார். ஏற்கனவே தன் சக்திக்கும் மீறிய அளவில் வணிகத்தை வளர்த்துவிட்டிருந்த என்னுடைய முந்தைய மேலாளர் தனக்கிருந்த வேலைப்பளுவில் இவருடைய தொல்லையும் தேவையா என்பதை கருத்தில்கொண்டு அவரிருந்த திசைக்கே திரும்பாமல் இருந்திருப்பார் போலிருந்தது. ஆகவே அவருடைய அதிகாரம் எவ்வித தடையுமில்லாமல் கொடிகட்டிப் பறந்துவந்திருந்தது.

'யார் பேங்குக்கு வந்தாலும்.. மேனேஜர் கிட்ட போறாங்களோ இல்லையோ அவர்கிட்ட போய்ட்டுத்தான் சார் நம்மக்கிட்டயே வருவாங்க. நாங்க எதையாவது மேனேஜர கேக்காம செய்ய முடியாதுன்னு சொன்னம்னா அவர் அதெல்லாம் நா பாத்துக்கறேன் நீங்க செஞ்சி குடுங்கன்னு கஸ்டமர்ஸ் முன்னாலயே சொல்றதும் அத மேனேஜர் கேட்டும் கேக்காதமாதிரி இருக்கறதும்தான் சார் அவருக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்திருக்கு. நீங்களும் அவரோட யூனியன் கனெக்ஷன பாத்து சும்மா இருந்தீங்கன்னா...' என்று என்னுடைய கிளை அதிகாரிகள் அனைவரும் ஒருமுறை என்னிடம் வந்து முறையிட்டபோது, 'பொறுமையா இருங்க.. அவர டீல் பண்றதுக்கு சரியான நேரம் வரணும். நானும் அதுக்குத்தான் காத்துக்கிட்டிருக்கேன். அவசரப்பட்டு எதையாவது செஞ்சி காரியத்த கெடுத்துராதீங்க..' என்று அறிவுறுத்தி அனுப்பிவிட்டு தகுந்த சமயத்திற்கு காத்திருந்தேன்..

அது நான் எதிர்பார்த்ததையும் விடவும் விரைவில் வந்தது.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா தன்னை உதவி மேலாளர் என்று வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளதாக என்னுடைய அதிகாரிகளுள் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு சாட்சியமோ அல்லது ஆதாரமோ என்னிடம் இருக்கவில்லை. ஆகவே அந்த விஷயத்தில் மடக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று காத்திருந்தேன்.

ஒருமுறை நான் என்னுடைய அறையில் அமர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் திடீரென்று, 'சார் நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர்கிட்ட ஒரு லோன் ப்ரொப்போசல் குடுத்திருந்தேன். குடுத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி.. எப்ப கேட்டாலும் சரியா பதில் சொல்ல மாட்டேங்குறார். நீங்கதான் என்னாச்சின்னு சொல்லணும் என்றார்.

அப்போது நான் கிளைக்கு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியிருந்தன. எனக்கு தெரிந்தவரை ஒரேயொரு உதவி மேலாளர்தான் என்னுடைய கிளையிலிருந்தார். அவரோ நாளொன்றுக்கு ஐந்தாறு முறையாவது என்னுடன் உரையாடுபவர். அப்படியிருக்க இவருடைய கடன் விண்ணப்பத்தைப் பற்றி என்னிடம் கூறவேயில்லையே என நினைத்தேன். மேலும் அவர் கடன்பெற வரும் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவாக உரையாடி நான் பார்த்ததேயில்லையே என்றும் நினைத்தேன்.

'நீங்க யார சொல்றீங்க? சாதாரணமா நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர் இதுலல்லாம் தலையிடவே மாட்டாரே?' என்றேன்.

அவர் உடனே பெயரைச் சொல்லாமல் நாசூக்காக என்னுடைய தலைமைக் குமாஸ்தா இருந்த இடத்தை நோக்கி சைகைக் காட்டினார். நான் நினைத்திருந்த சந்தர்ப்பம் வந்துவிட்டது என மகிழ்ந்த நான் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அவர் கிட்டயா? நீங்க குடுத்த ப்ரொப்போசல் காப்பி இருக்கா?' என்றேன்.

அவர் விளங்காமல், 'ஏன் எதுக்கு சார் கேக்கீங்க? உங்கக்கிட்ட தரலையா? அவரையே கேக்கட்டுமா?' என்றார்.

நான் புன்னகையுடன் வேண்டாம் என தலையை அசைத்தேன். பிறகு அவர் எதிர்பாராத நேரத்தில், 'அவர் உங்கக்கிட்ட நான் அசிஸ்டெண்ட் மேனேஜர்னு சொன்னாரா?' என்றேன்.

