15 March 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 37

வாடிக்கையாளர்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய கணக்கில் வரவு செலவு செய்வதற்கு வேறொருவரை நியமிப்பதுண்டு. இவர்களுடைய அதிகாரங்களை நிர்ணயிக்கும் ஆவணம் power of attorney எனப்படுகிறது. நியமிக்கப்படுபவர் PA Holder என அழைக்கப்படுவார்.

இத்தகைய POA சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படுவது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வம். இப்போது அயல்நாடுகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இப்பழக்கம் பரவலாக உள்ளது.

இவ்வகையில் நியமிக்கப்படுபவர்கள் கணக்கில் வரவு செலவு செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி இத்தகைய கணக்கிலிருந்து வழங்கப்படும் காசோலைகளில் அவர் கையொப்பமிடுகையில் அவர் இன்னாரின் பிரதிநிதி (PA Holder of the account holder) என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதை குறிப்பிடாமல் வழங்கப்படும் காசோலைகள் கணக்கில் பணமில்லாமல் திரும்புமானால் அதற்கு கணக்கு வைத்திருப்பவரை பொறுப்பாளியாக்க முடியாது. இன்னின்ன செலவினங்களுக்கு மட்டுமே ஒரு பிரதிநிதி கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம் என்ற விதிமுறைகள் POAல் குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதை வங்கி கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

சாதாரணமாக அத்தகைய பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட கணக்கிலிருந்து தங்களுடைய சொந்த கணக்குகளுக்கு மாற்றுவதற்கு (transfer to the PA Holder's personal account) பிரத்தியேகமான அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதில்லை. அதாவது நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நடிகையின் கணக்கிலிருந்து அவருடைய பிரதிநிதியான கணவரின் கணக்கிற்கு காசோலை மூலமாக மாற்றுவதற்கு அதற்குரிய ஆவணத்தில் பிரத்தியேக அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தெளிவாக கூறவேண்டுமானால் கணக்கிலிருந்து மாற்றுவதற்கென உபயோகப்படுத்தப்படும் காசோலையில் பிரதிநிதி என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டிருக்குமானால் வங்கி மேலாளர்கள் அதை கவனமுடன் கையாள வேண்டியிருக்கும்.

நியாயமான காரணத்திற்கான மாற்றத்தை (Transfer for funds for genuine reasons) அனுமதிக்க வேண்டுமானால் அதற்கான காசோலையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரே கையொப்பமிட்டிருக்கவேண்டும். அல்லது தன் கையொப்பமிட்ட கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இதனுடைய அடிப்படை நோக்கம் என்னவென்றால் தன்னுடைய கணக்கில் வரவு செலவு செய்ய அனுமதிக்கும் வாடிக்கையாளர் மைனராகக் கூட இருக்கலாம். ஆகவே விவரமில்லாத அவருக்கு தெரியாமல் அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி கணக்கிலுள்ள தொகையை கையாடல் செய்துவிட முடியுமல்லவா? அத்துடன் நடிகையைப் போன்று பணம் வரவு செலவு செய்யும் விவகாரத்தில் அத்தனை விவரம் இல்லாதவர்களும், போதிய படிப்பறிவு இல்லாதவர்களும், வயோதிகர்களும், உடல்நலக் குறைவுள்ளவர்களும் ஏமாற்றப்படலாகாது என்பதற்காகவே இந்த நியதி அமுலில் உள்ளது.

வங்கி சம்பந்தப்பட்ட எந்த விதிமுறைகளை மேலாளர்கள் மீறினாலும் பொறுத்துக்கொள்ளும் நீதிமன்றங்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்கள் செய்யும் கையாடல்களுக்கு துணை செல்லும் வங்கி மேலாளர்களை மிகவும் கடுமையான தண்டனைக்குள்ளாக்குவதை நான் கண்டிருக்கிறேன்.

அப்படித்தான் என்னுடைய முந்தைய மேலாளர் தன்னையறியாமல் செய்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நடிகையின் கணவருடன் ஏற்பட்டிருந்த நட்பின் நெருக்கத்தால் அவரை முழுமையாக நம்பியிருந்தது. இரண்டு அவர் மூலமாக வங்கிக்கு கிடைக்கவிருந்த வணிக தொடர்புகளை மேலாளர் விரும்பியது.

