27 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 41

நடிகையின் கணவருடைய பிரச்சினை அன்றுடன் ஓய்ந்துவிடவில்லை. . நடிகையின் கணக்கில் அவர் செய்திருந்த தில்லுமுல்லுகள் அவர்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த விரிசலை மேலும் விரிவாக்கி இறுதியில் விவாகரத்து என்று முடிந்தது.

ஆனால் அதற்கு முன்பு அவர் தன்னுடைய கணவரின் மீது போலீசில் புகாரளிக்க அவர்கள் என்னுடைய கிளைக்கு வந்து விசாரிக்க அடுத்த சில மாதங்கள் நானும் என்னுடைய கிளை அதிகாரிகளும் பட்ட அவஸ்தையை இப்போதும் நினைத்தாலும்...

நல்லவேளையாக சில வருடங்களுக்கு முன்பு நான் என்னுடைய முதல் கிளையில் மேலாளராக இருந்த சமயத்தில் எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த ஒரு மலையாள திரையுலக இயக்குனர் மூலமாக நடிகையை அணுகி என்னுடைய கிளை அதிகாரிகளை அந்த சிக்கலிலிருந்து விடுவிக்கக் கோரினேன். முதலில் தயங்கிய அவர் பிறகு பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். ஆகவே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதுபோல் அதிலிருந்து எங்களுடைய வங்கியும் என்னுடைய முந்தைய மேலாளரும் மீளமுடிந்தது.

அதுவரை என் மீது தனிப்பட்ட விரோதம் பாராட்டி வந்த என்னுடைய மேலாளர் நண்பர் என்னுடைய உதவியாளர் மூலமாக நான் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி கேள்விப்பட்டு என்னுடன் சுமுகமானார்.

அதற்குப் பிறகு அவருக்கெதிராக நடைபெற்ற இலாக்கா விசாரனையில் நானும் என்னுடைய கிளை அதிகாரிகளும் சாட்சியமளிக்க வேண்டி வந்தபோதும் அவர் எங்களை தவறாக கருதவில்லை. அவர் நினைத்திருந்தால் தன்னுடைய தவறுகளில் தன்னுடைய துணை மற்றும் உதவி அதிகாரிகளையும் உட்படுத்தியிருக்க முடியும்.

என்னுடைய அலுவலக வாழ்க்கையில் தாங்கள் செய்த தவறுகளுக்கு தங்களுடைய துணை அதிகாரிகளைப் பொறுப்பாக்கிய எத்தனையோ மேலாளர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரு கிளையில் நடைபெறும் பெரும்பான்மையான தவறுகளுக்கு மேலாளரே பொறுப்பு என்று எங்களுடைய வங்கி கருதுவதால் அவர் எவ்வளவுதான் தன்னுடைய உதவி அதிகாரிகளை குறை கூறினாலும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பேயில்லை. ஆயினும் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றிருக்கிறதல்லவா? அதுபோலவே தனக்கு கிடைக்கும் தண்டனையும் தன்னைச் சார்ந்த அனைவருக்கும் கிடைக்கட்டும் என்ற 'நல்ல' எண்ணம் சில மேலாளர்களுக்கு இன்றும் உள்ளதை காணலாம்.

*****

நான் மேலாளர் பதவியேற்று முதலாவது பத்தாண்டுகள் நிறைவேறியது அந்தக் கிளையில்தான். அந்த பத்தாண்டுகளில் நான் பெரிதாக சாதித்து ஸ்டார் பெர்ஃபார்மர் என்ற பட்டத்தை பெறவில்லையென்றாலும் எந்த ஒரு பெரிய சிக்கலிலும் சிக்கி தண்டனையும் பெறவில்லை. அதாவது மதுரைக் கிளையில் ஒரு அரசியல்வாதியிடம் மோதி பதவியிழந்ததைத் தவிர.