அவர் மேலும் குழம்பிப்போனார். இதில் ஏதோ வில்லங்கம் என்று நினைத்தாரோ என்னவோ, 'என்ன சார் எதுக்கு கேக்கீங்க? அவர் ஒங்க அசிஸ்டெண்ட்டுன்னு சொன்னாரே சார்? அவர் குடுத்த விசிட்டிங் கார்ட்ல கூட போட்டுருந்துதே?'' என்றவாறு தன்னுடைய கைப்பையில் துழாவி ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார்.

நான் அவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் அதை வாங்கி என்னுடைய மேசை இழுப்பில் வைத்து மூடிவிட்டு, 'நீங்க கவலைப்படாம போங்க. நான் அவர் கிட்ட ஒங்க ப்ரொப்போசல கேட்டு வாங்கிக்கறேன். இனிமே இதப்பத்தி அவர்கிட்ட எதுவும் கேக்க வேணாம். ஒருவாரம் கழிச்சி வாங்க.. நான் பாத்துட்டு சொல்றேன்.' என்று அவரை அனுப்பிவைத்தேன்.

அவர் சென்றதும் என்னுடைய இழுப்பிலிருந்து அவர் விட்டுச்சென்ற அட்டையை பார்த்தேன். அதில் தெளிவாக அவருடைய பெயருக்கு கீழே உதவி மேலாளர் என்று அச்சிட்டிருந்தது. ஆனால் இதை மட்டுமே வைத்து அவரை மடக்க முடியாது என்று நினைத்தேன். இத நான் குடுத்தேங்கறதுக்கு உங்கக்கிட்ட ஆதாரம் இருக்கான்னு மடக்கக் கூடியவர் என்பதால் அவர் கைவசமுள்ள மீதமுள்ள அட்டைகளையும் கைப்பற்ற வேண்டும்.

அன்று மாலைவரை காத்திருந்து தலைமைக் குமாஸ்தாவும் மற்ற குமாஸ்தாக்களும் கிளையிலிருந்து சென்றபிறகு என்னுடைய உதவி மேலாளரை அழைத்து, 'நம்ம பிராஞ்சிலருக்கற எல்லா மேசைகளோட சாவிக் கொத்து எனக்கு வேணும். முக்கியமா நம்ம ஹெட் க்ளார்க்கோடது வேணும். இருந்தா கொண்டாங்க.' என்றேன்.

அவர் தயக்கத்துடன், 'சார் அது கூட அவர் கஸ்டடியிலதான் இருக்கு.' என்றார் பரிதாபமாக.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். 'ஏன் எதுக்காக அவர்கிட்ட அது இருக்கணும்?'

'எங்களால என்ன பண்ண முடியும் சார். அவர்தான் இங்க எல்லாமே. நீங்க வர்ற வரைக்கும் எச்.ஓவிலருந்து வர்ற தபால கூட அவர்தான் தொறந்துக்கிட்டிருந்தார். அவரால அதுலருக்கற லெட்டர்ச படிச்சி புரிஞ்சிக்க முடிஞ்சாக்கூட பரவால்லை. பந்தாவா படிக்கறாமாதிரி ஆக்ட் குடுத்துட்டு மேனேஜர் ரூமுக்கு அனுப்புவார். அவரும் ஒன்னும் சொல்லாம அவருக்கு வேண்டியத மட்டும் எடுத்துக்கிட்டு என்கிட்ட அனுப்புவார். எச். ஓ கவரே அப்படீன்னா மத்தத பத்தி என்ன சொல்றது சார்.' என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு (அப்போது கிளையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம் என்பது வேறுவிஷயம்) 'எங்களுக்கு பர்சனலா வர்ற இன்லெண்ட் லெட்டர்ச கூட திருட்டுத்தனமா படிச்சி பாப்பார்னா பாத்துக்குங்களேன்.' என்றார்.

வியப்புடன் சில நொடிகள் அவரையே பார்த்தேன். 'என்ன சார் சொல்றீங்க? என்ன இது அக்கிரமம். இதையெல்லாம் ஏன் நீங்க முன்னாலயே சொல்லல?'

'உங்ககிட்ட சொன்னது நாந்தான்னு தெரிஞ்சா அவ்வளவுதான் சார்.. அப்புறம் நா இங்க நிம்மதியா வேலை செய்ய முடியாது.' என்று அவர் பரிதாபமாக கூறியபோது இதை லேசில் விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்..

