20 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 39

நடிகையின் கணவருடைய காசோலைக்குண்டான தொகையில் எழுபது விழுக்காடுக்கும் குறையாமல் ரொக்கம் கையிருப்பில் இருந்தும் அதை அவருக்கு உடனே வழங்காமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது என்பதை என்னுடைய உதவி அதிகாரி அறிந்திருப்பார் போலிருந்தது.
ஆகவேதான் அவர் என்னை சங்கடத்துடன் பார்த்தார்.

ஆனால் நடிகையின் கணவர் அதை தவறாகப் புரிந்துக்கொண்டார். 'என்ன சார் ஒங்க மேனேஜர எதுக்கு பாக்கறீங்க? வாங்க, கையிலிருக்கற கேஷ குடுத்துட்டு மீதிக்கு செக்கோ டிராஃப்டோ குடுங்க சார், டைம் ஆவுது.' என்றவாறு அவர் என்னுடைய அறையை விட்டு வெளியேற நான் என்னுடைய அதிகாரியைப் பார்த்தேன்.

'இப்ப என்ன பண்றது சார்? நீங்க எதுக்காக கையில கேஷ் இருந்தும் அவருக்கு குடுக்க தயங்கறீங்கன்னு தெரியுது சார். எங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கு. அவர் கணக்குல இருக்கற முழு தொகையுமே அவங்க வைஃபோட கணக்குலருந்து டிரான்ஸ்ஃபர் பண்ணதுதான் சார். அத செய்யறதுக்கு எங்களுக்கு இஷ்டமில்லன்னாலும் மேனேஜர் சொன்னப்போ எங்களால ரெஃப்யூஸ் பண்ண முடியல. இப்ப இவர் கணக்குலருக்கறத எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போயி பின்னால அந்த மேடத்துக்கு தெரிய வந்தா பிரச்சினையாயிருமோன்னு பயமாருக்கு சார். இத அலவ் பண்ணாம இருக்கறதுக்கு நீங்கதான் ஏதாச்சும் செய்யணும் சார், ப்ளீஸ்.' என்றார் அவர்.

அவரைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது.

ஒரு கிளையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் அதன் மேலாளர்தான் பொறுப்பு என்றாலும் பெரிய கிளைகளில் மேலாளருக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட துணை மற்றும் உதவி அதிகாரிகள் இருக்கையில் கிளையில் நடக்கும் தவறுகளுக்கு மேலாளருடன் சேர்த்து அவர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

கிளைகளின் செயல்பாடுகளில் (operations) இரு வகை உண்டு.

முதலாவது, அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வரவு செலவுகள் (Daily Transactions), கணக்குகளை சரிபார்ப்பது, தலைமையகத்திற்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பது, உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுடனான கடிதப் போக்குவரத்து ஆகியவை..

இரண்டாவது கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது. கடனுக்குண்டான ஆவணங்களை தயாரிப்பது, பராமரிப்பது, புதுப்பிப்பது, வாராமல் நிற்கும் கடன்களை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது, வாடிக்கையாளர்களுடனான கடிதப் போக்குவரத்து இத்யாதிகள்..

இவற்றில் முதல் செயல்பாடுகளுக்கு முழுப்பொறுப்பு கிளையதிகாரிகள் அதாவது மேலாளரல்லாத அதிகாரிகள் அனைவரும் இதற்கு பொறுப்பு. ஆனால் இவர்களுடைய செயல்பாடுகள் வங்கிகளின் நியதிகளுக்குட்பட்டு உள்ளனவா என்பதை அவ்வப்போது மேற்பார்வையிடுவது மேலாளரின் பொறுப்பு.

இரண்டாவதில் மேலாளருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பது மட்டுமே அவர்களுடைய பொறுப்பு. மற்றவை மேலாளருடையதாகும்.

வங்கியின் நியதிகளின்படி ஒரு மேலாளருடைய நடவடிக்கைகள் வங்கிகளின் நியதிக்குட்பட்டு நடைபெறுகின்றனவா என்பதை கண்கானிக்கும் பொறுப்பும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளுக்கு உண்டு. அவர் நியதிகளுக்கு எதிராக செயல்படும்போதும், அல்லது அவருக்குள்ள அதிகாரத்தை மீறி குறிப்பாக வங்கியின் நலனுக்கு எதிராக செயல்படுகையிலும் அதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கலாகாது என்றும் தேவைப்பட்டால் அதை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கின்றன வங்கியின் நியதிகள். மேலும் கிளை மேலாளருடைய அதிகார வரம்பின் கீழ் வழங்கப்படும் கடன்களை பெறும் வாடிக்கையாளர்களுடைய பொருளாதார மற்றும் வணிக/தொழில் நிலமையை கணித்து மேலாளருக்கு பரிந்துரைக்கும் பொறுப்பும் உதவி அதிகாரிகளுக்கு உண்டு.

ஆனால் நடைமுறை சங்கடங்களுக்கு (practical difficulties) அஞ்சி பெரும்பாலான உதவி அதிகாரிகள் இதில் அத்தனை ஈடுபாடு காட்டுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. கிளை மேலாளர் வயதில் மிகவும் மூத்தவராகவும் அனுபவமுள்ளவராகவும் இருப்பது (அனுபவம் என்றால் தவறுகள் செய்வதில்!),
2. அல்லது மேலிடத்தில் செல்வாக்குள்ளவராயிருப்பது,

மேலும் உதவி அதிகாரிகளுடைய வருடாந்தர கணிப்பு அறிக்கையை (appraisal report) சமர்ப்பிக்கும் உரிமை மேலாளருக்கு இருப்பதால் அவரை பகைத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றும் உதவி அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் தங்கள் போக்கில் செயல்படுவது நேர்மையற்ற மற்றும் ஒழுங்கீனமான மேலாளர்கள். மேலும் இத்தகையோர் தாங்கள் செய்யவிருப்பதைக் குறித்து தங்களுடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமலிருப்பதற்கு மூல காரணம் அவர்கள் செய்யும் பல காரியங்களும் வங்கியின் நியதிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்பதுடன் அவர்களுள் பெரும்பாலோருக்கு வங்கியின் நியதிகளைப் பற்றிய முழுவிவரமே இருப்பதில்லை. எதற்கு நம்முடைய அறியாமையை நம்முடைய உதவியாளர்களிடம் காட்டிக்கொண்டு பிறகு அவமானப்படுவது என்ற நினைப்பிலேயே அவர்களுடனான ஆலோசனையை தவிர்ப்பதுண்டு.