எங்களுடைய வங்கியில் (ஏன் எல்லா வங்கியிலும்தான்) தண்டனை எனக் கருதப்படுவது ஊதிய இழப்புடனான பதவியிறக்கம் (Demotion to the lower grade with monetary loss), பதவியிறக்கமில்லாத ஊதிய இழப்பு (Monetary loss without demotion) , அதாவது இரண்டிலிருந்து நான்கைந்து வருடாந்தர ஊதிய உயர்வு இல்லாமல் செய்வது (Loss of annual increments). இவற்றுடன் வெறும் எச்சரிக்கையும் (Caution) அளிக்கப்படுவதுண்டு. அதிகப்பட்ச தண்டனையாக பணிபறிபோவதும் உண்டு. ஒருசிலர் சிறைபடுத்தப்பட்டதும் உண்டு.

வங்கிக்கு பெருமளவு இழப்பு ஏற்படும் சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வங்கி காவல்துறையில் புகார் செய்வதுண்டு. பெரிதாக இழப்பில்லாவிட்டாலும் ஊழல் நடந்திருப்பதாக கருதப்படும் பட்சத்தில் ஊதிய இழப்புடனான பதவியிறக்கமும், வங்கிகளின் நியதிகளை வேண்டுமென்றே மீறுபவர்களுக்கு பதவியிறக்கமில்லாத ஊதிய இழப்பும், விதிமுறைகளை மீறாவிட்டாலும் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்படுபவர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கப்படும்.

இது அதிகாரியாக இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் Staff எனப்படும் குமாஸ்தாக்களுக்கும் Sub Staff எனப்படும் சிப்பந்திகளுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு இருப்பதால் அவர்களை தண்டித்து பணியிலிருந்து வெளியேற்றுவது (Termination) மட்டுமல்ல தற்கால பணிபறிப்பும் (Suspension) அத்தனை எளிதல்ல. அதுவும் தொழிற்சங்கத்தில் ஏதாவது ஒரு பதவியிலிருப்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் எங்களுடையதைப் போன்ற தனியார் வங்கிகளில் நிலமை பரவாயில்லை. அரசு வங்கிகள் பலவற்றில் சமீப காலம் வரை இத்தகையோர் வைத்ததுதான் சட்டம். பல கிளை மேலாளர்கள் இவர்களுடைய தயவில்லாமல் கிளையை நடத்திச் செல்லவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். கணினி மயமாக்கப்பட்ட பிறகு இந்த இழிநிலை சற்றே குறைந்திருக்கிறது எனலாம்.

என்னுடைய கிளையிலும் ஒரு தொழிற்சங்க தலைவர் தலைமைக் குமாஸ்தாவாக இருந்தார். அவர் கடைநிலை சிப்பந்தியாக பணிக்கு சேர்ந்து பிறகு காசாளராக பதவி உயர்வு பெற்று இறுதியில் தலைமைக் குமாஸ்தாவாக உயர்வு பெற்றிருந்தவர்.

அவருடைய வளர்ச்சிக்கு அவருடைய திறமையும் அயரா உழைப்பும் என்பதைவிட தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கே காரணம் என்றாலும் மிகையாகாது.

நான் கிளைக்கு பொறுப்பேற்ற சமயத்தில் விடுப்பில் இருந்த அவர் பணிக்கு திரும்பியதுமே நேரே என்னுடைய அறைக்குள் நுழைந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் அறிமுகப்படுத்திய விதமே அலாதியானது.

சாதாரணமாக முதல் சந்திப்பிலேயே ஒருவரை எடைபோட முடியும் என்பதில் நம்பிக்கையில்லாதவன் நான். ஆனால் அவருடைய முதல் நாள் நடவடிக்கையே அவரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு அறிவுறுத்தியது. மேலும் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் இரண்டு வருடங்களே இருந்தன. என்னுடைய வயது அவருடைய வங்கி அனுபவமாக இருந்தது!

அத்துடன் அவர் முந்தைய மேலாளருக்கு 'வலதுகை மாதிரி' என்று வேறு என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் ரகசியமாக தெரிவித்திருந்ததும் நினைவிலிருந்தது.

அவருக்கு மேலாளராக இருந்த அனைவருக்குமே அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதும் உண்மை.