'சரி நாளைக்கு நீங்க ஒன்னு பண்ணுங்க.. ஒங்கக்கிட்டருக்கற சேஃப் ரூம் சாவிங்கள ஒங்க டிராயர்ல வச்சி பூட்டி ஒங்க டிராயர் சாவிய எங்கிட்ட குடுத்துருங்க. நாளைக்கி காலைல வந்ததும் சாவிய காணாம போட்டுட்டேன்னு எங்கிட்ட வந்து கம்ப்ளையண்ட் பண்ணுங்க. நானும் டூப்ளிக்கேட் சாவி உங்க கஸ்டடியிலதான் இருக்கும் அதவச்சி தொறக்க வேண்டியதுதானேன்னு சொல்றேன்.. அப்ப நீங்க அது ஹெட்க்ளார்க் கிட்ட இருக்கு சார். அவர் நா கேட்ட தருவாரோ என்னவோன்னு சொல்லுங்க.. மத்தத நா பாத்துக்கறேன்.' என்றேன்..

அவரும் மகிழ்ச்சியுடன் நான் கூறியவாறே செய்துவிட்டு சாவியை என்னிடம் கொடுக்க வந்தார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். 'நீங்க புத்திசாலின்னு நினைச்சேனே சார்?'

அவர் திடுக்கிட்டு, 'என்ன சார் நீங்கதான சொன்னீங்க?' என்றார்.

நான் புன்னகையுடன், 'நான் சொன்னா நீங்க ஒங்க ஜாய்ண்ட் கஸ்டடி சாவிய டிராயர்ல வச்சிட்டு அந்த சாவிய எங்கிட்டு குடுக்கலாமா? நா அத எடுத்து எங்கிட்ட இருக்கற இன்னொரு ஜாய்ண்ட் கஸ்டடி சாவியயும் சேர்த்து சேஃப் ரூம தொறக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?' என்றேன்.. 'எந்த ஒரு டைம்லயும் நிதானத்த இழக்காம இருக்கணும்.. நான் சும்மா ஒரு பேச்சுக்கு எங்கிட்டு குடுத்துட்டு போங்கன்னு சொன்னேன். நீங்களே வச்சுக்குங்க.. நாளைக்கு வரும்போது கையோட கொண்டும் வாங்க. ஆனா தொலைச்சா மாதிரி நடிச்சா போறும்..'

அவர் தன் தவறை உணர்ந்து, 'சாரி சார்.' என்றவாறு வெளியேற நான் நாளை நடத்தவிருக்கும் நாடகத்தை எப்படி திறம்பட நடத்துவதென்ற சிந்தனையில் என் இருக்கையில் அமர்ந்து சிந்திக்கலானேன்..

கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவுக்கு சீரியசான விஷயம் என்பது எனக்கு தெரிந்துதானிருந்தது. ஆனால் அவருடைய கொட்டத்தையடக்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை..

அவர் கைவசமிருந்த டூப்ளிகேட் சாவிக்கொத்து என் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் அவருடைய மேசை இழுப்பில் வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளரின் கோப்பு கிடைக்கும். அதைவிட முக்கியம் வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்வதற்கெனவே அவர் போலியாய் அச்சிட்டு வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளை என்னால் கைபற்றமுடியும்..

அவை மட்டும் கிடைத்துவிட்டால் போதும்.. அவரை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உட்கார்த்திவைத்துவிடலாம்...

தொடரும்..

18 comments:

sivagnanamji(#16342789) said...

இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம்-அதை நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம்-அதை நாம்
எல்லோரும் பார்க்கின்றோம் //

ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடற மாட்டை பாடி கறக்கணும்னு இருக்கில்ல...

துளசி கோபால் said...

அந்த நாடக அனுபவம் இப்ப ப்ளொக் எழுத உதவுது:-))))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

அந்த நாடக அனுபவம் இப்ப ப்ளொக் எழுத உதவுது//

கரெக்ட்..

நாம எல்லாருமே சில சமயங்கள்ல இந்த மாதிரி நாடகம் ஆடறதில்லே..

நம்ம குழந்தைங்கக் கிட்ட, ஏன் நம்ம spouse கிட்டயும் கூட..

அதுமாதிரிதான் இதுவும்:))

Aani Pidunganum said...

Saarvaal,

Kalakala ezhudharinga, Sariyana idathula thodarum potinga. So interesting about your style. Iam keep reading your old posts & they are really nice and good read & get to know about the people you seen in day today life.

Aanipidunganum

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க... அதென்ன ஆனி பிடுங்கணும்னு வச்சிருக்கீங்க?

சரி. உங்க பாராட்டுதலுக்கு நன்றி..

ஈ கலப்பையை இறக்கி தமிழ்ல எழுத வேண்டியதுதான?