ஒவ்வொரு முறையும் கிளைக்கு வரும்போதெல்லாம் நடிகையின் கணவர் மேலாளருடனான நட்பை பயன்படுத்திக்கொண்டு நேரடியாக மேலாளர் அறைக்குள் சென்று அமர்ந்துக் கொள்வது வழக்கம். கணக்கிலிருந்து எடுக்கப்பட வேண்டிய தொகைக்கான காசோலையை நேரடியாக மேலாளரிடமே கொடுப்பதும் வழக்கம். அவர் தன்னுடைய சிப்பந்தியை அழைத்து காசோலைக்கான தொகையை காசாளரிடமிருந்து பெற்று வர பணிப்பதும் வழக்கம். அதுபோலவே நடிகையின் கணக்கிலிருந்து தன்னுடைய பர்சனல் சேமிப்பு கணக்கிற்கு அவ்வப்போது மாற்றுவதற்காக வழங்கப்படும் காசோலைகளும் மேலாளரிடமே நேரடியாக அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல சமயங்களில் மேலாளரிடம் பேசிக்கொண்டே காசோலைகளை அளிக்க அவற்றையும் மேலாளர் சரிவர கவனிக்காமல் பெற்று தன்னுடைய அதிகாரிகளிடம் அனுப்பியிருக்கிறார். அதிகாரிகளும் மேலாளர்தானே தங்களிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்ற எண்ணத்துடன் அதை நடிகையின் கணக்கில் பற்று வைத்திருக்கின்றனர்.

நடிகையின் கணவர் திட்டமிட்டு செய்த செயல் மேலாளரின் கவனத்தை ஈர்க்காமலே இருந்திருக்கிறது.. ஒன்று இரண்டு மாதங்கள் அல்ல.. இரண்டு வருடங்களுக்கும் மேலாக..

நான் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே கிளைக்கு வந்திருந்த நடிகையின் கணவர் நான் வேற்று மாநிலத்தவன் என்பதை உணர்ந்துக்கொண்டார். அத்துடன் நான் சாதாரணமாக யாரிடமும் உடனே சகஜமாக பழகாதவன். இப்போது பரவாயில்லை.

அத்துடன் அட்டகாசமான சிரிப்புடன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரைக் கண்டதுமே ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவருடைய தோற்றத்திலும் சிரிப்பிலும் ஒரு நாடகத் தன்மையும் ஒரு போலித்தனமும் தெரிந்ததாகப் பட்டது எனக்கு. மேலும் முதல் சந்திப்பிலேயே இடைவெளியில்லாமல் தன்னைப் பற்றியும் தன்னுடைய மனைவியைப் பற்றியும் மிகைப்படுத்தி பேசியதையும் கவனித்த எனக்கு அவரிடம் சற்று கவனமாகவே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

பேச்சுவாக்கில் ஒரு கணிசமான தொகைக்கு காசோலையை என்னிடம் நீட்டினார். நடிகையின் கணக்கிலிருந்து அவருடைய கணக்கிற்கு மாற்றுவதற்கென வழங்கப்பட்டிருந்தது. நான் தயக்கத்துடன், 'this is not allowed. I am sorry.' என்றேன். அவர் உடனே ஒரு வீரப்பா சிரிப்புடன், 'இதுதான் ஒங்களுக்கு மொதல் பிராஞ்சா சார்?' என்றார். அவருடைய தொனியிலிருந்த கேலி என்னை அவமதிப்பதாகப் பட்டாலும் நான் கோபப்படுவதில் பயனில்லை என உணர்ந்து என்னுடைய துணை மேலாளரை அழைத்து சம்பந்தப்பட்ட POA நகலைக் கொண்டுவர பணித்து அது வந்ததும் அதை படித்துப் பார்த்தேன்.

அவரோ பொறுமையிழந்து, 'சார்... நீங்க என்னை அவமானப்படுத்தறீங்க. நா இந்த மாதிரி transactionஐ பலதடவ செஞ்சிருக்கேன். ஒங்களுக்கு முன்னால இருந்த மேனேஜர் இதுவரைக்கும் ஒன்னும் சொன்னதில்லை... இதோ இங்க நிக்கற ஒங்க அசிஸ்டெண்டுக்கும் தெரியும்.' என்று குரலெழுப்பி பேச ஆரம்பித்தார்.

நான் என்னுடைய அதிகாரியைப் பார்த்தேன் இவர் சொல்வது சரிதானா என்பதுபோல். அவர் பதிலளிக்காமல் தலையைக் குனிந்துக்கொண்டார்.
அதாவது மேனேஜரே ஒன்னும் சொல்லாம இருக்கறப்போ நாங்க என்ன சார் பண்றது என்ற பாவனையில்..

நான் கடகடவென ஆவணத்தை படித்து முடித்துவிட்டு, 'I am sorry Sir.. the POA does not permit such transactions. ஒன்னு மேடமே இந்த செக்ல சைன் செய்யணும்.. இல்லன்னா அவங்க சைன் பண்ண லெட்டர் வேணும்.' என்றேன்.