அவர் தன்னை கிளை அதிகாரிகளுள் ஒருவராக வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பதாக என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் ஒருமுறை தெரிவித்தபோது, 'அப்படியா? இது ஒங்க பழைய மேனேஜருக்கு தெரியுமா?' என்றேன் வியப்புடன்.

'நல்லா தெரியும் சார். ஆனா அவர தட்டிக்கேட்க தைரியமில்லாம விட்டுட்டார்.'

அவர் பணிக்கு திரும்பிய நாள்முதல் சில நாட்கள்வரை அவருடைய நடவடிக்கைகளை கவனித்தேன். என்னுடைய உதவி மேலாளர் கூறியதுபோலவே அவர் ஒரு அதிகாரியுடைய தோரணையில் வாடிக்கையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல் மற்ற கிளை அதிகாரிகளிடமும் நடந்துக்கொள்வதைப் பார்க்க முடிந்தது.

சில நாட்கள் அதில் தலையிடாமல் இருந்தேன். ஆனால் கிளைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுள் பலரும் கவுண்டருக்குள் நுழைந்து அவருடைய இருக்கைவரை சென்று வணக்கம் செலுத்துவதும் அவரும் பந்தாவாக தன்னுடைய இருக்கைக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் அவர்களை அமர்த்தி உரையாடுவதும் அவர்களுக்கு தேவையானவற்றை மற்ற அதிகாரிகளை, அதாவது அவருடைய பதவிக்கு மேலிருந்த அதிகாரிகளை, அழைத்து அவற்றை உடனே செய்துக்கொடுக்க உத்தரவிடுவதும்...

எனக்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் அவருடைய தொழிற்சங்க பதவியை கருத்தில்கொண்டு அவரை எப்படி கையாள்வதென சிந்திக்க ஆரம்பித்தேன்..

நானும் குமாஸ்தாவாக இருந்த சமயத்தில் தொழிற்சங்க கமிட்டி அங்கத்தினராக இருந்தவந்தான். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் பங்குபெற்றவந்தான். ஆகவே அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் இறங்கலாகாது.. நேரம் வரும்.. அப்போது லாவகமாக கையாளுவோம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்...

அது நான் எதிர்பார்த்ததையும் விட விரைவாகவே வந்தது...

தொடரும்..

16 comments:

துளசி கோபால் said...

ஓடுமீன் ஓட.............:-)))

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

ஓடுமீன் ஓட.....

நான் தமிழ்ல கொஞ்சம் வீக்காச்சே.. என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை:(

துளசி கோபால் said...

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.

சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்துருந்தீங்கன்னு சொல்ல வந்தேன்.

அடக்கடவுளே! எனக்கு இப்படியும் ஒரு கதி வந்ததே(-:

தருமி said...

அவர் மண்டையில தட்டுறதுக்குச் சரியான சந்தர்ப்பம் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததைச் சொல்றாங்க.

நல்ல சஸ்பென்ஸ்...சீக்கிரம் திரும்பிப் பாருங்க..

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

அடக்கடவுளே! எனக்கு இப்படியும் ஒரு கதி வந்ததே//

நீங்க உங்கள நொந்துக்காதீங்க..

என் மரமண்டைக்கு ஏறலையேன்னு நாந்தா நொந்துக்கணும்..

ரொம்ப நன்றிங்க..:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க தருமி சார்,

அவர் மண்டையில தட்டுறதுக்குச் சரியான சந்தர்ப்பம் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததைச் சொல்றாங்க.//

அவங்களே மறுபடியும் வந்து சொல்லிட்டாங்க..

விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி சார்..

sivagnanamji(#16342789) said...

எனக்கு ஒரு சந்தேகம்...
'லஞ்சுக்குப் போறேன்;மூணு மணிக்கு போன் பண்ணிட்டு வர்றே'னு போன மேளாளர் எப்ப திரும்பி வந்தார்?எப்படி அந்த சூழ்நிலையை சமாளித்தார்?

ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எப்படி சமாளித்தீங்கனு சொன்னாதானே
மற்றவர்களுக்கும் அது உபயோகப்படும்

பதிவிடறதா மட்டும் நினைக்காதீங்க;ஒரு வகையில் பாடம் நடத்துவதையும் மறந்துடாதீங்க

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எப்படி சமாளித்தீங்கனு சொன்னாதானே
மற்றவர்களுக்கும் அது உபயோகப்படும்//

அதுதானே இந்த தொடரின் நோக்கமும்?

ஆனா பெருசா ஒன்னும் செஞ்சிரலை..

அவர் வந்து கையிலிருந்த பணத்த வாங்கிட்டுப் போய்ட்டார். மீதி தொகைய பிறகு வந்து வாங்கிக்கிருங்கன்னு என் உதவி மேலாளர் சொல்ல முதலில் தகராறு செய்துவிட்டு பிறகு அரைமனதுடன் சம்மதித்திருக்கிறார். ஆனால் அதற்குள் அவருடைய மனைவி அவரை மடக்கிப் பிடிக்க விஷயம் சிக்கலாகவே அவர் மீதித்தொகையை பெற வரவேயில்லை...

நான் வங்கிக்கு திரும்பியதும் விஷயத்தை அறிந்த நான் அவரளித்த காசோலை தொகையை அவருடைய கணக்கில் வரவு வைக்காமல் எக்சஸ் கேஷ் என்ற கணக்கில் வரவு வைத்துவிட்டு அடுத்த நடவடிக்கைக்கு காத்திருந்தேன்..

இடையில் நடிகை கணவர் மீது அளித்த புகாரில் என்னையும் என்னுடைய வங்கி அதிகாரிகளையும் சம்பந்தப்படுத்த அதற்குப்பிறகு காவல் நிலையத்திற்கு அலைவதே வேலையாக இருந்தது..

எக்சஸ் கேஷ் கணக்கிலிருந்த தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்தவேண்டி வந்தது. அதன் பிறகு வழக்கம்போல வழக்கு பல வருடங்கள் நீடிக்க நான் அந்த கிளையிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை பிரச்சினை தீரவேயில்லை..

இதுதான் நடந்தது. இதில் என்னுடைய நடவடிக்கை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லையல்லவா? அதனால்தான் அதை தொடர்ந்து எழுதாமல் விட்டுவிட்டேன்..

Sivaprakasam said...

<-----
நானும் குமாஸ்தாவாக இருந்த சமயத்தில் தொழிற்சங்க கமிட்டி அங்கத்தினராக இருந்தவந்தான். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் பங்குபெற்றவந்தான்
---->
திருடந்தான்(போலீசாகி) திருடனைப் பிடிக்க முடியும்னு சொல்ற மாதிரி!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

திருடந்தான்(போலீசாகி) திருடனைப் பிடிக்க முடியும்னு சொல்ற மாதிரி!//

கரெக்ட்:))

david santos said...

Hello!
This work is very good. Thank you.
I don`t speak Indian, but we can make words with letters and with the words we can make sentences.
Thank you

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

Hi David,

I don`t speak Indian, but we can make words with letters and with the words we can make sentences.//

I am unable to believe that you could read and understand my narration without knowing Tamil!

Anyway thanks for your comments.

மன்னைகோசை said...

எழுத்து நடை சரளத்தால் படிக்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க மன்னையாரே,

எழுத்து நடை சரளத்தால் படிக்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது //

அப்படியா.. மிக்க நன்றி:)

Sivaprakasam said...

<----
I am unable to believe that you could read and understand my narration without knowing Tamil!
--->
ஒரு வழியா சர்வதேச ப்ளாக்கராக மாறிட்டீங்க. பாருங்க உங்களோட எழுத்து தமிழ் தெரியாத ஒரு அன்னியரைக் கூட படிக்க வைச்சுருச்சு

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவா,

ஒரு வழியா சர்வதேச ப்ளாக்கராக மாறிட்டீங்க. பாருங்க உங்களோட எழுத்து தமிழ் தெரியாத ஒரு அன்னியரைக் கூட படிக்க வைச்சுருச்சு //

அதான் எனக்கும் மர்மமா இருக்கு.. தமிழே தெரியாம ஒருத்தரால படிச்சி புரிஞ்சிக்க முடியுமா..