Aani Pidunganum said...

அது officeல ஆணி பிடுங்கர வேலை நடுவுல சட்டுனு தமிழ்ல எழுத நேரம் ஆகும்னு தான்.
ஹிஹிஹி

ஆணிபிடுங்கனும்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

அது officeல ஆணி பிடுங்கர வேலை //

ஆணி அடிக்கறத விட இது ஈசியான வேலைதான்...

நடுவுல சட்டுனு தமிழ்ல எழுத நேரம் ஆகும்னு தான்.//

இதுவும் சரிதான்.. புடுங்கிக்கிட்டிருக்கறப்ப இங்க்லீஷ்ல எழுதறதுதான் ஈசி. :))))))

Sivaprakasam said...

<---
அவர் போலியாய் அச்சிட்டு வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளை என்னால் கைபற்றமுடியும்..
---->
அந்த அளவுக்கு அவர் அப்பாவியாய் இருப்பார் என்று நினைக்கவில்லை. ஒரு வேளை இதுவரை மாட்டாததால் இருக்கலாம்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

அந்த அளவுக்கு அவர் அப்பாவியாய் இருப்பார் என்று நினைக்கவில்லை. ஒரு வேளை இதுவரை மாட்டாததால் இருக்கலாம். //

என்னெ என்ன செஞ்சிரமுடியும்னும் நினைச்சிருக்கலாமில்ல?

அவர் நிச்சயமா அப்பாவி இல்லைங்க..

pplnet said...

Even if you capture his cards how can you prove that he only printed them? he can counter argue that he has no idea about those cards and he never printed them, right? unless otherwise someone witneses that he provided those.
Btw you have got an amazing wrinting skills, i have been reading all your posts from day 1 though not writing any comments.

--
Jagan

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க pplnet,

Even if you capture his cards how can you prove that he only printed them? he can counter argue that he has no idea about those cards and he never printed them, right? unless otherwise someone witneses that he provided those.//

You are right. But it is not that difficult to prove if he keeps those cards in his custody (drawer) is it not? That's what I wanted to find out.

But you have got an amazing writing skills, i have been reading all your posts from day 1 though not writing any comments.//

Thanks..

தென்றல் said...

வணக்கம், சார்!

"திரும்பிப் பார்க்கிறேன் II" இன்னும் முழுசா படிச்சி முடிக்கல. "திரும்பிப் பார்க்கிறேன் I" படிச்சமாதிரி ஒரே மூச்சா படிச்சு முடிச்சுட்டு வாரேன் (ஆனா, அது எப்பனுதான் தெரியல ..;( ?)

இந்த தொடர்களுக்கு நடுவுல வேற சில உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகிட்டா நல்லா இருக்குமே, சார்?

தென்றல் said...

வணக்கம், சார்!

"திரும்பிப் பார்க்கிறேன் II" இன்னும் முழுவதும் படிச்சி முடிக்கல.
"திரும்பிப் பார்க்கிறேன் I" எப்படி ஒரே நேரத்தில படிச்சி முடிச்சேனோ, அதே மாதிரி இதையும் படிச்சிட்டு வாரேன். (ஆனா, எப்பனுதான் எனக்கே தெரியல ..;( ?)

இந்த தொடரை தவிர உங்கள் எண்ணங்களை, கருத்துகளை வேற சில பதிவுகள் மூலம் பகிர்ந்துகலாமே, சார்?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க தென்றல்,

இந்த தொடர்களுக்கு நடுவுல வேற சில உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகிட்டா நல்லா இருக்குமே, சார்? //

முயற்சி செய்கிறேன். உங்களுடைய கருத்துக்கு நன்றி.

G.Ragavan said...

அடேங்கப்பா! சினிமா நாடகத்துல வர்ர மாதிரி இருக்குதே! விட்டா இவருதான் குடியரசுத்தலைவர்னே சொல்வாரு போல. அடேங்கப்பா! அடேங்கப்பா! பாலையா எக்ஸ்ப்ரஷந்தான் வருது.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

அடேங்கப்பா! சினிமா நாடகத்துல வர்ர மாதிரி இருக்குதே! விட்டா இவருதான் குடியரசுத்தலைவர்னே சொல்வாரு போல. //

இவர் மட்டுமில்ல எல்லா தொழிற்சங்க தலைவர்களும் இப்படித்தான்.

Sivaprakasam said...

<--
அவர் நிச்சயமா அப்பாவி இல்லைங்க.. -->
"ஏமாளி/முட்டாள்" என்ற வார்த்தையின் கடுமையைக் குறைப்பதற்க்காக அப்பாவி என்றேன்