அவர் உடனே கோபத்துடன் எழுந்து என் கையிலிருந்த காசோலையை பறிக்க முயல நான் பிடிவாதமாக அதை என்னுடைய இழுப்பில் வைத்து பூட்டி எழுந்து நின்றேன். 'I am extremely sorry Sir.. I can't return the cheque now.' என அவருடைய கோபம் உச்சிக்கே சென்றது. 'I will teach you a lesson.' என்ற எச்சரிக்கையுடன் எழுத்தில் எழுதவியலாத வார்த்தைகளால் என்னை அர்ச்சித்துவிட்டு எழுந்து செல்ல வங்கி அலுவலகமே வெலவெலத்துப் போனது. குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாரும் என்னையே பார்க்கத் துவங்கினர்.

அவர்களில் பலருக்கும் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த சலுகைகளை நான் ஏற்கனவே மறுத்திருந்ததால் அவர்களுள் ஒருவர் உரக்க கூறியதும் குழுமியிருந்த பல வாடிக்ககயாளர்கள் 'கொல்' என்று சிரித்ததும் இன்னும், இதை எழுதும்போதும் என் செவிகளில் ஒலிக்கின்றன.. 'இவர் கோழிக்கு --- புடுங்கக் கூட லாயக்கில்லை.. இவரெல்லாம் மேனஜரா வந்து... இன்னும் கொஞ்ச நாள் இவர் இங்கயே இருந்தா இந்த பிராஞ்சையே இழுத்து மூடிற வேண்டியதுதான்..'

சரி.. இத கொஞ்சம் க்ளிக் பண்ணி புண்ணியம் கட்டுக்குங்க:)

http://friends.unicefusa.org/r/14d6c8b02402102a8408

தொடரும்..

10 comments:

G.Ragavan said...

ஆகா! இது வேறையா? அந்தச் செக்கை அவர் கொண்டு போயிருந்தார்னா அவர் தப்பிச்சிருந்திருக்கலாம். ஆனா நீங்க செக்கை வாங்கி வெச்சுக்கிட்டதால...ஆதாரம் பலமாத்தான் சிக்கியிருக்கு. ம்ம்ம்ம்...என்ன நடக்கப் போகுதோ! அந்த நடிகை சாமியாடப் போறாங்களோ!

பாலராஜன்கீதா said...

வரவேற்பை ஏற்றுக்கொண்டேன் அய்யா.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன்,

அந்த நடிகை சாமியாடப் போறாங்களோ! //

அந்த நடிகை ஒரு அப்பாவிங்க.. பாவம் அவங்க வாழ்க்கையில செஞ்ச பெரிய தப்பு இவர திருமணம் செஞ்சதுதான்...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க பாலா,

ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி..

sivagnanamji(#16342789) said...

ஆஹா நடிகையை வங்கிக்கு வரவழைக்க இப்படி ஒரு வழி இருக்கா?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ஜி!

ஆஹா நடிகையை வங்கிக்கு வரவழைக்க இப்படி ஒரு வழி இருக்கா? //

உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கேன்.. என்னோட முதல் கிளை எம்.ஜி.ஆர் தலைமையில ஷீலா, விதுபாலா என நடிகர் நடிகைகள் புடைசூழ நடந்தது..

அப்புறம் இன்று பிரபலமாயிருக்கும் சரண்யா (அப்போ 10த் மாணவி) விஜயன், சரிதா, ஸ்ரீவித்யா அப்படீன்னு நிறைய பேர் அந்த பிராஞ்சிக்கு வந்திருக்காங்க..

மேலாளர்னா சும்மாவா:)

sivagnanamji(#16342789) said...

//உங்களுக்குத்தெரியாதுன்னு நினைக்கிறேன்.........
மேலாளர்னா சும்மாவா?//

உங்களுக்குத்தெரியாதுன்னு நினைக்கிறேன்; முன்பே ஒரு பதிவர்
இதுபற்றி எழுதியுள்ளார்...

எம்ஜிஆரை முதலில் ஒரு அமைச்சருடனும் பிறகு வேறொருவ்ருடனும் சந்தித்து அதற்காக
முன்பு சொன்ன அமைச்சரின் கோபத்தை சம்பாதித்தது;நலக்கடன்கள் கொடுக்க நிர்ப்பந்தம்;வங்கிக்கடன் பற்றிய எம்ஜியாரின் "அறிவுபூர்வ"மான விளக்கம்; பின்னொருசமயம் கலைஞர்
அழைக்கப்பட்ட பொழுது, பதிலாக திரு மாதவன் அவர்களை அனுப்பி
க்வுரவித்தது--இவையெல்லாம் முன்பே பதிவாகி படிக்கப்பட்டவை!

வாசகர்னா சும்மாவா?

சிவஞானம்ஜி

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாசகர்னா சும்மாவா?

சிவஞானம்ஜி //

அதுவும் இவ்வளவு ஞாபகசக்தியுள்ள வாசகர்னா...

மா சிவகுமார் said...

எழுதியவும் படித்தவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லைதான் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சிவக்குமார்,

எழுதியவும் படித்தவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லைதான் :-)//

ஜியைத்தான சொல்றீங்க.. அவர் யாரு, சும்மாவா:)