19 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 38

நடிகையின் கணவரிடமிருந்து பெற்ற காசோலையை திருப்பியளிக்க மறுத்தது அது ஒரு ஆதாரமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட கணக்கில் இதுபோன்ற செயல்களை அவர் செய்திருக்கிறாரா என்பதை ஆய்வு செய்யவும் உதவுமே என்ற எண்ணமும் இருந்தது.

என்னிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் அத்தனை எளிதில் திரும்பி வர மாட்டார் என்று நான் நினைத்திருக்க அடுத்த சில நிமிடங்களிலேயே திரும்பி வந்து நேரே கவுண்டரிலிருந்த என்னுடைய உதவி அதிகாரியிடம் செல்வதைப் பார்த்தேன். அவரை உளவு பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லையெனினும் அவர் காசோலைபோன்றதொரு பொருளை அதிகாரியிடம் நீட்டுவதைக் கவனித்த நான் இனியும் வாளாவிருப்பது சரியாயிருக்காதென நினைத்து இண்டர்காமில் அவரை அழைத்து, 'அந்த செக் யாருடையது?' என்றேன்.

அவர் தயக்கத்துடன், சாரோடதுதான் சார். கேஷ் செக்.' என்றார்.

'சரி.. மேடத்தோட செக் ஏதும் வந்தா எங்கிட்ட கேக்காம பாஸ் பண்ணக்கூடாது.' என்று கூறிவிட்டு என்னுடைய வேலையை கவனிக்கலானேன்.

வங்கி நியதிகளின்படி துணை மற்றும் உதவி அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தொகைவரையுள்ள காசோலைகளை (cash cheques) மட்டுமே பைசல் செய்ய (Pass for payment) முடியும். அதற்கு மேலுள்ளவற்றை கிளை மேலாளருடைய ஒப்புதலுக்கு (authorisation) அனுப்ப வேண்டும்.

நான் பொறுப்பேற்றிருந்த கிளை சற்று பெரிது என்பதாலும் இத்தகைய காசோலைகள் வணிக நேரத்தில் (business hours) அதிக அளவிலான எண்ணிக்கையில் வரும் என்பதாலும் உடனுக்குடன் காசோலைகள் என்னுடைய ஒப்புதலுக்கு வருவது சாத்தியமல்ல. ஆகவே ஒரு குறிப்பிட்ட தொகைவரையுள்ள காசோலைகளை என்னுடைய உதவியாளர்களே அனுமதித்துவிட்டு வணிக நேர இறுதியில் - அதாவது உணவு இடைவேளைக்குப் பிறகு - மொத்தமாக என்னுடைய ஒப்புதலுக்கு அனுப்புவதை அனுமதித்திருந்தேன். இது வங்கி நியதிகளுக்கு முறனானதுதான் என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லையே என்பதால் அனுமதிக்க வேண்டியிருந்தது. அப்படி ஏதேனும் ஒரு சில காசோலைகள் நான் குறிப்பிட்டிருந்த தொகைக்கு மேலிருக்கும் பட்சத்தில் என்னுடைய உதவியாளர்கள் ஒரு சிப்பந்தி மூலமாக அவற்றை என்னுடைய ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைப்பதும் வழக்கம்.

ஆனால் நடிகையின் கணவர் அளித்திருந்த காசோலையில் என்னுடைய உதவி மேலாளருக்கே ஏதோ ஐயம் இருந்ததாலோ என்னவோ அதை உடனே என்னுடைய ஒப்புதலுக்கு சிப்பந்தி வழியாக அனுப்பாமல் அவரே எடுத்துக்கொண்டு என்னுடைய அறைக்குள் நுழைந்தார்.

இது வழக்கத்திலில்லாத செயலாக இருக்கவே இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நினைத்து உஷாரானேன். என்னுடைய உதவியாளர் அவரே காசோலையை எடுத்துக்கொண்டு என்னுடைய அறைக்கு வருவதை கவனித்த நடிகையின் கணவர் கோபத்துடன் என்னுடைய அறையை நோக்கி வருவதைக் கவனித்த நான் என்னுடைய உதவியாளர் நீட்டிய காசோலையை வாங்கிப் பார்த்தேன்.

'சார்... அவரோட கணக்குலருக்கற கம்ப்ளீட் அமவுண்டையும் வித்ட்றா பண்றதுக்கு செக் குடுத்துருக்கார்.. எனக்கென்னவோ டவுட்டாருக்கு. அதுமட்டுமில்லாம நம்மக்கிட்ட அவ்வளவு காஷும் இல்ல சார். மெய்ன் ப்ராஞ்சுக்கு போய்த்தான் கொண்டு வரணும்..' என்றார் அவர்.