ஆனால் நேர்மையான அதிகாரிகளும் கூட தாங்கள் எதைச் செய்தாலும் அவற்றைக் குறித்து தன்னுடைய உதவி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க தேவையில்லை என்றும் நினைப்பதுண்டு. இதற்கு தங்களுடைய விஷயஞானம் மற்றும் ஆற்றலில் மீது அவர்களுக்குள்ள அபார நம்பிக்கை. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. தங்களுடைய உதவி அதிகாரிகளால் தங்களை விட திறமையாக செயல்பட முடியாது என்ற நினைப்பு. சிலருக்கு எங்கே இவர்கள் தங்களை விடவும் விஷயஞானம் உள்ளவர்களாகவோ அல்லது திறமையுள்ளவர்களாகவோ இருந்துவிடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.

இத்தகைய சூழலில்தான் வங்கிக் கிளைகளில் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான தவறுகள் நிகழ்கின்றன.

நான் மேலே கூறிய கிளை செயல்பாடுகளில் நடிகையின் கணவருடைய கணக்கில் நடந்தவை அன்றாட வரவு செலவுகளின் கீழ் வருபவை. ஆகவே அவற்றிற்கு பொறுப்பு உதவி அதிகாரிகள்தான். ஆயினும் அவர்களை வங்கியின் நியதிக்குட்பட்டு செயல்பட விடாமல் செய்திருந்தார் என்னுடைய முன்னால் மேலாளர் என்பது அதிகாரிகளுடைய குற்றச்சாட்டு.

சாதாரணமாக வங்கியின் நியதிகளை நியாயமான காரணங்களுக்காக மேலாளர்கள் வங்கியின் நியதிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக மீறுவதுண்டு. அதாவது அத்தகைய விதிமீறல்கள் (violation of the procedures) வங்கியின் நலனைக் கருத்தில் கொண்டோ அல்லது அவற்றால் வங்கிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற கருத்துடனோ மீறப்படும்போது.

ஆனால் நடிகையின் கணவருடைய கணக்கில் மேலாளர் அனுமதித்திருந்த விதி மீறல்கள் இதன் அடிப்படையில் வராது என்பதை கிளை அதிகாரிகள் உணர்ந்திருந்ததால்தான் வருங்காலத்தில் தன்னுடைய கணக்கிலிருந்து விதிகளுக்கு புறம்பாக மாற்றப்பட்டுள்ள தொகை முழுவதையும் திருப்பித்தரவேண்டுமென்று நடிகை புகார் செய்தால் அதற்கு முழுப்பொறுப்பும் மேலாளருடன் சேர்த்து தங்களுக்கும் ஏற்படுமோ என்று அஞ்சினர்.

ஆகவேதான் நடிகையின் கணவருடைய கணக்கிலிருந்த முழுவதையும் அவர் ஒரே காசோலை மூலம் எடுக்க அனுமதிக்கலாகாது என்று அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவருடைய மனைவியின் கணக்கிலிருந்து அவர் தன்னுடைய கணக்கிற்கு மாற்றிய செயல் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை மீறிய செயல் என்பதை அறிந்தவுடனே அதை அனுமதித்திருக்கலாகாது. அப்படி செய்திருந்தால் அவரால் எதுவும் செய்திருக்க முடியாது. அதை விட்டுவிட்டு இப்போது அவருடைய கணக்கிலுள்ள தொகையை எடுக்க அனுமதிக்காமலிருந்தால் அவரால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆகவே இதை எப்படி சாதுரியமாக கையாளுவது என யோசித்தேன்..

thodarum…

3 comments:

sivagnanamji(#16342789) said...

முறையான POA/லெட்டர் இல்லாமல்
தொகை மாற்றப்ப்ட்டது என்று காரணம் காட்டி, இப்பொழுது பணம் எடுப்பதைத் தடுக்க முடியாதா?
பணத்தைக் கொடுத்த பின்னர் நடிகை நீதிமன்றம் சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவுதானே?

சிஜி

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

முறையான POA/லெட்டர் இல்லாமல்
தொகை மாற்றப்ப்ட்டது என்று காரணம் காட்டி, இப்பொழுது பணம் எடுப்பதைத் தடுக்க முடியாதா?//

முடியும். ஆனால் அதை மாற்றத்தை அனுமதிக்கும்போதே செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
இங்கு அதுதான் பிரச்சினை.

பணத்தைக் கொடுத்த பின்னர் நடிகை நீதிமன்றம் சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவுதானே?//

நிச்சயமாக.

துளசி கோபால் said...

ஒரே திகில் நிறைந்த மர்மநாவல் லெவலுக்கு இருக்கு உங்க தொடர்.

மூணுமாச பாக்கியை மூணு நாளா உக்கார்ந்து படிச்சு முடிச்சேன்.

இனி தி பா. 40 நிதானமா அப்பப்பப் படிச்சுறணும்.