நான் நல்லதாய் போயிற்று என்று நினைத்தேன். ஏனெனில் காசோலையின் தொகையைக் கவனித்த எனக்கும் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தோன்றியது. தற்போதைக்கு கைவசம் இத்தனை தொகை இல்லை என்பதைக் காரணம் காட்டிவிடலாம் என்ற நினைப்புடன் கோபத்துடன் என்னுடைய அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவரைப் பார்த்தேன். 'என்ன சார் கணக்குலருக்கற எல்லாத்தையும் கேஷா ட்ரா பண்றீங்க போலருக்கு?' என்றேன். 'கைவசம் அவ்வளவு கேஷ் இல்லையே.. என்ன பண்ணலாம்?'

அவரோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பெருங்குரலெடுத்து வசைபாட ஆரம்பித்தார். 'ஏன் சார் இப்படி சொல்றதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்ல? பெரிசா ரூலெல்லாம் பேசறீங்க? கேவலம் ஒரு ------- லட்சம் குடுக்க முடியல.. நீங்கல்லாம் எதுக்கு சார் மேனேஜரா ஒக்காந்துருக்கீங்க?' இதுமட்டுமல்லாமல் இனியும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீச கிளையிலிருந்த அத்தனை கண்களும் என்னுடைய அறையை நோக்கி திரும்பின. அவர் செய்த களேபரத்தில் கிளையே ஸ்தம்பித்துப் போனது.

நான் என்ன சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளாமலிருக்கவே நான் என்னுடைய சிப்பந்திகள் இருவரையழைத்து அவரை என்னுடைய அறையை விட்டு வெளியேற்ற வேண்டியதாயிற்று.

அவர் கோபத்தின் உச்சிக்கே போய் கிளை வாசலில் நின்றுக்கொண்டு வசைபாடியதை இன்றளவும் என்னால் மறக்கவியலவில்லை. அவருடைய கோபக்குரல் முதல் மாடியிலிருந்து சாலைவரை கேட்டிருக்க வேண்டும். என்னுடைய கிளை இருந்த கட்டடத்தின் வாயிலிலேயே பல்லவன் பேருந்து நிறுத்தமும் இருந்ததால் 'பஸ்சுக்கு காத்துக்கிட்டிருக்கற எல்லாரும் மேலே பாக்கறாங்க சார். ஏதாச்சும் செய்ங்க சார்.' என்றார் தரைதளத்தில் ஜவுளிக்கடை வைத்திருந்தவர் படியேறி வந்து.

நான் என்ன செய்வதென விளங்காமல் திகைத்து நிற்க கிளையிலிருந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுத்த முயன்றனர். அவரோ, 'ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க சார்..' என்று விரட்டியடிக்க அவர்கள் நேரே என்னுடைய அறைக்குள் நுழைந்து 'சார் நீங்க பேசாம போலீசுக்கு போன் போடுங்க. அவங்க வந்து விசாரிச்சிக்கட்டும். நாங்களும் சாட்சி சொல்றோம்.' என்றனர் உரத்த குரலில்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. கிளைக்கு காவல்துறையினரை அழைப்பது அத்தனை எளிதல்ல. அத்துடன் அதற்கு என்னுடைய மேலதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அவர்கள் என்ன, ஏது என்று விசாரிக்காமல் அனுமதியளிப்பது சிரமம். என் மீதே குறைகாணவும் வாய்பிருந்தது. ஆனால் அதே சமயம் வேண்டுமென்றே பிரச்சினை செய்யும் இவரை சமாளிக்க வேறு வழியில்லை என்றும் தோன்றியது.

சட்டென்று தோன்றிய யோசனையில் தொலைப்பேசியை எடுத்து டயல் செய்ய துவங்கினேன்.

வாடிக்கையாளர்கள் காவல்துறையினரை அழைக்க பரிந்துரைத்ததை அறைக்கு வெளியிலிருந்த கேட்ட நடிகையின் கணவர் நான் அதைத் தொடர்ந்து தொலைப்பேசியை எடுத்து எண்களை சுழற்றுவதைக் கண்டதும் ஆவேசத்துடன் என்னுடைய அறைக்குள் நுழைந்து என் கையிலிருந்த ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார்.

உண்மையில் நான் டயல் செய்வதைப் போல் பாவனைதான் செய்தேன். ஆகவே அவருடைய செய்கை என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. நான் அமைதியுடன், 'சொல்லுங்க.. இப்ப நா என்ன செய்யணும்? நீங்க என்ன கலாட்டா பண்ணாலும் நீங்க கேட்ட தொகை என்கிட்ட இல்லை. ஏன்னா அவ்வளவு பெரிய தொகை நான் பிராஞ்சில வச்சிக்க முடியாது. அது எங்க எச்.ஓ. போட்ட கண்டிஷன். ஒன்னு எங்க மெய்ன் ப்ராஞ்சுக்கு இதே தொகைக்கு ஒரு டிராஃப்ட் குடுக்கேன்.. நீங்களே போய் வாங்கிக்கலாம். இல்லன்னா நான் ரெண்டு பேர அனுப்பி வாங்கி வந்து வைக்கறேன். நீங்க மதியம் மூனு மணிபோல வந்து வாங்கிக்குங்க. இதுதான் என்னால செய்ய முடியும்.' என்றேன் உறுதியாக.

அவர் என்ன நினைத்தாரோ. சிறிது நேரத்திற்குப் பிறகு, 'அத மொதல்லயே க்ளியரா சொல்ல வேண்டியதுதானய்யா.. அதவிட்டுட்டு போலீஸ்னு பயமுறுத்தரே..' என்றார் ஏக வசனத்தில். அதையும் நான் பெரிதுபடுத்தாமல் என் உதவியாளரையழைத்து, 'சார்.. நீங்க நம்ம மெய்ன் ப்ராஞ்சுக்கு ஃபோன் பண்ணி இவ்வளவு கேஷ் வேணும் இன்னும் அரை மணி நேரத்துல எங்க கஸ்டமர் ஒருத்தர் அங்க டிராஃப்டோட அங்க வரோம்னு சொல்லுங்க. அப்புறம் இவருக்கு ஒரு டிராஃப்ட் எழுதி குடுங்க.' என்றேன்.

ஆனால் அவரோ, 'சார் என்னாலல்லாம் அங்க போக முடியாது. இப்ப இருக்கறத குடுங்க.. மீதிக்கு என் பேர்ல ஒரு டிராஃப்ட் குடுத்துருங்க. நா எங்க பேங்க்ல போட்டுக்கறேன். இனி ஒங்க பேங்க் சவகாசமே வேணாம்.' என்றார் கேலியுடன்.

இதென்னடா புது பிரச்சினை என்பதுபோல் என்னைப் பார்த்தார் என்னுடைய அதிகாரி...


தொடரும்..

4 comments:

sivagnanamji(#16342789) said...

//இப்ப இருக்கிறதைக் கொடுங்க...மீதிக்கு....ட்ராப்ட் கொடுங்க....//

இப்படி கொடுப்பதற்கு விதிமுறை அனுமதிக்குமா?
சேமிப்புக்கணக்கில் ஒரே சமயத்தில் எடுப்பதற்கு உச்ச வரம்பு இருக்குமே?
அவர் கொடுத்த காசோலையிலும்
அனேகமாக வில்லங்கம் இருக்குமே?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

இப்படி கொடுப்பதற்கு விதிமுறை அனுமதிக்குமா?//

கையிருப்பில் ரொக்கம் இல்லாதிருக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்வது வழக்கம்தான்.

சேமிப்புக்கணக்கில் ஒரே சமயத்தில் எடுப்பதற்கு உச்ச வரம்பு இருக்குமே?//

உண்டுதான். ஆனால் அதை காட்டி பணம் கொடுக்க முடியாது என்று வாதிடமுடியாது.

அவர் கொடுத்த காசோலையிலும்
அனேகமாக வில்லங்கம் இருக்குமே? //

காசோலையில் எவ்வித வில்லங்கமும் இல்லை. ஆனால் அவருடைய கணக்கிலிருந்த தொகைதான் வில்லங்கமானது.

G.Ragavan said...

என்னடா நாராயணா! இந்த ஆளு இத்தன கும்மரிச்சம் போட்டிருக்காரு! பெரிய இவன்னு நெனப்போ!

எனக்கு ஒரு சந்தேகம். பத்து லட்சத்துக்குச் செக்கு குடுத்துட்டு...பத்து லட்சம் பேங்குல இல்லைன்னா....அஞ்சு லட்சம் மட்டுமாவது குடுங்கன்னு கேக்க முடியுமா? அதுக்கு இன்னொரு செக் குடுக்கனுமா? இல்ல..இதே செக்கே போதுமா?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

எனக்கு ஒரு சந்தேகம். பத்து லட்சத்துக்குச் செக்கு குடுத்துட்டு...பத்து லட்சம் பேங்குல இல்லைன்னா....அஞ்சு லட்சம் மட்டுமாவது குடுங்கன்னு கேக்க முடியுமா? அதுக்கு இன்னொரு செக் குடுக்கனுமா? இல்ல..இதே செக்கே போதுமா? //

இருக்கற தொகைய குடுத்துட்டு மீதிய கணக்குல வரவு வச்சிறலாம். ஆனா இதையே காரணம் காட்டி நாளைக்கி யாராச்சும் பேங்க்லருந்து நஷ்டைஈடு கேக்கலாமே. அதனால வேற ஒரு செக்கத்தான் கேப்பாங்க நிறைய மேலாளர்கள்!